Sunday, June 10, 2012

2ஜியும் சுரங்க ஊழலும் – ஒரு ஒப்பீடு!

ந்தியாவையே ஸ்தம்பிக்கவைத்த ஒரு ஊழலாக உருவகப்படுத்தப்பட்டது 2ஜி எனப்படும் ஸ்பெக்டிரம் ஊழல். CAG ஒரு மதிப்பீடான உத்தேச கணக்குப்படி, 2ஜி அலைகற்றைகளை நேரடியாக ஒதுக்கீடு செய்யாமல் ஏலம் விட்டிருந்தால், ஏலதாரர்களாக பல பேர் வந்திருந்தால், அவர்கள் அதிகமான தொகைக்கு ஏலம் கேட்டிருந்தால், ஒருவேளை அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் வரைக்கும் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் என ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் அந்த தொகையை ஊழல் என திரிபுசொல்லி, அந்த துறையின் அப்போதைய அமைச்சர் அ..ராசா பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டு, 15 மாதங்களுக்கு பின் இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையில், புதிதாக அதே CAG இன்னொரு மதிப்பீடான உத்தேச கணக்கின் படி, மத்திய அரசின் நிலக்கரி சுரங்க துறை (இது பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது) சுரங்கத்துக்கான அனுமதியை ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்த வகையில் சுமார் 1,80,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஒரு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.

இந்த இரண்டு ஊழல்களும் மேம்போக்காக பார்க்கும்பொழுது ஒரே மாதிரியான வருவாய் இழப்பு போன்று தெரிந்தாலும், அடிப்படையில் வெவ்வேறானவை மட்டுமல்ல, இவை தொடர்பான நடவடிக்கைகளும் நியாயமற்றவை என்பது அதன் விவரங்களுக்குள் சென்று பார்க்கையில் தெளிவாக தெரியும்.

2G பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் ஓரளவு விளக்க முற்பட்டிருக்கிறேன். அதை ஒரு நடை இங்கே ( 2G கைது சரியா? ) படித்துவிட்டு வந்தால், மேற்கொண்டு சொல்லப்படும் விஷயங்கள் கொஞ்சம் எளிதாக விளங்கும்.

2G யை பொறுத்தவரை, அது ஏற்கனவே இருந்த ஒரு தொழில்நுட்பம், ஒரு முறை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் அந்த அலைக்கற்றைகள் ஏற்கனவே 1997, 2001 ஆகிய காலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன, அதன் மிச்சம் மீதியை தான் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள், எனவே புதிதாக விதிமுறைகளை புகுத்தமுடியாது. ஸ்பெக்டிரம் என்கிற அலைகற்றைகளின் மதிப்பு என்ன என்பதை தெளிவாக கணக்கிட முடியாது. தொலைபேசி என்பது நேரடியாக மக்கள் பயன்படுத்தும் விஷயம் என்பதால் கொள்கை ரீதியாக மலிவான விலையில் அந்த வசதி கிடைப்பதற்காக சலுகைகளை வழங்க அரசுக்கு உரிமை இருக்கிறது. அதன் விளைவாகவே நிமிடத்துக்கு 16 ரூபாய் வரை கட்டணமாக இருந்த உள்ளூர் அழைப்புக்கள், இப்போது நிமிடத்துக்கு 10 பைசா என்கிற அளவிற்கு வந்திருக்கிறது என்கிற உண்மை அனைவரும் அறிந்த ஒன்றே.

நிலக்கரி சுரங்கம் விஷயமே வேறு.

நிலக்கரி என்பது நமது இயற்கை வளம். ஒவ்வொரு சுரங்கத்திலும் எந்த அளவுக்கு நிலக்கரி இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியாக கண்டு கணக்கிட முடியும். அதன் சந்தை மதிப்பு என்ன என்பதும் நமக்கு தெரியும். ஆகையால் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஒரு ஆண்டு முழுதும் அகழ்ந்தால் எவ்வளவு நிலக்கரி கிடைக்கும் என்பதை கணக்கிட்டு அதற்கு தக்கபடி, சுரங்க ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ள முடியும். மேலும் நிலக்கரி என்பது தொழில்துறை, பொதுத்துறை போன்ற மிக பெரிய கார்ப்பரேட்டுகள் மட்டுமே உபயோகம் செய்கின்றன. மக்களின் நேரடியான பயன்பாட்டுக்கான பொருள் அல்ல. எனவே அதில் சலுகை காட்டவேண்டும் என்கிற தார்மீக கடமை எதுவும் அரசுக்கு இருக்க நியாயமில்லை. எனினும் அது மிக குறைந்த விலைக்கு பெரும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இவற்றில் இருந்து தெரிய வரும் விஷயங்கள் இவை தான்!

2G மக்கள் பயன்பாட்டுக்காக விலை குறைக்கப்பட்டது. பலன் அடைந்தவர்கள் மக்கள். நிலக்கரி சுரங்கம் பெரும் நிறுவனங்களுக்காக விலை குறைக்கப்பட்டது. பலன் அடைந்தவர்கள் பெருமுதலாளிகள்.

2Gயின் மதிப்பு உத்தேசமானது. நிலக்கரியின் மதிப்பு கணக்கீட்டுகளின் அடிப்படையில் சரியானது. 2G ஒதுக்கீட்டினால் அரசுக்கு நஷ்டம் இல்லை, மாறாக லாபம் தான் வந்தது. ஆனால் அதை விட கூடுதலாக லாபம் ஈட்டியிருக்கமுடியுமே என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால் நிலக்கரி சுரங்க விஷயத்தில் அரசுக்கு வருவாய் இழப்பே ஏற்பட்டு இருக்கிறது.

சரி, இரண்டு விவகாரங்களையும் CBI யும், நீதித்துறையும், CAG யும், மத்திய அரசும் எவ்வாறு கையாள்கிறது?

2G விஷய்த்தில் சம்மந்தப்பட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்து கைது செய்து சிறையிலடைத்தது. சம்மந்தப்பட்ட அனைத்து தொழிலதிபர்களையும் கைது செய்தது. இதற்கு எல்லாம் மூல காரணமாக இருந்த நீரா ராடியாவை விட்டுவிட்டது. இத்தனை பெரிய விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுத்த நிதித்துறை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை விட்டு விட்டது. CAG தனது அறிக்கையில் தெளிவாக “அரசுக்கான வருவாய் இழப்பு” என தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மகிழ்ச்சி!

சுரங்க ஊழல் விஷயத்தில், பதவி நீக்கம் கைது என்பதற்கெல்லாம் இப்போதைக்கு வாய்ப்பில்லை. விசாரிப்பதற்கான SIT குழுவே எதிர்கட்சிகளின் பலத்த கோரிக்கைகளுக்கு பின் தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. முன்பு “வருவாய் இழப்பு” என அறிக்கை அளித்த CAG தற்போது அதை சற்றே திருத்தி “முயற்சி செய்யப்படாத கூடுதல் வருவாய் தொகை” (Unintended additional income) என மாற்றி இருக்கிறது. இந்த திருத்தத்தின் அடிப்படையிலான விசாரணை தான் இப்போது நடைபெற்றுவருகிறது.

தொலைதொடர்பு துறை செயலாளர், 2Gயில் எந்த வருவாய் இழப்பும் அரசுக்கு இல்லை என சான்றளித்திருக்கிறார். ஆனால், நிலக்கரி துறை செயலாளர் பி.சி.பரிக், சுரங்க ஒதுக்கீட்டில் 1,80,000 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது உண்மை தான் என சொல்லி இருக்கிறார். அரசியல் சார்ந்த அமைச்சர்களும், அரசும் மாறிக்கொண்டே இருந்தாலும், நிலையாக இருக்கக்கூடியவர்கள் IAS அதிகாரிகளே. அவர்கள் கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களும் கூட. எனவே அதிகாரிகளின் கருத்தே இங்கே முக்கியமானதாக இருக்கிறது.

2G வழக்கில் சி.பி.ஐ வழக்கு பதிந்து விட்டது, அதனால் உடனே தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்யுங்கள் என வற்புறுத்தி ராசாவை பதவி நீக்கம் செய்த எவருமே, நிலக்கரி வழக்கை அவ்வாறு காணவேயில்லை. மாறாக, சி.பி.ஐ வெறும் வழக்கு தான் பதிவு செய்திருக்கிறது, அதற்காக எல்லாம் பிரதமர் பதவி விலக தேவையில்லை. விசாரணையின் முடிவில், வழக்கின் முடிவில் வரும் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கைகள் இருக்கும் என தெளிவுபதேசம் செய்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய முரண்பாடான நிலைப்பாடு? இந்த இரு வழக்குகளிலும் இருக்கும் மிக நீளமான முரண்பாட்டு பட்டியலின் இறுதியில் இருக்கிறது இந்த முரண்பாட்டு நிலைப்பாடு!

இந்த இரு வழக்கையும் உன்னிப்பாக தொடர்ந்து நான் கவனித்துவருவதற்கான காரணமே, CAG, CBI, நீதித்துறை ஆகியவை சுதந்திரமான சுய அதிகாரம் பெற்ற அமைப்பு என்கிற எனது நம்பிக்கையின் அடிப்படையில் தான். ஆனால் அது வெறும் மூட நம்பிக்கை என்பதை போட்டி போட்டு புரியவைத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த மூவரும்.

மத்திய அரசு, அதி மேதாவி நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என அனைவருமே இந்த இரு வழக்குகளிலும் எடுத்து இருக்கும் வெவ்வேறான நிலைப்பாடுகள் மிக மிக சுவாரஸ்யமானவை! தேசத்தின் மீது ஆர்வமுள்ள அனைவருமே, தங்கள் சுய சிந்தனையின் அடிப்படையில் இந்த இரு வழக்குகளையும் தொடர்ந்து கவனித்து வாருங்கள்! இன்னும் நிறைய சுவாரஸ்யங்கள் காத்திருக்கிறது. இந்திய அரசியலையும், சட்டத்தையும், பல அமைப்புக்களின் செயல்பாட்டையும் தெளிவாக புரிந்துகொள்ளவும் இவை உதவும்.

வாருங்கள்! வேடிக்கை பார்ப்போம்!

7 comments:

  1. மிக சரியான/ தெளிவான/ நேர்மையான பதிவு...வாழ்த்துக்கள்...2ஜி வழக்கு ஊடகங்களால் தொடுக்கபட்டு ஊடகங்ளால் தண்டனை அளிக்க பட்டது...ராசா கரை படாத கரத்துக்கு சொந்தக்காரர் என நான் சொல்ல வில்லை...ஆனால் இது மிகை படுத்தபட்ட ஒரு வழ்க்கு..இப்போது அலைக்கற்றை ஏலம் விடும் போது எலி வெளியே வந்து விடும் உண்மையான மதிப்பு என்ன என்பதும் தெரிந்து விடும்....jokin,jey

    ReplyDelete
  2. Yes, If the amount claimed by CAG is true, then it should be collected from the auction. Eagerly waiting and looking for the auction. :)

    ReplyDelete
  3. "2G மக்கள் பயன்பாட்டுக்காக விலை குறைக்கப்பட்டது. பலன் அடைந்தவர்கள் மக்கள். நிலக்கரி சுரங்கம் பெரும் நிறுவனங்களுக்காக விலை குறைக்கப்பட்டது. பலன் அடைந்தவர்கள் பெருமுதலாளிகள்"

    சரியான பார்வை! ஆனால், ஆங்கில ஊடகங்கள் இப்படி இதனை பார்க்காது...

    ReplyDelete
  4. மார்ச் மாதத்தில் இந்த பிரச்னை எழுந்த பொழுது என்னுடைய டிவீட்கள்,
    https://twitter.com/prabhuadvocate/status/183034933932081153

    https://twitter.com/prabhuadvocate/status/182799180526395392

    ReplyDelete
  5. உங்கள் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன்! நிலக்கரி ஊழல் பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டுகிறேன்,ஆஸ்திரேலிய நிலகரி இருக்குமதியிலும், இந்திய நிலக்கரி ஏற்றுமதியிலும், + கனிம சுரங்க ஏற்றுமதியிலும் கூட ஏகப்பட்ட பெருச்சாளிகள் / பேரு முதலைகள் ஒளிந்திருகின்றன.

    ReplyDelete
  6. சுரங்க ஊழல் - பிரதமரை பதவி விலக சொல்லி போராட வேண்டிய BJP , அதிமுக (2G விஷயத்தில இவங்க தான முண்ணனி) ரொம்ப கண்டுக்கல, யார் தப்பு ?! - iGhillli

    ReplyDelete
  7. Cool Post Satheesh, Good article.

    Ravi

    ReplyDelete

Printfriendly