Sunday, April 26, 2020

எளிய மக்களும் லாக் டவுனும்

ந்த ஊரடங்கு இது வரை செய்ததை விட மிக மிக மோசமான செயல்களை இனிமேல் தான் எளிய மக்களுக்கு செய்ய போகிறதோ என்கிற அச்சம் மெல்ல மெல்ல எழ தொடங்குகிறது எனக்கு.

அரசு நிறுவனங்கள், பெரு தனியார் நிறுவனங்கள், அத்தியாவசிய கடைகள் போன்றவை தப்பித்தன
ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்சி கடைகள், சாலையோர உணவகங்கள், ஃபோட்டோ ஸ்டுடியோ, மெக்கானிக்குகள், பிளம்பர், எலக்டிரிசியன், துணிக்கடைகள், டெய்லர்கள், பாத்திரக் கடைகள், மொபைல் கடைகள், புத்தகக்கடைகள், சிறு குறு தொழிற்சாலைகள் என பல பல தொழில்களை பற்றி யோசிப்போம்

இவர்கள் பொதுவாக அந்தந்த மாத சம்பளத்தை வைத்தும் போதாக்குறைக்கு கடன் வாங்கியும் தான் மாதா மாதம் வாழ்வை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்

லாக்டவுன் மே 4 ஆம் தேதி முடிவடைந்தாலும் இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப எப்படியும் ஆகஸ்ட் ஆகி விடும்.

கடந்த ஒன்றரை மாதமாக வருமானம் இல்லை. கையில் இதுவரை சேமித்து வைத்து இருந்த எல்லாம் (அப்படி ஏதேனும் இருந்தால்) காலி ஆகி இருக்கும். அங்கும் இங்குமாக கடன் கூட வாங்கி இருப்பார்கள் பலர். செலவுகள் செய்து கொண்டே தானே இருக்கணும்? அன்றாட தேவைகள் நிற்காதே?

பூஜியத்துக்கு வந்துவிட்ட இவர்கள் இனி வேலைக்கு போக தொடங்கி சம்பாதித்து மீண்டும் முதலில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்

அதை செய்ய மன வலிமை இருக்கலாம்.. எத்தனையோ இழப்புக்களை கடந்து மீண்டு வந்தவர்கள் தானே அவர்கள்? ஆனால் இப்போதைய பிரச்சனை கொஞ்சம் அதீதம்

லாக் டவுன் முடிந்த உடனே பள்ளிகள் திறக்கும். அந்த செலவுகள் அதிகம்.

வேலை ஆரம்பத்தில் எல்லாவரும் சம்பளத்தை குறைக்க முயல்வார்கள். காரணம் ரெண்டு மாசமா வியாபாரம் இல்லை. தொழிலாளர்கள் இந்த சம்பள குறைப்புக்கு உடன்படவும் வாய்ப்பு உள்ளது. வருமானமே இல்லை என்பதை விட கொஞ்சம் குறைத்து கொண்ட வருமானம் ஓகே என நினைக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.

இன்னொர புறம், விலை வாசி ஏறும். காரணம் அதே ரெண்டு மாசமா வியாபாரம் இல்லாதது தான். எந்த இழப்பும் இல்லாத நெடுஞ்சாலை சுங்கமே ஒரு மாச லாக்டவுனை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தும் பொழுது, இந்த சிறு குறு நிறுவனங்கள் விலை உயர்வு செய்வதை குற்றம் சொல்ல முடியாது

சுருக்கமாக, வேலை இருக்கணும், சம்பளம் குறைவாக கிடைக்கும், வழக்கமான செலவுகள் அதிகரிக்கும், பள்ளிகள் திறக்கும், ரெண்டு மாதம் கொடுக்காத வாடகை, கரண்ட் பில் எல்லாம் சேர்த்து கட்ட வேண்டி வரும்.. இது தவிர அன்றாட செலவுகள்

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு மிக பெரிய அழுத்தத்தை எளிய மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனும் கவலை சூழ்கிறது

அரசு ₹1000 கொடுத்து ரேஷனில் சில பொருட்கள் கொடுத்ததுடன் முடித்து கொண்டது. இது போதுமா என்ன?

எதிர் கொள்ள இருக்கும் செலவுகள், அதன் இயலாமை சிலருக்கு குழந்தைகளின் படிப்பையே பாதிக்குமே? அது எத்தனை பெரிய இழப்பு? பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் போவது எல்லாம் கொடுமை.

மன உளைச்சல், கவலை, கடன், பொருளாதார சமபளமின்மை, விலைவாசி உயர்வு என அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் மிகப்பெரியது. அவற்றை அவர்கள் வெற்றிகரமாக வென்று வர வேண்டும்

அரசு ஏதேனும் பொருளாதார உதவி அறிவித்தால் கூட பெரிய உதவியாக இருக்கும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1℅ இவர்களுக்காக ஒதுக்கினால் கூட போதும். இவர்கள் பிழைத்து கொள்வார்கள். அரசுக்கும் பெரிய இழப்பு எதுவும் இல்லை.

பார்க்கலாம் அரசு உதவுமா என

அதை விட முக்கியம், மே 4 ஆம் தேதியோடு முடியுமா என்பது.. அதற்கு மேலும் நீண்டால் இவர்களின் நிலை மிக மிக மோசமாகிவிட கூடும்

எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

No comments:

Post a Comment

Printfriendly