Saturday, December 5, 2015

புயல் மழையும் புரட்சி தலைவியும்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க.....

தமிழகத்தில் சமீபகாலமாக இது தான் அடிக்கடி காதில் விழும் வாக்கியம். தமிழகத்தின் இயங்கு சக்தியே அம்மா தான் என்பது இங்கு எழுதப்படாத விதி. மெத்த படித்த ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் கூட தினசரி என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அம்மா தான் என்பதாக உள்ளது நிலைமை.  அரிசி ரேஷனில் இடுவதில் தொடங்கி அணை நிரம்பினால் திறந்துவிடுவது வரை அம்மா ஆணைக்கிணங்கவே இங்கு எதுவும் செயல்பாடு கொள்கிறது.

அதில் தவறொன்றும் இல்லை. முதல்வர் புரட்சி தலைவி முகத்துக்காக தான் கடந்த 2011 ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு விழுந்தது. அவர் ஆட்சி செய்வதற்காக யாரை எந்த பதவியில் அமர்த்தினாலும் அது ஒரு பெரிய பொருட்டல்ல, யாருக்கும். அம்மா முதல்வராக இருந்தாலே போதும், நிர்வாகம் சிறப்பாக இருக்கும். இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகட்டும், தவறுகள் மீது தயவு தாட்சணியம் இன்றி நடவடிக்கை எடுப்பதாக இருக்கட்டும், மக்களுக்கு தாயுள்ளத்துடன் உதவி செய்வதாகட்டும், முற்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதாகட்டும், அதிகார வர்க்கத்தை கட்டுக்குள் வைத்து நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகட்டும்.. எல்லாவற்றிலும் மிளிர்ந்து ஒரு சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர் அம்மா. இவை தான் தமிழகத்தில் அம்மா குறித்தான பிம்பம்.

சமீபத்தில் பெய்த புயல் மழை அந்த பிம்பத்தை மொத்தமாக தகர்த்தெறிந்து புரட்சி தலைவியின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டிவிட்டது தான் தமிழகத்தில் இப்போது திடீரென தோன்றியிருக்கும் பெரும் அதிருப்திக்கான காரணம்.

தமிழகத்தின் மிக பெரும் வெள்ள சேதங்களில் ஒன்றாக சென்னையின் இப்பெருமழைக்காலம் சேர்ந்துகொண்டிருக்கிறது. சோகம் என்னவென்றால் அந்த சேதங்களை முன்கூட்டியே கணித்து நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் திராணியும் இருந்தும் நாம் வாளாவிருந்தது தான். கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.

மத்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம், தமிழகத்தில் கன மழை காணும் என போன மாதமே எச்சரிக்கை விடுத்திருந்தது. மத்திய அரசின் எச்சரிக்கை என்பதால் வழக்கம்போல நாம் அதை அதிகமாக கண்டுகொள்ளவில்லை. பெய்து தீர்த்த மழை தாண்டவமாடிக்கொண்டு இருக்கிறது.. இன்னமும்.

சென்னை மிக சிறந்த வடிகால் அமைப்புக்களை கொண்ட நகரங்களுள் ஒன்று. சுனாமி நேரத்தில் தொடர்ச்சியாக 10 நாட்கள் பெருமழை பெய்தபோதும், நீர் தேங்கி நிற்கவில்லை. அவ்வப்போது 1995, 1998, 2002, 2005, 2006, 2008, ஆகிய வருடங்களில் அபரிமிதமான மழைப்பொழிவு இருந்தபோதும், வெள்ள தேக்கம் என்பது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்ததில்லை. ஆனால் இப்போது மட்டும் என்ன வந்தது சென்னைக்கு?



இந்த முறை துல்லியமாக கணித்திருந்தும், பலத்த எச்சரிக்கை வந்திருந்தும், நாம் வாளாவிருந்துவிட்டோம். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக கனமழை எச்சரிக்கை வந்தால், தமிழக அரசு சென்னையை சுற்றி உள்ள எரிகளின் / அணைகளின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை காலி செய்து வைக்கும். அதாவது முன்கூட்டியே சிறுக சிறுக நீரை வெளியேற்றி முக்கால் வாசி ஏரியை/அணையை காலியாக வைத்திருக்கும். பொதுப்பணி துறையினர் இதற்காகவே இரு வாரங்களுக்கு ஒரு முறை வானிலை ஆய்வு மையத்திலிருந்து அறிக்கைகள் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவார்கள். இப்படி காலி செய்து வைப்பதால், மழை பொழிவின் பொழுது எல்லா நீரும் அணையில்/ஏரியில் சேகரிக்கப்பட்டு மீண்டும் அது முழு கொள்ளளவை எட்டிவிடும். ஒரு வேளை எதிர்பார்த்ததை விட அதிகமாக மழைப்பொழிவு இருந்தால் அதற்கு தக்கபடி சிறுக சிறுக உபரி நீரை வெளியேற்றுவார்கள். இதன்மூலம் ஏரி/அணை நீர் அவற்றிலேயே தேக்கிவைக்கப்படும், உபரி நீர் மட்டுமே வெளியேறும். நகரத்தில் வெறும் மழை நீர் மட்டும் தான் இருக்கும். அது வடிவதற்கான தக்க வடிகால் வசதிகள் சென்னையில் ஏற்கனவே உள்ளது.

இந்த முறை, முன்கூட்டி எந்த ஏரியும் / அணையும் திறந்துவிடப்படவில்லை. மழை தொடங்கும்போது எரிகளும் அணைகளும் கிட்டத்தட்ட நிறைந்திருந்தன. மழை கொட்டி தீர்த்தபோது ஏரியை திறந்துவிட வேண்டியதாயிற்று. அப்படி திறந்துவிடாவிட்டால் ஏரிகள் உடைந்துவிடும் அபாயம். (அப்படியும் காலதாமதமாக சாவதானமாக திறந்து விட முடிவெடுத்து சோதப்பியதில் சில ஏரிகள் உடைத்துக்கொண்டன என்பது தனி கதை). ஏற்கனவே நகரில் தேங்கி இருந்த மழை நீரில் இப்படி திறந்துவிடப்பட்ட ஏரி / அணை நீரும் சேர்ந்துகொள்ள சென்னை வெள்ளக்காடானது. மேலும் ஒரு கொடுமையாக மழை நிற்காமல் பெய்துகொண்டே இருந்ததால் மேலிருந்து வரும் மழை நீரும் இவற்றுடன் சேர்ந்துகொண்டது. சரி.. அப்போ வடிகால்? அது என்ன ஆனது?

சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பணிகளுக்காக பெரும்பாலான வடிகால்கள் முன்பே தகர்க்கப்பட்டு விட்டன. சுரங்கம் தோண்டுகையில் அதனுள் வெள்ளம் வந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அது செய்யப்பட்டது. அதில் தவறில்லை. ஆனால் அரசு / மாநகராட்சி உடனே அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை.

ஒருபக்கம் அபரிமிதமான வெள்ளம், மறுபுறம் வடிகால் வசதி இல்லாமை. இரண்டும் சேர்ந்து வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்டு கண்டபடி எல்லா இடங்களுக்கும் பாய வைத்துவிட்டது. ஹைவேக்கள், குடியிருப்புக்கள் என எல்லா இடத்தும் வெள்ளம்.

இது தான் தமிழக அரசுக்கான முதல் அடி. முறையாக திட்டமிடாமை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமை. இரண்டும் சேர்ந்து சிறந்த நிர்வாகியான அம்மாவின் நிர்வாகத்திறமையை கேள்வி குறி ஆக்கிவிட்டது.

சரி.. வெள்ளம் வந்துவிட்டது... இனி என்ன செய்யவேண்டும்?

பொதுவாக அரசு வெள்ள பாதிப்பு நேர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அவற்றை தற்காலிக தங்கும் இடமாக அறிவிப்பார்கள். அங்கே தகுவதற்கான ஏற்பாடுகளை செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை அங்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள். அவர்களுக்கான உணவு, உடைகள் விநியோகிக்கப்படும். மழைக்கால தொற்று நோய் பரவாமல் இருக்க அவர்களுக்கு மருந்துகள் மாத்திரைகள் கொடுக்கும். இதெல்லாம் தான் வழக்கமான நடைமுறை.

ஆனால் இந்த முறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு சரி. மற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு பிறகு தான் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பதினொரு நாட்களுக்கு பின் தான் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. உணவு, குடிநீர், மருந்துகள் இன்று வரை அரசால் விநியோகிக்கப்படவில்லை.


தீயணைப்பு & மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபடத்தப்படவில்லை. அரக்கோணம் கடற்படை தளத்தில் 6 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருந்தும் அவற்றை இன்று வரை பயன்படுத்தி கொள்ளவில்லை. அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட அனுமதி கொடுக்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. வெள்ள பாதிப்பு நிவாரண ஒருங்கிணைப்புக்கான கட்டுப்பாட்டு அறை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. மாநகராட்சி மண்டல உதவி எண்கள் செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. ஏரியோ அணையோ திறந்துவிடுவதற்கு முன்பாக மனிதாபிமான அடிப்படையில் கூட ஒரு எச்சரிக்கையை மக்களுக்கு கொடுக்கவில்லை.  ஆனால் மத்திய அரசுக்கு நிவாரண நிதி கேட்டு கோரிக்கை கடிதம் மட்டும் உடனடியாக அனுப்பப்பட்டது.

ஆச்சரியகரமாக மக்களுக்காக மக்களே களம் கண்டனர்.

10 இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, நிவாரண பணிகளை ஒருங்கிணைத்தனர்.

சமூக வலைத்தளங்களின் உதவியோடு, உதவி தேவைப்படுவோரையும், உதவி செய்வோரையும் ஒன்று சேர்த்து சரியான சமயத்தில் உதவிகள் சென்றடைய ஏற்பாடுகள் செய்தனர்.

தமிழகம் முழுவதிலுமிருந்து மக்கள் தங்களால் ஆன எல்லா பொருட்களையும், உணவுகளையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ரேடியோ சிட்டி, ரேடியோ மிர்ச்சி, நியூஸ் 7 போன்ற பல மீடியாக்கள் தங்களில் ஒலி/ஒலிபரப்பு சக்தியால் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்.

சென்னையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் நிவாரண பொருட்களை வீதி வீதியாக கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்று அவர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்டு கேட்டு செய்து கொடுத்தனர். நியாயமாக இவற்றை செய்யவேண்டிய தீயணைப்பு & மீட்பு பணிக்குழுவினரை தெருக்களில் காணவில்லை.

சென்னையில் உள்ள மசூதிகள், சர்ச்கள், ஜெயின் கோவில்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் ஆகிய அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக திறந்துவிடப்பட்டன. அரசு, பள்ளிக்கூடங்களை மக்கள் தங்க ஒதுக்கி தராதபோதும் இவை மக்களுக்கு ஓரளவு உதவின.

திமுக, காங், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சி அலுவலகத்தை பொதுமக்களுக்காக திறந்துவிட்டன. அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டது. எந்த செயல்பாடும் இன்றி முடங்கி கிடக்கும் லாயிட்ஸ் ரோடு கட்சி தலைமை அலுவலகத்தை திறந்து விடவில்லை கருணை தாய்.



மதிமுக, திமுக, தேமுதிக, காங், கம்யூ, பாஜக, SDPI, TMMK, RSS, திராவிடர்கழகம், மே 17 இயக்கம் ஆகிய பல பல இயக்கங்கள் ஆங்காங்கே தங்களால் இயன்ற வரை உணவு அளித்துக்கொண்டிருந்தன. வழக்கமாக சாப்பாட்டு பொட்டலங்கள் போடும் அரசு இந்த முறை கைவிட்டாலும் இவை மக்களின் பசியை ஓரளவு நீக்கின. மழை தொடங்கி பதினோராம் நாள் இந்திய விமானப்படையும் உணவு பொட்டலங்களை மாடிகளில் தேங்கி கிடந்தவர்களுக்கு விநியோகித்தது.

மாநிலம் முழுதுமிருந்து குடிநீர், பிஸ்கட், பிரெட், போர்வை, பிரஷ், பேஸ்டு என பல பொருட்களும் பொதுமக்களால் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை இங்குள்ள இளைஞர்களால் கூடுமானவரை விநியோகிக்கப்பட்டன. விற்காமல் தேங்கி கிடக்கும் ஆவின் பால் பவுடரை விநியோகித்து தீர்க்க உத்தரவிட்டது ஒன்று தான் நிவாரப்பணியாக அரசு செய்தது.

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என எதுவும் மக்களுக்கு உதவிகளாக வழங்கப்படாதபோதும் டாஸ்மாக்கை மட்டும் திறந்துவைத்து மக்கள் பணி செய்தது தாயுள்ளம் கொண்ட தமிழக அரசு.

மீனவர்களும் இஸ்லாம் அமைப்புக்களுமாக சேர்ந்து படகுகளை வரவழைத்து வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டெடுத்தனர் இலவசமாக.

தனியார் நிறுவனங்கள் தங்கள் பேருந்துகளை மக்களுக்காக இலவசமாக இயக்கியது. சில ஆம்னி பேருந்துகள் திருச்சி வரையும், ஓசூர் வரையும் இலவசமாக மக்களை அனுப்பி வைத்தது. கால் டாக்சி நிறுவனங்கள் இலவசமாக மக்களை புறநகருக்கு அனுப்பி வைத்தன. சில கொரியர் நிறுவனங்கள் நிவாரண பொருட்களை இலவசமாக சுமந்து சென்று விநியோகித்தன. ஆனால் நான்காம் தேதி மாலை வரையும் தமிழக அரசு மாநகர பெருந்துகளில் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாண்புமிகு அம்மா அவர்கள் இலவசமாக மாநகர பேருந்தை இயக்க உத்தரவிட்டார்.


ஒரு கட்டத்தில் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைவதையும், பொதுமக்களே பொதுமக்களுக்காக உதவி வருவதையும், அரசு வெட்டியாக இருப்பது வெட்ட வெளிச்சமானதையும் கவனித்த தமிழக அரசு அதிரடியாக மக்களுக்கு உதவ களம் இறங்கியது. அதாவது பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் சேகரித்து சென்னைக்கு அனுப்பும் அனைத்து பொருட்களிலும் மாண்புமிகு அம்மா புரட்சி தலைவி அவர்களின் புகைப்பட ஸ்டிக்கர்களை அச்சடித்து அம்மா அவர்கள் வழங்கிய உதவியாக பிரச்சாரம் செய்தனர். கடலூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால் மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கப்பட்டது. அப்படி ஸ்டிக்கர் ஓட்ட மறுத்தவர்கள் தாக்குதலுக்கு ஆளான கொடுமை எல்லாம் நடந்தேறியது.


1970 களின் அரசியல் முறையை மட்டுமே அறிந்த தலைவர்களுக்கு சமீபத்திய மீடியாவின் பலமும் வீச்சும் புரியாமல் போனது ஆச்சரியமில்லை. அனைத்து நாளிதழ்களிலும் அரசுக்கு எதிரான தகவல்கள் வராமல் பார்த்துக்கொள்ள முடிந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் அரசின் அராஜக செயல்கள் அவ்வப்போது உடனுக்குடனே வெளியாக தொடங்கியது. எந்த செயல் மூலம் மக்களிடம் நல்ல பெயரும் செல்வாக்கும் வாங்கி விடலாம் என கருதியதோ அதே செயலால் மிக பெரும் விமர்சனத்துக்கு ஆளானது தமிழக ஆளும் கட்சியும் அதிகார வர்க்கமும். இந்த ஒரு விஷயத்தில் அதிகார வர்க்கம் கூட அதிமுக கட்சி உறுப்பினர்களை போல செயல்பட்டது தான் கொடுமை. 

அரசுக்கு அவப்பெயர் வருவதை அறிந்ததும், அப்படி "ஸ்டிக்கர்கள் ஒட்ட சொல்லி அதிமுக சொல்லவில்லை.. யாரோ அதீத ஆர்வக்கோளாரில் அப்படி செய்திருக்கலாம்.. அவ்வாறு வற்புறுத்தப்பட்டால் அதிமுக தலைமை நிலையத்துக்கு புகார் அளிக்கலாம்" என்று பல பிரமுகர்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். அதிமுக கட்சி அப்படி அதிகாரப்பூர்வமாக எந்த மறுப்பையும், புகார் தெரிவிக்கும்படியும் சொல்லாவிட்டாலும், அதிமுகவுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என பல முக்கிய பிரமுகர்களும் பத்திரிக்கையாளர்களும் பதறி அடித்து அதிமுக சார்பாக அப்படி ஒரு தகவலை தெரிவித்து அரசை காக்க முயன்றதாகவே எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. 

வெள்ளத்தில் சிக்கி தவித்த என் அதிமுக நண்பரொருவர் கட்சி மீது காட்டிய வெறுப்பும் அருவருப்பும் சொல்லி மாளாது. இது ஒவ்வொரு ரத்தத்தின் ரத்தங்களுக்கும் மனதில் ஏற்பட்ட கோபம். எம்ஜிஆரின் விசுவாசிகளுக்கு மக்களும் அவர்களது துயர் துடைப்பதும் தான் முதன்மை கடமை. ஆனால் இப்போது கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தனது கட்சி நடந்துகொள்வதை அவரால் ஜீரணிக்க முடியவேயில்லை.

கேரளா, கர்நாடகா, பீகார், ஆந்திரா மாநிலங்களின் உதவிகளை மறுதலித்து மத்திய அரசை மட்டுமே எதிர்நோக்கி இருந்தாலும் அதுவும் போதுமான அளவு வந்து சேரவில்லை. அதையே காரணம் காட்டி நிவாரண பணிகளில் மெத்தனம் காட்டியது அரசு. அரசின் மீதான அதிருப்தி உச்ச கட்டத்தை அடைந்ததை அறிந்து நான்காம் தேதி மாலை அமைச்சர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தினர். ஒவ்வொரு அமைச்சரும் எந்த அளவுக்கு விஷய ஞானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக காட்டியது அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு. பேட்டி பாதியிலேயே நிறுத்திக்கொள்ளப்பட்டது தான் அரசுக்கான அடுத்த தோல்வி.


இந்த புயல் மழை செய்த நல்ல விஷயங்களில் கூவத்தை சுத்தப்படுத்தியதை மட்டுமல்ல, புரட்சி தலைவியின் புனை முகத்தை தகர்த்தையும் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!!



Saturday, November 28, 2015

நீர்நிலை ஆக்கிரமிப்பு – நீதிமன்றத்தின் அதிரடி

கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே என்பதாலோ என்னவோ கார்த்திகை மாதத்திலேயே சென்னையில் மொத்தமாக கொட்டி தீர்த்திருக்கிறது ஒரு பெருமழை.

பருவமழை பொய்க்கத்தொடங்கிய போது மழை ஏமாற்றிவிடுமோ என்று நமக்குள் இருந்த வருத்தம், மேலடுக்கு சுழற்சியாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலங்களாலும் சற்று மறைந்தது.. அதன் அதீதத்தை இப்போது பார்க்க நேர்கையில் வருத்தம் கொடும் வருத்தமாக மாறிபோயிருக்கிறது.

வரலாறு காணாத மழை என நாளிதழ்கள் சொன்னாலும் வரலாற்றில் இப்படியான மழையை தமிழகம் அவ்வப்போது சந்தித்து வந்தே இருக்கிறது. அது 1965 ஆழி கொடுங்காற்றாக இருக்கட்டும், 2004 சுனாமியாக இருக்கட்டும், அவ்வப்போது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வந்துபோகும் பெருமழைக்காலமாக இருக்கட்டும் வஞ்சனை இல்லாமல் கொட்டி தீர்ப்பது தான் தமிழகத்துக்கு மழையின் கொடை. கொளுத்தும் கோடையில் கூட கோடை மழை தந்து குளிர்விக்கும் இயற்கை. அந்த அளவுக்கு தமிழகமும் மழையும் ஒன்றிணைந்த உறவு.

இப்படியான வரலாறு கொண்ட தமிழகத்தில் மழை நீரை சேமிக்கவோ, வெள்ளம் வந்தால் தடுக்க தடுப்பணை திட்டமோ, மழை நீர் வடிகால் வசதிகளோ, நீர் நிலைகள் செப்பனிடும் முன்னெச்சரிக்கையோ, நீர்வழி தடைகள் அகற்றும் முனைப்போ, நீர்வரத்தை மடை மாற்றி வறண்ட பகுதிகளை வளமாக்கும் தொலைநோக்கு பார்வையோ இதுவரை இருந்த சில ஆட்சியாளர்களுக்கும் அவர்களை தேர்ந்தெடுத்த நமக்கும் இல்லாமல் போனதால், எல்லா மழைக்காலத்தும் தமிழகம் பெறுகின்ற மழைகளில் பெரும்பான்மை கடலை தேடி கலப்பதே வழக்கம்.



இந்த அளவுக்கு மெத்தனமாக இருக்கக்கூடிய சூழல் தமிழகத்திலே இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஆண்டுக்கு எட்டு மாதங்கள் வறட்சி, பருவம் மாறி பெய்யும் மழைகளால் பயிர் நாசம் என மழை தன் அத்தனை முகங்களையும் நம்மிடம் காட்டிவிட்டு தான் செல்லும்.

இப்படியான சூழலில், கடந்த மூன்று வாரங்களாக தமிழக கடலோரப்பகுதிகளில் பெய்யென பெய்தொழிந்தது ஒரு பெருமழை.
மூன்றாவது நாளே சிங்கார சென்னை SINK-கார சென்னையானது. மொத்த மக்களும் அவதிக்குள்ளானபோதும் அரசு மெத்தனம் காத்தது. மக்கள் கொந்தளிப்பதும், மீடியா கிண்டலடிப்பதும் ஆனபோது, மழை விடும்வரை காத்திருந்து ஒரு நன்னாளின் சுபமுகூர்த்தத்தில் முதல்வர் நகர்வலம் வந்து வாக்காள பெருமக்களின் நலம் விசாரித்து சென்றதொடு அரசின் கடமை முடிந்துவிட்டதாக கருதப்பட்டது.

எங்கெங்கும் வெள்ளம். வெள்ளக்காடு வெள்ளப்பாலை வெள்ளநிலம் என எல்லா உவமைகளும் சொல்லப்பட்டுவிட்டன சென்னைக்கு. ஆனால் அவதியுற்ற மக்களின் அல்லல் தீர்க்க தான் யாருமில்லை.

ஏற்கனவே தவித்துக்கொண்டிருந்த மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக சொல்லாமல் கொள்ளாமல் அரசு திறந்து விட்ட எரிகளின் வெள்ளமும் மழைவெள்ளத்துடன் சேர்ந்துகொண்டு மொத்த குடியிருப்பையும் சூழ்ந்தது. முன்னேல்லாம் ஆட்சியாளர்கள் மழை அறிவிப்பு வந்ததுமே எரிகளிலிருந்து ஓரளவு நீரை வெளியேற்றி காலி செய்து வைத்திருப்பார்கள். அதனால் மழைவெள்ளம் அதில் தேங்கி மக்களை அதிகம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும். ஆனால் இந்த முறை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அரசு, எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் சென்னையை சுற்றி உள்ள எல்லா எரிகளும் ஏற்கனவே இருந்த நீருடன் மழைநீரும் சேர்ந்துகொள்ள வேகமாக நிரம்ப தொடங்கிவிட்டன. அப்போது ஏற்பட்ட சிக்கலை எப்படி தீர்ப்பது என யோசிக்கும் அளவுக்கு அரசுக்கு பொறுமை இல்லை.



அப்படியே விட்டால் மழை நீர் ஏரியை நிரப்பி எரிக்கரைகளை உடைத்துவிடும். அப்படி நடந்தால் மொத்த ஏரி வெள்ளமும் நகரத்துக்குள் வந்துடும். ஏரியை காக்க வேண்டும் என்றால் ஏரி நீரை கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விட வேண்டும். அது ஏற்கனவே நகரில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சேர்ந்துவிடும். இருக்கும் கொடுமையில் எந்த கொடுமை சுமாரானது என்று யோசித்த அரசு ஏரி நீரை திறந்துவிடும் முடிவை எடுத்ததில் வியப்பில்லை. ஆனால் அதை மக்களிடம் முறையாக அறிவிக்காமல், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், சட்டென நள்ளிரவு நேரங்களில் மொத்தமாக திறந்துவிட்டதில் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போனது மக்களுக்கு.

முன்னெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் ஹெலிகாப்டரிலிருந்து போடப்படுவது வழக்கம். வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வீட்டிலிருப்பவர்களும் வெளியில் எங்கும் செல்ல முடியாமல், வெளியிலிருந்தும் யாரும் எதையும் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு வர முடியாமல் கிட்டத்தட்ட பட்டினி நிலைக்கு சென்றுவிட்ட மக்களை காக்கும் விதமாக அந்த நடவடிக்கை. இந்த முறை அந்த மனிதாபிமான நடவடிக்கை எதையும் மக்களின் மனம் கவர்ந்த தாயுள்ளம் கொண்ட அம்மாவின் அரசு செயல்படுத்தவில்லை.

இந்நிலையில் தான் பரவலாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்பை கட்டியிருப்பதால் தான் மழை வெள்ளம் போக வழியில்லாமல் ஆனது. சென்னை இந்த அவல நிலைக்கு ஆளானதற்கு காரணம் இப்படியான ஆக்கிரமிப்புக்கள் தான் என்றொரு பேச்சு பரவலாக எழுந்தது.

கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு குடியிருப்பு, ஆக்கிரமிப்பு காரணமாக அகற்றப்படவேண்டும் என அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து முன்பு ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டு நிலுவையில் இருந்தது. அந்த வழக்கை தொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் திரு சண்முகம். அவரது கோரிக்கை: குடியிருப்பவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே குடியிருந்து வருவதால் அவர்களுக்கு பட்டா வழங்கவும், ஆக்கிரமிப்பு பகுதியை வரைமுறை செய்யவும், அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்பது. அந்த வழக்கு சரியாக இந்த சமயத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, முதல், 'பெஞ்ச்' தனது வரலாற்று சிறப்புமிக்க கருத்துக்களை பொன் முத்துக்களாக நேற்று உதிர்த்திருக்கிறது அவற்றில் சில:

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்கு, தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறையும் தான் காரணம்.

25 ஆண்டுகளாக அவர்கள் வசம் இடம் இருந்தாலும், அவர்களுக்கு எந்த உரிமையும் வந்து விடாது; அவர்கள், ஆக்கிரமிப்பாளர்களாகத் தான் கருதப்படுவர்.

நீர்நிலைகளிலிருந்து ஆக்கிரமிப்புக்களையும் அரசு உடனே அப்புறப்படுத்தவேண்டும். அப்படி அப்புறப்படுத்தும்பொழுது எந்தவகையான நஷ்ட ஈட்டையும் அரசு ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்க தேவை இல்லை. அப்படி நஷ்டஈடு கேட்பதற்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எந்த விட உரிமையும் இல்லை.

நீண்ட நாட்களாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களுக்கு அரசு இதுவரை பட்டா, அப்ரூவல் என எந்த அனுமதி கொடுத்திருந்தாலும், அவை செல்லாது. அப்படி அனுமதி கொடுத்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.    

நீர் நிலைகளை பாதுகாக்கும் சட்டத்தை மறந்து விட்டு, வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கை ஆதாரங்களை அரசு மறைக்கும் போது, அரசுக்கு எதிராக, மக்கள் கையை உயர்த்துகின்றனர்

ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை மீட்கும் படி, 2005 ஜூனில், உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. அதிகாரிகளின் தவறால், உயிரிழப்பும், நிதி இழப்பும், 2005 அக்டோபரில் ஏற்பட்டது.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்கு, தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறையும் தான் காரணம்.

நீர் நிலைகளை காக்கும் நோக்கிலும், சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டம், 2007ல் கொண்டு வரப்பட்டது.

(இதில் 2005 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி என்பதும் 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சி என்பதும் இந்த பதிவுக்கு தேவையில்லாதது!)

2008 ஆம் ஆண்டு பெருமழை சமயத்துக்கு முன் அப்போதைய அரசு நீர் வடிகால்களை சீரமைத்து வெள்ளம் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்ததால் இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளம் சென்னையில் நிற்கவில்லை. மேலும் கூவம் மற்றும் பிற நீர்வழித்தடங்கள் எல்லாம் முறையாக தூர்வாரப்பட்டது. இதனால் வெள்ளம் தங்கு தடையின்றி கடலுக்கு சென்றுகொண்டிருந்தது. கூவத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்து கரைகளை பலப்படுத்தி கடல் முகத்துவாரத்தை செப்பனிட்டது அப்போதைய அரசு. நேப்பியார் பாலத்தில் நின்று கடலை பார்க்கும் எவருக்கும் இப்போதும் அந்த பணியின் பிரம்மாண்டம் புரியும்.



ஆனால் இப்போது நிலைமை வேறு. எல்லா நீர்வழி தடங்களும் கசடாகி கிடக்கின்றன. வடிகால்கள் பராமரிக்கப்படவில்லை. மழைநீர் வழிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டன. கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்தின் முன்பு வடிகால் பகுதியின் மேல் காவலர்களுக்கான மூன்று அடியில் ஷெட் அமைத்ததை எதிர்த்து வழக்கு தொடுக்க முடிந்த அரசால், எண்ணற்ற நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை கண்டும் காணாமல் இருக்க முடிந்தது. விளைவு? ஏரி குளங்கள் எல்லாம் குடியிருப்புக்களாக வேகமாக ஆக்கிரமிக்கப்பட தொடங்கின.

மெட்ரோ ரெயிலுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட சுரங்கங்கள் குழிகள் சாலைகள் எல்லாம் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டன.  இவைகள் எல்லாம் சேர்ந்து தான் இப்போது நாம் காணும் இந்த அவலநிலையை நமக்கு பரிசளித்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் பொருத்தமான நேரத்தில் மிகச்சரியான உத்தரவுகளை கொடுத்து இருக்கிறது. அதை மதித்து இனியேனும் அரசு நடந்தால் தான் சென்னை வருங்காலத்தில் தப்பிக்கும். நீதிமன்றத்துக்கு இருக்கும் அக்கறையில் கொஞ்சமேனும் சென்னை மீது தமிழக அரசுக்கு இருந்தால் நல்லது தானே? எதிர்பார்ப்போம்!





Thursday, November 26, 2015

அண்டர்ஸ்டாண்டிங் அமீர்கான்

ந்த வாரம் எல்லோருடைய கையிலும் சிக்கின ஆடு அமீர் கான் தான். “இப்போ இந்தியாவுல நடக்குற விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது இந்தியாவை விட்டு போயிடலாமான்னு என் மனைவி கூட என்கிட்டே கேட்டாங்க”ன்னு அவர் பேசுனது தான் பரபரப்புக்கு காரணம். அமீர் கான் நாட்டை விட்டு போகணும்னு பலரும் கொடி புடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சிலர் இங்கே தானே சம்பாதிச்சாரு? அப்பல்லாம் இந்த நாடு நல்ல நாடுன்னு தெரிஞ்சுச்சா அவருக்குன்னு குதர்க்கமா கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.

அமீர் கான் என்ன பேசினார், என்பதை தெளிவா தெரிஞ்சவங்க எல்லாரும் அவரை ஆதரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானும் அதை ஆமோதிச்சிருக்கார். அப்படி என்ன தான் பேசினாரு அமீர்? ஏன் இந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்?


பத்திரிக்கை துறையில் சிறந்த சேவை செய்தவர்களுக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா நடந்துச்சு. அதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் கலந்துந்துகிட்டு இருந்தார். அங்கே அவர் முன்னிலையில் தான் அமீர் பேசினார். அமீரின் துணிவும், தேச பக்தியும் எல்லோரும் அறிந்ததே. ஒரு சாதாரண இந்தியனா அவர் தனது உணர்வுகளை அங்கே வெளிப்படுத்தினார்.

“ஒரு சாதாரண மனிதனா, இந்தியா குடிமகனா, இப்போது இந்தியாவில் நடைபெறும் சில சம்பவங்களின் செய்திகளை படிக்கும்போது ரொம்ப கவலையா இருக்கு. ஒன்று இரண்டல்ல நாடு முழுவதும் நிறைய சம்பவங்கள் அது மாதிரி நடப்பது அதிர்ச்சி அளிக்க கூடியதா இருக்கு.

வீட்டில் மனைவிக்கிட்டே பேசிட்டிருக்கும்போது அவரும் கூட இந்த சம்பவங்களின் கவலையை வெளிப்படுத்தினாரு. குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி நாம இந்தியாவை விட்டு போயிடலாமான்னு கூட அவர் என் கிட்டே கேட்டிருக்காரு.

சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே வருவது ஏன் நமக்கு கவலையை தருதுன்றது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உள்ளத்துக்கும் நல்லாவே தெரியும். தினசரி செய்தித்தாள்களை திறக்கவே பயமா இருக்கிற ஒரு சூழல் உருவாகிட்டு இருக்கு.

மக்கள் அரசை தேர்ந்தெடுப்பது தங்களை பாதுகாப்பாக வாழவைப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான். அது மாநில அரசோ மத்திய அரசோ, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நம்மை அந்த அரசு காப்பாற்றும்ன்ற அந்த நம்பிக்கையை மக்கள் அரசின் மீது வெச்சிருக்காங்க. அதை அரசு உணர்ந்து நடந்து, தக்க நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்கினால் தான் அந்த பாதுகாப்பு உணர்வு மக்களுக்கு கிடைக்கும்”

இதான் அவர் பேசியதின் சாராம்சம். இதில் எந்த தவறும் இருப்பதா எனக்கு தெரியலை. 

இத்தனை வருஷமும் இப்படி ஒரு சம்பவம் நடக்கலையா? 2008 ஜிகாதி தாக்குதல், 2002 குஜராத் வன்முறை, 1992 பாப்ரீ மசூதி சம்பவம்னு பலதும் நடந்த போது அமீர் என்ன செஞ்சிட்டு இருந்தாருன்னெல்லாம் ரொம்ப புத்திசாலி தனமா கேள்விகள் கேட்டுட்டு இருக்காங்க சிலர். 

இதில் எனது பார்வையை நான் இப்படி வைக்க விரும்புறேன்:

ஒரு ஜனநாயக அரசு என்று ஒன்று இருந்தால் அது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எல்லோரையும் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கு.

எல்லா காலகட்டத்திலும் எல்லா அரசிலும் இப்படியான சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் நடந்துட்டு தான் இருக்கு. ஆனா அப்போதெல்லாம் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, கண்டிப்பது, எச்சரித்து அறிக்கை விடுவது ஆகியன இருக்கும்.

தமிழகத்திலேயே கூட அதிமுகவினர் ஒரு வன்முறையில் ஈடுபட்டாலோ, தகாத முறையில் பேசினாலோ உடனே ஜெயலலிதா அதை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்னு ஒரு அறிக்கை விடுவார். சில சம்பவங்களில் அப்படி சொந்த கட்சியினர் மீதே நடவடிக்கை எடுத்து கைதும் செய்திருக்கிறார். சொந்த கட்சி காரங்க என்பதற்காக அவர்களை கண்டுகொள்ளாமல் விட்ட சம்பவங்கள் மிக மிக குறைவு. இப்படியான நடவடிக்கைகள் பெயரளவுக்கு இருந்தாலும் கூட போதும். அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு நமக்கு துணையாக இருக்கிறது. தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைக்கும். நம்மை பாதுகாக்க அரசு இருக்குனு ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கும். அப்பாலிக்கா கட்சி காரங்களை விடுதலை செஞ்சுருவாங்கன்றது வேற விஷயம். ஆனாலும் மக்களுக்கு அரசின் மீது ஒரு நம்பிக்கை வரும்.

ஆனா சமீபத்திய நிகழ்வுகளில் நாடு முழுதும் பல பல சம்பவங்கள் நடந்த போதும், மத்திய அரசோ பிரதமரோ அதை கண்டிக்கவோ, எச்சரிக்கவோ இல்லை, எந்த நடவடிக்கைக்கும் உத்தரவிடவில்லை. அதை விட கொடுமை அத்தகைய விஷயங்களை மறைமுகமாக ஆதரிக்கவும் செய்தது தான். இது தான் இங்கே வித்தியாசம். இதுவரை இருந்த அரசுகள் எல்லா சம்பவங்களிலும் நடவடிக்கை எடுத்தது. கண்டித்தது. இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவற்றை ஊக்குவிக்க தொடங்கி இருக்கிறது. இதை கவனிக்கும் மக்கள் அரசின் மறைமுக உதவியோடு தான் இப்படியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என நினைக்க கூடும். அது தான் இப்போது இந்தியாவில் நிலவும் பாதுகாப்பின்மைக்கான முக்கிய காரணம்.

இந்திய பத்திரிக்கைகள் எல்லாம் இப்போது நெருக்கடி நிலை காலகட்டம் மாதிரி கட்டுப்படுத்தப்பட்டு நாட்டில் நிலவும் பல செய்திகளை வெளியிட முடியாமல் ஒடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. நாடு முழுதும் நடைபெற்ற பல பல தாக்குதல்களில் பெரிய அளவில் நடைபெற்ற ஒன்றிரண்டு தவிர வேறு எதையும் பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. ஆனால் அவற்றில் பல சம்பவங்களை மனிதாபிமான உணர்வுள்ள சில  வெளிநாட்டு பத்திரிக்கைகள் தொகுத்து வெளியிட்டிருக்கின்றன. அதை படித்தால் இந்தியாவில் இப்போது நிஜத்தில் எவ்வளவு பயங்கரமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது புரியும்.

இந்த அரசில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நடந்துகொண்டிருப்பதை கவனித்து இருப்பீர்கள். இதுவரை சிறுபான்மை மதத்தினரான முஸ்லீம்கள் கிறித்துவர்கள் ஆகியோர் மீது நடந்து வந்த தாக்குதல்களுக்கு இணையாக இப்போது இந்த அரசில் ஹிந்து மதத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தினர் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. நம்முடைய பெருமதிப்பிற்குரிய தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை போல, ஆதிக்க வர்க்க இந்துக்கள் பிற இந்துக்களை ஒடுக்கி தங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய ஒரு சூழலை மெல்ல மெல்ல இந்த நாட்டில் உருவாக்கி வருவதை நாம் இப்போது காண முடிகிறது. எந்த பாவமும் அறியாத பிஞ்சு குழந்தைகள் இருவரை அவர்கள் தலித்துக்கள் என்கிற காரணத்துக்காகவே எரித்து கொன்றது அதில் ஒரு சாம்பிள் தான்.

இந்தியா உயர் வகுப்பு இந்துக்களின் நாடாக மாற்றபட்டு வருவதும், அதற்கான நடவடிக்கைகளில் சில அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதும், அந்த அமைப்புக்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், மக்களிடம் இதுவரை இருந்து வரும் சமத்துவத்தை குலைக்கும் செயலாகவே காண வேண்டி இருக்கிறது. அதை ஒரு அரசே ஆதரிப்பது தான் மிகப்பெரிய கொடுமை. இந்த விசித்திர நிலைமை தான் மக்களுக்கு அமீர்கான் சொல்லும் அந்த பாதுகாப்பின்மையை கொண்டு வந்திருக்கிறது.

பல கலைஞர்கள் அறிஞர்கள் அரசின் மீதான தங்களது அதிருப்தியை தெரிவிக்க தங்களின் விருதுகளை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள். அப்படியான எதிர்ப்பு மனநிலைக்கு காரணம் என்ன என கண்டறிந்து அவர்களை அழைத்து சமாதானம் செய்து அவர்களது உணர்வுகளை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து அவர்களது கவுரவத்தை காக்க வேண்டிய அரசு அதை எதையும் செய்யாமல், அவர்களது செயலுக்கு உள்ளர்த்தமும் அரசியல் சாயமும் பூசி கேலி செய்து கொண்டிருக்கிறது. இது பொறுப்பாகவும் தெரியவில்லை முதிர்ச்சியான நிர்வாகமாகவும் தெரியவில்லை.

இந்திய அரசு இந்திய மக்களுக்கான அரசு எனில் இந்நேரம் யோகி ஆதித்யநாத் எம்பி, ஹிந்து மகாசபை, சிவசேனா எம்பி வீச்சாரே, பாஜக எம்பி சாத்வி பிராச்சி, உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் போன்ற பலரையும் இந்நேரம் எச்சரித்து இருக்கவேண்டும். இந்திய மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யாரையும் அனுமதிக்கமுடியாது என உறுதியாக அறிவித்து இருக்கவேண்டும். இந்திய அரசு இந்திய மக்களுக்கான அரசா, உயர் வர்க்க இந்துக்களுக்கான அரசா என்பதே இப்போது குழப்பமாக இருக்கிறது. இந்த நிலை தான் நாட்டில் பலருக்கும் இந்தியா பாதுகாப்பான நாடு தானா என்கிற எண்ணம் தோன்ற காரணம்.

சகிப்புத்தன்மை என்பது ஒரு மெல்லிய கோடு. இந்தியாவை நேசிப்பவர்கள் அதன் இந்தப்பக்கம். மதத்தை நேசிப்பவர்கள் அந்த பக்கம். அமீர்கான் இந்தப்பக்கம். நான் இந்தப்பக்கம். 

நீங்கள்??




Wednesday, November 11, 2015

இந்திய பொருளாதாரம் – தேறுமா?

செக்யூலரிசம், மாட்டுக்கறி, சோட்டாராஜன், சிறுபான்மையினர் நசுக்கல், கருத்து சுதந்திரம், சாகித்ய அகாடமி, பீஹார் தேர்தல் போன்ற பிற பிற செய்திகளால் நம்ம கவனம் சிதறி சிக்குண்டு கிடந்ததில் கவனத்தில் இருந்து கழன்று போன ஒரு விஷயம் இந்திய பொருளாதாரம்.

இந்திய பொருளாதாரத்துக்கு என்ன? நல்லாத்தானே இருந்தது? உலகம் முழுதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில் கூட இந்திய பொருளாதாரம் தெளிவாகவும் உறுதியாகவும் வளர்ச்சியான நிலையிலும் தானே இருந்தது? இப்போதோ, உலக பொருளாதாரத்தில் எந்த சிக்கலும் இல்லை. மந்த நிலை கூட இல்லை. அப்படி இருக்க என்ன பிரச்சனை என கேட்பவர்களுக்கான ஒரே பதில், அப்போது இந்திய பொருளாதாரம் இருந்தது பொருளாதாரத்தில் சிறந்த மன்மோஹன் & சிதம்பரம் ஆகிய மேதைகளின் கைகளில் என்பது தான். இப்போதைய நிலைமை வேறு.

பாஜக அரசு பதவி ஏற்று இந்த 16 மாதங்களில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளோ, பொருளாதார கொள்கைகளோ, அவ்வளவு ஏன், பொருளாதாரத்துக்கான அமைச்சரவையை கூட்டுவதோ அப்படி கூட்டி பொருளாதார நிலையை ஆய்வு செய்து முடிவெடுப்பதோ எதுவுமே நடைபெறவில்லை. இதன் பலன்

  • தொடர்ந்து பத்தாவது மாதமாக ஏற்றுமதி குறைந்திருக்கிறது
  • ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தை விட சராசரியாக 20% ஏற்றுமதி குறைவு
  • உள்நாட்டு சில்லறை பணவீக்கம் அபரிமிதமாக உயர்ந்திருக்கிறது.
  • மூடீஸ், ரிசர்வ் வங்கி, போன்றவை பொருளாதார அபாயத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருப்பதாக எச்சரித்தும் அது பற்றிய தீவிரமான விவாதமோ தடுப்பு நடவடிக்கையோ எதுவும் இல்லை.
  • அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது
  • சேவை வரி, பெட்ரோலுக்கான உற்பத்தி வரி ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைத்து உப பொருட்களின் விலையும் கூடி இருக்கிறது.
  • உள்கட்டமைப்பு திட்டங்கள் முதலீடுகள் எதுவும் இல்லை.
  • புதிய தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு திட்டங்கள் இல்லை.
  • நீண்டகால நிலுவையில் இருக்கும் ஜி.எஸ்.டி குறித்த இறுதி வரைவு அறிக்கை கூட இதுவரை இல்லை.
  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற்று கொண்டு வருவதை தடுக்கும் வழிமுறைகள் காணப்படவில்லை
  • தொழில் செய்வதற்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய முன்வரவில்லை.
  • வங்கிகளின் வராக்கடன் வசூலுக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
  • ஏற்கனவே வங்க்கிகளை ஏமாற்றிய கடந்தாரர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்கும் நடவடிக்கை தடுக்கப்படவில்லை.


இவற்றால் என்னவாகும்?



சுருக்கமாக சொன்னால்

அரசு மக்களிடம் இருந்து அபரிமிதமாக வரியை வசூலிக்கிறது
அந்த பணத்தை முதலீட்டு திட்டங்களுக்கு, சமூக நல திட்டங்களுக்கு  பயன்படுத்தாமல் செலவு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது.
தொழிலதிபர்களுக்கு சலுகைகளும் கடன் தள்ளுபடிகளும் மேலும் கடன்களும் தருகிறது.
பிற நாடுகளுக்கு நீண்டகால அடிப்படையில் கடன் தருகிறது.
அதாவது நம்மிடம் அதிகமாக வசூலித்து தொழிலதிபர்களையும் பிற நாடுகளையும் வாழவைக்கிறது. நமக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.

அப்படியும் பணம் போதாததால், பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை பெற்று அதை விற்று காசாக்கி அதையும் தொழிலதிபர்களுக்கு கொடுப்பதற்கான கோல்டு மானிடைசிங் ஸ்கீம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த தங்கத்துக்கான விலையை சில ஆண்டுகள் கழித்து நமக்கு கொடுப்பார்களாம். அதாவது ஆசை ஆசையாக நீங்கள் வாங்கிய நகைகளை அரசிடம் ஒப்படைத்தால் அதை வைத்து அவர்கள் திட்டங்களை செயல்படுத்தி கொள்வார்களாம்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பொருளாதார மந்த நிலை வந்தபோதும், மக்களிடமிருந்து வசூலித்து பொருளாதாரத்தை சமாளிப்பது என்கிற அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கவேயில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். இப்போதோ நிர்வாக திறமையும் பொருளாதார அறிவும் இல்லாத ஒரு அமைச்சரவை நிதி நிர்வாக சிக்கலை சமாளிக்க பொதுமக்களின் சொந்த தங்கத்தை கேட்கிறது.

இந்த நிலைமை நம் தொழில்வளர்ச்சி, விவசாயம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு ஆகியவற்றை சீர்குலைத்துப்போட்டதுடன், வேலையின்மையையும் அதிகரித்துவிட்டது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என்பது தான் பலரது அச்சம்.

ஏன் இதை கணிக்கவோ தடுக்கவோ அரசு முன்வரவில்லை என்று கேட்டால், அவர்களுக்கு அது பற்றி தெரியாது அதனால் அக்கறை கொள்ளவில்லை என்று சொல்லலாம். அமைச்சருக்கும் பிரதமருக்கும் பொருளாதாரம் புரியவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட இப்படியான ஒரு அபாயகரமான சூழல் இருப்பதாக பொருளாதார மேதைகள் சொல்லும்போது அதை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட துறை வல்லுனர்களை கூட்டி விவாதித்து ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் பொருளாதார மேதைகள் சொல்லுவதை காதில் போட்டு கொல்லாததுடன், அவர்கள் எதிர்க்கட்சிகள் அதனால் அப்படி சொல்லுகிறார்கள் என்று கேலி செய்து கொண்டிருக்கிறது அரசு.

இப்போது சிறிய குறியீடுகள் மட்டும் தெரிகின்றன. ஆனால் அடுத்த சில மாதங்க்களில் சீர் செய்யமுடியாத அளவுக்கு மிக பெரிய பொருளாதார சரிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

நாம் செய்யக்கூடியது என்பது, பணத்தை சிக்கனமாக செலவு செய்வது, வேலையை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக்கொள்ளுவது  என்பது மட்டும் தான்.


தயாராகிக்கொள்ளுங்கள் தோழர்களே!

Saturday, October 24, 2015

தமிழக அரசு – முன்னணி டீலர்

ரு அரசு செயல்படவேண்டியவற்றை பற்றி சுருக்கமாக சொல்லுவதானால் வியாபாரம் தொழில் செய்வோருக்கு உதவி செய்து அதன் மூலம் வரிவருவாய் ஈட்டி சேவைகளையும் அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு உறுதிசெய்யவேண்டும் என்பார்கள்.  ஆனால் தமிழக அரசு கொஞ்சம் வித்தியாசமானது. நேரடியாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி அதை அரசின் திட்ட செலவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதிலும் ஒரு படி மேலே போய், அடிப்படை விஷயமான பொதுமக்கள் சேவை என்பதில் கூட லாபம் தரும் சேவை, லாபமில்லா சேவை என பிரித்து லாபமில்லா சேவைகளை குறைக்க தொடங்கி இருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு வியாபார நிறுவனமாக பரிணமிக்க தொடங்கி இருக்கிறது தமிழக அரசு.

இது ஜெயலலிதாவோ கருணாநிதியோ தொடங்கி வைத்தது அல்ல. காமராஜர் காலத்திலேயே டான்சி சிறு தொழில் நிறுவனத்தை அரசாங்கமே தொடங்கியதில் ஆரம்பித்தது இந்த வியாபாரப்படுத்தல். சிறு தொழிலாளர்களுடன் போட்டியிடுவது அரசின் பணி அல்ல, மாறாக அவர்களுக்கு உதவி செய்வதும் தேவையான கட்டமைப்புக்களை உருவாக்குவதும் தான் அரசின் பணி என்கிற அடிப்படை விஷயம் கூட  அப்போதைய ஆட்சியாளர்களுக்கு புரியாததால் வந்த வினை அது. இப்போது அது பல்கி பெருகி பிரம்மாண்டமாக வளர்ந்து மிக பெரிய வியாபார ஏஜென்சியாக மாறி இருக்கிறது.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் நோட்டு பாட புத்தகங்களை வாங்கி அதை இலவசமாக மாணவர்களுக்கு கொடுத்ததற்கு ஒரு அடிப்படை காரணமும் நியாயமான மனிதாபிமான நோக்கமும் இருந்தது. நம் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்கிற முற்போக்கு சிந்தனை அது. ஜெயலலிதா இப்போது கொடுக்கும் இலவச லாப்டாப்புக்கும் அதே காரணம் தான். ஆனால் தேவையற்ற கொள்முதல்கள் சிலவும் உள்ளது.

மிக முக்கியமான வியாபார ஏஜென்சியாக மது உற்பத்தியாளர்களின் விநியோக டீலராக இப்போது தமிழக அரசு இருக்கிறது. அவர்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி அதன் மூலமான வருவாயை ஈட்டுகிறது. அதாவது மது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் சந்தைப்படுத்துதல் வியாபாரம் போக்குவரது விநியோகம் ஆகியவற்றை அரசே செயல்படுத்துகிறது. இதன் மூலம் மது உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங்க் மற்றும் விநியோக செலவுகள் மிச்சப்படுவதுடன், மிக பெரிய அளவிலான விற்பனையும் உறுதி செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த ஒயின்ஷாப் டீலராக தமிழக அரசின் டாஸ்மாக் முற்றிலுமாக மாறிவிட்டது.



சைக்கிள், ஃபேன், மிக்சி, கிரைண்டர், டிவி, மொபைல் போன்ற பல ஏலக்டிரானிக் சாதனங்களுக்கான மிகப்பெரிய டீலராக நம் தமிழக அரசு இருக்கிறது. அதாவது அரசின் கஜானாவில் இருந்து பணத்தை கொடுத்து உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து அதை நமக்கு கொடுத்து அதன் மூலம் ஒரு மிகப்பெரிய வியாபார சந்தையை உருவாக்கி வைத்திருக்கிறது அரசு.

பொதுவான நோக்கில் பார்க்கையில் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதான ஒரு தோற்றம் தென்பட்டாலும், அதன் அடி ஆழத்தை அலசி பார்த்தால் அதிலுள்ள வியாபார தந்திரமும் அதன் மூலம் சில தனிப்பட்ட நபர்கள் அடையும் லாபமும் உணரமுடியும்.

உதாரணமாக அரசு மானவர்களுக்கு தரும் லாப்டாப்பை ரூ. 25000 என விலைகொடுத்து வாங்குகிறது. அதனை மானவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறது. அரசு தரும் லேப்டாப்பின் அதே செயல் திறன் வெளி சந்தையில் ரூ 23000 முதல் கிடைக்கிறது. அரசே மொத்தமாக, மொத்தமாக என்றால் லட்சக்கணக்கில், கொள்முதல் செய்கையில் உற்பத்தியாளர்கள் அதை மேலும் குறைந்த விலைக்கு, அதாவது ரூ. 20000 க்கு கொடுக்க முன்வருவார்கள். ஆனால் அதை ரூ. 25000 கொடுத்து வாங்குகிறது அரசு. மக்களின் வரிப்பணத்தில் மொத்தமாக செலவு செய்வதன் மூலம் எதிர்கால திட்டங்களுக்கான செல்வு தொகை நஷ்டப்பட்டு போவதுடன், உற்பத்தியாளர்களிடம் இருந்து வித்தியாச தொகையான ரூ. 5000 த்தில் ரூ 3000 வரை ஒரு லேப்டாப்பில் தனி நபர்கள் தங்களுக்கு என ஒதுக்கி கொள்வதாகவும் சொல்கிறார்கள். எப்படியோ அரசு லேப்டாப் டீலர் ஆகிவிட்டது.

இதே கதை தான் ஃபேன், மிக்சி, கிரைண்டர், சைக்கிள் போன்றவற்றுக்கும். உற்பத்தியாளர்களின் விற்பனை விலையிலேயே அரசும் வாங்குகிறது, அதுவும் லட்சக்கணக்கில், அதற்கு மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது, அந்த பொருட்கள் மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டு மக்களின் வாய் அடைக்கப்படுகிறது. அரசை மக்களும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறார்கள். ஆனால் உண்மையில் விற்பனை விலைக்கும் கொள்முதல் விலைக்குமான வித்தியாச தொகை யாருக்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது. மிகப்பெரிய அளவில் எல்லாவற்றையும் கொள்முதல் செய்வதன் நோக்கமும் அதுதான்.

தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு, கல்விச்சாலைகள், தரமான கல்வி, சுகாதாரமான மருத்துவ வசதி, போக்குவரத்து, விவசாயத்துக்கான உதவி ஆகியவற்றை செய்து தரவேண்டிய அரசு, அதை விடுத்து வியாபாரம் செய்து கொண்டு இருப்பதால், மக்களிடம் இருந்து பெறப்படும் வரித்தொகை வீணாகிறது. அதாவது எதிர்காலத்துக்கான முதலீடாக இல்லாமல் நிகழ்காலத்துக்கான செலவாக அவை மாறிவிட்டது. இதன் காரணமாகவே வரலாறு காணாத நிதி நெருக்கடியை தமிழக அரசு சந்தித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு விவாசாயம் ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை கொடுத்தால், அதன் மூலம் எல்லோரும் வளம்பெற்று வேலைவாய்ப்பு மூலம் தானே சம்பாதித்து தனக்கு தேவையானவற்றை தானே வாங்கி கொள்வார்கள். இது மாதிரி அரசிடம் கையேந்தி நிற்கவும் மாட்டார்கள்.

சுயமரியாதை உள்ள ஒவ்வொருவரும் அரசின் இலவசத்தை வாங்க மறுத்து தொழில் வளர்ச்சிக்காக குரல்கொடுக்க தொடங்கினால் ஒழிய தமிழகத்தின் வளர்ச்சி உறுதியாகாது.

நாம் என்ன செய்ய போகிறோம்? அரசை அரசாக மாற்ற போகிறோமா அல்லது வியாபார டீலராக வைத்திருக்க போகிறோமா?



Printfriendly