Thursday, September 27, 2012

சீராகுமா இந்திய பொருளாதாரம்?

ந்தியாவின் GDP வளர்ச்சியை S & P நிறுவனம் 5.5% னு குறைச்சு மதிப்பிட்டதில் தொடங்கியது என்னுடைய இன்றைய காலை பரபரப்பு!


இந்த வருட பட்ஜெட் படி நாம் எதிர்பார்த்திருந்த வளர்ச்சி விகிதம் 7.6% . வளர்ச்சி விகிதம் குறையுதுன்னு வெச்சுகிட்டா கூட ஒரு 6.8% லிருந்து 7.2% வரைக்குமாவது இருக்கும்னு எதிர்பார்த்திட்டு இருந்த எனக்கு 5.5% ங்கறது 1000 வோல்ட் அதிர்ச்சி தான். இது சைனாவின் 7.5% வளர்ச்சியை விட ரொம்ப கம்மி. ஆனா நாம எப்போதுமே உதாரணம் காட்டும் ஜப்பானின் வளர்ச்சி விகிதமான 2% ஐ விட மிக மிக அதிகம்.

என்ன ஏதோ புரியாத பாஷையில் பேசிட்டு இருக்கிற மாதிரி இருக்கா? சரி.. ரொம்ப ரத்தின சுருக்கமா சொல்ல முயற்சிக்கிறேன்!

GDP ங்கறது மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு. அதாவது ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு. வாகனம், விவசாயம், விஞ்ஞானம், தானியம், இயந்திரம் ன்னு என்னென்னல்லாம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுதோ, அந்த பொருட்களின் இன்றைய சந்தை மதிப்பு தொகை. இதை கணக்கெடுக்க மூணு விதமான மெத்தடு இருக்கு.உற்பத்திய வெச்சு கணக்கெடுக்கறது (Production Method), வருமானத்தை வெச்சு கணக்கெடுக்கிறது (Income Method), செலவை வெச்சு கணக்கெடுக்கறது (Expenditure Method). இந்த மூணு வகையில் கணக்கிட்டாலும் விடை கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் வரும். பொதுவா நாம உற்பத்தியை வெச்சு தான் கணக்கிடுறோம்.

இந்த GDP வளர்ச்சி விகித அடிப்படையில் தான் உலக பொருளாதார நிலைமை கணக்கிடப்படுது. அப்படின்னா. நாம உலகின் முக்கியமான பொருளாதார சக்தியா இருக்கணும்னா நம்முடைய வளர்ச்சி விகிதம் சீரா இருக்கணும். வருஷத்துக்கு 2% வளர்ந்தா கூட போதும்.. ஆனா ஒவ்வொரு வருஷமும் மினிமம் 2% வளர்ச்சி இருக்கணும். அப்போ எல்லா நாடுகளும் நம்ம நாட்டின் வளர்ச்சி விகிதம் மேல நம்பிக்கை வெச்சு முதலீடு செய்வாங்க.

வெளிநாட்டிலிருந்து நமக்கு கிடைக்கிற முதலீடுகள் தான், வளரும் நாடான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தி. அந்த முதலீட்டை வெச்சு, நாம தொழிற்சாலைகள், விவசாயம் எல்லாத்தையும் வளர்ச்சியடைய செய்யுறோம். இதனால் வேலை வாய்ப்பு, உற்பத்தி செய்யப்படும் பொருட்களால் அரசாங்கத்துக்கு வரி வருவாய், தொழிற்சாலை அமைக்கப்படும் இடங்களில் உள்கட்டமைப்பு வசதி மாதிரி நிறைய மறைமுக நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

சுருக்கமா, இதையே ரிவர்ஸில் இருந்து பார்த்தா GDP வளர்ச்சி விகிதத்தின் முக்கியத்துவ்ம் புரியும். பின் தங்கிய ஒரு மாவட்டம் வளரணும்னா (உதாரணமா நம்ம விருதுநகர்) அங்கே தொழில்வளர்ச்சி வேணும். தொழிற்சாலைகள் வந்தா, அதை சுற்றி துணை தொழில்கள் வளரும். உள்கட்டமைப்பு உருவாகும். புதிய குடியிருப்பு பகுதிகள் உருவாகும், வேலை வாய்ப்பு பெருகும், வேலை காரணமாக இடபெயர்ச்சி ஏற்படுறது குறையும், வேலைதேடும் வாழ்வாதாரத்துக்கான இடப்பெயர்ச்சிகளால் நகரங்கள் நெருக்கடிக்குள்ளாவது குறையும், மாநிலம் எல்லா பகுதிகளிலும் சீராக வளர்ச்சி பெறும். (இப்போ, சென்னை, கோவை, மதுரை, திருச்சு, நெல்லை, ஹோசூர் மட்டும் தான் வளர்ந்திட்டு இருக்கு. இதை தடுக்க தான் கடந்த திமுக ஆட்சியில் கங்கைகொண்டான், பெரம்பலூர், செய்யாறு, நிலக்கோட்டை மாதிரியான பின் தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க சலுகைகள் கொடுத்தாங்க. அதன் மூலமா அந்த பகுதிகள் வளர்ச்சி பெறும்ன்றது நோக்கம்! இதை பத்தி இன்னொரு பதிவு தனியா அப்புறமா போடுறேன்!)

பின் தங்கிய இடங்களில் பெரும் தொழிற்சாலைகள் தொடங்கணும்னா, முதலீடு அதிகமா தேவைப்படும். நம்ம நாட்டில் முதலீடும் தொழில்நுட்பமும் கிடைக்காதபோது நாம வெளிநாட்டில் இருந்து அதை எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டுக்காரன் நம்மளை நம்பி முதலீடு செய்யணும்னா, நாம வளர்ந்திட்டு இருக்கிறதை காட்டியாகணும். அதுவும் சீரான வளர்ச்சியை காட்டணும்.

உதாரணமா, வீடு கட்ட ஒரு இடத்தை நாம வாங்குறதா இருந்தா கூட அந்த இடத்தில் நாம போடுற முதலீடு பிற்காலத்தில வளருமான்னு யோசிக்கிறோமில்லே, அதே மாதிரி இந்தியாவில் செய்யப்படும் முதலீடு நல்லா வளருமான்னு வெளிநாட்டுக்காரன் யோசிச்சு முடிவு செய்ய இந்த GDP வளர்ச்சி விகிதம் தான் அடிப்படை.

நான் முதலிலேயே சொன்னமாதிரி 2% வளர்ச்சின்னா கூட பரவாயில்லை. சீரா இருந்தா நம்பி முதலீடு செய்வான். ஆனா, ஒரு வருஷம் 8% மறுவருஷம் 3% மாதிரி ஏற்றத்தாழ்வு இருந்தா முதலீடு செய்ய யோசிப்பான். ஷேர் டிரேடிங் செய்யுற நம்ம பசங்களுக்கு ஈசியா புரியும். ஒரு ஷேரை வாங்கறதுக்கு முன்னாடி அது கடந்த ஒரு வருஷத்தில் எப்படி விலை இருந்ததுன்னு பார்த்து தானே அதில் முதலீடு செய்யுறதா வேண்டாமான்னு யோசிப்போம். கிட்டத்தட்ட அதே டைப் தான்.

இப்போ, நம்ம இந்தியாவின் இப்போதைய நிலையை பார்க்கலாம்.2009-10 & 2010-11 ஆண்டுகளில் GDP வளர்ச்சி விகிதம் சுமார் 8.4%. 2011-12ல் அது 6.5% னு குறைஞ்சுது. இந்த வருஷம் 5.5% தான் வரும்னு கணக்கிட்டிருக்காங்க. இந்த லட்சணத்தில் இருந்தால் எவன் நம்பி முதலீடு செய்வான்?

கடந்த 10 வருஷத்தில் இந்தியாவின் வளர்ச்சி நல்லா தான் இருக்கு. இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் புண்ணியத்தில் 1990களில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால நாம அபரிமிதமா வளர்ச்சி அடைஞ்சிருக்கொம்ன்றதை மறுக்க முடியாது. ஆனா வருஷா வருஷம் அந்த வளர்ச்சி சீரா இல்லாம, ஏற்ற தாழ்வோட இருக்கு! இது உலக பொருளாதார வரைபடத்தில் இந்தியாவை ஒரு நிச்சயமற்ற தன்மையில் தான் இப்பவும் வெச்சிருக்கு. கடந்த 2 வருஷமா, நமக்கு வர்ற முதலீடுகள் லேசா குறைய தொடங்கி இருக்கு.

சரி, ஏன் இப்படி குறையுது? உற்பத்தி குறைப்பு, ஏற்றுமதியை விட அதிகமா இறக்குமதி இருக்கிறது, பணவீக்கம், உலக பொருளாதாரத்தில் ஏற்படுற மந்த நிலை மாதிரியான ஸ்டாண்டார்டு காரணங்கள் பல இருக்கு. இது தவிர நீங்களும் நானும் உட்பட நாம ஒவ்வொருவரும் செய்யுற வரி ஏய்ப்பும் ஒரு காரணம்

சிறுதொழில்களில் செய்யப்படும் உற்பத்தி பொருட்கள் அத்தனையையும் அவங்க கணக்கு காட்டி அதுக்கு வரி கட்டுறதில்லை. பெரும் தொழிற்சாலைகளால் அப்படி கணக்கு காட்டாம உற்பத்தி செய்ய முடியாது. அதனால் இந்த சிறுதொழில்களில் செய்யப்படும் உற்பத்திகளில் சில, வரிகட்டறதை தவிர்க்கறதுக்காக கணக்கில் காட்டாம விடறதால, அது GDP கணக்கெடுப்புக்கு வர்றதில்லை. விற்பனை விலையை வெச்சு எடுக்கப்படுற GDP கணக்கெடுப்பில், முறைசாரா வியாபார நிறுவனங்களின் வணிகம் (நாட்டின் அதிகமான வணிகம் நடக்கும் சந்ததகள், மளிகை கடைகள் மாதிரியானவை) கணக்கில் வருவதில்லை. இதன் காரணமா GDP கணக்கில் குறைவு ஏற்படுறதுண்டு! அதாவது உற்பத்தி ஆகுது, வியாபாரமும் ஆகுது. ஆனா, அது கணக்கில் வராததால GDP அடி வாங்குது. இதில் நாம எங்கே வர்றோம்னு கேட்கிறீங்களா? வரியை தவிர்க்கறதுக்காக பில் இல்லாம பொருட்களை வாங்குறோமே.. பத்தாதா? பில் போடுறவனை கூட வேண்டாம்னு சொல்லி செங்கல் ஜல்லி மணல் கம்பின்னு லட்சக்கணக்கில் கணக்கில் வராம வரி கட்டாம செலவு செஞ்சு வீடு கட்டினவங்க கோடிக்கணக்கில இருக்காங்க நாட்டில!

GDP அடி வாங்குறதால தனி மனிதனுக்கு என்ன பிரச்சனை?

முதலீடு குறையும், அதனால் தொழில்வளர்ச்சி குறையும், உள்கட்டமைப்பு வசதி கிடைக்காது, தொழிலுக்காக இடம்மாறுதல், அதன் காரணமா நகரங்களில் நெருக்கடி, உற்பத்தி குறைவு/கணக்கில் காட்டாத வியாபாரங்களால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு, அதை சரிக்கட்டுவதற்காக ஏற்கனவே இருக்கிற வரிகளை அதிகப்படுத்தறது, அதன் காரணமா விலைவாசி உயர்வு, பணவீக்கம்னு எல்லா அடியும் நமக்கு தாங்க!

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்த தகவல் படி உலகிலேயே பொதுமக்களுக்கு குறைவான வரி சுமை உள்ள நாடு இந்தியா தான். உலக நகரங்களிலேயே வரி சுமை மிக குறைவா இருக்கிற நகரம்.. நம்புங்க.. நம்ம சென்னை தான்!

2007ம் வருஷம் அப்போதைய திமுக அரசு வாட் வரி விதிப்பு முறையை கொண்டுவந்தது. அதற்கு முந்தய அதிமுக அரசு வாட் வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவிச்சதால் 2004ல் அமலாகவேண்டிய வாட், திமுக ஆட்சிக்கு வரும் வரை ககத்திருக்கவேண்டியததயிருச்சு. 2007ல் வாட் வரி கொண்டுவரப்பட்டபோதும், இப்போ FDI க்கு எதிரா போராடுற இதே வணிகர்கள் வாட் வரிவிதிப்பை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடத்தினாங்க. அது ரொம்ப சிக்கலான விஷயம். எங்களை அழிச்சிரும்னு எல்லாம் பயப்பட்டாங்க. (ஆக்சுவல்லி, அவங்க கணக்கு காட்டி ஆகணுமேன்னு தான் போராடினாங்கன்றது வேறே விஷயம்!) ஆனா எல்லா எதிர்ப்பையும் மீறி, 2007ல் வாட் வரி அமலாக்கப்பட்டது. (உபரி தகவல்: இந்தியாவிலேயே வெச்சு, மிக மிக சுலபமான எளிமையான வரி விதிப்பு முறை அமலில் உள்ள மிக சில மாநிலங்களில் நம்ம தமிழகம் தான் முதலிடம்!) அதுக்கு அப்புறம் மிக பெரிய வளர்ச்சி, தமிழக தொழில்துறையிலும், வர்த்தகத்திலும் ஏற்பட்டது.1990களில் மன்மோகன்சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்களால் தான் இந்திய பொருளாதார்ம் உலக பொருளாதாரத்துக்கு இணையா வளர்ந்தது. தொழில் வளர்ச்சி பல மடங்கு பெருகிச்சு. கிராமங்களில் சின்ன சின்ன வேலை செஞ்சு கிடைச்ச காசை சம்பாதிச்சிட்டிருந்த பட்டதாரிகளின் வாழ்க்கை தரம் அடியோட மாறி, உயர்தரமா மேம்பட்டது. உலக சந்தைக்கு இந்தியாவை திறந்துவிட்டதில், பல நவீன வசதிகள், பொருட்கள், வாகனங்கள்னு மிக தரமான வாழ்க்கை வாழற வாய்ப்பு நமக்கு கிடைச்சது. சம்பள உயர்வு, பொருளாதார மேம்பாடு, தனிநபர் வாழ்க்கை தர உயர்வுன்னு எல்லாம் சாத்தியப்பட்டதே, அந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் தான்.

3 வருஷம் முன்னாடி, அமெரிக்கா, ஐரோப்பான்னு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளெல்லாம் ஆட்டம் கண்டு கிட்டத்தட்ட தகர்ந்து போனப்ப கூட, இந்திய பொருளாதாரம் மட்டும் சும்மா கன்மாதிரி தலை நிமிர்ந்து நின்னிட்டிருந்ததுக்கும் அந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தான் முக்கிய காரணம்.

இப்போ மீண்டும் ஒரு இக்கட்டான நிலையில் நாம இருக்கோம்! அதாவது வளர்ச்சி இருக்கு. ஆனா சீராக இல்லை. ஏறி இறங்கி மாறுபட்டுட்டே இருக்கு. அதை தடுக்கறதுக்காக, சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட்டு வர்றாங்க! வங்கிகளின் கையிருப்பான CRR கம்மி பண்ணி, பணப்புழக்கத்தை அதிகரிச்சிருக்காங்க. வட்டிவிகிதங்கள் குறைச்சிருக்காங்க. இன்னும் மறைமுகமா நிறைய சின்ன சின்ன நடவடிக்கைகளை ஒவ்வொருவாரமும் எடுத்துட்டே வர்றாங்க. பொருளாதார மந்தநிலைக்கு எதெல்லாம் காரணம்னு ஒவ்வொண்ணா கண்டு பிடிச்சு அதையெல்லாம் மெல்ல மெல்ல நீக்கிட்டு வர்றாங்க. இது தவிர, பெரிய அளவிலான சீர்திருத்தங்களும் அப்பப்போ அறிவிச்சிட்டு வர்றாங்க. அதில் சில விஷயங்களுக்கு மட்டும் கொஞ்சம் எதிர்ப்பு இருக்கு. எதிர்க்கணுமேங்கறதுக்காக மட்டுமே விஷயம் புரியாம எதிர்க்கறவங்களை எல்லாம் புறக்கணிச்சிட்டு எல்லா சீர்திருத்தங்களையும் அமல்ப்படுத்தி GDP வளர்ச்சியை சீராக்குவது தான் இப்போதைய மத்திய அரசின் நோக்கம். இது தொடர்பா மன்மோகன் சிங் கொடுத்திருக்கும் விளக்கத்தில் கூட, நாட்டு நலனுக்கான சீர்திருத்த நடவடிக்கைகளில் யாருடைய மிரட்டலுக்கும் பணியமாட்டோம்னு தெளிவா சொல்லியிருக்காரு! அது ஒண்ணு தான் இப்போதைக்கு நமக்கு கிடைச்சிருக்கிற ஒரே நிம்மதி!

எப்படியும், நாம வரி ஏய்ப்பை நிறுத்தப்போறதில்லை. மளிகை கடைகள், சிறு தொழில்கள் யாரும் ஒழுங்கா கணக்கு காட்ட போறதில்லை. இருக்கிற தகவல்களை மட்டும் வெச்சு, அதை எப்படி மேம்படுத்தி வளரவைக்கிறதுங்கறதுதான் உண்மையான சவால்.

நல்லவேளையா இப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மன்மோகன்சிங் பிரதமரா இருக்காரு! வேறே யாராவது இருந்திருந்தா… நினைச்சு பார்க்கவே முடியலை!

3 comments:

 1. நீங்க சொல்ற மாதிரி பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள் என சொல்லித்தான் எனக்கு தர்ம அடி போடறதுக்கு வரிசையா காத்துகிட்டிருக்காங்க.நேர குறைவால் பதில் சொல்ல முடியாமல் ஒளிஞ்சுகிட்டிருக்கேன்.எதுக்கும் பக்கபலமா இருக்கட்டுமென்று வால் மார்ட்டெல்லாம் போறதுக்கு முன்னாடி இந்த பதிவை குறிப்பு எடுத்துக்கொள்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 2. தர்ம அடி பின்னூட்ட நண்பர்கள் யாராவது இந்தப் பக்கம் எட்டிப்பார்த்தால் நாம் வரும் வரை நமக்கு பக்கபலமா சதீஷ்ன்னு ஒருத்தரை காவலுக்கு விட்டுப் போகிறேன்:)

  ReplyDelete
 3. வரி ஏய்ப்பு என்பது சிறு தொழில் முதல் பெரும் தொழில் வரை ஊழல் மாதிரியே பரவிக்கிடக்கிறது.
  தனிமனித வளர்ச்சிக்கும்,நாட்டின் வளர்ச்சிக்கும் ஒழுங்கான வரிகட்டுதல் முக்கியமானது.திரைப்படத்துறை வெள்ளை கறுப்பு பண முறை காலங்காலமாக தொடர்ந்து நடைபெறுகிறது.பெரும் வருவாய் துறைகளை முதலில் சரிபடுத்துவது முக்கியம்.

  யாரோ ஒருவரின் ஊதுகுழலில் 2G,நிலக்கரி ஊழல் இன்னபிற ஊழல்கள் வெளிவந்தது போல் ஊழல்களை வெளிக்கொணர்வதும் நிகழ்வது வரவேற்க தக்கது.

  ஒரேயடியாக ஊமை,தூங்குமூஞ்சின்னு பிரதமரை திட்டாமல் வெளியே போகுற காலத்துக்காவது துணிவான முடிவை எடுப்பதை வரவேற்போம்.

  ReplyDelete

Printfriendly