Friday, December 21, 2018

GST - பலாபலன்கள் என்ன? - பாகம் 1

ஆஹா ஓஹோ என மிக பெரிய எதிர்பார்ப்புக்களோடு கடந்த 2017 ஜூலை 1 முதல் அமலான GST உண்மையில் இந்த 17 மாதங்களில் என்னதான் சாதித்தது என பார்த்தால் அதில் 20% நன்மைகளையும் 80% பாதிப்புக்களையும் தான் காணமுடிகிறது.

அப்படியென்ன பாதிப்புகள் என வகை பிரித்தால், ஏற்றுமதி செய்வோர், சிறு குறு தொழில் செய்வோர், மத்திய ரக தொழிற்சாலைகள், வியாபாரிகள், சுயதொழில் செய்வோர் என வகை பிரிக்கலாம்.

ஒவ்வொன்றாக பார்க்கலாம் எனில் முதலில் ஏற்றுமதி செய்வோரில் இருந்து தொடங்கலாம்.

கடந்த ஆண்டு தொடர்ந்து 11 மாதங்கள் ஏற்றுமதி குறைந்து கொண்டே வந்தது. காரணம் சரியான முன் யோசனையின்றி GST சட்டத்தில் நுழைக்கப்பட்ட ஒரு சிறிய விதி (Rule).

பின்னர் நிதானமாக சுதாரித்துக்கொண்ட அரசு எடுத்த சில நடவடிக்கைகளால் இப்போது மெல்ல மெல்ல மேல் நோக்கி செல்ல தொடங்கி இருக்கிறது Graph.

ஏற்றுமதி குறைந்தால் என்ன ஆகும்? இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை நாம் வர்த்தக பற்றாக்குறை (Current Account Deficit - CAD) என்கிறோம். இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைந்தால் அது நமது அன்னிய செலாவணி கையிருப்பை (Foreign Exchange Reserve) குறைக்கும்.

எனவே ஏற்றுமதியை ஊக்குவிக்க, வரிவிலக்கு, ஊக்கத்தொகை திட்டங்கள் ஆகியவற்றை அரசு கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஏற்றுமதிக்கு சாதகமான ஒரு சூழல் இருந்தது.

ஏற்றுமதி செய்வோரில் முக்கியமானவர்கள் தொழில்துறை உற்பத்தியாளர்கள் (Industrial Manufacturers); துணி ஏற்றுமதி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி (காய், பழம், பூ); போன்றவை முக்கியமானவை.

விவசாய ஏற்றுமதியை பொறுத்தவரை நேரடி ஏற்றுமதியை (Direct Export) விடவும் வர்த்தக ஏற்றுமதி (Merchant Export) தான் அதிகம். அதாவது உற்பத்தியாளரே நேரடியாக ஏற்றுமதி செய்வதை விடவும், மற்றவர்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்வது.

ஏற்றுமதி செய்வதற்கு என பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதற்கான அனுமதிகள் பெற்றவர்கள் மட்டுமே ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுகிறார்கள். எனவே உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்) நேரடியாக ஏற்றுமதி செய்வதில்லை. வர்த்தகர் விவசாயிகளிடமிருந்து வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார். இப்படி விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்கு வரி கட்ட தேவை இல்லை. ஏனெனில் அது ஏற்றுமதிக்கு போவதால் வரி விலக்கு இருந்தது.

எனவே, ஒரு வர்த்தகர் ஒரு விவசாயியிடமிருந்து ₹1 லட்சம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கி அதை பேக் செய்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ₹1.50 லட்சத்துக்கு விற்கிறார் என வைத்துக்கொள்வோம், பேக்கிங் செலவு வண்டி வாடகை ஏற்றுமதிக்கான ஏஜென்சி செலவு கஸ்டம்ஸ் அதிகாரிக்கான செலவு என 25000 போனாலும் 25000 லாபம். ஒரு மாதத்தில் 10 முறை ஏற்றுமதி செய்பவர்கள் இருக்கிறார்கள். இது விவசாய வளர்ச்சிக்கான மறைமுக காரணியும் கூட. தமிழகத்தில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள், ஊறுகாய், வற்றல் என பலவும் ஏற்றுமதி ஆகிறது. வெளிநாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கிடைப்பது இப்படித்தான். இந்தியா முழுதும் இப்படி ஏற்றுமதி செய்வோர் சுமார் 40 லட்சம் பேர் உள்ளனர்.

சரி, GST யால் இவர்களுக்கு என்ன பதிப்பு? அப்படியென்ன அந்த விதி பெரிய சிக்கலை உண்டுபண்ணியது? அந்த விதி தான் என்ன?

GST அமலானபோது இந்த அரசு, வர்த்தக ஏற்றுமதிக்கு வாங்கும் பொருட்களுக்கும் 18% வரி விதித்தது. இந்த வரியை நீங்கள் உங்கள் GST ரிட்டர்ன் தாக்கல் செய்யும்பொழுது கட்டிவிட வேண்டும். ஆனால் நீங்கள் ஏற்றுமதி செய்தபின் ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்களை (Proof of Export) சமர்பித்து விட்டால் நீங்கள் செலுத்திய வரியை அரசு உங்களுக்கு திரும்ப கொடுத்துவிடும் (ரீஃபண்டு)

நல்ல விஷயம் தானே? இதிலென்ன தவறு?

முன்னேற்பாடுகளின்றி அவசர கதியில் அள்ளித்தெளித்த நிலையில் GST யை அமல்ப்படுத்திய இந்த அரசு, ரீபண்டுக்கான தெளிவான விதிமுறைகளையோ, ரீஃபண்டு விண்ணப்பிப்பதற்கான முறைகளையோ, அதற்கான இணைய தள வசதியையோ சட்டம் அமலான ஜூலை 2017 ல் செய்யவில்லை. எல்லோரும் பல பல முறையீடுகள் செய்தபின்னர் மார்ச் 2018 ல் தான் ரீஃபண்டுக்கான முறையான வசதிகள் செய்தனர்.


ஒரு மிகப்பெரிய சட்டம் வருகையில் இது போன்ற சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும் தான். அதெல்லாம் சகஜம் என நம்மை நாமே சமாதானம் செய்துகொண்டாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பை பார்க்கும்போது மிகுந்த மன கஷ்டம் ஏற்பட்டது. என்ன பதிப்பு? ரீஃபண்டு லேட்டாக கிடைத்தது. அவ்வளவு தானே?

அது தான் மிகப்பெரிய பாதிப்பு.

நான் மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம்.

GST க்கு முன் ₹1 லட்சத்துக்கு பொருள் வாங்கி ₹1.5 லட்சத்துக்கு ஏற்றுமதி செய்தால் 25000 லாபம் கிடைத்தது.

GST க்கு பின், ₹1 லட்சத்துக்கு பொருள் வாங்க ₹18000 வரிகட்ட வேண்டும். எனவே லாபம் 7000 தான். இந்த 18000 அரசிடம் மாட்டிக்கொண்டது. மாதம் 5 ஏற்றுமதி செய்தால் 90000 அரசிடம். ஜூலை முதல் மார்ச் வரை 9 மாதங்களில் அரசிடம் சேர்ந்தது ₹8,10,000 இந்த ஒரு வர்த்தகரிடமிருந்து மட்டும். நாடு முழுதும்?? GST வருவாய் அதிகரித்தது என கணக்கு காட்டி சந்தோஷப்பட்ட அரசு அதில் திருப்பித்தரவேண்டிய இது போன்ற தொகை எவ்வளவு என்பதை கவனித்து கழிக்காமல் விட்டுவிட்டது. எனவே இந்த வரி வருவாய் ஒரு மாயை (இல்லாத வரியை புதிதாய் நுழைத்து வரி வசூலித்து திருப்பி தராமல் இழுத்தடித்தது)

கோர்ட் தலையிட்டு ரீஃபண்டு வழங்க சொன்ன பின் அவசரம் அவசரமான ரீஃபண்ட் வாரம் எல்லாம் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏப்ரல் 2018 முதல் திருப்பித்தந்தது அரசு.

சரி இடைப்பட்ட காலத்தில் நம்ம வர்த்தகருக்கு என்ன ஆகி இருக்கும் என யோசித்து பார்த்தீர்களா?

ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் அரசுக்கு வரி செலுத்தி இருப்பார். லாபம் கணிசமாக குறைந்ததால் அவரது வாழ்க்கைத்தரம் குறைந்திருக்கும். குடும்பத்தில் நிம்மதியின்மை வேறு. போதாக்குறைக்கு தினசரி டீசல் விலை உயர்வால் வண்டி வாடகை அதிகரித்து உள்ள லாபத்துக்கும் வேட்டு. இது தவிர வரி தாக்கலுக்கு அடிட்டர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை வேறு. வீடு, நகை எல்லாம் அடமானம் வைத்து GST வரி கட்டியவர்களை நான் அறிவேன். அடுத்த மாசமாவது அரசு ரீஃபண்டு தந்துவிடாதா என்கிற  எதிர்பார்ப்புடன் மாதாமாதம் ஒழுங்காக வரி கட்டி வந்தவர்கள் பலரில் ஐந்து மாதத்துக்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் தொழிலை மூடியவர்களும் சிலர்.

எல்லா பாதிப்புக்களும் மொத்தமாக நிம்மதியையும் எதிர்காலத்தையும் தொலைத்தழித்த பின்னர் ஏப்ரல் முதல் கிடைக்க தொடங்கியது ரீஃபண்டு.

பெரிய நிறுவனங்கள் கார்ப்பொரேட் ஏற்றுமதியாளர்கள் தாக்குபிடித்தனர். சிறு குறு ஏற்றுமதியாளர்கள் தான் அழிந்து போனார்கள்.

சரி இதை தவிர்த்திருக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். ஏற்கனவே அமலில் இருந்த சட்டத்தில் புதிதாக ஒரு  விதிமுறையை புகுத்தும்பொழுது அதன் சாதக பாதகங்கள் என்னென்ன என ஆராய்ந்து பார்த்து பின் முடிவெடுப்பது தான் ஒரு நல்ல அரசின் செயலாகும். ஆனால் GST அமலாக்கத்தில் அப்படியான ஆய்வுகள் நடந்ததா என தெரியவில்லை.

வர்த்தக ஏற்றுமதிக்கு வாங்கும் பொருட்களுக்கு வரியில்லை என்கிற கடந்த ஆட்சியின் நிலைப்பாடே தொடர்ந்திருக்கும் எனில், மிகைப்படுத்தப்பட்ட வரிவருவாயோ, ரீஃபண்டு தரவேண்டிய நிர்ப்பந்தமோ, ரீஃபண்டு வராததால் தொழிலை மூடவேண்டிய நிலைக்கு வர்த்தகர்களை தள்ளியதோ நடந்திருக்காது.

அல்லது இப்படி வரிவிதிப்பது தான் இறுதி முடிவு எனில் அதற்கான விதிமுறைகளை தெளிவாக வகுத்து வரி செலுத்துவதற்கும் ரீஃபண்டுக்கும் தேவையான இணைய தள வசதிகளை ஏற்படுத்தியபின் சட்டத்தை அமலாக்கி இருக்க வேண்டும்.

அதற்கு சற்றேனும் முன் யோசனை வேண்டும். அந்த முன் யோசனை இல்லாததால் ஏற்றுமதி பாதிப்பு, தொழில் முடக்கம், வர்த்தகர்களின் வேலை இழப்பு, ஏற்றுமதியை நம்பி விளைவித்த விளை பொருள் விற்பனை ஆகாமல் நொடிந்த விவசாயிகள் என பலதரப்பட்ட பாதிப்புக்களால் அந்த துறையே நொடிந்தது.

இது இந்த தொடரின் சின்ன உதாரண சாம்பிள் தான். நாம் இனி வரிசையாக அடுத்தடுத்த துறைகளின் பாதிப்புக்களை அடித்தடுத்த பதிவுகளில் அலசலாம்.

No comments:

Post a Comment

Printfriendly