Monday, October 6, 2014

சிறுகூடல்பட்டி விசிட்

‘மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவன்
மாண்டுவிட்டால் அதை பாட்டில் வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை;
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’

என கம்பீர கர்வத்துடன் கர்ஜித்த கவியரசு கண்ணதாசன் எல்லோரையும் போல எனக்குள்ளும் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. நம் வாழ்வின் எல்லா தருணத்திற்கும் பொருத்தமான பாடல் ஒன்றை அவர் இயற்றி இருக்கிறார். அது எந்த உணர்ச்சியானாலும், அதை உணர்ந்து அந்த உணர்வை பிரதிபலிக்கும் விதமாக அவர் எழுதிய பாடல்கள் காலங்கள் கடந்தும் இன்னமும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கின்றன.

திருப்பத்தூர் பக்கம் போகையிலெல்லாம் அந்த மகா கவிஞன் பிறந்த ஊரையும் வீட்டையும் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் வந்து வந்து போனாலும் நேரமின்மை (!) காரணமாக பல ஆண்டுகளாக அது இயலாமலேயே போய் விட்டது. நேற்றைய தினம் பிள்ளையார்பட்டி விசிட் முடிந்து திரும்புகையில் திருப்பத்தூர் நோக்கி வந்தபோது ஒரு மங்கலான கைகாட்டி போர்டு சாலையோரமாக நின்று ‘சிறுகூடல்பட்டி 3 கிமீ’ என வழி சொல்லியது. நிறைய நேரம் இருந்ததால் விசிட் அடித்து விடலாம் என வண்டியை வலதுபுறமாக திருப்பி, இருந்தும் இல்லாதது போலிருந்த ஒரு சாலை வழியே மெல்ல பயணிக்க தொடங்கினேன். சற்று தூரம் போனதும் இடதுபக்கமாக பிரிந்த ஒரு சாலையை உதாசீனம் செய்துவிட்டு நேராக பயணித்து வைரவன் கோவில் வரை சென்றுவிட்டு அப்புறம் தான் குழம்பினேன்.

அங்கே ஒரு வீடு, பச்சை நிற பெயிண்ட் அடித்து பழமையும் நவீனமுமாக இருந்தது. அங்கே இருந்த ஒரு பெரியவரிடம் வழி கேட்டபோது அவர் ‘நீங்க கொஞ்சம் கடந்து வந்துட்டீங்க. அந்த பிரிவு ரோட்ல 2 கி.மீ போனீங்கன்னா போர்டே வெச்சிருப்பாங்க’னு வழி சொன்னார். அதன்படியே திரும்பி வந்து பிரிவு சாலையில் பயணித்தேன். ரோடு சுமாராக இருந்தது. வயல், பறம்பு, காய்ந்த ஓடை, நீரற்ற குளம் என கடந்து மெல்ல ஒரு சிறிதிலும் சிறிதான சிற்றூர் ஒன்றுக்குள் நுழைந்தேன். எந்த வீடு என வழி கேட்க நிதானித்தபோது அந்த போர்டு கண்ணில் பட்டது. ‘கவியரசர் கண்ணதாசன் பிறந்த இல்லம் செல்லும் வழி’

தாரே கண்டறியாத அந்த வலது புற சாலையில் திரும்பினால் யுத்தம் முடிந்த பூமி போல நிசப்தமும் வெறுமையும் சிதிலமான பழமையான வீடுகளும் ஏதோ சோகத்தை சொன்னபடி வரவேற்றன. சற்று தூரம் போனதுமே அழகான நவீனமான வீடு, முகப்பில் 'கண்ணதாசன் சகோதரர்கள் பிறந்த இல்லம்' என்கிற அறிவிப்பு பலகையோடு வரவேற்றது. வீடு நீண்ட காலமாக பாராமரிப்பின்றி கிடப்பதை புதர் மண்டிய முற்றமும் சுற்றுப்புறமும் சுட்டிக்காட்டியது. வீடு பழமையான வீடு அல்ல. பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடாக தான் தெரிந்தது. நவீன வடிவமைப்பில் இருந்தது. அந்த தெருவில் எல்லா வீடுகளும் சிதிலமாகிப்போன பழைய நகரத்தார் பாணி வீடுகளாக காட்சி அளிக்க கண்ணதாசன் அவர்களது வீடு மட்டும் கொஞ்சம் நவீனமாக காட்சி அளித்தாலும், போதிய பராமரிப்பின்றி பூட்டியே கிடப்பதால் பயனற்று போன ஒரு பாழடைந்த இல்லமாகவே இருந்தது.

நான் சென்றது மதியம் மூன்று மணி என்பதாலோ என்னவோ மனித நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது ஊர். ஒரு நினைவில்லம் அல்லது குறைந்த பட்சம் அவரது புகைப்பட வாழ்வியல் கண்காட்சியோ நூலகமோ இருக்கும் என எதிர்பார்த்து சென்ற எனக்கு பெருத்த ஏமாற்றமே. பூட்டி கிடந்த வீட்டின் முன்பாக சற்று நேரம் நின்றுவிட்டு கிளம்பிவிட்டேன்.

சற்று தூரம் அவர் வாழ்ந்த அந்த ஊரை வலம் வரலாம் என நினைத்து ஊரின் உள்ளே பயணித்தேன். ஆதிகாலத்து அஞ்சல் நிலையம் ஒன்று அவரது வீட்டின் பக்கத்திலேயே இருந்தது. அது ஒரு அஞ்சல் நிலையம் என்பதே சற்று ஊன்றி கவனித்தால் தான் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் ஒரு ஓலை குடிசையில் டீக்கடையும், சற்று தள்ளி ஒரு திருமண மண்டபமும் இருந்தது. அங்கிருந்து வெளியேறி வந்தேன்.

வந்த வழியில் திரும்பி பயணித்து மீண்டும் திருப்பத்தூர் போயி திண்டுக்கல் அடைவதை விட வேறு ஏதாவது வழி இருக்கிறதா என அங்கிருந்த ஒரு பெட்டி கடையில் விசாரித்தேன். ‘நீங்க வந்த வழியில் வேணாம். எதிர்த்தாபுல ரோட்ல கொஞ்ச தூரம் போயி இடது கை பக்கம் திரும்பினால் மெயின் ரோடு வரும். அதிலே போனாலே திண்டுக்கல் ரோடு வரும்’னு தெளிவா வழி காட்டினார்கள். அதில் சற்று தூரம் போனதுமே ஒரு ரவுண்டானா வந்தது. அநேகமாக அது தான் சிறுகூடல்பட்டிக்கான பஸ் ஸ்டாண்டாக (!) இருக்கணும். ஒரு மரத்தை சுற்றி வார ஒரு ரோடு இருந்தது. வரும் பஸ்கள் அங்கே வந்து சுற்றி நிற்க ஏற்பாடு இருக்க வேண்டும். அங்கே கவியரசருக்கு ஒரு மார்பளவு சிலை நிர்மாணித்திருக்கிறார்கள்.

இவற்றை தவிர, தமிழகத்தின் சமூக வாழ்வியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அந்த மகா கவிஞருக்கு வேறு எந்த சிறப்பும் அவரது பிறந்த ஊரில் இருப்பதாக தெரியவில்லை. தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்த கவியரசருக்கு தமிழக அரசாவது ஒரு நினைவில்லமும், அருங்காட்சியாகமும் நூலகமும் அமைத்து கொடுத்தால் இனி வரும் தலைமுறையினருக்கும் அவரது பெரும் பெருமை சென்று சேரும் என்கிற ஏக்கத்துடன் விடைபெற்று திண்டுக்கல் வழி வீடு வந்தேன்.

2 comments:

  1. காரைக்குடிப் பக்கம் பயணித்தபோது கவிஞரின் பிறந்த ஊரையும், வீட்டையும் தரிசிக்க நினைத்தும் நேரமின்மையால் முடியாமல் வந்துவிட்டேன். சமீபத்தில் பத்திரிகை நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது "ஐயோ அதை ஏன் கேட்கறீங்க? நாங்கள்ளாம் போய் வந்தோம். ரொம்பக் கண்றாவியாய் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் இருக்குது. மனதுக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கும்" என்றார். இம்மாதிரியான தவறுகளை நிவர்த்தி செய்யத்தான் நாம் எழுதவேண்டியிருக்கிறது. இதைத்தான் 'கவிஞருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை நாம் செய்யவில்லை' என்று நான் எழுதுகிறேன். யாரும் சரியாகப் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறார்கள். நீங்கள் சரிவரவே சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். சம்பந்தப்பட்ட யார் கண்ணிலாவது படுகிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete

Printfriendly