பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இது குறித்த விவாதம் GST council கூட்டத்தில் விவாதிக்க படாமலேயே சென்று கொண்டு இருக்கிறது.
பெட்ரோல் டீசல் ஆகியவற்றை GST வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து பலருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் இருக்கலாம். என்னிடம் பல நண்பர்கள் அவர்களது சந்தேகங்களை கேட்டார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு இங்கே முக்கியமான ஐந்து கேள்விகளுக்கு சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறேன்.
1. GST வரம்புக்குள் பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கொண்டு வந்தால் அதன் விலை குறையுமா?
குறையும். எப்படி என சொல்கிறேன்.
இப்போது GST இல்லாத காரணத்தால் GST க்கு முன்பு இருந்த சட்டங்களின் அடிப்படையில் தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி விதிக்கப்படுகிறது.
பெட்ரோலை உதாரணமாக எடுத்து கொள்வோம். (விலை ஒரு லிட்டருக்கு)
பெட்ரோல் அடிப்படை விலை (உற்பத்தி ஆகி பெட்ரோல் பங்குக்கு வரும் விலை) - ₹40
அதன் மீது மத்திய அரசு விதிக்கும் Excise மற்றும் CESS வரி (இது மொத்தமும் மத்திய அரசுக்கு போகும்) - ₹32
பெட்ரோல் பங்க் டீலர் கமிஷன் - ₹4
இவை மூன்றையும் சேர்த்தால் - ₹76
இந்த ₹76 மீது மாநில அரசு விதிக்கும் வரி - ₹23
இதையும் சேர்த்தால் விற்பனை செய்யப்படும் விலை - ₹99
GST குள் கொண்டு வரப்பட்ட பிறகு இது என்ன ஆகும் என பார்ப்போம்.
பெட்ரோல் அடிப்படை விலை (உற்பத்தி ஆகி பெட்ரோல் பங்குக்கு வரும் விலை) - ₹40
Excise மற்றும் CESS வரி (GST வந்தால் இந்த வரிகள் ரத்து ஆகி விடும்) - ₹0
பெட்ரோல் பங்க் டீலர் கமிஷன் - ₹4
இவை மூன்றையும் சேர்த்தால் - ₹44
இந்த ₹44 மீது GST வரி - ₹12 (இதில் மாநில அரசுக்கு ₹6 மத்திய அரசுக்கு ₹6 போகும்)
GST யின் படி அதிக பட்ச வரி 28% என்பதால் அதை கணக்கு இட்டு உள்ளேன்.
GST லும் CESS உள்ளது. ஆனால் அது Luxury Items வகைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெட்ரோல் டீசல் Luxury Item ஆக வராது.
எனவே இப்போது ₹99 ஆக இருக்கும் பெட்ரோல் விலை GST யின் கீழ் ₹56 ஆகும்.
2. மாநிலங்கள் பெட்ரோல் டீசலை GST குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
மேலே சொன்ன கணக்கீடு படி, மத்திய அரசுக்கு கிடைத்து வந்த வரியான ₹32 என்பது ₹6 ஆக குறைகிறது. மாநில அரசுக்கு கிடைத்து வந்த வரியான ₹23 என்பது ₹6 ஆக குறைக்கிறது.
அதாவது சுருக்கமாக சொன்னால் ஒரு லிட்டருக்கு, மத்திய அரசுக்கு ₹26 மாநில அரசுக்கு ₹17 இழப்பு ஆகும்.
இப்போதைய சூழலில் மாநில அரசுக்கான பெரும் வருவாய் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இருந்தும், மது விற்பனையில் இருந்தும் தான் கிடைக்கிறது. எனவே இந்த இழப்பு மிகப்பெரிய நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும்
ஏற்கனவே, GST வந்த பிறகு ஏற்கனவே கிடைத்து வந்த வரி வருவாய் கிடைக்காமல் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் வருகின்ற கொஞ்ச நஞ்ச வருவாயையும் இழக்க மாநிலங்கள் தயாராக இல்லை.
3. GST குள் கொண்டு வந்த பின்னால் வரியை அரசுகள் உயர்த்தி இப்போதைய விலைக்கே கொண்டு வராதா?
GST சட்டம் அதிக பட்சமாக 28% வரி கொண்டது. அதை விட அதிகமாக வரி விதிக்க இப்போதைக்கு சட்டத்தில் இடம் இல்லை.
GST விதிக்கும் போது வேறு வரிகள் நிழைக்கவும் சட்டத்தில் இடம் இல்லை.
ஒன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய விலையை இப்போது இருக்கும் ₹40 லிருந்து உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினால் அதன் அடிப்படையில் வரியும் உயரும். ஆனால் அது பெரிய அளவுக்கு அரசுக்கு பயன் தராது.
4. பெட்ரோலுக்கு வசூல் ஆகும் வரிகள் மாநிலத்துக்கு கிடைக்காமல் இழுத்தடிக்க வாய்ப்பு உள்ளதா?
பெட்ரோலை பொறுத்த வரை, பங்கில் இருந்து வாகனத்துக்கு செலுத்துவது தான் விற்பனை எனப்படும். இரண்டும் ஒரே இடத்தில் தொடங்கி ஒரே இடத்தில் முடியும் (பெட்ரோல் பங்க்).
எனவே GST யின் Place of Supply Rules படி, இது மாநிலத்திலேயே நடக்கும் விற்பனையாகத் தான் கருதப்படும்.
பெட்ரோல் பங்க் தமிழகத்தில் இருந்தாலும் பெட்ரோல் வாங்கும் வாகனம் டெல்லியை சேர்ந்தது ஆக இருந்தாலும் அது Interstate வியாபாரம் ஆகாது. Intra-State வியாபாரமாக தான் கருதப்படும்.
எனவே இதற்கான வரி, CGST & SGST கணக்கில் தான் வரவு வைக்கப்படுமே தவிர IGST கணக்கில் வராது.
SGST தொகை நேரடியாக மாநிலத்துக்கு கிடைத்து விடும். CGST தொகை நேரடியாக மத்திய அரசுக்கு சென்று விடும்.
எனவே, மத்திய அரசு மாநிலத்துக்கு வரி தராமல் இழுத்தடிக்கும் வாய்ப்பு இதில் ஏற்படாது. ஏனெனில் மாநிலத்தின் பங்கு நேரடியாக மாநிலத்துக்கு வந்து விடும்.
5. எல்லா வகையிலும் மக்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் GST வரம்புக்குள் பெட்ரோல் டீசல் ஏன் கொண்டு வரக்கூடாது?
மக்கள் நலன் முக்கியம் எனில் தாராளமாக GST குள் பெட்ரோல் டீசலை எப்போதோ கொண்டு வந்திருக்க முடியும்
அவ்வளவு ஏன், இப்போது இருக்கும் Excise வரியை 23 முறைக்கு மேல் உயர்த்தி இருக்கும் மத்திய அரசு, மக்கள் நலன் முக்கியம் எனில் அப்படி உயர்த்தாமல் தவிர்த்து இருக்கும்.
GST குள் கொண்டு வராமலேயே விலையை குறைத்து இருக்க முடியும்.
ஆனால் இங்கே எல்லா அரசுகளும் பார்ப்பது வரி வருவாய் எனும் ஒரே விஷயத்தை தான்.
பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கும் நிலையில் வரி வருவாயை இழக்க எந்த அரசும் விரும்பவில்லை. இப்போது கிடைத்துக் கொண்டு இருக்கும் வரியே குறைவு எனும் நிலையில் மேலும் குறைக்க யாரும் தயார் இல்லை.
அப்படி ஆனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். அதற்கான வட்டி கட்ட கூட மேலும் வரி உயர்த்தும் நிலை வரும்.
GST வரம்பில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றை கொண்டு வர மாநிலங்கள் சம்மதித்தால் கூட மத்திய அரசு சம்மதிக்காது. ஏனெனில் அதிக இழப்பு மத்திய அரசுக்குத் தான்.
எனவே இது முடிவு இல்லாமல் நீண்டு கொண்டு இருக்கும் பிரச்சினையாகவே என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
****
உங்களுக்கு இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் கமெண்டில் பதிவு செய்யவும்.
அடுத்த பாகத்தில் விளக்க முயற்சி செய்கிறேன்.