Wednesday, May 27, 2020

வேதா இல்லம் தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இல்லமான வேதா இல்லம் யாருக்கு எனும் வழக்கில் இன்று தீர்ப்பு வந்து இருக்கிறது.

இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் எனக்கும் எல்லோரைப்போலவே ஆர்வம் தானாக தொற்றிக்கொண்டதில் வியப்பு இல்லை.
ஜெயலலிதாவின் அண்ணன் மக்களான தீபா & தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் தங்களுக்கு தான் தரவேண்டும் எனவும், ஜெயலலிதா செலுத்தவேண்டிய அபராத தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் சொல்லி இருந்தனர்

ஜெயலலிதாவுடன் கூடவே இருந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்களும் அந்த சொத்துக்கள் மீது முன்பு உரிமை கோரி இருந்தனர். ஆனால் இப்போது இந்த வழக்கில் அவர்கள் தங்களை இணைத்து கொண்டதாக தெரியவில்லை

அதிமுக கட்சி சார்பில் கொடுத்துள்ள மனுவில், ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க அரசு சார்பில் நிர்வாகியை நியமிக்க வேண்டும் என கேட்டு இருந்தனர்

வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா சொத்துக்கள் ஏற்கனவே கோர்ட்டால் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன

வருமான வரித்துறை & கர்நடக சிறப்பு நீதிமன்றம் ஆகியவை ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலித்து தருமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளது

இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து அதன் மூலம் வேதா இல்லத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அதை ஜெயலலிதா அவர்களின் நினைவில்லமாக மாற்றவும் உத்தரவு இட்டது

இன்று ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு. கிருபாகரன் & திரு.அப்துல் குத்தோஸ் ஆகியோர் முன்பு தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது

இன்று அவர்கள் வழங்கிய தீர்ப்பின்படி

வேதா இல்லம் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா & தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும்

தீபா & தீபக் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதை பரமாரிக்க வேண்டும் 

என சொல்லி இருப்பதாக தெரிகிறது

இதற்கு நேர் எதிராக.. அந்த வீட்டை தமிழக அரசின் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றவும், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றவும் பரிசீலிக்கும்படி ஆலோசனையும் கொடுத்து உள்ளது

அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது நீதிமன்றம்

ஒன்றுக்கொன்று முரணான இரு வேறு விஷயங்களை தீர்ப்பாக சொல்லி மீண்டும் குழப்பத்தில் கொண்டு போய் விட்டுள்ளது நீதிமன்றம்

அதாவது தீபா & தீபக் வசம் ஒப்படைத்தால் அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லமாக மாற்ற முடியாது

அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லமாக மாற்றப்பட்டால் தீபா & தீபக்குக்கு அது உரிமை உள்ள வீடாக இருக்காது

எனவே இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்படும்.. அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்து விளக்கம் கேட்கப்படும் என்று யூகிக்கிறேன்

இதில் ஆறுதலான விஷயம்.. சசிகலா & அவர்களது உறவினர்களுக்கு எந்த வகையிலும அந்த வீட்டில் உரிமை இல்லை என தெளிவுபடுத்தப்பட்டது தான்

தீபா & தீபக்கை பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றி. சந்தேகமில்லை.
இதை வைத்தே ஜெயலலிதாவின் மற்ற சொத்துக்களை தங்கள் வசப்படுத்தவும் முடியும்.

இதை வைத்து சாதுர்யமாக பிரச்சாரம் செய்தால் ஜெயலலிதாவின் வாரிசு தான் தான் என்று அரசியலில் வலம் வரவும் முடியும்.

ஏற்கனவே தீபாவுக்கு ஆதரவு கொடுத்து பின்னர் ரிவர்ஸ் அடித்த ஓ.பி.எஸ். மீண்டும் தீபாவை ஆதரிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை

அடுத்த ஆண்டு தேர்தல் உள்ளதால் தீபா இப்போதிருந்து கவனமாக காய்கள் நகர்த்தி ஓரளவு தனது செல்வாக்கை உருவாக்கிக் கொள்ள முடியும்

ஒரு வேளை நீதிமன்ற ஆலோசனையை தமிழக அரசு ஏற்று, முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றினால்.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இனி வேதா நிலையத்தில் இருந்து செயல்படலாம்.

அடுத்த தேர்தலில் திமுக வென்று ஸ்டாலின் முதல்வர் ஆனால் அவரும் வேதா நிலையத்தில் இருந்து இயங்கலாம்.

தமிழகத்தில் முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் என்று ஒன்று இல்லை. 

எம்.ஜி.ஆர், ஜானகி, கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் அவர்களது சொந்த வீட்டில் இருந்தே இயங்கி வந்தனர்

ஓ.பன்னீர் செல்வம் & எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட கிரீன்வேஸ் ரோடு அரசு இல்லத்தில் இருந்தே இயங்கி வந்தனர்

இது வரை தமிழக முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் எனும் ஒரு தேவை தமிழகத்தில் ஏற்பட்டது இல்லை.

இந்த வழக்கிலும் யாரும் அப்படி ஒரு கோரிக்கை வைக்கவில்லை

அப்படி இருக்க நீதிபதிகள் என்ன காரணத்துக்காக தேவை இல்லாமல் இப்படி ஒரு ஆலோசனையை முன்வைத்து விஷயத்தை மேலும் சிக்கலாக்கினார்கள் என்பது உண்மையிலேயே புரியவில்லை

எது எப்படி இருந்தாலும் ஜெயலலிதா அவர்களுக்கு நினைவில்லம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது

அவரது நினைவிடம் அருகிலேயே அதற்கான கட்டுமானங்களும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பார்ப்போம் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என.. அவசர சட்டம் என்ன ஆகிறது என.. சசிகலா அவர்களின் நிலைப்பாடு என்ன என.. 

வேதா நிலையம் இன்னும் என்னென்னவெல்லாம் சந்திக்கப்போகிறது என தெரியவில்லை.

Wednesday, May 13, 2020

கொரோனா தரும் மாற்றங்கள் - போக்குவரத்து

கொரோனா தொழில் துறையை எப்படி எல்லாம் மாற்றக்கூடும்னு முன்பு பார்த்தோம்

அதுக்கு அடுத்தபடியா அதிக மாற்றத்துக்கு உள்ளாகப்போவது என எல்லோராலும ஊகிக்கப்படுவது, போக்குவரத்து..

இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் Social Distancing எனும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது தவிர்க்க முடியாதது ஆகிறது. லாக்டவுன் முடிந்த பிறகும் இந்த முறை தொடர வேண்டும் என MHA அறிவுரை சொல்லி உள்ளது

ஆனால் அது இந்தியா போன்ற ஒரு நாட்டில் அவ்வளவு எளிதாக சாத்தியமாகக்கூடிய விஷயம் அல்ல

பைக்கில் ஒருவர் தான் பயணிக்க வேண்டும். பில்லியனில் ஆள் கூடாது என்பது ஒரு கட்டுப்பாடு.

எளிய மனிதர்கள் அதிகமாக கொண்ட நம் நாட்டில் ஒரு குடும்பத்தில் பைக் என்பது ஒன்று தான் பெரும்பாலும் இருக்கும். அதில் மனைவி குழந்தைகள் என குடும்பமாக பயணிப்பதே வழக்கம்.

புதிய விதிமுறை கட்டாயம் ஆக்கப்பட்டால் வெளியே செல்வதே இல்லாது ஆகிவிடும்

பஸ்சில் இருக்கைகளில் ஒருவர் தான் அமரவேண்டும் என்ற ஒரு விதி போட்டு உள்ளார்கள். இது நிச்சயமாக சாத்தியமே இல்லை.
இப்போது டவுன் பஸ்சில் அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 57 பேர் அமரவும் 25 பேர் நிற்கவும். சாதாரணமாகவே சென்னை போன்ற நகரங்களில், நின்றும் படிகளில் தொற்றியும் ஒரு பஸ்சில் 60 பேர் வரையும் (உட்கார்ந்து இருக்கும் 57 பேர் தவிர) பயணிப்பதே வழக்கம். அதாவது ஒரு பஸ்சில் ஒரு நேரத்தில் சுமார் 120 பேர்.

இனி ஒரு பஸ்சில் மொத்தமே 28 பேர் தான் பயணிக்க முடியும் எனில், பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி ஆக வேண்டும். அல்லது பலரும் பயணிக்க முடியாமல் போய்விடும். உடனடியாக அத்தனை பஸ்களை வாங்கும் அளவுக்கு அரசுகளிடம் வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை

ரயிலிலும் அதே போல தான் என்கிறார்கள். ரிசர்வ் செய்யப்பட்ட கோச்களில் சமூக இடைவெளி சரி. அதிலும் குறைவான எண்ணிக்கை பயணிகள் தான் எனில் இயல்பாகவே கட்டணம் உயர்ந்து விடும். அன்ரிசர்வ்டை யோசித்து பாருங்கள்.

108 இருக்கை உள்ள கோச்சில் சுமார் 250 பேர் வரை பயணிக்கும் நிலையில் அதை 54 ஆக குறைப்பது அத்தனை எளிதல்ல.
சென்னை மும்பை போன்ற பெருநகர EMU ரயில்களின் நிலை இன்னமும் மோசம். தொங்கியபடி தான் பீக் ஹவர் ஜர்னி இருக்கும். இதில் எப்படி சமூக இடைவெளி கடைபிடிப்பது?

கார்களில் அதிக பட்சம் மூன்று பேர். இது சாத்தியம். பைக்கில் ஒருவர். இது கூட ஓரளவுக்கு சாத்தியம்

ஆனால் பஸ் ரயில் போக்குவரத்தில் எல்லாம் சமூக இடைவெளி சாத்தியம் இல்லை. 

ஒரு வேளை சமூக இடைவெளி கட்டாயம் எனில் இப்போது இருக்கும பஸ் ரயில் எண்ணிக்கையை உடனடியாக மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டி வரும். அது இந்தியாவின் இப்போதய பொருளாதார நிலையில் சாத்தியம் இல்லை

எனவே வேலைக்கு, பள்ளி கல்லூரிகளுக்கு போய் வருவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நிலை வரும். வீடு தான் ஆபீஸ். வீடு தான் ஸ்கூல்.

சரி இந்த காரணங்கள் தவிர சுற்றுலா செலவது எல்லாம்?

மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களை சந்தேகத்தோடே பார்த்துக்கொண்டு உள்ளன. மாநிலங்களை விடுங்க.. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதே சந்தேகம் தான்.

இந்நிலையில் சுற்றுலா எப்போது சாத்தியப்படும் என தெரியல. 

உதாரணமாக ஊட்டி, கொடைக்கானலுக்கு சென்னையில் இருந்து போக முடியுமா என கேட்டால் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் போக முடியாது. 

அத்தியாவசிய காரணங்கள் என்றாலும் அங்கே போனதும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

இது போன்ற சூழலில் போக்குவரத்து இயல்பு நிலை அடைய இன்னும் நிறைய நாட்கள் ஆகும் என்றே நினைக்கிறேன்

என்னை கேட்டால்.. வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு உள்ளவர்களை அப்படியே தொடர விடுவது போக்குவரத்தை குறைக்கும். வேலை, பள்ளி, கல்லூரி, மருத்துவம், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் பயணிக்காமல் இருப்பது, பயணிக்க கட்டுப்பாடுகள் விதிப்பது ஆகியவை தான் போக்குவரத்தை குறைக்கும்.

அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என பொறுத்து இருந்து பார்ப்போம்

Sunday, May 10, 2020

கொரோனா தரும் மாற்றங்கள் - தொழில்துறை

கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கத் தொடங்கி சுமார் 100 நாட்களுக்கு மேல் ஆகிருச்சு. இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியல. தடுப்பு மருந்தும் இல்லை. சிகிச்சை முறையும் வரையறுக்கப்படவில்லை

இந்த சூழலில் கிட்டத்தட்ட 50 நாளாக வீட்டுக்குள்ளேயே முடங்கியது இந்தியா.. தொழிலில்லை, வர்த்தகம் இல்லை, போக்குவரத்து இல்லை

இனியும் இப்படியே தொடர முடியாத சூழலில், நடப்பது நடக்கட்டும் என மெல்ல மெல்ல எல்லாவற்றையும் அனுமதிக்க தொடங்கி விட்டன அரசுகள்

இனி வரும் காலம் நமக்கு எப்படி இருக்கும்?

அதிக பயணங்கள் இருக்காது, முக கவசம் காஸ்டியூமில் ஒன்றாக மாறும், சேமிக்க தொடஙகுவோம், நெருங்கிய உறவினர்கள் கூட வீட்டுக்கு வந்தால் தயஙகுவோம் இப்படி பல பல யூகங்கள் பறந்து கொண்டே இருக்கின்றன

நாம் தொழில் துறையை பார்ப்போம்.

என்ன ஆகும் தொழில்துறை?

அலுவலகங்கள்

அலுவலகங்கள் எனும் அமைப்பு மெல்ல மெல்ல குறைந்து விர்ச்சுவல் ஆபீஸ் (Virtual Office) முறை அதிகமாகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணி செய்வோர் பிற மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி உள்ளவர்களே. 

இந்த கரோனா காரணமாக Work From Home (WFH) மூலம் இரண்டு மாதங்கள் சிக்கலின்றி இயங்கி காட்டியதால், நிறுவனங்கள் இப்போது நிறைய சிந்திக்க தொடங்கி உள்ளன.

TCS போன்ற நிறுவனங்கள் 75% பேரை WFH முறைக்கு மாற்ற திட்டமிடுவதாக சொல்கிறார்கள்

ஐடி துறை மட்டுமல்லாமல், மார்கெட்டிங், கார்ப்பரேட் ஆபீஸ், செர்வீஸ், பேக் ஆபீஸ் போன்றவையும் இனி ஒரு அலுவலக செட் அப்பில் இருந்து வேலை செய்ய அவசியம் இல்லை என்று உணர்ந்து உள்ளன

WFH எனதற்கு அடுத்த நிலையாக WFN (Work From Native) என்ற புது கான்செப்ட் நோக்கி பயணிக்கிறது கார்ப்பரேட் துறை

இது அவர்களுக்கு நல்லதோர் லாபத்தை தரும்..

எனது நண்பர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். அப்பா அம்மா அங்கே ஊரில். இவரும் மனைவியும் குழந்தையும் சென்னையில். அலுவலகத்தில் மார்கெடிங் மேனேஜர். ₹60 ஆயிரம் சம்பளம். வீட்டு வாடகை, போக்குவரத்து, பெட்ரோல் என ₹20 ஆயிரம் போக அவருக்கு என்று ₹40 ஆயிரம் தான் நெட்டாக செலவுக்கு.

கொரோனா காரணமாக ஊருக்கு போய் அங்கிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்து என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அத்தனையும் அங்கிருந்தே செய்கிறார். 

குடும்பத்துடன் சொந்த ஊரில் சொந்த வீட்டில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார். ₹15 ஆயிரம் சம்பளம் குறைத்தால் கூட கவலை இல்லை எனும் அளவுக்கு இந்த WFN அவருக்கு ஒரு பக்குவத்தை கொடுத்து உள்ளது.

சென்னை வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, பரபரப்பு, தெரியாத நகரில் தனிமையில் பகலை நக்ர்த்தும் மனைவி எனும் மனச் சங்கடம் என எந்த டென்சனும் இல்லாமல், ரிலாக்ஸாக இருக்கிறார்.

BSNL மூலம் ஊரில் பிராட்பேண்ட் கனெக்‌ஷனுக்கு ₹600 செலவு. அவ்வளவு தான். Zoom, Microsoft Teams என தினசரி சந்திப்புக்கள், வேலை, ரிப்போர்டிங் என எல்லாமும் நடந்து வருகிறது

கம்பெனியை பொறுத்தவரை, சென்னை நகரில் அதிக வாடகையில் ஒரு பெரிய அலுவலகம் இனி தேவை இல்லை. எல்லோரையும் அவரவர் ஊரில் இருந்தே வேலை செய்ய சொல்லலாம். பயணங்கள் கூட அங்கிருந்தே சென்று வரட்டும். ஆன்லைனில் ரீ இம்பர்ஸ் ஆகிடும். சந்திக்க வேண்டும் எனில் இரு மாதத்துக்கு ஒரு முறை ஒரு ஓட்டல் ஹால் எடுத்து மீட்டிங் போட்டால் போதும். Overhead Expenses மொத்தமாக குறையும்.

இதை எல்லா நிறுவனங்களும் யோசிக்க தொடங்கி இருக்கின்றன. அவை நடைமுறைக்கு வந்தால் சென்னை போன்ற பெரு நகரின் ரியல் எஸ்டேட் வீழும், வாடகைக் கட்டிடங்கள் குறையும், நகர நெரிசல் குறையும்

இன்னொரு புறம் கிராம பொருளாதாரம் உயரும். உயர் வருவாய் மக்கள் கிராமங்களில் வாழ்கையில் அவர்களுக்கான பெரு வசதிகள் அங்கே ஏற்படும். நகர கிராம சம நிலை தொடங்கும்.


உற்பத்தி துறை

தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை அதிகம். இதில் பிற மாநிலத்தில் இருந்து பல தொழிலாளர்கள் வந்து தங்கி பணி செய்து வருகின்றனர். அவற்றில் பலர் இப்போது அவர்களது சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார்கள். 

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து எப்போது தொடங்கும் என தெரியல. அப்படியே வந்தாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டி இருக்கும். 

இச்சூழலில், உற்பத்தி துறை எதிர்பார்த்த அளவுக்கு எட்ட செப்டம்பர் மாதம் கூட ஆகலாம்

ஆனால் உற்பத்தி துறைக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்து தான் ஆக வேண்டும். அதே நேரம் சப்போர்ட் சர்வீஸ் எனப்படும் துணை நிர்வாக அமைப்பில் உள்ளவர்கள் தொழிற்சாலைக்கு வராமலேயே வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியும். 

ஏற்கனவே சொன்னது போல அலுவலகம் எனும் அமைப்பு இல்லாது Virtual Office முறை வழக்கத்துக்கு வரும் போது, உற்பத்தி துறையிலும் இந்த முறை சாத்தியமாகும்.

நேரடி பணியாளர்கள் தவிர பிறர் வீடுகளிலேயே இருக்கையில் தொழில்துறை தனது Over Head Expenses குறைத்து லாபத்தை அதிகரிக்கும்

வியாபாரம்

இப்போது கொரொனா காரணமாக குறைந்த நேரம் மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது. 

ஆரம்பத்தில் இது கவலையாக தெரிந்தாலும், மக்கள் சட்டென அதற்கு தங்களை ஆற்றுப்படுத்தி கொண்டு விட்டார்கள்

மதியம் 1 மணி வரை தான் கடைகள் இருக்கும் எனில் அந்த சமயத்துக்கு சென்று வாங்க பிளான் செய்து பழகி கொண்டார்கள்

காலை 5 மணிக்கு கடை தொடங்கி இரவு 11 மணி வரை கடையிலேயே இருந்து குடும்பத்தினருடனான பொழுதுகளை இழந்த வியாபாரிகள் இப்போது 1 மணி வரை வியாபாரமும் அதன் பின் குடும்பத்தினருடனான பொழுதுகளும் என வாழ பழகி கொண்டார்கள்.

இவை இப்படியே தொடர்ந்தாலும் நல்லதே எனும் அளவுக்கு சிக்கல் இன்றி போகிறது வாழ்க்கை. வியாபாரம் குறையாது. காரணம் தேவை உள்ளவர்கள் வாங்கி கொண்டே தான் இருக்க போகிறார்கள். நேர கட்டுப்பாடு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருந்தால் போதும். 

சரக்கு போக்குவரத்து

இது தான் சிக்கலான துறை. நோயின் தாக்கம் முற்றிலும் நீங்கும் வரையில் சரக்கு போக்குவரத்து மூலம் வரும் பொருட்கள், ஆட்கள், டிரைவர், லோடுமேன் போன்றவர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களை செக் செய்து Screening செய்து சரக்குகளை disinfection செய்வது என எல்லாமும் சந்தேகம் கொண்டவையே
ஏதேனும் ஒரு ஊரில் யாரோ ஒருவருக்கு infection இருந்தாலும் அவர் மூலமாக மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கும் நோய் தொற்று ஆகையால், சரக்கு வாகனம் வரும் ஊர்கள், டிரைவர்கள் வழியில் நிறுத்தும் இடங்கள், உணவகங்கள் என எல்லாவற்றையும் எப்படி கண்காணிப்பது என்பது ஒரு பெரிய சவால் தான்.

மேலும் நோய் தொற்று அறிகுறி தெரியவே ஒரு வாரம் ஆகும் எனும் நிலையில் ஒவ்வொரு நாளும் எத்தனை வண்டி வந்தது அதில் எந்த வண்டியில் யார் மூலமாக தொற்று வந்தது என்பதை கண்டு பிடிப்பதும் கஷ்டம்.

சரக்கு போக்குவரத்தை நிறுத்தினால் மொத்த பொருளாதாரமும் வீழ்ந்து விடும். தொழிற்சாலை இயக்கமும் நடக்காது.

மிக மிக delicate position என்பது இந்த ஒரு துறை தான்

பார்ப்போம்.. அரசு என்னென்ன நடவடிக்கைகள் அறிவிக்கிறது என.. அதை வைத்து அடுத்து என்ன ஆகும் என விவாதிப்போம்

Monday, May 4, 2020

தமிழகத்தில் லாக்டவுன் தளர்வு சரியா?

மார்ச் 25 தொடங்கிய லாக்டவுன், இப்போது 40 ஆம் நாளை தொட்டு நீண்டு கொண்டு இருக்கிறது. மே 17 வரை இப்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சில தளர்வுகள் மே 4 முதல் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் சரி என்றும் தவறு என்றும் வெவ்வேறு விவாதங்கள் இணையத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன.

தளர்வு சரியா? சுருக்கமாக அலசலாம்

மத்திய அரசின் உள் துறை, என்னென்ன தளர்வுகளை மாநிலங்கள் கொடுக்கலாம் என விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்து உள்ளது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டை தளர்த்த அதிகாரம் இல்லை. வேண்டுமானால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து கொள்ளலாம்
இதன் அடிப்படையில் தமிழக அரசு விவாதித்து, வல்லுனர்கள் குழுவுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்துக்கான தளர்வுகளை அறிவித்து உள்ளனர்.

சுருக்கமாக சொல்வதானால் மத்திய அரசின் தளர்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தமிழகம் சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது

உதாரணமாக சொல்வதானால்

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களாக மத்திய அரசு பிரித்து தளர்வுகள் அறிவித்தது. தமிழக அரசோ, சென்னை & சென்னை தவிர்த்த இதர பகுதிகள் என இரண்டாக பிரித்து, இதர பகுதிகளில் கூடுமானவரை சிவப்பு மண்டலத்துக்கு உரிய கட்டுப்பாடுகளையே விதித்து உள்ளது

பச்சை மண்டலத்தில் பஸ் போக்குவரத்தை மத்திய அரசு அனுமதித்தது.. தமிழக அரசு அனுமதிக்கவில்லை

தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்க மத்திய அரசு அனுமதித்தது. தமிழக அரசு 50% பணியாளர் மட்டும் தான் என கட்டுப்பாடு விதித்து உள்ளது. சென்னை பகுதியில் 25% தான் அனுமதி

அத்தியாவசிய பொருட்கள் அல்லாத கடைகள் மத்திய அரசு அனுமதித்தது. தமிழக அரசோ அதிலும் சிலவற்றை தடை செய்து உள்ளது

லாக்டவுன் இன்னும் முடிவடையவில்லை. மே 17 வரை நீடிக்கிறது. அதற்கிடையில் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கான தளர்வுகள் மட்டுமே கொஞ்சமாக கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே இதுக்கு ஏன் கொடுக்கல? அதுக்கு ஏன் கொடுக்கணும்? போன்ற கேள்விகள் அபத்தமானவை

இந்த தளர்வுகள் அவசியமா? நோய் தொற்று குறையாத நிலையில் லாக்டவுனை தொடரலாமே என பலரும் கேட்கிறார்கள்

இந்திய பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்காது. மக்களுக்கு அன்றாட தேவைகள் உள்ளன. உணவு பொருள் மட்டுமே அல்லாமல் வேறு சில பொருட்களின் தேவைகளும் மக்களுக்கு உள்ளன. சேவைகளும் தேவை. எனவே அத்தியாவசிய பொருள் அல்லாதவையும் இப்போது திறக்க வழி செய்யப்பட்டு உள்ளது.
சில தொழிற்சாலையில் தொடர்ந்து நீண்ட நாள் இயங்காமல் வைத்து இருப்பது பெரிய அளவில் பின்னர் பிரச்சனை தரக்கூடும். எனவே அதை இயக்க அனுமதி வேண்டும் என தொழில்துறை கோரிக்கை வைத்தனர்.

எனவே அவர்களுக்காக அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் குறைந்த தொழிலாளர்கள் வைத்து அத்தியாவசிய இயக்கங்கள் மட்டும் செய்து தொழிற்சாலைகள் இயங்கத் தேவையான உத்தரவு மட்டுமே. முழு உற்பத்திக்கு எல்லாம் அனுமதி கொடுக்கவில்லை. அதற்கு தேவையான பணியாளர்களை அழைத்து வருவது எல்லாம் தொழிற்சாலைகள் பொறுப்பு

அதாவது, அரசை பொறுத்தவரை முழுமையான லாக்டவுன் தான். ஆனால் தொழிற்சாலை நலனுக்காக சில இயக்கங்கள் தேவை எனில் உங்கள் பொறுப்பில் தொழிலாளர்கள் அழைத்து வந்து குறைந்த அளவில் இயக்கி கொள்ளுங்கள் என்கிற அளவில் தான் தளர்வு

இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் லாஜிக்கலான தளர்வாகவே தமிழகம் கொடுத்து உள்ளது.

நோய்த்தொற்று நீடிக்கையில் தளர்வு சரியா?

மருத்துவர்களும் உலக சுகாதார நிறுவனமும் சொன்னது என்னவெனில், இந்த நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் 14 நாட்களுக்குள் தெரியத் துவங்கிவிடும். 14 நாள் வரை அறிகுறிகள் இல்லை எனில் பயப்பட ஏதும் இல்லை என்பதே

இதை அடிப்படையாக வைத்தே லாக்டவுன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும் மருத்துவர்கள், குறிபிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டும் சோதனை செய்தால் போதும் என்று இன்னொரு முடிவும் எடுத்து இருந்தனர். அதனால் அறிகுறி இல்லாதவர்களுக்கு சோதனை செய்வதை தவிர்த்து வந்தார்கள்.

ஆனால் இப்போது, 25 நாட்களுக்கு பின்னரும் அறிகுறிகள் இன்றி பாசிடிவ் ஆகிக் கொண்டு இருக்கிறது இந்தியாவில். இது தொடர்பான திருத்தப்பட்ட வரையறை எதுவும் வெளியிடப்படவில்லை. சோதனைக்கான வழிகாட்டி நெறிமுறையும் மாற்றப்படவில்லை. அறிகுறிகள் இருந்தால் மட்டும் டெஸ்ட் செய்தால் போதும் என தினந்தோறும் இணையத்தில் வாதாடிக் கொண்டு இருந்த மருத்துவ நண்பர்களும் இப்போது அமைதி காக்கிறார்கள்.

இந்நிலையில், இன்னும் எத்தனை நாள் லாக் டவுன் தேவை என்பது தீர்மானிக்க முடியாததாக ஆகி விட்டது. யாரிடமும் அதறகான பதில் இல்லை. 

எதிர்பார்த்த நாட்கள் கடந்து இனி பயமில்லை என ஆசுவாசப்படுத்திக் கொள்ள எத்தனிக்கையில் அதிகமாக நோய் தொற்று கண்டறியப்பட்டு தீவிர லாக்டவுனுக்கான தேவையை கொண்டு வந்து இருக்கிறது

இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியோ, இந்தியா கால காலமாக கடைபிடிக்கும் தடுப்பூசி கொள்கையோ, தட்ப வெப்பமோ.. ஏதோ ஒன்று நோய் தொற்றை நீண்ட நாளுக்கு தடுத்தே வந்து உள்ளது. நீண்ட காலம் கடந்த நோய் தொற்று அறிகுறிகள் கூட குறைவான நபர்களுக்கே வந்து உள்ளது.

இது குறித்த விரிவான ஆய்வோ, மறு வரையறையோ மருத்துவர்கள் தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை

இந்நிலையில், 40 நாட்களை கடந்த லாக்டவுன், பொருளாதார தொய்வு, மக்களிடம் போதுமான பணம்/பொருளின்மை, பிற சேவைகளின் தேவைகள், அரசின் வரி வருவாய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வு தருவதா

அல்லது, நோய் தொற்று நீண்ட நாள் அறிகுறிகள் இன்றி இருப்பது, அறிகுறிகள் இல்லாத நிலையிலும் மற்றவர்களுக்கு பரவுவது, சரியான வழிகாட்டுதல் மருத்துவர்கள் தரப்பில் இருந்து இல்லாதது, சுகாதார வல்லுனர்களாலும் நோய் தொற்று குறித்து தெளிவாக விளக்க முடியாதது ஆகிய காரணங்களால் லாக்டவுனை கடுமை ஆக்குவதா 

எனும் இரு கேள்விகளுக்கு இடையில் தான் அரசு உள்ளது

எனவே லாக்டவுனை தொடர்ந்து கொண்டே சிற்சில தளர்வு அறிவிப்பது மட்டுமே இப்போது இருக்கும் ஒரே வழி. அதையே அரசு செய்து இருப்பதாக கருதுகிறேன்.


Printfriendly