இன்னும் ஒரு பள்ளி வேன்விபத்து... வேதாரன்னியத்தில்...
பள்ளி வேனை ஒட்டி வந்த டிரைவருக்கு லைசன்ஸ் கிடையாதாம்! செல்போன் பேசிக்கொண்டு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது..விபத்து நடந்தவுடன் டிரைவர் ஓடிவிட்டார்....
கிளீனர் தான் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார்... வேனுக்குள் இருந்த ஆசிரியை சுகந்தி வேனுக்குள் இருந்து வெளிவர முடியாத சூழலிலும் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை வெளியில் அனுப்பி கிளீனர் உதவியுடன் காப்பாற்றி இருக்கிறார்...
பதினோரு குழந்தைகளை தான் அவரால் காப்பாற்ற முடிந்தது....அவருக்கு நீச்சல் தெரியாததால், அவரும் அந்த குலத்திலேயே மூழ்கி இறந்து விட்டார்.... தனது உயிரை பொருட்படுத்தாமல், தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் குழந்தைகளை உயிரைக்கொடுத்து காப்பாற்றிய அந்த இளம் பெண்ணை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அது தான் வீரம்... அது தான் பாராட்டப்படவேண்டிய மனித பண்பு... (நேரம் கிடைத்தால் ஒரு நடை அவர்கள் வீட்டுக்கு சென்று வரவேண்டும் என எண்ணுகிறேன். எதோ நம்மால் ஆன ஆறுதல்!)
கிளீனர் கதை இன்னும் வித்தியாசமானது...அவர் குழந்தைகளை ஒற்றை ஆளாக காப்பாற்றி கொண்டு இருந்தாராம்... அந்த வேனில் தனது குழந்தையை ஏற்றுவதற்காக வந்திருந்த இன்னொரு பெண்ணும் குளத்தில் இறங்கி கிளீனருடன் சேர்ந்து குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார்...கூட்டம் சேர துவங்கியதும், எங்கே எல்லோரும் அந்த கிளீனரை அடித்து விடுவார்களோ என பயந்து அந்த பெண் கிளீனரை பத்திரமாக ஒரு வீட்டில் அடைத்து விட்டார்.....
இத்தனைக்கும் அந்த கிளீனர் தொடர்ந்து குழந்தைகளை காப்பாற்றவேண்டும் என்று சொன்னாராம்.... ஆனாலும் அந்த பெண், கிளீனரை பத்திரமாக பாதுகாத்து போலீஸ் வந்ததும் அவர்களிடம் கிளீனரை ஒப்படைத்து இருக்கிறார்... பாதுகாப்பாக!
தஞ்சை பெண்களின் வீரம் பற்றி குந்தவை நாச்சியார் சொல்வார்... இங்கே இயல்பாகவே துணிச்சல் எங்களுக்கு வருகிறது என்று! உண்மை தான் போல!
சுகந்தியை பற்றி படிக்க படிக்க நெஞ்சு விம்முகிறது!
அவருக்கு 21 வயது தான் ஆகிறது.. பட்டதாரி... திருமணம் ஆகவில்லை! எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த பள்ளிக்கு அந்த வேனிலேயே சென்று வருகிறார்.... குறைந்த சம்பளம் தான்!
அவருடன் குளத்தில் இறந்த குழந்தைகள் பெரும்பாலும் அவரது கிராமத்தை சார்ந்தவர்கள் தான்..... பதினோராவது குழந்தையை காப்பாற்றும்போது அந்த குழந்தை அவரது கை நழுவி குளத்துக்குள் ஆழத்தில் சென்றுவிட்டதாம்.... இவர் நீச்சல் தெரியாத நிலையிலும் உள்ளே குனிந்து அந்த குழந்தையை வெளியே எடுத்து இருக்கிறார்..... அதற்குள் இவர் மூச்சு திணறி.... எல்லாம் முடிந்து விட்டது.... ஆனால் அந்த குழந்தையை காப்பாற்றி விட்டார்!
எல்லோருக்கும் செல்ல பெண்ணாக அந்த கிராமத்தில் வளம் வந்த சுகந்தி இப்போது இல்லை! எனினும் தன்னால் ஆன செயலை எல்லாம் இறுதி வரை செய்து விட்டு தான் மறைந்து இருக்கிறார்!
தன்னை தானே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொள்கிறவர்களை எல்லாம் வீரமானவர்கள் என்று பேசும் தமிழகம், மற்றவர்களை உயிரோடு எரிப்பவர்களை தீரர்கள் என்று பேசும் தமிழகம், இந்த சின்ன பெண்ணின் வீரத்தை, தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிக்கவா போகிறது????
ஒரு திருத்தம்!
ReplyDeleteஎனக்கு கிடைத்த முதல் கட்ட தகவல்களில் சுகந்தியால் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் பதினோரு பேர் என்று சொல்லப்பட்டது. விபத்து நடைபெர்றவுடனேயே இந்த பதிவு பதியப்பட்டதால், விவரத்தை உடனடியாக சரிபார்க்க இயலாமல் போனது.
இப்போது அதிகாரப்பூர்வமாக கிடைத்திருக்கும் தகவல்படி, சுகந்தியால் காப்பாற்ற பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு தான்.
அது தவிர இன்னும் இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் காப்பாற்ற முனைந்ததில் அந்த இரு குழந்தைகளும் சுகந்தியும் மரணம் அடைந்தனர். இரண்டு குழந்தைகளையும் தன இரு கைகளிலும் பிடித்தபடியே தான் அவர் இறந்திருக்கிறார்... மூன்று உடல்களையும் ஒன்றாக தான் மீட்கமுடிந்தது... பிரிக்கப்படாமல்!
எண்ணிக்கையில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்!
மேலும், எனது பதிவின் அடிப்படையில், பதிவு வெளியான மறுநாள் மதிமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையிலும் பதினோரு பேர் என்று தவறுதலாக வந்துவிட்டது... அதனையும் நான்கு பேர் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்!