Saturday, March 17, 2018

திராவிடநாடு

திராவிட நாடெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று. திமுக 50 வருஷத்துக்கு முன்னேயே கைவிட்ட கொள்கை அது

ஆனால் மனதளவில் திராவிடநாடு (Virtual Dravidanadu) எப்போதும் நம் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.

திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் கூட (எம்.ஜி.ஆர் & ஜெ.. இருவரும்) பல சமயங்களில் மாநில நலன் கருதி மத்திய அரசை எதிர்த்தும், மத்திய அரசுக்கு ஒத்துழைக்காமலும் தமிழகத்தின் தனித்தன்மையை காத்து வந்திருக்கிறது. இதில் எம்.ஜி.ஆரை விட அதீத ஆரவம் காட்டி மாநில சுயாட்சியை தீவிரமாக நிலைநாட்டியவர் ஜெ. என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எனவே திராவிட நாடு என்பது நமக்கு புதிதல்ல. நமது மாநிலத்துக்கு தீமை பயக்கும் எல்லாவற்றையும் மத்திய அரசு என்று கூட பாராமல் எதிர்ப்பது, நமக்கான நியாயத்தை நிலைநாட்டி கொள்வது, மாநில உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை நம் தனித்துவத்தில் அடங்கும்

காவிரி, முல்லைப்பெரியார், கடலோர காவல்படை, இட ஒதுக்கீடு, மின்சார பகிர்மான க்ரிட், நவோதையா, உணவு பாதுகாப்பு, சமூக நல மானியங்கள்... என பல பல விஷயங்களில் நாம் நமக்கான தனிக்கொள்கைகள் வைத்து செயல்பட்டு வருகிறோம்.. தேவைப்பட்டால் இந்திய அரசுடன் எதிர்த்தும் வருகிறோம். அது பாராளுமன்றம் ஆனாலும் சரி உச்சநீதிமன்றம் ஆனாலும் சரி. எங்கும் போய் ஒரு கைபார்த்துவிட்டு வருவதே வழக்கம்.

இப்போது இத்தகைய செயல்பாடுகளை மெல்ல மெல்ல நம் அண்டை மாநில முதல்வர்களும் கைகொள்ள தொடங்கி இருப்பது மகிழ்ச்சி

அவரவர் மாநில தலைமை பதவியில் இருப்பவர்கள் அவரவர் மாநில நலன் கருதி மத்திய அரசுக்கு எதிராக தங்களுக்கென்று ஒரு தனிக்கொள்கையுடன் இயங்குவது என்பது தான் மாநில சுயாட்சியின் அடிப்படை.

அதை நோக்கி எல்லோரும் பயணிக்க தொடங்குகையில் மனதளவில் இருக்கும் 'திராவிடநாடு' இயல்பாகவே செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

மற்ற மானிலங்கள் எல்லாம் இப்படி ஒத்துவந்தால் (மத்திய அரசை எதிர்த்து மாநில நலன் காக்கும் நடவடிக்கைகள் எடுத்தால்) தமிழகமும் அதை ஆதரிக்கலாம். தவறில்லை. ஏனெனில் நாமும் அதைத்தான் காலகாலமாக செய்து வருகிறோம்

மற்றபடி, இங்கே சில திடீர் புத்திசாலிகள் பேசுவது போல தனி நாடெல்லாம் வாய்ப்பே இல்லை

No comments:

Post a Comment

Printfriendly