Wednesday, August 1, 2012

தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு?


நேத்தைக்கு ஒரு செய்தி சில இணைய செய்தி தளங்களில் வெளியானது. அதாவது, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்ப்படுத்த முதல்வர் திட்டமிட்டிருக்கிறதாகவும், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்ட மாற்று வழிகளை சிந்திச்சு அறிக்கை கொடுக்க சொல்லி அதிகாரிகளை பணித்திருப்பதாகவும் அந்த யூகமான செய்தி சொல்லியது. எதிர்வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்ளும் முகமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதா செய்திகள் வெளியாகி இருக்கு.

என்னைப்பொறுத்தவரைக்கும் இது ரொம்ப ரொம்ப முக்கியமான வரவேற்க தக்க ராஜதந்திரமான முடிவு. இந்த கல்லுக்கு மல்டிப்பிள் மாங்காய் அடிச்சு வீழ்த்துற திறன் இருக்குன்னு நான் நினைக்கிறேன்.

தமிழகத்தில் மது

தமிழகத்துக்கு பூர்ணமதுவிலக்கு ஒண்ணும் புதுசு இல்லை. ஏற்கனவே பல ஆண்டுகாலமா அமலில் இருந்த விஷயம் தான். 1971-76 திமுக ஆட்சியில் கலைஞர் தான் மதுவிலக்கை ரத்து செஞ்சு சாராயக்கடைகளை திறந்தாரு. எத்தனையோ சமூக ஆர்வலர்கள், எதிர்கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள்னு பலருடைய ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி அந்த கேடுகெட்ட காரியத்தை செஞ்ச பெருமை கலைஞரை தான் சாரும். குடி பழக்கமே இல்லாதிருந்த ஒரு தலைமுறையை குடிக்க வைத்து கெடுத்த பெருமை கொண்டவரானார் அவர்.

அதன் பின் வந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில் முதலில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அவரும் அந்த முடிவை கைவிட்டு மது விற்பனையை ஊக்குவிக்கவேண்டியதாயிற்று. ஆனால், அவர் கொஞ்சம் அதை புரொஃபெஷனலா செய்ய ஆரம்பிச்சார். அப்படி தான் 1983ம் ஆண்டு, டாஸ்மாக் உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு மதுவகைகள், உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகைகள்(!) எல்லாத்தையும் கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகிக்கும் பணிக்காக அந்த அரசு நிறுவனம் செயல்பட தொடங்கியது. 

இப்படி அரசே ஒரு வியாபார நிறுவனத்தை ஏற்படுத்தியதுக்கு சொல்லப்பட்ட காரணங்களில் சில: கள்ளசாராயத்தால் பாதிக்கப்படும் மக்களை காப்பது(!), அதிகபட்ஷ சில்லறை விலைக்கும் கூடுதலாக தனியார்கள் மது விற்று மக்களை ஏமாற்றுவதை ஒழிப்பது(!), அரசுக்கு வரவேண்டிய முறையான வரி வருவாயை சிந்தாமல் சிதறாமல் கொண்டு வருவது ஆகியவையும் அடங்கும்.

பின்னர் சிலகாலம் மீண்டும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டபின் மதுக்கடைகள் ஏலமுறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.. பல தனியார்கள் (பெரும்பாலும் அரசியல் செல்வாக்குடையவர்கள்) ஒயின்ஷாப் நடத்தி, பக்கத்திலேயே பாரையும் நடத்தி நம் குடிமக்கள், ஆந்திரா, பாண்டி, கேரளா என அலைவதை குறைத்து உள்ளூரிலேயே வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.


ஜெ. தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், அவர் அதை இன்னமும் புரஃபெஷனலாக மாற்றினார்.

"ஏழைமக்களின் அன்றாட கூலியை பாதி விழுங்கிவிட்டு, மக்களின் பொருளாதாரத்தை சீரழிப்பதால், அரசின் வருவாய் இழப்பை கூட கருத்தில்கொள்ளாமல், மக்களின் நன்மையை கருதி லாட்டரிசீட்டை முற்றிலுமாக தடை செய்கிறேன்" என ஒரு புரட்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு மக்களின் வயிற்றில் பால்வார்த்த சில மாதங்களிலேயே, அரசின் சார்பாகவே மதுக்கடைகளை நடத்துவது என்கிற முட்டாள்தனமான அறிவிப்பையும் வெளியிட்டு, தான் கணிப்புக்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதை  மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் ஜெ.

லாட்டரியாவது தினக்கூலியை தின்றதோடு நின்றது. ஆனால் மதுக்கடைகள் கூலியையும் தின்றுவிட்டு, குடும்ப நிம்மதியையும் குலைத்துவிட்டு, உடல்நலத்தையும் கெடுத்துவிட்டு சமுதாயத்தையே சீரழித்துவிட்டது.

ஜெ. டாஸ்மாக் மூலமாகவே விற்பனை நிலையங்களை அமைத்ததில் மிகப்பெரிய புத்திசாலித்தனமான பிசினஸ் தந்திரம் இருப்பதாக சொல்வார்கள். தனது தோழி சசிகலா & கோவுக்கு சொந்தமானதாக சொல்லப்படும் மிடாஸ் (MIDAS இந்த பெயரே சசி குடும்பத்தினரின் பெயர்களின் முதலெழுத்து என்றும் சொல்வார்கள்) நிறுவன தயாரிப்புக்களை பைசா செலவில்லாமல் மார்கெட்டிங் செய்வதற்காக தான் என்பதும் ஒரு கருத்து.

மிடாஸ் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை மார்கெட்டிங் செய்வதற்காகவும், விநியோகிப்பதற்காகவும் ஏற்படும் மொத்த செலவையும் மிச்சப்படுத்திவிட்டது டாஸ்மாக். அரசின் சார்பாகவே மார்கெட்டிங் பிரிவு செயல்படுவதாலும், விற்பனை நிலையங்களையும் அரசே அமைத்துக்கொள்வதாலும், உறுதியான வியாபாரத்துக்கு வழி செய்வதோடு, மார்கெட்டிங் செலவையும் மிடாசுக்கு மிச்சப்படுத்திக்கொடுத்தது அரசு. 

அதாவது, மிடாஸ் நிறுவனத்துக்கான மார்கெட்டிங் பிரிவாகவும் சேல்ஸ் ஏஜெண்டாகவும் டிஸ்டிரிப்யூட்டராகவும் டாஸ்மாக் செயல்பட்டது. இது மிடாசுக்கு கொள்ளை லாபத்தை கொண்டு குவித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!

டாஸ்மாக் அரசுக்கு லாபமா?

பலரும், பல அரசியல் கட்சிகளும், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் சொல்லும் ஒரு செய்தி, டாஸ்மாக்கால் தான் அரசுக்கு நிறைய லாபம் என்பது! அது சரியல்ல என்பது எனது கருத்து. அதை கொஞ்சம் சிம்பிளாகவே விவரிக்க விரும்புகிறேன்.

இதை நாம் இரண்டு பாயிண்டில் இருந்து பார்க்கவேண்டும். அரசு & டாஸ்மாக்.

அரசை பொறுத்தவரை டாஸ்மாக் விற்றாலும் சரி அல்லது வேறு தனியார் விற்றாலும் சரி, விற்பனை வரி வந்துவிடும். அந்த விற்பனை வரியில், வரி ஏய்ப்பு முன்பு இருந்தது. (பில் இல்லாமல் விற்று அதற்கான வரியை அரசுக்கு செலுத்தாமல் விடுவது.) டாஸ்மாக் வந்தபின் வரி முறையாக வருகிறது. எனவே அரசுக்கு வரி வருவாய் மட்டும் தான் வரவு. 

இந்த வரிவருவாய் என்பது உற்பத்தியாளர்களிடமிருந்து 55%, டாஸ்மாக் விற்பனையிலிருந்து 35%; டாஸ்மாக்கில் விற்கப்படும் ஒயின் ரகங்களுக்கு 55% & ஸ்காட்ச் ரகங்களுக்கு 70% என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. உன்னிப்பாக பார்த்தால் அரசுக்கான நிலையான பெரும் வரி வருவாய் என்பது அந்த 35% செக்மெண்ட்டில் இருந்து தான் வருகிறது.

சரி இனி நாம் டாஸ்மாக் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்ப்போம்.

 (சென்னை அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு) 

டாஸ்மாக் என்பது மது உற்பத்திசெய்யும் நிறுவனம் அல்ல. அது வெறும் வியாபார நிறுவனம் தான். அதாவது தமிழகத்தில் உள்ள 14 மது உற்பத்தியாளர்களிடமிருந்து மதுவை வாங்கி மக்களுக்கு விநியோகிக்கும் ஒரு நிறுவனம் (எனினும் மிடாஸ் நிறுவன பொருட்களுக்கு தான் அதிக சதவீத கொள்முதல்). எனவே இதில் டாஸ்மாக்குக்கான வருவாய் என்பது, விற்பனையில் கிடைக்கும் லாபம் மற்றும் உற்பத்தியாளர்கள் கொடுக்கும் டீலர் கமிஷன் போன்ற ஏதேனும் வகையிலான தள்ளுபடிகள் மட்டும் தான். வரியை பொறுத்தவரை, மக்களிடமிருந்து வசூலித்து அதை அப்படியே அரசுக்கு செலுத்தி விடுகின்றனர். எனவே அது டாஸ்மாக்குக்கான வருவாய் அல்ல.

ஒரு கணக்கை பார்ப்போம். மிடாஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஆபீசர்ஸ் சாய்ஸ் கிளாசிக் விஸ்கி 180 மி.லி விலை ரூ75.00 (இதில் மாநில வரி 35% ரூ.19.44; மத்திய கலால் வரி ரூ. 20.38 அடக்கம். இது தவிர ஒரு கேஸ்சுக்கு ரூ.142/- மொத்தவிற்பனையாளர் கட்டணமும் செலுத்தவேண்டும்) இதன்படி கொள்முதல் விலை + வரிகள் + கமிஷன் போக டாஸ்மாக் நிறுவனத்துக்கு என த்னியாக என்ன லாபம் வந்துவிடும் என நினைக்கிறீர்கள்?

சரி, அந்த லாபத்தை அவர்கள் முழுமையாக அனுபவிக்கமுடியுமா என்றால் இல்லை.

டாஸ்மாக் அரசு நிறுவனம் என்பதால், அதிக அளவிலான உயர் அதிகாரிகள் படையே இருக்கிறது. இயக்குநர்கள் 3; மேனேஜிங் டைரக்டர் 1; ஜெனரல் மேனேஜர் 2; தலைமை கணக்கர் 1; ரீஜனல் மேனேஜர் 5; மாவட்ட மேனேஜர் 33; டிப்போ மேனேஜர் 41. இது தவிர தமிழகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான கடைகளில் சூப்பர்வைசர்கள் மற்றும் பணியாளர்கள். இவர்கள் அனைவருக்கும் சம்பளம், உயர் அதிகாரிகளுக்கு வீடு, வண்டி,ஆள், அம்பு, சேனை பரிவாரங்கள் செலவு தனி.

 (டாஸ்மாக் நிர்வாக அமைப்பு)

நிர்வாக செலவுகளான, ஆயிரக்கணக்கான கடைகளின் வாடகை, பாதுகாப்பு வசதிகள், பாதுகாப்புக்கான ஊழியர்கள், நிர்வாக கட்டிடங்கள், வண்டிகள் செலவு தனி.

விநியோக செலவுகளான 41 கிடங்குகள் அதன் ஊழியர்கள், மாநிலம் முழுமைக்கும் பொருட்களை சப்ளை செய்வதற்கான லாஜிஸ்டிக்ஸ் செலவு, வேர் ஹவுசிங் செலவு தனி.

எனவே டாஸ்மாக் நிறுவனம் அப்படியொன்றும் லாபத்தில் இயங்க வாய்ப்பில்லை என்பதை பிசினஸ் கணக்குகள் தெரிந்த யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே.

மதுவிலக்கு முடிவால் என்ன நன்மை?

இந்த மதுவிலக்கு முடிவு நான் ஏற்கனவே சொன்னதை போல, மல்டிப்பிள் மாங்காய்கள் அடிக்கும் கல்லாக தான் நான் காண்கிறேன். அவற்றுள் சில: 

அரசின் நஷடம் குறையும், டாஸ்மாக் நெட் ஒர்க்கை விவசாய பொருட்களை மார்கெட்டிங் செய்ய உபயோகிப்பதன் மூலம், விலைவாசியை கட்டுப்படுத்துவதோடு விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்க வழி செய்யலாம் (ஏற்கனவே தானியங்களையும் மளிகை பொருட்களையும் தனது சிந்தாமணி, அமுதம் போன்ற கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது அரசு. அதை டாஸ்மாக் மூலம் விரிவு செய்யலாம்).


டாஸ்மாக் ஊழியர்களை அரசின் பிற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்தி நிர்வாகத்தை சீரமைக்கலாம்; யாரும் செய்ய துணியாத முடிவை எடுத்தேன் என பறை சாற்றிக்கொள்ளலாம், மிடாஸ் நிறுவன விற்பனையை முடக்கிவைப்பதன் மூலம் சசிகலா & கோவுடனான பனிப்போரில் முன்னிலை வகித்து அவர்களை இன்னும் கொஞ்சம் தட்டி வைக்கலாம்; இதையெல்லாம் விட முக்கியமாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்களின் வாக்குவங்கியை மொத்தமாக அள்ளலாம். இப்படி இன்னும் பல பல நன்மைகளை மனதில் வைத்து தான் ஜெ. இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.

பார்ப்போம்..இந்த முடிவு வெறும் யூகமான வதந்தியா அல்லது உறுதியான அதிகாரப்பூர்வமான முடிவா என்று! அதற்கு பின், இன்னுமொரு ரவுண்டு விரிவாக பேசலாம்!

3 comments:

 1. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சதீஷ். இது நடக்கனும்னு வேண்டிக்குவோம். இதை பற்றி நான் எழுதினதையும், நேரம் கிடைக்கும்போது படியுங்க. லிங்க் கீழே:

  http://kalakalappu.blogspot.com/2012/07/blog-post_31.html

  ReplyDelete
 2. தமிழ்நாடு அரசின் மொத்த வருமானத்தில் 30 % டாஸ்மாக் மூலம் வருகிறது. இதனை ஒரேயடியாக தமிழ்நாடு அரசு கைவிடும் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது.

  எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பு இதனை நம்ப இயலாது.

  ReplyDelete
 3. டாஸ்மாக்கால் தான் அரசுக்கு நிறைய லாபம் என்பது! அது சரியல்ல என்பது எனது கருத்து. .. என விளக்கியுள்ளீர்கள். அப்படியென்றால் டாஸ்மார்க்கை மூடுவிழா சாத்தியமே.
  டாஸ்மாக் நெட் ஒர்க்கை விவசாய பொருட்களை மார்கெட்டிங் செய்ய உபயோகிப்பதன் மூலம், விலைவாசியை கட்டுப்படுத்துவதோடு விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்க வழி செய்யலாம் - நல்லதே நடக்க பிரார்த்தனைகள்!

  ReplyDelete

Printfriendly