Wednesday, March 28, 2018

இளையராஜாவும் ஏசு உயிர்த்தெழுதலும்

ஏசு உயிர்த்தெழுந்தது கற்பனையே அறிவியல் பூர்வமான ஆய்வோ ஆதாரமோ இல்லை என இளையராஜா குறிப்பிட்டத்தில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.



எப்படி ராமன், கிருஷ்ணன், முருகன் போன்ற இறை நிலையில் வைத்து பார்க்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்கள் (உதாரணமாக: பேசும் ஜடாயு, பறக்கும் வானரப்படை, சங்கு சக்கரத்தால் சூரியனை மறைய செய்தல் பொன்ற பல நூறு சம்பவங்களை சொல்லலாம்) நம்பமுடியாதவையாகவும் அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகவும் இருக்கிறதோ அதைப்போலவே நான் ஏசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களையும் நான் பார்க்கிறேன்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களது வாழ்க்கை கதையில் கூட இப்படியான சம்பவங்கள் சில உள்ளன. உமறு புலவரே கூட அதை சொல்லி இருக்கிறார்.

புத்தர், மஹாவீரர் என யாரும் இதில் விதிவிலக்கல்ல.

கதைகள் சொல்லப்பட்டபொழுது அந்த கதையின் சுவாரஸ்யத்துக்காக சில மிகைப்படுத்தல்கள் வருவது இயல்புதான்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி அவர்களது வாழ்க்கை பற்றி சொல்லும்பொழுது கூட சில சம்பவங்கள் இயல்பை மீறி மிகைப்படுத்தலோடு விவரிக்கப்பட்டதை நான் கேட்டுள்ளேன். அது அவர்களது ஆளுமையை அதீத உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒரு வழிமுறை. அவ்வளவே.

சில நூற்றாண்டுகள் கழித்து 'ஸ்டாலின் சொடக்குப்போட்டால் கவிழ்ந்துவிடக்கூடிய ஆட்சியாக எடப்பாடியின் ஆட்சி நடைபெற்றது' என சொல்லப்பட்டு அதுவும் நம்பப்பட்டு வரலாறாகவே கூட ஆகும் வாய்ப்பு இருக்கிறது

எனவே ஒரு விஷயத்தை பற்றிய அதீதங்கள் இருந்தாலும் கூட அதை நாம் மென்மையாக புறக்கணித்துவிட்டு சொல்லவரும் விஷயங்கள் என்ன என்பதை மட்டும் கவனிப்பது நல்லது.

கீதோபதேசம் நடைபெற்ற சூழல் நடைபெற்ற விதம் அது தூரே இருக்கும் திருதிராஷ்டினனுக்கு சஞ்சயன் வழியாக நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்யப்பட்டது என்கிற செய்தி ஆகியவை எல்லாம் நம்பத்தக்கது அல்ல.. நம் இளையராஜா அவர்கள் குறிப்பிடுவது போல அறிவியல்பூர்வமானதோ ஆய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்ல.. எனினும் கீதையின் மூலம் கிருஷ்ணன் எனும் பாத்திரம் சொல்ல வரும் செய்தி என்ன என்பதில் மட்டுமே நமது கவனம் இருக்கவேண்டும். அது நல்ல கருத்துக்கள் உடையது எனில் அதை நம் வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான் எனது புரிதல்.

அதை விடுத்து அதெப்படி சஞ்செயன் நேரடி ஒளிபரப்பு செய்தார்? இதெல்லாம் என்ன நம்புறமாதிரியா இருக்கு? என எள்ளி நகையாடுவதை விடுத்து அதையும் நம்பும் அளவுக்கு தான் நாம் பலருக்கு கல்வித்தரத்தை கொடுத்திருக்கிறோம் என நினைத்து அதை மேம்படுத்த முனைவதில்லையா? அதைப்போலவே எல்லாவற்றையும் கருத வேண்டும்

இளையராஜா சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. எல்லா மத கதைகளிலும் இருப்பது தான் அது. ஆனால் அதை குறிப்பான குற்றச்சாட்டாக வைப்பது சரியல்ல. அப்படி எனில் எல்லா மதத்திலும் இருக்கும் அதுபோன்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத அனைத்து சம்பவங்களையும் அவர் சாடி இருக்கவேண்டும். சாடுவார் என எதிர்பார்க்கிறேன்.

என்னதான் ஆன்மீகத்தில் அமிழ முயன்றாலும் அடிப்படையாகவே அவர் மனதில் கொலுவிருக்கும் அந்த கம்யூனிசமும் பகுத்தறிவும் இன்னமும் உயிர்த்திருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சி

மெல்ல பகுத்தறிவு பாதைக்கே மீண்டு(ம்) வருவார் என நம்புகிறேன்!

Tuesday, March 20, 2018

பாஜக ஆட்சியின் காரணிகள்

பாஜக கடந்த 2014 ல் ஆட்சிக்கு வர காரணம் பொருளாதார காரணங்களே தவிர ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் இல்லை. ஏனெனில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை (!). வேலை வாய்ப்பின்மை பொருளாதார சீர்கேடு ஆகிய காரணங்களால் தான் காங்கிரசை மக்கள் எதிர்த்தனர் என்றொரு திடீர் புத்திசாலித்தன பதிவுகள் வர தொடங்கி இருக்கிறது..

ஊழல் இந்திய தேர்தலில் மிக முக்கிய காரணி

உதாரணம் 2ஜி. அது ஊழலே அல்ல. ஆனால் பாஜக அதை ஊழல் என ஊதி பெரிதாக்கி காங்கிரஸ் மீது மிகப்பெரிய பழியை போட்டது. மக்கள் அதை முழுமையாக நம்பி வாக்களித்தனர். (இப்போது அது ஊழல் இல்லை என்பதும் வினோத் ராயை வைத்து பாஜக ஆடிய நாடகம் என்பதும் மக்களுக்கு தெளிவாக தெரிந்தாலும் கறை கறை தான்)

மாநில அளவிலும் கூட, 1996 தேர்தலில் ஜெ தோற்க ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம். 2011 தேர்தலில் திமுக தோற்கவும் ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம்..

கடந்த 2014 தேர்தலை பொறுத்தவரை பாஜக ஜெயித்ததற்கு முக்கிய காரணங்கள்:

1. பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களால் காங்கிரசை Character Assassination செய்ததோடு தாங்கள் வந்தால் ஊழலற்ற ஆட்சி தருவோம் என வாக்களித்தது (உண்மையில் காங்கிரசை விட அதிக ஊழல்களும் முறைகேடுகளும் இப்போதைய ஆட்சியில் நடப்பது நாம் அறிந்ததே. உம். ரஃபேல்)

2. பாஜகவின் அஜெண்டாக்களுக்கு (ராமர் கோவில், காமன் சிவில் கோடு போன்றவை) அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்த பிரச்சாரம். இவை வட இந்தியாவில் இனியும் நன்றாக எடுபடும். தென்னிந்தியா சட்டை செய்யாது

3. கருப்பு பணத்தை 100 நாளில் மீட்பேன், கார்ப்பரேட் ஊழல்வாதிகளை ஒடுக்குவேன் என மாநிலத்துக்கு மாநிலம் விதம் விதமாக கொடுத்த வாக்குறுதிகள் (கார்ப்பரேட்  ஊழல்களின் பொற்காலம் இது என்பதும் குற்றவாளிகள் அரசு ஆதரவோடே வெளிநாடு சென்று பாதுகாப்பாக இருப்பதும் நீங்கள் அறிந்ததே)

மற்றபடி வேலைவாய்ப்பை வைத்தெல்லாம் ஆட்சியை மக்கள் தீர்மானிப்பதில்லை. அப்படி பார்த்தால் சிறு குறு தொழில்கள் 23% இழுத்து மூடப்பட்டு இருக்கிறதே இந்த ஒரே ஆண்டில்? அதற்காக பாஜக தோற்கடிக்கப்படும் என்கிறீர்களா? பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ள இந்நிலையில் ஏற்றுமதி முடங்கிவிட்ட சூழலில் அதெல்லாம் பாஜகவை பாதிக்கும் என நம்புகிறீர்களா என்ன?

உண்மையில் பொருளாதார நிலையை பார்த்தால், 2005-2014 மிக பிரமாதமாக இருந்ததும் 2014 க்கு பின் அதள பாதாளத்தில் வீழ்ந்ததும் எல்லோருக்குமே தெரியும்

அதேபோல வேலைவாய்ப்பு தொழில்வளர்ச்சி ஏற்றுமதி ஆகியவையும் இப்போது பாஜக ஆட்சியில் தான் சரிந்தது என்பதும் எல்லோருக்கும் தெரியும். மூடப்பட்ட தொழில் நிறுவனங்களே அதற்கு சாட்சி

பாஜகவுக்கு தேவை 275 எம்.பிக்கள். அதை ராமர் கோவில், இந்துத்துவா, இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும், தலித்கள் ஒடுக்கப்படுவார்கள், காமன் சிவில் சட்டம் போன்ற வழக்கமான வாக்குறுதிகளை வைத்தே வட இந்தியாவிலேயே எடுத்துக்கொள்ள முடியும்.

தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் கவலையில்லை.

அடுத்ததும் பாஜக ஆட்சி தான்

காரணம் பாஜகவை ஆதரிப்பவர்களின், அவர்களின் சிந்தனைத்திறனின் தரத்தின் டிசைன் அப்படி.

Saturday, March 17, 2018

திராவிடநாடு

திராவிட நாடெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று. திமுக 50 வருஷத்துக்கு முன்னேயே கைவிட்ட கொள்கை அது

ஆனால் மனதளவில் திராவிடநாடு (Virtual Dravidanadu) எப்போதும் நம் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.

திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் கூட (எம்.ஜி.ஆர் & ஜெ.. இருவரும்) பல சமயங்களில் மாநில நலன் கருதி மத்திய அரசை எதிர்த்தும், மத்திய அரசுக்கு ஒத்துழைக்காமலும் தமிழகத்தின் தனித்தன்மையை காத்து வந்திருக்கிறது. இதில் எம்.ஜி.ஆரை விட அதீத ஆரவம் காட்டி மாநில சுயாட்சியை தீவிரமாக நிலைநாட்டியவர் ஜெ. என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எனவே திராவிட நாடு என்பது நமக்கு புதிதல்ல. நமது மாநிலத்துக்கு தீமை பயக்கும் எல்லாவற்றையும் மத்திய அரசு என்று கூட பாராமல் எதிர்ப்பது, நமக்கான நியாயத்தை நிலைநாட்டி கொள்வது, மாநில உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை நம் தனித்துவத்தில் அடங்கும்

காவிரி, முல்லைப்பெரியார், கடலோர காவல்படை, இட ஒதுக்கீடு, மின்சார பகிர்மான க்ரிட், நவோதையா, உணவு பாதுகாப்பு, சமூக நல மானியங்கள்... என பல பல விஷயங்களில் நாம் நமக்கான தனிக்கொள்கைகள் வைத்து செயல்பட்டு வருகிறோம்.. தேவைப்பட்டால் இந்திய அரசுடன் எதிர்த்தும் வருகிறோம். அது பாராளுமன்றம் ஆனாலும் சரி உச்சநீதிமன்றம் ஆனாலும் சரி. எங்கும் போய் ஒரு கைபார்த்துவிட்டு வருவதே வழக்கம்.

இப்போது இத்தகைய செயல்பாடுகளை மெல்ல மெல்ல நம் அண்டை மாநில முதல்வர்களும் கைகொள்ள தொடங்கி இருப்பது மகிழ்ச்சி

அவரவர் மாநில தலைமை பதவியில் இருப்பவர்கள் அவரவர் மாநில நலன் கருதி மத்திய அரசுக்கு எதிராக தங்களுக்கென்று ஒரு தனிக்கொள்கையுடன் இயங்குவது என்பது தான் மாநில சுயாட்சியின் அடிப்படை.

அதை நோக்கி எல்லோரும் பயணிக்க தொடங்குகையில் மனதளவில் இருக்கும் 'திராவிடநாடு' இயல்பாகவே செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

மற்ற மானிலங்கள் எல்லாம் இப்படி ஒத்துவந்தால் (மத்திய அரசை எதிர்த்து மாநில நலன் காக்கும் நடவடிக்கைகள் எடுத்தால்) தமிழகமும் அதை ஆதரிக்கலாம். தவறில்லை. ஏனெனில் நாமும் அதைத்தான் காலகாலமாக செய்து வருகிறோம்

மற்றபடி, இங்கே சில திடீர் புத்திசாலிகள் பேசுவது போல தனி நாடெல்லாம் வாய்ப்பே இல்லை

Tuesday, March 6, 2018

பெரியார் சிலை ஏன் அவசியம்?

பெரியார் தான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவராச்சே? அப்புறம் அவருக்கு மட்டும் எதற்கு சிலை? என்றொரு கிண்டலான கேள்விகள் திடீரென முளைத்திருக்கிறது.

மகிழ்ச்சி


பெரியார் உருவ வழிபாட்டுக்கு எதிரானவர் தான். தனிநபர் வழிபாடு கூடாது என்றவர்தான். சிலைகள் வைக்கப்படக்கூடாது என வாதிட்டவர் தான்.

உருவ வழிபாடு என்பது வேறு.. தலைவர்களின் உருவத்தை பெரும் சிலையாக நிறுவி எதிர்வரும் சந்ததியினருக்கு பாடமாக படிப்பினையாக எடுத்துக்காட்டாக வைத்து மரியாதை செய்வது என்பது வேறு

ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளில் பல தலைவர்கள் மன்னர்களின் சிலைகள் அவ்வாறானவையே.

சென்னையில் கூட ஆங்கிலேயர் காலத்தில் அப்படி நிறுவப்பட்ட மன்றோ, ஜார்ஜ் மன்னர் போன்றோரின் சிலைகள் இப்போதும் இருக்கின்றன. அவற்றை பார்க்கும் இளம் தலைமுறையினர் அவர்களை பற்றி அறிய ஆவல் கொண்டு தேடி படிக்க துவங்குகின்றனர்.

எனவே உருவ வழிபாடு தான் தவறே தவிர தலைவர்களுக்கு உருவச்சிலை அமைத்து மரியாதை செய்வதில் தவறில்லை

இது போன்ற தர்க்கங்களை எல்லாம் கலைஞர் அவர்கள் எடுத்து வைத்து பெரியாரையே சம்மதிக்க வைத்து அவரும் மகிழ்ச்சியாக தன் சிலை திறப்புவிழாவிலே கலந்து கொண்டார் என்பது வரலாறு.

எனவே சிலைகளுக்கு எதிரானவர் பெரியார் என்பது தவறான வாதம். சிலைகளை வழிபடுவதற்கு மட்டுமே எதிரானவர் என்பதை புரிந்துகொள்வது நலம்.

நிற்க!

அது வெறும் சிலை தானே? அதை ஏன் நீக்கவேண்டும்? அதை நீக்குவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

இரண்டுக்குமான பதில் ஒன்று தான்.

பெரியார் சிலையை பார்ப்பவர்கள் அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவரது வாழ்க்கை, அவரது சிந்தனை, அவரது போராட்டம், அவர் அப்படி போராட நேர்ந்த சூழல், அப்போதைய காலகட்டத்தின் அடக்குமுறை, சமூக ஏற்ற தாழ்வுகள், அவரது கொள்கைகள், அவரது கருத்து வீச்சுக்கள் என பலவற்றை படித்து புரிந்து கொள்ள முயல்வார்கள்

அதற்காக தான் எல்லா தாலூகாவிலும் அவருக்கு சிலை வைக்கப்பட்டது.

அதனால் தான் அந்த சிலைகளை அகற்றவேண்டும் என சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் குளிர்காய நினைப்பவர்கள் துடிக்கிறார்கள்

அதன் காரணமாகவே அப்படியான சிலை தகர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் ஒன்று திரள்கிறார்கள்

இதை படிக்கும் நீங்கள் சமூக ஏற்ற தாழ்வுகளை எதிர்ப்பவர் எனில், எல்லா மனிதனும் சமம் என எண்ணுவோர் எனில், சக மனிதனுக்கான மரியாதை ஒவ்வொருவருக்கும் அவசியம் என நினைப்பவர் எனில், சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளவர் எனில், நாகரீக மனித சமுதாயத்தில் வாழ விரும்புபவர் எனில், நீங்களும் அந்த சிலை தகர்ப்பை எதிர்த்து இந்நேரம் குரல் கொடுத்து இருப்பீர்கள்.

மாறாக, சமூக ஏற்றத்தாழ்வு படிநிலைகளில் மனிதத்தை வகைப்படுத்தி வைப்பவர் எனில் சிலை தகர்ப்பை நியாயப்படுத்துவீர்கள்

நீங்கள் யார் என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளலாம்

நன்றி!

Printfriendly