Saturday, October 11, 2014

இனி அதிமுக பயணிக்க வேண்டிய பாதை

தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்றால் எல்லோரும் சட்டென சொல்வது திராவிட முன்னேற்ற கழகம் என்பதாக தான் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை தமிழகத்தின் மிக பெரிய அரசியல் இயக்கம் மட்டுமல்ல மிக சக்திவாய்ந்த அரசியல் இயக்கமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்.

அதிமுக அளவுக்கு பிரச்சனைகளையோ, துரோகங்களையோ, அடக்குமுறைகளையோ, ஏமாற்றங்களையோ, சவால்களையோ, வெற்றிகளையோ, சந்தித்த இயக்கங்கள் தமிழகத்தில் இல்லை. 1970 களில் திமுக அதிமுகவை மொத்தமாக அழித்தொழித்துவிட நடத்திய அடக்குமுறைகள் மிக பிரசித்தம். எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களை வெளியிடமுடியாமல் தடுத்ததிலிருந்து, அதிமுகவுக்கு ஆதரவாக கருத்துக்கள் எழுதிய பத்திரிக்கைக்காரர்களை (மக்கள் குரல், துக்ளக் போன்றவை) துவம்சம் செய்ததுவரை அத்தனை விதமான அதிகார துஷ்பிரயோகங்களையும் திமுக செய்தது. ஒருவேளை அப்படியெல்லாம் செய்யாமல் விட்டிருந்தால் அதிமுகவும் ஒரு சாதாரண கட்சியாகவே இருந்திருக்கக்கூடும். ஆனால், இப்படியான எதிர்ப்புகள் தான் அதிமுகவை மிக வலுவான இயக்கமாக, கொள்கை பிடிப்புள்ள தொண்டர்களின் பாசறையாக மாற்றியது என்று கூட நான் அவ்வப்போது கருதிக்கொண்டதுண்டு.கலைஞருக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் அனைத்து குக்கிராமங்களுக்கும் பயணித்து கட்சி கிளைகளை அமைத்தது எம்.ஜி.ஆர் தான். அந்த வலைப்பின்னல் கட்சிக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய பலம். இந்த வலைப்பின்னல் பலம் தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர வேறு எந்த கட்சிக்கும் இல்லை. மதிமுகவுக்கு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அதனை அண்ணன் வைகோ சரிவர கையாள தெரியாமல் கோட்டைவிட்டுவிட்டார். மற்ற கட்சிகள் எல்லாம் வட்டார பிராந்திய கட்சிகள் தான்.


1977 ஆம் ஆண்டு அரியணையில் அமர்ந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிர்த்திருந்த வரையில் இந்த மாநிலம் அவருடைய ஆளுகையின் கீழ் இருந்தது. அதற்கு முன்பாக ஆட்சியில் இருந்த கலைஞர் அவர்கள் ஆசை ஆசையாக கட்டி திறப்புவிழா காணாத வள்ளுவர்கோட்டத்தை திறந்து வைத்து புரட்சி தலைவர் பேசும்போது “இவ்வளவு அருமையான கட்டிடத்தை கட்டிய கலைஞர், இதை இன்னமும் பார்க்கவில்லை. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் வள்ளுவர் கோட்டத்தில் நுழைவேன் என கலைஞர் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால் அது நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது” என மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசினார். (கடைசியில் 1989 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொறுப்பு ஏற்கும் விழாவை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து அப்போது தான் அந்த கட்டிடத்தையே அவர் முழுமையாக பார்த்தார் என்பதெல்லாம் தனி கதை.)
அப்படி எம்.ஜி.ஆருக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை வர காரணம், தமிழக மக்கள் தன் மீதும் தன் இயக்கத்தின் மீதும் வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கையும், தன் கட்சி தொண்டர்களின் அபரிமிதமான விசுவாசத்தின் மீதும் திறமையின் மீதும் அவருக்கிருந்த நம்பிக்கையும் தான்.


கட்சி தலைவர் தொண்டன் என்கிற பேதமேல்லாம் இல்லாமல் தோழனை போல தோளோடு தோள் நின்று தொண்டர்களை வழி நடத்தியதாலும், தொண்டர்களின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றி தந்ததாலும், தொண்டர்களையும் கட்சியையும் தன் உயிரினும் அதிகமாக நேசித்ததாலும், அடிமட்டத்தில் இருந்து உழைக்கும் தொண்டனின் வியர்வையால் தான் தன்னுடைய இந்த பெருமைக்குரிய உயர்வு நிலைத்து நிற்கிறது என்று உணர்ந்ததாலும் தான் எம்.ஜி.ஆர், மறைந்து இத்தனை ஆண்டு காலம் ஆன பின்னும் கட்சி தொண்டனுக்கும், கடைசி நிலை மக்களுக்கும் பெரும் தலைவனாக இன்னமும் ஆட்சி செய்ய முடிகிறது.


அதிமுக தொண்டனுக்கும் மற்ற தொண்டனுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், மற்ற கட்சிகளில் உள்ள தொண்டர்கள் தலைவரை நம்பி இருக்கிறார்கள். அதாவது எனக்கு இன்னாரை பிடிக்கும், அவர் இன்னாரின் கோஷ்டியில் இருப்பதால் நானும் அந்த கோஷ்டியில் இருக்கிறேன். அவர் எந்த கட்சிக்கெல்லாம் மாறுகிறார்களோ அந்த கட்சிக்கெல்லாம் நானும் மாறுகிறேன். மற்றபடி எனக்கென்று தனியான கோட்பாடெல்லாம் இல்லை என்பது தான் பெரும்பாலான கட்சி தொண்டனின் மனவோட்டமாக இருக்கிறது. ஆனால் அதிமுகவில் அப்படி அல்ல. அதனால் தான் அங்கே கோஷ்டிகள் இல்லை. அதிமுக தொண்டனை பொருத்தவரை எம்.ஜி.ஆர் மட்டும் தான் ஒரே தலைவர். கட்சி மட்டும் தான் அங்கே முதன்மையான விஷயம். மற்ற தலைவர்கள் எல்லாம் அப்புறம் தான்.


தலைமையை துதிபாடி காரியம் சாதித்துக்கொள்ளும் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் எந்த இரண்டாம் கட்ட தலைவருக்கும் தனியாக துதிபாடிகளாக கடைநிலை தொண்டர்கள் இருப்பதை அதிமுகவில் காண முடியாது. கட்டுபாடு உடைய கட்சி என சொல்லப்படுகிற திமுகவில் கூட, தொண்டர்களிடையே வேறுபாடு இருக்க கண்டிருக்கிறேன். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களுக்கெல்லாம் ஒரே பிடிமானம் கட்சி என்பது தான்.


ரத்தமும் வியர்வையும் சிந்தி தமிழகம் முழுவதும் கட்சியை நிலைநிறுத்தியவர்களுக்கு உரிய முக்கியத்துவமும் மரியாதையும் அங்கிகரமும் அதிமுகவில் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தாலும், பிற கட்சிகளிலிருந்து ஒட்டுண்ணிகள் போல வந்து சேர்ந்து பதவியும் அதிகாரமும் துதிபாடல்கள் மூலம் பெற்று மமதையோடு வலம் வரும் பல தலைவர்களை கண்டு மனம் வெதும்பினாலும், தலைமை தங்களை வெளிப்படையாக புறக்கணிப்பதை கண்டு இயலாமையால் மறுகினாலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டன் எப்போதுமே கட்சியை விட்டுக்கொடுத்ததில்லை. தான் நேசித்த தலைவனை கூட தூக்கி ஏறிய துணிந்துவிடக்கூடியவன். கட்சியை எந்த நேரத்திலும் தலை குனிய விடமாட்டான்.


எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி ஜானகி அம்மையார் சிலரது தூண்டுதலின் பேரில் கட்சியையும் ஆட்சியையும் தலைமை ஏற்று நடத்தியபோது, அவர் அதுவரை தங்களால் நேசிக்கப்பட்ட தலைவி என்பதையும் மறந்து அவருக்கு எதிரணியில் தொண்டர்கள் நின்றதற்கான காரணமே, கட்சியை அன்றைய சூழலில் ஜானகி அம்மையாரை விட ஜெயலலிதாவே காப்பாற்ற கூடியவர் என்கிற நம்பிக்கையால் தான். அதனை சற்று தாமதமாக புரிந்து கொண்ட ஜானகி அம்மையாரும், தொண்டர்களின் அந்த முடிவுக்கு பின்னர் சம்மதித்தார்.


அதிமுக தொண்டனை பொறுத்தவரை, கட்சி மட்டும் தான் பிரதானம். ஒவ்வொரு காலகட்டத்தில் யார் அந்த கட்சியை சிறப்பாக வழிநடத்துவார்களோ அவரை ஆதரிப்பானே ஒழிய, யார் மீது அவனுக்கு தனிப்பட்ட அபிமானம் இருக்கிறதோ அவர்களிடத்தில் கட்சியை ஒப்படைக்கும் வழக்கம் அவனுக்கில்லை.

மிக திறமையான தலைவர்கள், மிக பிரபலமான தலைவர்கள் எல்லாம் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு அதன் காரணமாக வெளியேற்றப்பட்ட போதெல்லாம் அதிமுக தொண்டன் அவர்களை புறக்கணித்து வந்ததே வரலாறு.

ஜெயலலிதா தலைமையில் முதல் முறை ஆட்சி நடந்து பல பல முறைகேடுகள் வெளியான போது, அதற்கடுத்த தேர்தலில் (1996 ஆம் ஆண்டு) அதிமுக தொண்டர்கள் பலரும் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. காரணம், அவனது கட்சிக்கு அவமானம் தேடி தந்ததற்காக அவன் தலைமைக்கு அவன் கொடுத்த தண்டனை அது. பின்னாளில் கட்சி தொண்டர்களை அரவணைத்து சென்றதாலும், பிற்கால ஆட்சியில் நல்லதை செய்ய உறுதி அளித்ததாலும் தான் அவன் மீண்டும் அதே தலைமையை ஆதரித்தான்.

இப்படியான ஒரு அபூர்வ தொண்டர்படை வேறு எந்த இயக்கத்திலும் நான் கண்டதில்லை. அவர்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் மட்டும் தான் தலைவர். அதிமுக தான் அவர்களது இயக்கம். அதை அவ்வப்போது யார் சிறப்பாக வழி நடத்துவார்களோ அவர்களை ஆதரிப்பான். அவர்கள் தவறு செய்தால் தண்டிப்பான்.

இப்போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா செய்த அனைத்து குற்றங்களும் விரிவாக தெளிவாக ஆதாரபூர்வமாக சட்டம் தோலுரித்து காட்டிய பின், ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்குள்ளும் தாங்கவொண்ணா அவமானமும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத வேதனையும் இருப்பது இயற்கை தான். இத்தனை காலமும் போயும் போயும் இவர்களுக்காகவா கஷ்டபட்டோம் என வெதும்புவதையும் தவிர்க்கமுடியாது.

தொண்டர்களிடமிருந்து மிக விலகி இருந்த தலைமை, அடிமட்ட தொண்டர்களின் துயரங்களை அறிந்து கொள்ள முயலாத தலைவர், அவசர அவசியமான காலகட்டத்தில் கூட தலைவரை சந்திக்க முடியாத தொண்டர்களின் இயலாமை, கட்சி அலுவலகத்துக்கு கூட வராத பொது செயலாளர் என பல விதங்களிலும் மனம் வெறுத்து போன அதிமுக தொண்டனுக்கு, இப்போது பட்டியல் பட்டியலாக வரும் சொத்து கணக்கும், வன்முறை மூலம் கைப்பற்றிய மாளிகைகளும், சொந்த தேவைக்காக சேர்த்துக்கொண்ட செல்வங்களின் கணக்கும் வெறுப்பை மட்டுமே தந்ததில் வியப்பில்லை. இது நாள் வரையும் இது வெறும் அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட பொய் வழக்கு என்கிற பிரச்சாரத்தை கூட நம்பிவந்தவன், நீதிமன்றம் எடுத்துக்காட்டிய ஆதரங்களால் தெளிவடைந்து உண்மை உணர்ந்து அமைதியாகிவிட்டான். புரட்சி தலைவர் தனது தொண்டர்களிடம் எப்போதும் சொல்லும், “அநியாயத்துக்கு எப்போதும் எந்த விதத்திலும் துணை போகாதே. அதை யார் செய்திருந்தாலும் சரி. அதே சமயம் நியாயத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாவது துணை நில்” என்கிற அறிவுரை எல்லா தொண்டனுக்கும் வேதம். இப்போது அவனுடைய தேடல் எல்லாம் ஆட்சியும் கட்சியும் அதிமுகவின் பெருமையும் நிலைநாட்டப்படவேண்டும், அது யாரால் முடியும் என்பது மட்டுமாக தான் இருக்கிறது.

அதிமுகவுக்கு இப்போது நிறைய பெரும் பொறுப்புக்கள் இருக்கின்றன. தமிழகத்தில் உருப்படியான கட்சிகள் எதுவும் இப்போது இல்லை என்பதை பயன்படுத்தி பாஜக உள்நுழைய முனைவதை தடுப்பதுடன், பிற கட்சிகளும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள்ளாக சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் நிர்வாகம் சீர்கெட்டு கிடப்பதும் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதும் கண்கூடு. முதலில் அதை எல்லாம் சீர் செய்யவேண்டும். மக்களுக்கு ஆட்சி மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சி பணிகள், தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் கடந்த மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்படவில்லை. அவற்றை உடனடியாக செயல்படுத்தி, வளர்ச்சி விகிதத்தில் 14 ஆம் இடத்துக்கு விழுந்துவிட்ட தமிழகத்தை இரண்டாண்டுகளுக்குள் முதல் 6 இடங்களுக்குள்ளாவது கொண்டுவரவேண்டும்.


நல்லவேளையாக கல்வியும், திறமையும், விஷய ஞானமும் உடைய திரு. பன்னீர் செல்வம் அவர்கள் கட்டுப்பாட்டில் இப்போது ஆட்சி இருக்கிறது. வந்த சில நாட்களிலேயே அரசு நிர்வாகத்தை முடுக்கி விட்டதும், சீர்கெடவிருந்த சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தி உடனடியாக இயல்புநிலைக்கு கொண்டுவந்ததும் புதிய நம்பிக்கையை தருகிறது.

அவர் அடுத்தபடியாக வெளியிட்ட அறிக்கையில் ‘ அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன் மீதான வழக்குகளை சட்டத்தின் துணை கொண்டு வாதாடி வெற்றி பெற்று வருவார். பொதுமக்களும் கழக தொண்டர்களும் அமைதி காத்து தமிழக வளர்ச்சிக்கு உதவவேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருப்பது ஒரு புதிய நம்பிக்கையை எனக்குள் நட்டு வைக்கிறது. அரசியலை தூக்கி ஓரம் வைத்துவிட்டு தமிழக வளர்ச்சியை பற்றி அவர் சிந்திப்பதாக அந்த அறிக்கை எனக்கு படுகிறது.

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்த பன்னீர் செல்வம் அவர்கள் அடிமட்ட கட்சி பணிகளிலிருந்து மேலே வந்தவர். நகரசபை தலைவராக பணியாற்றியவர். தமிழக அரசின் பொதுப்பணி துறை, நிதி துறை ஆகியவற்றை கையாண்டவர். எளிமையானவர். கிராமத்திலிருந்தபோதே பொதுமக்களின் / கட்சி தொண்டனின் துயரங்களை முழுமையாக அறிந்தவர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் இந்த ஆட்சியை மக்களுக்கானதாகவும், தொண்டனுக்கானதாகவும் மாற்றி காட்டினால் எதிர்வரும் தேர்தலில் வெற்றி மாலை அவரிடமே ஓடி வரும் என்பதில் சந்தேகமில்லை.ஒவ்வொரு தொண்டனும் எதிர்பார்ப்பது, தவறு செய்தவர்களை புறக்கணித்துவிட்டு கழகம் தன்னுடைய பழம் பெருமையையும் கவுரவத்தையும் காப்பாற்றி தலை நிமிர்ந்து மீண்டும் புரட்சி தலைவர் புகழ் பாடும் ஆட்சியை தரவேண்டும் என்பது தான்.அத்தகைய பெரும் பொறுப்பு மாண்புமிகு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு இப்போது இருக்கிறது.

மக்களையும், தொண்டனையும் அவர் ஏமாற்றமாட்டார் என்பது அவரது சமீபத்திய செயல்பாடுகள் கட்டியம் கூறுகின்றன.

காத்திருப்போம்!

2 comments:

 1. அதிமுக என்றால் முதலில் எம்ஜியார்...பின் ஜெயலலிதா....அடுத்து யார்? அது பன்னீர்செல்வமாக இருக்கமுடியாது. வருகின்றார் ஒரு புது முகம்...... நாம் முன்பே அறிந்த பழைய முகம்... ஆனால் கட்சிக்கு புதுமுகம்....

  ReplyDelete
 2. உங்கள் பார்வையில் திமுகவை விட அதிமுகா அதிக  சக்தி வாய்ந்த அரசியல் இயக்கமக தென்படலாம் ,ஆனாலும் நீங்கள்  சொல்வதுபோல் யாரும் அதிமுகவை திமுகவை விட சக்தி வாய்ந்த இயக்கமாக சொலவதில்லை ஏன் ?
  காரணம் அங்கு அரசியல்  கொள்கைகளோ அதனை அடையும் நோக்கங்களொ இருந்ததில்லை , வெறும் தனிநபர் ஸ்துதி மட்டுமே  இருந்தது . ஒரு  மாபெரும் அரசியற் கட்சி  லட்சக்கணக்கான தொண்டர்களினதும் வாக்களர்களினதும் அரசியற்பலத்தை கடந்த 40 வருடங்களாக   வீணடித்ததுதான் வரலாறு , 
  இப்போது தனிநபர் ஸ்துதியை எம்ஜீஆரை விட மேலும் மேலும் வளர்த்தெடுத்த  தலைவி சிறையில்.  வெளியே வந்தாலும்  10 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.இரண்டாம்நிலைத்தலைவரகள் என்று யாரும் இல்லை .இந்த நிலையில் தனிநபர் ஸ்துதிக்கு பெயர்பெற்ற இந்த கட்சியின் எதிர்காலம் இருண்டதாகத்தான் இருக்கப்போகிறது .

  ஒருவேளை இராவணன் அவர்கள் மறைமுகமாக குறிப்பிட்டதுபோல் நடராஜன் அவர்கள் தலைமையேற்றால்  கட்சிக்கு புத்துயிர் கிடைக்கலாம் ,
  அது கூட எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை..

  ReplyDelete

Printfriendly