Saturday, September 22, 2012

மதிமுகவை உருவாக்கிய ஜெ!


வாரிசு அரசியலை எதிர்த்தும், கலைஞர் கூறிய அபாண்டமான கொலைப்பழியை அடுத்தும், தந்திரமாக வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் காரணமாக அவர் மதிமுகவை தொடங்கினார். இது தான் இணையங்களில் உலவும் மதிமுக தோன்றிய கதை! இது எப்படி உருவானது, யாரு உருவகப்படுத்தியது என்பது இன்னமும் புரியவில்லை! சில பத்திரிக்கைகளின் திரிபு செய்தியால் உருவானதாகக்கூட இருக்கலாம்! ஆனால், உண்மையில் என்ன தான் நடந்தது?

1993ம் ஆண்டு தமிழகத்தில் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. தமிழகத்தின் பொற்கால ஆட்சிகளில் அதுவும் ஒன்று. மக்கள் நலத்திட்டங்களும், மாநில வளர்ச்சி திட்டங்களும் பிரமாதப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம். ஜெ. அளவுக்கு நடுநிலையான அரசியல்வாதி அப்போது இல்லை என்கிற அளவுக்கு எல்லா விஷயங்களிலும் பரந்த மனப்பான்மையோடு செயல்பட்டுவந்தார் ஜெயலலிதா.

அப்படியான ஒரு காலகட்டத்தில், மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் “விடுதலைப்புலிகள் இயக்கம், திமுக தலைமையை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் தனது நம்பிக்கைக்குரிய வைகோவை அமர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதனால், திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு மறு அறிவிப்பு வரும் வரை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்” எனவும் தமிழக அரசுக்கு ஒரு அறிவுரை கடிதம் அனுப்பியது.

மத்திய உளவு பிரிவின் தகவல்களின் பேரில் மத்திய உள்துறை இதுபோன்ற கடிதங்களை அனுப்புவது வழக்கம் தான்! அப்படியான ஒரு கடிதம் தான் அப்போதும் வந்தது!

கருணாநிதி மீது அரசியல் ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும், தமிழக அரசின் தலைமைப்பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, தனது கடமையிலிருந்து தவறாமல், கருணாநிதிக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், மத்திய அரசிடமிருந்து வந்திருக்கும் உளவு தகவல்களின் அடிப்படையில் அவரது பாதுகாப்பை பலப்படுத்தவிருப்பதாகவும், என்னென்ன ஏற்பாடுகளெல்லாம் செய்யப்படுகிறது என்கிற விவரத்தையும் முழுமையாக தெரிவித்து, அதை ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை விடப்பட்டு இருந்தது.

திமுக தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினசரி திமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடுவது வழக்கம். கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து முக்கிய நிருபர்களையும் அவர் நன்கு அறிவார். அவரும் ஒரு பத்திரிக்கையாளர் என்கிற வகையில் எல்லோருடனும் சகஜமாக உரையாடுவார். அதிலிருந்து பல செய்திகளை நிருபர்கள் சேகரித்துக்கொள்வதுண்டு.அப்படியான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக அரசிடமிருந்து வந்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி குறிப்பிட்டுவிட்டு, இனி தன்னை சந்திப்பதற்குள்ள கட்டுப்பாடுகளை பற்றி சாதாரணமாக சொல்லியிருக்கிறார். கலைஞரின் வருத்தமெல்லாம், தனக்கு வழங்கப்படும் கூடுதல் பாதுகாப்பின் காரணமாக தினசரி காலையில் மெரீனாவில் நடைபயிற்சி முடங்குமே, பத்திரிக்கையாளர்களை சந்திப்பது தடைபடுமே என்பது தான். அதை தான் அங்கே பத்திரிக்கையாளர்களிடம் அவர் சகஜமாக பேசி கொண்டிருந்தார். ஆனால் பத்திரிகை நிருபர்களின் செய்தி சேகரிக்கும் மூளை, மறுநாள் பரபரப்பு செய்தியாக உருவெடுத்தது!

“கருணாநிதியை கொல்ல வைகோ முயற்சி. கருணாநிதிக்கு கூடுதல் பாதுகாப்பு” என்றெல்லாம் பரபரப்பாகியது தமிழக ஊடகங்கள்!

இந்த செய்தி வெளியானதும், வைகோ நேரடியாக இது பற்றி கலைஞரிடமே கேட்டிருக்கலாம்! அப்போது அவர் துணை பொதுச்செயலாளர் தகுதியில் இருந்தார். திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்குமென்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். எல்லா மாவட்டங்களிலும் முக்கிய கழக தலைவர்களுக்கு தனி அதிகாரத்துடன் பதவிகள் கொடுக்கப்பட்டு இருந்தது. கழகத்துக்காக நீண்டகாலமாக உழைத்தவர்களின் வாரிசுகளுக்கெல்லாம் உரிய மரியாதை செய்யப்பட்டு இருந்தது. திமுக ஒரு குடும்பமாக இயங்கிவந்த ஒரு கட்சி என்பது அதிமுகவினரும் கூட ஏற்றுக்கொள்ளும் ஒன்று (இது பற்றிய தனி பதிவு இங்கே காணலாம்!)

வைகோ, நாடாளுமன்ற உறுப்பினராக, கழகத்தின் போர்ப்படை தளபதியாக, கழக முக்கிய பிரமுகர்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருந்த கால கட்டம் அது. எனவே அவர் நேரடியாக கலைஞரையே சந்தித்து விஷயங்களை தெளிவு படுத்தியிருக்கலாம்!

ஆனால், அவர் பத்திரிக்கையாளர்களை கூட்டி, ஸ்டாலினை அரசியலில் முன்னிலைப்படுத்துவதற்காக தான் தன் மீது வீணான கொலைப்பழியை கலைஞர் சுமத்துகிறார் என்கிற ரீதியில் மிக கடுமையான விமர்சனங்களை கலைஞர் மீது அவர் வைத்தார். இதுவும் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியானது.

ஸ்டாலின் கலைஞரின் மகன் என்றாலும் கூட, கட்சியில் அப்போது எந்த முக்கிய பதவியிலும் இல்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் உறுப்பினராக இருந்து பல போராட்டங்களை நடத்தி, மிசாவிலும், பிற போராட்டங்களிலும் ஈடுபட்டு சிறைசென்று, எல்லா கட்சி தொண்டரையும் போல தானும் ஒரு தொண்டராக செயல்பட்டு வந்தவர். பின்னாளில் இளைஞர் அணி என்கிற அணியை அமைத்து அதன் பொறுப்பினை கவனித்து வந்தார். இப்படியான சூழலில் கூட, ஸ்டாலினை விட அதிக முக்கியத்துவத்தை கலைஞர் வைகோவுக்கும் இன்ன பிற கட்சி தலைவர்களுக்கும் தான் கொடுத்து இருந்தார். கட்சிக்காக பாடுபட்ட உழைப்பு தான் அங்கே முக்கியமாக கருதப்பட்டதே தவிர, யாருடைய மகன் என்பது அல்ல!

வைகோவுக்கு, உள்ளூர ஒரு ஆசை இருந்ததாக சொல்வார்கள்! கலைஞருக்கு பின் திமுகவை தான் வழிநடத்தவேண்டும் என அவர் விரும்பியதாகவும், அதற்கு போட்டியாக ஸ்டாலின் வந்துவிடுவாரோ என்கிற அச்சம் அவருக்கு இருந்ததாக சொல்வார்கள். புலிகள் அமைப்புடன் நல்ல உறவு இருந்த வைகோவுக்கு, கலைஞர் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாடு (1991- ராஜீவ் படுகொலைக்கு பின்) எடுத்தது பிடிக்கவில்லை என்போரும் உண்டு. தமிழகத்தின் மிக சக்திவாய்ந்த இயக்கமான திமுக தங்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டுமென்றால் அதன் தலைமை பதவியில் வைகோ இருக்கவேண்டும் என புலிகள் அமைப்பு யோசித்து வந்ததன், தெளிவான ஆதாரங்கள் அடிப்படையில் தான் கருணாநிதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், புலிகளின் இந்த நிலைப்பாடு வைகோவுக்கு தெரியுமா, தெரியாதா என்பது இன்று வரை தெளிவாகவில்லை.

அப்படியான காலகட்டத்தில், வைகோவுக்கு கலைஞர் தான் ஏதோ தந்திரம் செய்து தான் கட்சி தலைமைக்கு வரவிடாமல் தடுக்கிறார், தன்னை நீக்கிவிட்டு, ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவார் என்பது போலெல்லாம் தானே சிந்தித்து, பல பத்திரிக்கையாளர் சந்திப்புக்களிலும், உணர்ச்சிவசப்பட்டு யூக குற்றச்சாட்டுக்களை சொல்லிக்கொண்டிருந்தார்.

இதுபோன்ற செயல்கள் கட்சிக்கட்டுப்பாட்டுக்கு எதிரானது என்பதால், கட்சி விதிப்படி, வைகோவிடம் விளக்கம் கேட்டு பொதுசெயலாளர் அன்பழகன் அவர்கள் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அதற்கு எந்த பதிலையும் வைகோ அளிக்கவில்லை.

அவருக்குள் எப்படியாவது திமுக தலைமையை கைப்பற்றவேண்டும் என்கிற ஆசை கனன்றுகொண்டிருந்ததாலோ என்னவோ, சுமுகமாக முடிந்திருக்கவேண்டிய இந்த விஷயத்தை இன்னும் சிக்கலாக்கும் வகையில், அண்ணா அறிவாலையத்தை கைப்ப்ற்ற தனது ஆதரவாளர்களுடன் சென்று அதை முற்றுகையிட்டார். மேலும் தாங்கள் தான் உண்மையான திமுக என்று அறிவித்து, திமுக சொத்துக்களும் கட்சி பொறுப்புக்களும் தனக்கே வழங்க உத்தரவிடவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தாக்கல் செய்தார். இதிலிருந்தே அவரது உள்ளத்தில் ஒளிந்திருந்த ஆசையும், அவர் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பதற்றப்படுவதன் காரணமும் தெளிவாக வெளி உலகுக்கு தெரியவந்தது.

இந்த இடத்தில் ஜெயலலிதா செயல்பட்ட விதத்துக்காகவே, கலைஞர் காலமெல்லாம் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டவராக இருக்கவேண்டும்!

வைகோ ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலையத்தை முற்றுகையிட்டதும், தமிழக போலீஸ் துறை அதை முற்றிலுமாக தடுத்து, கட்டுப்படுத்தி அவர்களை அங்கேயிருந்து அகற்றி, அறிவாலையத்துக்கு ஒரு சிறு கீறல் கூட விழாமல் காப்பாற்றில் முழுமையாக பாதுகாத்தார்கள். மேலும், திமுக யாருக்கு சொந்தம் என்கிற வழக்கு நிலுவையிலிருந்ததால், அண்ணா அறிவாலையத்துக்கு பூட்டுபோட்டு தமிழ்க அரசின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அப்போது ஜெயலலிதா நினைத்திருந்தால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி திமுக தலைமை அலுவலகத்தை என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். சிக்கலிலும் பிரச்சனையிலுமுள்ள ஒரு கட்டிடத்தை அரசு எடுத்துக்கொள்ள முடியும். அல்லது வைகோவின் வன்முறை படைக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றிருந்தாலே கூட, அறிவாலையம் துவம்சம் ஆகியிருக்கும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல் அந்த தலைமை அலுவலகத்துக்கு உரிய கவுரவத்தை முழுமையாக காப்பாற்றினார் ஜெயலலிதா.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும், பின்னர் உச்சநீதிமன்ற வழக்கிலும், வைகோவுக்கு திமுக மீது எந்த உரிமையும் இல்லை என தீர்ப்பானதை தொடர்ந்து தமிழக அரசு, அறிவாலையத்தை கலைஞரிடமே மீண்டும் ஒப்படைத்தது.

இதுவரையும் திமுகவிலேயே நீடித்திருந்த வைகோவின் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும், கட்சி தலைமையை கைப்பற்ற முயற்சி செயததை கருத்தில் கொண்டும், இது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு எந்த பதிலும் தெரிவிக்காதைதொடர்ந்தும், கட்சி உயர்மட்ட குழு முடிவின் படி வைகோ திமுகவின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இப்படி அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பே, தனது தனிக்கட்சி முடிவை வைகோ அறிவித்திருந்ததால், அவரது நோக்கம் எல்லோருக்கும் தெளிவாக தெரிந்ததால், இந்த நீக்கம் எல்லோரும் எதிர்பார்த்ததாகவே அமைந்தது. கலைப்புலி தாணு உதவியில் தாயகம் கட்டிடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உதயமானது. வைகோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் இடிமழை சங்கர் உட்பட ஐந்து பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

வைகோவை கட்சியிலிருந்து நீக்குவதில் கலைஞருக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை என்பதும், கட்சியின் முக்கிய தலைவர்களின் முடிவு தான் அது என்பதும் எல்லோருக்கும் தெரியும். பின்னர் சில ஆண்டுகள் கழித்து வைகோ பூந்தமல்லி சிறையிலிருந்தபோது, பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு ஆஜராவதை அறிந்து காலையிலேயே சென்று காந்திருந்து வைகோவை சந்தித்து ஆறுதல் கூறினார் கலைஞர். அப்போது இருவருமே மனம் விட்டு பேசியதில், உண்மையில் என்ன தான் நடந்தது என்பதை வைகோ உணர்ந்துகொண்டு மீண்டும் திமுகவுடனேயே கூட்டணி வைத்ததும், ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து கலந்துகொண்டு உரையாற்றியதும் வரலாறு. ஸ்டாலின் எப்போதுமே முன்னிலைப்படுத்தப்படவில்லை எனப்து வைகோவுக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான். வைகோ உச்சத்தில் இருந்தபோதும் கூட, ஸ்டாலின் ஒரு சாதாரண எம்.எல்.ஏ வாய்ப்பு கூட வழங்கப்படாமல் இருந்த நிலைமை அறியாதவரா என்ன?

என்னை பொறுத்தவரை வைகோ கலைஞரை ஒரு நடை சந்தித்து பேசியிருந்தாலே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும்.ஆனால், எங்கே திமுக தன் கையை விட்டு போய்விடுமோ என்கிற பதற்றத்தில் உணர்ச்சிவசப்பட்டு இந்த சிக்கலை தவறாக கையாண்டுவிட்டார் வைகோ என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு.

ஜெ. இந்த விவகாரத்தில் செயல்பட்ட விதம் சிறப்பானது. ஒரு வகையில் மதிமுக என்கிற கட்சி தோன்ற காரணமே ஜெயலலிதாவின் நடுநிலையான செயல் தான். இல்லாவிட்டால், காழ்ப்புணர்ச்சியோடு  ஜெ. கருணாநிதிக்கு எதிரான நிலைப்பாடை எடுத்திருந்தால், வைகோ திமுகவை கைப்பற்றியிருக்கவும் வாய்ப்பிருந்தது.

திமுக அந்த ஒரு விஷயத்துக்காக ஜெயலலிதாவுக்கு நன்றி செலுத்தலாம்!

7 comments:

 1. அது சரிங்க. நீங்க அம்மாதிமுகவா அய்யாதிமுகவா?
  அதை முதல்ல சொல்லுங்க. அய்யா, அம்மா - ரெண்டு தீய சக்திகளுக்கும் பரிந்து பேசும் நீங்களும் ஒரு தீய சக்தியா?

  ReplyDelete
 2. //திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்குமென்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்//

  //கட்சிக்காக பாடுபட்ட உழைப்பு தான் அங்கே முக்கியமாக கருதப்பட்டதே தவிர, யாருடைய மகன் என்பது அல்ல!//


  :)))

  ReplyDelete
 3. நல்ல அருமையான அலசல்

  ReplyDelete
 4. அருமை... அருமை... நல்ல அருமையான அலசல்!.

  ReplyDelete
 5. imperfect statement
  m.k supports his son not vaiko

  ReplyDelete
 6. முழுக்க முழுக்க பித்தலாட்டப் பதிவு இது..

  கருணாநிதி உடைக்காத கட்சி எதுவுமில்லை.. ஜெயலலிதா உடைத்த கட்சி எதுவுமில்லை..

  வைகோவுக்கு தமிழகத்தில் இப்போது ஆதரவு பெருகி வருகிறது. கருணாநிதி ஊழல் செய்து மக்கள் மத்தியில் மதிப்பிழந்து போனார்..

  இப்படி ஒரு பித்தலாட்டம் செய்து விழுந்து கிடக்கும் தி.மு.க.வுக்கு முட்டுக் கொடுக்க முயற்சி செய்துள்ளீர். பார்க்கலாம் இந்த பித்தலாட்டத்தை யாராவது நம்புகிறார்களா என்று.. :)

  எனது மதிப்பீடு: இது ஒரு குப்பை..கிளறினால் கருணாநிதியின் அத்தனை முடை நாற்றமும் வெளியில் வரும்.. ஏற்கனவே நாறிக் கிடக்கு இன்னும் ஏன்?

  ReplyDelete
 7. சாரி சத்தீஷ். நம்பும்படியாக இல்லை. ஆரம்பத்திலிருந்தே, கலைஞ்சரையும் திமுகாவையும் ஒழித்துக்கட்ட,எதுடா சாக்குன்னு காத்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா உதவி செய்தார் என்று நம்பும்படியாக இல்லை. மேலும் கலைஞ்சரின் முற்கால வஞ்சனைகளை சீர்தூக்கி பார்த்தால் தெரியும் அவர் எப்பெர்ப்பட்டவர் என்று. நன்றி

  ReplyDelete

Printfriendly