Saturday, January 30, 2010

எது தியாகம்??

நேற்று சென்னை முழுக்க ஒரு திடீர் ஆச்சரியம்!  போஸ்டர் ஓட்ட தடை செய்யப்பட சென்னை மாநகரத்தில் திடீர் திடீரென முளைத்திருந்தது "வீரத்தமிழ் மகன்" முத்துக்குமார் நினைவஞ்சலி போஸ்டர்கள்.  நினைவேந்தல் நிகழ்ச்சியில் சத்தியராஜ் உட்பட சில அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வேறு அள்ளி தெளிக்கப்பட்டு இருந்தது!

தோழன் முத்துக்குமரன், இலங்கையில் நடைபெற்று வந்த போரை நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கையோடு, தன்னை தானே எரியூட்டி இறந்துபோன இளைஞர்.  அவரது "வீரத்தையும்" "தியாகத்தையும்" மெச்சி விடுதலை சிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் சீமான் கொளத்தூர் மணி போன்றோரும் நேரடியாக அஞ்சலி செலுத்தி அவரை கவுரவித்தனர்!  முத்துக்குமாரின் மரணம் ஒரு புதிய எழுச்சி அலையை ஏற்படுத்தியது தமிழகத்தில்.  அது போன்ற "வீரத்துக்கான" பாராட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டன.

தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் காரணங்களுக்காக தியாகம் செய்வது ஒரு வழக்கமாக ஆகிவிட்ட ஒன்று.  இன்று நேற்று அல்ல, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படியான தியாகங்கள் போற்றப்பட்டு வருகின்றன.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொது தமிழுக்காக உயிர்கொடுத்த மொழிப்போர் தியாகிகள் அரசாங்கத்தாலேயே வருடாவருடம் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.  அதில் ஒரு நியாயம் இருக்கிறது.  எங்கே எமது மொழி அடியோடு அழிந்து போய் விடுமோ என்கிற ஆதங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, அதன் காரணமாக போர்முனையில் இறந்தவர்கள், மற்றும் தங்களை தாங்களே உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்பவர்கள் எல்லோரையும் பாராட்டுவது என்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் புரூக்கிளின் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் உயிரை கொடுத்தாவது அந்த மாமனிதன் உயிர்பெற வேண்டும் என்கிற அளவிலே தங்களை தாங்களே எரியூட்டி கொண்டு இறந்தவர்கள் அநேகம் பேர்.   அது தியாகமோ, வீரமோ அல்ல என்பது எனது கருத்து.  அது ஒரு மனிதன் மீதான அபிமானத்தில் எடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான முடிவு.  எனினும் அது குற்றச்சாட்டுக்கு உரிய சங்கதியாக இருந்திருக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் டான்சி வழக்கில் கடுமையான தீர்ப்பு வழங்கியபோதும், ஜெயலலிதா கைது செய்யப்பட போதும், ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோல்வியுற்ற போதும் அதிமுக தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இது ஒரு அரசியல் கட்சி தொண்டர் தன தலைமை மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை / விசுவாசத்தின் வெளிப்பாடு.

திமுகவில் இருந்து வெளியேறவேண்டிய சூழல் வைகோவுக்கு ஏற்பட்டபோது, இடிமழை சங்கர் உட்பட ஐவர் தற்கொலை செய்துகொண்டனர்.  அதுவும் தனது நம்பிக்கைக்குரிய தளபதியின் நிலை கண்ட அதிர்ச்சியை வெளிப்படுத்தும் முகமான ஒரு தொண்டனின் உணர்ச்சிவசப்பட்ட முடிவு தான்.  தனி இயக்கம் தொடங்க முதல் புள்ளி வைத்தது அந்த தற்கொலைகள்.  முதல் மூன்று ஆண்டுகள் அந்த தற்கொலைகள் போற்றப்பட்டு பின்னர் மறக்கப்பட்டது.  சமூகம் சார்ந்த தியாகங்கலாக அவை ஒரு போதும் பார்க்கப்படவில்லை.

பொதுவாக, இந்தியாவில் தற்கொலை என்பது கைதுக்குரிய கடுமையான குற்றம்.  அப்படியான தற்கொலைகளை ஆதரிப்பது / அங்கீகரிப்பது என்பது பிறரையும் அது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட தூண்டும் என்பதால், அப்படி ஆதரிப்போர் / அன்கீகரிப்போர் தற்கொலைக்கு தூடுதலாக இருந்ததாக கருதப்பட்டு நடவடிக்கைக்கும் உரியவர் ஆகின்றனர்.

எனினும், சில அரசியல் இயக்கங்கள் மட்டும் எதற்காகவோ, சமூகம் சாராத தற்கொலைகளை நியாயப்படுத்துவதும், அங்கீகரிப்பதும் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

அப்படி அங்கீகரிப்பது ஒரு புறம்... ஆனால் அவற்றுக்கு வீரம், தியாகம் என்றெல்லாம் பெயர் சூட்டி புளகாங்கிதம் அடைவது சகிக்க முடியவில்லை.

நாகை பள்ளி குழந்தைகள் இறந்த சம்பவத்தில் ஆசிரியை சுகந்தி நீச்சல் தெரியாத நிலையிலும் குழந்தைகளை காப்பாற்றி இறுதிவரை போராடி உயிர்விட்டாரே... அதை வீரம் என்றோ, தியாகம் என்றோ அங்கீகரிக்க எந்த அரசியல் வாதிக்கும் மனமில்லை.  காரணம் அந்த "தியாகம்" ஓட்டுக்கள் பெற்று தராது!

இப்படியான தமிழக சூழலில் எது தியாகம் என்கிற தெளிவு யாருக்கேனும் பிறந்தால் தெரிவியுங்களேன்... தெளிவுறுகிறேன்!

8 comments:

 1. பிரமாதமான பார்வை , எவனும் அந்த ஆசிரியை நினைக்ககூட இல்லை

  ReplyDelete
 2. மருத்துவ மனையில் தீக்காயத்தோடு போராடும் முத்துக்குமாரிடம் மருத்துவர் கேட்கிறார்- நல்ல புத்திசாலியான நீ,ஏன் இந்த முடிவுக்கு வந்தாய்? என்கிறார்.அதற்க்கு முத்து குமார்,
  என்னை விட புத்திசாலிகளை எல்லாம் ஈழத்தில் கொன்று குவிக்கிறார்களெ ...அதை தாங்க முடியாமல் தான் இந்த முடிவுக்கு வந்தேன்.எங்கிறார்.
  மேலும் முத்துகுமார் பர்றி அறிய வினவு பக்கங்கள் படித்து விட்டு வரவும்
  www.vinavu.com

  ReplyDelete
 3. மரணங்கள் சில விதிவிலக்கானவை.ஆனால் மரணத்தை அறுவடை செய்ய நினைக்கும் போது அதன் உயர்ந்த அங்கீகாரம் கடந்த கால அரசியலால் அசிங்கப் பட்டுப் போகிறது.

  ஜல்லிக்கட்டு,உயிர் போன்றவை தமிழனின் தனி சொத்து.ஜீன்.

  ReplyDelete
 4. முதல் மூன்று ஆண்டுகள் அந்த தற்கொலைகள் போற்றப்பட்டு பின்னர் மறக்கப்பட்டது. சமூகம் சார்ந்த தியாகங்கலாக அவை ஒரு போதும் பார்க்கப்படவில்லை./////

  திமுக அனுதாபியான நீங்கள் குத்துமதிப்பாக இவ்வாறு நினைத்து எழுதியிருப்பது எந்தவித வியப்பையும் ஏற்படுத்தவில்லை..

  மதிமுக-வின் ஒவ்வொரு மாநாடு நடைபெறும்போதும் மாநாட்டுத் திறப்பு விழாவில் முதல் நிகழ்வு தியாகிகள் உருவப்பட திறப்பு விழாதான்...

  மதிமுக/வைகோ/ஈழம் குறித்தெல்லாம் உங்களால் கண்டிப்பாக நடுநிலையான கருத்துகளை எழுத முடியாது. அதனால் குறைந்தபட்சம் நடுநிலையான் போல எழுதுவதையாவது தவிர்க்கலாமே! இது ஆலோசனை மட்டுமே.. நீங்க கண்டிப்பா மாட்டீங்கன்னு தெரியும்..

  ReplyDelete
 5. முத்துக்குமாரை நினைவுகூர்ந்ததையொட்டி எது தியாகம் என இந்தப் பதிவிட்டுள்ளீர்கள். ஆனால், மதிமுக தொண்டர்களது தற்கொலை சில ஆண்டுகளுக்குப் பிறகு மறக்கப்பட்டுவிட்டது (அது தவறான செய்தி என்பது வேறு விடயம்) என்று குறை கூறுகிறீர்கள்... இன்னும் சில வருடங்கள் கழித்து முத்துக்குமாரை அனைவரும் மறந்துவிட்டனர் என்று குறைகூறினாலும் ஆச்சர்யப்படமாட்டேன்...

  ReplyDelete
 6. மனித வாழ்வில் ஒரு சுதந்திரம் அடக்குமுறைகளுக்கு உட்படும்போது
  ஏற்ப்படும் எதிர்ப்புகளுக்கு வன்மம் என்றுபெயர். அப்படி எடுத்துகொண்டால் உன்ன உணவு இருந்தும் உண்ணாவிரதம் இருப்பது உயிர்வாழ வழி இருந்தும் உயிர்த்தியாகம் செய்வது எல்லாம் ஒருவைகையான வன்மத்தின் வெளிப்பாடு ...

  அடக்குமுறைகளுக்கு ஆட்படும், சுதந்திரத்தை பறிகொடுக்கும் அனைவருக்கும் வன்மம் வெளிப்படாது... சுயமரியாதை உள்ளவர்களுக்கும், சுயமரியாதை கலந்த சமூக விழிப்புணர்வு கலந்த முத்துகுமார் போன்ற உயிர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்....

  அந்த வகையில் திரு சதீஸ் அவர்களுக்கு தியாகம் வன்மம் பற்றி அறிய வாய்ப்பு இல்லை....

  ReplyDelete
 7. ///
  நேற்று சென்னை முழுக்க ஒரு திடீர் ஆச்சரியம்! போஸ்டர் ஓட்ட தடை செய்யப்பட சென்னை மாநகரத்தில் திடீர் திடீரென முளைத்திருந்தது "வீரத்தமிழ் மகன்" முத்துக்குமார் நினைவஞ்சலி போஸ்டர்கள். நினைவேந்தல் நிகழ்ச்சியில் சத்தியராஜ் உட்பட சில அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வேறு அள்ளி தெளிக்கப்பட்டு இருந்தது
  ///

  அடிமைதேசத்தில் சுடரொளியாய் ஒளிர்ந்தவர் முத்துகுமார்
  அப்படிப்பட்டவரின் உயிர்தியாகத்தை போற்றுபவர்கள் செய்த வளாக இருக்கும் சதீஸ். சுயஉணர்வு உள்ளவர்கள் பார்வையில் அங்கு ஓட்ட பட்ட போஸ்டர்கள் சுவரொட்டிகள் அனைத்தும் தியாகத்தை நினைவுகூரும் விடயம்

  உங்களின் பார்வையில் அது திடீர் என்று முளைத்ததாக தெரிந்தால்
  நீங்கள் யார் என்று உங்களையே ஒருமுறை கேட்டுகொள்ளுங்கள்..

  ReplyDelete

Printfriendly