கடந்த 2019 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு, முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.
பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி, என பல கட்சிகளும் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்து இருந்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து அதிமுக இந்த சட்டத்தை ஆதரித்தது. திமுக இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது.
Economically Weaker Section எனும் EWS சட்டம் சமூக நீதிக்கு எதிரானது என பல எதிர்ப்புகள் வந்து, இந்த சட்டத்தை எதிர்த்து வழக்குகளும் தாக்கல் செய்யப் பட்டன.
இந்த சட்டத்தின் படி ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு கீழே உள்ள முற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு பெற தகுதி பெறுவார்கள். வேறு எந்த இட ஒதுக்கீட்டிலும் வராதஅ சமூகத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.
சுருக்கமாக சொன்னால் முற்பட்ட அல்லது சமூக ரீதியாக முன்னேறிய வகுப்பினரில் உள்ள பொருளாதார நலிவடைந்த மக்கள்.
ஆனால் ஆண்டு வருமானம் ₹8 லட்சம் வாங்கும் ஒருவர் எப்படி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவில் வர முடியும்? என்கிற கேள்விக்கு இது வரை விடை இல்லை.
பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க இந்திய அரசியல் சாசனத்தில் வழி இல்லை. சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. எனில், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு சட்டம் செல்லுமா என்பதும் மற்றொரு கேள்வி.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில், மொத்த இட ஒதுக்கீடு என்பது 50% க்கு கூடுதலாக கொடுக்க முடியாது என சொல்லி இருக்கிறது. ஏற்கனவே 22.50% தாழ்த்தப்பட்ட பழஙகுடி மக்களுக்கும் 27% இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒதுக்கீடு கொடுத்து மொத்தம் 49.50% ஒதுக்கீடு கொடுத்து விட்டதால் இதற்கு மேல் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. எனில் இப்போது கூடுதலாக 10% இட ஒதுக்கீடு எப்படி கொடுக்க முடியும்? என்பதும் கேள்வியே.
(இந்த 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் பொருந்தாது. தமிழ் நாட்டை பொறுத்தவரை 69% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டு இருப்பதால் சட்ட ரீதியான பாதுகாப்பும் இருக்கிறது. எனவே தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு கொள்கைக்கு இந்த 50% உச்ச வரம்பு எல்லாம் இல்லை)
இப்படியான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சமூக நீதிக்கான போராட்டத்தை எப்போதும் முன்னெடுத்து செல்லும் இயக்கமான திமுக இந்த வழக்கில் தொடர்ந்து ஆணித் தரமான வாதஙகளை எடுத்து வைத்து, EWS ஒதுக்கீடு எந்த அளவுக்கு சட்டத்தின் பார்வையில் தவறானது என விரிவாக வாதாடியது.
இந்த வழக்கில் நேற்று வந்த தீர்ப்பு, இந்த வழக்குக்கான தீர்வாக அமையாமல் மேலும் பல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு எல்லோரையும் தள்ளும் அளவுக்கு புதிய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஐந்து நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வந்தது. அதில் நீதியரசர்கள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்டிவாலா ஆகிய மூன்று நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லும் என்றும், நீதியரசர்கள் ரவீந்திர பட், யூ. யூ.லலித் ஆகிய இரண்டு நீதிபதிகள் EWS ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பு அளித்து உள்ளனர்.
இது தவிர நேற்றைய தீர்ப்பு இன்னும் பல விஷயங்களையும் குறிப்பிடுகிறது. அதாவது மிக நீண்ட காலத்துக்கு இட ஒதுக்கீடு தொடர முடியாது என்றும், விரைவில் இட ஒதுக்கீடு முறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், எல்லா வகுப்பினருக்கும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்கிறது.
பொருளாதாரம் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது. இன்றைக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் நாளையே கல்வி கற்று நல்ல வேலை நல்ல பதவி பெற்று பொருளாதார ரீதியாக முன்னேறி விட முடியும். ஆனால் சமூக ரீதியான ஒடுக்குமுறை என்பது எவ்வளவு பணம் செல்வாக்கு இருந்தாலும் மாறவே மாறாது. எவ்வளவு உயர் பதவியை அடைந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு எல்லோரையும் போல சமமான உரிமைகள் கிடைப்பது இல்லை. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.
எனவே பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பதே அடிப்படையில் தவறான முடிவு.
ஆனால், பெரும்பான்மை அடிப்படையில் மூன்று நீதிபதிகளின் கருத்துப் படி, இப்போதைக்கு EWS ஒதுக்கீடு செல்லும் எனபது தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் செய்தி. எனவே இப்போதைக்கு EWS ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
EWS ஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்பது தான் ஆச்சர்யம்.
ஏற்கனவே சொன்னது போல இந்திய அரசியல் சாசனம் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகுக்கவே இல்லை எனும் போது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுக்க முடியுமா என்கிற புதிய கேள்வி இப்போது எழுகிறது.
எனவே, இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு அரசியல் சாசன பெஞ்ச் முன் விவாதிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.
அரசியல் சாசன சட்ட விதிகளில் இல்லாத ஒரு விதியை நீதிபதிகள் உருவாக்க முடியுமா? 50% ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக ஒதுக்கீடு கொடுக்க முடியுமா? சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நீதியை மறுக்க முடியுமா? என்பன போன்ற ஆக்கப்பூர்வமான விவாதஙகளை இனி எதிர்பார்க்கலாம்.
1990 களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட்ட உடனே நம்முடைய மிகப்பெரிய போராட்டம் வெற்றி பெற்று விட்டதாக கருதி ஓய்வெடுக்க தொடங்கி விட்டதாக ஒரு உணர்வு மேலிடுகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு எதற்காக தேவை என்பதே புரியவில்லை. EWS ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்படும் மக்கள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. அரசியல் ரீதியாக தாங்கள் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டை மட்டுமே ஆதரித்து வரும் மக்களாக அவர்கள் மாறிப் போயிருக்கும் நிலையில், நம்முடைய முதல் கட்ட நடவடிக்கை இட ஒதுக்கீடு குறித்த சரியான புரிதல்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டியதாக இருக்க வேண்டும். அதற்காக, சமூக நீதிக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நேற்றைய தினம் மாண்புமிகு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்ப்பு குறித்து வெளியிட்ட அறிக்கை கூட அதை தான் சொல்லி இருக்கிறது.
சமூக ரீதியான விளக்க கூட்டஙகள், அரசியல் ரீதியான காய் நகர்த்தல்கள் ஆகியவற்றுடன் சட்ட ரீதியான போராட்டமும் ஒருங்கிணைந்து தான் கால காலமாக ஒடுக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கான நீதியை பெற்று தர முடியும்.
நேற்றைய தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல் முறையீடு செய்யப்படும் என நம்புகிறேன். இதுவரை அரசியல் சாசன பெஞ்ச் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுத்தது இல்லை என்பதால் அங்கே இந்த சமூக நீதி போராட்டத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன்.