Wednesday, February 20, 2013

காவிரி - மகிழ்ச்சியா??


மிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நேற்றைய தினம், மத்திய அரசு ‘காவிரி விவகாரத்தின் இறுதி தீர்ப்பை’ அரசிதழில் வெளியிட்டு விட்டது. இது எனது பிறந்தநாளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என முதல்வர் ஜெயலலிதா புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்துக்கு முதல்வர் நன்றி தெரிவிக்க, கலைஞரோ பிரதமருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். தமிழகமே மகிழ்ச்சியில் திளைக்கிறது. எல்லாம் சரி. உண்மையிலேயே இது இத்தனை மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தானா?

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை அமல் செய்ய மறுத்து அடம்பிடித்த கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற நாம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இதற்கிடையே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பும் வெளியானது. அது முழுமையாக தமிழகத்துக்கு சாதகமாகவே அமைந்திருந்தது.


(நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு படி நீர் பங்கீட்டு முறை)

எனினும், கர்நாடகம் அந்த இறுதி தீர்ப்பையும் மதிக்கவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய், காவிரி நடுவர் மன்றமே செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இவ்வாறாகவெல்லாம் கர்நாடகம் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த வேளையிலெல்லாம் நமக்கு உதவியாக இருந்தது, பிரதமர் தலைமையிலான காவிரி கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் தான். அவர்கள் தலையிட்டு அழுத்தம் கொடுத்து கர்நாடகத்தை இதுவரை பணியவைத்துக்கொண்டிருந்தார்கள்.

இப்போது இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியானதால், காவிரி நடுவர் மன்றமும், காவிரி கண்காணிப்பு ஆணையமும் கலைக்கப்பட்டுவிடும். சட்டத்தை மதிக்கின்ற அரசாக கர்நாடகம் இருந்தால், நாம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் கர்நாடகத்தின் அணுகுமுறை பற்றி நன்கு தெரிந்தவர்கள் கவலைகொள்ளாமல் இருக்க முடியாது.

இனி, கர்நாடகம் அரசிதழில் வெளியான இறுதி தீர்ப்பை அமல் செய்யாவிட்டால், நாம் முன்பு போல மத்திய அரசையோ, பிரதமரையோ, காவிரி நடுவர் மன்றத்தையோ, காவிரி கண்காணிப்பு ஆணையத்தையோ உதவிக்கு அழைக்க முடியாது. நாம் இனி உச்சநீதிமன்றத்தில் வழக்கிட்டு தான் நியாயம் பெற முடியும். அது அவ்வளவு எளிதாகவோ, உடனடியான தீர்வாகவோ அமையுமா என்பது தெரியவில்லை.

மேலும், மத்திய அரசு, தனது அரசிதழில் நேற்று இறுதி தீர்ப்பை வெளியிட்டாலும், அதை இன்னமும் செயலாக்கத்துக்கு கொண்டு வரவில்லை. அதற்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதற்குள் எதுவும் மனமாற்றம் நடைபெறாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலையும் எனக்குள்ளது.

கர்நாடகம் சட்டத்துக்குட்பட்டு செயலாற்றி, இறுதி தீர்ப்பு படி தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் திறந்துவிட்டாலொழிய நாம் மகிழ்ச்சி கொள்ள எதுவும் இல்லை. மாறாக தனது இயல்பான இயல்புப்படி, மீண்டும் முரண்டு பிடித்தால் (கேட்க ஆளில்லை என்கிற கூடுதல் தைரியம் வேறு) தமிழகத்தின் நிலை கஷ்டம் தான்!

அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால், இன்றைய நிகழ்வு ஒரு பெரும் கொண்டாட்டத்துக்குரிய விஷயமாக இருக்கலாம். தமிழக விவசாயிகளுக்கும் நமக்கும் அப்படி இருப்பதாக தோன்றவில்லை.

பொறுத்திருந்து கவனிப்போம்.. என்ன தான் நடக்கிறதென்று!

2 comments:

  1. Unless otherwise the 'so called politicians' from both the states, go out of this issue, we are not going to see any major progress in getting waters from KN. We should form a body from the representatives of Farmers, who never got attached to any political background & they should monitor the availability of water & give directions for release. This will ease the pressure from both the ends.

    ReplyDelete
  2. அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து உங்கள் பார்வையில் எழுதிக்கொண்டுவருவதற்கு நன்றி :-) , பத்திரிக்கை படிக்க நேரமில்லை, தொலைக்காட்சி பார்க்க ஆர்வமில்லை, இணையமே கதி என்றிருக்கும் எனக்கு இது வசதியாயிருக்கு :-)

    ReplyDelete

Printfriendly