Saturday, June 9, 2012

மறையூர் – பயண குறிப்புகள்


என் மனைவி வழி உறவினர் ஒருவர் கேரள மாநிலம் மறையூரில் இருக்கிறார். அவரது வீடு கிருஹப்பிரவேசத்துக்காக எங்களை வரசொல்லியிருந்தார். அந்த நாளில் போகமுடியாததால், வேறொருநாளில் போவதுன்னு தீர்மானிச்சோம். மறையூர் போறதுன்னு தீர்மானிச்சப்போ, முதலில், பஸ் இருக்கான்னு பார்த்தோம். பெங்களூரில் இருந்து மூணாறுக்கு ஒரு ராஜஹம்சா போவுது. உங்களுக்கே தெரியும், ராஜஹம்சா நம்ம SETC Ultra Deluxe அளவுக்கு கூட வசதி இருக்காது. அதுவுமில்லாம, கட்டண விவரம் பார்த்தப்போ, கார்ல போறது பெட்டர்னு தோணிச்சு. வசதி, செலவு கம்மி.


கார் பயணம்னு சொன்னதுமே ஆஃபீஸ்ல நிறைய ஃபிரண்ட்ஸ் அட்வைஸ் பண்ணினாங்க. நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க. உடுமலை – மறையூர் காட்டு வழியில் எப்பவும் யானை இருக்கும். அதிலும், காலையில் 7 மணிக்கு மேல, சாயந்திரம் 5 மணிக்குள்ள தான் அந்த வழியா போவணும். யானை நடமாட்டம் கொஞ்சமா இருக்கும். ஆனாலும், சாயந்தரம் மாதிரி யானை அட்டகாசம் செய்யாம அமைதியா போயிரும். அந்த சமயத்தில் என்ன எல்லாம் செய்யணும், செய்யக்கூடாதுன்னு டீட்டெயிலா டிப்ஸ் கொடுத்தாங்க. அதை எல்லாம் கேட்டதுமே பகீர்ன்னு ஆயிருச்சு. பேசாம உடுமலை வரைக்கும் கார்ல போயி, காரை அங்கே நிறுத்திட்டு அங்கிட்டிருந்து பஸ்ல மலை ஏறிடலாமான்னு கூட ஒரு யோசனை ஓடிச்சு. ஆனது ஆகட்டும்னு கிளம்பியாச்சு.


பெங்களூரில் இருந்து ஹோசூர், தருமபுரி, மேட்டூர், பவானி, பெருந்துறை, காங்கயம், தாராபுரம், உடுமலை வழி தான் வசதின்னு கூகிளாண்டவர் சொன்னதால் அதுவே முடிவானது.
உடுமலைப்பேட்டையை காலையில் 9 மணிக்கு கிராஸ் பண்ணி சின்னார் ரோடு பிடிச்சேன். அதில் ரயில்வே பால வேலை நடந்திட்டு இருந்ததால் ஒரு சின்ன டைவர்சன். அங்கிட்டிருந்து அமராவது டேம் பிரிவு வரைக்கும் 13 கி.மீக்கு சூப்பர் ரோடு. நல்ல அகலமான, ஸ்மூத்தான, டிராஃபிக் இல்லாத, இரண்டு பக்கமும் தென்னந்தோப்பு, வயல்னு ஒரு அற்புதமான டிரைவ். இந்த சின்னார் ரோடுன்னு சொல்றது ஆக்சுவலா உடுமலை திருமூர்த்திமலை ரோட்ல கொஞ்ச தூரம் பயணிச்சு அங்கிட்டிருந்து லெஃப்ட் திரும்பணும். இந்த ரோட்டுக்கு சின்னார் ரோடுன்னு பேர் இருந்தாலும், மூணாறு வரைக்கும் போவுது. சின்னார்ங்கறது, தமிழக கேரள எல்லை.


அமராவதி டேமுக்கு ரோடு லெஃப்ட்ல பிரியுற இடத்தில தமிழக வனத்துறை செக்போஸ்ட் ஒண்ணு இருக்கு. அங்கே காரை நிறுத்தி அவங்க வெச்சிருக்கிற லெட்ஜர்ல பேரு அட்ரஸ் வண்டி விவரங்கள் எழுதிட்டு தான் போகணும். அது ரிசர்வ் ஃபாரஸ்டுங்கறதாலும், யானைகளின் வாழ்விடம்ங்கறதாலும் நமக்கு எதாவது நடந்தா தகவல் கொடுக்க(!) வசதியாயிருக்கும்ல. அதான். அங்கே இருக்கிற ஃபாரஸ்ட் ஆஃபீசர்ஸ் சுருக்கமான இன்ஸ்டிரக்ஷன்ஸ் தர்றாங்க. மெதுவா போங்க, ஸ்டீரியோ பாட்டு சவுண்டா வெக்காதீங்க, ஹாரன் அடிக்காதீங்க, யானைகளை பார்த்தா டென்சன் ஆவாதீங்க. காரை ஆஃப் பண்ணிட்டு கண்ணாடியெல்லாம் ஏத்திவிட்டுட்டு சைலண்டா இருங்க. யானை பாட்டுக்கு போயிரும்னாங்க. தனியா போவாதீங்க, எதாவது ஒரு வண்டியோட சேர்ந்தமாதிரி போங்கன்னு என்னமோ போருக்கு போற ரேஞ்சுக்கு அனுப்பி விட்டாங்க. இருந்த பயம் இன்னும் ஜாஸ்தியாயிருச்சு.


செக்போஸ்ட் வரைக்கும் சூப்பரா இருந்த ரோடு, அதுக்கப்புறம் ரொம்ப மோசமா இருந்தது. சின்னார் வனவிலங்கு சரணாலயம் எங்களை ‘அன்புடன்’ வரவேற்றது. நாங்க பயத்தோட போனோம். ரெண்டு பக்கமும் அடர்த்தியான காடு. நடுவால சின்னதா மேடும் பள்ளமும் குண்டும் குழியுமான ரோடு. அதிகபட்சமா 30 கி.மீக்கு மேல போகமுடியலை. யானைகள் ரெண்டு பக்கமும் இருக்கும். அப்பப்போ ரோட்டை கிராஸ் பண்ணி மறுபக்கம் போவும்னு சொல்லியிருந்தாங்க. அதனால ஒவ்வொரு திருப்பத்திலும், திரும்பனதும் யானை நின்னிட்டு இருக்குமோன்ற பயத்திலேயே வண்டி ஓட்டிட்டு போனேன். கொஞ்ச தூரத்துக்கு தனியா தான் போயிட்டு இருந்தேன்.. அப்போ எங்களுக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு zen கார் போயிட்டு இருந்ததை பார்த்ததும் தான் நிம்மதியே வந்துச்சு. ஓடிப்போயி அது கூடவே ஒட்டிகிட்டே பின்னாடியே வாலு மாதிரி போனேன். அதில் ஒரு வசதி. ஒருவேளை யானை வந்தாலும் கூட தொணைக்கு ஒரு கோஷ்டி இருக்குமில்லே!

தமிழக கேரள எல்லை வந்ததும் அங்கே ஒரு செக்போஸ்ட்.. இல்லை இல்லை ரெண்டு செக்போஸ்ட்.. தமிழ்நாட்டோடது ஒண்ணு, கேரளாவுது இன்னொண்ணு. தமிழ்நாட்டு செக்போஸ்ட்டில் திரும்பவும் ஒருமுறை டீட்டெயில்ஸ் எண்ட்ரி பண்ணனும். இதுக்கு இன்னொரு லாஜிக் இருக்கு. அமராவதி பிரிவில் எண்டிரி பண்ணினவங்க எல்லாரும் பத்திரமா இந்த பாயிண்டுக்கு வந்துட்டாங்களான்னு ஒரு கிராஸ் வெரிஃபிக்கேஷன். வராதவங்க ஒண்ணு காட்டில் எங்கேயாவது வண்டி ரிப்பேர் ஆகி நின்னிருக்கலாம், காட்டிலேயே கொஞ்சம் தங்கி ‘சாப்பிட்டுட்டு’ இருக்கலாம், அல்லது விலங்குகளால் பாதிச்சிருக்கலாம்..இந்த மாதிரி அதை பிரிச்சு என்ன ஆச்சுன்னு பார்ப்பாங்க.

தமிழ்நாடு செக்போஸ்ட் முடிஞ்சு 100 மீட்டர்லயே கேரளா செக்போஸ்ட்.அங்கேயும் ஒரு எண்ட்ரி. ஆனா அவங்க பெரிசா எதையும் சீரியசா எடுத்துக்கறதில்லை. காரணம். தமிழக பகுதிகளில் தான் யானை நடமாட்டம் ஜாஸ்தி. எல்லாமே சமதளமான இடங்கள், ரெண்டுபக்கமும் காடு, இது மலை பகுதி தான். ஆனா ரெண்டே ரெண்டு ஹேர்பின் பெண்டு தான். மத்தபடி வளைஞ்சும் நெளிஞ்சும் கிட்டத்தட்ட நேரா மேலேறும் ஒற்றை ரோடு தான். அதனால் யானை நடமாட்டம் அதிகம். ஆனா கேரளா செக்போஸ்டில் இருந்து மேலே போற ரோடு முழுக்க மலைப்பாதை. ஒருபக்கம் மலைப்பாறை, மறுபக்கம் அதல பாதாளம். அதனால் யானை வர வாய்ப்பே இல்லை. அதனால் செக்போஸ்ட்ல பெரிசா எந்த சீரியஸ்னஸ்சும் காட்டலை.

கேரளா ரோடு, சும்மா சொல்லக்கூடாது, மலைப்பாதைன்னாலும், சூப்பரா போட்டிருக்காங்க. அகலமா, தரமா, முறையான தடுப்புகளுடன் எந்த பயமும் இல்லாம நிம்மதியா வண்டி ஓட்டுற மாதிரியான ரோடு. நெட்டுக்குத்தலா ஏறாம, லேசான மேடான ரோடு, வளைஞ்சு நெளிஞ்சு ரொம்ப அழகான ரோடு. ஆனாலும் அதிலேயும் 6 ஹேர்பின் பெண்டு இருக்கு. ஒருபக்கம் பள்ளத்தாக்குன்ற பயத்தை தவிர வேறே எதுவும் இல்லை. அழகுன்னா அழகு, அப்படியொரு அழகு. விதம் விதமான மரங்கள், பறவை சத்தம்னு சூப்பர் காடு அது.

உடுமலையில் இருந்து 30 நிமிஷத்தில் அமராவதி பிரிவு, அங்கேயிருந்து 2 மணிநேரத்தில் மறையூர் வந்தோம். ரொம்ப அருமையான டிரிப் அது.

மறையூர்.

மூணாறு போற வழியில் உள்ள முக்கியமான ஒரு ஊர். கிட்டத்தட்ட வளர்ந்த வில்லேஜ். அங்கிட்டு இருந்து ஒரு ரோடு காந்தளூர் போவுது. அந்த ஜங்க்சன் தான் மறையூர்.

மறையூரில் நிறைய கிறிஸ்தவ சர்ச்சுகள் இருக்கு. நிறைய லாட்ஜுகள், ஹோட்டல்கள் இருக்கு. அந்த ஏரியாவில் நிறைய தோட்டங்கள், டீ எஸ்டேட், அருவிகள், கோவில்ன்னு பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய.

மதியம் வீட்டில் சாப்பிட்டு முடிச்சிட்டு, ஒரு சின்ன ரவுண்ட் அப் கிளம்பினோம்.

எந்தப்பக்கம் போகறதுன்னு விவாதிச்சு, மூணாறு வழியில் கொஞ்ச தூரம் போயிட்டு ரிட்டர்ன் வந்திரலாம்னு முடிவாச்சு.

தலையார் வரைக்கும் போனோம். தலையார் முழுக்கவே டீ எஸ்டேட்டுகள் தான். டீ எஸ்டேட்டுக்குள்ளேயே அழகான நதி, அது மேல தொங்கு பாலம், அந்தண்டை பள்ளத்தாக்கு, தூரத்தில் மலை, சுத்தி டீ எஸ்டேட்டுன்னு செம ஏரியா. இந்த ரவுண்டப் முடிச்சிட்டு ராத்திரி 7 மணி சுமாருக்கு வீடு வந்தாச்சு. அங்க யாருமே 7 மணிக்கு மேல வெளியில் போறாதில்லை. இங்கே யானை நடமாட்டம் அதிகம். அதாவது மலை மேலே இருக்கிற பெரிய ஊர், வாழை தென்னை தோப்புகளும் பழ தோட்டங்களும் அதிகம். அதனால் யானைகள் வந்துபோறதுண்டு.

மறுநாள் காந்தளூர் போறதுன்னு முடிவாச்சு.

காந்தளூர், மறையூரில் இருந்து 14 கி.மீ. இந்த காந்தளூர் வழியா போற ரோடு போடிநாயக்கனூர் வரைக்கும் போவுது. நாங்க காந்தளூர் வரைக்கும் போயிட்டு வந்திரலாம்னு ஐடியா. அங்கே ஸ்டிராபெரி, ஆப்பிள், பிளம்ஸ், ஆரஞ்சு, மல்பெரி தோட்டங்கள், ஒரு அழகான நதி, சின்னதா ஒரு அணைக்கட்டு, அழகான கிராமம்னு ரொம்ப ரம்மியமான ஏரியா.

மறையூரில் இருந்து காந்தளூர் போற வழி கடுமையான மலைப்பாதை.நிறைய ஹேர்பின் பெண்டுகள், அதிலும் 2 பெண்டு செம ஸ்டீப் டர்னிங். ஷார்ப்பா 180 டிகிரி, அதிலும் ஸ்டிரெயிட் மேடுன்னு ரிஸ்கான ரோடு. ஆனா அழகான ஏரியா. போற வழியில் கோவில்கடவுன்னு ஒரு சின்ன ஊர் இருக்கு. அதை விட்டா காந்தளூர் தான்.

கோவில் கடவுக்கும் காந்தளூருக்கும் இடையில் ஒரு மலைப்பாறை இருக்கு. அங்கே இருந்து மறையூர் நகரத்தை டாப் வியூவில் பார்க்கலாம்.சூப்பரா இருக்கும். அந்த மலைப்பாறையில் ஒரு சின்ன ராமர் கோவில் இருக்கு. அதை கட்ட பணம் கொடுத்ததே நம்ம நடிகர் அஜித்துன்னு சொன்னாங்க. ஆனா அதை விட சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு அங்கே. அதில் ஒண்ணு தான் அங்கே இருக்கிற அஞ்சு குகைகள். பாறையில் குகைகளும் அது மேலே சின்ன கல் கட்டுமானங்களும் இருக்கு. பஞ்ச பாண்டவர்கள் தலைமறைவா வாழ்ந்தபோது இங்கே கொஞ்ச காலம் தங்கி இருந்தாங்கன்னும், அவங்க தான் ராமரை வழிபட்டாங்கன்னும் சொன்னாங்க.

காந்தளூரில் தோட்டங்கள் எல்லாம் பார்த்துட்டு மறையூருக்கு மதியம் வந்தோம். இந்த பகுதி முழுவதுமே கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுக்காவுக்கு உட்பட்டதுன்னாலும், பெரும்பாலானோர் தமிழர்கள் தான். எல்லாருமே தோட்டத்தொழிலாளர்கள், விவசாயிகள், தமிழகத்தில் வேலை கிடைக்காமல் இங்கே வந்து பிழைப்பை நடத்துவோர்ன்னு தான் இருக்காங்க. எல்லாருமே தமிழ் பேசுறாங்க. இந்த தேவிகுளம் தாலுகாவை தமிழ்நாட்டோட சேர்க்கணும்னு பெரிய போராட்டமே 1956ல் நடந்துது. ‘பீர்மேடு, தேவிகுளம் போராட்டம்’ னு சொல்லப்படும் அந்த போராட்டம் மிக பிரபலம். ஆனால் கடைசி வரைக்கும் அந்த போராட்டம் வெற்றிபெறலை. தேவிகுளமும்,பீர்மேடும் கேரளாவுக்கே போயிருச்சு. ஆனாலும், எல்லா இடத்திலும் தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் இருக்கு. கேரள அரசின் அறிவிப்பு பலகைகளும் கூட தமிழில் இருக்கு. வியாபாரம், கடைகள், கைத்தொழில், விவசாயம்,தோட்டத்தொழில், ஹோட்டல்.. இது தான் அங்கே இருக்கிற பிழைப்பாதாரங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், கேரளாவை பொறுத்தவரைக்கும், எல்லா ரோடுகளிலும், சின்னதோ பெரிசோ, எல்லா ரோட்டிலுமே முறையான தெளிவான Road Signs வெச்சிருக்காங்க. யாரையும் வழி கேட்டு தொந்தரவு செய்யவே தேவையில்லை. ஒவ்வொரு சாலை பிரிவு, ஜங்க்சன், ஊர், கிராமம், எல்லாத்தை பத்தியும் தெளிவா போர்டுகள் வெச்சிருக்காங்க. தமிழ்நாட்டில் இப்படி இல்லை. அப்படியே போர்டு வெச்சிருந்தாலும் நம்மாளுங்க அதில போஸ்டரை ஒட்டி வெச்சிருப்பாங்க!

அங்கே மறையூரில் இருந்த ரெண்டு நாளும் என் ஃபோன் வேலை செய்யலை. BSNL, Vodafone தவிர வேறே எந்த செல்ஃபோனும் அங்கே எடுக்கலை. சும்மா சொல்லக்கூடாது, BSNL எல்லா இடத்திலும், மலைப்பாதை, காட்டுவழி, பள்ளத்தாக்கு கிராமங்களிலும் கூட தெளிவான கவரேஜ் கொடுத்திருக்கு. மாறிடலாமேன்னு தோணிச்சு!

ரிட்டர்ன் ஜர்னி மதியமே கிளம்பிரலாம்னு ஐடியா. சாயந்தரம் 4 மணி தாண்டினாலே யானைகள் நடமாட்டம் ஜாஸ்தியாயிருமே, அதனால் 4 மணிக்கு முன்னாடி உடுமலைக்கு வந்திரணும்னு பிளான் போட்டு 1.30க்கே கிளம்பினோம். ரிடர்னில் மழை. நிறைய வண்டிகள் போயிட்டிருந்ததால் பயமில்லாம இறங்கினோம். சின்னார் செக்போஸ்ட் வந்தப்போ அங்கே ஒரு திருவிழா கூட்டமே இருந்தது. தமிழ்நாட்டு எல்லையில் ஒரு கோவில் இருக்காம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதுக்கு கூட்டம் வருமாம். நிம்மதியாயிருந்தது. இந்த கூட்டத்தில் யானை வர வாய்ப்பே இல்லைன்னு செக்போஸ்ட்டில் சொன்னாங்க. நிம்மதியா உடுமலை வழியா வூட்டுக்கு வந்தோம்.

அடுத்த தடவை போகும்போது 4 நாள் இருக்கிற மாதிரி போயிட்டு, மூணாறு, மாட்டுப்பெட்டி டேம் எல்லாம் பார்த்துட்டு வரணும்னு மனசில் ஆசை நாற்று விட்டிருச்சு.

Visit photos :
Marayur Trip Photos

3 comments:

 1. Super Post :-))))
  Congratulations!

  amas32

  ReplyDelete
 2. அருமையா கூடவே சுத்துன ஒரு மனநிலை !

  ReplyDelete
 3. Udt to chinnar10 speed brake extra pottu irukanga

  ReplyDelete

Printfriendly