Wednesday, February 27, 2013

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம்!


த்திய அரசு நேற்றைய தினம் தனது ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்செய்திருக்கிறது. நிறைய நல்ல திட்டங்கள் பரவலாக அமைந்திருக்கிறது பட்ஜெட்டில். அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக, இணையதள முன்பதிவு வசதி மேம்படுத்தப்படுவது, ரயில்வே உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை, இலவச இணைய தள வசதி, 100 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீனமயமாக்குதல், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில் இணைப்பு, வேலை காலியிடங்களை நிரப்புதல், அதிநவீன சொகுசு பெட்டி ஒன்று குறிப்பிட்ட ரயில்களில் இணைத்தல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5 ரயில்பெட்டி தொழிற்சாலை என அறிவிப்புக்கள் அட்டகாசமாக இருக்கின்றன.
 
(திருச்சி-கும்பகோணம் டீசல் மல்டிப்பிள் யூனிட்)

ஆனால், அதனிடையே அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களும் உள்ளன. லாலு பிரசாத் காலத்தில் 16,000 கோடி ரூபாய் உபரி காட்டிய ரயில்வே துறை இப்போது 24,200 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாக ஒரு அணுகுண்டை வீசியதோடு, மறைமுக கட்டண உயர்வாக, முன்பதிவு கட்டணம், தத்கல் கட்டணம் ஆகியவையும், சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பொது நோக்கில் பார்க்கையில், இந்த பட்ஜெட் அப்படி ஒன்றும் பாதகமான பட்ஜெட் அல்ல என்றும், திட்டங்களின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் என்றும் சொல்ல முடிகிறது. (நிதி நிலையை தவிர. அது ஒன்று தன் இன்னமும் என்னால் ஜீரணிக்கமுடியாமல் இருக்கிறது!)

நான் நம் தமிழகத்துக்காக என்ன இருக்கிறது என்பதை தான் அதிகம் கவனித்தேன். என்னை பொறுத்தவரை இது மிக மிக அருமையான தமிழக வளர்ச்சிக்கான பட்ஜெட் என அடித்து சொல்வேன்! அதை பற்றி இனி விரிவாக பேசலாம்! (நீளம் ஜாஸ்தியானால் மன்னிக்கவும்!)

புதிதாக விடப்பட்ட 67 எக்ஸ்பிரஸ் ரயில்களில் தமிழகம் பெறுவது 14 ரயில்கள். திருச்சியில் தொழில்நுட்ப பயிற்சி மையம். 8 ரயில்களின் தூரம் நீட்டிப்பு, 6 ரயில்களின் சேவை அதிகரிப்பு, 7 வழித்தடங்கள் இரட்டை பாதையாக்கம், புதிய ரயில்பாதைகள் என அசத்தலாக பெற்றிருக்கிறது தமிழகம்.

ஏற்கனவே நான் பலமுறை சொன்னதை போல, தமிழ்கம் பரவலாக ரயில்வே லைன்களால் பின்னலிடப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் ரயில்வே அடர்த்தி தமிழகத்தில் 31% ஆக உள்ளது. (கர்நாடகத்தில் 16%, கேரளா 9%) இப்போது மேலும் இந்த அடர்த்தியை அதிகரிக்கும் நோக்கில், குறுக்கு பாதைகள் இடப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானவைகளை மட்டும் பார்க்கலாம்.

ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி : சென்னை-பெங்களூர் பாதையையும், சென்னை-திருச்சி பாதையையும் குறுக்குவெட்டாக இணைக்கவும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் ஆகிய பகுதிகளை நேரடியாக அரக்கோணத்துடன் இணைக்கவும் இந்த புதிய வழித்தடம் உதவும். மேலும், ஒரகடத்தை மையமாக வைத்து பார்த்தால், பிற்காலத்தில் தாம்பரம்-ஒரகடம்-வாலாஜா-காஞ்சிபுரம் பாதைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரகடத்தில் அமைந்திருக்கும் பலப்பல தொழிற்சாலைகளுக்கு இந்த ரயில் பாதை ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை. வட இந்தியாவுக்கு நேரடியான சரக்கு ரயில் வசதி கிடைக்கும்.

முன்பு பயன்பாட்டில் இருந்து பின்னர் மூடப்பட்ட பேரளம்-காரைக்கால் பாதை மீண்டும் பயன்பாட்டுக்கு வர ஆய்வு: இதன் மூலம் காரைக்கால் செல்லும் ரயில்கள் திருவாரூர், நாகூர் என சுற்றவேண்டியதில்லை.

அரியலூர் – தஞ்சாவூர் பாதை: இது கார்டு லைன் என சொல்லப்படும் விருத்தாச்சலம்-திருச்சி பாதையை, மெயின் லைன் என சொல்லப்படும் கடலூர்-தஞ்சை பாதையுடன் குறுக்குவெட்டாக இணைகும். லப்பைக்குடிக்காடு, செந்துறை, ஜெயங்கொண்டசோழபுரம் போன்ற பகுதிகள் வளர்ச்சி அடையும் என நம்பலாம். மேலும், காரைக்கால் பகுதியிலிருந்து அரியலூர் வழியே நேரடி ரயில் (தஞ்சை, திருச்சி வராமல்) வசதிக்கும் வாய்ப்பு உள்ளது.

காரைக்குடி – திண்டுக்கல்; காரைக்குடி – மதுரை பாதைகள்: காரைக்குடி பகுதிக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (ப.சிதம்பரம் அவர்கள் இதற்காக பெருமைப்பட்டுக்கொள்ளலாம்). இந்த இரண்டு புதிய பாதைகள் அமைவதன் மூலம் காரைக்குடி ஐந்து வழிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக மேம்படும். (ஏற்கனவே திருச்சி, மானாமதுரை, பட்டுக்கோட்டை தடங்களில் பாதைகள் உள்ளது) காரைக்குடி-திண்டுக்கல் பாதை மூலம் மேலூர், சிங்கம்புணர், நத்தம் போன்ற பகுதிகளும், ரயில் இணைப்பு பெறும்.

தருமபுரி – மொரப்பூர் இணைப்பு : சென்னை பெங்களூர் பாதை ஹோசூர் வழி செல்வதில்லை. ஆனால் ஹோசூர் வளர்ந்து வரும் ஒரு பெரும் தொழில் நகரம். சேலத்திலிருந்து ஹோசூர் வழியாக பெங்களூருக்கு ரயில் பாதை இருந்தாலும், சென்னையிலிருந்து நேரடியாக ஹோசூர் செல்ல முடியாது. அதனால், தருமபுரி-மொரப்பூர் இணைப்புப்பாதை மூலம், சென்னை-ஜோலார்பேட்டை-மொரப்பூர்-தருமபுரி-ஹோசூர் நேரடி ரயில் சேவை கிடைக்கும். இது தொழில்வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

ஆற்காடு-வாலாஜாரோடு பாதை, பெங்களூர்-சத்தியமங்கலம் பாதை ஆகியன இன்ன பிற பாதைகள். இவை துண்டாக நிற்பதாக ஒரு தோணல் எனக்கு. பிற்காலத்தில் ஆற்காடு-செய்யார்-திருவண்ணாமலை மற்றும் சத்தி-புளியம்பட்டி-கோவை வழித்தடத்தில் பாதை அமைக்கும் திட்டம் இருக்கிறதோ என்னவோ, தெரியவில்லை!

நெல்லை-சங்கரன்கோவில் (வழி: பேட்டை, புதூர், செந்தாமரம், வீரசிகாமணி); ஆலூர்-நாகர்கோவில்-செட்டிக்குளம்; தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை பாதைகளும் இந்த ஆண்டில் பணிகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சேலம்-நாமக்கல்-கரூர் பாதை செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

இவற்றையெல்லாம் பார்க்கையில் நிறைய குறுக்கு வெட்டு பின்னல் பாதைகள் நிறுவப்படுவது புரியும். இது தமிழ்கத்தின் அனைத்து பகுதிகளிலும் ரயில் சேவை கிடைக்க வழி செய்யும். சீரான பொருளாதார வாழ்வாதார வளர்ச்சிக்கும் அது உதவும்.

14 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கோவை-மன்னார்குடி; கோவை-ராமேஸ்வரம்; சென்னை-பழநி; புதுச்சேரி-கன்னியாகுமரி; நாகர்கோவில்-பெங்களூரு ஆகியவை தான் புதிய ரயில் சேவைகள். இதில் நாகர்கோவில்-பெங்களூரு மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் ரயில். பெங்களூரில் இருக்கும் தென் தமிழக மக்களுக்கு இது மிக பெரிய உதவியாக இருக்கும்.

கடலூர்-கும்பகோணம்-தஞ்சை/திருவாரூர் ரயில்பாதையை மீட்டர் கேஜ் பாதையிலிருந்து அகலப்பாதையாக மாற்றுவதற்காக நிறுத்தப்பட்ட ரயில்களில் சில மீண்டும் இயக்கப்படுகின்றன. அவை சென்னை-தஞ்சாவூர்; சென்னை-காரைக்குடி (பழைய கம்பன்?); சென்னை-வேளாங்கண்ணி லிங்க் (பழைய கம்பன் லிங்க்?) ஆகியன.

மங்களூர்-திருச்சி ரயிலை புதுச்சேரி வரை நீட்டித்திருக்கிறார்கள். இதன் மூலம் நீண்ட நாள் கோரிக்கையான கோவை-புதுவை நேரடி ரயில் வசதி கிடைக்கிறது. சென்னை-குருவாயூர் ரயிலின் ஒரு பகுதியை தூத்துக்குடிக்கு நீட்டித்து இருக்கிறார்கள். இதன் மூலம் தூத்துக்குடிக்கு ஒரு பகல் நேர ரயில் கிடைக்கிறது. சென்னை-திருச்சி பல்லவன் ரயில் இனி காரைக்குடி வரை இயக்கப்படும். இதன் மூலம் சென்னை-திருச்சி மார்க்கத்தில் எக்ஸ்க்ளூசிவ்வாக இருந்த ஒரே ரயிலும் பறிபோகிறது திருச்சிக்கு. (ஏற்கனவே இருந்த மலைக்கோட்டை ரயில் சென்னை-கும்பகோணம் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது!)

பழநி-திருச்செந்தூர் இடையே புதிய (பாசஞ்சர்) ரயில் விடப்பட்டு இருக்கிறது. பழநி-சென்னை எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்-கரூர்-நாமக்கல்-சேலம்-ஜோலார் வழியாக இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. நாமக்கல், ராசிபுரம் பகுதிகள் சென்னைக்கு ரயில் இணைப்பை இதன் மூலம் பெறும். பின்னாளில் அரியலூர் முக்கிய சந்திப்பாக வளர்கையில் நாமக்கல்-அரியலூர் இணைப்பதன் மூலம் மத்திய தமிழகம் முழுமையாக ரயில்வசதி பெற்று விடும்.

மங்களூர் - கச்சேகுடா புதிய ரயில் கோவை பகுதியிலிருந்து ஹைதிராபாத்துக்கான மற்றுமொரு நேரடி ரயில் சேவையாக அமைகிறது. ஏற்கனவே இருக்கும் ‘சபரி’ போதாது என்பதை ரயில்வே உணர்ந்திருக்கிறது.

கோவை, திருப்பூர் பகுதிகளில் தொழில்நிமித்தமாக வந்து தங்கியிருக்கும் காவிரி டெல்டா மாவட்ட மக்களுக்கு, கோவை-மன்னார்குடி ரயில் உதவும். (நான் கோவை-நாகப்பட்டினம் ரயிலாக வரும் என எதிர்பார்த்திருந்தேன்!)

கோவை பகுதியில் நலிந்துவரும் தொழிற்சாலைகள் இனி பாலக்காடு நோக்கி இடம்பெயர நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கஞ்சிக்கோட்டில் (பாலக்காடு மாவட்டம்) புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை அமையப்போகிறது. கோவை எல்லையோர பகுதிகளில் சிறுதொழிற்சாலைகள் அமைய அது ஏதுவாகும். (தமிழக அரசு கோவையை தொழில்வளர்ச்சியில் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது தனிக்கதை. அதை இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்!)

பொள்ளாச்சி-கோவை பாதையில் ஒரு பகுதியான பொள்ளாச்சி-கிணத்துக்கடவு பாதை இந்த ஆண்டு முழுமை அடையும் என்றும், கிணத்துக்கடவு-கோவை பகுதி அடுத்த ஆண்டு அமையும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு நீண்ட கால கோரிக்கை. மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதால், கோவை-பொள்ளாச்சி-உடுமலை-பழநி-திண்டுக்கல் பாதை மூடப்பட்டு இருக்கிறது. இந்த பாதை பணிகள் விரைவுபடுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் மேற்கு-தெற்கு தமிழக ரயில் இணைப்பு முழுமை பெறும்.

(நீலகிரி மலை இரயில்)

மலை ரயில்கள் நவீனமயமாக்கப்பட்டு ஸ்விசர்லாந்து, ஆஸ்டிரியா, ஆல்ப்ஸ் போன்ற ரயில்களின் தரத்துக்கு மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, பாரம்பரியமான நீலகிரி மலை ரயிலுக்கான விடிவுகாலம் ஆகும். (நான் ஒரு முறை அதில் பயணித்த ஞாபகம் மறக்கமுடியாதது. மெல்ல செல்லும் வண்ண ரதம் அது! இயற்கையோடு பயணிக்கும் அந்த வாய்ப்பை எப்போதும் தவறவிடாதீர்கள்!)

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், முக்கியமான பாதைகளை மின்மயமாக்கல், இரட்டை பாதையாக்கப்படுதல், ஆகியவை குறித்த அறிவிப்புக்கள் இல்லாததும், கோவை-பெங்களூரு; கோவை-திருவனந்தபுரம்; சேலம்-புதுவை; பெங்களூரு-தஞ்சை(வழி மயிலாடுதுறை) போன்ற நீண்ட கால கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் வராததும் ஒரு வருத்தமே.

நாடு முழுக்க கவனிக்க வேண்டி இருப்பதால், அது பெரிய ஒரு குறையாக எடுத்துக்கொள்ளமுடியாது எனினும், அடுத்த பட்ஜெட்டிலாவது வரும் என எதிர்பார்க்க துவங்கலாம்.

பொது நோக்கில், தமிழகம் இந்த ரயில்வே பட்ஜெட் மூலம் அதிக நன்மைகளை பெற்றிருப்பதாக தான் உணர்கிறேன். 

தொடர்புடைய பிற பதிவுகள்:
1. Railway Budget 2013 - Expectations
2. Railway Budget 2013 - Expectations of TN
3. ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் - பாகம் 1
4. ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் - பாகம் 2
5. சேலம் கோட்ட ரயில்வே - தீரா பிரச்சனை
6. ரயில் பட்ஜெட் - தமிழகத்தை பொறுத்தவரை (2011)
7. தமிழகமும் ரயில்வே துறையும்
 

No comments:

Post a Comment

Printfriendly