Thursday, September 13, 2012

ஜெ. சொன்ன தப்பு கதை!மிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று தனது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் மக்கள் நல திட்டங்களை வழங்கினார். அரசு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்கிற மரபை எம்.ஜி.ஆரும் கலைஞரும் வேண்டுமானால் பின்பற்றிக்கட்டும், நான் அப்படியல்லங்கற மாதிரி ஒரு சூப்பரான குட்டிக்கதை ஒன்றை எடுத்துவிட்டார். அந்த கதை இது தான்.

பெரு வணிகர் ஒருவரும்,சிறு வணிகர் ஒருவரும் நீண்டகால நண்பர்களாக  இருந்து வந்தனர்.திடீரென இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும்  பிரிந்து விட்டனர். இந்த நிலையில், பெரு வணிகர் மீது விரோதம் கொண்ட சிறு  வணிகர் அவர் மீது ஒரு வழக்குத் தொடர எண்ணினார்.இதற்காக அவருக்குத் தெரிந்த  ஒரு வழக்கறிஞரைக் காணச் சென்றார்.

ஆனால் அந்த வழக்கறிஞரோ, இந்த வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதிக்கவில்லை.
  எனினும், சிறு வணிகர் வழக்கறிஞரை தொடர்ந்து சந்தித்து, வழக்குத் தொடர்வது  குறித்து வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் வழக்கறிஞரும் வழக்கை எடுத்துக் கொள்ள  சம்மதித்து நீதிமன்றத்தில் பெரு வணிகர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை முடிந்து சிறு வணிகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இதையடுத்து,
  சிறு வணிகர்,எல்லோரிடமும், இந்த வழக்கில், தனக்கு சாதகமான விஷயங்கள்  இருந்ததால், இயல்பாகவே வழக்கின் முடிவு வெற்றியாக அமைந்துள்ளது. இதில்  வழக்கறிஞரின் வாதச் சிறப்பு ஏதும் இல்லை என்று அவதூறாக பேசி வந்தார்.

இந்த சிறு வணிகர் நிறத்திலும்,உள்ளத்திலும் கருப்பானவர்.இவரைப் போலவே சிலர்
  உள்ளனர்.நம்மை வேண்டி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு,  அதில் வெற்றியும் பெற்றுவிட்டு, பிறகு நம்மையே எதிர்த்தும், பழித்தும் பேசுவார்கள் (நன்றி: விகடன் இணைய தள செய்தி )

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தான் இந்த கதையில் உள்ளத்திலும் உருவத்திலும் கருப்பான, சிறு வணிகர் என்பது எல்லோருக்குமே ஈசியாக விளங்கும் ஒன்று!

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் என்பவர், அரசின் கேபினட் அமைச்சருக்கு இணையான அதிகாரம் உள்ளவர். சட்டமன்ற உறுப்பினர் குறித்து தரக்குறைவான விமர்சனம் செய்தால், அந்த விமர்சனத்தின் மீது உரிமை பிரச்சனை கூட கொண்டு வரமுடியும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், ஜெயலலிதாவுக்கு கதை எழுதிக்கொடுத்த புண்ணியவான், நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக ஆனால் எளிதில் எல்லோருக்கும் புரியும்படி கதை எழுதி கொடுத்து இருக்கிறார்னு நினைக்கிறேன்!

என்னை கேட்டால், இந்த கதையே தப்பு! எந்த லாஜிக்கும் இல்லாதது! வரலாற்று திரிபு!உண்மைக்கு மாறானது!

2011 தமிழக தேர்தலில் தேமுதிக-அதிமுக இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு இருந்தது. ஆனால், தொகுதி உடன்பாடு செய்வதற்கு முன்னரே, அதிமுக (வழக்கம்போல) தன்னிச்சையாக அதிமுக போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தது. இதன் மூலம் தேமுதிகவுக்கு செல்வாக்கு இருப்பதாக நம்பப்படும் சில தொகுதிகளிலும் அதிமுகவே களமிறங்குவதாக அந்த பட்டியல் சொல்லியது.


இதில் கடுப்பாகி போன விஜயகாந்த், தனது சார்பில் திரு. பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை (இவரை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இருக்கு! 1965ல் இருந்து இவரது செயல்பாடுகளை பார்த்தால், நிறைய விஷயங்களுக்கு விடை கிடைக்கும். அவை இன்னொரு சந்தர்ப்பத்தில் தனி பதிவாக!) அதிமுகவுடன் பேச்சு நடத்த அனுப்பி பேசியபின், ஜெ. இறங்கி வந்தார்.

தேமுதிகவுடன் பேச்சு நடத்த மூவர் குழு அமைக்கப்பட்டது. 

ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட அந்த மூவர் குழுவினர் தேமுதிகவுடன் நடத்திய பேச்சு, சுமுகமாக இல்லை. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் தொகுதி உடன்பாடு திருப்திகரமாக அமையவில்லை. தேமுதிக எதிர்பார்த்த அளவிலான தொகுதி எண்ணிக்கையும், அவர்கள் விரும்பும் தொகுதியும் அதிமுக ஒதுக்காததை கண்டித்து, தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
தேமுதிக வெளியேறியதை முதலில் அலட்சியம் செய்த ஜெ. தேமுதிகவை தொடர்ந்து, பிற கூட்டணி கட்சிகளான, சி.பி.எம்; சி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகியோரும் வெளியேறி, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் மூன்றாவது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதுணர்ந்ததும், ஆடித்தான் போனார்.

அதிமுகவின் நிலை அப்போது ரொம்பவே மோசம். ஜெ.வுக்கு சரியாக உடல்நலமில்லை. ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனத்துக்கு போனபோது கூட, தொடர்ச்சியாக ஆலையவலம் வர முடியாமல் அவ்வப்போது நாற்காலி இட்டு உட்கார்ந்து ஓய்வெடுக்கவேண்டிய அளவுக்கு மிக மோசமான உடல்நிலை. அதனால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடியுமா என தெரியவில்லை.

அதிமுகவில் பிரச்சாரம் செய்ய வேறு யாரும் இல்லை. நாடார்பேரவைக்கு என்று கூட்டணியில் பேரம் பேசி தொகுதிகள் வாங்கிய சரத் குமார், தனது வழக்கமான பாணியில், ஏற்றிவிட்ட ஏணியை (நாடார் பேரவை) எட்டி உதைத்து தள்ளிவிட்டு,  தனது சொந்த கட்சியான ச.ம.க மூலம் அந்த தொகுதியில் போட்டியிட்டார். அவரது பிரச்சாரம் ஓரளவுக்கு பலன் தரும் ஆனாலும், தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி பேச வேறு யாரும் இல்லை. எனவே அந்த குறையை விஜயகாந்த் தான் நிரப்பமுடியும் என அதிமுக நினைத்திருக்கலாம்!( அதிமுக அப்போது எடுத்த இன்னொரு முக்கியமான முடிவு, கூட்டணியில் இருந்த வைகோவை தள்ளி வைத்தது. அவரை பிரச்சாரம் செய்யவிட்டிருந்தால், அதிமுகவின் வெற்றி அதோகதி ஆகியிருக்கும்!)  

மேலும், திமுக-காங் உடன்படிக்கை இழுத்துக்கொண்டிருந்ததால், அதில் அதிருப்தியான காங் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டால், அது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இரு கட்சிகளும் நன்றாக உணர்ந்திருந்தார்கள்.

எனவே, காங் தேமுதிக கூட்டணி ஏற்படாதிருப்பதற்காகவும் அதிமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய ஆள் தேவையிருந்ததாலும், விஜயகாந்தை சமாதானப்படுத்த மீண்டும் மூவர் குழுவை அனுப்பி பேசவைத்தார் ஜெ.
விடிய விடிய விளக்கெரியவிட்டு முழு இரவும் நீண்ட பேச்சுவார்த்தை எந்த முடிவுக்கும் வரவில்லை. மூவர் குழுவுக்கு எல்லா அதிகாரமும் இருப்பதாக ஜெ. அறிக்கை விட்டாலும், பேச்சுவார்த்தையின் போது முந்திரிப்பக்கோடா சாப்பிடுவதா முறுக்கு சாப்பிடுவதா என்கிற முடிவை கூட அந்த மூவர் குழு எடுக்கமுடியாது என்பது எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தே இருந்தது.
என்னை விட்டிடுங்க, நான் தனியாவே நின்னுக்கறேன்னு முறுக்கிட்டு நின்ன விஜயகாந்தை படாத பாடு பட்டு, கெஞ்சி கூத்தாடி, மீண்டும் அதிமுக கூட்டணியிலேயே தொடரசெய்ததில் செங்கோட்டையனின் பங்கு மகத்தானது. (அதிமுகவுக்காகவும் ஜெவுக்காகவும் உழைந்தவர்களுக்கு எல்லாம் வழக்கமாக கிடைத்த அதே பரிசு அவருக்கும் கிடைத்தது ஓரங்கட்டல்)

முதலில் திமுகவுடன் கூட்டணிக்கு முயன்று தோற்றுப்போன கடுப்பில் இருந்த தேமுதிகவுக்கு, காங்கிரஸ் சப்போர்ட் கிடைத்திருந்தால், தமிழகத்தின் வரலாறே கொஞ்சம் மாறியிருக்கும் என்றும் இப்போதும் சிலர் சொல்வதுண்டு. ஆனால், அந்த சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதி மிக சாதுரியமாக செயல்பட்டு, அந்த திட்டத்தை உடைத்தார். அழகிரி மூலம் தேமுதிக பற்றி ஒரே ஒரு வரி பேட்டி கொடுத்து, விஜயகாந்தை கடுப்பேற்றி, அதிமுக கூட்டணியில் தொடரவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினார். (அதெல்லாம் தனி கதை!)

அதிமுக கூட்டணிக்கு, தேர்தல் பிரச்சாரத்தில் மிக பெரிய பலமாக விஜயகாந்த் இருந்தார். அங்கங்கே சில சொதப்பல்கள், அநாகரீகங்களை அரங்கேற்றினாலும், திமுகவின் பிரச்சாரப்படையை தகர்க்க ஜெ.வும் விஜயகாந்தும் தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்றடித்து செய்த பிரச்சாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது!

உண்மை நிலவரம் இப்படி இருக்க, ஏதோ விஜயகாந்த் வந்து ஜெயலலிதாவிடம் கெஞ்சியது போலவும், ஜெ. பெரிய மனது பண்ணி அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டதை போலவும், அதிமுக தயவில் வெற்றி பெற்றுவிட்டு அதிமுக என்கிற ஏணியை எட்டி தள்ளியதை போலவும் ஜெ. இன்றைக்கு பேசி இருப்பது, மிக மிக தவறானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
அதை விட கொடுமை, ஒருவரின் நிறத்தை வைத்து அவரை இழிவு செய்வது. இது இன்னொரு வகையிலான தீண்டாமையன்றி வேறில்லை. தமிழகம் முழுமைக்கும் பொதுவான முதலமைச்சர் பதவியிலிருந்துகொண்டு, இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சிசெய்வதாக சத்திய பிராமணம் செய்துவிட்டு, நிற அடிப்படையில் ஒருவரை, அதுவும் அமைச்சருக்குரிய அதிகாரமுடைய சட்டமன்ற எதிர்கட்சி தலைவரை, இழிவு செய்து பேசியிருப்பது கொடூரத்தின் உச்சகட்டம்.

1 comment:

  1. You are right! Obviously she thinks being superior just because she is lighter in her colour! Outside of our country, we all are blacks anyway! Tamilnadu's misfortune is that she has to be the chief minister. Now, she also acts as if the saviour of Tamils! I can't see any light at the end of the tunnel!!!

    Venkat

    ReplyDelete

Printfriendly