Saturday, June 30, 2012

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 2



ந்த தொடரின் முதல் பாகத்தில ( Part-1 ) நான் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களை பத்தி சொன்னேன். அதில் இன்னமும் சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி தமிழகத்தில் இருக்கிற தனியார் போக்குவரத்து கழகங்களை(!) பத்தி இப்போ கொஞ்சம் பேசலாம்.

தமிழ்நாட்டில், பேருந்து தேசியமயமாக்கப்படுறதுக்கு முன்னாடியே தனியார்கள் தான் பஸ் இயக்கிட்டு இருந்தாங்க. அதெல்லாம் குறிப்பிட்ட ரூட்டுகளில் மட்டும் தான். எல்லாருமே லாபம் பண்ண தான் பிசினஸ் பண்றாங்க. இதில் தனியார் பஸ் முதலாளிகளும் விதி விலக்கு அல்ல. அதனால் அவங்க முடிவை தப்பு சொல்ல முடியாது. ஆனா அதனால் பல கிராமங்களுக்கு நன்மை கிடைக்கலை.

அரசு பேருந்துகள் வந்தப்பறமும் தனியார்களுக்கு ரூட் பெர்மிட்டுகள் கொடுக்கப்பட்டு வருது. இதில் மூணு வகை இருக்கு.

நகர பேருந்துகள் :

சென்னை & மதுரை தவிர்த்த பிற நகரங்களில் நகர சேவைகளில் தனியாருக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. சில காரணங்களால், சென்னை பெரு நகரத்திலும் மதுரை மாநகரத்திலும் தனியாருக்கு நகர பேருந்து அனுமதி இல்லை. (ஆனாலும் சென்னையில் மிக மிக செல்வாக்கான நபர்களால் 2,3 டவுன் பஸ் தாம்பரம் ஏரியாவில் இயக்கப்பட்டுட்டு இருக்கு). இப்படியான நகரபேருந்துகளை ஒரு தனியார் இயக்க அனுமதி கேக்கும்போது, அந்த வட்டார அரசு போக்குவரத்து கழகம் தடையில்லா சான்றிதழ் தரணும். அதாவது அந்த ரூட்டில், அரசு போக்குவரத்து கழகம் சர்வீஸ் விட திட்டம் எதுவும் இல்லை (அ)) கூடுதல் சேவை செய்வதாக இல்லை. அதனால் தனியாருக்கு கொடுக்கலாம்னு அரசு போக்குவரத்து கழகம் சொல்லணும். ஆனா பல ஊர்களில் வெறும் தனியார் மட்டுமே இயக்கிட்டு இருக்கும் ரூட்டுகள் நிறைய இருக்கு. அந்த வழித்தடங்களில் அரசு பேருந்தே இல்லை. தனியார் லாபம் குவிக்கிற அந்த மாதிரி ரூட்டுகளில் ஏன் அரசு போக்குவரத்து கழகம் சேவை செய்யலைன்ற கேள்விக்கு பதில் எதுவும் இல்லை. இது கிட்டத்தட்ட, ஏர் இந்தியா கதை தான்.

ரெண்டாவது வகை: புறநகர் பேருந்துகள்:

இந்த கேட்டகரியில் மஃப்சல் பஸ்சுகள் இயக்கப்படுது. அதிகபட்சமா 150 கி.மீ வரைக்கும் அனுமதி. உதாரணமா கோவை-திருப்பூர்; கோவை-பொள்ளாச்சி; திருச்சி-தஞ்சை மாதிரி ரூட்டுகளை எடுத்துக்கலாம். அந்த வழித்தடத்தில் மிக மிக அதிகமான பயணிகள் எண்ணிக்கை இருக்கு. ஆனால் அந்த அளவுக்கு அரசு போக்குவரத்து கழகத்தால் சேவைகள் கொடுக்க முடியலை. அதனால் அதிக அளவிலான பெர்மிட்டுகளை தனியாருக்கும் கொடுத்து பயணிகளுக்கு வசதி செஞ்சு கொடுத்திருக்காங்க. இன்னும் சில ரூட்டுகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவு. அரசு நினைச்சால் பேருந்துகளை விட முடியும், ஆனாலும் தனியாருக்கு பெர்மிட் கொடுக்கிறாங்க. அது ஏன்னு கேட்க ஆளில்லை. அதெல்லாம் தனி சப்ஜெக்ட்டு. விடுங்க!

மூணாவது வகை தான் ரொம்ப குழப்பமான வகை. ஆம்னி பஸ்கள்.


மோட்டார் வாகன சட்டப்படி, ஆம்னி பஸ்கள் ரெகுலர் சர்வீஸ் செய்யக்கூடாது. அது ஒரு காண்டிராக்ட் வெஹிக்கல் தான். 5 வருஷம் முன்னே தனியார் பஸ்சில் சென்னை-கோவை; சென்னை-மதுரை; சென்னை-பெங்களூர் போனவங்களுக்கு தெரியும். ஒரு பரீட்சை அட்டையில் ஒரு பேப்பரில் 36 சீட் நம்பர் கொடுத்து அதில் நம்ம பேரையும் கையெழுத்தையும் வாங்கிக்குவாங்க. அதாவது. இந்த 36 பேரும் சேர்ந்து சென்னையில் இருந்து கோவை / மதுரை / பெங்களூர் மாதிரி இடங்களுக்கு இந்த பஸ்சை வாடகைக்கு எடுத்திருக்காங்கன்னு அர்த்தம். செக்போஸ்ட்டிலும் அப்படி தான் சொல்லிக்குவாங்க. ரெகுலர் சர்வீஸ், போர்டு எதுவும் போட கூடாது. டிக்கெட்டே கொடுக்க கூடாது (அது டூரிஸ்டு வண்டி தான்). சும்மானாச்சிக்கும் ஒரு ரெசிப்ட் நம்ம கிட்டெ கொடுத்திருப்பாங்க. பஸ்சில் ஏறினதும் அதை திரும்ப வாங்கிக்குவாங்க. அதுக்கு பதிலா போர்டிங் பாஸ்னு ஒரு சின்ன துண்டு ஸ்லிப் கொடுப்பாங்க.இது தான் வழக்கம்.

இது எதுக்காகன்னா, தொலைதூர பஸ்களை பொறுத்தவரைக்கும், அரசு போக்குவரத்து கழகம் மட்டும் தான் இயக்கணும். அவங்களுக்கு எந்த நஷ்டமும் வந்திரக்கூடாந்துன்றதுக்காக இந்த ஏற்பாடு.

ஆனா, இப்போ நிலமையே தலைகீழ். தனியார் பஸ்கள் ரெகுலர் சர்வீஸ் நடத்துறாங்க, டிக்கெட் கொடுக்குறாங்க, எந்த ரூட்டுன்னு எழுதியும் வெக்கிறாங்க, கிட்டத்தட்ட ஒரு சட்டவிரோத போக்குவரத்து கழகமே நடத்திட்டு இருக்காங்க. இதில் உச்ச பட்ச கொடுமை, கடந்த அதிமுக ஆட்சியில் ஆம்னி பஸ்களுக்குன்னு தனியா ஒரு பஸ்-ஸ்டாண்டே கட்டி கொடுத்தது தான். நியாயமா பார்த்தா, அரசு ரெகுலர் சர்வீஸ் ஓட்டுற பஸ்களை பறிமுதல் செஞ்சிருக்கணும். அது தான் சட்டம். ஆனா அதை அங்கீகரிச்சு, பஸ் ஸ்டாண்டையும் கட்டிகொடுத்து இருக்காங்க.


இதன் விளைவுகள் என்ன? தமிழகம் முழுக்க எந்த ஊரில் இருந்தும் எந்த ஊருக்கும் தனியார் சொகுசு பேருந்து இயக்கப்படுது. அதனால், அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குது. தமிழக போக்குவரத்து கழகங்கங்களிலேயே அதிக நஷ்டம் விரைவு போக்குவரத்து கழகத்துக்கு தானாம். அதத ஈடு கட்ட அரசு மானிய உதவி கொடுக்குது. அது மக்களின் வரிப்பணம். அந்த வரிப்பணத்தை அதிகரிக்க வரி உயர்வு, செலவுகளை ஈடுகட்ட பஸ்கட்டண உயர்வு எல்லாம் கொண்டு வரப்படுது.
சிம்பிளா சொன்னா, தனியார் பேருந்துகள் லாபம் கொழிக்கிறதுக்காக மக்களின் வரிப்பணம் விரையம் ஆயிட்டு இருக்கு.

விடுங்க.. ரொம்ப சீரியசா பேசிகிட்டு ஒரு டைவர்சன் எடுப்போம்.
எங்கப்பா கொஞ்சம் கொள்கை வாதி. ஒவ்வொரு விஷயத்திலும் அவருக்குன்னு ஒரு கருத்து இருக்கு. எங்கே போகணும்னாலும் அரசு பேருந்து தான். நமக்காக நம்ம அரசாங்கம் இயக்குற பஸ்சை நாமே உதாசீனப்படுத்தி நம்ம பணத்தை எதுக்காக தனியாருக்கு கொடுக்கணும்-ங்கற மாதிரியான கேள்விகள் அவர் கேட்கக்கூடியவர். அதனால் பெரும்பாலும் அரசு பஸ்ல தான் பயனம். ஆனாலும், நான் தனியா போகும் சந்தர்ப்பங்கலில் ஆம்னி பஸ்களில் 

சில சமயங்கள் போறதுண்டு.

நான் இது வரைக்கும் பயணிச்சதிலேயே செம ஸ்பீடு பஸ், (என்னை பொறுத்தவரைக்கும்) சென்னை-கரூர் போயிட்டிருந்த ராஜாளி ங்கற பஸ் தான் (1997). ராத்திரி 10.30 க்கு தி.நகர்ல எடுத்து விடிகாலை 5 மணிக்கு கரூர் வந்துருச்சு. 3 மணி சுமாருக்கு திருச்சி. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னன்னா தாம்பரம் வரும்போது மணி இரவு 11.50. அவ்வளவு டிராஃபிக். தாம்பரம்- திருச்சி 3.30 மணிநேரம்.

கோவைக்கு தான் அதிகமா பயணிச்சிருக்கேன். அப்ப முதல் முதலில் SMP டிராவல்ஸ்ங்கற பஸ் தான் ஏர் சஸ்பென்ஷன் கோச் அறிமுகம் பண்ணினாங்க. சென்னை, பாடியில் உள்ள சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தில் தான் Pneuair என்று சொல்லப்படும் சஸ்பென்ஷன் சிஸ்டம் உற்பத்தி ஆயிட்டு இருந்தது. அதனால் அங்கே தான் மாசாமாசம் வந்து பராமரிக்கப்படும். அந்த சமயத்தில் ஏர் சஸ்பென்ஷனுக்கு கிடைச்ச அமோக வரவேற்பை பார்த்து பலரும் பின்பக்க கண்ணாடியில் ஏர் பஸ்ன்னு ஸ்டிக்கர் ஒட்டிட்டு ஓட்ட ஆரம்பிச்சாங்க.


ஏர் சஸ்பென்ஷன்ங்கறது, வண்டியில் சேசிசுக்கும் வீல் ஆக்சிலுக்கும் இடையில் Rubber Bladder மூலம் சஸ்பென்ஷன் கொடுக்கிற டெக்னிக். பொதுவா அந்த இடத்தில் வீல் பட்டி / ஸ்பிரிங் பட்டின்னு சொல்ற டைப் சஸ்பென்ஷன் தான் இருக்கும். அது இரும்புங்கறதால, தூக்கி தூக்கி போடும். அதிர்வு ஜாஸ்தியா இருக்கும். ஆனா ஏர் சஸ்பென்ஷன் முழுக்க காத்து தான். ரப்பர் குடுவைக்குள்ள காத்து ஃபில் பண்ணி இருக்கும். எல்லா பள்ளம் மேடுகளிலும் ரப்பர் குடுவை மட்டும் தான் அமுங்கி ரிலீஸ் ஆகும். அதனால் வீல் மட்டும் தான் மேலே கீழே போகுமே தவிர, சேசிசில் அதிர்வு இருக்காது. மொத்த அதிர்வும் ரப்பர் குடுவைக்குள்ளே தங்கி ஏர் மூலம் ரிலீஸ் ஆயிரும்.
இந்த முறை வந்தப்புறம். நிறைய மாற்றங்கள். எவ்வளவு ஸ்பீடா போனாலும், பஸ்சுக்குள்ள அதிர்வு இல்லை. தூக்கி தூக்கி போடுறதில்லை. சும்மா, மெத்தையில் படுத்து கிடக்கிற மாதிரி நிம்மதியா தூங்கிட்டு போகலாம்.
அப்போ கோவைக்கு ஏர் பஸ்கள் ரொம்ப கம்மி. SMP, SSS, Oasis, RR, KPN, Conti மட்டும் தான். நான் SMP அல்லது Conti தான் போறது. இப்போ நிறைய பஸ்கள் வந்தாச்சு. அதுவும் வோல்வோ தான் ரொம்ப டாப். கர்நாடகா-கேரளா ரூட்டை பொறுத்தவரைக்கும் வோல்வோ காலங்கள் கழிஞ்சு, கரோனா, மெர்சிடிஸ் பென்ஸ் எல்லாம் வர ஆரம்பிச்சிருச்சு. தமிழ் நாட்டில் இப்போ தான் வோல்வோ மல்டி ஆக்சில் வண்டியே பிரபலமாக துவங்கி இருக்கு. நமக்கு எல்லாம் எப்போ பென்ஸ் வருமோ?

இந்த தொடரின் முதல் பாகத்திலேயே சொன்னதை போல, தமிழ் நாட்டில் வோல்வோ சொகுசு பஸ்களை பதிவு செய்ய அனுமதி இல்லை. அதனால் தமிழகத்தில் ஓடிட்டு இருக்கிற அத்தனை வோல்வோ சொகுசு பஸ்களும் புதுவை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தான் பதிவு செஞ்சு கொண்டுவர்றாங்க.


தமிழக அரசு இப்போ இந்த வருஷம் தான் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வந்து, தமிழக அரசு பேருந்துகளுக்கும் வோல்வோ வாங்கலாமான்னு யோசிக்கவே ஆரம்பிச்சிருக்காங்க. புதுவை, கேரளா, கர்நாடக, ஆந்திர மாநில அரசு பேருந்துகள் எப்பவோ நவீன பச்களை அறிமுகப்படுத்தி சக்கை போடு போட்டுட்டு இருக்காங்க. கர்நாடக அரசு பேருந்தின் வோல்வோ வண்டியை அடிச்சிக்க வேற எந்த ஸ்டேட்டாலும் முடியாது. அவ்வளவு சூப்பர் வண்டிங்க.

நம்ம தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழ்கம் இன்னும் பழைய மாடலில் தான் இருக்கு. எல்லாமே அசோக் லேலண்டு வண்டிங்க. பொதுவா சொந்தமா நாகர்கோவில் யூனிட்டில் அவங்களே கட்டிட்டு இருந்த வண்டிங்க. இப்போ சமீப காலமா, பெங்களூரில் Prakash, Harsha மாதிரி இடத்திலும், Veera, Irizar TVS மாதிரி கம்பெனிகளிலும் கொடுத்து சொகுசு பேருந்துகள் கட்டுறாங்க. அசோக்லேலண்டு பஸ்கள் தான் கம்பீரமான வண்டி, பாதுகாப்பும் கூட அப்படிங்கறது தமிழகத்தின் பொதுவான பார்வை. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஃபோர்டு பஸ்களையும் கொஞ்சகாலம் (1980 களில்) இயக்கினாங்க. டாட்டா வண்டிகள் இப்பவும் பல போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டுட்டு இருக்கு.

இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து ரொம்ப முக்கியமான விஷயமா இருக்கு. சொகுசு, நிம்மதி, விரைவு உள்ள பயணங்களுக்கு எந்த செலவு கணக்கையும் யாரும் பார்க்கிறது இல்லை. அதனால் தமிழக அரசு, சீக்கிரமாகவே வோல்வோ மாதிரியான சொகுசு பேருந்துகளை இயக்கணும்ங்கறது பலருடைய ஆசை.

அரசு விரைவு போக்குவரத்து கழக ரூட் நம்பர்களுக்கான லாஜிக், அண்டை மாநிலங்களுடன் பேருந்து போக்குவரத்து பரிவர்த்தனையில் உள்ள முரண்பாடுகள், விபத்துக்கள், பயண  அனுபவங்கள், பயணிகளுக்கான வசதிகள் எல்லாம்.. அடுத்த பகுதியில்

1 comment:

  1. We shouldn't be surprised about the facilities provided for omni services. Most of them belong to politicians!. Another thing, Govt services are not in loss due to omni busses, they are at a loss due to lack of maintenance, mainly. You have said so many things about Govt services, but have you travelled in any of the Ultra deluxe service? . I did and was disgusted by the lack of cleanliness, the seats were crawling with bed bugs, horrible. Show me an omni service(reputed one) that runs like this.
    Govt services are deliberately ill maintained. With the level of corruption we have, this discussion can go on forever., so let me stop here.

    ReplyDelete

Printfriendly