Thursday, October 30, 2014

கருப்பு பணம் எனும் ஒரு கலாட்டா காமடி


நேற்றைய தினம் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் 627 பெயர்கள் கொண்ட பட்டியலை சமர்ப்பித்தது தான் இன்றைய தலைப்பு செய்தி.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான திரு ராம் ஜெத் மலானி கருப்பு பணம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தான் மத்திய அரசு இந்த பட்டியலை நேற்று தாக்கல் செய்தது.

ராம் ஜெத் மலானி தீவிர தேசியவாதி என்பதும், ஊழல் கருப்புப்பணம் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையாக போராடியவர் என்பதும், பொதுவாழ்க்கையிலும் அரசிலும் நிர்வாகத்திலும் தூய்மையை வலியுறுத்துபவர் என்பதும் நமக்கெல்லாம் தெரிந்ததே (அதனால் தான் ஜெ. வழக்கில் அவரை வாதாட வைத்து உள்ளே தள்ளியதா அதிமுக? என்றெல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்காம மேல படிங்க)

கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கின்ற இந்தியர்களின் பட்டியலை அந்தந்த நாடுகளிடம் கேட்டும் இதுவரை நமக்கு எந்த பட்டியலும் கிடைக்கவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் திருட்டுத்தனமாக வெளியிட்ட ஒரு பட்டியல் தான் இதுவரையும் நம்மிடம் உள்ள ஒரே பட்டியல். அந்த பட்டியலும் 2006ஆம் ஆண்டில் அந்த வங்கியில் இருந்த கணக்குகளின் பட்டியல். அந்த பட்டியல் உண்மையானதா என்றும் யாருக்கும் தெரியாது. ஏனெனில் அது அதிகாரப்பூர்வமான பட்டியல் அல்ல. எந்த அரசும் நம்மிடம் அதிகாரப்பூர்வமாக தரவில்லை. ஏதோ ஒரு தனிநபர், திருட்டுத்தனமாக வெளியிட்ட ஒரு பட்டியல் தான். அதை அவரே கூட தயாரித்திருக்கலாம் என்கிற ஒரு சந்தேகமும் உள்ளது.

இந்த பட்டியல் இந்தியாவிடம் 2011 ஆம் ஆண்டு கிடைத்தபோது அது ஆதாரமற்ற அதிகாரப்பூர்வமற்ற பட்டியல் என்பதாலேயே சட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு அதனை வெளியிடாமல் அந்த பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து வந்தது. எல்லா நாடுகளுக்கும் இது பற்றி மிக கடுமையாக அப்போது ப. சிதம்பரம் அவர்கள் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், எந்த நாடும் நமக்கும் போதுமான ஒத்துழைப்பை இதுநாள் வரை வழங்கவில்லை.

இந்நிலையில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவந்து இங்குள்ள மக்களுக்கு ஆளுக்கு ரூ.3 லட்சம் இனாமாக தருவோம் என்கிற கவர்ச்சி முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்தது பாஜக.

வழக்கு சூடு பிடித்ததும், உச்ச நீதிமன்றம் போட்ட கிடுக்கி பிடியில் மூன்று பேரின் பட்டியலை முதலில் தாக்கல் செய்தது மத்திய அரசு. (அதில் சிமான்லால் தனக்கு வெளிநாட்டில் அக்கவுண்டே இல்லை என விளக்கம் கொடுத்திருப்பது தனி கதை) அந்த மூன்று பேர் பட்டியலை பார்த்ததும் கடுப்பான உச்ச நீதிமன்றம் 800 பேர் கொண்ட பட்டியலை முழுமையாக வெளியிட வேண்டும்னு கண்டிப்பா மத்திய அரசுக்கு உத்தரவு போட்டது.

மத்திய அரசு முழு பட்டியலையும் வெளியிடவேண்டும் என காங்கிரசும் வலியுறுத்தியது. அவர்கள் வலியுறுத்துவதிலிருந்தே அவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் இந்த பட்டியலில் இல்லை என்பதும், மத்திய அரசு வெளியிட தயங்கியதில் இருந்தே அவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் இருக்க கூடும் என்பதும் பரபரப்பை கூட்டியது. உச்சநீதிமன்றத்தில் எத்தனையோ விளக்கங்கள் சொல்லியும் உச்சநீதிமன்றம் அதை ஏற்று கொள்வதாக இல்லை. 24 மணி நேரத்துக்குள் முழு பட்டியலையும் வெளியிட்டாக்கவேண்டும் என கண்டிப்பாக உத்தரவிட்டது.

அதனடிப்படையில் தான் இந்த 627 பேர் பட்டியலை நேற்று தாக்கல் செய்தது மத்திய அரசு. மீதமுள்ள 173 பேரை எதற்காக காப்பார்ருகிறார்கள் என்பதெல்லாம் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.

சரி, உச்ச நீதிமன்றம் அந்த பட்டியலை என்ன செய்தது?

அது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அந்த பட்டியலை அனுப்பி வைத்துவிட்டது. இதில் காமெடி என்னவென்றால், இந்த 627 பேர் பட்டியல் பல காலமாக அதே சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருக்கிறது என்பது தான். இப்போது இன்னொரு காப்பி உச்ச நீதிமன்றம் மூலமாக வந்திருக்கிறது. அவ்வளவு தான்.

சரி. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

காங்கிரஸ் அரசிடம் இருந்த அதே பட்டியலை தான் இப்போதும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

அது அதிகாரப்பூர்வ பட்டியலும் அல்ல. யாரோ ஒரு தனி நபர் கொடுத்த திருட்டு பட்டியல். அந்த பட்டியலும் 2006 ஆம் ஆண்டு கணக்கு வைத்திருந்தவர்களை பற்றியது. அதிலும் 173 பேர் பெயரை மத்திய அரசு காப்பாற்றுகிறது.

ஆக மொத்தம் மத்திய பா.ஜ.க அரசு கருப்பு பண விஷயத்தில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை என்பதோடு, வெற்று விளம்பர பரபரப்புக்காக எதை எதையோ செய்ய முயன்று கொட்டு வாங்கி விழி பிதுங்கி நிற்கிறது.

இனியும் இந்த வழக்கில் நிறைய சுவாரசியமான காமெடிகள் காத்திருக்கிறது. பொதுவாழ்வில் தூய்மை என்பதை நோக்கி பயணிக்கும் ராம்ஜெத்மலானி அவ்வளவு லேசில் இதை விடமாட்டார் என நம்புவோமாக.



Friday, October 24, 2014

எஸ்.பி.பி

நேத்து நானும் என் நண்பரும் கார்ல ஒரு டிரைவ் போயிட்டிருந்தோம். செட்ல பழைய பாடல்களா பாடிட்டிருந்தது.

சலங்கை ஒலிலருந்து ‘இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்..’ பாட்டு வந்ததும் என் நண்பருக்குள்ளே இருந்த விமர்சகர் திடீர்னு வெளியே வந்துட்டாரு.

‘இந்த பாட்டுல எஸ்.பி. ஒரு தப்பு பண்ணிருப்பாரு..தெரியுமா?’ன்னு என்னை கேட்டாரு. இல்லைன்னேன்.


இந்த பாட்டுல ஒரு வரி வரும். “பாதை தேடியே பாதம் போகுமோ..”ன்னு. லாஜிக்கா அது சரியா தானே வந்திருக்கு? ஆனா ஆக்சுவல்லா அந்த இடத்தில் வந்திருக்க வேண்டிய வரி “பாதம் தேடியே பாதை போகுமோ”வாம்.


பாதத்தை தேடி பனி நடந்து போவது போல்...

சீதப்பூ நீ நடந்து போகிறாய்"னு வைரமுத்து ஒரு கவிதைல எழுதிருப்பாரு.


அதாவது, அவ பாதம் எவ்வளவு அழகுன்னா பாதையிலுள்ள புல்வெளி தாங்கிய பனியெல்லாம் அவள் பாதம் தான் மேல படாதாங்கற ஆசையில அவ பாதத்தை தேடி போக்குமாம். அவ்வளவு அழகான கவிதை அது.


அதையே தான் இந்த பாட்டுல, லைட்டா மாத்தி “பாதம் தேடியே பாதை போகுமோ”ன்னு கவி ரசம் சொட்ட சொட்ட எழுதிருந்தாராம்.


ஆனா அன்னைய தேதில வைரமுத்துவை விட எஸ்.பி.பி ரொம்ப செல்வாக்கான ஆளா இருந்ததால, வைரமுத்து ஏதோ தப்பா எழுட்டாப்டின்னு நினைச்சு அவராவே அதை ‘திருத்தி’ “பாதை தேடியே பாதம் போகுமோன்னு” பாடிட்டாருன்னு நண்பர் சொன்னாரு.


இன்னொரு விஷயமும் அவர் சொன்னார்.

மவுன ராகம்னு ஒரு படம். நம்ம மணி சார்து. சூப்பர் டூப்பர் ஹிட்டு. ராஜா சார் மீசிக்கு.


அதுல ஒரு பாட்டு. “நிலாவே வா.... செல்லாதே வா....” இன்னை வரைக்கும் அந்த பாட்டை அடிச்சிக்க வேற பாட்டு இல்லை. அந்த பாட்டை நல்லா கவனிச்சிருக்கீங்களா?

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே..

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே…” ன்னு இருக்கும்.


அதென்ன பார்வைக்கு தேனே, வார்த்தைக்கு மானேன்னு நான் நிறைய தபா யோசிச்சிருக்கேன்.ஆனா அந்த பாட்டை எழுதின வாலி, லாஜிக்கா

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன மானே..

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன தேனே…” ன்னு தான் எழுதினாராம்.


தெரியாமலோ தெரிஞ்சேவோ எஸ்.பி.பி அப்படி மாத்தி பாடிட்டாருன்னு நண்பர் சொன்னாரு.


இன்னும் சில பாடல்கள் அவர் சின்ன சின்ன தவறுகள் செய்து பாடி, அந்த பாட்டு ஹிட்டானதாலேயே பெரிசா கண்டுக்கிடாம போனதுன்னாரு.

இதெல்லாம் உண்மையோ பொய்யோ.. யாரு கண்டா..


பாட்டை கேட்டோமா.. ரசிச்சோமான்னு போயிட்டே இருக்கணும். அதை விட்டுட்டு வரியையும் இசையையும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தா நம்ம நிம்மதி போயிரும்.

என்ன நான் சொல்றது?

Friday, October 17, 2014

உச்ச நீதிமன்றம் – தகர்ந்த நம்பிக்கை

இன்றைய தினம் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே மிக மிக முக்கியமான நாள். இதுகாறும் இருந்துவந்த வரலாற்றை எல்லாம் புரட்டி போட்டு புதிய வரலாறு படைத்த தினம்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்து நீதித்துறையின் மீது நம்பிக்கை கொண்டிருந்த சாதாரணனுக்கு கனத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

விஷயத்தை சுருக்கமாக பார்ப்போம்.

1991 – 96 காலகட்டத்தில் முதலமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமான முறையில் சொத்துக்கள் சேர்த்து குவித்ததாக தான் வழக்கு. அதற்கான அனைத்து ஆதாரங்களும் ஆவணங்களும் முறையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை சந்தேகமற நிரூபித்தும் இருக்கிறது தமிழக காவல்துறையின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு.இந்த வழக்கை எந்த அளவுக்கு தாமதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு தாமதப்படுத்தி, பொருந்தா காரணங்களை எல்லாம் அடுக்கி, நீதிமன்றத்தை அலைக்கழித்து (சமயங்களில் அலட்சியப்படுத்தி) கடைசியில் உச்ச நீதிமன்றமே தலையிட்டு தனது நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கை கொண்டுவந்து விரைவு படுத்தியது. நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் என பலரும் மிரட்டப்பட்டு, சிலர் தானாகவும் இந்த வழக்கிலிருந்து விலகி இருக்கிறார்கள். சாட்சிகள் மிரட்டப்பட்டு பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்ட நிகழ்வுகளும் நடந்தது.

நீதித்துறையை இந்த அளவுக்கு கேலிக்கூத்தாக்கிய இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கர்நாடக சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.அந்த தீர்ப்பில் மிக மிக விரிவாக, அவர் செய்த ஊழலின் வீரியம், லஞ்சத்தின் அளவு, முதல்வர் பதவியை பயன்படுத்தி அவர் செய்த அதிகார துஷ்பிரயோகம், நீதித்துறைக்கு அவர் விடுத்த சவால், நீதிமன்றத்தின் மீதான அவரது அலட்சியம் போன்ற அனைத்தையும் மிக விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறார் நீதிபதி. வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டே எழாண்டு சிறைக்கு பதில் நான்கு ஆண்டுகளாக குறைத்திருப்பதாகவும் தனது கருணையை அதில் பதிவு செய்திருக்கிறார். அந்த கருணையே சட்டப்படி தவறு, முழு தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்கிற ஒரு கருத்தும் பரவலாக இருக்கிறது.

அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி ஆனது. அப்படி தள்ளுபடி செய்யப்படுவதாக அளித்த தீர்ப்பில், உயர்நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய வழிகாட்டுதல் அடிப்படையில், 'ஊழலை மிக கடுமையாக கையாளவேண்டும் என்பதாலும், இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் (தண்டனை விதிக்கப்பட்ட பிறகும்) அரசு வழக்கறிஞர் பல்டி அடித்திருப்பதாலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது' என குறிப்பிட்டு இருக்கிறார்.இப்போது உச்ச நீதிமன்றம், இந்த விஷயங்கள் அத்தனையையும் புறக்கணித்து விட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் கருணை காட்டுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே டான்சி நில வழக்கில் அவரது குற்றம் தகுந்த ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்தும், அவர் குற்றவாளி என அறிவித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு தண்டனை எதுவும் தர விரும்பவில்லை எனவும் அவரே அவருடைய மனசாட்சிக்கு தகுந்த தண்டனையை விதித்துக்கொள்ளலாம் (!) எனவும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி நமக்கெல்லாம் விசித்திரமான அதிர்ச்சி அளித்தது நினைவிருக்கும்.இப்போது எனது கேள்வியெல்லாம், 'வயது, உடல்நிலை, வகித்த பதவி, மக்கள் ஆதரவு, அரசியல் பலம் ஆகியவை எல்லாம் ஊழல் செய்யவும், நீதிமன்றத்தை அவமதிக்கவும், தண்டனையிலிருந்து தப்பிக்கவும் போதுமான தகுதிகளா?' என்பது தான். அப்படியெனில் இன்னும் பல பல அரசியல் வாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமே?.

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் உச்ச நீதிமன்றத்தின் மீதிருக்கும் நம்பிக்கையே கீழ் கோர்ட்டுக்கள் தவறான முடிவெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்பது தான். இன்றைய தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் அந்த நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக தகத்தெறிந்து இருக்கிறது.யாரும் ஊழல் செய்யலாம், மக்கள் பணத்தை கையாடல் செய்து சொத்துக்கள் சேர்க்கலாம், அதன் மீதான வழக்கை எப்படி வேண்டுமானாலும் இழுத்து அடிக்கலாம், சட்டத்தின் அடிப்படையில் கீழ் கோர்ட்டுக்கள் கொடுக்கும் நியாயமான தண்டனையிலிருந்து உச்ச நீதிமன்றம் சென்று உடல் நிலையை காரணம் காட்டி தப்பித்து கொள்ளலாம், அமைச்சரவைக்கு வெளியிலிருந்து அரசை கட்டுப்படுத்தி ஆட்சி செய்து, இந்திய அரசியல் சாசனத்தையும் அவமான படுத்தலாம் என்பன போன்ற பல பல முறைகேடுகளுக்கு இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்திருக்கிறது என்பதை நினைக்கும் பொது மிகவும் வருத்தமாக உள்ளது.

இனி, உச்ச நீதிமன்றத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையை தானாகவே வரவழைத்துக்கொண்டது உச்ச நீதிமன்றம்.

Saturday, October 11, 2014

இனி அதிமுக பயணிக்க வேண்டிய பாதை

தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்றால் எல்லோரும் சட்டென சொல்வது திராவிட முன்னேற்ற கழகம் என்பதாக தான் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை தமிழகத்தின் மிக பெரிய அரசியல் இயக்கம் மட்டுமல்ல மிக சக்திவாய்ந்த அரசியல் இயக்கமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்.

அதிமுக அளவுக்கு பிரச்சனைகளையோ, துரோகங்களையோ, அடக்குமுறைகளையோ, ஏமாற்றங்களையோ, சவால்களையோ, வெற்றிகளையோ, சந்தித்த இயக்கங்கள் தமிழகத்தில் இல்லை. 1970 களில் திமுக அதிமுகவை மொத்தமாக அழித்தொழித்துவிட நடத்திய அடக்குமுறைகள் மிக பிரசித்தம். எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களை வெளியிடமுடியாமல் தடுத்ததிலிருந்து, அதிமுகவுக்கு ஆதரவாக கருத்துக்கள் எழுதிய பத்திரிக்கைக்காரர்களை (மக்கள் குரல், துக்ளக் போன்றவை) துவம்சம் செய்ததுவரை அத்தனை விதமான அதிகார துஷ்பிரயோகங்களையும் திமுக செய்தது. ஒருவேளை அப்படியெல்லாம் செய்யாமல் விட்டிருந்தால் அதிமுகவும் ஒரு சாதாரண கட்சியாகவே இருந்திருக்கக்கூடும். ஆனால், இப்படியான எதிர்ப்புகள் தான் அதிமுகவை மிக வலுவான இயக்கமாக, கொள்கை பிடிப்புள்ள தொண்டர்களின் பாசறையாக மாற்றியது என்று கூட நான் அவ்வப்போது கருதிக்கொண்டதுண்டு.



கலைஞருக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் அனைத்து குக்கிராமங்களுக்கும் பயணித்து கட்சி கிளைகளை அமைத்தது எம்.ஜி.ஆர் தான். அந்த வலைப்பின்னல் கட்சிக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய பலம். இந்த வலைப்பின்னல் பலம் தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர வேறு எந்த கட்சிக்கும் இல்லை. மதிமுகவுக்கு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அதனை அண்ணன் வைகோ சரிவர கையாள தெரியாமல் கோட்டைவிட்டுவிட்டார். மற்ற கட்சிகள் எல்லாம் வட்டார பிராந்திய கட்சிகள் தான்.


1977 ஆம் ஆண்டு அரியணையில் அமர்ந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிர்த்திருந்த வரையில் இந்த மாநிலம் அவருடைய ஆளுகையின் கீழ் இருந்தது. அதற்கு முன்பாக ஆட்சியில் இருந்த கலைஞர் அவர்கள் ஆசை ஆசையாக கட்டி திறப்புவிழா காணாத வள்ளுவர்கோட்டத்தை திறந்து வைத்து புரட்சி தலைவர் பேசும்போது “இவ்வளவு அருமையான கட்டிடத்தை கட்டிய கலைஞர், இதை இன்னமும் பார்க்கவில்லை. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் வள்ளுவர் கோட்டத்தில் நுழைவேன் என கலைஞர் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால் அது நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது” என மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசினார். (கடைசியில் 1989 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொறுப்பு ஏற்கும் விழாவை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து அப்போது தான் அந்த கட்டிடத்தையே அவர் முழுமையாக பார்த்தார் என்பதெல்லாம் தனி கதை.)
அப்படி எம்.ஜி.ஆருக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை வர காரணம், தமிழக மக்கள் தன் மீதும் தன் இயக்கத்தின் மீதும் வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கையும், தன் கட்சி தொண்டர்களின் அபரிமிதமான விசுவாசத்தின் மீதும் திறமையின் மீதும் அவருக்கிருந்த நம்பிக்கையும் தான்.


கட்சி தலைவர் தொண்டன் என்கிற பேதமேல்லாம் இல்லாமல் தோழனை போல தோளோடு தோள் நின்று தொண்டர்களை வழி நடத்தியதாலும், தொண்டர்களின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றி தந்ததாலும், தொண்டர்களையும் கட்சியையும் தன் உயிரினும் அதிகமாக நேசித்ததாலும், அடிமட்டத்தில் இருந்து உழைக்கும் தொண்டனின் வியர்வையால் தான் தன்னுடைய இந்த பெருமைக்குரிய உயர்வு நிலைத்து நிற்கிறது என்று உணர்ந்ததாலும் தான் எம்.ஜி.ஆர், மறைந்து இத்தனை ஆண்டு காலம் ஆன பின்னும் கட்சி தொண்டனுக்கும், கடைசி நிலை மக்களுக்கும் பெரும் தலைவனாக இன்னமும் ஆட்சி செய்ய முடிகிறது.


அதிமுக தொண்டனுக்கும் மற்ற தொண்டனுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், மற்ற கட்சிகளில் உள்ள தொண்டர்கள் தலைவரை நம்பி இருக்கிறார்கள். அதாவது எனக்கு இன்னாரை பிடிக்கும், அவர் இன்னாரின் கோஷ்டியில் இருப்பதால் நானும் அந்த கோஷ்டியில் இருக்கிறேன். அவர் எந்த கட்சிக்கெல்லாம் மாறுகிறார்களோ அந்த கட்சிக்கெல்லாம் நானும் மாறுகிறேன். மற்றபடி எனக்கென்று தனியான கோட்பாடெல்லாம் இல்லை என்பது தான் பெரும்பாலான கட்சி தொண்டனின் மனவோட்டமாக இருக்கிறது. ஆனால் அதிமுகவில் அப்படி அல்ல. அதனால் தான் அங்கே கோஷ்டிகள் இல்லை. அதிமுக தொண்டனை பொருத்தவரை எம்.ஜி.ஆர் மட்டும் தான் ஒரே தலைவர். கட்சி மட்டும் தான் அங்கே முதன்மையான விஷயம். மற்ற தலைவர்கள் எல்லாம் அப்புறம் தான்.


தலைமையை துதிபாடி காரியம் சாதித்துக்கொள்ளும் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் எந்த இரண்டாம் கட்ட தலைவருக்கும் தனியாக துதிபாடிகளாக கடைநிலை தொண்டர்கள் இருப்பதை அதிமுகவில் காண முடியாது. கட்டுபாடு உடைய கட்சி என சொல்லப்படுகிற திமுகவில் கூட, தொண்டர்களிடையே வேறுபாடு இருக்க கண்டிருக்கிறேன். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களுக்கெல்லாம் ஒரே பிடிமானம் கட்சி என்பது தான்.


ரத்தமும் வியர்வையும் சிந்தி தமிழகம் முழுவதும் கட்சியை நிலைநிறுத்தியவர்களுக்கு உரிய முக்கியத்துவமும் மரியாதையும் அங்கிகரமும் அதிமுகவில் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தாலும், பிற கட்சிகளிலிருந்து ஒட்டுண்ணிகள் போல வந்து சேர்ந்து பதவியும் அதிகாரமும் துதிபாடல்கள் மூலம் பெற்று மமதையோடு வலம் வரும் பல தலைவர்களை கண்டு மனம் வெதும்பினாலும், தலைமை தங்களை வெளிப்படையாக புறக்கணிப்பதை கண்டு இயலாமையால் மறுகினாலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டன் எப்போதுமே கட்சியை விட்டுக்கொடுத்ததில்லை. தான் நேசித்த தலைவனை கூட தூக்கி ஏறிய துணிந்துவிடக்கூடியவன். கட்சியை எந்த நேரத்திலும் தலை குனிய விடமாட்டான்.


எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி ஜானகி அம்மையார் சிலரது தூண்டுதலின் பேரில் கட்சியையும் ஆட்சியையும் தலைமை ஏற்று நடத்தியபோது, அவர் அதுவரை தங்களால் நேசிக்கப்பட்ட தலைவி என்பதையும் மறந்து அவருக்கு எதிரணியில் தொண்டர்கள் நின்றதற்கான காரணமே, கட்சியை அன்றைய சூழலில் ஜானகி அம்மையாரை விட ஜெயலலிதாவே காப்பாற்ற கூடியவர் என்கிற நம்பிக்கையால் தான். அதனை சற்று தாமதமாக புரிந்து கொண்ட ஜானகி அம்மையாரும், தொண்டர்களின் அந்த முடிவுக்கு பின்னர் சம்மதித்தார்.


அதிமுக தொண்டனை பொறுத்தவரை, கட்சி மட்டும் தான் பிரதானம். ஒவ்வொரு காலகட்டத்தில் யார் அந்த கட்சியை சிறப்பாக வழிநடத்துவார்களோ அவரை ஆதரிப்பானே ஒழிய, யார் மீது அவனுக்கு தனிப்பட்ட அபிமானம் இருக்கிறதோ அவர்களிடத்தில் கட்சியை ஒப்படைக்கும் வழக்கம் அவனுக்கில்லை.

மிக திறமையான தலைவர்கள், மிக பிரபலமான தலைவர்கள் எல்லாம் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு அதன் காரணமாக வெளியேற்றப்பட்ட போதெல்லாம் அதிமுக தொண்டன் அவர்களை புறக்கணித்து வந்ததே வரலாறு.

ஜெயலலிதா தலைமையில் முதல் முறை ஆட்சி நடந்து பல பல முறைகேடுகள் வெளியான போது, அதற்கடுத்த தேர்தலில் (1996 ஆம் ஆண்டு) அதிமுக தொண்டர்கள் பலரும் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. காரணம், அவனது கட்சிக்கு அவமானம் தேடி தந்ததற்காக அவன் தலைமைக்கு அவன் கொடுத்த தண்டனை அது. பின்னாளில் கட்சி தொண்டர்களை அரவணைத்து சென்றதாலும், பிற்கால ஆட்சியில் நல்லதை செய்ய உறுதி அளித்ததாலும் தான் அவன் மீண்டும் அதே தலைமையை ஆதரித்தான்.

இப்படியான ஒரு அபூர்வ தொண்டர்படை வேறு எந்த இயக்கத்திலும் நான் கண்டதில்லை. அவர்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் மட்டும் தான் தலைவர். அதிமுக தான் அவர்களது இயக்கம். அதை அவ்வப்போது யார் சிறப்பாக வழி நடத்துவார்களோ அவர்களை ஆதரிப்பான். அவர்கள் தவறு செய்தால் தண்டிப்பான்.

இப்போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா செய்த அனைத்து குற்றங்களும் விரிவாக தெளிவாக ஆதாரபூர்வமாக சட்டம் தோலுரித்து காட்டிய பின், ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்குள்ளும் தாங்கவொண்ணா அவமானமும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத வேதனையும் இருப்பது இயற்கை தான். இத்தனை காலமும் போயும் போயும் இவர்களுக்காகவா கஷ்டபட்டோம் என வெதும்புவதையும் தவிர்க்கமுடியாது.

தொண்டர்களிடமிருந்து மிக விலகி இருந்த தலைமை, அடிமட்ட தொண்டர்களின் துயரங்களை அறிந்து கொள்ள முயலாத தலைவர், அவசர அவசியமான காலகட்டத்தில் கூட தலைவரை சந்திக்க முடியாத தொண்டர்களின் இயலாமை, கட்சி அலுவலகத்துக்கு கூட வராத பொது செயலாளர் என பல விதங்களிலும் மனம் வெறுத்து போன அதிமுக தொண்டனுக்கு, இப்போது பட்டியல் பட்டியலாக வரும் சொத்து கணக்கும், வன்முறை மூலம் கைப்பற்றிய மாளிகைகளும், சொந்த தேவைக்காக சேர்த்துக்கொண்ட செல்வங்களின் கணக்கும் வெறுப்பை மட்டுமே தந்ததில் வியப்பில்லை. இது நாள் வரையும் இது வெறும் அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட பொய் வழக்கு என்கிற பிரச்சாரத்தை கூட நம்பிவந்தவன், நீதிமன்றம் எடுத்துக்காட்டிய ஆதரங்களால் தெளிவடைந்து உண்மை உணர்ந்து அமைதியாகிவிட்டான். புரட்சி தலைவர் தனது தொண்டர்களிடம் எப்போதும் சொல்லும், “அநியாயத்துக்கு எப்போதும் எந்த விதத்திலும் துணை போகாதே. அதை யார் செய்திருந்தாலும் சரி. அதே சமயம் நியாயத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாவது துணை நில்” என்கிற அறிவுரை எல்லா தொண்டனுக்கும் வேதம். இப்போது அவனுடைய தேடல் எல்லாம் ஆட்சியும் கட்சியும் அதிமுகவின் பெருமையும் நிலைநாட்டப்படவேண்டும், அது யாரால் முடியும் என்பது மட்டுமாக தான் இருக்கிறது.

அதிமுகவுக்கு இப்போது நிறைய பெரும் பொறுப்புக்கள் இருக்கின்றன. தமிழகத்தில் உருப்படியான கட்சிகள் எதுவும் இப்போது இல்லை என்பதை பயன்படுத்தி பாஜக உள்நுழைய முனைவதை தடுப்பதுடன், பிற கட்சிகளும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள்ளாக சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் நிர்வாகம் சீர்கெட்டு கிடப்பதும் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதும் கண்கூடு. முதலில் அதை எல்லாம் சீர் செய்யவேண்டும். மக்களுக்கு ஆட்சி மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சி பணிகள், தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் கடந்த மூன்றாண்டுகளில் செயல்படுத்தப்படவில்லை. அவற்றை உடனடியாக செயல்படுத்தி, வளர்ச்சி விகிதத்தில் 14 ஆம் இடத்துக்கு விழுந்துவிட்ட தமிழகத்தை இரண்டாண்டுகளுக்குள் முதல் 6 இடங்களுக்குள்ளாவது கொண்டுவரவேண்டும்.


நல்லவேளையாக கல்வியும், திறமையும், விஷய ஞானமும் உடைய திரு. பன்னீர் செல்வம் அவர்கள் கட்டுப்பாட்டில் இப்போது ஆட்சி இருக்கிறது. வந்த சில நாட்களிலேயே அரசு நிர்வாகத்தை முடுக்கி விட்டதும், சீர்கெடவிருந்த சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தி உடனடியாக இயல்புநிலைக்கு கொண்டுவந்ததும் புதிய நம்பிக்கையை தருகிறது.

அவர் அடுத்தபடியாக வெளியிட்ட அறிக்கையில் ‘ அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன் மீதான வழக்குகளை சட்டத்தின் துணை கொண்டு வாதாடி வெற்றி பெற்று வருவார். பொதுமக்களும் கழக தொண்டர்களும் அமைதி காத்து தமிழக வளர்ச்சிக்கு உதவவேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருப்பது ஒரு புதிய நம்பிக்கையை எனக்குள் நட்டு வைக்கிறது. அரசியலை தூக்கி ஓரம் வைத்துவிட்டு தமிழக வளர்ச்சியை பற்றி அவர் சிந்திப்பதாக அந்த அறிக்கை எனக்கு படுகிறது.

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்த பன்னீர் செல்வம் அவர்கள் அடிமட்ட கட்சி பணிகளிலிருந்து மேலே வந்தவர். நகரசபை தலைவராக பணியாற்றியவர். தமிழக அரசின் பொதுப்பணி துறை, நிதி துறை ஆகியவற்றை கையாண்டவர். எளிமையானவர். கிராமத்திலிருந்தபோதே பொதுமக்களின் / கட்சி தொண்டனின் துயரங்களை முழுமையாக அறிந்தவர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் இந்த ஆட்சியை மக்களுக்கானதாகவும், தொண்டனுக்கானதாகவும் மாற்றி காட்டினால் எதிர்வரும் தேர்தலில் வெற்றி மாலை அவரிடமே ஓடி வரும் என்பதில் சந்தேகமில்லை.ஒவ்வொரு தொண்டனும் எதிர்பார்ப்பது, தவறு செய்தவர்களை புறக்கணித்துவிட்டு கழகம் தன்னுடைய பழம் பெருமையையும் கவுரவத்தையும் காப்பாற்றி தலை நிமிர்ந்து மீண்டும் புரட்சி தலைவர் புகழ் பாடும் ஆட்சியை தரவேண்டும் என்பது தான்.அத்தகைய பெரும் பொறுப்பு மாண்புமிகு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு இப்போது இருக்கிறது.

மக்களையும், தொண்டனையும் அவர் ஏமாற்றமாட்டார் என்பது அவரது சமீபத்திய செயல்பாடுகள் கட்டியம் கூறுகின்றன.

காத்திருப்போம்!

Thursday, October 9, 2014

கருணை தாய்

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்ததும் தொடங்கியது, தமிழக மக்களின் மனநிலையில் ஒரு ஏகோபித்த மாற்றம்.

1991 ஆம் ஆண்டு முதல்வராக பதவி ஏற்றபோது அவரிடம் இருப்பதாக அவரே அளித்த சொத்து பட்டியலுக்கும் 1996 ஆம் ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது அவரிடம் இருப்பதாக அவரே அளித்த சொத்து பட்டியலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் வழக்கின் மைய கரு. இந்த வழக்கு பற்றிய முழு விவரங்களையும் ஊடகங்கள் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கி விட்டதால், நான் மேலே சொன்ன மக்களின் மனநிலை மாற்றம் பற்றி மட்டும் பேசலாம்.

எப்போதோ செய்த குற்றத்துக்கு இப்போது தண்டனையா? வயதான பெண்மணியை சிறையில் தள்ளுவதா? ரூ.66 கோடியெல்லாம் ஒரு விஷயமா? என்றெல்லாம் புலம்பி தள்ளியவர்களின் ஹைலைட்டே, அம்மா போன்ற ஒரு ‘கருணை தாய்க்கு’ தண்டனையா என்பது தான்.
உண்மையிலேயே மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் அந்த அளவுக்கு கருணை பெருங்கடலா என்பதை நினைத்துப்பார்த்தால் நினைவுக்கு வரும் சம்பவங்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்கவையாக....


1. தமிழக அரசின் தலைமை செயலகத்துக்கு என புதிதாக கட்டிடம் கட்டவேண்டும் எனவும், அதை கடற்கரையில் இருக்கும் ராணி மேரி கல்லூரியில் தான் கட்ட வேண்டும் என அடம்பிடித்து இடிக்க முனைந்ததும் (April 2003), கல்லூரியை காப்பாற்ற போராடிய மாணவியரை போலீசாரை விட்டு அடித்து துவம்சம் செய்தது...


2. உடன்பிறவா அன்பு சகோதரி சசிகலாவின் தனிப்பட்ட பிரச்சனைக்காக மதுரை இளம்பெண் செரீனா மீது கஞ்சா கடத்தியதாக வழக்கு புனைந்து சிறைக்குள்ளிட்டு சித்திரவதை செய்தது (June 2003)...



3. நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்திரலேகா மீது ஆசிட் வீசி தாக்கி முகத்தை சின்னாபின்னமாக்கியது (1992)...



4. இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் செல்லவிருந்த வக்கீல் சண்முகசுந்தரத்தை வழிமறித்து கைகால்களை வெட்டி போட்டது (May 1995)...



5. ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்கிற தொனியில் கருத்து சொன்ன முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஆர். வெங்கடராமன் அவர்கள் வீட்டில் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியது ...



6. மிக நேர்மையான தேர்தல் ஆணையர் என பெயரெடுத்த திரு. டி.என்.சேசன் அவர்களை அவரது நேர்மையான கருத்துக்காகவே சென்னை தாஜ் ஹோட்டலிலேயே முற்றுகையிட்டு தாக்கியது....



7. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கார் டிரைவரான திரு. முத்து அவர்கள் மீதிருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவர் கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தது (July 2001)....



8. நீதிபதியான திரு ஏ.ஆர்.லட்சுமணன் அவர்கள் முறையான சட்ட விதிகளின் படி மட்டுமே நடநததால் ஏற்பட்ட கோபத்தில் அவரது மருமகன் குமார் மீதே கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தது....



9. தன்னுடைய சொந்த ஆடிட்டர் ராஜசேகரையே, தனது செயல்களை விமர்சித்த குற்றத்துக்காக, போயஸ் தோட்ட வீட்டிலேயே தாக்கி மருத்துவமனையில் அனுமதித்தது...



10. சமீபத்தில், அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற புரட்சி தலைவியை ‘ஐ.சி.யு வுக்குள் செருப்பு காலோடு வரவேண்டாம்’ என வேண்டுகோள் வைத்த மருத்துவர் கருணாநிதியை இரவோடிரவாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தது...



11. ஆட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து நிலவி வந்த குழப்பமான நிலையையும் நிர்வாக சீர்கெட்டையும் விமர்சித்து தலையங்கம் எழுதிய ‘குற்றத்துக்காக’ இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவினரின் வீடுகளில் போலீசாரை வைத்து துவம்சம் செய்ததோடு, பெங்களூர் வரை அவர்களை விரட்டி சென்று கைது செய்து சிறையில் அடைத்தது....

12. தராசு, நெற்றிக்கண், நக்கீரன் ஆகிய பத்திரிக்கைகளின் விமர்சனங்களை தாங்க முடியாமல் அந்த பத்திரிக்கை அலுவலகங்களை எல்லாம் சூறையாடியது...

13. அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை கபளீகரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த அடையாறு பதிவாளரை பந்தாடியது.......


14. அமிர்தாஞ்சன் அதிபர், கங்கை அமரன் ஆகியோரது வீடுகள், சிறுதாவூர் நிலம், கொடநாடு எஸ்டேட் போன்ற பல சொத்துக்களை மிரட்டி அடி மாட்டு விலைக்கு வாங்கி அவர்களை விரட்டியது...


15. அதிமுகவினர், அம்மாவின் கைதை எதிர்த்து தருமபுரியில் மூன்று மாணவிகளை பஸ்சோடு எரித்த சம்பவத்தை (September 2001) நடத்திய தனது கட்சியினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக வழக்கை விசாரிப்பதற்காக அரசு தரப்பு வக்கீலையே ஐந்து ஆண்டுகள் நியமிக்காமல் விட்டு வழக்கை இழுத்தடித்தது...


16. போனஸ் கேட்ட அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாய்ச்சி ஆயிரக்கணக்கான ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்ததுடன் மருத்துவ காரணங்களுக்காக அதில் சிலர் கேட்ட ஜாமீனையும் எதிர்த்து சிறைக்குள்ளேயே சிலரை சாகவிட்டது...

17. சம்பள உயர்வு போனஸ் பிரச்சனையில் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்களை கைதும் செய்து பணி நீக்கமும் செய்ததுடன்.. சிறையில் அவர்களை தள்ளி சித்திரவதை செய்தது....

18. திமுக ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக மக்கள் நல பணியாளர்கள் 13000 பேரை ஒரே கையெழுத்தில் பணிநீக்கம் செய்து அவர்கள் குடும்பங்க்களை அவல நிலைக்கு ஆளாக்கியது....

19. கிராமத்து மாணவர்களுக்கும் கல்வி வசதி அளித்துக்கொண்டிருந்த ஓராசிரியர் பள்ளிகளை ஒரே உத்தரவில் மொத்தமாக மூடி, பல்லாயிரக்கணக்கான மானவர்களின் பதிப்பு வசதியை மறுதலித்தது....

20. கிராமத்து உழவர்களின் விளைபொருட்களை வியாபாரப்படுத்தி பொருளாதார நிலையை உயர்த்த உதவிய உழவர் சந்தைகளை மூடி அவர்களது வாழ்வாதாரத்தை நாசமாக்கியது....கிராமங்ககளுக்கு சேவை செய்துவந்த சிற்றுந்து வசதிகளை ரத்து செய்தது

என பல பல நிகழ்வுகள் நாம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது...

இவற்றில் சில அவரது நேரடி கண்காணிப்பில் நடக்கவில்லை எனினும், சம்பவங்களை அவர்களது இயக்கத்தினர் நடத்தியபோது அதை கண்டிக்கவும் இல்லை, நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனினும் சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் உத்தரவுகள் (பால்விலை, மின்கட்டணம், பஸ் கட்டணம், உழவர் சந்தை மூடல், ஓராசிரியர் பள்ளி மூடல், சிற்றுந்து சேவை ரத்து, சமச்சீர் கல்வி குழப்படிகள், அரசு ஊழியர் கைது, மக்கள் பணியாளர் நீக்கம்....) அவரது முடிவின் படியே நடந்தது. அவரது பல முடிவுகள் மக்களுக்கும் சட்டத்துக்கும் எதிரானது என நீதிமன்றத்தால் குட்டு வைக்கப்பட்டு, அவரது உத்தரவுகளை நீதிமன்றமே ரத்து செய்து இருக்கிறது. அந்த பட்டியல் இன்னும் நீளம்.
ஏதோ என் நினைவுக்கு சட்டென்று வந்த நிகழ்வுகளை மட்டுமே இங்கே தொகுத்திருக்கிறேன் என்பதிலிருந்து அத்தகைய கருணை நிகழ்வுகளை விரிவாக எழுத இந்த பதிவு போதாது என்பது தங்களுக்கு புரிந்திருக்கும்.

இப்படியான கருணை தாய், தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களுக்கு எதிரான வழக்கில், சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், தண்டிக்கப்பட்டதை எதிர்த்து தான் தமிழகம் முழுவதும் மக்கள் 'தானாக முன்வந்து' போராட்டங்களும் கடையடைப்பும் பந்தும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அம்மாவுக்கே தண்டனையா என கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அய்யோ பாவம் என பரிதாப பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும் நினைக்கையில் நெஞ்சு விம்மி கண்ணில் நீர் மல்குகிறது.

1991-96 காலகட்டங்களில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி போன்றதொரு காலகட்டத்தில் வாழ்ந்து நொந்தவர்களுக்கு தான் கருணையின் ‘வீரியம்’ புரியும்.

இந்த வழக்கிலும் கூட தன்னுடைய தவறுகள் தெளிவாக நிரூபிக்கப்பட்டதுடன், இதிலிருந்து மீள வழியே இல்லை என்றானதும், வழக்கை எந்தெந்த வகையிலெல்லாம் இழுத்தடிக்க முடியுமோ அந்தந்த வகையிலெல்லாம் இழுத்து அடித்து கடைசியில் உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு கடுமையான கண்டனங்களை வழங்கி தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இந்த வழக்கை நடத்தியதால் தான் நேர்மையான தீர்ப்பு வந்திருக்கிறது..

தீர்ப்பிலேயே அவர் அரசுக்கும், சட்டத்துக்கும், பொதுமக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் இழைத்த கொடுமைகளை விரிவாக சொல்லியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு மக்கள் பணத்தை கையாடல் செய்திருக்கிறார்கள், அதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியும், தமிழக பொதுமக்களின் பொருளாதாரமும் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பதும் எல்லோராலும் ஆதாரங்களுடன் தெளிவு படுத்த பட்டிருக்கிறது..


இத்தனைக்கு பிறகும், இவ்வளவையும் அறிந்த பிறகும், அவரை அப்பாவி என நம்புவதும், கருணை கடல் என போற்றுவதும், அவருக்காக பரிதாபப்படுவதுமான புத்திசாலி பொதுமக்களை பெற்றிருப்பது தான் மாண்புமிகு புரட்சி தலைவி பொன்மன செம்மல் இதய தெய்வம் காவிரி தந்த கலைசெல்வி கருணை தாய் அம்மா அவர்கள் செய்திருக்கும் பெரும் சாதனை.

பின் குறிப்பு:

நான் மேலே குறிப்பிட்டவை எல்லாம் என் சிற்றறிவில் நினைவில் நின்றவைகளின் சிறு தொகுப்பே. அவரது ஆட்சி காலத்தில் நடந்த பல விஷயங்களையும் பலரும் தொகுத்திருக்கிறார்கள். எனது இந்த பதிவை படித்தபின், அப்படியான இரு தொகுப்புகளை எனது நண்பர்கள் எனக்கு அனுப்பி வைத்தனர். அவை கீழே உங்கள் பார்வைக்காக.
மிகுந்த பொறுமையும், அறிந்துகொள்ள ஆவலும் அதற்குரிய நேரமும் இருந்தால் இந்த செய்திகளையும் முழுமையாக படித்து அறிந்து பயனடையுங்கள்.



1. நடத்திய சம்பவங்களின் முழு தொகுப்பு. விரிவாக, கேட்டகரி வாரியாக.:
Click Here
2. அதிகார துஷ்பிரயோகம் மூலம் மிரட்டி சேர்த்த சொத்துக்களின் ஒரு பிரிவு பற்றிய தொகுப்பு.:Click Here
5 comments:

Monday, October 6, 2014

சிறுகூடல்பட்டி விசிட்

‘மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவன்
மாண்டுவிட்டால் அதை பாட்டில் வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை;
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’

என கம்பீர கர்வத்துடன் கர்ஜித்த கவியரசு கண்ணதாசன் எல்லோரையும் போல எனக்குள்ளும் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. நம் வாழ்வின் எல்லா தருணத்திற்கும் பொருத்தமான பாடல் ஒன்றை அவர் இயற்றி இருக்கிறார். அது எந்த உணர்ச்சியானாலும், அதை உணர்ந்து அந்த உணர்வை பிரதிபலிக்கும் விதமாக அவர் எழுதிய பாடல்கள் காலங்கள் கடந்தும் இன்னமும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கின்றன.

திருப்பத்தூர் பக்கம் போகையிலெல்லாம் அந்த மகா கவிஞன் பிறந்த ஊரையும் வீட்டையும் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் வந்து வந்து போனாலும் நேரமின்மை (!) காரணமாக பல ஆண்டுகளாக அது இயலாமலேயே போய் விட்டது. நேற்றைய தினம் பிள்ளையார்பட்டி விசிட் முடிந்து திரும்புகையில் திருப்பத்தூர் நோக்கி வந்தபோது ஒரு மங்கலான கைகாட்டி போர்டு சாலையோரமாக நின்று ‘சிறுகூடல்பட்டி 3 கிமீ’ என வழி சொல்லியது. நிறைய நேரம் இருந்ததால் விசிட் அடித்து விடலாம் என வண்டியை வலதுபுறமாக திருப்பி, இருந்தும் இல்லாதது போலிருந்த ஒரு சாலை வழியே மெல்ல பயணிக்க தொடங்கினேன். சற்று தூரம் போனதும் இடதுபக்கமாக பிரிந்த ஒரு சாலையை உதாசீனம் செய்துவிட்டு நேராக பயணித்து வைரவன் கோவில் வரை சென்றுவிட்டு அப்புறம் தான் குழம்பினேன்.

அங்கே ஒரு வீடு, பச்சை நிற பெயிண்ட் அடித்து பழமையும் நவீனமுமாக இருந்தது. அங்கே இருந்த ஒரு பெரியவரிடம் வழி கேட்டபோது அவர் ‘நீங்க கொஞ்சம் கடந்து வந்துட்டீங்க. அந்த பிரிவு ரோட்ல 2 கி.மீ போனீங்கன்னா போர்டே வெச்சிருப்பாங்க’னு வழி சொன்னார். அதன்படியே திரும்பி வந்து பிரிவு சாலையில் பயணித்தேன். ரோடு சுமாராக இருந்தது. வயல், பறம்பு, காய்ந்த ஓடை, நீரற்ற குளம் என கடந்து மெல்ல ஒரு சிறிதிலும் சிறிதான சிற்றூர் ஒன்றுக்குள் நுழைந்தேன். எந்த வீடு என வழி கேட்க நிதானித்தபோது அந்த போர்டு கண்ணில் பட்டது. ‘கவியரசர் கண்ணதாசன் பிறந்த இல்லம் செல்லும் வழி’

தாரே கண்டறியாத அந்த வலது புற சாலையில் திரும்பினால் யுத்தம் முடிந்த பூமி போல நிசப்தமும் வெறுமையும் சிதிலமான பழமையான வீடுகளும் ஏதோ சோகத்தை சொன்னபடி வரவேற்றன. சற்று தூரம் போனதுமே அழகான நவீனமான வீடு, முகப்பில் 'கண்ணதாசன் சகோதரர்கள் பிறந்த இல்லம்' என்கிற அறிவிப்பு பலகையோடு வரவேற்றது. வீடு நீண்ட காலமாக பாராமரிப்பின்றி கிடப்பதை புதர் மண்டிய முற்றமும் சுற்றுப்புறமும் சுட்டிக்காட்டியது. வீடு பழமையான வீடு அல்ல. பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடாக தான் தெரிந்தது. நவீன வடிவமைப்பில் இருந்தது. அந்த தெருவில் எல்லா வீடுகளும் சிதிலமாகிப்போன பழைய நகரத்தார் பாணி வீடுகளாக காட்சி அளிக்க கண்ணதாசன் அவர்களது வீடு மட்டும் கொஞ்சம் நவீனமாக காட்சி அளித்தாலும், போதிய பராமரிப்பின்றி பூட்டியே கிடப்பதால் பயனற்று போன ஒரு பாழடைந்த இல்லமாகவே இருந்தது.

நான் சென்றது மதியம் மூன்று மணி என்பதாலோ என்னவோ மனித நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது ஊர். ஒரு நினைவில்லம் அல்லது குறைந்த பட்சம் அவரது புகைப்பட வாழ்வியல் கண்காட்சியோ நூலகமோ இருக்கும் என எதிர்பார்த்து சென்ற எனக்கு பெருத்த ஏமாற்றமே. பூட்டி கிடந்த வீட்டின் முன்பாக சற்று நேரம் நின்றுவிட்டு கிளம்பிவிட்டேன்.

சற்று தூரம் அவர் வாழ்ந்த அந்த ஊரை வலம் வரலாம் என நினைத்து ஊரின் உள்ளே பயணித்தேன். ஆதிகாலத்து அஞ்சல் நிலையம் ஒன்று அவரது வீட்டின் பக்கத்திலேயே இருந்தது. அது ஒரு அஞ்சல் நிலையம் என்பதே சற்று ஊன்றி கவனித்தால் தான் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் ஒரு ஓலை குடிசையில் டீக்கடையும், சற்று தள்ளி ஒரு திருமண மண்டபமும் இருந்தது. அங்கிருந்து வெளியேறி வந்தேன்.

வந்த வழியில் திரும்பி பயணித்து மீண்டும் திருப்பத்தூர் போயி திண்டுக்கல் அடைவதை விட வேறு ஏதாவது வழி இருக்கிறதா என அங்கிருந்த ஒரு பெட்டி கடையில் விசாரித்தேன். ‘நீங்க வந்த வழியில் வேணாம். எதிர்த்தாபுல ரோட்ல கொஞ்ச தூரம் போயி இடது கை பக்கம் திரும்பினால் மெயின் ரோடு வரும். அதிலே போனாலே திண்டுக்கல் ரோடு வரும்’னு தெளிவா வழி காட்டினார்கள். அதில் சற்று தூரம் போனதுமே ஒரு ரவுண்டானா வந்தது. அநேகமாக அது தான் சிறுகூடல்பட்டிக்கான பஸ் ஸ்டாண்டாக (!) இருக்கணும். ஒரு மரத்தை சுற்றி வார ஒரு ரோடு இருந்தது. வரும் பஸ்கள் அங்கே வந்து சுற்றி நிற்க ஏற்பாடு இருக்க வேண்டும். அங்கே கவியரசருக்கு ஒரு மார்பளவு சிலை நிர்மாணித்திருக்கிறார்கள்.

இவற்றை தவிர, தமிழகத்தின் சமூக வாழ்வியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அந்த மகா கவிஞருக்கு வேறு எந்த சிறப்பும் அவரது பிறந்த ஊரில் இருப்பதாக தெரியவில்லை. தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்த கவியரசருக்கு தமிழக அரசாவது ஒரு நினைவில்லமும், அருங்காட்சியாகமும் நூலகமும் அமைத்து கொடுத்தால் இனி வரும் தலைமுறையினருக்கும் அவரது பெரும் பெருமை சென்று சேரும் என்கிற ஏக்கத்துடன் விடைபெற்று திண்டுக்கல் வழி வீடு வந்தேன்.
Newer Posts Older Posts Home

Printfriendly