Thursday, September 27, 2012

சீராகுமா இந்திய பொருளாதாரம்?

ந்தியாவின் GDP வளர்ச்சியை S & P நிறுவனம் 5.5% னு குறைச்சு மதிப்பிட்டதில் தொடங்கியது என்னுடைய இன்றைய காலை பரபரப்பு!


இந்த வருட பட்ஜெட் படி நாம் எதிர்பார்த்திருந்த வளர்ச்சி விகிதம் 7.6% . வளர்ச்சி விகிதம் குறையுதுன்னு வெச்சுகிட்டா கூட ஒரு 6.8% லிருந்து 7.2% வரைக்குமாவது இருக்கும்னு எதிர்பார்த்திட்டு இருந்த எனக்கு 5.5% ங்கறது 1000 வோல்ட் அதிர்ச்சி தான். இது சைனாவின் 7.5% வளர்ச்சியை விட ரொம்ப கம்மி. ஆனா நாம எப்போதுமே உதாரணம் காட்டும் ஜப்பானின் வளர்ச்சி விகிதமான 2% ஐ விட மிக மிக அதிகம்.

என்ன ஏதோ புரியாத பாஷையில் பேசிட்டு இருக்கிற மாதிரி இருக்கா? சரி.. ரொம்ப ரத்தின சுருக்கமா சொல்ல முயற்சிக்கிறேன்!

GDP ங்கறது மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு. அதாவது ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு. வாகனம், விவசாயம், விஞ்ஞானம், தானியம், இயந்திரம் ன்னு என்னென்னல்லாம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுதோ, அந்த பொருட்களின் இன்றைய சந்தை மதிப்பு தொகை. இதை கணக்கெடுக்க மூணு விதமான மெத்தடு இருக்கு.உற்பத்திய வெச்சு கணக்கெடுக்கறது (Production Method), வருமானத்தை வெச்சு கணக்கெடுக்கிறது (Income Method), செலவை வெச்சு கணக்கெடுக்கறது (Expenditure Method). இந்த மூணு வகையில் கணக்கிட்டாலும் விடை கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் வரும். பொதுவா நாம உற்பத்தியை வெச்சு தான் கணக்கிடுறோம்.

இந்த GDP வளர்ச்சி விகித அடிப்படையில் தான் உலக பொருளாதார நிலைமை கணக்கிடப்படுது. அப்படின்னா. நாம உலகின் முக்கியமான பொருளாதார சக்தியா இருக்கணும்னா நம்முடைய வளர்ச்சி விகிதம் சீரா இருக்கணும். வருஷத்துக்கு 2% வளர்ந்தா கூட போதும்.. ஆனா ஒவ்வொரு வருஷமும் மினிமம் 2% வளர்ச்சி இருக்கணும். அப்போ எல்லா நாடுகளும் நம்ம நாட்டின் வளர்ச்சி விகிதம் மேல நம்பிக்கை வெச்சு முதலீடு செய்வாங்க.

வெளிநாட்டிலிருந்து நமக்கு கிடைக்கிற முதலீடுகள் தான், வளரும் நாடான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தி. அந்த முதலீட்டை வெச்சு, நாம தொழிற்சாலைகள், விவசாயம் எல்லாத்தையும் வளர்ச்சியடைய செய்யுறோம். இதனால் வேலை வாய்ப்பு, உற்பத்தி செய்யப்படும் பொருட்களால் அரசாங்கத்துக்கு வரி வருவாய், தொழிற்சாலை அமைக்கப்படும் இடங்களில் உள்கட்டமைப்பு வசதி மாதிரி நிறைய மறைமுக நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

சுருக்கமா, இதையே ரிவர்ஸில் இருந்து பார்த்தா GDP வளர்ச்சி விகிதத்தின் முக்கியத்துவ்ம் புரியும். பின் தங்கிய ஒரு மாவட்டம் வளரணும்னா (உதாரணமா நம்ம விருதுநகர்) அங்கே தொழில்வளர்ச்சி வேணும். தொழிற்சாலைகள் வந்தா, அதை சுற்றி துணை தொழில்கள் வளரும். உள்கட்டமைப்பு உருவாகும். புதிய குடியிருப்பு பகுதிகள் உருவாகும், வேலை வாய்ப்பு பெருகும், வேலை காரணமாக இடபெயர்ச்சி ஏற்படுறது குறையும், வேலைதேடும் வாழ்வாதாரத்துக்கான இடப்பெயர்ச்சிகளால் நகரங்கள் நெருக்கடிக்குள்ளாவது குறையும், மாநிலம் எல்லா பகுதிகளிலும் சீராக வளர்ச்சி பெறும். (இப்போ, சென்னை, கோவை, மதுரை, திருச்சு, நெல்லை, ஹோசூர் மட்டும் தான் வளர்ந்திட்டு இருக்கு. இதை தடுக்க தான் கடந்த திமுக ஆட்சியில் கங்கைகொண்டான், பெரம்பலூர், செய்யாறு, நிலக்கோட்டை மாதிரியான பின் தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க சலுகைகள் கொடுத்தாங்க. அதன் மூலமா அந்த பகுதிகள் வளர்ச்சி பெறும்ன்றது நோக்கம்! இதை பத்தி இன்னொரு பதிவு தனியா அப்புறமா போடுறேன்!)

பின் தங்கிய இடங்களில் பெரும் தொழிற்சாலைகள் தொடங்கணும்னா, முதலீடு அதிகமா தேவைப்படும். நம்ம நாட்டில் முதலீடும் தொழில்நுட்பமும் கிடைக்காதபோது நாம வெளிநாட்டில் இருந்து அதை எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டுக்காரன் நம்மளை நம்பி முதலீடு செய்யணும்னா, நாம வளர்ந்திட்டு இருக்கிறதை காட்டியாகணும். அதுவும் சீரான வளர்ச்சியை காட்டணும்.

உதாரணமா, வீடு கட்ட ஒரு இடத்தை நாம வாங்குறதா இருந்தா கூட அந்த இடத்தில் நாம போடுற முதலீடு பிற்காலத்தில வளருமான்னு யோசிக்கிறோமில்லே, அதே மாதிரி இந்தியாவில் செய்யப்படும் முதலீடு நல்லா வளருமான்னு வெளிநாட்டுக்காரன் யோசிச்சு முடிவு செய்ய இந்த GDP வளர்ச்சி விகிதம் தான் அடிப்படை.

நான் முதலிலேயே சொன்னமாதிரி 2% வளர்ச்சின்னா கூட பரவாயில்லை. சீரா இருந்தா நம்பி முதலீடு செய்வான். ஆனா, ஒரு வருஷம் 8% மறுவருஷம் 3% மாதிரி ஏற்றத்தாழ்வு இருந்தா முதலீடு செய்ய யோசிப்பான். ஷேர் டிரேடிங் செய்யுற நம்ம பசங்களுக்கு ஈசியா புரியும். ஒரு ஷேரை வாங்கறதுக்கு முன்னாடி அது கடந்த ஒரு வருஷத்தில் எப்படி விலை இருந்ததுன்னு பார்த்து தானே அதில் முதலீடு செய்யுறதா வேண்டாமான்னு யோசிப்போம். கிட்டத்தட்ட அதே டைப் தான்.

இப்போ, நம்ம இந்தியாவின் இப்போதைய நிலையை பார்க்கலாம்.



2009-10 & 2010-11 ஆண்டுகளில் GDP வளர்ச்சி விகிதம் சுமார் 8.4%. 2011-12ல் அது 6.5% னு குறைஞ்சுது. இந்த வருஷம் 5.5% தான் வரும்னு கணக்கிட்டிருக்காங்க. இந்த லட்சணத்தில் இருந்தால் எவன் நம்பி முதலீடு செய்வான்?

கடந்த 10 வருஷத்தில் இந்தியாவின் வளர்ச்சி நல்லா தான் இருக்கு. இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் புண்ணியத்தில் 1990களில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால நாம அபரிமிதமா வளர்ச்சி அடைஞ்சிருக்கொம்ன்றதை மறுக்க முடியாது. ஆனா வருஷா வருஷம் அந்த வளர்ச்சி சீரா இல்லாம, ஏற்ற தாழ்வோட இருக்கு! இது உலக பொருளாதார வரைபடத்தில் இந்தியாவை ஒரு நிச்சயமற்ற தன்மையில் தான் இப்பவும் வெச்சிருக்கு. கடந்த 2 வருஷமா, நமக்கு வர்ற முதலீடுகள் லேசா குறைய தொடங்கி இருக்கு.

சரி, ஏன் இப்படி குறையுது? உற்பத்தி குறைப்பு, ஏற்றுமதியை விட அதிகமா இறக்குமதி இருக்கிறது, பணவீக்கம், உலக பொருளாதாரத்தில் ஏற்படுற மந்த நிலை மாதிரியான ஸ்டாண்டார்டு காரணங்கள் பல இருக்கு. இது தவிர நீங்களும் நானும் உட்பட நாம ஒவ்வொருவரும் செய்யுற வரி ஏய்ப்பும் ஒரு காரணம்

சிறுதொழில்களில் செய்யப்படும் உற்பத்தி பொருட்கள் அத்தனையையும் அவங்க கணக்கு காட்டி அதுக்கு வரி கட்டுறதில்லை. பெரும் தொழிற்சாலைகளால் அப்படி கணக்கு காட்டாம உற்பத்தி செய்ய முடியாது. அதனால் இந்த சிறுதொழில்களில் செய்யப்படும் உற்பத்திகளில் சில, வரிகட்டறதை தவிர்க்கறதுக்காக கணக்கில் காட்டாம விடறதால, அது GDP கணக்கெடுப்புக்கு வர்றதில்லை. விற்பனை விலையை வெச்சு எடுக்கப்படுற GDP கணக்கெடுப்பில், முறைசாரா வியாபார நிறுவனங்களின் வணிகம் (நாட்டின் அதிகமான வணிகம் நடக்கும் சந்ததகள், மளிகை கடைகள் மாதிரியானவை) கணக்கில் வருவதில்லை. இதன் காரணமா GDP கணக்கில் குறைவு ஏற்படுறதுண்டு! அதாவது உற்பத்தி ஆகுது, வியாபாரமும் ஆகுது. ஆனா, அது கணக்கில் வராததால GDP அடி வாங்குது. இதில் நாம எங்கே வர்றோம்னு கேட்கிறீங்களா? வரியை தவிர்க்கறதுக்காக பில் இல்லாம பொருட்களை வாங்குறோமே.. பத்தாதா? பில் போடுறவனை கூட வேண்டாம்னு சொல்லி செங்கல் ஜல்லி மணல் கம்பின்னு லட்சக்கணக்கில் கணக்கில் வராம வரி கட்டாம செலவு செஞ்சு வீடு கட்டினவங்க கோடிக்கணக்கில இருக்காங்க நாட்டில!

GDP அடி வாங்குறதால தனி மனிதனுக்கு என்ன பிரச்சனை?

முதலீடு குறையும், அதனால் தொழில்வளர்ச்சி குறையும், உள்கட்டமைப்பு வசதி கிடைக்காது, தொழிலுக்காக இடம்மாறுதல், அதன் காரணமா நகரங்களில் நெருக்கடி, உற்பத்தி குறைவு/கணக்கில் காட்டாத வியாபாரங்களால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு, அதை சரிக்கட்டுவதற்காக ஏற்கனவே இருக்கிற வரிகளை அதிகப்படுத்தறது, அதன் காரணமா விலைவாசி உயர்வு, பணவீக்கம்னு எல்லா அடியும் நமக்கு தாங்க!

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்த தகவல் படி உலகிலேயே பொதுமக்களுக்கு குறைவான வரி சுமை உள்ள நாடு இந்தியா தான். உலக நகரங்களிலேயே வரி சுமை மிக குறைவா இருக்கிற நகரம்.. நம்புங்க.. நம்ம சென்னை தான்!

2007ம் வருஷம் அப்போதைய திமுக அரசு வாட் வரி விதிப்பு முறையை கொண்டுவந்தது. அதற்கு முந்தய அதிமுக அரசு வாட் வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவிச்சதால் 2004ல் அமலாகவேண்டிய வாட், திமுக ஆட்சிக்கு வரும் வரை ககத்திருக்கவேண்டியததயிருச்சு. 2007ல் வாட் வரி கொண்டுவரப்பட்டபோதும், இப்போ FDI க்கு எதிரா போராடுற இதே வணிகர்கள் வாட் வரிவிதிப்பை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடத்தினாங்க. அது ரொம்ப சிக்கலான விஷயம். எங்களை அழிச்சிரும்னு எல்லாம் பயப்பட்டாங்க. (ஆக்சுவல்லி, அவங்க கணக்கு காட்டி ஆகணுமேன்னு தான் போராடினாங்கன்றது வேறே விஷயம்!) ஆனா எல்லா எதிர்ப்பையும் மீறி, 2007ல் வாட் வரி அமலாக்கப்பட்டது. (உபரி தகவல்: இந்தியாவிலேயே வெச்சு, மிக மிக சுலபமான எளிமையான வரி விதிப்பு முறை அமலில் உள்ள மிக சில மாநிலங்களில் நம்ம தமிழகம் தான் முதலிடம்!) அதுக்கு அப்புறம் மிக பெரிய வளர்ச்சி, தமிழக தொழில்துறையிலும், வர்த்தகத்திலும் ஏற்பட்டது.



1990களில் மன்மோகன்சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்களால் தான் இந்திய பொருளாதார்ம் உலக பொருளாதாரத்துக்கு இணையா வளர்ந்தது. தொழில் வளர்ச்சி பல மடங்கு பெருகிச்சு. கிராமங்களில் சின்ன சின்ன வேலை செஞ்சு கிடைச்ச காசை சம்பாதிச்சிட்டிருந்த பட்டதாரிகளின் வாழ்க்கை தரம் அடியோட மாறி, உயர்தரமா மேம்பட்டது. உலக சந்தைக்கு இந்தியாவை திறந்துவிட்டதில், பல நவீன வசதிகள், பொருட்கள், வாகனங்கள்னு மிக தரமான வாழ்க்கை வாழற வாய்ப்பு நமக்கு கிடைச்சது. சம்பள உயர்வு, பொருளாதார மேம்பாடு, தனிநபர் வாழ்க்கை தர உயர்வுன்னு எல்லாம் சாத்தியப்பட்டதே, அந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் தான்.

3 வருஷம் முன்னாடி, அமெரிக்கா, ஐரோப்பான்னு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளெல்லாம் ஆட்டம் கண்டு கிட்டத்தட்ட தகர்ந்து போனப்ப கூட, இந்திய பொருளாதாரம் மட்டும் சும்மா கன்மாதிரி தலை நிமிர்ந்து நின்னிட்டிருந்ததுக்கும் அந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தான் முக்கிய காரணம்.

இப்போ மீண்டும் ஒரு இக்கட்டான நிலையில் நாம இருக்கோம்! அதாவது வளர்ச்சி இருக்கு. ஆனா சீராக இல்லை. ஏறி இறங்கி மாறுபட்டுட்டே இருக்கு. அதை தடுக்கறதுக்காக, சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட்டு வர்றாங்க! வங்கிகளின் கையிருப்பான CRR கம்மி பண்ணி, பணப்புழக்கத்தை அதிகரிச்சிருக்காங்க. வட்டிவிகிதங்கள் குறைச்சிருக்காங்க. இன்னும் மறைமுகமா நிறைய சின்ன சின்ன நடவடிக்கைகளை ஒவ்வொருவாரமும் எடுத்துட்டே வர்றாங்க. பொருளாதார மந்தநிலைக்கு எதெல்லாம் காரணம்னு ஒவ்வொண்ணா கண்டு பிடிச்சு அதையெல்லாம் மெல்ல மெல்ல நீக்கிட்டு வர்றாங்க. இது தவிர, பெரிய அளவிலான சீர்திருத்தங்களும் அப்பப்போ அறிவிச்சிட்டு வர்றாங்க. அதில் சில விஷயங்களுக்கு மட்டும் கொஞ்சம் எதிர்ப்பு இருக்கு. எதிர்க்கணுமேங்கறதுக்காக மட்டுமே விஷயம் புரியாம எதிர்க்கறவங்களை எல்லாம் புறக்கணிச்சிட்டு எல்லா சீர்திருத்தங்களையும் அமல்ப்படுத்தி GDP வளர்ச்சியை சீராக்குவது தான் இப்போதைய மத்திய அரசின் நோக்கம். இது தொடர்பா மன்மோகன் சிங் கொடுத்திருக்கும் விளக்கத்தில் கூட, நாட்டு நலனுக்கான சீர்திருத்த நடவடிக்கைகளில் யாருடைய மிரட்டலுக்கும் பணியமாட்டோம்னு தெளிவா சொல்லியிருக்காரு! அது ஒண்ணு தான் இப்போதைக்கு நமக்கு கிடைச்சிருக்கிற ஒரே நிம்மதி!

எப்படியும், நாம வரி ஏய்ப்பை நிறுத்தப்போறதில்லை. மளிகை கடைகள், சிறு தொழில்கள் யாரும் ஒழுங்கா கணக்கு காட்ட போறதில்லை. இருக்கிற தகவல்களை மட்டும் வெச்சு, அதை எப்படி மேம்படுத்தி வளரவைக்கிறதுங்கறதுதான் உண்மையான சவால்.

நல்லவேளையா இப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மன்மோகன்சிங் பிரதமரா இருக்காரு! வேறே யாராவது இருந்திருந்தா… நினைச்சு பார்க்கவே முடியலை!

Tuesday, September 25, 2012

FDI அலசலாம் வாங்க – பார்ட் 2



FDI அலசலாம் வாங்க எனும் நேற்றைய பதிவின் தொடர்ச்சி தான் இந்த பதிவு. நேற்று முக்கியமான பயங்களை பற்றி பார்த்தோம். இது தவிரவும் இன்னும் சில யூகமான வதந்திகள் உலவிட்டு தான் இருக்குது. அதெல்லாம் என்னென்னு பார்க்கலாம்!

பயம்4 : அந்நிய முதலீடுங்கறது மீண்டும் காலனியாதிக்கத்துக்கு வாசலை திறந்துவிடுறமாதிரி. நம்ம நாட்டை நாமளே மீண்டும் அடகு வைக்கிறோம். இங்கே வந்து லாபம் சம்பாதிச்சு அவங்க நாட்டுக்கு மொத்தமா எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயிடுவாங்க.

நேற்றே சொன்னமாதிரி, இது ஒரு கூட்டு தொழில். எல்லா கூட்டாளிகளுக்கும் லாபத்திலும் நஷ்டத்திலும் பங்கு இருக்கு. உள்ளூர் கூட்டாளின்னா லாபபணம் உள்ளூரிலேயே இருக்கும். வெளிநாட்டு கூட்டாளி லாபத்தை அவங்க நாட்டுக்கு எடுத்துட்டு போறான். இதில் வருத்தப்பட என்ன இருக்கு? வெளிநாட்டுக்காரன், தனது பணத்தை இங்கே முதலீடு செய்யுறான். அதன் மூலமா வர்ற லாபத்தை எடுத்துக்கறான். நஷடமானாலும் அவன் தானே ஏத்துக்கணும்?

நஷ்டம் ஆகுமான்னு கேக்குறீங்களா? இந்தியாவில் சில்லறை வணிகம் செய்யுறது ரொம்ப கஷ்டம்ங்க. நிறைய செண்டிமெண்ட்ஸ் இருக்கிற விஷயம் இது! சென்னையிலேயே பிக்பஜார், ரிலையன்ஸ் மார்ட் எல்லாம் இருந்தாலும், ரெகுலரா வாங்குற மளிகைக்கடையை மாத்தாம இருக்கிறவங்க நிறையபேரு. அதனால் தான் இப்பவும் மளிகை, தள்ளுவண்டி வியாபாரம் சென்னையில் சரியாம இருக்கு. போட்டிகளை சமாளிக்க முடியாம, திரிநேத்ரா, சுபிக்ஷா, ஸ்பென்சர்ஸ், மோர் மாதிரியான கடைகள் தட்டு தடுமாறிட்டு இருக்கிறது தெரிஞ்ச விஷயம் தானே? இப்படியான சூழலில், இந்தியாவின் வெறும் 3% மக்களை மட்டுமே நம்பி 46 நகரங்களில் மட்டுமே ஆரம்பிக்கப்படுற அந்நியமுதலீட்டு வணிகவளாகங்களால் என்ன பெரிய லாபம் வந்திரும்னு நினைக்கிறீங்க? நேரடி கொள்முதலில் கிடைக்கிற விலை குறைவு மட்டும் தான் லாபத்துக்கான கேரண்டி.

இந்த வெளிநாட்டு முதலீட்டால வளர்ச்சி பெற்ற வாகன துறையை ஒரு உதாரணத்துக்காக எடுத்துக்கலாம்.

இந்தியாவில் ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனிக்காரங்க மொபெட் தயாரிச்சிட்டு இருந்தாங்க. ஹீரோ மெஜஸ்டிக், ஃபாந்தர் வண்டிகள் ரொம்ப பிரபலம். ஆனா அவங்ககிட்டே பைக் செய்யுற தொழில்நுட்பமோ, வசதியோ இல்லை. 1990களில் இந்த துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டதும், ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனி, வெளிநாட்டு கூட்டாளியா ஜப்பானின் ஹோண்டா கம்பெனியுடன் சேர்ந்து ஹீரோஹோண்டா கம்பெனியா உருவெடுத்தது. அதுக்கப்புறம், விதம் விதமான வண்டிகள், விலை குறைவா தரமான பைக்குகள்ன்னு சக்கைபோடு போட்டு இந்தியாவில் நம்பர் ஒன் கம்பெனி ஆச்சு. அதுமட்டுமல்லாம, ஏற்றுமதியிலேயும் முன்னணியில் இருக்கு. இதிலிருந்து வர்ற லாபம் மட்டும் தான் வெளிநாட்டுக்காரனுக்கு. வளர்ச்சி எல்லாம் நம்மாளுங்களுக்கு தான். இதே கதை தான், தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார்ஸ் சுசுகி கூட்டணிக்கும், இந்தியாவின் பஜாஜ்-கவாசாகி கூட்டணிக்கும், இந்தியாவின் எஸ்கார்ட்ஸ் யமஹா கூட்டணிக்கும், மற்றும் பல பல வாகன துறை கம்பெனிகளுக்கும்.
தொழில்நுட்ப உதவி மற்றும் விரிவாக்கத்துக்கான முதலீடு தான் அந்நிய முதலீட்டுக்கான நோக்கமே தவிர, இங்கே இருக்கிற வளங்களை கொள்ளை அடிக்கறதில்லை! இன்னும் சொல்லப்போனா, எப்படி வியாபாரம் பண்றதுன்னு தெரியாம இருக்கிற இந்திய தொழில்துறைக்கு நவீன உத்திகளை சொல்லிக்கொடுத்து வளர்ச்சிக்கு கொண்டு போற வசதி இந்த அந்நியமுத்லீட்டில் இருக்கு. உற்பத்தி துறை, வாகன துறையில் இது மாதிரி நிறைய உதாரணங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.


சில்லறை வணிகத்தை பொறுத்தவரை, குறைவான விலையில் எப்படி தரமான பொருட்களை கொள்முதல் செய்யுறது, உணவுப்பதப்படுத்தவும், இருப்பு வைக்கவும், லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங், கோல்டு ஸ்டோரேஜ் வசதிகளிலும் என்னென்ன நவீன உத்திகள் கையாள்றது என்பது மாதிரியான தொழில்நுட்ப உதவிகளும், அதற்கு தேவையான பெரும் முதலீடும் நமக்கு கிடைக்கும்.

அந்நிய முதலீடுன்னா வெறும் வெளிநாட்டுக்காரன் மட்டுமில்லை. நாமளும் உண்டு. என்ன குழப்பமா இருக்கா? ஒரு குட்டி கதை சொல்றேன்!

என் நண்பர் ஒருவர் விருதுநகர்காரர். பரம்பரை பரம்பரையா மளிகைக்கடை நடத்திட்டு வர்ற குடும்பம். கொஞ்சம் நிதி நெருக்கடி காரணமா கடைசி சகோதரரான இவர் மட்டும் வெளிநாட்டில் வேலைக்கு போனாரு. 7 வருஷம் ஆச்சு  அவர் படிச்ச படிப்பு கைகொடுக்க, அங்கேயே செட்டில் ஆகி, நல்லபடியா சம்பாதிக்கவும் ஆரம்பிச்சாச்சு. இவங்க குடும்ப கடையை விரிவு செய்யற ஐடியா வந்தது. ஆனால், இவரால் அதில் இதுவரைக்கும் முதலீடு செய்ய முடியலை. காரணம் வெளிநாட்டிலிருந்து முதலீடு வாங்கறதுக்கு FERA, FEMA ன்னு நிறைய சட்டசிக்கல்கள் இருக்கு. RBI அப்ரூவல் வேறே வேணும். அப்படியும் அதை கடனா தான் வாங்கணும். அதுக்கான நிறைய ஃபார்ம் ஃபில் பண்ணி மாசா மாசம் RBI க்கு சமர்ப்பிக்கணும். ஆனா இந்த FDI அனுமதி மூலமா, அவரும் அவருடைய சகோதரகளும் சேர்ந்து குடும்ப வியாபாரமான மளிகைக்கடையை ரொம்ப பெரிசா இப்போ விரிவுபடுத்த முடியும்னு சந்தோஷப்பட்டாரு. எந்த சட்ட சிக்கலும் இல்லாம தானே தனது பங்கு தொகையை சகோதரர்கள் கிட்டே கொடுத்து சட்ட்ப்பூர்வமான முதலீட்டாளரா ஆகிக்க முடியும்! (ஆனா, அவருடைய ஊரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது. காரணம் தமிழகம் FDI க்கு எதிர்ப்பு. அவருடைய ஊரில் 10 லட்சம் ஜனத்தொகை இல்லை!தமிழ்நாட்டை விடுங்க. மத்த மாநிலங்களில் பலருக்கு இந்த வாய்ப்பு இப்போ இருக்குல்லே?)

இப்போ இந்த வெளிநாட்டுக்காரன் வந்து கொள்ளையடிச்சிட்டு போயிடுவான்ற பூச்சாண்டியின் உண்மை நிறம் ஓரளவுக்காவது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

பயம் 5 : பெரிய வணிக நிறுவனங்கள் எல்லாரும் ஏமாத்துப்பேர்வழிங்க. வரி ஏய்ப்பு செய்வாங்க. அதனால் அரசுக்கு நஷ்டம். அது நம்ம தலையில தான் வந்து விடியும்.

முதலில் நம்ம வரி விதிப்பு முறையை சுருக்கமா பார்த்திரலாம்.

வாட் வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டபின், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரைக்கும் வியாபாரம் செய்யுற வணிக நிறுவனங்கள் வரி கட்ட தேவையில்லை. ஆண்டுக்கு 10 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்யுறவங்க காம்பவுண்ட் டாக்ஸ் அல்லது முழுமையான டாக்ஸ் இதில் எது வேணுமோ அவங்களே தீர்மானிச்சு அதை கட்டிக்கலாம். அரசு அதை பத்தி எந்த கேள்வியும் கேட்காது. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு மொத்த வியாபாரம் செய்யும் வணிக நிறுவனங்கள் கட்டாயமா முழுமையான வரி கட்டியே ஆகணும். இந்த வரியையும் வியாபாரி தன்னுடைய கையில் இருந்து கட்ட தேவையில்லை. விற்பனை செய்யும்போது, நுகர்வோர்கிட்டே இருந்து வசூலிச்சு, அதை அரசாங்கத்துக்கிட்டே கொடுத்திரணும். அதாவது வரி கட்டப்போறது உண்மையில் மக்கள் தானே தவிர வியாபாரிகள் இல்லை. இது தான் இப்போ இருக்கிற வரி விதிப்பு முறை.

நான் அடுத்து சொல்லப்போற விஷயம் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். சிலர் அதத ஒத்துக்கக்கூட மாட்டாங்க. ஆனாலும் சொல்றேன். கேட்டுக்கோங்க!

இன்றைய தேதியில் அரசுக்கு மிக பெரிய வரி வருவாய் இழப்பு மளிகை கடைகளால் தான் ஏற்படுது.

அவங்க ஒவ்வொருத்தரும் சராசரியா செய்யுற வியாபாரம் ஆண்டுக்கு 10-25 லட்சம். ஆனா எதுக்குமே பில் போடுறதில்லை. கணக்கு வெச்சுக்கறதில்லை. அதனால் ஒரு நயா பைசாகூட அரசுக்கு வரி வருமானம் வரலை.

அதேநேரத்தில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரோ, சூப்பர்மார்க்கெட்டோ, ஹைப்பர்மார்க்கெட்டோ எதுவா இருந்தாலும் ஒவ்வொரு விற்பனைக்கும் முறையா பில்போட்டு வரிகட்டுறாங்க. அந்த வரியை அரசாங்கத்துக்கு முழுசா கட்டுறாங்களா, இல்லை ஏய்க்கிறாங்களாங்கறது வேறே விஷயம். ஆனா முறைப்படுத்தப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலமா அரசுக்கு பெரிய அளவில் நுகர்பொருள் வியாபாரம் மூலமான  வரி வருவாய் வருது. இன்னைய தேதியில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் மளிகைக்கடைகளுக்கு மேல இருக்கு. முறைப்படுத்தப்பட்ட ஸ்டோர்கள் 15,000 சொச்சம் தான் இருக்கு. அரசுக்கு எவ்வளவு பெரிய வரி இழப்பை அவங்க ஏற்படுத்திட்டு இருக்காங்கன்றதை நீங்களே குத்துமதிப்பா கணக்குப்போட்டுப்பார்த்துக்கலாம்.

சரி, ஏன் மளிகை கடைக்காரங்க வரி கட்ட மாட்டேங்குறாங்க? இதில் அவங்களுக்கு என்ன நஷ்டம்?. சட்டப்படி பார்த்தா, ஒரு பைசா கூட மளிகை கடைகள் தன்னோட கை காசிலிருந்து வரியா கட்ட தேவையில்லையே. பொருளுக்கான பில்லை போட்டு அதுக்கான வரியையும் மக்கள் கிட்டேயிருந்தே வசூலிச்சிக்கலாம். மக்கள்கிட்டேயிருந்து வசூலிச்ச வரியை அப்படியே சிந்தாம சிதறாம அரசாங்கத்துக்கிட்டே கட்டிரணும். இது தானே சட்டம்? ஆனா, இவங்க பில்லும் போடுறதில்லை, வரியும் வசூலிக்கறதில்லை, அதனால் அரசுக்கும் ஒரு பைசா கூட வருமானம் வரலை.

இப்படி பில் போடாம வியாபாரம் பண்றதுக்கான காரணிகள் ரெண்டே ரெண்டு விஷயம் தான். ஒண்ணு, முறையா கணக்கு வெச்சா, லாபம் எவ்வளவு வருதுன்னு  தெளிவா தெரிஞ்சிரும். (அந்த லாபத்துக்கு மட்டும் இவங்க கையிலிருந்து வருமான வரி கட்டியாகணும். நீங்களும் நானும் நம்முடைய சம்பாத்தியத்துக்கு 30% வருமான வரி கட்டிட்டு இருக்கோம். இவங்க வருமான வரின்னு ஒரு சல்லிக்காசு கூட அரசாங்கத்துக்கு கட்டுறது கிடையாது!)
ரெண்டாவது, இப்படி கணக்கு வழக்கெல்லாம் முறையா மெயிண்டெயின் பண்றதுக்காக சம்பளத்துக்கு ஒரு அக்கவுண்டண்டை வெக்கணும், அவர் எல்லா பில்லையும் பாதுகாக்கணும். அரசாங்கம் கேட்கும்போது கணக்குகளை கொடுக்கணும். இந்த ரெண்டுவிஷயத்துக்கும் சங்கடப்பட்டுட்டு தான் நாட்டின் மிகப்பெரிய வரி ஏய்ப்பை மளிகைக்கடைக்காரங்க நடத்திட்டு இருக்காங்க!

எங்க ஏரியாவில் 7 மளிகைக்கடை இருக்கு. இவங்க யாரும் பில்லே போடுறதில்லை. விற்பனை வரியும் கட்டுறதில்லை. அவங்க சொல்றது தான் காய்கறிக்கான அன்றைய விலை. அதை நாம சரிபார்க்க முடியாது. அதனால் கிடைக்கிற அபரிமிதமான லாபம் எங்கேயும் கணக்கு வைக்கப்படுறதில்லை. அதனால் அந்த லாபத்துக்கு வருமான வரியும் ஒரு பைசா கூட கட்டுறதில்லை. ஆனா தினசரி பரபரப்பா விற்பனையாயிட்டு தான் இருக்கு. இதில் வர்ற லாபம் முழுமையும் அவங்களுக்கு தான். இதே ஏரியாவில் ஒரு சூப்பர் மார்கெட் / ஸ்டோர் இருந்தா, இதே வியாபாரம் அவங்ககிட்டே ஆகும். ஆனா அந்த வியாபாரத்தின் மூலம் அரசுக்கு முறையான வரி வருவாய் வரும். அதை வெச்சு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தமுடியும்.

ஒரு அரசாங்கம் மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்தணும்னா பணம் வேணும். அரசாங்கத்துக்கு நாலு வழிகளில் தான் பணம் வருது. வரி வருவாய், வட்டி வருவாய், கடன், மத்திய அரசு/உலகவங்கி மானியம். இந்த பணங்களை வெச்சு தான் நமக்கான திட்டங்களை செயல்படுத்துறாங்க.
மக்கள் தினசரி மளிகைபொருட்களை, காய்கனிகளை வாங்கிட்டு தான் இருக்காங்க. ஆனால், அதை மளிகை கடையில் வாங்குறதால் அரசுக்கு வரி வரமாட்டேங்குது. அதையே முறைப்படுத்தப்பட்ட கடைகளில் வாங்கினா, அரசுக்கு வரி வருவாய் வரும். நிதிபற்றாக்குறைய சமாளிக்கணும்னா, வரிவருவாயை உயர்த்தியாகணும். 

இப்போ அரசாங்கங்கள் நிதிப்பற்றாக்குறைன்னாலே யோசிக்காம வரிஉயர்வை அறிவிச்சிடுறாங்க. ஏற்கனவே வரி கட்டிட்டு இருக்கிறவங்களுக்கு இதனால் கூடுதல் வரி உயர்வு. வரியே கட்டாம இருக்கிற இந்த மளிகை கடை மாதிரியான செக்மெண்டுக்கு சலுகைகள்னு ஒரு ஏற்றத்தாழ்வான நிலையில் சமூக பொருளாதாரம் இருக்கு. இதை மாற்றணும்னா, முறைப்படுத்தப்பட்ட கடைகளை அதிகப்படுத்தி, மக்கள் தினசரி செய்யுற மளிகை செலவுக்கு உரிய நியாயமான வரிகளை வசூலிச்சு வருவாயை அதிகப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தில் இப்போ எல்லா அரசாங்கங்களும் இருக்கு.

இப்போ உங்களுக்கு யார் வரி ஏய்ப்பு செய்யுறாங்கன்ற விஷயமும், எதுக்காக மளிகைக்கடைகள் இப்போ படபடக்கிறாங்கன்னு ஓரளவுக்கு உங்களால யூகிக்கமுடியும்னு நினைக்கிறேன்!

நமக்கான தேவைகளுக்காக அரசை கேள்வி கேட்கிற நாம, அரசின் நிதி நிலைமைக்காக நாம நியாயமா செய்யவேண்டிய கடமைகளை செஞ்சு தானே ஆகணும்?

சரி, இனி, இதே தொடர்ல, அந்நிய முதலீடு காரணமா ஏற்படக்கூடிய விவசாய டிமாண்டு, மாற்று விவசாயம், விவசாய வளர்ச்சி பற்றியெல்லாம் அடுத்த பதிவில் சுருக்கமா பார்க்கலாம்.

Monday, September 24, 2012

FDI அலசலாம் வாங்க!


சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு மீண்டும் பரபரப்பாகி இருக்கு! இது பற்றிய முடிவை மத்திய அமைச்சரவை நவம்பர் 2011ல் முடிவெடுத்தபோதே, நான் ஒரு விரிவான பதிவு எழுதி இருக்கேன் அப்போ அந்த முடிவை ஒத்திவெச்சிருந்த மத்திய அரசு, இப்போ மீண்டும் அதை அமல் செய்ய அரசாணை வெளியிட்டிருக்கு.

இதன் காரணமா எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி செயல்படாம செஞ்சு, பெரிய போராட்டமே நடந்தது. விவரம் என்னன்னே தெரியாம, பல ஊர்களிலும் போராட்டங்கள் நடந்துட்டு இருக்கு. மம்தா இன்னும் ஒரு படி மேலே போயி மத்திய அரசுக்கான ஆதரவையே வாபஸ் வாங்கிட்டாரு! பிரதமர் நாட்டு மக்களுக்கு டிவி மூலமா விரிவா விளக்கம் கொடுத்ததோட, அந்நிய நேரடி முதலீடு சம்மந்தமான ஒரு விளக்க விளம்பரத்தையும் வணிக அமைச்சகம் வெளியிட்டிருக்கு.

இந்த அளவுக்கு பயப்பட இதில் அப்படி என்ன இருக்கு? ஒவ்வொண்ணா அலசலாமா?

பயம் 1: அந்நிய நேரடி முதலீடு வர்றதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தா இந்தியாவிலுள்ள சிறுவணிகர்களை மொத்தமா அழிச்சிரும்!

அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளிச்ச மத்திய அரசு, இது 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகமா இருக்கிற நகரங்களுக்கு மட்டும் தான்னு ஒரு கண்டிசன் வெச்சிருக்காங்க. அது படி பார்த்தா இந்தியாவில் 46 நகரங்களில் தான் இந்த திட்டம் செயல்படும். 

அடுத்ததா, அந்நிய முதலீட்டு நிறுவனங்களை அனுமதிக்கறதும் அனுமதிக்காம இருக்கிறதும் அந்தந்த மாநிலங்களின் முடிவுன்னு அறிவிச்சிருக்காங்க. அதனால் இந்த 46 நகரங்களை விட மிக குறைவான நகரங்களில் தான் இந்த திட்டம் அமலாகும்.

நம்ம தமிழ்நாட்டை பொறுத்தவரை, நாம இதை அனுமதிக்கப்போறதில்லைன்னு நம்ம முதல்வர் ஜெயலலிதா தெளிவா அறிவிச்சுட்டாங்க. அதனால் தமிழகத்துக்கு அந்நிய நேரடி முதலீடு வர வாய்ப்பில்லை. (அப்புறம் எதுக்காக போராட்டம்னு கேக்குறீங்களா??? தெரியலையே?? எல்லாரும் போராடுறாங்க.. நாங்களும் போராடுறோம்ங்கற கதை தான்)

சரி, அப்படியே ஒரு வேளை தமிழக அரசு இந்த திட்டத்தின் நன்மைகளை கருத்தில் கொண்டு, அனுமதிக்குதுன்னே வெச்சுக்குவோம், சென்னை, கோவை, மதுரை தவிர வேறு எந்த ஊரிலும் வராது. ஏன்னா தமிழகத்தில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்கள் இவை மட்டும் தான்!

சிறு வணிகர்கள், தள்ளுவண்டிகள், மளிகைக்கடைகள் எல்லாம் எப்போதும் அழியாது. அழிய வாய்ப்பில்லை. இந்தியா ஒரு வளரும் நாடு. இங்கே எல்லாருக்கும் உரிய வாழ்வாதாரம் இருக்கு. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் எல்லாம் வந்தபோதும் அழியாம இருந்த மளிகைகடைகள், அந்நிய முதலீட்டால் அழிஞ்சிரும்னு சொல்றதே காமெடி தான்!

இன்னொரு வகையில் சொல்லப்போனா, கமிஷன் ஏஜெண்டுகள்கிட்டேயும், இடைத்தரகர்கள் கிட்டேயும், மொத்த வியாபாரிகள் கிட்டேயும் அதிக விலைக்கு வாங்கி மக்களுக்கு அதிக விலைக்கு வித்திட்டு இருக்கிற சிறு வணிகர்கள், இனி இது போன்ற பெரும் வணிகர்கள் கிட்டேயிருந்து நேரடியா வாங்கி, அவங்க பகுதியில் விற்பனை செய்யுறதன் மூலம், வணிகர்களுக்கும், நுகர்வோருக்கும் விலைகுறைவா பொருட்கள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு!

பயம் 2: அந்நிய நேரடி முதலீடு வந்தால், உள்நாட்டு பொருட்கள் அழிஞ்சிரும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செஞ்சு நம்ம விவசாயிகளை அழிச்சிருவாங்க!

இங்கே பலரும் சொல்ற உதாரணம் KFC, Pepsi மாதிரியான நிறுவனங்களின் வருகை. முதலில் ஒரு விஷயத்தை தெளிவா தெரிஞ்சுக்கணும். வெளிநாட்டு பொருட்கள்ங்கறது வேறே, வெளிநாட்டு முதலீடுங்கறது வேறே. இரண்டையும் போட்டு குழப்பீட்டு சிலர் எழுதியிருக்கிற பதிவுகள் படிச்சா கொஞ்சநஞ்ச பொருளாதார அறிவும் மறந்து போயிரும் நமக்கு! நான் சுருக்கமாவே விளக்குறேன்!

இந்தியாவில் கடை வெச்சிருக்கிற ஒருவர், தனது கடையை விரிவு செய்யணும்னா வங்கியிலிருந்து லோன் வாங்குவாருல்ல, அது மாதிரி தான் வெளிநாட்டிலிருந்து ஒரு பார்டனரை சேர்த்துக்கறதும். கிட்டத்தட்ட கூட்டு தொழில் மாதிரி. வெளிநாட்டுக்காரங்க இந்தியாவில் தொழில் தொடங்க விரும்பினாலும், இந்தியாவிலுள்ள ஒரு வணிகரை கூட்டு சேர்த்துக்கலாம். இது தான் இந்த திட்டம். இதில் கண்டிசன் என்னன்னா, வெளிநாட்டு முதலீடு 51% மேல இருக்கக்கூடாது!

வங்கியிலிருந்து 25% லோன் வாங்கி தொழிலை விரிவாக்குற அதே டெக்னிக் தான் வெளிநாட்டிலிருந்து 51% முதலீடு வாங்கி விரிவு செய்யுறதும். இதன்மூலம், யார் வேணும்னாலும் சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சிரலாம். வட்டியில்லாத கடன். லாபத்தில் ரெண்டுபேரும் 51% & 49%.
இந்த மாதிரியான திட்டம் ஏற்கனவே உற்பத்தி துறை, வாகன துறை, தொலை தொடர்பு துறைல எல்லாம் வெற்றிகரமா இயங்கிட்டு இருக்கு! சில்லறை விற்பனை துறை இந்தியாவில் வேகமா வளர்ந்துட்டு இருக்கிற துறை. அதை ஒழுங்குபடுத்தி, முறையாக சிஸ்டமேட்டிக்காக செயல்படுத்த தேவையான முதலீட்டுக்கு அந்நிய கூட்டாளியை சேர்த்துக்கலாம்னு அறிவிச்சிருக்காங்க. அவ்வளவு தான்.

இவங்க பெரும்பாலும், உள்நாட்டில் இருந்து தான் கொள்முதல் செய்வாங்க. கொஞ்சம் பொருட்களை இறக்குமதியும் செய்வாங்க. இது ஏற்கனவே இந்தியாவில் வழக்கத்தில் இருக்கிற விஷயம் தான். ரிலையன்ஸ், பிக்பஜார், மோர் மாதிரியாக கடைகளில் இப்போ இருக்கிற அதே சிஸ்டம் தான்.
விவசாய பொருட்களையும், தானியங்களையும் விவசாயிகளிடமிருந்தும், தானிய உற்பத்தியாளர்களிடமிருந்தும் நேரடியா பல்க் பர்ச்சேஸ் பண்றதால, விலை குறைவா வாங்க முடியுது. மேலும், இடை தரகர்கள், ஏஜெண்டுகளுக்கான கமிஷன் இல்லாததால், அந்த லாபத்தை கடைகள் பாதியா பிரிச்சு, த்னக்கு போக மிச்சத்தை நுகர்வோருக்கு பாஸ் பண்றாங்க. இதன் காரண்மா விலைவாசி குறையும். பணவீக்கம் கட்டுக்குள் வரும், நல்ல தரமான பொருட்கள் குறைவான விலைக்கு மக்களுக்கு கிடைக்கும். இதில் பாதிக்கப்படப்போறது யாருன்னா, எந்த வித முதலீடும் இல்லாம பொருட்களை வாங்கி விற்று கைமாற்றிட்டு இருக்கிற கமிஷன் ஏஜெண்டுகள் மட்டும் தான். இப்போ மறைமுகமா போராட்டம் நடத்துறதும் அவங்க தான்!

பயம் 3: அந்நிய நேரடி முதலீடு வந்தா விவசாயம் அழிஞ்சிரும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது, விற்பனை விலை கடுமையா கூடிரும்!

இது முற்றிலும் தவறு. விவசாயிகளிடம் நேரடியா காய்கறிகள் கொள்முதல் செய்வதால், விளைச்சல் வீணாவது தவிர்க்கப்படும். மொத்தமா கொள்முதல் செய்யப்படுறதால், விவசாயிகள் நம்பிக்கையா விவசாயம் செய்ய முடியும். மாற்று பயிர் விவசாயம், காய்கனி விவசாயங்களுக்கு டிமாண்ட் கூடும். அதிக எண்ணிக்கையிலான வணிக நிறுவனங்கள் வரும்போது, எல்லோரும் கொள்முதலுக்காக நிற்கும்போது, இப்போது போலல்லாமல், விவசாயபொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிக்கே வந்திரும். அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கிற மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காளத்தில் பெப்சி கம்பெனி, தன்னுடைய லேஸ் (Lays) சிப்ஸுக்காக உருளைக்கிழங்கு கொள்முதல் செய்யுறாங்க. இதனால் உருளைக்கிழங்கு விவசாயம் மட்டும் 30% உயர்ந்திருக்கு. விவசாயம் அங்கே மறுமலர்ச்சி அடைஞ்சிருக்கு. இது மாதிரி ஒடிஷா, பஞ்சாப்னு நிறைய உதாரணங்கள் இருக்கு.

அவ்வளவு ஏன், நம்ம தமிழகத்திலேயே சென்னை அருகில் திருவள்ளூரில் ரிலையன்ஸ் விவசாய கொள்முதல் செய்யுற இடத்தை யாராவது போயி பார்த்துட்டு வந்தீங்கன்னா விஷயம் ஓரளவுக்கு புரியும். வறண்டுகிடந்த திருவள்ளூர் மாவட்டத்தில் இப்போ காய்கனி விவசாயம் சக்கை போடுபோட்டுட்டு இருக்கிறதை ஊத்துக்கோட்டை தாலுக்கா வழியா பயணம் பண்றவங்களுக்கு தெரியும். சுருக்கமா சொல்லப்போனா, விவசாயத்தை மீண்டும் உத்வேகப்படுத்தற திட்டமா தான் அந்நிய நேரடி முதலீடு வருது! எல்லா வணிக நிறுவனங்களுக்கும் காய்கறி வேணும். 1 டன் வாங்குறவனை விட 100 டன் வாங்குறவனுக்கு விலை கம்மியா கிடைக்கும். அதே சமயத்தில் 100 டன்னுக்கு தேவை இருக்குன்றதாலேயே விவசாயி விளைச்சலை அதிகப்படுத்துவான். தரமான பொருட்கள் மட்டும் தான் வியாபார நிறுவனங்கள் வாங்கும்ன்றதால், விவசாயிகளும் தரமான காய்கனிகளை அதிகமான எண்ணிக்கையில் பயிர் செய்வாங்க. விக்காம போயிருமோன்ற கவலையும் விவசாயிக்கு இருக்காது.

விலை எப்படி குறையும்ங்கறீங்களா? சுருக்கமா ஒரு கணக்கை சொல்றேன்! (ஒரு விவசாய நண்பர் சொன்ன அனுபவ கணக்கு தான்! பயப்படாதீங்க!)
விவசாயி ஒரு கிலோ தக்காளியை 2ரூபாய்க்கு விக்கிறாரு. அதை கமிஷன் ஏஜெண்டு 4ரூபாய்க்கு விக்கிறாரு. அவர்கிட்டேயிருந்து வாங்கி கைமாத்துற மொத்த வியாபாரி அதை 6 ரூபாய்க்கு விக்கிறாரு. அதை வாங்குற சில்லறை வியாபாரி நமக்கு 8 ரூபாய்க்கு விக்கிறாரு! இது தான் இப்போதைய நடைமுறை. எல்லோருக்கும் 2 ரூபாய் லாபம் கிடைச்சிருது. விவசாயிக்கும் சில்லறை வியாபாரிக்கும் இடையில் இருக்கிற நபர்கள் கூட கூட விலையும் கூடிகிட்டே இருக்கும். (எல்லோருக்கும் லாபம் வேணுமில்லே?) அதாவது பெங்களூர் தக்காளி, தூத்துக்குடியில் விக்கணும்னா கிட்டத்தட்ட 6 பேர் கை மாறி வரும். அத்தனை பேருக்கான லாபத்தையும் சேர்த்து நாம அழுதுட்டு இருக்கோம்.

இப்போ ரிலையன்ஸ் என்ன செய்யுறாங்கன்னா, அவங்களே நேரடியா விவசாயிக்கிட்டே இருந்து மொத்தமா கொள்முதல் செய்யுறாங்க. கிலோ 3 ரூபாய்க்கு வாங்கி நேரடியா அவங்களே நமக்கு கிலோ 7 ரூபாய்க்கு விக்கிறாங்க! இதன்படி, நமக்கு 1ரூ லாபம், விவசாயிக்கு 1 ரூ லாபம். ரிலையன்சுக்கு 3 ரூ லாபம்! இதில் நஷ்டம் அடையுறது கைமாற்றி விட்டு காசு பார்த்தவங்க மட்டும் தான்!

அதிகமான எண்ணிக்கையில் பெரிய வணிக நிறுவனங்கள் வந்தால், உற்பத்தி உயரும், விலை குறையும்ங்கறது பொதுவான பொருளாதார கணக்கு. உற்பத்தி துறை, நுகர்பொருள் துறை, தொலைதொடர்பு துறை, வாகன துறைன்னு எல்லாத்திலேயும் இதை நாம அனுபவப்பூர்வமா பார்த்திருக்கோம். உள்ளூர் பொருட்கள் மட்டுமே கோலோச்சிட்டு இருந்த காலத்தில் அதிக விலையுடையதா இருந்தவை, போட்டின்னு வந்ததும் நியாயமான விலைக்கு இறங்கி வந்தாங்க. குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்களும் கிடைக்கதொடங்கிச்சு.1991ல் உற்பத்தி துறையிலும், வாகன துறையிலும் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்தபோதும் இப்படி தான் கிளம்புனாங்க. உள்ளூர் தொழில் அழிஞ்சிரும்னு. ஆனா என்ன நடந்தது. உள்ளூர் உற்பத்தி திறன் தரமானதா மாறியதோடு, வேகவா வளரவும் ஆரம்பிச்சிச்சு. இந்த 20 வருஷத்தில் இந்திய தொழில்துறை உலக அளவில் சிறப்பானதா ஆயிருச்சு. வாகன துறையும் அப்படி தான்.


மத்திய அரசு வழிகாட்டுதல்படி பார்த்தா, அந்நிய நேரடி முதலீட்டில் பெரும்பங்கு, வேர் ஹவுஸ், குளிர்பதன கிடங்கு, சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் மாதிரியான விஷயங்களில் தான் வருது! இது விவசாய விளை பொருட்களை சேமிக்கவும், கெடாமல் பாதுகாக்கவும், அதிவிரிவா எல்லா இடங்களுக்கும் அனுப்பவும் வழி செய்யும். சீசனல் விவசாய பொருட்கள், எல்ல சீசன்லயும் கிடைக்க, குளிர்பதனகிடங்குகள் தேவை. பெரிய வணிக வளாகங்கள், வேர் ஹவுசிங், லாஜிஸ்டிக்ஸ்னு நிறைய தொழில் வாய்ப்புக்களும், வேலை வாய்ப்புக்களும் உருவாகிட்டே இருக்கும்! இந்தியாவின் அடுத்த 20 வருட வளர்ச்சியில் விவசாயமும், அதன் லாஜிஸ்டிக் சிஸ்டமும் தான் பெரும் பங்கு வகிக்கப்போகுதுன்னு இப்பவே அடிச்சு சொல்லலாம். அழிஞ்சிட்டு இருக்கிற விவசாயத்தை தூக்கி நிறுத்தி வளரவைக்கணும்னா விவசாய பொருட்களுக்கான டிமாண்டை உருவாக்கணும். அதை தான் இந்த அந்நிய முதலீடு கொண்டுவர போகுது. அதுமட்டுமல்லாம, ரிலையன்ஸ், பிக்பஜார் மாதிரியான கடைகள் மட்டுமே ஆண்டுட்டு இருக்கிற நாட்டில் எல்லோருமே ஒரு கூட்டாளியை சேர்த்துகிட்டு பெரிய கடைகளை பெருநகரங்களில் அமைக்க முடியும். இந்தியாவின் அதிக மக்கள் தொகையும், அதிக சிறு வணிகர்களும் 95% இருக்கிற சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றை இந்த அந்நிய முதலீட்டு முடிவு எந்த வகையிலும் பாதிக்காது!

மேலே சொன முக்கியமான மூன்று பயங்களுக்கான விளக்கங்களிலிருந்து, மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ பாதிப்பில்லை, கமிஷன் ஏஜெண்டுகளுக்கும், இடைதரகரகளுக்கும் மட்டும் தான் பாதிப்புன்னும், விலைவாசி கட்டுப்படும், பணவீக்கம் குறையும்னும் தெரிஞ்சிருக்கும்.
மற்ற சிறு பயங்களை பற்றி அடுத்த பதிவில் இன்னும் விரிவா பார்க்கலாம்!


Saturday, September 22, 2012

மதிமுகவை உருவாக்கிய ஜெ!


வாரிசு அரசியலை எதிர்த்தும், கலைஞர் கூறிய அபாண்டமான கொலைப்பழியை அடுத்தும், தந்திரமாக வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் காரணமாக அவர் மதிமுகவை தொடங்கினார். இது தான் இணையங்களில் உலவும் மதிமுக தோன்றிய கதை! இது எப்படி உருவானது, யாரு உருவகப்படுத்தியது என்பது இன்னமும் புரியவில்லை! சில பத்திரிக்கைகளின் திரிபு செய்தியால் உருவானதாகக்கூட இருக்கலாம்! ஆனால், உண்மையில் என்ன தான் நடந்தது?

1993ம் ஆண்டு தமிழகத்தில் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. தமிழகத்தின் பொற்கால ஆட்சிகளில் அதுவும் ஒன்று. மக்கள் நலத்திட்டங்களும், மாநில வளர்ச்சி திட்டங்களும் பிரமாதப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம். ஜெ. அளவுக்கு நடுநிலையான அரசியல்வாதி அப்போது இல்லை என்கிற அளவுக்கு எல்லா விஷயங்களிலும் பரந்த மனப்பான்மையோடு செயல்பட்டுவந்தார் ஜெயலலிதா.

அப்படியான ஒரு காலகட்டத்தில், மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் “விடுதலைப்புலிகள் இயக்கம், திமுக தலைமையை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் தனது நம்பிக்கைக்குரிய வைகோவை அமர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதனால், திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு மறு அறிவிப்பு வரும் வரை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்” எனவும் தமிழக அரசுக்கு ஒரு அறிவுரை கடிதம் அனுப்பியது.

மத்திய உளவு பிரிவின் தகவல்களின் பேரில் மத்திய உள்துறை இதுபோன்ற கடிதங்களை அனுப்புவது வழக்கம் தான்! அப்படியான ஒரு கடிதம் தான் அப்போதும் வந்தது!

கருணாநிதி மீது அரசியல் ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும், தமிழக அரசின் தலைமைப்பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, தனது கடமையிலிருந்து தவறாமல், கருணாநிதிக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், மத்திய அரசிடமிருந்து வந்திருக்கும் உளவு தகவல்களின் அடிப்படையில் அவரது பாதுகாப்பை பலப்படுத்தவிருப்பதாகவும், என்னென்ன ஏற்பாடுகளெல்லாம் செய்யப்படுகிறது என்கிற விவரத்தையும் முழுமையாக தெரிவித்து, அதை ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை விடப்பட்டு இருந்தது.

திமுக தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினசரி திமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடுவது வழக்கம். கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து முக்கிய நிருபர்களையும் அவர் நன்கு அறிவார். அவரும் ஒரு பத்திரிக்கையாளர் என்கிற வகையில் எல்லோருடனும் சகஜமாக உரையாடுவார். அதிலிருந்து பல செய்திகளை நிருபர்கள் சேகரித்துக்கொள்வதுண்டு.



அப்படியான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக அரசிடமிருந்து வந்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி குறிப்பிட்டுவிட்டு, இனி தன்னை சந்திப்பதற்குள்ள கட்டுப்பாடுகளை பற்றி சாதாரணமாக சொல்லியிருக்கிறார். கலைஞரின் வருத்தமெல்லாம், தனக்கு வழங்கப்படும் கூடுதல் பாதுகாப்பின் காரணமாக தினசரி காலையில் மெரீனாவில் நடைபயிற்சி முடங்குமே, பத்திரிக்கையாளர்களை சந்திப்பது தடைபடுமே என்பது தான். அதை தான் அங்கே பத்திரிக்கையாளர்களிடம் அவர் சகஜமாக பேசி கொண்டிருந்தார். ஆனால் பத்திரிகை நிருபர்களின் செய்தி சேகரிக்கும் மூளை, மறுநாள் பரபரப்பு செய்தியாக உருவெடுத்தது!

“கருணாநிதியை கொல்ல வைகோ முயற்சி. கருணாநிதிக்கு கூடுதல் பாதுகாப்பு” என்றெல்லாம் பரபரப்பாகியது தமிழக ஊடகங்கள்!

இந்த செய்தி வெளியானதும், வைகோ நேரடியாக இது பற்றி கலைஞரிடமே கேட்டிருக்கலாம்! அப்போது அவர் துணை பொதுச்செயலாளர் தகுதியில் இருந்தார். திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்குமென்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். எல்லா மாவட்டங்களிலும் முக்கிய கழக தலைவர்களுக்கு தனி அதிகாரத்துடன் பதவிகள் கொடுக்கப்பட்டு இருந்தது. கழகத்துக்காக நீண்டகாலமாக உழைத்தவர்களின் வாரிசுகளுக்கெல்லாம் உரிய மரியாதை செய்யப்பட்டு இருந்தது. திமுக ஒரு குடும்பமாக இயங்கிவந்த ஒரு கட்சி என்பது அதிமுகவினரும் கூட ஏற்றுக்கொள்ளும் ஒன்று (இது பற்றிய தனி பதிவு இங்கே காணலாம்!)

வைகோ, நாடாளுமன்ற உறுப்பினராக, கழகத்தின் போர்ப்படை தளபதியாக, கழக முக்கிய பிரமுகர்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருந்த கால கட்டம் அது. எனவே அவர் நேரடியாக கலைஞரையே சந்தித்து விஷயங்களை தெளிவு படுத்தியிருக்கலாம்!

ஆனால், அவர் பத்திரிக்கையாளர்களை கூட்டி, ஸ்டாலினை அரசியலில் முன்னிலைப்படுத்துவதற்காக தான் தன் மீது வீணான கொலைப்பழியை கலைஞர் சுமத்துகிறார் என்கிற ரீதியில் மிக கடுமையான விமர்சனங்களை கலைஞர் மீது அவர் வைத்தார். இதுவும் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியானது.

ஸ்டாலின் கலைஞரின் மகன் என்றாலும் கூட, கட்சியில் அப்போது எந்த முக்கிய பதவியிலும் இல்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் உறுப்பினராக இருந்து பல போராட்டங்களை நடத்தி, மிசாவிலும், பிற போராட்டங்களிலும் ஈடுபட்டு சிறைசென்று, எல்லா கட்சி தொண்டரையும் போல தானும் ஒரு தொண்டராக செயல்பட்டு வந்தவர். பின்னாளில் இளைஞர் அணி என்கிற அணியை அமைத்து அதன் பொறுப்பினை கவனித்து வந்தார். இப்படியான சூழலில் கூட, ஸ்டாலினை விட அதிக முக்கியத்துவத்தை கலைஞர் வைகோவுக்கும் இன்ன பிற கட்சி தலைவர்களுக்கும் தான் கொடுத்து இருந்தார். கட்சிக்காக பாடுபட்ட உழைப்பு தான் அங்கே முக்கியமாக கருதப்பட்டதே தவிர, யாருடைய மகன் என்பது அல்ல!

வைகோவுக்கு, உள்ளூர ஒரு ஆசை இருந்ததாக சொல்வார்கள்! கலைஞருக்கு பின் திமுகவை தான் வழிநடத்தவேண்டும் என அவர் விரும்பியதாகவும், அதற்கு போட்டியாக ஸ்டாலின் வந்துவிடுவாரோ என்கிற அச்சம் அவருக்கு இருந்ததாக சொல்வார்கள். புலிகள் அமைப்புடன் நல்ல உறவு இருந்த வைகோவுக்கு, கலைஞர் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாடு (1991- ராஜீவ் படுகொலைக்கு பின்) எடுத்தது பிடிக்கவில்லை என்போரும் உண்டு. தமிழகத்தின் மிக சக்திவாய்ந்த இயக்கமான திமுக தங்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டுமென்றால் அதன் தலைமை பதவியில் வைகோ இருக்கவேண்டும் என புலிகள் அமைப்பு யோசித்து வந்ததன், தெளிவான ஆதாரங்கள் அடிப்படையில் தான் கருணாநிதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், புலிகளின் இந்த நிலைப்பாடு வைகோவுக்கு தெரியுமா, தெரியாதா என்பது இன்று வரை தெளிவாகவில்லை.

அப்படியான காலகட்டத்தில், வைகோவுக்கு கலைஞர் தான் ஏதோ தந்திரம் செய்து தான் கட்சி தலைமைக்கு வரவிடாமல் தடுக்கிறார், தன்னை நீக்கிவிட்டு, ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவார் என்பது போலெல்லாம் தானே சிந்தித்து, பல பத்திரிக்கையாளர் சந்திப்புக்களிலும், உணர்ச்சிவசப்பட்டு யூக குற்றச்சாட்டுக்களை சொல்லிக்கொண்டிருந்தார்.

இதுபோன்ற செயல்கள் கட்சிக்கட்டுப்பாட்டுக்கு எதிரானது என்பதால், கட்சி விதிப்படி, வைகோவிடம் விளக்கம் கேட்டு பொதுசெயலாளர் அன்பழகன் அவர்கள் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அதற்கு எந்த பதிலையும் வைகோ அளிக்கவில்லை.

அவருக்குள் எப்படியாவது திமுக தலைமையை கைப்பற்றவேண்டும் என்கிற ஆசை கனன்றுகொண்டிருந்ததாலோ என்னவோ, சுமுகமாக முடிந்திருக்கவேண்டிய இந்த விஷயத்தை இன்னும் சிக்கலாக்கும் வகையில், அண்ணா அறிவாலையத்தை கைப்ப்ற்ற தனது ஆதரவாளர்களுடன் சென்று அதை முற்றுகையிட்டார். மேலும் தாங்கள் தான் உண்மையான திமுக என்று அறிவித்து, திமுக சொத்துக்களும் கட்சி பொறுப்புக்களும் தனக்கே வழங்க உத்தரவிடவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தாக்கல் செய்தார். இதிலிருந்தே அவரது உள்ளத்தில் ஒளிந்திருந்த ஆசையும், அவர் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பதற்றப்படுவதன் காரணமும் தெளிவாக வெளி உலகுக்கு தெரியவந்தது.

இந்த இடத்தில் ஜெயலலிதா செயல்பட்ட விதத்துக்காகவே, கலைஞர் காலமெல்லாம் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டவராக இருக்கவேண்டும்!

வைகோ ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலையத்தை முற்றுகையிட்டதும், தமிழக போலீஸ் துறை அதை முற்றிலுமாக தடுத்து, கட்டுப்படுத்தி அவர்களை அங்கேயிருந்து அகற்றி, அறிவாலையத்துக்கு ஒரு சிறு கீறல் கூட விழாமல் காப்பாற்றில் முழுமையாக பாதுகாத்தார்கள். மேலும், திமுக யாருக்கு சொந்தம் என்கிற வழக்கு நிலுவையிலிருந்ததால், அண்ணா அறிவாலையத்துக்கு பூட்டுபோட்டு தமிழ்க அரசின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அப்போது ஜெயலலிதா நினைத்திருந்தால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி திமுக தலைமை அலுவலகத்தை என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். சிக்கலிலும் பிரச்சனையிலுமுள்ள ஒரு கட்டிடத்தை அரசு எடுத்துக்கொள்ள முடியும். அல்லது வைகோவின் வன்முறை படைக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றிருந்தாலே கூட, அறிவாலையம் துவம்சம் ஆகியிருக்கும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல் அந்த தலைமை அலுவலகத்துக்கு உரிய கவுரவத்தை முழுமையாக காப்பாற்றினார் ஜெயலலிதா.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும், பின்னர் உச்சநீதிமன்ற வழக்கிலும், வைகோவுக்கு திமுக மீது எந்த உரிமையும் இல்லை என தீர்ப்பானதை தொடர்ந்து தமிழக அரசு, அறிவாலையத்தை கலைஞரிடமே மீண்டும் ஒப்படைத்தது.

இதுவரையும் திமுகவிலேயே நீடித்திருந்த வைகோவின் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும், கட்சி தலைமையை கைப்பற்ற முயற்சி செயததை கருத்தில் கொண்டும், இது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு எந்த பதிலும் தெரிவிக்காதைதொடர்ந்தும், கட்சி உயர்மட்ட குழு முடிவின் படி வைகோ திமுகவின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இப்படி அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பே, தனது தனிக்கட்சி முடிவை வைகோ அறிவித்திருந்ததால், அவரது நோக்கம் எல்லோருக்கும் தெளிவாக தெரிந்ததால், இந்த நீக்கம் எல்லோரும் எதிர்பார்த்ததாகவே அமைந்தது. கலைப்புலி தாணு உதவியில் தாயகம் கட்டிடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உதயமானது. வைகோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் இடிமழை சங்கர் உட்பட ஐந்து பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

வைகோவை கட்சியிலிருந்து நீக்குவதில் கலைஞருக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை என்பதும், கட்சியின் முக்கிய தலைவர்களின் முடிவு தான் அது என்பதும் எல்லோருக்கும் தெரியும். பின்னர் சில ஆண்டுகள் கழித்து வைகோ பூந்தமல்லி சிறையிலிருந்தபோது, பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு ஆஜராவதை அறிந்து காலையிலேயே சென்று காந்திருந்து வைகோவை சந்தித்து ஆறுதல் கூறினார் கலைஞர். அப்போது இருவருமே மனம் விட்டு பேசியதில், உண்மையில் என்ன தான் நடந்தது என்பதை வைகோ உணர்ந்துகொண்டு மீண்டும் திமுகவுடனேயே கூட்டணி வைத்ததும், ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து கலந்துகொண்டு உரையாற்றியதும் வரலாறு. ஸ்டாலின் எப்போதுமே முன்னிலைப்படுத்தப்படவில்லை எனப்து வைகோவுக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான். வைகோ உச்சத்தில் இருந்தபோதும் கூட, ஸ்டாலின் ஒரு சாதாரண எம்.எல்.ஏ வாய்ப்பு கூட வழங்கப்படாமல் இருந்த நிலைமை அறியாதவரா என்ன?

என்னை பொறுத்தவரை வைகோ கலைஞரை ஒரு நடை சந்தித்து பேசியிருந்தாலே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்கும்.ஆனால், எங்கே திமுக தன் கையை விட்டு போய்விடுமோ என்கிற பதற்றத்தில் உணர்ச்சிவசப்பட்டு இந்த சிக்கலை தவறாக கையாண்டுவிட்டார் வைகோ என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு.

ஜெ. இந்த விவகாரத்தில் செயல்பட்ட விதம் சிறப்பானது. ஒரு வகையில் மதிமுக என்கிற கட்சி தோன்ற காரணமே ஜெயலலிதாவின் நடுநிலையான செயல் தான். இல்லாவிட்டால், காழ்ப்புணர்ச்சியோடு  ஜெ. கருணாநிதிக்கு எதிரான நிலைப்பாடை எடுத்திருந்தால், வைகோ திமுகவை கைப்பற்றியிருக்கவும் வாய்ப்பிருந்தது.

திமுக அந்த ஒரு விஷயத்துக்காக ஜெயலலிதாவுக்கு நன்றி செலுத்தலாம்!

Thursday, September 13, 2012

ஜெ. சொன்ன தப்பு கதை!



மிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று தனது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் மக்கள் நல திட்டங்களை வழங்கினார். அரசு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்கிற மரபை எம்.ஜி.ஆரும் கலைஞரும் வேண்டுமானால் பின்பற்றிக்கட்டும், நான் அப்படியல்லங்கற மாதிரி ஒரு சூப்பரான குட்டிக்கதை ஒன்றை எடுத்துவிட்டார். அந்த கதை இது தான்.

பெரு வணிகர் ஒருவரும்,சிறு வணிகர் ஒருவரும் நீண்டகால நண்பர்களாக  இருந்து வந்தனர்.திடீரென இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும்  பிரிந்து விட்டனர். இந்த நிலையில், பெரு வணிகர் மீது விரோதம் கொண்ட சிறு  வணிகர் அவர் மீது ஒரு வழக்குத் தொடர எண்ணினார்.இதற்காக அவருக்குத் தெரிந்த  ஒரு வழக்கறிஞரைக் காணச் சென்றார்.

ஆனால் அந்த வழக்கறிஞரோ, இந்த வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதிக்கவில்லை.
  எனினும், சிறு வணிகர் வழக்கறிஞரை தொடர்ந்து சந்தித்து, வழக்குத் தொடர்வது  குறித்து வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் வழக்கறிஞரும் வழக்கை எடுத்துக் கொள்ள  சம்மதித்து நீதிமன்றத்தில் பெரு வணிகர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை முடிந்து சிறு வணிகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இதையடுத்து,
  சிறு வணிகர்,எல்லோரிடமும், இந்த வழக்கில், தனக்கு சாதகமான விஷயங்கள்  இருந்ததால், இயல்பாகவே வழக்கின் முடிவு வெற்றியாக அமைந்துள்ளது. இதில்  வழக்கறிஞரின் வாதச் சிறப்பு ஏதும் இல்லை என்று அவதூறாக பேசி வந்தார்.

இந்த சிறு வணிகர் நிறத்திலும்,உள்ளத்திலும் கருப்பானவர்.இவரைப் போலவே சிலர்
  உள்ளனர்.நம்மை வேண்டி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு,  அதில் வெற்றியும் பெற்றுவிட்டு, பிறகு நம்மையே எதிர்த்தும், பழித்தும் பேசுவார்கள் (நன்றி: விகடன் இணைய தள செய்தி )

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தான் இந்த கதையில் உள்ளத்திலும் உருவத்திலும் கருப்பான, சிறு வணிகர் என்பது எல்லோருக்குமே ஈசியாக விளங்கும் ஒன்று!

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் என்பவர், அரசின் கேபினட் அமைச்சருக்கு இணையான அதிகாரம் உள்ளவர். சட்டமன்ற உறுப்பினர் குறித்து தரக்குறைவான விமர்சனம் செய்தால், அந்த விமர்சனத்தின் மீது உரிமை பிரச்சனை கூட கொண்டு வரமுடியும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், ஜெயலலிதாவுக்கு கதை எழுதிக்கொடுத்த புண்ணியவான், நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக ஆனால் எளிதில் எல்லோருக்கும் புரியும்படி கதை எழுதி கொடுத்து இருக்கிறார்னு நினைக்கிறேன்!

என்னை கேட்டால், இந்த கதையே தப்பு! எந்த லாஜிக்கும் இல்லாதது! வரலாற்று திரிபு!உண்மைக்கு மாறானது!

2011 தமிழக தேர்தலில் தேமுதிக-அதிமுக இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு இருந்தது. ஆனால், தொகுதி உடன்பாடு செய்வதற்கு முன்னரே, அதிமுக (வழக்கம்போல) தன்னிச்சையாக அதிமுக போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தது. இதன் மூலம் தேமுதிகவுக்கு செல்வாக்கு இருப்பதாக நம்பப்படும் சில தொகுதிகளிலும் அதிமுகவே களமிறங்குவதாக அந்த பட்டியல் சொல்லியது.


இதில் கடுப்பாகி போன விஜயகாந்த், தனது சார்பில் திரு. பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை (இவரை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இருக்கு! 1965ல் இருந்து இவரது செயல்பாடுகளை பார்த்தால், நிறைய விஷயங்களுக்கு விடை கிடைக்கும். அவை இன்னொரு சந்தர்ப்பத்தில் தனி பதிவாக!) அதிமுகவுடன் பேச்சு நடத்த அனுப்பி பேசியபின், ஜெ. இறங்கி வந்தார்.

தேமுதிகவுடன் பேச்சு நடத்த மூவர் குழு அமைக்கப்பட்டது. 

ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட அந்த மூவர் குழுவினர் தேமுதிகவுடன் நடத்திய பேச்சு, சுமுகமாக இல்லை. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் தொகுதி உடன்பாடு திருப்திகரமாக அமையவில்லை. தேமுதிக எதிர்பார்த்த அளவிலான தொகுதி எண்ணிக்கையும், அவர்கள் விரும்பும் தொகுதியும் அதிமுக ஒதுக்காததை கண்டித்து, தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
தேமுதிக வெளியேறியதை முதலில் அலட்சியம் செய்த ஜெ. தேமுதிகவை தொடர்ந்து, பிற கூட்டணி கட்சிகளான, சி.பி.எம்; சி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகியோரும் வெளியேறி, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் மூன்றாவது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதுணர்ந்ததும், ஆடித்தான் போனார்.

அதிமுகவின் நிலை அப்போது ரொம்பவே மோசம். ஜெ.வுக்கு சரியாக உடல்நலமில்லை. ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனத்துக்கு போனபோது கூட, தொடர்ச்சியாக ஆலையவலம் வர முடியாமல் அவ்வப்போது நாற்காலி இட்டு உட்கார்ந்து ஓய்வெடுக்கவேண்டிய அளவுக்கு மிக மோசமான உடல்நிலை. அதனால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடியுமா என தெரியவில்லை.

அதிமுகவில் பிரச்சாரம் செய்ய வேறு யாரும் இல்லை. நாடார்பேரவைக்கு என்று கூட்டணியில் பேரம் பேசி தொகுதிகள் வாங்கிய சரத் குமார், தனது வழக்கமான பாணியில், ஏற்றிவிட்ட ஏணியை (நாடார் பேரவை) எட்டி உதைத்து தள்ளிவிட்டு,  தனது சொந்த கட்சியான ச.ம.க மூலம் அந்த தொகுதியில் போட்டியிட்டார். அவரது பிரச்சாரம் ஓரளவுக்கு பலன் தரும் ஆனாலும், தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி பேச வேறு யாரும் இல்லை. எனவே அந்த குறையை விஜயகாந்த் தான் நிரப்பமுடியும் என அதிமுக நினைத்திருக்கலாம்!( அதிமுக அப்போது எடுத்த இன்னொரு முக்கியமான முடிவு, கூட்டணியில் இருந்த வைகோவை தள்ளி வைத்தது. அவரை பிரச்சாரம் செய்யவிட்டிருந்தால், அதிமுகவின் வெற்றி அதோகதி ஆகியிருக்கும்!)  

மேலும், திமுக-காங் உடன்படிக்கை இழுத்துக்கொண்டிருந்ததால், அதில் அதிருப்தியான காங் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டால், அது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இரு கட்சிகளும் நன்றாக உணர்ந்திருந்தார்கள்.

எனவே, காங் தேமுதிக கூட்டணி ஏற்படாதிருப்பதற்காகவும் அதிமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய ஆள் தேவையிருந்ததாலும், விஜயகாந்தை சமாதானப்படுத்த மீண்டும் மூவர் குழுவை அனுப்பி பேசவைத்தார் ஜெ.
விடிய விடிய விளக்கெரியவிட்டு முழு இரவும் நீண்ட பேச்சுவார்த்தை எந்த முடிவுக்கும் வரவில்லை. மூவர் குழுவுக்கு எல்லா அதிகாரமும் இருப்பதாக ஜெ. அறிக்கை விட்டாலும், பேச்சுவார்த்தையின் போது முந்திரிப்பக்கோடா சாப்பிடுவதா முறுக்கு சாப்பிடுவதா என்கிற முடிவை கூட அந்த மூவர் குழு எடுக்கமுடியாது என்பது எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தே இருந்தது.
என்னை விட்டிடுங்க, நான் தனியாவே நின்னுக்கறேன்னு முறுக்கிட்டு நின்ன விஜயகாந்தை படாத பாடு பட்டு, கெஞ்சி கூத்தாடி, மீண்டும் அதிமுக கூட்டணியிலேயே தொடரசெய்ததில் செங்கோட்டையனின் பங்கு மகத்தானது. (அதிமுகவுக்காகவும் ஜெவுக்காகவும் உழைந்தவர்களுக்கு எல்லாம் வழக்கமாக கிடைத்த அதே பரிசு அவருக்கும் கிடைத்தது ஓரங்கட்டல்)

முதலில் திமுகவுடன் கூட்டணிக்கு முயன்று தோற்றுப்போன கடுப்பில் இருந்த தேமுதிகவுக்கு, காங்கிரஸ் சப்போர்ட் கிடைத்திருந்தால், தமிழகத்தின் வரலாறே கொஞ்சம் மாறியிருக்கும் என்றும் இப்போதும் சிலர் சொல்வதுண்டு. ஆனால், அந்த சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதி மிக சாதுரியமாக செயல்பட்டு, அந்த திட்டத்தை உடைத்தார். அழகிரி மூலம் தேமுதிக பற்றி ஒரே ஒரு வரி பேட்டி கொடுத்து, விஜயகாந்தை கடுப்பேற்றி, அதிமுக கூட்டணியில் தொடரவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினார். (அதெல்லாம் தனி கதை!)

அதிமுக கூட்டணிக்கு, தேர்தல் பிரச்சாரத்தில் மிக பெரிய பலமாக விஜயகாந்த் இருந்தார். அங்கங்கே சில சொதப்பல்கள், அநாகரீகங்களை அரங்கேற்றினாலும், திமுகவின் பிரச்சாரப்படையை தகர்க்க ஜெ.வும் விஜயகாந்தும் தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்றடித்து செய்த பிரச்சாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது!

உண்மை நிலவரம் இப்படி இருக்க, ஏதோ விஜயகாந்த் வந்து ஜெயலலிதாவிடம் கெஞ்சியது போலவும், ஜெ. பெரிய மனது பண்ணி அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டதை போலவும், அதிமுக தயவில் வெற்றி பெற்றுவிட்டு அதிமுக என்கிற ஏணியை எட்டி தள்ளியதை போலவும் ஜெ. இன்றைக்கு பேசி இருப்பது, மிக மிக தவறானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
அதை விட கொடுமை, ஒருவரின் நிறத்தை வைத்து அவரை இழிவு செய்வது. இது இன்னொரு வகையிலான தீண்டாமையன்றி வேறில்லை. தமிழகம் முழுமைக்கும் பொதுவான முதலமைச்சர் பதவியிலிருந்துகொண்டு, இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சிசெய்வதாக சத்திய பிராமணம் செய்துவிட்டு, நிற அடிப்படையில் ஒருவரை, அதுவும் அமைச்சருக்குரிய அதிகாரமுடைய சட்டமன்ற எதிர்கட்சி தலைவரை, இழிவு செய்து பேசியிருப்பது கொடூரத்தின் உச்சகட்டம்.

Wednesday, September 12, 2012

கூடங்குளம் போராட்டம் – எனது பார்வையில்!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் மிக வலுத்து நேற்று முன் தினம் போலீஸ் தடியடி, துப்பாக்கி சூடு என்றெல்லாம் நடைபெற்று மிக பரபரப்பாகி கிடக்கிறது தமிழகம். இந்த செயலுக்கு ஜெயலலிதாவின் மோசமான அணுகுமுறை தான் காரணம் என திமுக தலைவர் கலைஞர் உட்பட, கிட்டத்தட்ட அனைவருமே குற்றம் சாட்டிவிட்டார்கள். சமூக இணைய தளங்களில் தமிழக அரசுக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் மிக கடுமையான விமர்சனங்களும், கண்டனங்களும் வைக்கப்படுகின்றன. அப்பாவி பொதுமக்களின் அமைதியான போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு போலீஸ் கையாள்வதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் தமிழக அரசு செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணுமின் நிலையத்தால் தங்களுக்கு ஆபத்து நேரும் என அச்சம் தெரிவித்த அந்த ஊர் மக்களுடன், அணு உலைக்கு எதிரான இயக்கங்களும் கை கோர்த்துக்கொண்டு நீண்டகாலமாக போராடி வருகின்றன. திட்டம் இப்போது நிறைவடைந்து செயல்படும் தறுவாயில் வந்து இருப்பதால் அதை எப்படியாவது முடக்கி மக்களை பாதுகாக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.

இந்த அணு உலை காரணமாக அச்சம் தெரிவித்த மக்களையும், போராட்டக்காரர்களையும் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களது கருத்துக்களையும், சந்தேகங்களையும், அச்சத்தையும் முழுமையாக கேட்டறிந்தது. அதன் அடிப்படையில், கூடங்குளம் திட்டப்பணிகளை, நிறுத்திவைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை வைத்தது. மக்களின் அச்சத்தத களையும் வரை திட்டத்தத செயல்படுத்தவேண்டாம் என, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை அவசர கூட்டம் 22.09.2011ல் தீர்மானம் இயற்றி அது 07.10.2011ல் பிரதமரிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வல்லுநர் குழு ஒன்று தமிழகம் வந்து கூடங்குளம் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி, மக்களின் சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் உரிய வகையில் விளக்கங்கள் கொடுத்தது. அத்துடன் அப்போது அந்த பிரச்சனை அடங்கி, மக்கள் இயல்பு நிலைக்கும் திரும்பிவிட்டனர்.

வல்லுநர் குழுவின் விளக்கங்கள் தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழக அரசு முழுமையாக இந்த விஷயத்தின் உண்மை தன்மையை உணர்ந்து, திட்டப்பணிகளுக்கான தனது அனுமதியை வழங்கியது.

மேலும், மக்களின் அச்சத்தை முழுமையாக களையவும், போராட்டத்தை விலக்கவும், தமிழக அரசு, மத்திய அரசு, அணுவிஞ்ஞானிகள் ஆகியோர் அடங்கிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் மீண்டும் கூடங்குளம் பகுதியில் மக்கள் கருத்துக்கள் அறிந்து அதற்கு உரிய விளக்கங்கள் கொடுத்து மக்களின் அச்சத்தை போக்கினர். மேலும், போராட்டக்காரர்களுடனும் 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடைசியாக 31.01.2012 அன்று நடைபெற்ற இறுதி கட்ட பேச்சுவார்த்தையில், போராட்ட குழுவில் இருந்து ஒரே ஒரு நபர் மட்டுமே கலந்து கொண்டார். மற்றவர்கள் அரசின்/வல்லுநர் குழுவின் விளக்கங்களை ஏற்றுக்கொண்டனர். மீண்டும் அங்கே அமைதி திரும்பியது.

திட்டப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டி, தமிழக அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியமும், இந்திய அணுசக்தி துறையும் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, மக்களின் வரிப்பணத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்த அணுமின் திட்டம் தனது நிறைவு பகுதியை தொட்டது. இதை எதிர்த்து போராட்டக்காரர்கள் சார்பில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும், வல்லுநர் குழு, மத்திய மாநில அரசுகளின் அஃபிடவிட்டுகளின், விளக்கங்களின் பேரில் தள்ளுபடி செய்து, திட்டப்பணிகள் தொடர அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில், எப்படியேனும் திட்டத்தை நிறுத்தியே ஆகவேண்டும் என்கிற நோக்கில், மீண்டும் பதற்றத்தை உருவாக்கிய போராட்ட குழுவினர், மீண்டும் மக்களை திரட்டி அணுமின் நிலையத்தினை முற்றுகை செய்வதாக அறிவித்தனர். பொதுசொத்துக்கு நாசம் விளைவிக்கும் செயலை தடுக்கும் பொருட்டு, அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, போராட்டத்தை கைவிடுமாறு அரசு வேண்டுகோள் விடுத்தது.

எந்த விளக்கத்தையும், வேண்டுகோளையும் சட்டை செய்யாமல், போராட்டம் ஒன்றே குறி என தொடங்கிய முற்றுகை போராட்டத்தின்போதும், நெல்லை கலெக்டர் திரு. செல்வராஜ் அவர்கள் பொறுமையாக மீண்டும் மீண்டும் போராட்டத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தபடி இருந்தார். பகல் சுமார் 11.30 மணிஅளவில், போராட்ட கூட்டத்திலிருந்து சிலர் போலீசை தாக்கியதை தொடர்ந்து முதலில் கண்ணீர் புகையும், பின்னர் தடியடியும் நடத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் போராட்ட பகுதிக்கு சம்மந்தமற்ற மணப்பாடு பகுதியில், காவல் துறை சோதனை சாவடியை போராட்டக்காரர்களில் சிலர் சூறையாடி, தீவைத்து தாக்கியதை தொடர்ந்து அங்கே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இருந்தே முன்பே திட்டமிட்டு பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்த்த அவர்கள் தயாராகி இருந்தது தெளிவாகிறது.

அரசு, தன்னால் இயன்றவரை மக்களின் அச்சத்தை களைய நடவடிக்கை எடுத்து, போராட்டத்தை தவிர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தாலும், போராட்டக்காரர்களின் எதிர்பாராத வன்முறை காரணமாக பெரும் அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டது.



இதில் தமிழக அரசையோ, காவல்துறையினரையோ குற்றம் சொல்ல எந்த நியாயமும் இல்லை. யாரோ சிலரால் கற்பனையாக கிளப்பிவிடப்பட்ட அச்சங்கள், அதை அடிப்படையாக வைத்து நிகழ்ந்த போராட்டங்கள், அந்த போராட்டத்துக்கும் மதிப்பளித்து அரசு தெரிவித்த விளக்கங்கள், நீதிமன்றங்கள் எல்லா ஆவணங்களையும் முழுமையாக ஆராய்ந்து கொடுத்த அனுமதிகள், எனினும், சட்டத்தையும், உண்மை நிலையையும், அறிவியல் ரீதியான விளக்கங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், தாங்கள் சொல்வது படி அரசாங்கங்கள் கேட்கவேண்டும் என அரசை மிரட்ட முயன்ற ஒரு போராட்ட குழு தான் முழுமையான பொறுப்பாக முடியும்.

“என் பிள்ளை குறும்பு தான் செய்வான்..எவ்வளவு சொன்னாலும் அடங்கமாட்டான்..எதை சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டான்.. ஆனாலும் அவன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது” என ஆசிரியர்களிடம் சொல்லும் பெற்றோர்களை போல தான் பலரும் கடந்த இரு தினங்களாக, போராட்டக்காரர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகளை சாடி இருக்கின்றனர்.

“போராட்டத்துக்கு முதலில் ஆதரவு அளித்த ஜெயலலிதாவின் செயல் தான் இத்தனைக்கும் காரணம்” என்று இன்றைய தினம் கலைஞர், சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக அரசியலாக்கிக்கொண்டு பேட்டி அளித்திருக்கிறார். உண்மை நிலை என்ன என்பது எல்லோருக்குமே தெரியும்! அரசு முதலில் மக்களின் அச்சத்தை கவனத்தில் கொண்டு, திட்டப்பணிகளை நிறுத்தவும், மக்களின் அச்சத்தை போக்கவும் மத்திய அரசை கேட்டது. மத்திய அரசு கொடுத்த விளக்கங்கள் திருப்தியாக இருந்ததால் தொடர்ந்து திட்டப்பணிகள் நடைபெறவும்  அனுமதிக்கப்பட்டது. இதில் என்ன தவறு இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், தமிழக அரசு, மக்களின் கவலையை தனது கவலையாக பாவித்து அதற்கு தக்கபடி செயல்பட்டு இருக்கிறது. மக்கள் போர்வையில் சிலர் நடத்திய வன்முறையை தனது கடமையின்படி ஒடுக்கியுள்ளது. இதில் தமிழக அரசை குற்றம் சொல்ல எதுவும் இல்லை.

இப்போது திடீரென்று இத்தனை தீவிரமான எதிர்ப்பு ஏன்?

அபரிமிதமான மக்கள் தொகையையுடைய எதிர்கால இந்தியாவின் மின் தேவையை கருத்தில் கொண்டு, 1989ல் இந்தியாவும் ரஷ்யாவும் செய்துகொண்ட உடன்படிக்கை படி, நெல்லை மாவட்டத்தின் தென் கோடியிலுள்ள கூடங்குளத்தில் ஒரு அணுமின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசாங்கம். இடைப்பட்ட காலங்களில் ராஜீவ், வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்மராவ்,வாஜ்பாயி என பல பிரதமர்கள், பல கட்சிகள் மத்திய அரசினை நடத்தினாலும், இந்த திட்டம் எந்த பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வந்தது.



கூடங்குளம் பகுதி ஒரு ஒதுக்குப்புறமான மக்கள் குடியிருப்பு அல்லாத பகுதி என்பதால் மட்டுமல்ல, அது இயற்கை சீற்றங்கள் அதிகம் தாக்க வாய்ப்பில்லாத பகுதி என்பதாலும் தான் அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏற்கனவே அந்த பகுதியில் மஹேந்திரகிரியில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட அந்த இடம் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி தான்.

2001ம் ஆண்டு நான் கூடங்குளம் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதியில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்துக்கு எனது அலுவல் விஷயமாக சென்ற போது, ரொம்பவே கஷ்டப்பட்டேன். சென்னையில் இருந்து நெல்லை, பின் வள்ளியூர் வரை பஸ்சில். வள்ளியூரில் இருந்து ராதாபுரத்துக்கு எப்போதாவது ஒரு பஸ் போகும். மிக மோசமான அந்த ரூட்டில் அப்போதெல்லாம் தனியார் இயக்கும் வேன் தான் ஒரே பயண துணை. ராதாபுரத்தில் இருந்து, இருக்கந்துறை வழியாக கூடங்குளத்துக்கு எனது நண்பரின் பைக்கில் தான் சென்றேன்.

கூடங்குளத்தில் திட்டப்பணிகளுக்காக வந்திருந்த எண்ணற்ற தொழிலாளர்கள் அங்கே தற்காலிகமாக தங்கி இருந்தனர். இது தவிர கட்டுமான நிறுவனத்தின் எஞ்சினியர்கள், டெக்னீசியன் என பலரும் உண்டு. அதை அடிப்படையாக வைத்து அவர்களது வசதிக்காக (அ) அவர்களது தேவையை நம்பி அங்கே அப்போது தான் சிற்சில கடைகள், ஹோட்டல்கள் ஏற்பட தொடங்கி இருந்தது.

2005ல் நான் மீண்டும் சென்ற போது, நிலமை தலைகீழ். (இந்த முறை சென்னை-நாகர்கோவில் வரை ஒரு பஸ், பின் நாகர்கோவில்-திருச்செந்தூர் பஸ்ஸில் கூடங்குளம் சென்று இறங்கினேன்) கூடங்குளம் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியாக மாறி, கிட்டட்த்தட்ட ஒரு சிறிய கிராமமாகவே மாறிவிட்டது. இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதும், திட்டப்பணிகள் அமலாக தொடங்கியவுடனேயே அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டுவிடுவார்கள் என்றும், என்னிடம் என் நண்பர் சொன்னார். அப்படி அந்த இடத்தை விட்டு செல்ல அவர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள், என்ன பிரச்சனை வரப்போகுதோ என அப்போது நான் அவரிடம் எனது பயத்தை சொன்னதுண்டு.


2009 வாக்கில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிவிட்டது. 2006ல் வந்த சுனாமி, அந்த பகுதியை அதிகம் பாதிக்காதபடிக்கு, மேற்கில் அமைந்திருக்கும் இலங்கை தீவு காப்பாற்றிவிட்டாலும், அது தொடர்பான அச்சம் இப்போதும் அங்குள்ள மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. பூகம்ப தாக்குதல் குறைவான பகுதியாக தேர்ந்தெடுத்து நவீன கட்டிட முறையிலும் பாதுகாப்பு உத்திகளாலும் அந்த திட்டம் கட்டப்பட்டு வருவதாக எனது நண்பர் என்னிடம் விளக்கினார். நான் கட்டுமான பணிகளை பலமுறை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். திட்ட வரைபடங்களையும் படித்து பார்த்திருக்கிறேன். எனக்கு முழுமையான திருப்தியேன் இப்போதும் நிலவுகிறது.

ஜப்பானில் அணு உலை விபத்துக்குள்ளானதை உதாரணம் காட்டி, இங்கேயும் அப்படி நிகழும் என ஒரு பீதி கிளப்பி விடப்பட்டது. ஜப்பான் அடிக்கடி நில நடுக்கம் நடைபெறும் நாடு. அதுவும் நில தட்டுக்கள் நிலையற்ற சிறு சிறு தீவுக்கூட்டம். இந்தியாவோ, ஒருங்கிணைந்த நிலப்பரப்பு. பூகம்ப பாதிப்பு மிக மிக குறைவான பகுதி. இதையெல்லாம் ஒப்பிட்டாலே, ஜப்பானுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு என்பது எல்லோருக்குமே விளங்கும்.

ஜப்பானில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணு உலை தான் விபத்துக்குள்ளாகியது. கூடங்குளம், தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடனும், இதுவரை அணு உலைகளில் ஏற்பட்ட எல்லா விபத்துக்களையும் கருத்தில் கொண்டு, அதை தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் கட்டப்பட்டு வருகிறது.இந்தியாவிலேயே 4 அணு உலைகள் பாதுகாப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்தும் அணு உலை மீதான அச்சம் தேவையற்றது.

முல்லைப்பெரியார் இடிந்துவிடும், இடிந்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கேரளம் எப்படி கற்பனையான பயத்தை கொடுக்கிறதோ அதே போன்ற ஒரு கற்பனையான பயம் தான், அணு உலை விபத்துக்குள்ளாகி விடும், எங்களுக்கு பாதிப்பு வரும் என சில போராட்டக்காரர்கள் சொல்வதும். முல்லைப்பெரியார் பலமாக உள்ளது, விபத்து நிகழ வாய்ப்பில்லை என்று வல்லுநர் குழு, நீதிமன்ற தீர்ப்புக்களை வைத்து கேரளத்து எதிராக வாதாடும் நாமே தான், கூடங்குளம் விஷயத்தில் வல்லுநர் குழு அறிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகளை நம்பமாட்டோம் என சதிராடிக்கொண்டிருக்கிறோம். விசித்திரமான மனநிலை தான் இது!

முல்லைப்பெரியார் விஷயத்திலும், கூடங்குளம் விஷயத்திலும் யாரோ சிலரால் ஏதோ ஒரு நோக்கத்திற்காக, மக்களிடம் கற்பனையான பீதியை கிளப்பி, மக்களை அச்சத்துக்குள்ளாக்கி, அரசாங்கங்களை அச்சுறுத்தி பார்க்கும் ஒரு சென்சேஷனல் போராட்டம் நடைபெற்று வருகிறது. எதையும் அலசி ஆராயும் பகுத்தறிவுள்ள எவருமே அது போன்ற ஆதாரப்பூர்வமற்ற வதந்திகளை புறக்கணிக்கவே செய்வார்கள்!

போராட்டம் நடத்துவோருக்கும் கூட,  திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திடீரென்று துவங்கப்பட்டிருக்கும் இந்த போராட்டத்துக்காக அணு உலையை மூடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்காது. இந்த போராட்டத்தின் நோக்கம், கொஞ்சம் விளம்பரத்தையும் நிறைய புகழையும் வேண்டுமானால்  அவர்களுக்கு   கொடுக்கக்கூடுமேயல்லாமல், எந்த விதமான பலனையும் தங்களுக்கு கொடுக்காது என்று அவர்களுக்கும் தெரிந்தே தான் இருக்கும்!

அவர்கள் போராடுவதில் அவர்களுக்கு என்று ஒரு சுய நோக்கம் இருக்கிறது. ஆனால் எல்லாவிதமான தகவல்களும் அறிந்த, சுயமாக சிந்திக்கும் திறனுடைய, பகுத்தறியும் தன்மையுள்ள, இளைய சமுதாயமும் கூட, போராட்டக்காரர்கள் சொல்லும் சந்தேகங்களும், அச்சங்களும் நியாயமானவை தானா என கொஞ்சம் கூட யோசித்துப்பார்க்காமல், உண்மை நிலவரம் என்ன என்பதை கூட தெரிந்துகொள்ள விரும்பாமல்/முயலாமல், பொத்தாம்பொதுவாக விமர்சித்துவருவது தான் கவலையளிக்கிறது.

Printfriendly