Sunday, April 26, 2020

எளிய மக்களும் லாக் டவுனும்

ந்த ஊரடங்கு இது வரை செய்ததை விட மிக மிக மோசமான செயல்களை இனிமேல் தான் எளிய மக்களுக்கு செய்ய போகிறதோ என்கிற அச்சம் மெல்ல மெல்ல எழ தொடங்குகிறது எனக்கு.

அரசு நிறுவனங்கள், பெரு தனியார் நிறுவனங்கள், அத்தியாவசிய கடைகள் போன்றவை தப்பித்தன
ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்சி கடைகள், சாலையோர உணவகங்கள், ஃபோட்டோ ஸ்டுடியோ, மெக்கானிக்குகள், பிளம்பர், எலக்டிரிசியன், துணிக்கடைகள், டெய்லர்கள், பாத்திரக் கடைகள், மொபைல் கடைகள், புத்தகக்கடைகள், சிறு குறு தொழிற்சாலைகள் என பல பல தொழில்களை பற்றி யோசிப்போம்

இவர்கள் பொதுவாக அந்தந்த மாத சம்பளத்தை வைத்தும் போதாக்குறைக்கு கடன் வாங்கியும் தான் மாதா மாதம் வாழ்வை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்

லாக்டவுன் மே 4 ஆம் தேதி முடிவடைந்தாலும் இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப எப்படியும் ஆகஸ்ட் ஆகி விடும்.

கடந்த ஒன்றரை மாதமாக வருமானம் இல்லை. கையில் இதுவரை சேமித்து வைத்து இருந்த எல்லாம் (அப்படி ஏதேனும் இருந்தால்) காலி ஆகி இருக்கும். அங்கும் இங்குமாக கடன் கூட வாங்கி இருப்பார்கள் பலர். செலவுகள் செய்து கொண்டே தானே இருக்கணும்? அன்றாட தேவைகள் நிற்காதே?

பூஜியத்துக்கு வந்துவிட்ட இவர்கள் இனி வேலைக்கு போக தொடங்கி சம்பாதித்து மீண்டும் முதலில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்

அதை செய்ய மன வலிமை இருக்கலாம்.. எத்தனையோ இழப்புக்களை கடந்து மீண்டு வந்தவர்கள் தானே அவர்கள்? ஆனால் இப்போதைய பிரச்சனை கொஞ்சம் அதீதம்

லாக் டவுன் முடிந்த உடனே பள்ளிகள் திறக்கும். அந்த செலவுகள் அதிகம்.

வேலை ஆரம்பத்தில் எல்லாவரும் சம்பளத்தை குறைக்க முயல்வார்கள். காரணம் ரெண்டு மாசமா வியாபாரம் இல்லை. தொழிலாளர்கள் இந்த சம்பள குறைப்புக்கு உடன்படவும் வாய்ப்பு உள்ளது. வருமானமே இல்லை என்பதை விட கொஞ்சம் குறைத்து கொண்ட வருமானம் ஓகே என நினைக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.

இன்னொர புறம், விலை வாசி ஏறும். காரணம் அதே ரெண்டு மாசமா வியாபாரம் இல்லாதது தான். எந்த இழப்பும் இல்லாத நெடுஞ்சாலை சுங்கமே ஒரு மாச லாக்டவுனை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தும் பொழுது, இந்த சிறு குறு நிறுவனங்கள் விலை உயர்வு செய்வதை குற்றம் சொல்ல முடியாது

சுருக்கமாக, வேலை இருக்கணும், சம்பளம் குறைவாக கிடைக்கும், வழக்கமான செலவுகள் அதிகரிக்கும், பள்ளிகள் திறக்கும், ரெண்டு மாதம் கொடுக்காத வாடகை, கரண்ட் பில் எல்லாம் சேர்த்து கட்ட வேண்டி வரும்.. இது தவிர அன்றாட செலவுகள்

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு மிக பெரிய அழுத்தத்தை எளிய மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனும் கவலை சூழ்கிறது

அரசு ₹1000 கொடுத்து ரேஷனில் சில பொருட்கள் கொடுத்ததுடன் முடித்து கொண்டது. இது போதுமா என்ன?

எதிர் கொள்ள இருக்கும் செலவுகள், அதன் இயலாமை சிலருக்கு குழந்தைகளின் படிப்பையே பாதிக்குமே? அது எத்தனை பெரிய இழப்பு? பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் போவது எல்லாம் கொடுமை.

மன உளைச்சல், கவலை, கடன், பொருளாதார சமபளமின்மை, விலைவாசி உயர்வு என அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் மிகப்பெரியது. அவற்றை அவர்கள் வெற்றிகரமாக வென்று வர வேண்டும்

அரசு ஏதேனும் பொருளாதார உதவி அறிவித்தால் கூட பெரிய உதவியாக இருக்கும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1℅ இவர்களுக்காக ஒதுக்கினால் கூட போதும். இவர்கள் பிழைத்து கொள்வார்கள். அரசுக்கும் பெரிய இழப்பு எதுவும் இல்லை.

பார்க்கலாம் அரசு உதவுமா என

அதை விட முக்கியம், மே 4 ஆம் தேதியோடு முடியுமா என்பது.. அதற்கு மேலும் நீண்டால் இவர்களின் நிலை மிக மிக மோசமாகிவிட கூடும்

எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

Monday, April 20, 2020

கொரோனா Rapid Test Kit விலை பிரச்சனை

தமிழக அரசு கொரோனா தொற்று கண்டறிவதற்கான Rapid Test Kit வாங்கிய விவகாரத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டு உள்ளது

சட்டீஸ்கார் அரசு தென் கொரியாவில் இருந்து Rapid Test Kit ஒன்றுக்கு ₹337 எனும் விலையில் வாங்கப்போவதாக அறிவித்ததில் கிளம்பியது பிரச்சனை

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசு வாங்கும் விலை என்ன என்பதை வெளியிடவேண்டும் என கேட்டார்

அதை அடுத்து தமிழக அரசும் சீனாவில் இருந்துநாம் Kit ஒன்றுக்கு ₹600 (வரிகள் தனி) என வாங்குவதாகவும் இந்த விலை ICMR ஆல் நிர்ணயிக்கப்பட்டது எனவும் சொல்லி அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டது.

இத்துடன் முடிந்து இருக்க வேண்டிய பிரச்சனை.. வேறு வகையில் மற்றவர்களால் திருப்பப்பட்டது

அதாவது சட்டீஸ்கார் ₹337 க்கு வாங்கும் kit ஐ எதற்காக தமிழகம் ₹600 க்கு வாங்க வேண்டும்? டெல்லி சொல்வதை தான் தமிழகம் கேட்க வேண்டுமா? தமிழக அரசும் டெண்டர் முறையில் வாங்கினால் குறைவாக கிடைக்குமே என்று எல்லாம் கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகள் அனைத்தும் முதல் நோக்கில் நியாயமானவை எனினும் சற்றே இதன் விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி தினசரி 100 என்கிற எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்ப்ட்டு வந்தது. பரிசோதனை நிலையங்கள் குறைவு. பரிசோதனை முடிவுகள் தாமதமாக வந்து கொண்டு இருந்தன.

நமக்கு கிட்கள் மிக அவசரமாக தேவைப்பட்டது. ICMR ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கருவிகளின் பட்டியலை இறுதி செய்து இருந்ததாலும், மத்திய அரசின் முடிவுப்படி ICMR தான் கொரோனா நோய்த் தடுப்பு பணியின் Nodal Agency என்பதாலும், அவர்கள் ஏற்கனவே சீன நிறுவனமான Wondfo வின் kit வாங்க ஆர்டர் செய்து இருப்பதாலும், தமிழகமும் அதே கருவியை அதே விலைக்கு ஆர்டர் செய்து இருக்கக் கூடும். இதில் தவறு ஒன்றும் இல்லை.

சட்டீஸ்கார் நிலைமை வேறு. 

நேற்று வரை அங்கே 36 பேருக்கு தான் பாதிப்பு (தமிழகத்தில் சுமார் 1500). அவர்கள் நிதானமாக டெண்டர் கோரி தென் கொரிய நிறுவனத்தை இறுதி செய்து உள்ளனர். இனி ஆர்டர் கொடுத்து எப்போது வரும் என்பது தெரியாது. நமக்கு கிட் வந்து சேர்ந்து சோதனைகள் செய்ய தொடங்கியாகி விட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.. இரண்டும் வெவ்வேறு நாட்டு பொருள் (சட்டீஸ்கார் வாங்குவது தென் கொரியா பொருள், தமிழகம் வாங்குவது சீன பொருள்). 
மேலும் இரண்டு பொருட்களின் specification உம் வெவ்வேறு. எனவே இரண்டுக்கும் ஒரே விலை எதிர்பார்ப்பது தவறு.

எனவே, சட்டீஸ்கார் ₹337 கொடுத்து வாங்கிய பொருளை தமிழகம் ₹600 கொடுத்து வாங்கி இருப்பதாக சொல்வது சரி அல்ல. தமிழகம் வாங்கி இருப்பது சட்டீஸ்கார் வாங்கிய பொருள் அல்ல. இந்த புரிதல் அவசியம்.

அடுத்ததாக ICMR முடிவு செய்த விலைக்கு தான் தமிழகமும் வாங்கி உள்ளது. 

அவசர நிலையில் டெண்டர் வழிமுறைகளில் விலக்கு உள்ளது. அதிக விலை கொடுத்தாவது உடனடியாக kit வாங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் ICMR நிர்ணயித்த விலைக்கே தமிழக அரசும் வாங்கி உள்ளது.  ஒரு ரூபாய் கூட அதிகம் இல்லை.

இன்னொரு குற்றச்சாட்டு என்னவெனில் ஆர்டர் ஏன் சென்னையில் ஒரு சிறு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது என்பது.

மருத்துவ பொருட்கள் இறக்குமதி லைசன்ஸ், அதன் பகிர்மானம், வினியோகம் என்பது குறித்த புரிதல் உள்ளவர்கள் நிச்சயமாக இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். 
ICMR டெல்லியில் Aark Pharmaceutical எனும் நிறுவனம் மூலமாகவும் தமிழக அரசு சென்னையில் Shan Biotech எனும் நிறுவனம் மூலமாகவும் ஆர்டர் கொடுத்து உள்ளது. இரண்டு நிறுவனங்களும் சீனாவின் Wondfo நிறுவனத்தின் அதே Test Kit ஐ தான் வாங்கி கொடுக்கிறது. விலையும் அதே ₹600 (வரிகள் தனி) தான். இதில் என்ன தவறு உள்ளது என்றும் புரியவில்லை.

நல்லவேளையாக தமிழக அரசு விலை விவரத்தை வெளியிட வேண்டும் என கேட்ட திமுக தலைவர், விலை விவரம் மற்றும் ஆவணங்கள் வெளியான பின் அதை வைத்து அரசியல் செய்ய முயலவில்லை. 

இரண்டும் வெவ்வேறு நாட்டு நிறுவனங்கள்.. வெவ்வேறு கருவிகள்.. அதனால் வெவ்வேறு விலை இருப்பது இயல்பு என்கிற புரிதல் திமுக தலைமைக்கு நிச்சயமாக இருக்கும். அதனால் தானோ என்னவோ இன்று வரை இந்த விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் எதையும் கேட்காமல் பொறுப்போடு நடந்து கொண்டு வருகிறது தான்.

ஆனால் திமுகவின் ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் ₹337 பொருளை ₹600 கொடுத்து வாங்கி முறைகேடு செய்து இருப்பதாக சமூக வலை தளத்தில் குற்றம் சாட்டுவது.. பொதுவாக திமுகவின் நற்பெயரை களங்கப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படும் என்கிற விஷயத்தை திமுக உணர்வது நல்லது.

வெவ்வேறு பொருளுக்கு ஒரே விலை எதிர்பார்க்கலாமா என்கிற லாஜிக்கான கேள்விகள் கேலியாக எழுமானால், திமுக போன்ற இயக்கத்தின் இமேஜுக்கு அது நல்லது அல்ல என்பதை திமுக தலைமை உணர்ந்து நடவடிக்கை எடுப்பது நலம்.

இந்த நிமிடம் வரை திமுக தலைவரோ அல்லது முக்கியஸ்தர்களோ இந்த மாதிரி கேள்விகளை முன் வைக்காமல் இருப்பதே அவர்களது புரிதலுணர்வையும் பக்குவத்தையும் நிர்வாக அறிவையும் உணர்த்துகிறது.

தமிழக மக்களின் நலன், அவர்களது ஆரோக்கியம் ஆகியவை முதன்மையாக கருதி எல்லோரும் களத்தில் சுழன்று கொண்டு இருக்கும் நிலையில் இல்லாத ஒரு பிரச்சனையை கிளப்பிக் கொண்டு இருப்பது சரியல்ல என்பதை திமுக தலைவர்கள் உணர்வார்கள் என நம்பலாம். 

மாறாக, தமிழகத்துக்கு வரவேண்டிய kit களை சீனா அமேரிக்காவுக்கு திருப்பி விட்டதன் தாமதத்தையும், மத்திய அரசு இடை புகுந்து தமிழக ஆர்டரில் இருந்து பிரித்து பிற மாநிலங்களுக்கு வழங்குவதையும் தமிழக அரசுடன் இணைந்து கேள்வி கேட்பது தான் தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய கடமையாக இருக்கும் என்பதையும் யாரேனும் எடுத்து சொல்வது நலம்.


Wednesday, April 8, 2020

தொழிற்சாலை அனுமதி குழப்பம்

மிழக அரசு 24.03.2020 இல் வெளியிட்ட lockdown அறிவிப்பில் துறை வாரியாக சில விதிவிலக்குகள் கொடுத்து இருந்தது

அதில் தொழிற்சாலை தொடர்பானது இது


இந்த விதி விலக்கு பட்டியலில் வரிசை எண் iii, தொடர்ச்சியான செயல்பாடு உடைய நிறுவனங்கள் என பொதுவாக சொல்லப்பட்டு அவைகளுக்கு அப்போதே Lockdown இல் இருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டு இருந்தது

ஆனால் இவை என்னென்ன தொழில்கள் என்கிற தெளிவான வரையறை இல்லை.

எனவே பல தொழிற்சாலைகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது உற்பத்தி தொடர்ச்சியான இயக்கம் தேவையான நிறுவனம் என சொல்லி தொழிற்சாலை இயக்க அனுமதி கோரினர்

மாவட்ட ஆட்சியர்கள் எந்தெந்த தொழிற்சாலைகளை அனுமதிக்கலாம் என்பதை வரையறை செய்யவே நேற்று இந்த விளக்க Circular வெளியிட்டது 

இது புதிய அனுமதி அல்ல.. ஏற்கனவே கொடுத்து இருக்கும் அனுமதி எந்தெந்த தொழில்களுக்கு பொருந்தும் என்பதற்கான விளக்கம் மட்டுமே

தமிழக மீடியா இதை புதிய அனுமதி என கருதி செய்தி வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

முதன்மை செயலாளர் தலையிட்டு அந்த விளக்க அறிவிப்பை ரத்து செய்து உள்ளார்

Circular குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கலாம் என்று கட்டுப்பாடு கொடுத்த நிலையில், இதை ரத்து செய்தது மூலம், தொடர்ச்சியான செயல்பாடு உள்ள அனைத்து தொழிற்சாலையும் இயங்க வழி ஏற்பட்டு உள்ளது.

Media பரபரப்பு ஏற்படுத்தியது நேர்ந்த குழப்பம் இது


அரசு இப்போதேனும் தெளிவாக விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டு, எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கொடுக்கலாம், இது வரை இந்த Circular அடிப்படையில் அல்லது மற்ற வகையில் கொடுக்கப்பட்ட அனுமதியை பரிசீலித்து அதன் மீது முடிவு எடுக்கலாம்.

இது தொழில் துறையின் குழப்பத்தை தீர்க்கும்.

Printfriendly