Wednesday, September 12, 2012

கூடங்குளம் போராட்டம் – எனது பார்வையில்!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் மிக வலுத்து நேற்று முன் தினம் போலீஸ் தடியடி, துப்பாக்கி சூடு என்றெல்லாம் நடைபெற்று மிக பரபரப்பாகி கிடக்கிறது தமிழகம். இந்த செயலுக்கு ஜெயலலிதாவின் மோசமான அணுகுமுறை தான் காரணம் என திமுக தலைவர் கலைஞர் உட்பட, கிட்டத்தட்ட அனைவருமே குற்றம் சாட்டிவிட்டார்கள். சமூக இணைய தளங்களில் தமிழக அரசுக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் மிக கடுமையான விமர்சனங்களும், கண்டனங்களும் வைக்கப்படுகின்றன. அப்பாவி பொதுமக்களின் அமைதியான போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு போலீஸ் கையாள்வதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் தமிழக அரசு செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணுமின் நிலையத்தால் தங்களுக்கு ஆபத்து நேரும் என அச்சம் தெரிவித்த அந்த ஊர் மக்களுடன், அணு உலைக்கு எதிரான இயக்கங்களும் கை கோர்த்துக்கொண்டு நீண்டகாலமாக போராடி வருகின்றன. திட்டம் இப்போது நிறைவடைந்து செயல்படும் தறுவாயில் வந்து இருப்பதால் அதை எப்படியாவது முடக்கி மக்களை பாதுகாக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.

இந்த அணு உலை காரணமாக அச்சம் தெரிவித்த மக்களையும், போராட்டக்காரர்களையும் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களது கருத்துக்களையும், சந்தேகங்களையும், அச்சத்தையும் முழுமையாக கேட்டறிந்தது. அதன் அடிப்படையில், கூடங்குளம் திட்டப்பணிகளை, நிறுத்திவைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை வைத்தது. மக்களின் அச்சத்தத களையும் வரை திட்டத்தத செயல்படுத்தவேண்டாம் என, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை அவசர கூட்டம் 22.09.2011ல் தீர்மானம் இயற்றி அது 07.10.2011ல் பிரதமரிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வல்லுநர் குழு ஒன்று தமிழகம் வந்து கூடங்குளம் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி, மக்களின் சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் உரிய வகையில் விளக்கங்கள் கொடுத்தது. அத்துடன் அப்போது அந்த பிரச்சனை அடங்கி, மக்கள் இயல்பு நிலைக்கும் திரும்பிவிட்டனர்.

வல்லுநர் குழுவின் விளக்கங்கள் தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழக அரசு முழுமையாக இந்த விஷயத்தின் உண்மை தன்மையை உணர்ந்து, திட்டப்பணிகளுக்கான தனது அனுமதியை வழங்கியது.

மேலும், மக்களின் அச்சத்தை முழுமையாக களையவும், போராட்டத்தை விலக்கவும், தமிழக அரசு, மத்திய அரசு, அணுவிஞ்ஞானிகள் ஆகியோர் அடங்கிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் மீண்டும் கூடங்குளம் பகுதியில் மக்கள் கருத்துக்கள் அறிந்து அதற்கு உரிய விளக்கங்கள் கொடுத்து மக்களின் அச்சத்தை போக்கினர். மேலும், போராட்டக்காரர்களுடனும் 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடைசியாக 31.01.2012 அன்று நடைபெற்ற இறுதி கட்ட பேச்சுவார்த்தையில், போராட்ட குழுவில் இருந்து ஒரே ஒரு நபர் மட்டுமே கலந்து கொண்டார். மற்றவர்கள் அரசின்/வல்லுநர் குழுவின் விளக்கங்களை ஏற்றுக்கொண்டனர். மீண்டும் அங்கே அமைதி திரும்பியது.

திட்டப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டி, தமிழக அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியமும், இந்திய அணுசக்தி துறையும் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, மக்களின் வரிப்பணத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்த அணுமின் திட்டம் தனது நிறைவு பகுதியை தொட்டது. இதை எதிர்த்து போராட்டக்காரர்கள் சார்பில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும், வல்லுநர் குழு, மத்திய மாநில அரசுகளின் அஃபிடவிட்டுகளின், விளக்கங்களின் பேரில் தள்ளுபடி செய்து, திட்டப்பணிகள் தொடர அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில், எப்படியேனும் திட்டத்தை நிறுத்தியே ஆகவேண்டும் என்கிற நோக்கில், மீண்டும் பதற்றத்தை உருவாக்கிய போராட்ட குழுவினர், மீண்டும் மக்களை திரட்டி அணுமின் நிலையத்தினை முற்றுகை செய்வதாக அறிவித்தனர். பொதுசொத்துக்கு நாசம் விளைவிக்கும் செயலை தடுக்கும் பொருட்டு, அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, போராட்டத்தை கைவிடுமாறு அரசு வேண்டுகோள் விடுத்தது.

எந்த விளக்கத்தையும், வேண்டுகோளையும் சட்டை செய்யாமல், போராட்டம் ஒன்றே குறி என தொடங்கிய முற்றுகை போராட்டத்தின்போதும், நெல்லை கலெக்டர் திரு. செல்வராஜ் அவர்கள் பொறுமையாக மீண்டும் மீண்டும் போராட்டத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தபடி இருந்தார். பகல் சுமார் 11.30 மணிஅளவில், போராட்ட கூட்டத்திலிருந்து சிலர் போலீசை தாக்கியதை தொடர்ந்து முதலில் கண்ணீர் புகையும், பின்னர் தடியடியும் நடத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் போராட்ட பகுதிக்கு சம்மந்தமற்ற மணப்பாடு பகுதியில், காவல் துறை சோதனை சாவடியை போராட்டக்காரர்களில் சிலர் சூறையாடி, தீவைத்து தாக்கியதை தொடர்ந்து அங்கே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இருந்தே முன்பே திட்டமிட்டு பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்த்த அவர்கள் தயாராகி இருந்தது தெளிவாகிறது.

அரசு, தன்னால் இயன்றவரை மக்களின் அச்சத்தை களைய நடவடிக்கை எடுத்து, போராட்டத்தை தவிர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தாலும், போராட்டக்காரர்களின் எதிர்பாராத வன்முறை காரணமாக பெரும் அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டது.



இதில் தமிழக அரசையோ, காவல்துறையினரையோ குற்றம் சொல்ல எந்த நியாயமும் இல்லை. யாரோ சிலரால் கற்பனையாக கிளப்பிவிடப்பட்ட அச்சங்கள், அதை அடிப்படையாக வைத்து நிகழ்ந்த போராட்டங்கள், அந்த போராட்டத்துக்கும் மதிப்பளித்து அரசு தெரிவித்த விளக்கங்கள், நீதிமன்றங்கள் எல்லா ஆவணங்களையும் முழுமையாக ஆராய்ந்து கொடுத்த அனுமதிகள், எனினும், சட்டத்தையும், உண்மை நிலையையும், அறிவியல் ரீதியான விளக்கங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், தாங்கள் சொல்வது படி அரசாங்கங்கள் கேட்கவேண்டும் என அரசை மிரட்ட முயன்ற ஒரு போராட்ட குழு தான் முழுமையான பொறுப்பாக முடியும்.

“என் பிள்ளை குறும்பு தான் செய்வான்..எவ்வளவு சொன்னாலும் அடங்கமாட்டான்..எதை சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டான்.. ஆனாலும் அவன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது” என ஆசிரியர்களிடம் சொல்லும் பெற்றோர்களை போல தான் பலரும் கடந்த இரு தினங்களாக, போராட்டக்காரர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகளை சாடி இருக்கின்றனர்.

“போராட்டத்துக்கு முதலில் ஆதரவு அளித்த ஜெயலலிதாவின் செயல் தான் இத்தனைக்கும் காரணம்” என்று இன்றைய தினம் கலைஞர், சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக அரசியலாக்கிக்கொண்டு பேட்டி அளித்திருக்கிறார். உண்மை நிலை என்ன என்பது எல்லோருக்குமே தெரியும்! அரசு முதலில் மக்களின் அச்சத்தை கவனத்தில் கொண்டு, திட்டப்பணிகளை நிறுத்தவும், மக்களின் அச்சத்தை போக்கவும் மத்திய அரசை கேட்டது. மத்திய அரசு கொடுத்த விளக்கங்கள் திருப்தியாக இருந்ததால் தொடர்ந்து திட்டப்பணிகள் நடைபெறவும்  அனுமதிக்கப்பட்டது. இதில் என்ன தவறு இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், தமிழக அரசு, மக்களின் கவலையை தனது கவலையாக பாவித்து அதற்கு தக்கபடி செயல்பட்டு இருக்கிறது. மக்கள் போர்வையில் சிலர் நடத்திய வன்முறையை தனது கடமையின்படி ஒடுக்கியுள்ளது. இதில் தமிழக அரசை குற்றம் சொல்ல எதுவும் இல்லை.

இப்போது திடீரென்று இத்தனை தீவிரமான எதிர்ப்பு ஏன்?

அபரிமிதமான மக்கள் தொகையையுடைய எதிர்கால இந்தியாவின் மின் தேவையை கருத்தில் கொண்டு, 1989ல் இந்தியாவும் ரஷ்யாவும் செய்துகொண்ட உடன்படிக்கை படி, நெல்லை மாவட்டத்தின் தென் கோடியிலுள்ள கூடங்குளத்தில் ஒரு அணுமின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசாங்கம். இடைப்பட்ட காலங்களில் ராஜீவ், வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ்,வாஜ்பாயி என பல பிரதமர்கள், பல கட்சிகள் மத்திய அரசினை நடத்தினாலும், இந்த திட்டம் எந்த பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வந்தது.



கூடங்குளம் பகுதி ஒரு ஒதுக்குப்புறமான மக்கள் குடியிருப்பு அல்லாத பகுதி என்பதால் மட்டுமல்ல, அது இயற்கை சீற்றங்கள் அதிகம் தாக்க வாய்ப்பில்லாத பகுதி என்பதாலும் தான் அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏற்கனவே அந்த பகுதியில் மஹேந்திரகிரியில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட அந்த இடம் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி தான்.

2001ம் ஆண்டு நான் கூடங்குளம் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதியில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்துக்கு எனது அலுவல் விஷயமாக சென்ற போது, ரொம்பவே கஷ்டப்பட்டேன். சென்னையில் இருந்து நெல்லை, பின் வள்ளியூர் வரை பஸ்சில். வள்ளியூரில் இருந்து ராதாபுரத்துக்கு எப்போதாவது ஒரு பஸ் போகும். மிக மோசமான அந்த ரூட்டில் அப்போதெல்லாம் தனியார் இயக்கும் வேன் தான் ஒரே பயண துணை. ராதாபுரத்தில் இருந்து, இருக்கந்துறை வழியாக கூடங்குளத்துக்கு எனது நண்பரின் பைக்கில் தான் சென்றேன்.

கூடங்குளத்தில் திட்டப்பணிகளுக்காக வந்திருந்த எண்ணற்ற தொழிலாளர்கள் அங்கே தற்காலிகமாக தங்கி இருந்தனர். இது தவிர கட்டுமான நிறுவனத்தின் எஞ்சினியர்கள், டெக்னீசியன் என பலரும் உண்டு. அதை அடிப்படையாக வைத்து அவர்களது வசதிக்காக (அ) அவர்களது தேவையை நம்பி அங்கே அப்போது தான் சிற்சில கடைகள், ஹோட்டல்கள் ஏற்பட தொடங்கி இருந்தது.

2005ல் நான் மீண்டும் சென்ற போது, நிலமை தலைகீழ். (இந்த முறை சென்னை-நாகர்கோவில் வரை ஒரு பஸ், பின் நாகர்கோவில்-திருச்செந்தூர் பஸ்ஸில் கூடங்குளம் சென்று இறங்கினேன்) கூடங்குளம் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியாக மாறி, கிட்டட்த்தட்ட ஒரு சிறிய கிராமமாகவே மாறிவிட்டது. இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதும், திட்டப்பணிகள் அமலாக தொடங்கியவுடனேயே அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டுவிடுவார்கள் என்றும், என்னிடம் என் நண்பர் சொன்னார். அப்படி அந்த இடத்தை விட்டு செல்ல அவர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள், என்ன பிரச்சனை வரப்போகுதோ என அப்போது நான் அவரிடம் எனது பயத்தை சொன்னதுண்டு.


2009 வாக்கில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிவிட்டது. 2006ல் வந்த சுனாமி, அந்த பகுதியை அதிகம் பாதிக்காதபடிக்கு, மேற்கில் அமைந்திருக்கும் இலங்கை தீவு காப்பாற்றிவிட்டாலும், அது தொடர்பான அச்சம் இப்போதும் அங்குள்ள மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. பூகம்ப தாக்குதல் குறைவான பகுதியாக தேர்ந்தெடுத்து நவீன கட்டிட முறையிலும் பாதுகாப்பு உத்திகளாலும் அந்த திட்டம் கட்டப்பட்டு வருவதாக எனது நண்பர் என்னிடம் விளக்கினார். நான் கட்டுமான பணிகளை பலமுறை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். திட்ட வரைபடங்களையும் படித்து பார்த்திருக்கிறேன். எனக்கு முழுமையான திருப்தியேன் இப்போதும் நிலவுகிறது.

ஜப்பானில் அணு உலை விபத்துக்குள்ளானதை உதாரணம் காட்டி, இங்கேயும் அப்படி நிகழும் என ஒரு பீதி கிளப்பி விடப்பட்டது. ஜப்பான் அடிக்கடி நில நடுக்கம் நடைபெறும் நாடு. அதுவும் நில தட்டுக்கள் நிலையற்ற சிறு சிறு தீவுக்கூட்டம். இந்தியாவோ, ஒருங்கிணைந்த நிலப்பரப்பு. பூகம்ப பாதிப்பு மிக மிக குறைவான பகுதி. இதையெல்லாம் ஒப்பிட்டாலே, ஜப்பானுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு என்பது எல்லோருக்குமே விளங்கும்.

ஜப்பானில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணு உலை தான் விபத்துக்குள்ளாகியது. கூடங்குளம், தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடனும், இதுவரை அணு உலைகளில் ஏற்பட்ட எல்லா விபத்துக்களையும் கருத்தில் கொண்டு, அதை தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் கட்டப்பட்டு வருகிறது.இந்தியாவிலேயே 4 அணு உலைகள் பாதுகாப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்தும் அணு உலை மீதான அச்சம் தேவையற்றது.

முல்லைப்பெரியார் இடிந்துவிடும், இடிந்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கேரளம் எப்படி கற்பனையான பயத்தை கொடுக்கிறதோ அதே போன்ற ஒரு கற்பனையான பயம் தான், அணு உலை விபத்துக்குள்ளாகி விடும், எங்களுக்கு பாதிப்பு வரும் என சில போராட்டக்காரர்கள் சொல்வதும். முல்லைப்பெரியார் பலமாக உள்ளது, விபத்து நிகழ வாய்ப்பில்லை என்று வல்லுநர் குழு, நீதிமன்ற தீர்ப்புக்களை வைத்து கேரளத்து எதிராக வாதாடும் நாமே தான், கூடங்குளம் விஷயத்தில் வல்லுநர் குழு அறிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகளை நம்பமாட்டோம் என சதிராடிக்கொண்டிருக்கிறோம். விசித்திரமான மனநிலை தான் இது!

முல்லைப்பெரியார் விஷயத்திலும், கூடங்குளம் விஷயத்திலும் யாரோ சிலரால் ஏதோ ஒரு நோக்கத்திற்காக, மக்களிடம் கற்பனையான பீதியை கிளப்பி, மக்களை அச்சத்துக்குள்ளாக்கி, அரசாங்கங்களை அச்சுறுத்தி பார்க்கும் ஒரு சென்சேஷனல் போராட்டம் நடைபெற்று வருகிறது. எதையும் அலசி ஆராயும் பகுத்தறிவுள்ள எவருமே அது போன்ற ஆதாரப்பூர்வமற்ற வதந்திகளை புறக்கணிக்கவே செய்வார்கள்!

போராட்டம் நடத்துவோருக்கும் கூட,  திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திடீரென்று துவங்கப்பட்டிருக்கும் இந்த போராட்டத்துக்காக அணு உலையை மூடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்காது. இந்த போராட்டத்தின் நோக்கம், கொஞ்சம் விளம்பரத்தையும் நிறைய புகழையும் வேண்டுமானால்  அவர்களுக்கு   கொடுக்கக்கூடுமேயல்லாமல், எந்த விதமான பலனையும் தங்களுக்கு கொடுக்காது என்று அவர்களுக்கும் தெரிந்தே தான் இருக்கும்!

அவர்கள் போராடுவதில் அவர்களுக்கு என்று ஒரு சுய நோக்கம் இருக்கிறது. ஆனால் எல்லாவிதமான தகவல்களும் அறிந்த, சுயமாக சிந்திக்கும் திறனுடைய, பகுத்தறியும் தன்மையுள்ள, இளைய சமுதாயமும் கூட, போராட்டக்காரர்கள் சொல்லும் சந்தேகங்களும், அச்சங்களும் நியாயமானவை தானா என கொஞ்சம் கூட யோசித்துப்பார்க்காமல், உண்மை நிலவரம் என்ன என்பதை கூட தெரிந்துகொள்ள விரும்பாமல்/முயலாமல், பொத்தாம்பொதுவாக விமர்சித்துவருவது தான் கவலையளிக்கிறது.

10 comments:

  1. இந்த சிக்கலான பிரச்சனையை வல்லுநர் குழுக்கள் ஆராய்ந்து பாதுகாப்புக்கு உத்தரவாஹம் அளிக்க முயற்சி செய்யவேண்டும்

    ReplyDelete
  2. இது போன்ற விபத்துகளோ, பூகம்ப விபத்துகளோ, தீ விபத்துகளோ அந்த ஒரு தலைமுறையை மட்டும் தான் பாதிக்கும், அணு உலை விபத்து தொடரும் அனைத்து தலை முறையயும் பாதிக்கும், நீ எப்படியாவது போ, வருங்காலத்துக்கு ஏண்டா பாரத்தை வச்சிட்டு போறீங்க

    ReplyDelete
  3. 18 மைல் தொலைவில் தமிழ் எதிரி சிங்களவன் கைகுண்டு வீசினாலேயே பற்றி எரியும் கூடங்குளம் அணுக்குண்டு நிலையம். இதுவா பாதுகாப்பான இடம். குமரி, நெல்லை மாவட்ட மக்களிடன் காதுகளும் இருக்காது, தோட்டங்களில் பூக்களும் பூக்காது, நீங்கள் காதுகளில் பூச்சூட. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?

    ReplyDelete
  4. The trend towards atomic energy has changed. It is well documented that atomic energy is not beneficial for the cost spending and it is environmentally dangerous. Unless you have an intention to gather the by products for producing atomic bomb you don't need it.
    Ok, can all of you supports atomic plant in koodankkulam shift your homes near the plant and give your homes to the poor people who are protesting the plant?atleast Shift the residences of CM, Governor, etc. to koodankkulam. It will make these protesting poor to accept it is safe.

    ReplyDelete
  5. கூடங்குளம் பகுதி ஒரு ஒதுக்குப்புறமான மக்கள் குடியிருப்பு அல்லாத பகுதி என்பதால் மட்டுமல்ல, அது இயற்கை சீற்றங்கள் அதிகம் தாக்க வாய்ப்பில்லாத பகுதி என்பதாலும் தான் அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏற்கனவே அந்த பகுதியில் மஹேந்திரகிரியில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட அந்த இடம் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி தான்.

    2001ம் ஆண்டு நான் கூடங்குளம் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதியில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்துக்கு எனது அலுவல் விஷயமாக சென்ற போது, ரொம்பவே கஷ்டப்பட்டேன். சென்னையில் இருந்து நெல்லை, பின் வள்ளியூர் வரை பஸ்சில். வள்ளியூரில் இருந்து ராதாபுரத்துக்கு எப்போதாவது ஒரு பஸ் போகும். மிக மோசமான அந்த ரூட்டில் அப்போதெல்லாம் தனியார் இயக்கும் வேன் தான் ஒரே பயண துணை. ராதாபுரத்தில் இருந்து, இருக்கந்துறை வழியாக கூடங்குளத்துக்கு எனது நண்பரின் பைக்கில் தான் சென்றேன்.

    þó¾ Åâ¸û §À¡Ðõ ܼíÌÇõ ¬Àò¾¡ÉÐ ±ýÚ «Å§È ´òÐ즸¡û¸¢È¡÷.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. கொஞ்சம் இதையும் படிங்க....
    http://newstbm.blogspot.com/2012/09/blog-post_13.html

    ReplyDelete
  8. நீங்கள் ஏதோ நடுநிலைமையுடன் எழுதுவது போன்று ஆரம்பித்து அ.இ.அ.தி.மு.க கொள்கைபரப்பு செயலாளராகவும் ,மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாகவே முடித்து விட்டீர்கள்.

    மக்களாட்சியில் மக்களின் விருப்பமே மேலானது.மக்களின் பிரதிநிதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாத பட்சத்தில் ,மக்களே நேரடியாக களத்தில் இறங்கி போராடும் நிலை ஏற்படுகிறது.போராடும் மக்களின் நியாயங்களை புரிந்துகொண்டு ,மக்களின் நண்பனாக செயல்பட வேண்டியது அரசின் கடமை.
    அதை செய்யாமல் காக்கி சட்டை ரவுடிகளை ஏவி விடுவதென்பது ,அரச பயங்கர வாதமே அன்றி வேறொன்றும் இல்லை.

    இது மக்களின் தன்னெழுச்சி போராட்டம் .மக்களாட்சியில் மக்களின் தீர்ப்பே இறுதியானது .

    ReplyDelete
  9. மின்சாரம் தயாரிப்பதல்ல !
    அணுகுண்டை செய்வதற்கான
    புளூட்டோனியத்தை தயாரிக்கவே
    கூடங்குளம் அணுவுலையை
    இங்கே நிர்மானிக்கிறார்கள். ..
    இங்கே மின்சாரம் தயாரிக்கப் படும்
    என நம்பிக் கிடக்கிறவன்
    எந்த சமாச்சாரமும் தெரியாத
    அரை மண்டையர்கள் !

    ReplyDelete
  10. மின்சாரம் தயாரிப்பதல்ல !
    அணுகுண்டை செய்வதற்கான
    புளூட்டோனியத்தை தயாரிக்கவே
    கூடங்குளம் அணுவுலையை
    இங்கே நிர்மானிக்கிறார்கள். ..
    இங்கே மின்சாரம் தயாரிக்கப் படும்
    என நம்பிக் கிடக்கிறவன்
    எந்த சமாச்சாரமும் தெரியாத
    அரை மண்டையர்கள் !//

    ...Amen.

    Also go and check the history of Idinthakarai and Koodangulam and rewrite your fiction...

    ReplyDelete

Printfriendly