Thursday, October 9, 2014

கருணை தாய்

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்ததும் தொடங்கியது, தமிழக மக்களின் மனநிலையில் ஒரு ஏகோபித்த மாற்றம்.

1991 ஆம் ஆண்டு முதல்வராக பதவி ஏற்றபோது அவரிடம் இருப்பதாக அவரே அளித்த சொத்து பட்டியலுக்கும் 1996 ஆம் ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது அவரிடம் இருப்பதாக அவரே அளித்த சொத்து பட்டியலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் வழக்கின் மைய கரு. இந்த வழக்கு பற்றிய முழு விவரங்களையும் ஊடகங்கள் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கி விட்டதால், நான் மேலே சொன்ன மக்களின் மனநிலை மாற்றம் பற்றி மட்டும் பேசலாம்.

எப்போதோ செய்த குற்றத்துக்கு இப்போது தண்டனையா? வயதான பெண்மணியை சிறையில் தள்ளுவதா? ரூ.66 கோடியெல்லாம் ஒரு விஷயமா? என்றெல்லாம் புலம்பி தள்ளியவர்களின் ஹைலைட்டே, அம்மா போன்ற ஒரு ‘கருணை தாய்க்கு’ தண்டனையா என்பது தான்.
உண்மையிலேயே மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் அந்த அளவுக்கு கருணை பெருங்கடலா என்பதை நினைத்துப்பார்த்தால் நினைவுக்கு வரும் சம்பவங்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்கவையாக....


1. தமிழக அரசின் தலைமை செயலகத்துக்கு என புதிதாக கட்டிடம் கட்டவேண்டும் எனவும், அதை கடற்கரையில் இருக்கும் ராணி மேரி கல்லூரியில் தான் கட்ட வேண்டும் என அடம்பிடித்து இடிக்க முனைந்ததும் (April 2003), கல்லூரியை காப்பாற்ற போராடிய மாணவியரை போலீசாரை விட்டு அடித்து துவம்சம் செய்தது...


2. உடன்பிறவா அன்பு சகோதரி சசிகலாவின் தனிப்பட்ட பிரச்சனைக்காக மதுரை இளம்பெண் செரீனா மீது கஞ்சா கடத்தியதாக வழக்கு புனைந்து சிறைக்குள்ளிட்டு சித்திரவதை செய்தது (June 2003)...3. நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்திரலேகா மீது ஆசிட் வீசி தாக்கி முகத்தை சின்னாபின்னமாக்கியது (1992)...4. இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் செல்லவிருந்த வக்கீல் சண்முகசுந்தரத்தை வழிமறித்து கைகால்களை வெட்டி போட்டது (May 1995)...5. ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்கிற தொனியில் கருத்து சொன்ன முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஆர். வெங்கடராமன் அவர்கள் வீட்டில் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியது ...6. மிக நேர்மையான தேர்தல் ஆணையர் என பெயரெடுத்த திரு. டி.என்.சேசன் அவர்களை அவரது நேர்மையான கருத்துக்காகவே சென்னை தாஜ் ஹோட்டலிலேயே முற்றுகையிட்டு தாக்கியது....7. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கார் டிரைவரான திரு. முத்து அவர்கள் மீதிருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவர் கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தது (July 2001)....8. நீதிபதியான திரு ஏ.ஆர்.லட்சுமணன் அவர்கள் முறையான சட்ட விதிகளின் படி மட்டுமே நடநததால் ஏற்பட்ட கோபத்தில் அவரது மருமகன் குமார் மீதே கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தது....9. தன்னுடைய சொந்த ஆடிட்டர் ராஜசேகரையே, தனது செயல்களை விமர்சித்த குற்றத்துக்காக, போயஸ் தோட்ட வீட்டிலேயே தாக்கி மருத்துவமனையில் அனுமதித்தது...10. சமீபத்தில், அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற புரட்சி தலைவியை ‘ஐ.சி.யு வுக்குள் செருப்பு காலோடு வரவேண்டாம்’ என வேண்டுகோள் வைத்த மருத்துவர் கருணாநிதியை இரவோடிரவாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தது...11. ஆட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து நிலவி வந்த குழப்பமான நிலையையும் நிர்வாக சீர்கெட்டையும் விமர்சித்து தலையங்கம் எழுதிய ‘குற்றத்துக்காக’ இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவினரின் வீடுகளில் போலீசாரை வைத்து துவம்சம் செய்ததோடு, பெங்களூர் வரை அவர்களை விரட்டி சென்று கைது செய்து சிறையில் அடைத்தது....

12. தராசு, நெற்றிக்கண், நக்கீரன் ஆகிய பத்திரிக்கைகளின் விமர்சனங்களை தாங்க முடியாமல் அந்த பத்திரிக்கை அலுவலகங்களை எல்லாம் சூறையாடியது...

13. அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை கபளீகரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த அடையாறு பதிவாளரை பந்தாடியது.......


14. அமிர்தாஞ்சன் அதிபர், கங்கை அமரன் ஆகியோரது வீடுகள், சிறுதாவூர் நிலம், கொடநாடு எஸ்டேட் போன்ற பல சொத்துக்களை மிரட்டி அடி மாட்டு விலைக்கு வாங்கி அவர்களை விரட்டியது...


15. அதிமுகவினர், அம்மாவின் கைதை எதிர்த்து தருமபுரியில் மூன்று மாணவிகளை பஸ்சோடு எரித்த சம்பவத்தை (September 2001) நடத்திய தனது கட்சியினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக வழக்கை விசாரிப்பதற்காக அரசு தரப்பு வக்கீலையே ஐந்து ஆண்டுகள் நியமிக்காமல் விட்டு வழக்கை இழுத்தடித்தது...


16. போனஸ் கேட்ட அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாய்ச்சி ஆயிரக்கணக்கான ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்ததுடன் மருத்துவ காரணங்களுக்காக அதில் சிலர் கேட்ட ஜாமீனையும் எதிர்த்து சிறைக்குள்ளேயே சிலரை சாகவிட்டது...

17. சம்பள உயர்வு போனஸ் பிரச்சனையில் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்களை கைதும் செய்து பணி நீக்கமும் செய்ததுடன்.. சிறையில் அவர்களை தள்ளி சித்திரவதை செய்தது....

18. திமுக ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக மக்கள் நல பணியாளர்கள் 13000 பேரை ஒரே கையெழுத்தில் பணிநீக்கம் செய்து அவர்கள் குடும்பங்க்களை அவல நிலைக்கு ஆளாக்கியது....

19. கிராமத்து மாணவர்களுக்கும் கல்வி வசதி அளித்துக்கொண்டிருந்த ஓராசிரியர் பள்ளிகளை ஒரே உத்தரவில் மொத்தமாக மூடி, பல்லாயிரக்கணக்கான மானவர்களின் பதிப்பு வசதியை மறுதலித்தது....

20. கிராமத்து உழவர்களின் விளைபொருட்களை வியாபாரப்படுத்தி பொருளாதார நிலையை உயர்த்த உதவிய உழவர் சந்தைகளை மூடி அவர்களது வாழ்வாதாரத்தை நாசமாக்கியது....கிராமங்ககளுக்கு சேவை செய்துவந்த சிற்றுந்து வசதிகளை ரத்து செய்தது

என பல பல நிகழ்வுகள் நாம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது...

இவற்றில் சில அவரது நேரடி கண்காணிப்பில் நடக்கவில்லை எனினும், சம்பவங்களை அவர்களது இயக்கத்தினர் நடத்தியபோது அதை கண்டிக்கவும் இல்லை, நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனினும் சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் உத்தரவுகள் (பால்விலை, மின்கட்டணம், பஸ் கட்டணம், உழவர் சந்தை மூடல், ஓராசிரியர் பள்ளி மூடல், சிற்றுந்து சேவை ரத்து, சமச்சீர் கல்வி குழப்படிகள், அரசு ஊழியர் கைது, மக்கள் பணியாளர் நீக்கம்....) அவரது முடிவின் படியே நடந்தது. அவரது பல முடிவுகள் மக்களுக்கும் சட்டத்துக்கும் எதிரானது என நீதிமன்றத்தால் குட்டு வைக்கப்பட்டு, அவரது உத்தரவுகளை நீதிமன்றமே ரத்து செய்து இருக்கிறது. அந்த பட்டியல் இன்னும் நீளம்.
ஏதோ என் நினைவுக்கு சட்டென்று வந்த நிகழ்வுகளை மட்டுமே இங்கே தொகுத்திருக்கிறேன் என்பதிலிருந்து அத்தகைய கருணை நிகழ்வுகளை விரிவாக எழுத இந்த பதிவு போதாது என்பது தங்களுக்கு புரிந்திருக்கும்.

இப்படியான கருணை தாய், தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களுக்கு எதிரான வழக்கில், சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், தண்டிக்கப்பட்டதை எதிர்த்து தான் தமிழகம் முழுவதும் மக்கள் 'தானாக முன்வந்து' போராட்டங்களும் கடையடைப்பும் பந்தும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அம்மாவுக்கே தண்டனையா என கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அய்யோ பாவம் என பரிதாப பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும் நினைக்கையில் நெஞ்சு விம்மி கண்ணில் நீர் மல்குகிறது.

1991-96 காலகட்டங்களில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி போன்றதொரு காலகட்டத்தில் வாழ்ந்து நொந்தவர்களுக்கு தான் கருணையின் ‘வீரியம்’ புரியும்.

இந்த வழக்கிலும் கூட தன்னுடைய தவறுகள் தெளிவாக நிரூபிக்கப்பட்டதுடன், இதிலிருந்து மீள வழியே இல்லை என்றானதும், வழக்கை எந்தெந்த வகையிலெல்லாம் இழுத்தடிக்க முடியுமோ அந்தந்த வகையிலெல்லாம் இழுத்து அடித்து கடைசியில் உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு கடுமையான கண்டனங்களை வழங்கி தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இந்த வழக்கை நடத்தியதால் தான் நேர்மையான தீர்ப்பு வந்திருக்கிறது..

தீர்ப்பிலேயே அவர் அரசுக்கும், சட்டத்துக்கும், பொதுமக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் இழைத்த கொடுமைகளை விரிவாக சொல்லியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு மக்கள் பணத்தை கையாடல் செய்திருக்கிறார்கள், அதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியும், தமிழக பொதுமக்களின் பொருளாதாரமும் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பதும் எல்லோராலும் ஆதாரங்களுடன் தெளிவு படுத்த பட்டிருக்கிறது..


இத்தனைக்கு பிறகும், இவ்வளவையும் அறிந்த பிறகும், அவரை அப்பாவி என நம்புவதும், கருணை கடல் என போற்றுவதும், அவருக்காக பரிதாபப்படுவதுமான புத்திசாலி பொதுமக்களை பெற்றிருப்பது தான் மாண்புமிகு புரட்சி தலைவி பொன்மன செம்மல் இதய தெய்வம் காவிரி தந்த கலைசெல்வி கருணை தாய் அம்மா அவர்கள் செய்திருக்கும் பெரும் சாதனை.

பின் குறிப்பு:

நான் மேலே குறிப்பிட்டவை எல்லாம் என் சிற்றறிவில் நினைவில் நின்றவைகளின் சிறு தொகுப்பே. அவரது ஆட்சி காலத்தில் நடந்த பல விஷயங்களையும் பலரும் தொகுத்திருக்கிறார்கள். எனது இந்த பதிவை படித்தபின், அப்படியான இரு தொகுப்புகளை எனது நண்பர்கள் எனக்கு அனுப்பி வைத்தனர். அவை கீழே உங்கள் பார்வைக்காக.
மிகுந்த பொறுமையும், அறிந்துகொள்ள ஆவலும் அதற்குரிய நேரமும் இருந்தால் இந்த செய்திகளையும் முழுமையாக படித்து அறிந்து பயனடையுங்கள்.1. நடத்திய சம்பவங்களின் முழு தொகுப்பு. விரிவாக, கேட்டகரி வாரியாக.:
Click Here
2. அதிகார துஷ்பிரயோகம் மூலம் மிரட்டி சேர்த்த சொத்துக்களின் ஒரு பிரிவு பற்றிய தொகுப்பு.:Click Here

5 comments:

 1. Right article at right time..! try to correct the spelling mistakes

  ReplyDelete
 2. மோடியின் மீதும்... கருணாநிதியின் மீதும் இருக்கும் குற்றச்சாட்டை ஒப்பிட்டால் ஜெயலலிதாமீது இருப்பது ஒன்றுமே இல்லை. ஓட்டைச் சாக்கை வைத்து குண்டிதுடைக்கும் வேலை எங்களிடம் ஆகாது. யார் உத்தமர் என்று விவாதிக்க ரெடியா? இந்திய அரசியல் வியாதிகள் மீது கணக்கற்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதில் ஒருவர் மட்டும் குற்றவாளி என்றால் அது பகை தீர்க்க செய்யப்பட்ட ஒரு வஞ்சக நாடகம்.

  ReplyDelete
 3. நூலகத்தை மாற்ற முயற்சித்தது மிக வேதனை தந்த ஒன்று . எதாவது புதிதாக மக்கள் வியக்கும் வண்ணம் செய்ய திறன் இல்லாமல் மற்றவர் செய்து வைத்ததை இடிப்பது அல்லது மாற்றுவது மிக அவலம். உழைப்பு இல்லாமல் வெறும் வாய் பேச்சு பேசி என்ன சாதிக்க முடியும். வெறும் காலில் விழும், கை தட்டும் அல்லக்கைகளை வைத்து கொண்டு எதாவது முடியுமா .அவர்கள் சொந்தமாக சிந்திக்க திறன் அற்றவர்கள் . அவர்களை வைத்து கொண்டு எப்படி நாட்டை முன்னேற்ற முடியும்.

  ReplyDelete
 4. கண்ணகி சிலையை அகற்றியதால் ஜெயலலிதா மீது சாபம் விழுந்துவிட்டது.
  காளையார்கோயில் கோபுரம் பற்றி எரிந்தது ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என்று அந்தக் கடவுளே கொடுத்த வரத்தின் அறிகுறி.
  தமிழ்க்கல்வியைக் குழி தோண்டிப் புதைக்க அடிகோலிய ஜெயலலிததாவுக்கு தமிழ் ஆன்மாக்களின் பரிசுதான் இந்த சிறை.

  ReplyDelete
 5. அருமையான பதிவு.

  ReplyDelete

Printfriendly