Saturday, September 1, 2012

பெரியாரிஸ்ட்டுகளின் தோல்வி?


இன்றைக்கு தமிழகத்தின் எல்லா நாளிதழ்களிலும், பத்திரிக்கைகளிலும் தவறாமல் இடம் பெற தொடங்கி இருக்கிறது தினசரி நாள் பலன், ராசி பலன், சனி/குரு பெயற்சி பலன், பரிகாரங்கள், வழிபாடுகள் போன்றவை. தொலைக்காட்சி ஊடகங்களின் பிரதான நேரமான காலை நேரத்திலும் கூட ஒரு பகுதியை இது போன்ற நாள்பலனுக்கு ஒதுக்கியாகவேண்டியாகி விட்டது.இது தவிர, தமிழகத்தின் சில குறிப்பிட்ட மேற்கு மாவட்ட நாளிதழ்களில், அவ்வப்போது, குட்டிச்சாத்தான் மகிமை, பில்லி, சூனிய சேவைகளும்(!) விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.


இன்னொரு பக்கம், நல்லநேரம், ஜாதகம், வாஸ்து, ராசிக்கல், நியூமராலஜி, போன்றவையும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

பக்தி நோக்கிலானவை, மூட நம்பிக்கை நோக்கிலானவை என இரு வகையிலும் பிரிக்கப்படக்கூடிய இவ்வகை செய்திகளுக்கு ஏன் இப்போது இத்தனை முக்கியத்துவம்?

மனிதர்களுக்கு பிரச்சனைகள் அதிகரித்து விட்டன, அதனை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள், எனவே இறைவனிடம் பக்தர் வடிவிலோ, அல்லது சில சாமியார்களின் மந்திர தந்திர சக்திக்கு(!) அடிமை வடிவிலோ, பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்கின்றனர் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது!

எவ்வளவு தான் படித்து பட்டம் பெற்று இருந்தாலும், அறிவியல் பூர்வமான பகுத்தறியும் திறன் பெரும்பான்மையோருக்கு இல்லாத காரணத்தால் அவர்களில் பலரும் கூட இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பழகிவிட்டார்கள். வாஸ்து, ஜாதகம், ஹோமம் இல்லாமல் விஞ்ஞானிகள் கூட வீடு கட்டி குடியேறுவதில்லை.

சரி, இப்படியான பக்தி, வேண்டுதல்கள், பரிகாரங்கள், நாள் நட்சத்திர சம்பிரதாயங்கள், பில்லி சூனியம் ஆகியவற்றால் பிரச்சனைகள் தீர்ந்துவிடுகிறதா என்ன? அல்லது நினைத்தது நிறைவேறிவிடுகிறதா?

பெயரில் ஓரிரு எழுத்துக்களை மாற்றிவிட்டால் அதிக யோகங்கள் தேடி வரும் என சொல்லும் எவருமே, ஆலையம் முன்பு பிச்சை எடுப்பவர்களின் பெயரில் அதை பரீட்சித்துப்பார்க்க தயாராக இல்லை என்பதை எல்லோரும் அறிவர்.

ஜாதகம் பார்த்து, நாள் நட்சத்திரம் பார்த்து, சம்பிரதாயப்படி நடத்தி வைக்கப்பட்ட பல திருமணங்கள் விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. இவை எதையும் பார்க்காமல், செய்துகொள்ளப்பட்ட காதல் /கலப்பு திருமணங்கள் பல வெற்றிகரமாக தொடர்ந்துகொண்டும் இருக்கின்றன என்பதை நான் அறிவேன்.

சிற்சில இறைவர்களிடம் இறைஞ்சினால் குழந்தை பேறு கிடைக்கும், வீடு பேறு கிடைக்கும், திருமண யோகம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன. அவை அப்படியே உண்மையானால், பல குழந்தை பேறின்மை மருத்துவமனைகளும் செயலற்று போயிருக்கவேண்டும்!

சரி, நான் இறை / பக்தி மற்றும் அது சார்ந்த நம்பிக்கையை நக்கலடிக்க விரும்பவில்லை! எனது இந்த பதிவின் நோக்கம் வேறு!பகுத்தறிந்து வாழவேண்டும் என்று முழங்கிய பெரியாரின் பல பல கொள்கைகளில் ஒன்று தான், மூட நம்பிக்கை ஒழிப்பு என்பது! இது தவிர,பெண்ணியம், சமத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை, ஜாதி ஒழிப்பு என பெரிய பட்டியலே இருக்கிறது பெரியாரியலில்!
ஆனால், பெரியாரியல் என்பதை வெறும் கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு என்கிற குறுகிய வட்டத்துடன் முடித்துக்கொண்டார்களோ என எனக்கு இப்போதும் ஐயமாக தான் இருக்கிறது.

தான் ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்ளும் பல தோழர்களின் நோக்கமெல்லாம், பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பு தவிர அதற்கு மேல் அவர்களது சிந்தனை பயணிப்பதில்லை. அவ்வளவு ஏன், பிராமண எதிர்ப்புக்கும், பிராமணீய எதிர்ப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை கூட அவர்களில் பலர் இன்னமும் உணர்ந்துகொள்ளவில்லை. ஒரு வகையில் பார்த்தால் இப்போதெல்லாம் பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்வது ஒரு உயர்தகுதி போலாகிவிட்டது. பெரியார் மறைவுக்கு பின், அவரது இயக்கத்தை காப்பாற்றி, கொள்கைகளை பரப்பி செயலாற்றவேண்டிய பொறுப்பில் இருந்தவர்களின் பெரும் தோல்விக்கான தற்போதைய அத்தாட்சியாக தான், இன்றைக்கு தமிழகத்தில் வளர்ந்து வரும், மூட நம்பிக்கைகளின் மேலே குறிப்பிட்ட தொகுப்புக்கள் தெளிவுபடுத்துவதாக கருதுகிறேன்.

தமிழகம் முழுவதும் பெரியாரின் கருத்துக்களை முழுமையாக பரப்பி, மக்களிடம் பகுத்தறிவை சுயசிந்தனையை சுயமரியாதையை மெருகேற்றவேண்டிய திராவிடர் கழகம், ஏனோ இன்று வரை அதை எதையும் செய்யவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஒவ்வொரு ஜோதிடரும், மந்திரவாதியும், நாள்பலன் விளம்பரமும், பரிகார லட்சார்ச்சனைகளும், அவர்களின் தோல்வியை ஓங்கி ஒலித்தபடி தான் இருக்கின்றன. அவை மட்டுமல்ல, ஜாதி கொடுமை, பெண்ணடிமைத்தனம், சுயசிந்தனையற்ற மக்கள், எதையும் எது சரி, எது தவறு என பகுத்தறிய தெரியாத இளைஞர்கள் எல்லோருமே பெரியாரிஸ்டுகளின் தோல்விக்கான அத்தாட்சி தான்!

பெரியார் ஒரு மாபெரும் ஆளுமை. அவரது சிந்தனையும் செயல்திறனும் எல்லோருக்கும் வாய்த்து விடாது தான்! ஆனால் அவரது கொள்கைகளுக்கான, பொழிப்புரை, பரப்புரை ஆகியவற்றை எல்லாம் மக்களிடம் அதிக அளவிலே கொண்டு சென்று சேர்க்கவேண்டிய கடமையும் பொறுப்பும் பெரியாரிஸ்டுகளுக்கு இருக்கிறது! தமிழகம் சுயசிந்தனை இன்றி மீண்டும் மீண்டும் பின் தங்கிக்கொண்டே போவதிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியும் அவர்களுக்கு இருக்கிறது.

இதை எப்போது உணர்வார்கள் பெரியாரிஸ்டுகள்? அவர்களது செயலற்ற தன்மையால் பெரியார் தோற்றுக்கொண்டிருப்பதையாவது அவர்கள் உணர்வார்களா?

7 comments:

 1. நன்றாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 2. பிராம்மணர்களை விட பிராம்மணர் அல்லாதவர் பலர் பிராம்மணீயத்தை பின்பற்றுகிறார்கள்

  ReplyDelete
 3. Have you got any useful ideas to solve the people's problems and sufferings. I think definitely you will be not having. Then why you are bothering that all are following religion and its ritual? You should not forget that altleast they will be having some kind of mental relief by following religion. Moreover, you should note, nowadays, it is very very COSTLY to follow the religion and worship, due to price hike.

  ReplyDelete
 4. பிரச்சினைகள் அதிகரித்தது மட்டுமல்ல காரணமல்ல!பிரச்சினைகளுக்கான காரணங்கள் விளங்க முடியாத படியான சூழலை அரசு இயந்திரமும்,ஊடகங்களும் செய்கின்றன.

  பெரியாருக்குப் பின் பெரியாரிஸம் மரணித்துப் போனதும் ஒரு காரணம்.

  ReplyDelete
 5. Author of this blog correctly nailed down the social issue we are facing now. But he hasn't criticised the religion. Instead, he pointed out the cause and effect of psuedo leaders & followers of Periyarism. Mr.Muruganandham stated that people get mental peace by following religion. No issue with following a religion. But as a responsible human we need to draw a line to what extent you can allow your beliefs. If we don't draw a line, any religion would be usurped by anti-social elements and fraudsters.- Rajesh

  ReplyDelete
 6. பெரியார் இயக்கம் அவ்வளவு எளிதில் அழியாது. இந்த வழியை பின் பற்றுபவர்கள் எந்த அடையாளத்தையும் கொண்டிருக்க தேவை இல்லை.
  அது இயற்கை தத்துவம். செயற்கையாக உட்கார்ந்து யோசித்து காலங்கலமாக அழித்து எழுதியே வரப்பட்டது அல்ல.
  உழைக்காமல் முன்னுக்கு வரும் பார்பன தத்துவம் நிச்சயம் சாரசரி மனிதனை கவர்ந்து இழுக்கும். அவனை போல் நாமும் நன்றாக இருக்கலாம் என்ற ஆசை ஏற்படுவது இயல்பு. எந்த உழைப்பும் இல்லாமல் , அறுவடை செய்ய போவது எப்படி சரியாக இருக்கும்?. கடவுளை காட்டி அந்த அறுவடையை பிடுங்கி உழைப்பில்லாமல் தொப்பையை வளர்த்தனர். இன்று அதையே மற்றவரும் செய்கிறார். இதனால் பார்பனுக்கு போட்டி ஏற்பட்டு உள்ளது.
  புத்திசாலிதனமான உழைப்பு மட்டுமே காப்பாற்றும். எங்கோ யாரோ உட்கார்ந்து காப்பாற்றுவதில்லை. இது புரிந்து விட கூடாது என்பதற்காக என்னென்னவோ தத்துவங்கள். எல்லாம் கால வெள்ளத்தால் அழிவுறும். இயற்கை நிமிர்ந்து நிற்கும்.

  ReplyDelete
 7. The concern is not about existence of Periyar Iyakkam. It is about periyar idealogy has not been trasnformed effectively in to action.- Rajesh

  ReplyDelete

Printfriendly