Sunday, January 31, 2010

வைகோ : சரிந்த சரித்திரம்!

பழனி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம்.
காங் வேட்பாளர் கார்வேன்தனை ஆதரித்து திமுக அணியினரின் பொதுக்கூட்டம்.
கூட்டத்தில் பேசிய அனைவரும் (நடுநிலையாளர் என போற்றப்படும் முரசொலி மாறன் உட்பட) வைகோ என்கிற பேரை கவனமாக தவிர்க்கிறார்கள்.
பிற்பாடு பேசவருகிறார் புரட்சி புயல்.
எடுத்த எடுப்பிலேயே "என் பாராளுமன்ற அரசியல் ஆசான் அண்ணன் முரசொலி மாறன் அவர்களே" என தொடங்க அதிர்கிறது கைதட்டல்.  அந்த கைதட்டல் கொடுத்த சவுக்கடியின் வீச்சை மேடையில் இருந்த திமுக தலைவர்களால் தாங்கி கொள்ள முடியாததை நாங்கள் கண்கூடாக கண்டோம். அந்த பேச்சில் அத்தனை தொண்டர்களையும் கட்டி போட்டார் வைகோ.  அந்த பேச்சு திறம்....

திமுகவில் இருந்து வெளியேற நேர்ந்தபின் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க குடவாசல் பொதுக்கூட்டம்..  வரலாற்று நிகழ்வுகளை கட்டி கோர்த்து நிகழ்கால அரசியலை தொட்டு தூக்கி மிக நீண்ட சொற்பொழிவு.... அந்த பேச்சு திறம்..

பின்னர் அவரது எத்தனை எத்தனையோ மேடை பேச்சுக்கள்....  சந்தேகமே இல்லை.. அவர் ஒரு மிக மிக சிறந்த அரசியல் பேச்சாளர் தான்.

எல்லா சிறந்த தளபதிகளும் சிறந்த தலைவர்களாக பரிணமிப்பது இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் வைகோ.

திமுகவில் இருந்து வெளியேறி புதிய இயக்கம் கண்டு சிறப்பான தொடக்கம் கண்டார். எனினும் தவறான முடிவுகளால் தன்னையும் தன இயக்கத்தையும் தமிழகத்தின் சிறந்த காமடி இயக்கமாக மாற்றி காட்டினார்.

எந்த இயக்கத்தை எதிர்த்து தனி இயக்கம் கண்டாரோ அதே இயக்கத்துடன் அணி சேர்ந்தது.  பாசிச சக்தி என்று நரம்பு புடைக்க முழங்கி எதிர்த்த அதிமுகவுடன் அணி சேர்ந்தது.. அதுவும் உப்பு சப்பு இல்லாத சங்கரன்கோவில் தொகுதியை காரணம் காட்டி.. என்று நிலையற்ற அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தது வைகோவுக்கு எதோ தவறான வழிகாட்டுதல்கள் நடைபெறுவதான தோற்றமே ஏற்படுத்தியது.

திமுக 22 தொகுதிகள் கொடுக்க இசைந்து அதில் பெரும்பான்மையான தொகுதிகள் மதிமுக செல்வாக்கான தொகுதிகளாக கொடுக்க இசைந்தும், சங்கரன் கோவில் தொகுதி அந்த பட்டியலில் இல்லை என்று காரணம் சொல்லி அதிமுகவின் 35 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் போட்டு அணி சேர்ந்தார்.  கொடுமை என்னவெனில் மதிமுக செல்வாக்கான தொகுதிகள் ஒன்று கூட அதிமுக பட்டியலில் இல்லை.  எந்த சங்கரன்கோவில் திமுக தரவில்லை என்று வெளியேறினாரோ, அதே சங்கரன்கோவில் அதிமுகவும் தரவில்லை. அதை எதிர்த்து வைகோவால் எந்த முணுமுணுப்பும் செய்யமுடியவில்லை.  ஒருவேளை திமுகவின் தொகுதி ஒதுக்கீட்டை ஏற்று இருந்தால் குறைந்தது 13 தொகுதிகளிலாவது மதிமுக வெற்றி பெற்று இருக்கும்.  அதிமுகவுடன் இணைந்ததில் வெற்றி வாய்ப்புக்களை இழந்து, அதிமுகவின் பிரச்சார குழு தலைவராக மட்டும் வளைய வர முடிந்தது வைகோவால்.

முன்பு 211 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டு துணிச்சலாக தேர்தல் களம் கண்ட மதிமுகவுக்கு இப்படியான அடிமை சாசன நிலைப்பாடு ஏற்படும் என்று எந்த மதிமுக தொண்டனும் எதிர்பார்த்து இருக்க மாட்டான்.

தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கிராமங்கள் தோறும் குக்கிராமங்கள் தோறும் கிளைகள் நிறுவி, பிரச்சாரம் செய்து மக்களோடு மக்களாக இணைந்து நின்ற தலைவர்களுள் ஒருவர் வைகோ.  அவரது இயக்கத்தின் வீச்சு தமிழகம் முழுமையும் விரவி கிடக்கிறது.  பாமக, வி.சி  போன்ற குறுகிய பிராந்திய கட்சிகளே தெம்பாக சட்டமன்றம் செல்லும் பொழுது மதிமுக போன்ற பேரியக்கம் கூனி குறுகி யாரோ போல சட்டமன்றம் நுழைவதற்கு, வைகோவின் தவறான அரசியல் நிலைப்பாடுகள் அன்றி வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.

திமுக, அதிமுக இயக்கங்களுக்கு மாற்றாக பேரியக்கமாக முகிழ்த்து சரித்திரம் படைக்கும் என கருதிய மதிமுக இன்று சரிந்து தேய்ந்து அதிமுகவின் துணை அமைப்பு போல அமைந்து போனது வருத்தமே!  மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்துவது, அவ்வப்போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்கள் பணியாளராக தங்களை முன்னிறுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மதிமுக செய்யவேயில்லை.

திமுக இயக்கத்தை பொறுத்தவரை உட்கட்சி ஜனநாயகம் மிக சிறப்பாக இருக்கும்.  அந்த இயக்கத்தின் இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை பிரமுகர்கள் கூட உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னேர்ரப்படுவார்கள்.  இயக்கம் மீதான விமரிசனம் ஏதும் இருப்பின் அவர்களால் தைரியமாக அதனை வெளிப்படுத்த முடியும்.  பிற இயக்கங்களான அதிமுக, காங், பாமக போன்றவற்றில் அப்படி அல்ல. அங்கே தலைமையும் தலைமைக்கு விசுவாசமான சில தலைவர்கள் தவிர வேறு யாருமே முக்கியத்துவம் பெறுவதில்லை.  அப்படியான ஜனநாயகத்தில் வளர்ந்த வைகோவும், தனது சுய திறன் காரணமாக உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் பெற்றவரே.  திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக முன்னேறினார்.  அத்தகைய அங்கீகாரம் திமுகவில் கொடுக்கப்படுகிறது.  இப்போதும் மூக்கையா போன்ற மாவட்ட செயலாளர்கள் கூட தனி செல்வாக்குடன் வளைய வருவது திமுகவில் மட்டும் தான் சாத்தியம்.

ஆனால், மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பது மிஸ்ஸிங்.  இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சுயமாக வெளிப்படுத்தும் நிலை இப்போது அங்கே இருப்பதாக தெரியவில்லை.  அவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுத்தாலே, மதிமுகவின் வளர்ச்சிக்கான வழிகளை மனம் திறந்து கொட்டுவார்கள்.

இப்போது சரிந்திருக்கும் மதிமுகவின் செல்வாக்கு பின்னர் சரித்திரமாக உயர வாய்ப்பு உண்டு??  ஆனால் அது சாத்தியமா???  சுய முடிவுகள் எடுக்கும் திறன் வைகோவுக்கு வருமா??  அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த இயக்கம் விடுபடுமா???  

2 comments:

  1. அரசியலில் சகஜமப்பா வார்த்தை சகஜமென்றாலும் முன்னுக்குப் பின் முரணாய் தி.மு.க,அ.தி.மு.க தேர்தல் தாவல்கள் மிக அபத்தம்.அதிலும் ஜெயலலிதா கூட்டு சரிவின் உச்சம்.ஈழ கணை கூட முறையாக செயல்படுத்த தெரியவில்லை.கருணாநிதிக்குப் பின் அரசியல் மாற்றங்கள் வரும்.இருந்தாலும் இதுவரை படிக்காத படிப்பினையா இனி புதிதாக கற்றுக்கொடுக்கப் போகிறது?தனி மனித பேச்சு அழகு தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  2. தி மு க வில் உட்கட்சி ஜன நாயகமா? ரொம்ப ஜோக் அடிகதீங்க? அதெல்லாம் இருபதிந்து ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்தது. இப்பெல்லாம் ஸ்டாலின் மற்றும் அழகிரி சொல்பவர்கள் தான் மாவாட்ட செயலாளர் !!!!

    ReplyDelete

Printfriendly