இந்திய அரசியலமைப்பு, ஜனநாயகம்,
சட்டம் போன்றவற்றின் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு!
நான் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு
முதன் முதலில் சென்றது, ஒரு தகவலை சரிபார்ப்பதற்காக தான்! எனது நண்பர் ஒருவர், சென்னையின்
முதல் கலங்கரை விளக்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் இருக்கிறது. மத்திய கோபுரத்தின்
உச்சியில் செயல்பட்டு வந்த அந்த கலங்கரை விளக்கம் தான் சென்னை துறைமுகத்துக்கு வரும்
கப்பல்களுக்கான வழிகாட்டி. இப்போதும் அது செயல்படும் நிலையில் தான் இருக்கிறது. எனினும்,
தனியாக மெரினாவில் ஒரு பிரத்யேக கலங்கரை நிறுவப்பட்டபின், உயர்நீதிமன்ற கலங்கரை விளக்கம்
செயல்படுவதில்லை என்று எனக்கு ஒரு புதிய தகவலை சொல்லி இருந்தார். அதை சரிபார்க்கவும்,
அந்த கலங்கரை விளக்கத்தை காணவும் தான் நான் முதன் முதலில் சென்னை உயர்நீதிமன்றம் சென்றேன்.
சென்னை உயர்நீதிமன்றம் மிக
பழமையானது. நீண்ட வரலாற்று சிறப்புமிக்கது. மிக அற்புதமான தீர்ப்புக்கள், கருத்துக்கள்,
சட்ட முன்வடிவாக்கல்கள் போன்றவற்றை வெளியிட்டிருக்கிறது என்பன போன்ற விஷயங்கள் எல்லாம்
நீங்கள் எல்லோரும் நன்கு அறிந்தது தான்.
சமீப காலங்களில் என்னை மிகவும்
கவர்ந்த இரண்டு நீதிபதிகள், கற்பகவிநாயகம் மற்றும் சந்துரு ஆகியோர். சட்டம் என்பதையும்
தாண்டி, மனிதாபிமான அடிப்படையிலான தீர்ப்புகள்,சமூக மாற்றத்துக்கான தீர்ப்புகள், மக்கள்
நலன் சார்ந்த தீர்ப்புக்கள் பலவற்றை சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கிறது.
முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏவாக
இருந்த திரு. ப. ரங்கநாதன் (இப்போது திமுக) அவர்களுக்கு மிக விசித்திர தண்டனையாக, மதுரை
காந்தி மியூசியத்தில் 15 நாட்கள் சேவை செய்யவேண்டும் எனவும், மகாத்மாகாந்தி எழுதிய
சத்திய சோதனை நூலை படித்து பதிலளிக்கவேண்டும் என தண்டனை கொடுத்தவர், நீதியரசர் கற்பக
விநாயகம் அவர்கள் தான். தனது மேலங்கியில் எப்போதுமே ஒரு சிவப்பு ரோஜாமலர் குத்தியிருப்பார்.
சமூக மேம்பாடு, மக்கள் நலன்,
அரசு நிர்வாகம் போன்ற பல விஷயங்களில் நீதிபதி சந்துரு கொடுத்திருக்கும் தீர்ப்புக்கள்
முக்கியத்துவம் வாய்ந்தவை.
இவை தவிர, இதே சென்னை உயர்நீதிமன்றத்தில்
பல பல வினோதமான, சட்டப்படியும், மனசாட்சிப்படியும் ஏற்றுக்கொள்ளவியலாத சில நியாயமற்ற
தீர்ப்புக்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை பற்றியெல்லாம் பிறிதொரு சந்தர்ப்பத்தில்,
விரிவாக விவாதிக்கலாம்.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின்
150ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் இந்திய குடியரசு தலைவர் கலந்துகொண்டார்.
மேலும், முக்கிய விருந்தினராக தமிழக முதலமைச்சர், மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களும்
கலந்துகொண்டார்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்கான
அழைப்பை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே நேரடியாக முதல்வரை சந்தித்து, முறைப்படி வழங்கி
விழாவுக்கு அழைத்திருக்கிறார். முதல்வரும் விழாவில் கலந்துகொண்டு, வழக்கறிஞர்களுக்கான
பல பல சலுகைகளை அறிவித்து பாராட்டு பெற்றிருக்கிறார்.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க,
எனக்கு இந்த செய்திகளையெல்லம் படித்ததும் மனதுள் தோன்றிய முதல் கேள்வி, சட்டத்தை விட
வலிமையானதா ஜனநாயகம் என்பது தான்!
முதல்வர் ஜெயலலிதாவை பற்றி
அறிந்தவர்களுக்கு, அவர் எப்போதுமே சட்டத்தை மதித்ததில்லை எனப்தும், நீதிமன்றங்களை தனக்கு
வசதியான தீர்ப்புக்களுக்காக மட்டுமே அணுகியிருப்பதும் தெரிந்திருக்கும்.
டான்சி நில வழக்கில் உச்சநீதிமன்றம்,
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, விசித்திரமானதொரு தீர்ப்பை ஜெயலலிதாவுக்கு வழங்கி
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது சுவாரஸ்யமானது. அந்த தீர்ப்பை முழுமையாக தரவிறக்கி
படித்துப்பார்த்தபின் எனக்கு நானே கேட்டதுண்டு..முறைகேடாக சட்டத்துக்கு புறம்பாக, அதிகார
துஷ்பிரயோகம் மூலம் அபகரித்த டான்சி நிலத்தை ஜெயலலிதா, மீண்டும் அரசுக்கே திருப்பி
கொடுத்துவிட்டார் என்றாலும், அவரது செயல் அரசியல் சட்டத்தை மீறிய ஒன்று, அவர் ஆட்சி
செய்ய தகுதியற்றவராகிறார். எனினும் அவருக்கான தண்டனையை அவரே தனது மனசாட்சிப்படி தீர்மானித்துக்கொள்ளலாம்(!)
என்பது போல உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் இந்த தீர்ப்பின் அடிப்படையில், கொள்ளையர்கள்,
பிக்பாக்கெட் அடிப்பவர்கள் போன்றோரிடமும், அவர்களது குற்றச்செயல்கள் மூலம் திருடிய
பொருட்களை மீட்டுக்கொடுத்துவிட்டு, அவர்கள மன்சாட்சிப்படி ஏன் அவர்களை விடுதலை செய்துவிடக்கூடாது
என்று! சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்று எனக்கு அப்போதெல்லம் ஒரு பலத்த நம்பிக்கை
இருந்தது!
வெளிநாட்டில் இருந்து 3 கோடி
அமெரிக்க டாலர்கள் பிறந்தநாள் பரிசாக கிடைத்தது தொடர்பான வழக்கை 10 ஆண்டுகாலத்துக்கும்
மேலாக விசாரித்து வருவதை கருத்தில் கொண்டு, அந்த வழக்கையே ரத்து செய்த உயர்நீதிமன்ற
தீர்ப்பு வெளியானபோது, இதே அடிப்படையில் 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும்
எல்லா வழக்குகளையும் ரத்து செய்துவிடலாகாதா என்று ஏங்கியதும் உண்டு!
ஒரு வேட்பாளர் 2 தொகுதிக்கு
மேல் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது என்கிற சட்டம் தெளிவாக இருந்தும்,
4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து, (ஒவ்வொரு வேட்பு மனுவிலும் நான் 2 தொகுதிகளுக்கு
மேல் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்கிற டிக்ளரேஷனிலும் கையெழுத்து இட்டுவிட்டு)
அதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கை பழிவாங்கும் போக்கு என்று நீதிமன்றத்தை விமர்சனம் செய்த
ஜெயலலிதாவின் துணிச்சலை நான் வியந்ததுண்டு!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம்
வானத்தில் இருந்து குதித்தவர்களா என்ற அவரது கேள்வி இன்னமும் எதிரொலித்துக்கொண்டே தான்
இருக்கிறது!
சட்டத்தை எந்த வகையிலும் மதிக்காமல்,
வாய்தா மீது வாய்தா வாங்கி, தமிழ், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் எல்லா ஆவணங்களையும்
மொழி பெயர்க்கவைத்து, தனது சொத்து குவிப்பு வழக்கை நீண்ட நெடிய பயணமாக்கிக்கொண்டு வரும்
ஜெயலலிதாவின் சாதுரியம் யாருக்கும் வாய்க்குமா என தெரியவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி கைது
செய்யப்பட்ட போது, காவல்துறையினரை பார்த்து சட்டரீதியாக நியாயமான கேள்விகள் கேட்ட நீதிபதி
அசோக் குமார் அவர்களின் மருமகன் சில நாட்களிலேயே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதன்
பின்னணி காரணங்களில் அரசியல் எதுவும் இல்லை என்று நானும் சிலநாட்கள் நம்பிக்கொண்டு
தான் இருந்தேன்!
இப்படி எத்தனை எத்தனையோ உதாரணங்களை
சொல்லிக்கொண்டே போகலாம், ஜெயல்லிதா சட்டத்தையும், நீதியையும், எந்த அளவுக்கு மதிக்கிறார்
என்பதை எடுத்துணர்த்த. நீதித்துறையும்,சில வழக்குகளை நியாயத்தை மீறி அவர் விருப்பப்படி
அவருக்கு சாதகமாக செயல்பட்டதுண்டு!
பல வழக்குகளை தன் மீது வைத்து
வழக்குகளில் ஆஜராகிக்கொண்டிருக்கும், ஜாமீனில் இருக்கும், ஒருவர், ஜனநாயக ரீதியாக முதலமைச்சர்
ஆகிவிட்டதாலேயே, நீதிமன்றத்தால் மரியாதை செய்யப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு
அழைப்பட்டதன் விசித்திரம் எனக்கு இன்னமும் புரிபடவேயில்லை.
சட்டம் வலிமையானது என்கிற
எனது நம்பிக்கை பல முறை பொய்த்துப்போயிருந்தாலும், பட்டவர்த்தனமாக இப்போது நடைபெற்ற
சம்பவங்கள், நீதித்துறையின் மாண்பையும், சட்டத்தின் நேர்மையையும் கொஞ்சம் கீழிறக்கி
வைத்ததோடு மட்டுமல்லாமல், பெரும்பான்மை ஜனநாயகம் கைகாட்டும் ஒருவருக்கு சட்டமும் நீதித்துறையும்
வளைந்துகொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதையும் எனக்கு உணர்த்துகிறது!
இந்திய சட்டங்கள் பற்றி நான்
தெரிந்துகொள்ள இன்னமும் நிறைய விஷயங்கள் இருப்பதாக உணர்கிறேன்!
No comments:
Post a Comment