கடந்த பதிவில் லஞ்சம், ஊழல் பற்றி பார்த்தோம், அடுத்ததாக இந்த பதிவில் வருவது கறுப்புப்பணம்.
என் சின்ன வயசு காலங்களில் நான் கறுப்புப்பணம் என்பது கறுப்பு கலர்ல இருக்கும்னு
தான் நினைச்சிட்டு இருந்தேன். அது சாமானிய மக்கள் கிட்டே எல்லாம் கறுப்பு பணம் இருக்காது,
பெரிய பெரிய பணக்காரங்க கிட்டே மட்டும் தான் இருக்கும்னு சொல்ல கேட்டிருக்கேன். அதனால்
எப்படியாவது பெரிய பணக்காரனாகி நானும் கறுப்பு பணத்தை வாங்கிரணும்னு எல்லாம் நினைச்சிருக்கேன்!
ஆனா அது பணக்காரங்க சாமானியப்பட்டவங்கன்ற பேதமில்லாம எல்லாருகிட்டேயும்,
உங்ககிட்டேயும், என்கிட்டேயும் தினசரி புழங்கிட்டு தான் இருக்குன்றதையும், நாமளே கறுப்புபண
டீலிங் நிறைய தினசரி செஞ்சிட்டு இருக்கோம்ன்றதையும் பின்னாடி தான் புரிஞ்சுகிட்டேன்.
கறுப்புப்பணம்ங்கறது கணக்கில் காட்டப்படாத பணம்.
அதென்ன கணக்கில் காட்டுறது,
காட்டாதது?
இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட், இருந்தாலும் நான் சுருக்கமா சொல்லமுடியுமான்னு
பார்க்கிறேன்!
நாம வாங்குற சம்பளத்துக்கு அரசாங்கத்துக்கு வரி கட்டணும்! எனக்கு வருஷத்துக்கு
4 லட்சம் வருமானமிருந்தா, அதில் 1.80 லட்சம் (நிலையான வரிவிலக்கு) போக மிச்ச பணத்துக்கு
10% வரி கட்டணும்! அதாவது 22,000 ரூபாய் வரி கட்டணும். நாம அவனவன் கிட்டே ஏச்சும் பேச்சும்
வாங்கி வாயை கட்டி வயித்தை கட்டி சம்பாதிச்ச பணத்தில் 22,000 நம்மளால அனுபவிக்க முடியாம
போயிருதேன்னு பலருக்கும் ஆதங்கம் இருக்கும்!
ஆனா, நான் என் வருமானமே 2.50 லட்சம் தான்னு சொல்லிட்டா.. வெறும் 7000 வரி
கட்டினா போதுமில்லே? அப்படின்னா, என் 4 லட்ச ரூபாய் வருமானத்தில் 1.50 லட்சம் ரூபாயை
கணக்கில் காட்டாமல் விட்டால், அது தான் என் கறுப்புப்பணம்.
இது, சினிமா துறையில் பெரிய அளவில் நடக்குது. அதுக்கு அடுத்தபடியா, தொழில்
துறையில் அதிக அளவில் நடக்குதுன்னு சொல்றாங்க! வருவாயை குறைச்சு காண்பிக்கிறது, கணக்கில்
வராமல் செலவு செய்யுறது இரண்டுமே கறுப்பு பண
பரிவர்த்தனை தான்! அவங்க மட்டும் தான் கறுப்புபண பரிவரித்தனை செய்யுறாங்கன்னு
அர்த்தமில்லை! அது பெரிய தொகையா இருக்கிறதால் பெரிசா பேசப்படுதே தவிர, நாம ஒவ்வொருத்தருமே
கறுப்புப்பண பரிவர்த்தனை தினசரி செஞ்சிட்டு தான் இருக்கோம்!
- பில் போடாம நாம வாங்குற பொருள் ஒவ்வொண்ணுக்கும் அரசுக்கு முறைய வரி போகாது. அதனால் அப்படியான பரிவர்த்தனைகள் கறுப்புபண பரிவர்த்தனை ஆகும்.
- ஒரு பொருளின் உண்மையான விலையை விட கூடுதல் விலை போட்டு பில் வாங்குறது. உண்மையான விலையை கடைக்காரரிடம் கொடுத்துட்டு, மிச்சத்தை நமக்குன்னு ஆட்டைய போடுறது ஊழல். இது மூலமா நமக்கு கிடைக்கும் வருவாய் கறுப்புப்பணம் தான்.
- சினிமா துறையில் வருமான வரிக்கான தொகையை மட்டும் அக்ரிமெண்டில் போட்டு, செக் மூலம் பணம் வாங்கிட்டு, மீதி தொகையை பணமா வாங்கி அதுக்கு அரசுக்கு வரி கட்டாம விடுறது!
- தொழில்துறையில், கூடுதலா செலவாகும் தொகக (லஞ்சம், கமிஷன் போன்றவை), கணக்கில் வரவு வைக்காத விற்பனை, வரி கட்டப்படாத வருமானம் எல்லாமே கறுப்புப்பண பரிவர்த்தனை தான்!
- சொந்த நிலம் வாங்கும் ஒவ்வொருவருமே விதிவிலக்கில்லாமல் கறுப்புப்பண பரிவர்த்தனை தான் செய்கிறார்கள். நிலத்தின் விலை 20 லட்சம் என்றால், அரசுக்கு பத்திரப்பதிவு செய்து வரி கட்டுவது 8 லட்சம் என்கிற தொகைக்காக இருக்கும். (அதாவது அரசின் வழிகாட்டி மதிப்பை ஒட்டிய தொகை. ஆனால் சந்தை விலை என்பது அதை விட பன்மடங்கு அதிகம் இருக்கும். இதனால் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் என்பது தனி கதை. விரிவாக அதை இன்னொரு முறை பார்க்கலாம்) இப்படி முத்திரை தீர்வையை குறைவாக கட்டுவதற்காக. குறைந்த தொகைக்கு பதிவு செய்வது போக மிச்சமான 12 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை கறுப்புப்பண பரிவர்த்தனை ஆகும்! வாங்குபவர் அதை எந்த கணக்கிலும் வரவு வைக்க முடியாது. அது மற்றுமொரு கறுப்பு பண பரிவர்த்தனைக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
இப்படி எங்கெங்கும் எல்லோரிடத்திலும் வெவ்வேறு வகைகளில்,
வெவ்வேறு தொகைகளில் கறுப்புப்பணம் புழங்கிட்டுதான் இருக்கு!
அரசை பொறுத்தவரை, லஞ்சம் ஊழல் மூலம் வருகின்ற எல்லா
வருவாயும் கறுப்புப்பணம் தான். அதை எந்த அக்கவுண்டிலும் வைக்க முடியாது!
சுருக்கமா சொல்லப்போனா, நியாயமான வழியில் வராத எல்லா
வருவாயும், முறையான வழியில் செய்யப்படாத எல்லா செலவுகளின் தொகையும் கறுப்புப்பணம் தான்!
சரி இந்த கறுப்புப்பணத்தை அவர்கள் என்ன தான் செய்கிறார்கள்?
1.
மற்றொரு கறுப்புப்பண பரிவர்த்தனையில் அதை செலவு செய்யணும்.
2.
அரசுக்கு தெரியாமல் அதை பேங்கில் போட்டு எதிர்காலத்துக்காக எடுத்து வைக்கணும்.
இந்தியாவிலுள்ள எல்லா வங்கிகளும் அவங்ககிட்டே இருக்கிற கணக்கு விவரங்களை
ரிசர்வ் பேங்க் மூலமா அரசிடம் பகிர்ந்துகிட்டு இருக்கு. அதனால் தான், நீங்க வருமான
வரி கட்டுறவரா இருந்தா, நீங்க தாக்கல் செய்த ரிட்டர்னில் உள்ள விவரங்களும், அரசிடம்
உள்ள விவரங்களும் மேட்ச் ஆகுதான்னு பார்த்து, அப்படி மேட்ச் ஆகாத ஆளுங்களை ரெயிடு விட்டு
ஆவணங்களை அள்ளிட்டு போயி கேஸ் போட்டு அந்த பணத்தையோ, பணத்துக்கான வரியையோ அரசு வசூலிச்சிருது!
இது எப்படி சாத்தியம்னு கேக்குறீங்களா?
இப்போ தான் எல்லாருமே, பந்தாவுக்காகவாவது பான் கார்டு வாங்கி வெச்சிருக்காங்களே.
அது மூலமா தான். பான் கார்டுங்கறது வருமான வரி கட்டுறவங்களுக்கான நிரந்தர கணக்கு எண்.
ஆனா வரி கட்டாதவங்க, வரி லிமிட்டுக்குள்ளே வராதவங்க கூட இப்போ பான் கார்டு வாங்கி வெச்சிருக்காங்க.
இன்னொரு பக்கம், எல்லாவிதமான பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு கேக்கிறாங்க.
வண்டி வாங்கினா, வீடு வாங்கினா, பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணினா, ஷேர் டிரேடிங் பண்ணினா..ன்னு
கிட்டத்தட்ட எல்லாவிதமான பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு அவசியமா இருக்கு. இதை
வெச்சு, ஒரு பான் கார்டு வெச்சிருக்கிற ஆள், என்ன எல்லாம் பண பரிவர்த்தனைகள் செஞ்சிருக்கான்னு
ஈசியா டிரேஸ் பண்ண முடியும். அதை வருமான வரி ரிட்டர்னுடன் ஒப்பிட்டு பார்த்தாலே, கணக்கில்
வராத முக்கியமான சொத்துக்களை அடையாளம் கண்டு பிடிச்சிரலாம். அப்படியான சொத்துக்களை
வாங்குறதுக்காக எப்படி எந்த வழியில் பணம் வந்ததுன்னு அவனை ரெயிடு விட்டு தெரிஞ்சுக்கலாம்.
அந்த் கறுப்புபணத்தை சீஸ் பண்றதோ, அல்லது அந்த கறுப்புப்பணம் மூலமா வாங்கின சொத்துக்களை
சீஸ் பண்றதோ, அரசின் முடிவு! கூடுதலா ஜெயில் தண்டனை, அபராதம், வரி, ஜப்தின்னு என்ன
வேணும்னாலும் அரசு செய்யலாம்.(நீங்க பேங்க் மூலமா – செக், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு – செய்யுற பரிவர்த்தனைகளளயும், பான் கார்டு காட்டி செய்யுற பரிவர்த்தனை விவரங்களையும்
தவறாம உங்க வருமான வரி ரிட்டர்னில் காட்டிட்டீங்கன்னா தப்பிச்சுக்கலாம்!)
இத்தனை சட்ட வழிகள் இருந்தும் கறுப்புப்பணத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியலை!
காரணம், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருத்தரையும் அவங்க சொத்து கணக்கை காட்ட சொல்லி
கட்டாயப்படுத்தமுடியாது. அதனால் தான் வரி தாக்கல் கூட நாம சுயமா முடிவெடுத்து, நாமளா
ஒரு கணக்கு போட்டு அதுக்கான வரியை மட்டும் தான் தாக்கல் செஞ்சிட்டு இருக்கோம்.
கறுப்புப்பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வெச்சிருக்காங்கன்னும், அதன் மதிப்பு
கிட்டத்தட்ட 13லட்சம் கோடின்னும் (அதான் கணக்கிலேயே காட்டாத பணமாச்சே? இவங்க எப்படி
அதை கணக்கு போட்டாங்கன்னு எனக்கு ரொம்ப நாளா கன்பீசன் இருக்கு!) அதை மீட்டு இந்தியாவுக்கு
கொண்டுவந்தா, நிறைய நல்ல திட்டங்களை நிறைவேற்றலாம்னும் அரசு முடிவு பண்ணி இப்போ கிட்டத்தட்ட
32 நாடுகள் கிட்டே கறுப்புப்பண விவரங்களை கேட்டு ஒப்பந்தம் போட்டு அதை மீட்கவும், அதில்
சம்மந்தப்பட்டவங்க மேல நடவடிக்கை எடுக்கவும், அவங்க சொத்துக்களை பறிமுதல் பண்ணவும்
முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. ஆனா அதில் பல செல்வாக்கான நபர்கள் பாதிக்கப்படுவாங்க(!)ன்றதால
நடவடிக்கை மந்தமா போயிட்டு இருக்கு.
ஏதோ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டதால் நடவடிக்கை
எடுத்துட்டு இருக்கிறாங்களே தவிர, ஆக்கப்பூர்வமாவோ ஆர்வமாவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுறதா
தெரியலை!
சரி, இந்த கறுப்பு பண பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தவே முடியாதா?
ஏன் முடியாது? ரொம்ப ரொம்ப சிம்பிளா கட்டுப்படுத்தலாம்!
- எல்லாருக்கும் (ஒவ்வொரு தனிநபருக்கும்) ஜீரோ பேலன்சில் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி, டெபிட் கார்டு கொடுங்க
- பண பரிவர்த்தனைக்கான வரம்பை ரூ.10,000/- குறைங்க
- கூடுமான வரைக்கும் எல்லா பரிவர்த்தனைக்கும் டெபிட் கார்டு, செக் மூலமாவே பண்ண சொல்லுங்க! (டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணத்தை ரத்து பண்றதும் முக்கியம்)
இதெல்லாம் செஞ்சாலே கிட்டத்தட்ட, கறுப்புப்பணத்தை 90% கட்டுப்படுத்திரலாம்.
அதாவது எல்லா பண பரிவர்த்தனையும் வங்கி மூலமா மட்டும் தான் நடக்கும். பணமா 10,000 க்கு
மேல் பரிவர்த்தனை செய்ய முடியாதுன்ற பட்சத்தில் எல்லாமே கணக்கில் வந்திடும்.
இப்போ தான் அரசு இதுக்கான நடவடிக்கை எடுத்து, எந்தெந்தெந்த பரிவரத்தனைகளையெல்லாம்
வங்கிமூலம் செய்யமுடியுமோ (கரண்ட் பில், முத்திரை தாள், வருமான வரி, விற்பனை வரி, டிக்கெட்
புக்கிங்…. ) அதையெல்லாம் ஆன்லைனுக்கு
மாற்றிட்டு இருக்காங்க. இன்னும் ஒரு 4 வருஷத்துக்குள், கிட்டத்தட்ட எல்லா பரிவர்த்தனைகளும்
எலக்டிரானிக் மயமாக்கப்பட்டிருச்சுன்னா, கறுப்புப்பணம் கட்டுக்குள்ள வந்திரும். எல்லா
மாநில அரசும் தன் துறைகளை நவீனமயமாக்கணும்!
இதையெல்லாம் முறையா செஞ்சா கறுப்புப்பணத்தை கட்டுப்படுத்தறது ஒண்ணும் பெரிய
விஷ்யம் இல்லை!
No comments:
Post a Comment