Tuesday, September 25, 2012

FDI அலசலாம் வாங்க – பார்ட் 2



FDI அலசலாம் வாங்க எனும் நேற்றைய பதிவின் தொடர்ச்சி தான் இந்த பதிவு. நேற்று முக்கியமான பயங்களை பற்றி பார்த்தோம். இது தவிரவும் இன்னும் சில யூகமான வதந்திகள் உலவிட்டு தான் இருக்குது. அதெல்லாம் என்னென்னு பார்க்கலாம்!

பயம்4 : அந்நிய முதலீடுங்கறது மீண்டும் காலனியாதிக்கத்துக்கு வாசலை திறந்துவிடுறமாதிரி. நம்ம நாட்டை நாமளே மீண்டும் அடகு வைக்கிறோம். இங்கே வந்து லாபம் சம்பாதிச்சு அவங்க நாட்டுக்கு மொத்தமா எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயிடுவாங்க.

நேற்றே சொன்னமாதிரி, இது ஒரு கூட்டு தொழில். எல்லா கூட்டாளிகளுக்கும் லாபத்திலும் நஷ்டத்திலும் பங்கு இருக்கு. உள்ளூர் கூட்டாளின்னா லாபபணம் உள்ளூரிலேயே இருக்கும். வெளிநாட்டு கூட்டாளி லாபத்தை அவங்க நாட்டுக்கு எடுத்துட்டு போறான். இதில் வருத்தப்பட என்ன இருக்கு? வெளிநாட்டுக்காரன், தனது பணத்தை இங்கே முதலீடு செய்யுறான். அதன் மூலமா வர்ற லாபத்தை எடுத்துக்கறான். நஷடமானாலும் அவன் தானே ஏத்துக்கணும்?

நஷ்டம் ஆகுமான்னு கேக்குறீங்களா? இந்தியாவில் சில்லறை வணிகம் செய்யுறது ரொம்ப கஷ்டம்ங்க. நிறைய செண்டிமெண்ட்ஸ் இருக்கிற விஷயம் இது! சென்னையிலேயே பிக்பஜார், ரிலையன்ஸ் மார்ட் எல்லாம் இருந்தாலும், ரெகுலரா வாங்குற மளிகைக்கடையை மாத்தாம இருக்கிறவங்க நிறையபேரு. அதனால் தான் இப்பவும் மளிகை, தள்ளுவண்டி வியாபாரம் சென்னையில் சரியாம இருக்கு. போட்டிகளை சமாளிக்க முடியாம, திரிநேத்ரா, சுபிக்ஷா, ஸ்பென்சர்ஸ், மோர் மாதிரியான கடைகள் தட்டு தடுமாறிட்டு இருக்கிறது தெரிஞ்ச விஷயம் தானே? இப்படியான சூழலில், இந்தியாவின் வெறும் 3% மக்களை மட்டுமே நம்பி 46 நகரங்களில் மட்டுமே ஆரம்பிக்கப்படுற அந்நியமுதலீட்டு வணிகவளாகங்களால் என்ன பெரிய லாபம் வந்திரும்னு நினைக்கிறீங்க? நேரடி கொள்முதலில் கிடைக்கிற விலை குறைவு மட்டும் தான் லாபத்துக்கான கேரண்டி.

இந்த வெளிநாட்டு முதலீட்டால வளர்ச்சி பெற்ற வாகன துறையை ஒரு உதாரணத்துக்காக எடுத்துக்கலாம்.

இந்தியாவில் ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனிக்காரங்க மொபெட் தயாரிச்சிட்டு இருந்தாங்க. ஹீரோ மெஜஸ்டிக், ஃபாந்தர் வண்டிகள் ரொம்ப பிரபலம். ஆனா அவங்ககிட்டே பைக் செய்யுற தொழில்நுட்பமோ, வசதியோ இல்லை. 1990களில் இந்த துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டதும், ஹீரோ மோட்டார்ஸ் கம்பெனி, வெளிநாட்டு கூட்டாளியா ஜப்பானின் ஹோண்டா கம்பெனியுடன் சேர்ந்து ஹீரோஹோண்டா கம்பெனியா உருவெடுத்தது. அதுக்கப்புறம், விதம் விதமான வண்டிகள், விலை குறைவா தரமான பைக்குகள்ன்னு சக்கைபோடு போட்டு இந்தியாவில் நம்பர் ஒன் கம்பெனி ஆச்சு. அதுமட்டுமல்லாம, ஏற்றுமதியிலேயும் முன்னணியில் இருக்கு. இதிலிருந்து வர்ற லாபம் மட்டும் தான் வெளிநாட்டுக்காரனுக்கு. வளர்ச்சி எல்லாம் நம்மாளுங்களுக்கு தான். இதே கதை தான், தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார்ஸ் சுசுகி கூட்டணிக்கும், இந்தியாவின் பஜாஜ்-கவாசாகி கூட்டணிக்கும், இந்தியாவின் எஸ்கார்ட்ஸ் யமஹா கூட்டணிக்கும், மற்றும் பல பல வாகன துறை கம்பெனிகளுக்கும்.
தொழில்நுட்ப உதவி மற்றும் விரிவாக்கத்துக்கான முதலீடு தான் அந்நிய முதலீட்டுக்கான நோக்கமே தவிர, இங்கே இருக்கிற வளங்களை கொள்ளை அடிக்கறதில்லை! இன்னும் சொல்லப்போனா, எப்படி வியாபாரம் பண்றதுன்னு தெரியாம இருக்கிற இந்திய தொழில்துறைக்கு நவீன உத்திகளை சொல்லிக்கொடுத்து வளர்ச்சிக்கு கொண்டு போற வசதி இந்த அந்நியமுத்லீட்டில் இருக்கு. உற்பத்தி துறை, வாகன துறையில் இது மாதிரி நிறைய உதாரணங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.


சில்லறை வணிகத்தை பொறுத்தவரை, குறைவான விலையில் எப்படி தரமான பொருட்களை கொள்முதல் செய்யுறது, உணவுப்பதப்படுத்தவும், இருப்பு வைக்கவும், லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங், கோல்டு ஸ்டோரேஜ் வசதிகளிலும் என்னென்ன நவீன உத்திகள் கையாள்றது என்பது மாதிரியான தொழில்நுட்ப உதவிகளும், அதற்கு தேவையான பெரும் முதலீடும் நமக்கு கிடைக்கும்.

அந்நிய முதலீடுன்னா வெறும் வெளிநாட்டுக்காரன் மட்டுமில்லை. நாமளும் உண்டு. என்ன குழப்பமா இருக்கா? ஒரு குட்டி கதை சொல்றேன்!

என் நண்பர் ஒருவர் விருதுநகர்காரர். பரம்பரை பரம்பரையா மளிகைக்கடை நடத்திட்டு வர்ற குடும்பம். கொஞ்சம் நிதி நெருக்கடி காரணமா கடைசி சகோதரரான இவர் மட்டும் வெளிநாட்டில் வேலைக்கு போனாரு. 7 வருஷம் ஆச்சு  அவர் படிச்ச படிப்பு கைகொடுக்க, அங்கேயே செட்டில் ஆகி, நல்லபடியா சம்பாதிக்கவும் ஆரம்பிச்சாச்சு. இவங்க குடும்ப கடையை விரிவு செய்யற ஐடியா வந்தது. ஆனால், இவரால் அதில் இதுவரைக்கும் முதலீடு செய்ய முடியலை. காரணம் வெளிநாட்டிலிருந்து முதலீடு வாங்கறதுக்கு FERA, FEMA ன்னு நிறைய சட்டசிக்கல்கள் இருக்கு. RBI அப்ரூவல் வேறே வேணும். அப்படியும் அதை கடனா தான் வாங்கணும். அதுக்கான நிறைய ஃபார்ம் ஃபில் பண்ணி மாசா மாசம் RBI க்கு சமர்ப்பிக்கணும். ஆனா இந்த FDI அனுமதி மூலமா, அவரும் அவருடைய சகோதரகளும் சேர்ந்து குடும்ப வியாபாரமான மளிகைக்கடையை ரொம்ப பெரிசா இப்போ விரிவுபடுத்த முடியும்னு சந்தோஷப்பட்டாரு. எந்த சட்ட சிக்கலும் இல்லாம தானே தனது பங்கு தொகையை சகோதரர்கள் கிட்டே கொடுத்து சட்ட்ப்பூர்வமான முதலீட்டாளரா ஆகிக்க முடியும்! (ஆனா, அவருடைய ஊரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது. காரணம் தமிழகம் FDI க்கு எதிர்ப்பு. அவருடைய ஊரில் 10 லட்சம் ஜனத்தொகை இல்லை!தமிழ்நாட்டை விடுங்க. மத்த மாநிலங்களில் பலருக்கு இந்த வாய்ப்பு இப்போ இருக்குல்லே?)

இப்போ இந்த வெளிநாட்டுக்காரன் வந்து கொள்ளையடிச்சிட்டு போயிடுவான்ற பூச்சாண்டியின் உண்மை நிறம் ஓரளவுக்காவது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

பயம் 5 : பெரிய வணிக நிறுவனங்கள் எல்லாரும் ஏமாத்துப்பேர்வழிங்க. வரி ஏய்ப்பு செய்வாங்க. அதனால் அரசுக்கு நஷ்டம். அது நம்ம தலையில தான் வந்து விடியும்.

முதலில் நம்ம வரி விதிப்பு முறையை சுருக்கமா பார்த்திரலாம்.

வாட் வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டபின், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரைக்கும் வியாபாரம் செய்யுற வணிக நிறுவனங்கள் வரி கட்ட தேவையில்லை. ஆண்டுக்கு 10 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்யுறவங்க காம்பவுண்ட் டாக்ஸ் அல்லது முழுமையான டாக்ஸ் இதில் எது வேணுமோ அவங்களே தீர்மானிச்சு அதை கட்டிக்கலாம். அரசு அதை பத்தி எந்த கேள்வியும் கேட்காது. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு மொத்த வியாபாரம் செய்யும் வணிக நிறுவனங்கள் கட்டாயமா முழுமையான வரி கட்டியே ஆகணும். இந்த வரியையும் வியாபாரி தன்னுடைய கையில் இருந்து கட்ட தேவையில்லை. விற்பனை செய்யும்போது, நுகர்வோர்கிட்டே இருந்து வசூலிச்சு, அதை அரசாங்கத்துக்கிட்டே கொடுத்திரணும். அதாவது வரி கட்டப்போறது உண்மையில் மக்கள் தானே தவிர வியாபாரிகள் இல்லை. இது தான் இப்போ இருக்கிற வரி விதிப்பு முறை.

நான் அடுத்து சொல்லப்போற விஷயம் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். சிலர் அதத ஒத்துக்கக்கூட மாட்டாங்க. ஆனாலும் சொல்றேன். கேட்டுக்கோங்க!

இன்றைய தேதியில் அரசுக்கு மிக பெரிய வரி வருவாய் இழப்பு மளிகை கடைகளால் தான் ஏற்படுது.

அவங்க ஒவ்வொருத்தரும் சராசரியா செய்யுற வியாபாரம் ஆண்டுக்கு 10-25 லட்சம். ஆனா எதுக்குமே பில் போடுறதில்லை. கணக்கு வெச்சுக்கறதில்லை. அதனால் ஒரு நயா பைசாகூட அரசுக்கு வரி வருமானம் வரலை.

அதேநேரத்தில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரோ, சூப்பர்மார்க்கெட்டோ, ஹைப்பர்மார்க்கெட்டோ எதுவா இருந்தாலும் ஒவ்வொரு விற்பனைக்கும் முறையா பில்போட்டு வரிகட்டுறாங்க. அந்த வரியை அரசாங்கத்துக்கு முழுசா கட்டுறாங்களா, இல்லை ஏய்க்கிறாங்களாங்கறது வேறே விஷயம். ஆனா முறைப்படுத்தப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலமா அரசுக்கு பெரிய அளவில் நுகர்பொருள் வியாபாரம் மூலமான  வரி வருவாய் வருது. இன்னைய தேதியில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் மளிகைக்கடைகளுக்கு மேல இருக்கு. முறைப்படுத்தப்பட்ட ஸ்டோர்கள் 15,000 சொச்சம் தான் இருக்கு. அரசுக்கு எவ்வளவு பெரிய வரி இழப்பை அவங்க ஏற்படுத்திட்டு இருக்காங்கன்றதை நீங்களே குத்துமதிப்பா கணக்குப்போட்டுப்பார்த்துக்கலாம்.

சரி, ஏன் மளிகை கடைக்காரங்க வரி கட்ட மாட்டேங்குறாங்க? இதில் அவங்களுக்கு என்ன நஷ்டம்?. சட்டப்படி பார்த்தா, ஒரு பைசா கூட மளிகை கடைகள் தன்னோட கை காசிலிருந்து வரியா கட்ட தேவையில்லையே. பொருளுக்கான பில்லை போட்டு அதுக்கான வரியையும் மக்கள் கிட்டேயிருந்தே வசூலிச்சிக்கலாம். மக்கள்கிட்டேயிருந்து வசூலிச்ச வரியை அப்படியே சிந்தாம சிதறாம அரசாங்கத்துக்கிட்டே கட்டிரணும். இது தானே சட்டம்? ஆனா, இவங்க பில்லும் போடுறதில்லை, வரியும் வசூலிக்கறதில்லை, அதனால் அரசுக்கும் ஒரு பைசா கூட வருமானம் வரலை.

இப்படி பில் போடாம வியாபாரம் பண்றதுக்கான காரணிகள் ரெண்டே ரெண்டு விஷயம் தான். ஒண்ணு, முறையா கணக்கு வெச்சா, லாபம் எவ்வளவு வருதுன்னு  தெளிவா தெரிஞ்சிரும். (அந்த லாபத்துக்கு மட்டும் இவங்க கையிலிருந்து வருமான வரி கட்டியாகணும். நீங்களும் நானும் நம்முடைய சம்பாத்தியத்துக்கு 30% வருமான வரி கட்டிட்டு இருக்கோம். இவங்க வருமான வரின்னு ஒரு சல்லிக்காசு கூட அரசாங்கத்துக்கு கட்டுறது கிடையாது!)
ரெண்டாவது, இப்படி கணக்கு வழக்கெல்லாம் முறையா மெயிண்டெயின் பண்றதுக்காக சம்பளத்துக்கு ஒரு அக்கவுண்டண்டை வெக்கணும், அவர் எல்லா பில்லையும் பாதுகாக்கணும். அரசாங்கம் கேட்கும்போது கணக்குகளை கொடுக்கணும். இந்த ரெண்டுவிஷயத்துக்கும் சங்கடப்பட்டுட்டு தான் நாட்டின் மிகப்பெரிய வரி ஏய்ப்பை மளிகைக்கடைக்காரங்க நடத்திட்டு இருக்காங்க!

எங்க ஏரியாவில் 7 மளிகைக்கடை இருக்கு. இவங்க யாரும் பில்லே போடுறதில்லை. விற்பனை வரியும் கட்டுறதில்லை. அவங்க சொல்றது தான் காய்கறிக்கான அன்றைய விலை. அதை நாம சரிபார்க்க முடியாது. அதனால் கிடைக்கிற அபரிமிதமான லாபம் எங்கேயும் கணக்கு வைக்கப்படுறதில்லை. அதனால் அந்த லாபத்துக்கு வருமான வரியும் ஒரு பைசா கூட கட்டுறதில்லை. ஆனா தினசரி பரபரப்பா விற்பனையாயிட்டு தான் இருக்கு. இதில் வர்ற லாபம் முழுமையும் அவங்களுக்கு தான். இதே ஏரியாவில் ஒரு சூப்பர் மார்கெட் / ஸ்டோர் இருந்தா, இதே வியாபாரம் அவங்ககிட்டே ஆகும். ஆனா அந்த வியாபாரத்தின் மூலம் அரசுக்கு முறையான வரி வருவாய் வரும். அதை வெச்சு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தமுடியும்.

ஒரு அரசாங்கம் மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்தணும்னா பணம் வேணும். அரசாங்கத்துக்கு நாலு வழிகளில் தான் பணம் வருது. வரி வருவாய், வட்டி வருவாய், கடன், மத்திய அரசு/உலகவங்கி மானியம். இந்த பணங்களை வெச்சு தான் நமக்கான திட்டங்களை செயல்படுத்துறாங்க.
மக்கள் தினசரி மளிகைபொருட்களை, காய்கனிகளை வாங்கிட்டு தான் இருக்காங்க. ஆனால், அதை மளிகை கடையில் வாங்குறதால் அரசுக்கு வரி வரமாட்டேங்குது. அதையே முறைப்படுத்தப்பட்ட கடைகளில் வாங்கினா, அரசுக்கு வரி வருவாய் வரும். நிதிபற்றாக்குறைய சமாளிக்கணும்னா, வரிவருவாயை உயர்த்தியாகணும். 

இப்போ அரசாங்கங்கள் நிதிப்பற்றாக்குறைன்னாலே யோசிக்காம வரிஉயர்வை அறிவிச்சிடுறாங்க. ஏற்கனவே வரி கட்டிட்டு இருக்கிறவங்களுக்கு இதனால் கூடுதல் வரி உயர்வு. வரியே கட்டாம இருக்கிற இந்த மளிகை கடை மாதிரியான செக்மெண்டுக்கு சலுகைகள்னு ஒரு ஏற்றத்தாழ்வான நிலையில் சமூக பொருளாதாரம் இருக்கு. இதை மாற்றணும்னா, முறைப்படுத்தப்பட்ட கடைகளை அதிகப்படுத்தி, மக்கள் தினசரி செய்யுற மளிகை செலவுக்கு உரிய நியாயமான வரிகளை வசூலிச்சு வருவாயை அதிகப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தில் இப்போ எல்லா அரசாங்கங்களும் இருக்கு.

இப்போ உங்களுக்கு யார் வரி ஏய்ப்பு செய்யுறாங்கன்ற விஷயமும், எதுக்காக மளிகைக்கடைகள் இப்போ படபடக்கிறாங்கன்னு ஓரளவுக்கு உங்களால யூகிக்கமுடியும்னு நினைக்கிறேன்!

நமக்கான தேவைகளுக்காக அரசை கேள்வி கேட்கிற நாம, அரசின் நிதி நிலைமைக்காக நாம நியாயமா செய்யவேண்டிய கடமைகளை செஞ்சு தானே ஆகணும்?

சரி, இனி, இதே தொடர்ல, அந்நிய முதலீடு காரணமா ஏற்படக்கூடிய விவசாய டிமாண்டு, மாற்று விவசாயம், விவசாய வளர்ச்சி பற்றியெல்லாம் அடுத்த பதிவில் சுருக்கமா பார்க்கலாம்.

3 comments:

  1. நல்ல பதிவு.பல விஷயங்களை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்.இவ்வளவு சாதகமான விஷயங்களை அரசாங்கம் என் எடுத்துச் சொல்லவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. உங்க பொறுமைக்கு பாராட்டு, இவ்வளவு விளக்கமாய் 2/3 பாகங்களா எழுதுறதுக்கு..

    1. பகுதி 1 பதிவில் ஒரு மறுமொழியில், உள்ளூர் கொள்முதல் சதவிகிதத்தில் விதிகள் தளர்தப்பட்டிருக்குனு சொல்லியிருக்காரே, அது பற்றி உங்க கருத்து ஏதும் இல்லையே ?

    2. Reliance Fresh போன்ற கடைகள்ல தரமான பொருட்கள் கிடைக்கும், குறைவான விலையில் கிடைக்கும்ன்றது ஆரம்பத்தில் சரியா இருந்திருக்கலாம், ஆனா இப்போ ஒரு Myth ஆகிவிட்டதென நினைக்கிறேன்.. எங்க வீட்டு எதிரிலே இருக்கும் சிறு மளிகைக்கடை விட பொருட்கள் விலை கூட, மேலும் expiry ஆன பொருட்கள், reliance நிறுவனத்தினுடைய பொருட்களே நிறைய இருந்தன. ..

    ReplyDelete
  3. அருமை அதுவும் மளிகைக்கடைக்காரர்களின் வரி ஏய்ப்பு பற்றியது சூப்பர். ரொம்பநாளா என் மனதில் பொங்கிக்கொண்டிருந்த ஆதங்கம் அது. கஷ்டப்பட்டு படிச்சு, வேலையில் சேர்ந்து மாத வருமனத்தில் ஒழுங்காக (வேறு வழியில்லாமல்) வரி கட்டும் எங்களைப்போன்றவர்கள் வாழ்க்கையை நகர்த்தவே சிரமப்படுகிறோம், தென் தமிழகம் வந்து பாருங்கள் சென்னை கோயமுத்தூர் என மளிகைக்கடைவத்திருப்போர் ஊருக்கு வரும்போது பண்ணும் அலப்பரை தாங்காது.

    ReplyDelete

Printfriendly