Tuesday, June 12, 2012

கார்ட்டூன் எதிர்ப்பும் – இந்தி எதிர்ப்பும்


ரு விஷயத்தை புரியவைப்பதற்கோ, கிண்டல் செய்வதற்கோ எல்லோருக்கும் புரியும்படியான எளிய வழி அதை சித்திரமாக வரைவது. கார்டூன்கள் என்பது செய்தியை கொண்டு சேர்ப்பதில் மிக அதிக வீச்சை உடையது.மிக நீண்ட கால வரலாறுடையது இந்த கார்ட்டூன்கள்.

இந்தியாவை பொறுத்தவரை கருத்து சுதந்திரம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம், நாமெல்லாவரும் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்பதை பல முறை பலவாறாக நிரூபித்து வருகிறோம். நியாயமான கேலி சித்திரங்களை கூட மிக கடுமையாக கையாண்டு தண்டனை விதித்த பல பல உதாரணங்கள் இருக்கிறது.

எம்.ஜி.ஆர் அவர்களது ஆட்சியின்போது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை வெளியிட்ட ஒரு கார்ட்டூனுக்காக அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டது, மிக பிரபலமான வரலாற்று நிகழ்வு. (பின்னர் சட்ட உதவியுடன் அவர் விடுவிக்கப்பட்டதும், தமிழக அரசு தனது தவறான செயல்களுக்காக அபராதம் செலுத்தியதும் தனி கதை!)

சமீபத்தில் கூட, மேற்கு வங்க மாநிலத்தில் வெளியான ஒரு கார்ட்டூன் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியால் கடுமையாக கையாளப்பட்டது. நாடாளுமன்றத்திலும் கார்ட்டூன் விளையாடிய விளையாட்டால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது சமீபத்திய நிகழ்வு.

பொதுவாக, கருத்து சுதந்திரம் என்பது நமது நாட்டில் அரசியல் சாசன ரீதியாகவே அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தினமும் ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றி கேலிச்சித்திரம் வந்துகொண்டு தான் இருக்கிறது. ஆர்.கே.லக்ஷ்மண், மதன் போன்றோரின் கார்ட்டூன்கள் பிரபலமானவை. சமூக நிகழ்வு குறித்தும் அரசியல் குறித்துமான கார்ட்டூன்கள் தினசரி வந்துகொண்டு தான் இருக்கின்றன. கார்ட்டூனிஸ்டுகளுக்கென்று தனி மரியாதையே இருக்கிறது.

ஆனால், இப்போது இங்கே நான் விவாதிக்க இருக்கும் கார்ட்டூன், பத்திரிக்கைகளில் உள்ளது அல்ல. மாறாக, மத்திய அரசின் கல்வித்துறையின் கீழுள்ள CBSE பாடபுத்தகத்தில் வந்திருக்கிறது. இந்த கார்ட்டூன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற காலகட்டமான 1960 களில் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.நாராயணன் அவர்களால் வரையப்பட்டு அப்போதைய நாளிதழ்களில் வெளியான ஒன்று தான்.  ஹிந்தி எதிர்ப்பு, அதன் விளைவுகள் ஆகியவற்றை கிண்டலடிக்கும் விதத்தில் வந்திருக்கும் அ ந்த கார்ட்டூனை, இப்போது பள்ளி பாடப்புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள், அவசியமே இல்லாமல். அதனை  பாடபுத்தகத்திலிருந்து நீக்கவேண்டும் என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சித்தலைவர்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கருத்து சுதந்திரத்துக்காக பெரும் போராட்டம் நடத்திய திமுக தலைவர் கலைஞரே, இந்த கார்ட்டூனை நீக்கவேண்டும் என சொல்லி இருக்கிறார். அவரது நிலைப்பாடு மாறிவிட்டதா என்று கூட பலருக்கு சந்தேகம் வந்திருக்கக்கூடும். அது தேவையற்றது.

பத்திரிகை, செய்தித்தாள்கள் ஆகியவற்றில் வரும் கேலிச்சித்திரங்களும் கருத்துக்களும் தான் கருத்து சுதந்திரத்தின்பாற் படும். பள்ளிக்கூட பாடபுத்தகங்கள் அப்படியல்ல. அது ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே தீர்மானிக்கின்ற விஷயம். நாம் நம் சந்ததியினருக்கு என்ன பயிற்றுவிக்கிறோம் என்பதில் இருக்கிறது எதிர்கால இந்தியாவின் எதிர்காலம். எனவே நாம் பள்ளி பாட புத்தகத்திலுள்ள விஷயங்களில் விஷத்தை கலக்காமல் இருக்கவேண்டும். எனவே இது கருத்துசுதந்திர மறுப்பு ஆகாது. இது ஒரு வகையில், வரலாற்று திரிபை, தவறான தகவலை, திருத்தும் முயற்சி.

சரி இந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால் என்ன? எதற்காக இந்தியை எதிர்த்தோம்?

உண்மையில் அது இந்தி எதிர்ப்பு போராட்டமே அல்ல. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பதை பெரும்பாலானோர் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று தான் புரிந்து வைத்து கொண்டுள்ளனர், இன்னமும்.

அது என்ன இந்தி திணிப்பு?

இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றபின், 1950 ல் குடியரசாக ஆனது. அதாவது இந்தியாவுக்கென்று ஒரு தனிப்பட்ட பிரத்யேக அரசியல் சாசனம் இயற்றப்பட்டு அது அமலுக்கு வந்தது. அதில் நாடு முழுமைக்குமான மொழியாக இந்தி தான் இருக்கும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டது.

ஆனால், இந்தியா பல பல மொழிகள் வழக்கத்திலுள்ள நாடு. மேலும் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வரலாறும், பாரம்பரியமும், கலாச்சாரமும் இருக்கிறது. எனவே மக்களாட்சியின் அடிப்படையில் இயங்கும் இந்தியா மொழி விஷயத்தில் எந்த அவசரமும் காட்டமுடியவில்லை.

நாடு முழுதும் ஒரே மொழி சாத்தியமில்லை என்பதுணர்ந்ததால், 1956ல், (குடியரசு ஆகி 6 ஆண்டுகள் கழித்து) மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்தந்த மொழி பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள் தனி தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டன. அவ்வாறு தான் ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாநிலமாக இருந்த நம் மாநிலம், கன்னட அடிப்படையில் கர்நாடகம், தெலுங்கு அடிப்படையில் ஆந்திரம், மலையாளம் அடிப்படையில் கேரளம், தமிழ் அடிப்படையில் தமிழகம் என பிரிக்கப்பட்டது.

இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டிருந்தது என பார்த்தோம். அப்படி ஒரு தேசிய மொழியாக இந்தி ஆக்கப்படுவதற்கு வசதியாக, இந்தி வளர்ச்சிக்கென்று ஒரு குழு பாராளுமன்றத்தால் அமைக்கப்படவேண்டும் எனவும், அதன் ஆயுள்காலம் 15 ஆண்டுகள் எனவும் (26-01-1965 வரை) அதற்குள், இந்தி மொழி வளர்ச்சிக்காகவும், பரப்பலுக்காகவும், அந்த குழு முழுமையாக பாடுபட்டு நாடு முழுவதும், 15 ஆண்டுகளுக்குள் அனைவரும், அனைத்து மொழியினரும் இந்தி படித்துமுடித்துவிட வேண்டும் என வரையறுக்கப்பட்டது. அந்த கால வரையறை முடிந்த பின்பு, இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக செயல்படவேண்டும் எனவும், இந்திய அரசியல் சாசனம் சொல்லியது. இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த, இறுதிசெய்த வல்லுநர் குழுவினரின் இந்த முடிவு, பலத்த சர்ச்சைக்கு ஆளாகியது என்றாலும், இறுதியில் எந்த மாற்றமும் இன்றி இந்த விதி அரசியல் சாசனத்தில் உட்கார்ந்து அமலுக்கும் வந்துவிட்டது.

திட்டமிட்டபடி, 15 ஆண்டுகளின் முடிவில், இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக ஆக்கப்படவேண்டும் என்கிற அரசியல் சாசன சட்டத்தின் படி, மத்திய அரசால் 1965 ஜனவரி மாதம் ஒரு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அது 1965ம் ஆண்டு, ஜனவரி 26 முதல் அரசியல் சாசனப்படி, இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும் எனவும், இந்தி மொழி அறியாதவர்களுக்கு அரசு பணிகளில் வேலை வாய்ப்பு இல்லை எனவும், மாநிலங்களுக்கிடையேயான அனைத்து தகவல் பரிமாற்றங்களும் இனிமேல் இந்தியிலேயே இருக்கவேண்டும் எனவும் அந்த அறிவிப்பாணை சொல்லியது.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில், இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது, வெளியிடப்படவேண்டி இருந்தது. ஆனால், இந்த ஆணை வெளியானதும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. தங்கள் தாய்மொழியை அழிப்பதற்கான முயற்சியாக இதை கண்ட பல மாநிலத்தவர்களும் நாடு முழுதும் பல பல போராட்டங்களை முன்னெடுத்து சென்றனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் உரிய கவுரவுத்துடன் பாதுகாக்கப்படவேண்டும் என அப்போதைய திமுக தலைவர்களுள் ஒருவரான கலைஞர் அவர்கள் முழங்கிய முழக்கம் மிக பிரசித்தமானது. ஒவ்வொரு மாநில மொழிக்கும் உள்ள வரலாற்று பாரம்பரியமும், உரிமையும் பாதிக்கப்படக்கூடாது என அவர் போராட துவங்கினார். அவரது முடிவு அப்போது தெளிவாக இருந்தது. இந்தியை யாரும் எதிர்க்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் அதனை படித்துக்கொள்ளலாம். ஆனால், இந்தி படித்தால் தான் அரசு வேலை என ஒரு ஜனநாயக அரசு சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இது இந்தியை வலுக்கட்டாயமாக மக்களிடம் திணிப்பதாக அவர் கருதினார். இந்தி பேசாத மக்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த முடிவு இருப்பதாக கருதினார். வேலைவாய்ப்புக்கான தகுதிகளில் ஒன்றாக இந்தி இருப்பது சரியல்ல எனும் அவரது முழக்கம் நாடு முழுதும் பிரபலமானது.

தமிழகம் மட்டுமல்ல, பஞ்சாப், ஆந்திரா, ஒரிசா, மராட்டியம், பிஹார், குஜராத், வங்காளம் என பல மாநிலங்களிலும் தமிழகத்தை போலவே, தங்கள் தாய்மொழியை காப்பாற்றுவதற்காக போராட்டங்கள் நடைபெற்றன. பாதல், பகுகுணா, படேல், ஜோதிபாசு, பட்நாயக், என அனைத்து மாநில தலைவர்களும் கலைஞருடன் ஒருங்கிணைந்து போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர். அறிஞர் அண்ணா அவர்கள் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தி ஆறு மாதம் சிறையில் அடைபட்டார். தமிழகத்தில் பலரும் இந்த போராட்டத்தை கலைஞர் தலைமையில் முன்னெடுத்து சென்றனர்.  அப்போதைய தமிழகத்தில் நடைபெற்றுவந்த காங்கிரஸ் ஆட்சி இந்த போராட்டத்தை மிக கடுமையாக கையாண்டது. போலீஸ் நடவடிக்கைகளில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் மொழிக்காக தற்கொலையும் செய்துகொண்டனர். அவர்கள் எல்லாரும் பின்னர் வந்த திமுக ஆட்சியில் மொழிப்போர் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டனர். தாளமுத்து நடராஜன் பெயரில் ஒரு மாளிகையே திமுக அரசின் சார்பாக அமைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த அரசாணைக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பதை பார்த்த மத்திய அரசு இறங்கி வந்தது. மக்களின் மனதை நன்கு புரிந்துகொண்ட, தீர்க்கதரிசனம் கொண்ட ஜவஹர்லால் நேரு அவர்கள், 1963 ஆம் ஆண்டிலேயே வெளிப்படையாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். (1963ம் ஆண்டில் ஆட்சி மொழி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எழுந்த எதிர்ப்பின்போது நேரு அவர்கள் சொன்ன கருத்து.) அதாவது. இந்தி பேசாத மக்கள் விரும்பாத வரைக்கும் இந்தி எந்த காரணம் கொண்டும் திணிக்கப்படாது. தொடர்பு மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து இருந்து வரும் என்றார். அதன் அடிப்படையில் 1965 ல் அப்போதைய மத்திய அமைச்சர் திரு. குல்சாரிலால் நந்தா அவர்கள் நேருவின் அதே வாக்குறுதியை இப்போதும் உறுதிப்படுத்தி, அதன் அடிப்படையில்  இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு மிக சிறிய திருத்தம் (புகழ்பெற்ற May Shall Replacement) கொண்டு வரப்பட்டது. அன்றைக்கு நேரு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த நிமிடம் வரை, இந்தி கட்டாயப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. இத்தனைக்கும் அந்த பழைய அரசாணை அப்படியே தான் இருக்கிறது, செயல்படுத்தப்படாமல்.

இந்த பெரும் போராட்டம் வரலாற்று ரீதியாக மிக பெரிய முக்கியத்துவம் பெற்ற ஒன்று. ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் திமுக நடத்தி வாங்கி தந்த, மொழி உரிமை, திமுகவையும் கலைஞரையும் நாடு முழுதும் முக்கியத்துவமானவராக மாற்றியது. இதன் காரணமாக தான் பின்னர் இந்தியாவின் ஆட்சி மொழியாக 18 மொழிகளும் அட்டவணையில் சேர்க்கப்பட்டன. அந்தந்த மாநிலங்கள் விரும்பும் வரையிலும் அந்தந்த மாநில மொழியிலேயே கடித தொடர்புகள் இருக்கலாம் எனவும், வேலை வாய்ப்புக்கு இந்தி கட்டாயமில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநில மொழியும், (காஷ்மிரி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், வங்காளம், ஒரியா, மராட்டி, ராஜஸ்தானி, பிஹாரி, கொங்கணி, அசாமி..) தங்கள் பாரம்பரியத்தையும், கலாச்சாராத்தையும், பெருமையையும், வரலாற்றையும் தக்கவைத்துக்கொண்டது.

இப்படியான போராட்டத்தை நான் முன்பே சொன்னதை போல, பலரும் இந்தி எதிர்ப்பு போராட்டமாகவே கருதிக்கிடக்கின்றனர். ஆனால் இப்போது இந்தி எதிர்ப்பு என்பதற்கும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பதற்குமுள்ள வித்தியாசம் ஓரளவு புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

இந்த போராட்டத்தை தான் இன்றைக்கு CBSE பாடபுத்தகத்தில் ஒரு கேலிச்சித்திரமாக கொடுத்து இருக்கிறார்கள். இது எதிர்க்கப்படவேண்டியதா இல்லையா என்பதை உங்கள் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்!

1 comment:

  1. அருமையான கருத்து . அம்பேத்கர் கார்ட்டூன் எப்படி புண்படுத்தியதோ அதே போல் இந்தி எதிர்ப்பு வீரர்களை இது புண்படுத்துகிறது .

    ReplyDelete

Printfriendly