முத்தமிழ் வித்தகர், தமிழின தலைவர், செம்மொழி வேந்தர், வாழும் வள்ளுவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் போர்ப்படை தளபதிகளின் புதிய முழக்கம் இது தான்..
ஜெயில் பாரோ!
அப்படியென்றால் என்னவென்று உங்களுக்கு புரியலையா? எனில், நீங்கள் இந்த உலகத்திலேயே
இல்லை. ஏனெனில், ஜெயில்பாரோ ங்கறது உலகளவில் பிரபலமான வார்த்தையாம். இதை சொன்னவர்கள்
திமுக கழக முன்னோடிகளில் சிலர் தான்.
சரி, அது என்ன ஜெயில் பாரோ?
அதிமுகவின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து திமுக வருகிற ஜூலை 4ம் தேதி முதல்
சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக இணையதளங்களில் விளக்கம்
கொடுத்த சில கழக முன்னோடிகளின் முத்திரை முழக்கம் தான் ஜெயில் பாரோ என்கிற முழக்கம்.
ஏன் ஜெயில்பாரோ என்கிற பெயர் எனும் கேள்விக்கான அவர்களது விளக்கம் என்னவென்றால், உலக
அளவில்(!) பிரபலமான மொழியான ஹிந்தி மொழியில் சொன்னால் தான் எல்லாவருக்கும் புரியும்
என்பது. அது மட்டுமல்ல, இணைய வெளிகளில் உலகெங்குமுள்ள ‘தமிழர்கள்’
தெரிந்துகொள்ள
வசதியாக தான் இந்த முழக்கம் பயன்படுத்தப்படுவதாக சொல்லி இருக்கிறார்கள். ( திமுக பேச்சாளர்களில்
ஒருவரான திருமதி. குஷ்பு அவர்களும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் கழக சட்டமன்ற
உறுப்பினர் திரு. ஜெ. அன்பழகன் அவர்களும் பங்கெடுத்த அந்த விவாதத்தின் சில துளிகள்
இங்கே ( Link 1
& Link 2 ) தொகுக்கப்பட்டு இருக்கிறது. திரு. அன்பழகன் அவர்கள், திமுகவின் ஆரம்பகால கழக முன்னோடியும் தீவிர இயக்க போராளியுமான
திரு பழக்கடை ஜெயராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது)
அந்த விவாதத்தில் இன்னொரு அதிர்ச்சியான விஷயமும் வெளிப்பட்டது. திமுகவின் பிரச்சார படையின் முக்கியமானவரான திருமதி குஷ்பு அவர்கள் "தமிழ் எனும் சாதீய (!) நோக்கத்துடனும் குறுகிய மனப்பான்மையுடனும் இந்தியாவை துண்டாடாமல் ஹிந்தியை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் "தமிழக பள்ளிகளில் ஹிந்தி சொல்லித்தருவதில்லையா? பின் 'ஜெயில் பாரோ'வை புரிந்துகொள்ள என்ன கஷ்டம்" எனவும் கேட்டிருக்கிறார். இது மிக பெரிய விவாதத்துக்குரிய விஷயம். திமுகவின் கொள்கைளை அறிந்த முன்னணி தலைவர்கள் யாரேனும் குஷ்புவின் இந்த கருத்தை அறிந்தால், கழகத்தின் கொள்கைகளுக்கு மாறாக நடந்துகொண்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதால், அது பற்றி நாம் இங்கே விரிவாக விவாதிக்காமல் இருப்போமாக!
திமுகவின் அடிப்படை கொள்கை என்னவென்றே தெரியாத இதுபோன்ற கழக முன்னணியினரை காணும்போதெல்லாம், எனக்கு திமுக தலைமை மீது தான் கோபம் வருகிறது. முன்பெல்லாம், கழக பேச்சாளர்களுக்கான பயிற்சி பட்டறை, பொதுமக்களுக்காக கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இப்போது என்ன காரணத்தாலோ அதெல்லாம் நிறுத்தப்பட்டு விட்டதால், கழகத்தினருக்கே கூட கொள்கை மறந்துபோய்விட்டதென தோன்றுகிறது.
இந்தி திணிப்பு எதிர்ப்பை முன்னின்று நடத்தி, தாய்மொழி காக்க உயிர்தியாகங்கள்
செய்த ஒரு இயக்கத்தின் போர்பிரகடனம் தாய்மொழியில் இல்லை என்கிற வருத்தத்தை விட, இந்தியில்
இருக்கிறதே என்கிற அங்கலாய்ப்பு தான் பரவலாக காணமுடிகிறது.
சரி, எதற்காக இந்த போராட்டம்?
அதிமுக அரசின் அராஜக, அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து. அப்படியென்றால் மக்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு,
சமச்சீர் கல்விக்கு எதிரான நடவடிக்கை, வாட் வரி உயர்வு, ரேஷனில் மண்ணெண்ணெய் குறைப்பு
போன்ற பல பல மக்கள் விரோத நடவடிக்கைகளின்போதோ, சட்டம் ஒழுந்து சீர்கெட்டு தினசரி கொலை,
கொள்ளை, கற்பழிப்பு, காவல்நிலைய மரணங்கள், ஆள் கடத்தல் என மக்கள் அஞ்சி அஞ்சி வாழ்கின்ற
வேளையிலோ பெரும் போராட்டம் நடத்தியிருக்கலாமே. ஒரு கண்டன ஆர்பாட்டம் கூட இல்லையே. வெறும்
அறிக்கைகளும், சில பொதுக்கூட்டங்களும் மட்டும் தானே நடைபெற்றன? இப்போது என்ன திடீரென்று
சிறை நிரப்பும் அளவுக்கு போராட்டம்?
இந்த போராட்டம் அறிவித்ததற்கான அடிப்படை விஷயமே, திமுக கழகத்தின் முன்னோடிகள்
பலர் கடுமையான வழக்குகளின் பேரில் சிறை வைக்கப்பட்டது தான். அவர்கள் மீதெல்லாம் பதியப்பட்டவை
பொய்வழக்கா, நிஜ வழக்கா, கைது செய்யப்பட்டவர்கள் எல்லாவருமே அப்பாவிகளா, அல்லது குற்ற
முகாந்திரம் உள்ளவர்களா என்கிற பெரும் விவாதத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால்,
பாரம்பரியமாகவே சட்டத்தை மதித்து செயல்பட்டுவந்த திமுக, எப்போதும் சொல்லும் அதே வழக்கமான
கருத்தான, நடவடிக்கைகளை சட்டப்படி சந்தித்து இருக்கலாம். “கழக முன்னோடிகள் தான் கழகத்தை காக்கிறார்கள், கழக
முன்னோடிகளை காப்பது தான் மக்களுக்கான போராட்டம்” என இணைய தளத்தில் கழக முன்னோடிகளில் சிலரே பேசி வருவது, மக்களிடையே திமுக
மீது எதிர்மறை கருத்தாக்கத்தை தான் உருவாக்கும் என்பதை கூடவா திமுக அறியாமல் இருக்கிறது?
அதே இணைய விவாதத்தில், சொல்லப்பட்டு இருக்கும் இன்னொரு கருத்து, மக்கள்
படும் துன்பங்களை மனதில் வைத்து, அதற்கு காரணமான அதிமுக அரசை எதிர்த்து தான் இந்த போராட்டம்,
என்பது. மக்கள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பங்களை உணர்ந்து அதற்காக குரல்
கொடுக்கும் ஒரே இயக்கமாக திமுக இன்னமும் இருப்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.
ஏனெனில், தமிழகத்தின் அதிகாரப்பூர்வ எதிர்கட்சியான தேமுதிக எப்போதும் போல சத்தமின்றி
அமைதிகாத்துக்கொண்டிருக்கையில் மக்களுக்கான ஒரே ஆறுதலாக எப்போதுமே திமுக தான் இருந்து
வருகிறது.
ஆனால் மக்களின் இன்றைய துன்பங்களுக்கு மாநிலத்திலுள்ள அதிமுக அரசு மட்டும்
தான் காரணமா என்ன? திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்தவிதத்திலும்
மக்களை துன்புறுத்தவில்லையா? விலைவாசி உயர்வு, பணவீக்கம், வளர்ச்சிவிகித குறைபாடு,
பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் தட்டுப்பாடு, உரவிலை உயர்வு மீனவர்மீதான தாக்குதல்/உயிரிழப்பு
போன்றவை எதுவுமே மக்களை பாதிக்கவில்லையா? அப்படியென்றால் அதையெல்லாம் எதிர்த்து ஏன்
திமுக போராட முன்வரவில்லை? அமைச்சரவை கூட்டத்தில் கூட ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
மக்கள் துன்பப்படுகிறார்கள் என இப்போது வருந்தும்
இதே திமுகவின் அமைச்சர் தானே மத்திய அரசின் உரத்துறை அமைச்சராக இருக்கிறார்? விவசாயிகளை
பாதிக்கும் விலை உயர்வை நான் அங்கீகரிக்கமாட்டேன் என ஏன் மறுக்கவில்லை. மக்கள் படும்
துன்பங்களுக்காக நாங்கள் சிறை செல்கிறோம் என முழங்குபவர்கள், மக்களை துன்புறுத்தும்
அரசுடன் எங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை என ஏன் இன்னமும் வெளியேறவில்லை? இதுபோன்ற
விடை தெரியாத கேள்விகள் பல பல.. ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை நடைபெறும் ஜெயில்பாரோ போராட்ட
விளக்க பொதுக்கூட்டங்களிலாவது இக்கேள்விகளுக்கு பதில்கிடைக்கும் என என்னை போலவே நீங்களும்
பேராசை கொண்டால், நாம் இருவரும் ஏமாளிகளே!
சிறை நிரப்புவதால் என்ன பயன்? அது மட்டும் யாருக்கும் இது வரை தெரியவில்லை.
மக்களிடம் சென்று தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தி, அதிமுக அரசின் தவறான நடவடிக்கைகள்,
மறைமுகமாக மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகள் பற்றி விளக்கவுரை ஆற்றி, மக்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதையெல்லாம் விட்டுவிட்டு நேரடியாக சிறைநிரப்பும் போராட்டம் என்பது நெருடலாக
இருக்கிறது. சரியான தருணங்களில் எல்லாம் தவறான முடிவுகளை எடுப்பவர் கலைஞர் என்கிற கருத்து
மெல்ல மெல்ல இப்போது வலுப்பட்டுக்கொண்டு வருவதை தவிர்க்கமுடியவில்லை.
முதலில், திமுக தனது கழக முன்னணியினருக்கு போதிய பயிற்சி கொடுத்து, கொள்கை
விளக்க குறிப்புக்களை அறியசெய்யுங்கள். அரசு, எந்த குற்றப்பின்னணியும் இல்லாத கழகத்தவரை
பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்தால் அதை எதிர்த்து போராடுங்கள். தனிப்பட்டமுறையில்
குற்றங்கள் மீதான வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ளுங்கள். கழகத்தவர்களை காப்பதற்காக,
‘மக்களுக்கான போராட்டம்’ என பெயரிட்டு
போராடுவது போன்றவற்றை தவிருங்கள். அரசின் தவறான நடவடிக்கைகளை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும்
மக்களிடம் தொடர்கூட்டங்கள் மூலம் எடுத்து சொல்லி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலாவது
அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்டசெய்யுங்கள்.
இதையெல்லாம் விடுத்து ‘ஜெயில் பாரோ’ நடத்துவது என்னை பொறுத்தவரை அனாவசியமானது மட்டும்
அல்ல, திமுக மீதான நன்மதிப்பை கூட குறைத்துவிடக்கூடும் என நினைக்கிறேன்.
Nice to read your articles
ReplyDeleteபொதுமக்களிடம் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த மரியாதையும்
ReplyDeleteநல்லபேரையும் காலியாக்கி விட்டன திமுகவினரின் சமீபகால செய்கைகள்..................
இடைதேர்தல் முடிவுகளும் அதையே பிரதிபளிகின்றன.....
மக்கள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பங்களை உணர்ந்து அதற்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கமாக திமுக இன்னமும் இருப்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில், தமிழகத்தின் அதிகாரப்பூர்வ எதிர்கட்சியான தேமுதிக எப்போதும் போல சத்தமின்றி அமைதிகாத்துக்கொண்டிருக்கையில் மக்களுக்கான ஒரே ஆறுதலாக எப்போதுமே திமுக தான் இருந்து வருகிறது.// சார் இதெல்லாம் ஒவெரா இல்ல? அணணா திமுகஆட்சிககு வந்த அப்ரோம் திமுக எவ்ளொ தடவை மக்கள் பிரசனைக்காக போராடி இருக்காங்க? அவங்க ஆளும் போது வேனா அவங்களுக்கு எதிரா அவங்களே போராடி இருக்காங்க.. அதர்க்கான வரலாற்று அதாரம் எங்கிட்ட இருக்கு.. நீங்க திமுக அனுதாபி ன்றதால இப்டி லாம் பதிய வேண்டாம்...
ReplyDeleteபெட்ரோல் விலை உயர்வு, கேஸ் தட்டுப்பாடு, உரவிலை உயர்வு மீனவர்மீதான தாக்குதல்/உயிரிழப்பு போன்றவை எதுவுமே மக்களை பாதிக்கவில்லையா? // இவை அனைத்தும் திமுக ஆட்சியலும் இருந்ததால், இது சாதாரன விஷயம் என்று கருதி இருக்கலாம்..
ReplyDelete