ஒரு வழியாக நேற்று டெசோ மாநாடு திட்டமிட்டபடியே நடந்து முடிந்துவிட்டது.
(டெசோ மாநாடு எதற்காக என்கிற ஒரு பதிவையும்; டெசோ மாநாட்டை முடக்க நடந்த செயல்களை பற்றிய
பதிவையும் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்பதால், நான் நேரடியாக விஷயத்துக்கே வந்துவிடுகிறேன்!)
உயர்நீதி மன்றம் வெள்ளிக்கிழமை சென்னை கமிஷனரிடம் பொறுப்பை ஒப்படைத்தபின்
அவர் நள்ளிரவு இரண்டு மணிக்கு அனுமதி மறுக்க, அவசர வழக்காக சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட
வழக்கு ஞாயிறு மதியம் விசாரணைக்கு பட்டியலிட, மாலை 4 மணி கூட்டத்துக்கு அனுமதியா இல்லையா
என்கிற வழக்கே மதியம் 12 மணிக்கு தான் எடுத்துக்கொள்ளப்படும் என்கிற நிலையில், மாற்று
ஏற்பாடாக அண்ணா அறிவாலையத்தில் மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடைசி நேரத்தில்
உயர்நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததால், திட்டமிட்டபடியே ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலேயே
மாநாடு நடைபெற்றது.
தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பு தராத போதும், திமுக இளைஞரணி தொண்டர்படையினர்,
போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்த சிரமமுமின்றி மாநாட்டை நடத்தி கொடுத்தது
உண்மையில் பலராலும் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது!
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக ஒரு
தனி தனி பதிவே எழுதலாம்! அந்த அளவுக்கு விஷயமுள்ள பயனுள்ள தொலைநோக்குடைய தீர்மானங்கள்
அவை. காலையில் தி.நகர் அக்கர்டு ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட
விஷயங்களின் அடிப்படையிலும், கலந்துகொண்ட பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையிலும்
அந்த தீர்மானங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன!
தனி ஈழம் வேண்டும் என நேரடியாக
கேட்காமல், சட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு, மறைமுகமாக, ஈழ மக்களின் ‘விருப்பத்தை’ தெரிந்துகொள்ளும் வகையில் ஐ.நா சபை கண்காணிப்பில்
பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என ஒரு
தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது.
கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுப்பது, போன்றவற்றுடன்,
மண்டபம் / தனுஷ்கோடியில் இந்தியாவின் கப்பற்படை தளம் அமைக்கவேண்டும் என்கிற தீர்மானம்
ஈழ தமிழர் பாதுகாப்பு, தமிழக மீனவர்கள் பாதுகாப்பு என்பதையும் தாண்டி, இலங்கையில் தற்போது
அதிகரித்துவரும் சீன அதிகாரத்துக்கு செக் வைக்கும் முயற்சியாகவும், இந்தியாவின் கிழக்கு
கரை பாதுகாப்பை பலப்படுத்தும் தொலைநோக்கிலும் இதை நான் காண்கிறேன்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் பார்த்தாலே அவை எந்த அளவுக்கு வலிமையானவை என்பது விளங்கும். (கடைசி 2 தீர்மானங்கள்
அவசியமற்றது என்பது எனது கருத்து)
இப்போது நாம் சில விவாதங்களுக்கு வருவோம். இவை இன்று ஒரு நாளில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில. அவற்றுக்கு எனக்கு தெரிந்த பதில்களை விளக்க முயன்றிருக்கிறேன்.
மு.க முதல்வராக இருந்தபோதே ஏன் இப்படி ஒரு மாநாட்டை நடத்தவில்லை?
இந்த கேள்வியை இன்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். இந்திய அரசியல் சாசனப்படியான
பதவியில் இருந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கும், இந்தியாவுடன் ராஜீய உறவுள்ள ஒரு நாட்டின்
இறையாண்மைக்கும் எதிராக செயல்பட முடியாது என்கிற அடிப்படை கூட தெரியாத பலரும் இருப்பது
உண்மையில் வியப்பு தான்! அதே காரணத்துக்காக தான் அதிமுகவும் இப்போது அதை செய்ய முன்வரவில்லை.
ஆனால், அதே நண்பர், எந்தவிதமான அரசியல் சாசன நிர்பந்தமும் இல்லாத வைகோ, நெடுமாறன்,
சீமான், திருமா போன்றவர்கள் ஏன் இப்படி ஒரு முயற்சியை இதுவரையும் எடுக்கவில்லை என்கிற கேள்விக்கு
பதிலின்றி தவித்ததும் பரிதாபகரமானது தான்.
எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது, இப்படி
ஒரு மாநாட்டை கூட்டுவதற்கான உத்வேகமும், உறுதியும், திறனும், செல்வாக்கும் திமுகவுக்கு
மட்டுமே இருக்கிறது என்பது. ஆனாலும், கலைஞரை விமர்சித்தாகவேண்டிய கட்டாயத்தாலோ என்னென்னவோ
கேள்விகளெல்லாம் கேட்கப்படுகின்றன.
போர்முடிந்துவிட்டதாக இலங்கை சொன்னதை நம்பி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டது
ஏன்?
இந்த கேள்விக்கு நேற்றுகாலை கருத்தரங்கில் பதில் சொல்லியிருக்கிறார் கலைஞர்.
“போர் முடித்துக்கொள்ளப்பட்டதாக / நிறுத்திக்கொள்ளப்பட்டதாக
இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பேரில் இந்திய அரசும் அந்த தகவலை தன்னிடம்
தெரிவித்ததால் தான் நான் முடித்துக்கொண்டேன். இலங்கை பொய் சொல்லியிருக்கிறது என்பது
அப்போது எனக்கு தெரியாது” என சொல்லியிருக்கிறார்.
அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் அதை தான் செய்திருப்பார்கள். காரணம்
ஒரு நாட்டின் அரசு அதிகாரப்பூர்வமாக தருகின்ற தகவலை நம்பாமல் இருக்கமுடியாது. இலங்கை
அரசின் உறுதிமொழியை நம்பி தான் இந்திய அரசும் தகவலை தெரிவித்திருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்படவேண்டியது
கலைஞரை அல்ல.
இதை இன்னொரு கோணத்திலும் நீங்கள் பார்க்கவேண்டும்.
யாரோ எங்கேயோ உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என இலங்கை உதாசீனப்படுத்தியிருக்கலாமே? அதைவிட்டுவிட்டு,
தன்னுடைய இறையாண்மையை மீறி, சட்டத்துக்கு புறம்பாக, பொய்யான ஒரு அறிவிப்பை இந்தியாவிடம்
அவசரம் அவசரமாக வழங்கியிருப்பதில் இருந்தே, கலைஞரின் உண்ணாவிரத போராட்டமும் அதன் விளைவுகளையும்
கண்டு, இலங்கை அரசு எந்த அளவுக்கு பயந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
கலைஞர் எடுக்கின்ற முடிவுகள் என்பது, வைகோ, சீமான், திருமா போன்றவர்கள் எடுக்கும் முடிவுகள்
போல அல்ல, அதற்கு வலிமையும், வீச்சும், மக்கள் ஆதரவும் அதிகம் என்பதை நம் தமிழகம் உணர்கிறதோ
இல்லையோ, இலங்கை நன்றாக உணர்ந்திருக்கிறது! அதனால் தான் அப்படி ஒரு பொய் தகவலை தந்து
அந்த போராட்டத்தை தடுத்திருக்கிறது இலங்கை!
இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது எதற்காக இப்படி ஒரு மாநாடு?
2009 ல் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து ஆயுத போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட
பின், தமிழர்களுக்கு உரிமையுள்ள பகுதிகளில், உரிய அமைதிபணிகளை செய்து, அவர்கள் நல்லபடியாக
வாழ்வதற்கான முயற்சிகள் நடைபெறும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கையில், அங்கிருந்து
வருகின்ற செய்திகளெல்லாம், அங்கே தமிழர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டிடங்களை
பண்பாட்டிடங்களை தகர்த்து தமிழர்கள் வாழமுடியாத ஒரு சூழலை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக
சொல்கிறது.
அதனால் தான், இனி ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கண்காணிப்பை வலியுறுத்து,
அதன் அடிப்படையில் அங்கே நல்லதொரு வாழ்வை நம் தமிழர்கள் வாழவேண்டும் என்பதற்காக ஈழ
தமிழர் ‘வாழ்வுரிமை’ மாநாடு இப்போது நடைபெறுகிறது, காலம் தாழ்த்தாமல்.
ஏன் உலகநாடுகளை கெஞ்சவேண்டும்?
ராம்விலாஸ் பஸ்வான் இந்த டெசோ மாநாட்டில் பேசும்போது மிக அழகாகவும் தெளிவாகவும்
ஒரு பேருண்மையை சொன்னார்.
அதன் சாராம்சம் என்னவென்றால், ஈழ தமிழர் விவகாரம் என்பது, தமிழக எல்லையோடு முடிந்துவிட்டது.
மற்ற மாநிலங்களில் அதன் வீரியம் புரியவில்லை. நமக்கு அசாம் மக்களின் நிலை, காஷ்மீர்
மக்களின் நிலை எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், தமிழர்களின் நிலை பற்றி நாம் தமிழகத்துக்கு
வெளியே அந்த விவகாரத்தை கொண்டு செல்லவேயில்லை.
உலக நாடுகளின் ஆதரவில்லாத எந்த போராட்டமும்
வெற்றிபெற்றதேயில்லை. ஆனால் நாமோ தமிழகத்திலேயே மூன்று வெவ்வேறு குழுக்களாக பிரிந்து
நின்று போராடிக்கொண்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறோம்.
யாருக்கு நற்பெயர் கிடைக்கும் என்கிற போராட்டம் தான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறதே
தவிர, ஈழ தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்று இதுவரை யாரும் உருப்படியாக சிந்திக்காமலேயே
இருந்துவிட்டோம்.
அதனால் தான், இந்த விஷயத்தை முதல் கட்டமாக இந்திய அளவிலேயும் பின்னர்
உலக அளவிலேயும் கொண்டு சென்று அவர்களுடைய ஆதரவையெல்லாம் பெறவேண்டும் என இந்த மாநாட்டில்
சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்திய அரசை தமிழகம் மட்டுமே நிர்ப்பந்தப்படுத்தி எதையும் சாதித்துவிடமுடியவில்லை
என்பதால் தான், இந்தியாவின் முக்கிய பிற கட்சிகளின் ஆதரவையும் இதில் கோரியிருக்கிறோம்.
பல கட்சிகளின் ஆதரவு இருந்தால் தான், நாளைக்கு பாராளுமன்றத்தில் ஒரு தனி தீர்மானத்தை
கொண்டுவந்து வெற்றிபெற வைக்க முடியும் என்பது தானே அடிப்படை?
அதேபோல, ஐ.நாவில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கோ, ஐ.நாவின் குழுவின் கண்காணிப்பில்
தமிழர்கள் அமைதி வாழ்வு வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கோ, பல்வேறு நாடுகளின் ஆதரவும்
தேவை என்பதால் தான், உலகநாடுகளில், ஒத்தகருத்துடைய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து இந்த
மாநாட்டில் அவர்களது மேலான கருத்துக்களையெல்லாம் அறிந்து அதன் படி தீர்மானம் வடிக்கப்பட்டிருக்கிறது.
தனி ஈழம் தாருங்கள் என தீர்மானம்
போட்டால் அது கிடைக்க நியாயமில்லை. அதை விட, தமிழர்கள் அங்கே அமைதியாக வாழுவதற்கு வழிசெய்யுங்கள்
என்று உலக நாடுகளை வற்புறுத்துவதில் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இது தான் சரியான உறுதியான செயல்வடிவம் பெறத்தக்கதான வழியாக இருக்கமுடியும்.
தமிழகத்துக்குள்ளேயே ஒரு மூலையில் மேடையிட்டு, ஈழ விவகாரத்தில் எதிரணியினர் எதையும்
செய்யவில்லை என்று குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை விட, ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு
தான் உரிய பலன் தருகின்ற ஒன்றாக இருக்கமுடியும்.
*******
இந்த மாநாட்டில் 1956ல் சிதம்பரம் நகரில் தான் முன்மொழிந்த தனி ஈழ தீர்மான
விஷயத்தில் தொடங்கி ஈழ விஷயத்தில் நடந்தவைகளையெல்லாம் மிக சுருக்கமாக விவரித்த கலைஞர்,
அதில் நெடுமாறன் அவர்களையும், வைகோ அவர்களையும் குறிப்பிட தவறவில்லை. இன பிரச்சனையில்
விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும் எனபதற்கான எடுத்துக்காட்டு
அது.
திருமாவளவனின் பேச்சு அவரது அறியாமையையும், ஈழ விவகாரத்தில் அவருக்கு முழுமையான
விவரங்கள் தெரியாது என்பதையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. மற்றவர்களெல்லாம்
ஈழ தமிழர்களை பற்றி, ஈழ விவகாரத்தைபற்றி உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டிருக்கையில், திருமா
மட்டுமே ‘பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா’ போல தேவையற்ற புகழ்ச்சியுரைகளால் நேரத்தை நிரப்பிக்கொண்டிருந்தது
நெருடலாக இருந்தது.
மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், மத்திய
அரசை பகைத்துக்கொண்டாலும் பரவாயில்லை என மிக
கடுமையான தீர்மானங்களை வலியுறுத்தியிருப்பதன் மூலம், மத்திய அரசின் எந்த நிர்பந்தத்துக்கும்
நாம் பணியப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் கலைஞர்.
நான் கூட, இந்த மாநாட்டில்
மேலோட்டமாக சில தீர்மானங்கள், அதுவும், இந்திய அரசை கெஞ்சுவதுபோல தீர்மானங்கள் வெளியாகும்
என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், இந்திய அரசின் மீது நம்பிக்கையில்லை, உலக நாடுகளே
நீங்கள் எங்களுக்காக குரல்கொடுங்கள் என்கிற தொனியிலான தீர்மானங்கள் வெளியாகியிருப்பதில்
இருந்தே, நமக்கு நம் இனம் தான் முக்கியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது
மாநாடு!
விமர்சிப்பவர்கள் விமர்சனம் இருப்பதால் விமர்சிப்பதில்லை. கலைஞரை விமர்சிக்கவேண்டுமே
என்று விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்பவர் கலைஞர் என்பதால் தான் அவரை
விமர்சிக்கிறார்கள். அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்ததேவையில்லை.
தமிழகத்தில் ஈழவிவகாரத்தை வைத்து விளம்பர அரசியல் செய்துகொண்டிருக்கும்
சில அரசியல்கட்சிகளை மக்கள் எப்போதோ புறக்கணித்துவிட்டனர். உணர்ச்சிகரமாக பேசுவதாலும்,
மற்றவர்களை குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதாலும் கைதட்டல்களை மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும்.
அது எந்த விதத்திலும், ஈழ தமிழர்களுக்கு பயனளிக்காது.
1950களிலிருந்து ஈழவிவகாரத்தில்
முழுமையாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கலைஞரை தவிர இன்றைய தேதியில் ஈழதமிழர்களின் எதிர்காலத்தை
பற்றி வேறு யாரும் உருப்படியாக சிந்திக்கமுடியாது என்பதை தான் நேற்றைய தீர்மானங்கள்
தெளிவுபடுத்துகின்றன. இனியும், விளம்பர அரசியல்வாதிகள் ஈழ விஷயத்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல்,
ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு, உச்சஸ்தானியில் ஈழ மக்களுக்காக குரல்கொடுக்கவேண்டும்
என்பது தான் பலரது ஆசை.
அது பேராசையுமல்ல, நப்பாசையுமல்ல என்பதை காலம் தான் உறுதிசெய்யவேண்டும்!
டீவிட்டர் ஒரு பொழுது போக்கு தளமாகவே நம்மவர்களால் பார்க்கபடுகின்றது...எதவது கூட்டத்தோடு சேர்ந்து சொல்ல வேண்டும் என்பத்ற்க்காக சொல்வது அதன் சரம்சம் புரியமல்...ராம் விலாஸ் பாஸ்வ்னின் ஆங்கிலப்புலமையை கிண்டல் செய்யதவர்கள் அவர் என்ன சொன்னார் என்று கேட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு தெரியாது...இது தான் உண்மை....நல்ல பதிவு ....வாழ்த்துக்கள்....jokin.jey
ReplyDeleteஈழ்த்திற்கு உண்மையாகப் பாடு படுபவர்கள் பெயருக்காகவோ, புகழுக்காகவோ எதுவும் செய்வதில்லை ! யார் பாராட்டுகின்றார்கள், யார் எதிர்க்கின்றார்கள் என்பது பற்றியும் கவலைப் படுவதில்லை.
ReplyDeleteஅவர்களால் முடிந்ததைத் தொடர்ந்து செய்து கொண்டுள்ளார்கள்.
தமிழன் ஒவ்வொருவரும் அடுத்தவரைக் குறை சொல்லும் முன் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டால் ஈழம் கிடைப்பது உறுதி !
இணையத்தில் வெறும் வார்த்தைகளை வாரி வழங்கும் " மேல் தாவிகள்" கொஞ்சம் பெரிய கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ள மிக்க அன்புடன் வேண்டுகின்றேன்.
வாருங்கள், முடிந்தால் வந்து உழைப்பவர்களுடன் சேர்ந்து ஒரு துரும்பையாவது எடுத்துப் போடுங்கள், வர வேற்போம் ! நன்றி சொல்வோம் !
Sir... Jokkadikkathinga sir.. Nan oru ilangayan. Ippadi thamilarai pagadayaaga vaiththu arasiyal pannuvathai nirutha sollungal karunaanithiyai..Valimayaana theermaanama? Kudumbam valarppthatkaa?
ReplyDeleteடெசொவுக்கு பின்னணியே... அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை கழட்டிவிட்டுவிட்டு மதிமுக, தேமுதிக , மனிதநேய மக்கள் கட்சி ( முஸ்லீம்ஸ்) மற்றும் கம்யுனிஸ்டுகளை ஒரே குடையில் நிறுத்த கருணாநிதி அரங்கேற்றும் நாடகமே இது . காங்கிரஸ் இல்லாத திமுக.... பிஜேபி இல்லாத அதிமுக ( அப்பத்தான் முஸ்லீம்ஸ் வோட்டுகள் டிவைட் ஆகாமலிருக்கும்) ....இதுதான் கருணாநிதியின் இன்ஸ்டன்ட் ஈழ பாசம்....சோழியன் குடுமி சும்மா ஆடாது...கருணாநிதி குடுமி வைக்காத....
ReplyDelete