Saturday, December 15, 2018

5 மாநில தேர்தல் முடிவுகள்

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல் பல வகைகளில் மிக மிக முக்கியமானது. இதன் முடிவுகள் மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கான மதிப்பீடு என கருதப்பட்டதால் பலத்த எதிர்பார்ப்புக்கள் நிலவியது.

ராஜஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கைக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்டதால் அதன் வெற்றி பெரிய ஆச்சர்யம் தரவில்லை. மேலும் பாஜக ஆட்சியின் மீது ராஜஸ்தான் மக்கள் எவ்வளவு வெறுப்பாக இருந்தார்கள் என்பதும் நாடறிந்த ஒன்று.

மத்திய பிரதேசம் இழுபறி இருந்தாலும் பாஜகவுக்கே செல்லும் என எதிர்பார்த்தேன். ஹிந்தி & ஹிந்து பெல்ட்டை பொறுத்தவரை பிரதமர் மோடி அவர்கள் தனது வளர்ச்சி திட்டங்கள் பற்றி எல்லாம் எதுவும் பேசாமல் ராமர் கோவில், ஏழை தாயின் மகன், டீக்கடை என பழைய செண்டிமெண்ட் சங்கதிகளையே பேசி வந்தார். எனக்குக்கூட பொதுவான ஒரு அபிப்பிராயம் இருந்தது. அதாவது, அந்த பெல்ட்டில் யாரும் வளர்ச்சி பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டார்கள். ஜெய் ராம் ஸ்ரீ ராம் என சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போட்டு விடுவார்கள். அடுத்து 2019 ம் கூட மோடி தான் வெல்வார் என்றெல்லாம் ஒரு கருத்து எனக்கும் இருந்தது.

ஆனால் மத்திய பிரதேசத்தின் தலையாய பிரச்சனைகள், அதனை களைவதற்கான திட்டங்கள், விவசாய கடன் தள்ளுபடி என ஆக்கப்பூர்வமாகவும் நிதானமாகவும் ராகுல் செய்த பிரச்சாரம் ஹிட் அடித்து இருக்கிறது.


இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ராமர் கோவில் எல்லாம் ஓட்டு வாங்கி தராது. செண்டிமெண்ட் பொய்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான். மக்களின் இந்த மன நிலையை மோடி புரிந்து கொள்ளாதபோது ராகுல் தெளிவாக அதை புரிந்துகொண்டது தான் முதல் வெற்றி.

சட்டீஸ்கார் தான் எனக்கு பேரதிர்ச்சி. காங்கிரஸ் ஓரளவு நல்ல எண்ணிக்கையில் வெற்றி பெற்று நல்ல பலமான எதிர்கட்சியாக வரவேண்டும் என எதிர்பார்த்திருக்கையில் முழு மெஜாரிட்டியிலான ஆட்சியே அமைத்திருக்கிறது. பாஜகவின் கோட்டை என சொல்லப்பட்ட மாநிலம் செதில் செதிலாக சிதைக்கப்பட்டதற்கு, மக்களின் வேதனைகளை பிரச்சனைகளை புரிந்துகொள்ளாத பாஜக ஆட்சியினர் தான் காரணம என்பஎன்பதில் மாற்று கருத்து இல்லை. ராகுலின் பேச்சும், திட்டங்களை பற்றிய விவரிப்பும் மக்களுக்கு அவர் மீது ஒரு நல்ல நம்பிக்கையை வரவழைத்து இருக்கிறது. இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட். மக்களோடு மக்களாக பயணித்து அவர்களை நன்றாக புரிந்துகொள்வது என்பது ஒவ்வொரு தலைவருக்கும் அவசியமான குணம். மோடி இந்த விஷயத்தில் இதுவரை இறஙகியதே இல்லை. தமிழகத்தில் இது எல்லோரும் செய்வது தான். ராகுலும் அதே ஃபார்முலாவில் மக்களை கவர்ந்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அதுவும் அபரிமிதமான வெற்றி.

மிசோரம் எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் தான். மக்கள் முன்னணியின் கோரிக்கைகள் நியாயமானவை. இதுவரையும் காங்கிரசோ பாஜகவோ மத்திய அரசில் இருந்து கொண்டு மிசோராமின் கோரிக்கையை சரியாக கையாளவில்லை. அதனால் அவர்கள் இருவரையும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

தெலுங்கானாவை பொறுத்தவரை சந்திரசேகர ராவ் மிக மிக சாதுர்யமாக செயல்பட்டு இருக்கிறார். முன்னதாகவே ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தி முழு மெஜாரிட்டி பெற்று அடுத்த ஐந்து வருடத்தையும் தனதாக்கி கொண்டுள்ளார். ஒருவேளை வழக்கமான நேரத்தில் தேர்தல் வரட்டும் என காத்திருந்தால், இப்போது நான்கு மாநிலங்களில் தோல்வி அடைந்த பாஜக சுதாரித்துக்கொண்டு மக்கள் நல திட்டங்களை அள்ளி வீசினால் ஒருவேளை தெலுங்கானா தனது கையை விட்டு போகும் என முன்பே யோசித்து இருப்பார் சந்திரசேகர ராவ் என தோன்றுகின்ற அளவுக்கு அவரது திட்டமிடல் இருந்தது. எல்லா இடத்திலும் பாஜக அடி வாங்கும் என சரியாக கணித்தவர் அவர் மட்டும் தான். அந்த அலையில் தெலுங்கானாவிலும் தோற்கட்டும் என சரியாக திட்டமிட்டு ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்து வென்றிருக்கிறார். மிக தேர்ந்த அரசியல்வாதியாக வளர்ந்திருக்கிறார் சந்திரசேகர ராவ்.

***

பொதுவாகவே இந்த தேர்தல் நமக்கு சொல்லி இருப்பது பல செய்திகள். அதில் மிக மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை

செண்டிமெண்ட் டயலாக்குகள், சிம்பதி அழுகைகள், ராமர், மதம், மொழி ஆகியவை எல்லாம் ஓட்டுக்களை தரும் என்கிற நம்பிக்கை இனி வேலைக்கு ஆகாது. உருப்படியாக ஏதேனும் மக்களுக்கு செய்தால் தான் வெல்லமுடியும்.

மக்களின் மனதை புரிந்து கொண்ட மக்களுக்கு நல்லதொரு நம்பிக்கையை கொடுக்கக்கூடிய ஒரு தலைவராக ராகுல் வளர்ந்து வருகிறார். பாஜக செல்வாக்காக இருந்த பகுதிகளிலேயே அவர் பெற்றிருக்கும் வெற்றி அதை உறுதி செய்கிறது

மத்திய அரசின் கடந்த நான்கு ஆண்டு செயல்பாடுகள் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. கொள்கை முரண்பாடுகள், அடித்தட்டு மக்களுக்கு ஒழைக்கப்பட்ட அநீதி, வளர்ச்சியின்மை, பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சி இன்மை ஆகியன மக்களால் அன்றாடம் உணரப்பட்டன. ஆனாலும் அரசின் தரப்பில் இருந்து அவற்றுக்கான எந்த தீர்வும் இல்லை என்பது மக்களிடையே ஒரு விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலிலும் அதைப்பற்றி பேசாமல் தன்னை பற்றியே பிரதமர் பேசி வந்ததின் பலன் தான் மக்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவை தோல்வியுத செய்தது

இனி மக்களை புரிந்து கொள்வதும் அவர்களுக்கான தேவைகளை தீர்த்து வைப்பதும் தான் வெற்றிக்கான வழி. அல்லாமல் ராமரோ, இந்துவோ, இந்தியோ தூக்கி நிறுத்தப்படுவதல்ல.

இதனை ராகுல் தெளிவாக புரிந்துகொண்டு விட்டார். மோடியும் பாஜகவும் புரிந்து கொள்வதற்கான முயற்சியேனும் செய்தால் தான் இனி வெல்ல முடியும்.

ராகுலின் தன்னம்பிக்கை, மோடியின் தலைக்கனத்தை இப்போதைக்கு தகர்த்திருக்கிறது.

இனி பாஜக சுதாரித்து கொள்ள வேண்டியது அவசியம். மக்கள் மோடி மீதான மாயையில் இருந்து வெளியேறிவிட்டதை உணர்ந்து எதார்த்தத்தை புரிந்து நடந்து கொள்ளவேண்டும்.

செய்வார்களா?

1 comment:

  1. அடிக்கடி எழுதுங்கள் சார்

    ReplyDelete

Printfriendly