Sunday, April 29, 2018

உயர்நீதிமன்ற தீர்ப்புகள் - திமுகவுக்கு தோல்வியா?

சமீபத்திய உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மிகுந்த சுவாரஸ்யமானவை.

தீர்ப்பு 1:

சட்டமன்ற அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதவியை ரத்து செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட கோரி திமுக தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

சட்டமன்ற சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது என தலைமை நீதிபதி சொல்லி இருக்கிறார். இது சரியானது தான்.

ஆனால் சமீபத்தில் புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் உத்தரவில் இதே உயர்நீதிமன்றம் மன்றம் தலையிட்டு அவரது உத்தரவை ரத்து செய்தபோது எப்படி கோர்ட்டுக்கு அதிகாரம் வந்தது என தெரியவில்லை.

ஒருவேளை, பாதிக்கப்படுவோர் பா.ஜ.க ஆக இருப்பின், அந்த பாதிப்பிலிருந்து அவர்களை மீட்க எல்லோருக்கும் எல்லாவித அதிகாரங்களும் வழங்கப்பட்டு இருக்கிறதோ என்னவோ?

நீதிமன்றங்கள் நடுநிலை தன்மை கொண்டவை. தன்னிச்சையாக சட்டத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்குபவை என நான் நம்புகிறேன். (அது ஒருவேளை மூட நம்பிக்கையில் வருமோ என்னவோ)

தீர்ப்பு 2:

சட்டமன்றத்தில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை வைப்பது 'தார்மீக அடிப்படையில்' தவறுதான். ஆனாலும் அதை தீர்ப்பாக சொல்ல சட்டத்தில் இடமில்லை என தலைமை நீதிபதி சொல்லி இருக்கிறார்

உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்ததை இப்போது உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி. இனியேனும் அதிமுகவினர் அதை உணர்ந்தால் நல்லது.

தார்மீக ரீதியில் தவறு. ஆனால் சட்ட ரீதியாக தவறில்லை என்பது டான்சி நில வழக்கிலேயே இதே ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன கருத்தை நினைவு படுத்துகிறது.

திமுக இந்தவிஷயத்தில் வழக்கு போட்டிருக்க தேவையே இல்லை என ஒரு வாதம் வைக்கப்பட்டு வந்தது. சட்டத்தில் இடமில்லாத ஒன்றுக்காக திமுக வழக்கு போட்டு விளம்பரம் தேடுவதாக நான் கூட பலமுறை நினைத்திருக்கிறேன்.

ஆனால் நேற்றைய தீர்ப்பின் படி ஜெயலலிதா குற்றவாளி என மீண்டும் உறுதிப்படுத்த பட்டுள்ளதால் அரசின் திட்டங்களில் அவரது படத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு வழக்கை திமுக தாக்கல் செய்ய இந்த தீர்ப்பு உதவும்.

சட்டமன்றத்தில் படத்தை நீக்கத்தானே சட்டத்தில் இடமில்லை?

சுருக்கமாக பார்த்தால் முதல் தீர்ப்பை அப்பீலில் வெல்ல முடியும். இரண்டாவது தீர்ப்பின் அடிப்படையில் புதிய வழக்கு பதியலாம்

திமுகவுக்கு ஆறுதல் வெற்றிதான். தோல்வி அல்ல.

பார்ப்போம்!

No comments:

Post a Comment

Printfriendly