Sunday, April 8, 2018

காவிரி - பேச்சுவார்த்தை சாத்தியமா?

கேப்டன் நேற்று "கர்னாடக அரசுக்கு ராகுல் மூலம் அழுத்தம் தந்து காவிரி விவகாரத்தை தீர்க்கவேண்டும்" என்கிற ரீதியில் பேசி இருப்பதை 'சிலர் மட்டும்' ஆகா ஓகோ என புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

முதலில் பிரச்சனை இப்போது மத்திய அரசின் கையில் இருக்கிறது. கர்னாடக அரசின் கையில் அல்ல. இந்த அடிப்படை கூட இங்கே பலருக்கும் புரியவில்லை.

இதில் கூடுதலாக திமுக/அதிமுக காவிரிக்காக எதையுமே செய்யவில்லை என்கிற உளறல் வேறு.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழகம் பேச்சுவார்த்தை, சட்ட போராட்டங்கள் என போராடி வந்ததை அறியாதவர் எவரும் தமிழகத்தில் இல்லை.

பாசனபரப்பு அதிகரித்தல், கூடுதல் வாய்க்கால்கள் அமைத்தல், அணைகள் என தமிழக ஒப்பந்தத்துக்கு எதிராக கர்நாடக அரசு நடந்து அதை எதிர்த்து ஜெ & முக இருவர் ஆட்சியிலும் பல வழக்குகள் பதிந்து பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடைபெற்றது.

திமுக மத்திய விபி சிங் அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் நடுவர் மன்றம் அமைந்தது.

நடுவர் மன்றம் முழுமையாக விசாரித்து விரிவான தீர்ப்பு கொடுத்தபின் அதை அரசிதழில் வெளியிட ஜெ அரும்பாடு பட்டு ஜெயித்தார்.

இப்படி திராவிட இயக்கங்களின் தொடர் சட்ட போராட்டங்களின் காரணமாகவே தமிழகத்துக்கு சாதகமான இறுதி தீர்ப்பு வந்தது

இதன் படி, CMB அமைத்து அவர்களது கட்டுப்பாட்டில் நீர் திறப்பு/தேக்கம் ஆகியவை ஒப்படைக்க வேண்டும். அது நடுவர் மன்ற தீர்ப்பின் படி நீரை திறந்து விடும்.

மத்திய அரசு இந்த CMB அமைத்தால் மட்டும் போதும். மற்றவற்றை அதுவே பார்த்துக்கொள்ளும். அதற்கான அதிகாரத்தை Tribunal & SC அதற்கு கொடுத்து இருக்கிறது

எனவே இனியும் பூசி மெழுகி மழுப்பாமல், சட்டப்படி தமிழகத்துக்கு சேரவேண்டிய உரிமையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அதை வலியுறுத்துவதை தவிர வேறு எதை சொன்னாலும் அது சரியல்ல. ஒவ்வொரு மனசாட்சியுள்ள மனிதனும் இனியும் தாமதப்படுத்தாமல் ம.அரசு தனது கடமையை செய்யவேண்டும் என்றே விரும்புவான்

---------

பிற்சேர்க்கை:

இது தொடர்பான சில கேள்விகள் பிறிதொரு இடத்தில் கேட்கப்பட்டு அதற்கான எனது பதிகள்

கே: அரசு அரசியல்வாதிகள் சட்டம் எல்லாம் தேவையில்லை. இரு மாநில விவசாயிகள் பேசி தீர்த்துக்கொள்ளலாமே?

ப: விவசாயிகள், அரசு, கட்சிகள், சட்டம், நீதிமன்றம் என அனைத்து முறைகளிலான பேச்சுவார்த்தைகளும் சட்ட போராட்டங்களும் நடந்து முடிந்து இறுதியாக தான் நடுவர்மன்றமும் அதன் தீர்ப்பும் வந்திருக்கிறது. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய நிலையில் தமிழகம் இல்லை

கே: வி.பி.சிங்குக்கு கொடுத்தது போல ஏன் மன்மோகன்சிங்குக்கு அழுத்தம் கொடுக்கவில்லை?

ப: மன்மோகன் சிங் காலத்தில் தான் நடுவர் மன்ற தீர்ப்பு அமல்ப்படுத்துவதற்கான அழுத்தத்தை கொடுத்து அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து கர்னாடக அரசு வழக்கு தொடுத்து அந்த வழக்கு விரிவாக நடந்து அதற்கான தீர்ப்பு தான் இப்பொப்து பிப்ரவரியில் வந்திருக்கிறது

கே: CMB அமைக்கப்பட்ட பிறகும் மாநிலங்கள் அதற்கு பணியவில்லை என்றால்?

ப: CMB க்கு மாநிலங்கள் பணிய வேண்டும் என்று இல்லை. CMB யிடம் அணைகளின் பொறுப்பை மத்திய அரசு கொடுத்துவிடும். நடுவர் மன்ற தீர்ப்புப்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை முறைவைத்து திறந்துவிட வேண்டியது அதன் பொறுப்பு. CMB முறையாக செயல்படுவதற்கான சூழலையும் பாதுகாப்பையும் மத்திய நீர்வளத்துறை மூலம் மத்திய அரசே செய்யவேண்டும். (இந்த நிலைக்கு நடுவர் மன்றம் வர காரணமே இது வரையும் வந்த எந்த தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்காமல் நடந்துகொண்டது தான். ஒவ்வொரு முறையும் எதிர்த்து எதிர்த்து வழக்கிட்டு வழக்கிட்டு தாமதப்படுத்திக்கொண்டே வந்தது. நாமும் அதை எதிர்த்து நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி தான் இந்த தீர்ப்பை பெற்று இருக்கிறோம்)

கே: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் நதிநீர் பங்கீட்டு பிரச்சனை வந்திருக்காதே?

ப: மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்காக அப்போது இருந்த அதே காரணங்கள் இப்போதும் இருக்கின்றன. அதற்கும் நீர் பங்கீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

No comments:

Post a Comment

Printfriendly