தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு
பிடிக்க தொடங்கி இருக்கு. பாரம்பரியமான தேர்தல் முஸ்தீபுகள்னா, கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம்.. இப்படி தான் வரிசை.
ஆனா இந்த தேர்தலில் பல கட்சிகள் இந்த மரபிலிருந்து மாறிடிச்சு. அதிமுக, நாம் தமிழர், மநகூ எல்லாம் பிரச்சாரத்தை
தொடங்கியாச்சு. ஆனா அவங்க தேர்தல் அறிக்கை என்ன?
என்னவெல்லாம் திட்டத்தை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திக்க போறாங்கன்னு எல்லாம்
அந்தந்த கட்சி காரங்களுக்கே இன்னும் தெரியாது. தேர்தல் அறிக்கை வெளிவந்தால் தான்
எதையும் சொல்ல முடியும். ஆனா அதுக்கு முன்னாடியே பிரச்சாரம் தொடங்கிட்டாங்க.
காமெடியா இருக்குல்ல?
தேர்தல் மரபை மறக்காம அதே
வரிசைக்கிரமமா இப்போதைக்கு செயல்பட்டுட்டு இருக்கிற கட்சின்னா அது திமுக தான்.
கூட்டணி முடிவு செஞ்சப்பறம், முக்கிய
கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செஞ்சப்பறம், தேர்தல்
அறிக்கையையும் வெளியிட்டாச்சு. இனி ஏப்ரல் 23 முதல் பிரச்சாரம்.
இன்னைய தேதியில் திமுகவின் தேர்தல்
அறிக்கை தான் ஹாட் டாபிக். அவ்வளவு சிறப்பான அறிக்கை அது. திமுகவின் தேர்தல்
அறிக்கை என்பது பொதுவாகவே மாநில வளர்ச்சி திட்டங்கள், சமுதாய நலன், அனைத்து துறைகளிலுமுள்ள
இடர்பாடுகள் களைதல் மாதிரியான விஷயங்களை முன்வைத்து தான் எப்போதுமே வெளிவரும்.
அதனால் தான் அதிமுக எந்த தேர்தலிலும் முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியிடாமல்
திமுகவின் தேர்தல் அறிக்கை வந்தபின் அதன் அடிப்படையில் அதில் சிறு சிறு மாற்றங்கள்
செய்து தனது தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிடும்.
அதிமுக முன்னதாக தேர்தல் அறிக்கை
வெளியிட்டு இருந்தால், அம்மா உணவகத்தில்
இந்த ஆண்டு முதல் ருமாலி ரொட்டியும் வழங்கப்படும்னு அறிவிச்சிருப்பாங்க. அந்த
லெவல்ல தான் அவங்களால யோசிக்கமுடியும்.
தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும்
என்ன வேணும்ன்றத அதிமுகவால சுயமா யோசிச்சு முடிவெடுத்து அறிவிக்க முடியாது. அந்த
அளவுக்கு சிந்திக்கக்கூடிய ஆட்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் காலத்தோடவே போயாச்சு.
அதுக்கு அப்புறம் வந்தவங்களும் அப்படி ஒரு திறமை இருந்தாலும் கூட அதை வெளிப்படுத்த
பயந்துகிட்டு கார் டயரையும் ஹெலிகாப்டர் பாட்டத்தையும் கும்பிட்டு கன்னத்தில்
போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. சர்வைவல்னு வந்துட்டா நம்ம தெறமைகளை
பெரிசா காட்டிக்கக்கூடாதுன்னு எல்லா அதிமுக தொண்டனுக்கும் தெரிஞ்சிருக்கு.
இதுவரைக்கும் ஜெ. அறிவித்த
செயல்படுத்திய திட்டங்கள் பெரும்பாலானவை,
மற்ற கட்சிகள் சொல்லியது, கோரிக்கையா வெச்சது, மற்ற கட்சிகளின் செயல்திட்டங்கள் / தேர்தல் அறிக்கையில்
சொல்லப்பட்டதுன்னு தான் இருக்கே தவிர, தானே சுயமா யோசிச்சு
முடிவு செஞ்சு அறிவிச்ச திட்டம்னு அதிகமா கிடையாது.
ஆனா அதேசமயம் மற்ற கட்சிகளை ஒப்பிட்டா
திமுகவின் செயல்திட்டங்களும் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் மீதான நிஜமான
அக்கறைகளால் செயல்படுத்தப்பட்டதுன்னு புரியும்.
உதாரணத்துக்கு சொல்லனும்னா, கண்பார்வை அற்றவர்களுக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம்
கலைஞருக்கு விபத்தில் கண்ணில் அடிபட்டபோது அதன் வலியும் பார்வையற்ற நிலையின்
அவஸ்தையும் தானே உணர்ந்து அதன் அடிப்படையில் அறிவிச்சது. கைரிக்ஷா ஒழிப்பு, எழும்பூர் வந்திறங்கியபோது தன்னை வைத்து இன்னொரு மனிதன் இழுப்பதன் கஷ்டம்
உணர்ந்து அறிவிச்சது. ஏரி குளங்கள் தூர்வாரல் வெள்ளபெருக்கினால் மக்கள்
பாதிக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. மேம்பாலங்கள் சாலை மேம்பாட்டு திட்டங்கள்
வெளிநாட்டு பயணம் சென்று கண்டு வந்ததும் நம்ம ஊர்லயும் அது மாதிரி எல்லாம்
வேணும்னு தீர்மானிச்சு அறிவிச்சு செயல்படுத்தினது. இலவச திருமண உதவி திட்டம், கல்யாண செலவுக்கு காசு இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணின்
செய்தி படிச்சு அதன் கவலையில் அறிவிச்சது. இப்படி அது ஒரு நீ......ளமான லிஸ்டு.
இதெல்லாம் யாரும் திட்டமிட்டு கொடுக்காமல், கோரிக்கை
வைக்காமல், போராடாமல் தாமாகவே உணர்ந்து செயல்படுத்திய
திட்டங்கள்.
சமத்துவபுரம், விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நெல் ஆகியவற்றுக்கான ஆதார விலை நிர்ணயம், சென்னை மெட்ரோ, பெண்ணுக்கு சொத்துரிமை, கலப்பு திருமானத்துக்கான அங்கீகாரம் போன்ற முன் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திமுகவின் பல பல திட்டங்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை தான்.
சமத்துவபுரம், விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நெல் ஆகியவற்றுக்கான ஆதார விலை நிர்ணயம், சென்னை மெட்ரோ, பெண்ணுக்கு சொத்துரிமை, கலப்பு திருமானத்துக்கான அங்கீகாரம் போன்ற முன் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திமுகவின் பல பல திட்டங்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை தான்.
அதனால் திமுகவின் தேர்தல் அறிக்கை
என்பது கிட்டத்தட்ட ஆக்ஷன் பிளான் தான். ஒன்றிரண்டு செயல்படுத்தப்படாமல் போகலாம்.
ஆனால் பெரும்பாலான திட்டங்கள் சாத்தியமுள்ளவையா என ஆராய்ந்து விவாதித்து அதன்
பிறகு தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு
திட்டம் வந்தால் அது நிச்சயம் செயல்பாட்டுக்கு வரும் என்கிற ஒரு நம்பிக்கை தமிழக
மக்களிடம் காலம் காலமாக உள்ளது. அதனால் தான் திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு இவ்வளவு மரியாதை.
இப்போது வெளியிடப்பட்டிருக்கும்
தேர்தல் அறிக்கை மிக பிரமாதம் என திமுகவை விமர்சிக்கும் பத்திரிக்கைகள் கூட
பாராட்டுகின்றன. மக்களை பொறுத்தவரை மிக சிறந்த தேர்தல் அறிக்கை என
பெரும்பாலானவர்கள் ஏன் பாராட்டுகிறார்கள் என்பது அறிக்கையை வாசித்த அனைவருக்கும்
சொல்லாமலே புரியும். அந்த அளவுக்கு நலத்திட்டங்களும் வளர்ச்சி பணிகளும் நிறைந்து
கிடக்கிறது.
சமீபத்தில் திமுக பொருளாளர் திரு
ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவது நடத்திய ‘நமக்கு
நாமே’ பயண திட்டத்தில் சந்தித்த மக்களின் கருத்துக்கள்
உள்வாங்கப்பட்டு அவற்றில் சாத்தியமானவற்றை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்த தேர்தல்
அறிக்கையிலே இணைத்திருக்கிறார்கள். மேலும் முதல் முறையாக மாவட்ட வாரியான செயல்
திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 75
பக்கங்கள் உடைய இந்த தேர்தல் அறிக்கையை எல்லோரும் படித்திருப்பீர்கள். அதனால்
விரிவாக செல்லாமல் முக்கியமான விஷயங்களை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.
இந்த தேர்தல் அறிக்கையில் எனக்கு
ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ன்னா...
1. விவசாயக்கடன் கல்விக்கடன் ஆகியவை ரத்து
2. விசைத்தறிகளுக்கு முதல் 750 யூனிட் மின்சாரம் இலவசம்
3. மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் தமிழகம் முழுவதும்
இலவசப்பயணம்
4. விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
5. சென்னையை போலவே,
கோவை மதுரை திருச்சிக்கும் மெட்ரோ ரயில்.
6. காலியான அரசு பணிகள் உடனடியாக நிரப்புதல்
7. சென்னை-ஹோசூர்;
மதுரை-தூத்துக்குடி சாலைகளில் இண்டஸ்ட்ரியல் காரிடார்
8. நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம்
9. நீர் மேலாண்மை மேம்பாடு,
200 புதிய தடுப்பணைகள்
10. தோட்டக்கலைக்கு தனி பல்கலைக்கழகம்
11. மின்சாரக்கட்டணம் மாதாமாதம் கட்ட அனுமதி
இதை பத்தி தனித்தனியா ஏன்
பிடிக்குதுன்னு விவரிக்கறதா இருந்தா ஒவ்வொரு திட்டத்தின் பின்னணி, அதன் இப்போதைய நிலை, இந்த திட்டங்கள்
செயல்பாட்டுக்கு வந்தால் அதில் கிடைக்கக்கூடிய பலன்கள்னு அது ஒரு பெரிய கட்டுரையா
மாறிடும்.
அதே சமயத்தில் இந்த தேர்தல் அறிக்கையில்
இலவசங்களே இல்லைன்னு சிலர் புளகாங்கிதப்பட்டு சொல்லி இருக்காங்க. அது தவறு. இலவச
பொருட்கள் குறித்த அறிவிப்புக்கள் இல்லையே தவிர மானியங்கள், சலுகைகள், இலவசங்கள், கடன் ரத்துக்கள், உதவி தொகைகள்னு எக்கச்சக்க
சலுகைகள் இருக்கு. என்ன எல்லா சலுகைகளும் வளர்ச்சி நோக்கிய சலுகைகள் என்பது தான் மிக
பெரிய ஆறுதல்.
செலவுகள் குறித்து நிறைய பேசி
இருக்கும் இந்த தேர்தல் அறிக்கையில் வருவாய்க்கான திட்டங்கள் எதுவும் சொல்லப்படலை
என்பது எனது தனிப்பட்ட ஆதங்கம். ஏற்கனவே ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் தமிழக
அரசின் கடன் இப்படியான சலுகைகளால் மேலும் கூடும் என்கிற அச்சம் வந்து போகிறது.
ஆனால் நிதி நிர்வாகத்தில் இதுவரையும் அமைந்த தமிழக அரசுகளில் திமுக அரசு மட்டுமே
சிறப்பா செயல்பட்டது என்பதால்,
நிச்சயமாக நிதி மேலாண்மையை அதே சிறப்போடு செயல்படுத்துவார்கள் என நம்பலாம்.
கச்சத்தீவு மீட்பு, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் ரத்து, மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பு ஆகிய அட்ராக்டிவ் அறிவிப்புக்களும் இருக்கு. எனக்கு இது போன்ற அறிவிப்புக்களில் உடன்பாடு கிடையாது என்றாலும் தமிழக
அரசியல் களத்தில் வெறும் வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்தித்து
விட முடியாது. கொஞ்சம் கவர்ச்சி அறிவிப்புக்கள் தேவையாக தான் இருக்கு. என்ன செய்ய?
அதேசமயம் 2011 ஆம் ஆண்டு அதிமுக
வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 14% திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு
இருக்கின்றன. மற்றவைகளின் கதி என்ன என இதுவரை தகவலில்லை.
உதாரணமா, 10 ஆடை அலங்கார பூங்காக்கள் அமைப்பது, அனைத்து
காவல்நிலையங்களையும் மின் ஆளுமையில் இணைப்பது, திருப்பூர் சாயக்கழிவுக்கு
விஞ்ஞான முறையிலான சுத்திகரிப்பு நிலையம், தென் தமிழகத்தில் ஏரோ
பார்க் என பல பல அறிவிப்புக்கள் இன்னமும் முதல் கட்ட நடவடிக்கை கூட எடுக்கப்படாமல்
அப்படியே முடங்கி கிடக்கிறது.
மேலும் நூற்றுக்கணக்கான அறிவிப்புக்களை
விதி 110 இன் கீழ் அறிவித்த ஜெ. அதில் 20% கூட செயல்படுத்தவில்லை என்பதையும்
கவனித்தால், திமுக தேர்தல் அறிக்கைக்கான
எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எளிதில் புரியும்.
திமுக தேர்தல் அறிக்கை வந்தபிறகு, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடாத நிலையில் விருத்தாசலம் பிரச்சாரத்தில்
பேசிய ஜெ. நான் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவேன். அவற்றை செயல்படுத்துவேன். சொல்லாததையும்
செய்வேன் என ஒரு பொதுப்படையான அறிவிப்பை வெளியிட்டாரே தவிர, இன்னின்ன
திட்டங்கள், இன்னின்ன வழிமுறைகளில் செய்ய போகிறேன் என தீர்க்கமான
ஒரு கருத்தாக்கம் அவரிடம் இன்று வரை இல்லை என்பதை கவனிக்கலாம்.
சென்னை பிரச்சாரத்தில் பேசிய ஜெ. தனது
சாதனை என சொன்னது, மெட்ரோ ரயில் துவக்கியது, மின் விநியோகம் சீராக்கியது, வெள்ள நிவாரண பணிகள் ஆகியவற்றை
தான் முக்கியமான சாதனை என சொல்லி இருக்கிறார்.
சென்னைக்கு மெட்ரோ ரயில் வேண்டாம், மோனோ ரயில் தான் வேண்டும் என அடம் பிடிச்சு, திமுக தொடங்கி வைத்த திட்டம் என்பதாலேயே மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல்
முடக்கிவைத்து, கடைசியில் ஹைகோர்ட் போய் நீதிபதிகள் கண்டிச்சு
உத்தரவு போட்டப்பரம் தான் மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடந்துச்சுன்றது சென்னையில் உள்ள
எல்லாருக்குமே தெரியும். ஆனா அதை தன்னுடைய சாதனையா சொல்லி இருக்கும் ஜெ. நம்மை எந்தளவுக்கு
முட்டாள் என முடிவு செய்திருக்கிறார் என்பதை தெரிஞ்சுக்கலாம்.
மின் விநியோகம் பற்றி கேட்கவே வேண்டாம். மின் விநியோகம் சீரானது, மின் மிகை எல்லாம் சொன்னாலும் நிஜ கதை என்னன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?
வெள்ள நிவாரண பணிகள் பற்றி நான் சொல்வதை
விட இணையத்தில் உள்ள பலரும் கட்டுரை கட்டுரையாக எழுதி இருக்கிறார்கள். பலரும் நிவாரண
பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள். அதிமுகவும் தமிழக அரசும் எப்படி எல்லாம்
நிவாரண பணிகளை முடக்கி வைத்தார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள். அவர்களிடம் நான் விவரிப்பது
சரியல்ல. அவர்களே எல்லோரிடத்திலும் ஜெ. சொன்ன பொய்யின் பிரம்மாண்டத்தை புரியவைத்து
விடுவார்கள் என நம்பலாம்.
ஆகமொத்தம், ஜெ. தன்னுடைய ஆட்சியின் சாதனைன்னு சொல்லிய எதுவுமே உண்மையில் சாதனையே
அல்ல.
அப்படியாக, தமிழக தேர்தல் களத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை கொடுத்த பிரமாண்டமான
உத்வேகம், கள நிலைமையை மொத்தமாக புரட்டிப்போட்டு, இது வரை அதிமுகவுக்கு சாதகமாக இருந்த தேர்தல் காற்றை திமுகவுக்கு சாதகமாக
திருப்பி விட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வெளிவரக்கூடிய அதிமுக தேர்தல்
அறிக்கை இனி எதை முன்வைத்தாலும் அது பெரிய அளவில் பேசப்படாது என்பது உறுதி. ஏனெனில்
நடைபெற்ற இரண்டு பிரச்சார கூட்டங்களிலும் எந்த திட்டத்தையும் சொல்லாத ஜெ. தேர்தல் அறிக்கையில்
அறிவிப்புக்களை அழகாக அச்சடித்து கொடுத்தால் அது திமுக அறிக்கையின் நகல் / பாதிப்பு
என தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர சொந்த முயற்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும்
அதிமுக தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட பலவும் செயல்பாட்டுக்கு வரலைன்ற உண்மையும்
மக்களுக்கு தெரியும்.
2006 தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் நிஜமான
ஹீரோ திமுகவின் தேர்தல் அறிக்கை தான்.
மிக அற்புதமான அலசல்.
ReplyDeletesuper!
ReplyDeleteஜால்ராசத்தம் காதை கிழிக்குது. என்ன தேர்தல் அறிக்கை விட்டாலும் இந்த தடவை திமுக ஜெயிக்காது. 2006 மாதிரி அதிமுகவுக்கு எதிரான அலை இப்போது இல்லை. ஈசியா 180 தொகுதிக்கு மேல அதிமுக வெல்லும். திமுகவை நம்பினது எல்லாம் அந்த காலம். இப்ப திமுகவிற்கு மக்கள் மத்தியில் மவுசு இல்லை. அது மே 19 அன்னிக்கு தெரியும். Wait and c.
ReplyDelete