Sunday, February 10, 2013

கம்யூனிசத்தின் தோல்வி?
"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் ஒரு கம்யூனிஸ்ட் இருந்துகொண்டு தான் இருக்கிறான்" – இது மிக பிரபலமான மிக மிக உண்மையான ஒரு வாக்கியம்.

அப்படி இருந்தும், இந்தியா மாதிரியான ஒரு தொழில் தேசத்தில் கம்யூனிசம் தோல்வியடைந்தது ஏன் என்கிற கேள்வி எனக்குள் அவ்வப்போது எழுவதுண்டு.

முன்பெல்லாம், இத்தனை மாநிலங்கள் இருந்தும் கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா தவிர வேறு எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாதிருக்கையில், ஏன் இந்த மாநிலங்கள் மட்டும் தொடர்ச்சியாக கம்யூனிசத்தை ஆதரிக்கின்றன? மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட்டுக்களை புறக்கணிக்கின்றன என்கிற விடை தெரியாத கேள்வி வந்து வந்து போகும் எனக்கு. தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதால் தான் கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட்டுக்கள் பிரபலமாக இருக்கிறார்கள் என்கிற பதிலை சொன்னவர்களிடத்திலெல்லாம், அதை விட அதிக தொழிலாளர்களை கொண்ட, தமிழகம், ஆந்திரம், ஹரியானா, டெல்லி, மராட்டிய மாநிலங்களில் ஏன் கம்யூனிஸ்டுக்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்கிற என் குதர்க்க விதண்டாவாத கேள்விகளை வீசி, அவர்கள் அதற்கு பதில் தெரியாமல் தடுமாறுவதை பார்த்து ரசித்த காலங்கள் இருந்தது. இப்போது, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநில ஆட்சி பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு இருக்கும் கம்யூனிஸ்டுக்கள், மெல்ல தங்களில் பெரும் முடிவுரையை மொத்தமாகவும் வேகமாகவும் எழுதிக்கொண்டிருப்பதாக ஒரு உருவகம் எனக்கு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

கம்யூனிஸ்டு என்கிற சொல் எனக்கு அறிமுகமானது கோவையில் தான். 1987-88 ல் நான் சிவானந்தா காலனியில் குடியிருந்த காலத்தில் தினசரி டீக்காக காலையில் காயத்திரி டீ ஸ்டால் எனும் கடைக்கு செல்வது வழக்கம். (இப்போது அந்த கடை அங்கே இல்லை. வடகோவை மேம்பாலம் அருகில் செயல்படுவதாக சொன்னார்கள்). அதன் உரிமையாளரான திரு. விஸ்வநாதன் அவர்கள் ஒரு கம்யூனிஸ்ட் என அறியப்பட்டவர். அவர் தான் எனக்கு கம்யூனிச சித்தாந்தங்களை அறிமுகப்படுத்தியவர். அவரது கடையில் வாங்கப்படும் தீக்கதிர், தேசாபிமானி பத்திரிகைகளும் பிற துணை!

பின்னர் சென்னை வந்து தொழிலாளியாக வாழ்க்கை போராட்டத்தை முன்னெடுத்து செல்ல நேர்கையில், வாரயிறுதிகளில் நான் அதிகமாக தேடி நாடி ஓடி செல்லும் எழும்பூர் கன்னிமாரா நூலகத்தின் புத்தக அலமாரிகளில் தேடி தேடி படித்த சில நூல்கள் எனக்கு கம்யூனிசத்தின் மீதான மரியாதையை அதிகப்படுத்தின. ‘லால் சலாம்’ போன்ற படங்களும் அதன் பங்கை செவ்வனே செய்ததை மறுக்க முடியாது. அந்த காலகட்டத்தில், இந்தியா போன்ற நாட்டுக்கு கம்யூனிஸ்ட்டுக்களை விட மிக பொருத்தமான கட்சி வேறு இருக்கமுடியாது என எண்ணி இருக்கிறேன். இப்போதும் அந்த கருத்து முற்றாக ஒழிந்துவிடவில்லை. என் மனதின் எங்கோ ஒரு மூலையில் அது குற்றுயிரும் குலையுயிருமாக உயிர்த்திருந்தபடி தான் இருக்கிறது அந்த ஆசை.

நூல்களும், சினிமாக்களும் காட்டிய பெருமை மிகு கம்யூனிசத்தை நான் யதார்த்த வாழ்க்கையில் காணமுடியவில்லை. அதை தேடிய என் ஓட்டங்களில் தான் கம்யூனிசம் படு தோல்வி அடைந்து தன் இறுதி யாத்திரையில் இருப்பதை நான் உணர்ந்துகொண்டது.

கம்யூனிசத்தின் மிக அடிப்படையான கொள்கைகளுள் மிக சிலவற்றை எடுத்துக்கொண்டால் அவற்றுள் முக்கியமானவை, தொழிலாளர் நலம், சமூக சீர்திருத்தம், சமத்துவம், சம உரிமை போன்றவை கண்டிப்பாக இருக்கும். தலைமறைவாக வாழ்ந்து கஷ்டப்பட்டு உயிர்பயத்தோடு கம்யூனிசத்தை வளர்த்தவர்கள் இப்போது இல்லை.

பாட்டாளிகளுக்காக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பாட்டாளிகளை பற்றி கவலைப்படுவதை மறந்து, முதலாளிகளால் நடத்தப்பட்டு வருவது தான் கம்யூனிசத்தின் தோல்விக்கான வரலாறு.

இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் இருக்கும் அளவுக்கு மிக சிறப்பாக எந்த நாட்டிலும் இல்லை என சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும், இங்கே தொழிலாள தோழர்கள் அந்த சட்டத்தின் முழுமையான பலனை அனுபவிக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கூட அவர்களது துணைக்கு கம்யூனிசம் வரவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. எட்டு மணி நேர வேலைக்காக போராடிய ஒரு கட்சி, பதிமூன்று மணிநேரம் தொழிலாளர்களை வேலைவாங்கி பிழியும், பன்னாட்டு கம்பெனிகளிலும், மென்பொருள் நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களை பற்றி இன்னமும் கவலை கொள்ளவில்லை. கொத்தடிமை தொழிலாளர்கள், விவசாயத்திலும், செங்கல் சூளைகளிலும், பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆதரவின்றி அடிமையாக இன்னமும் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மிகப்பெரிய தொழிற்சாலைகளில் கூட தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை பெற்று தர முடியாத ஒரு கையாலாகா தனத்தில் தான் இன்றைய கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்றன.

சமூக சீர்திருத்தத்தில் திராவிட இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடி கம்யூனிசம். இன்னும் சொல்லப்போனால், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் போன்றோர்களின் திராவிட கொள்கைகளும், அவர்கள் கொண்டு வந்த திட்டங்களும், சட்டங்களும் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை தான். பகுத்தறிவு, சமூக சம உரிமை போன்றவற்றின் அடிப்படையில் இயங்கும் கம்யூனிசம் இப்போது அதன் அத்தகைய கொள்கைகளை எங்கே தொலைத்தன என்பது யாருக்கும் தெரியாது.

தமிழகத்தை பொறுத்தவரை, நல்லக்கண்ணு, நன்மாறன் போன்ற எளிய கம்யூனிஸ்டுக்களும், பாலபாரதி, பாண்டியன், மகேந்திரன், ரங்கராஜன், வரதராஜன் போன்ற வசதிமிகுந்த கம்யூனிஸ்டுக்களும் மட்டும் தான் கம்யூனிஸ்டுக்களின் முகம். தொழிற்சாலைகள் அதிகமிருக்கும், ஹோசூர், திருச்சி, மதுரை, சென்னை, நாமக்கல், கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாகவும், உருப்படியானதாகவும், பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கத்துடனும் இல்லை என்கிற கசப்பான உண்மையை அப்பகுதி தொழிலாள தோழர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டதுண்டு.

அரசியல் கூட்டணி, அல்லது கூட்டணி அரசியல் என்கிற ஒற்றை சித்தாந்தத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, தனது கருத்துக்களையும், நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் உருமாற்றிக்கொண்ட ஒரு தேர்தல் அரசியல் கட்சியாக தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சி மாறிப்போனதன் சாட்சி தான் இன்றைய தமிழகத்தின் அவல நிலை.

தேசிய அளவிலும் கூட பிரகாஷ் காரத் போன்ற முதலாளித்துவ சிந்தனையாளர்களால் கம்யூனிசம் தனது உண்மை முகத்தை இழந்து நிற்பதை அறியாதவர்கள் இல்லை.

தேசம் முழுமையும் பரந்து விரிந்து ஓரளவு செல்வாக்குடன் திகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கட்சி கம்யூனிஸ்டு கட்சி. மிக அதிக அளவிலான தன்னார்வ தொண்டர்களை கொண்ட கட்சியும் கூட. இந்தியா இன்றைக்கு இருக்கும் அத்தனை சிக்கலுக்கும் தன்னகத்தே தீர்வை கொண்டிருக்கும் கொள்கைகளை கொண்டது கம்யூனிச சித்தாந்தம். இப்படி இத்தனை பலம் இருந்தும் ஏன் உருப்படியான ஒரு நிலையை அந்த கட்சிகள் அடையவில்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை.

இந்திய கம்யூனிஸ்டு, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா, மார்க்ஸிஸ்டு, லெனினிஸ்டு, மாவோயிஸ்டு, தீவிர கம்யூனிஸ்ட் என்றெல்லாம் பிரிந்து பிரிந்து சென்றதற்கு, அதிகார ஆசையும், தனித்துவ கோட்பாடும், பதவி மோகமும் போன்றவைகளே காரணம் என்பதும், மக்கள் நலனோ கொள்கை பிடிப்போ அல்ல என்பது நாடறிந்த உண்மை.

இப்போது முயன்றால் கூட, தேசிய அளவில் ஒத்த கருத்துக்களை கொண்ட இயக்கங்களை ஒன்றிணைத்து, வாரம் தோறும் நாடு முழுதும் கூட்டங்களை நடத்தி, மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி, இழந்த மக்களின் செல்வாக்கை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு ஒரு சிறப்பான மாற்றாக வந்துவிடக்கூடிய சக்தி கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தாலும், அப்படியான ஆக்கப்பூர்வ சிந்தனைகளோ, மக்கள் நலன் குறித்த புரிதலோ இல்லாத தலைவர்களின் கையில் சிக்குண்டு கிடக்கிற கட்சி என்கிற வருத்தம் பெரும்பாலான நடுநிலையாளர்களுக்கு இருப்பதை மறுக்க முடியாது.

இந்தியா இப்போது இருக்கும் சூழலில், கம்யூனிஸ்டுகளின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தாலொழிய அடித்தட்டு மக்கள் மேம்பட முடியாது என நான் அவ்வப்போது சிந்திப்பதுண்டு. நல்லவேளையாக அப்படி சிந்திக்கும் தலைவர்கள் யாரும் கம்யூனிஸ்டு கட்சியில் இப்போது இல்லை.

குறைந்த பட்சம், இழந்த ஆட்சிக்கட்டிலையாவது கேரளத்திலும், மேற்கு வங்காளத்திலும் கைப்பற்றும் ஆசையும், திறனும், திட்டமிடுதலுமுடைய தலைவர்கள் கூட இல்லை என்பது அந்த கட்சியின் துரதிர்ஷ்டம் மட்டுமல்ல, அந்த மக்களின் துரதிர்ஷமும் கூட.

இப்போது நானும் எல்லோரையும் போல ஓரமாக ஒதுங்கி நின்று வருத்தத்துடன் வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டேன். எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு கட்சி, யாருக்கும் பயனில்லாமல் தன்னை தானே அழித்துக்கொண்டு வரும் வேதனையான காட்சியை.

4 comments:

 1. கம்யூனிசம் ஒழிக்கப்படவெல்லாம் முடியாது. அது இரு துருவங்களில் ஒன்று. என்னைப பொருத்தவரை ஜனநாயகத்தில் கம்யூனிசம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாக வேண்டிய கட்டாயம் கண்டிப்பாக உண்டு. கம்யூனிசம் தோன்றியதே எதிர்ப்பு சக்தியால் தான். மன எதிர்ப்பு சக்தி!

  ஆனால் ஒரு சிக்கல்...கம்யூனிசம் ஆளுங்கட்சியாக எந்த நாட்டிலும்,எந்த மாநிலத்திலும் உருப்படியாக இருந்ததில்லை. இதற்கு காரணம் உண்டு. அவர்கள் தீமைகளை எதிர்ப்பதில் அசாத்திய நேர்மையும் துணிவையும் காட்டுவார்கள். ஆனால் செயல் திட்டத்தில்,ஆக்கபூர்வமாக செய்ய வேண்டியதில் விற்பன்னர்கள் கிடையாது. அந்த சித்தாந்தமே தோன்றிய வரலாறு அப்படி.

  ஆக அவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பின் சீரழிவுதான். ஆந்திராவில் ஒரு நடிகன்-ராமாராவ் முதல்வராக இருந்தகாலகட்டத்தில் செய்த சீர்திருத்தங்கள் கூட இந்த கம்யூனிச மாநிலங்களில் நடந்ததில்லை -என்று சொன்னார் எழுத்தாளர் ஜெயமோகன். இது உண்மைதான்.

  கம்யூனிசம் காரில் இருக்கும் ப்ரேக் மாதிரி. அதன் பேரே வேகத்தடைதான். அது இல்லையெனில் சீரழிவுதான். அது அப்பப்ப வேலை செய்யணும். கம்யூனிசம் அதனால்தான் எதிர்க்கட்சி வரிசையில் எப்போதும் இருந்தே ஆகணும்.

  ஆனால் ப்ரேக்கினால் வண்டி ஓடுவதில்லை. அது அந்த வேலையை செய்ய லாயக்கில்லை. கம்யூனிசம் ஆண்ட மாநிலங்களின் சீரழிவுக்கு இது தான் காரணம். ஒரு உருப்படியான திட்டத்த கொண்டு வர,அதை நடத்திக்காட்ட அவர்களே தடை போட்டுக்கொள்வார்கள் பழக்க தோஷத்ததில்.

  தமிழ்நாட்டில் திராவிடஇயங்கங்களே குறிப்பிட்ட அளவு சீட்கள் கொடுத்து வட்டத்துக்குள் அடக்கிவிடுகின்றன. என் தொகுதியில் கம்யூனிஸ்ட வேட்பாளர்கள் போட்டியிடும்போது நான் அவர்களுக்கே வாக்களிப்பேன்.

  ஆனால் ஒருவேளை கம்யூனிசம் அதிர்ஷ்டத்தில் ஆளுங்கட்சியாக செல்வாக்கு பெருமானால், அது எல்லா தொகுதியில் போட்டியிட முயற்சிக்குமானால், எதிர்த்தே வாக்களிப்பேன்...கம்யூனிசம் ஆக்ஸிலேட்டர் அல்ல...வண்டியை நகர்த்தவேமுடியாது அவர்களால்.

  நுகர்வோர் கலாச்சாரம்,பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை நடக்கிற இந்த காலகட்டத்தில் கம்யூனிசம் புதுபிறப்பு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இப்போது இருக்கிற கம்யூனிஸ்டுகளால் அதை செய்ய இயலாது.


  இவைகள் என் தனிப்பட்ட கருத்து.

  ReplyDelete
 2. இந்திய வரலாறும் சமூக அமைப்பும் பற்றி முதலில் படித்து தெரிந்து கொண்டால் இந்தியாவில் கம்யூனிச இயக்கம் பற்றி புரிபடும்......

  ReplyDelete
 3. இந்திய வரலாறும் சமூக அமைப்பும் பற்றி முதலில் படித்து தெரிந்து கொண்டால் இந்தியாவில் கம்யூனிச இயக்கம் பற்றி புரிபடும்......

  ReplyDelete
 4. எனது பல கருத்துக்களை பிரதிபலிப்பதாக உள்ளது . ஆகவே சில
  சொற்தொடர்களை மென்ஷன் போட்டு கீச்சினேன்.
  கம்யுனிசம் தோற்காது என்று இன்னும் நம்ப வேண்டாம் .மாறுபட்ட
  தோற்றத்தில் கம்யுனிசம் புதுமையாக வந்து ஏழை களின் விடிவெள்ளியாக
  வரவேண்டும் என்பது என்னுடைய ஆசையும் .

  ReplyDelete

Printfriendly