Monday, August 27, 2012

அண்ணா ஆர்ச் – நினைவுகள்
வ்வளவு செண்டிமெண்ட் இல்லைதான். ஆனாலும் இன்னைக்கு அண்ணாஆர்ச்சை இடிக்கறாங்கன்றது மனசுக்குள் ஒருவிதமான சங்கடத்தை தர்றதை தவிர்க்க முடியலை.
 
நான் சென்னைக்கு வந்தப்போ வேலையும் வீடும் எல்லாமே அம்பத்தூரில் தான் அமைஞ்சுது. அதனால் தென்சென்னைக்கு வரணும்னா அண்ணா ஆர்ச்சை தவிர்க்கமுடியாது. அந்தவழியா வாரத்துக்கு 20 தடவையாவது பயணிச்சிருப்பேன். ஆனாலும் அந்த வளைவுகள் மேல அப்படியொன்னும் பெரிய ஈர்ப்பு இருந்ததேயில்லை. இன்னைக்கு அதை இடிக்கப்போறாங்கன்னபோது தான் அதத பத்தி அதிகமா நினைவுகள் வருது.

1985ல் பேரறிஞர் அண்ணாதுரையின் 75ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அண்ணாநகருக்குள் நுழையுற பகுதியில் (நடுவங்கரை) அந்த ரெண்டு ஆர்ச் அமைச்சாங்க. அப்போ தமிழ்நாடு வீட்டு வசது துறை தலைவரா இருந்த ஞான ஒளிங்கறவரோட ஐடியாவாம் அது. அவர் சென்னையின் பல இடங்களில் இந்த மாதிரி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினாராம். கே.கே.நகருக்கு அசோக் பில்லர், சி.ஐ..டி நகருக்கு நந்தி மாதிரி அண்ணாநகரில் இந்த அண்ணா நினைவு வளைவுகள் அமைச்சாராம்.

இது ஒண்ணும் பெரிய கட்டிட கலை அற்புதமோ, வரலாற்று சிறப்பு மிக்க வளைவோ இல்லை. ஆனாலும் அண்ணா நகர்ன்னு சொன்னாலே முதலில் அண்ணா ஆர்ச் தான் ஞாபகம் வரும். 1970களில் அண்ணா நகர் உருவாக்கப்பட்டபோது அமெரிக்க நகரங்களை மாதிரி திட்டமிட்டு தான் பக்காவா பிளான் பண்ணி அமைச்சாங்க. அப்படியான ஒரு சிறந்த கட்டமைப்புள்ள நகருக்குள் நுழைகிறொம்னு ஒவ்வொருதடவை அண்ணா ஆர்ச்சை கடக்கும்போதும் ஞாபகம் வரும்.

நான் அண்ணா அர்ச் பகுதிக்கு வர்றதே ரெண்டு விஷயத்துக்காக தான்.

எங்கப்பாவுக்கு சித்த மருந்துகள் தேவைன்னா அங்கே இருக்கிற அரசு சித்த மருத்துவ மனைக்கு தான் வருவாரு. கூடவே நான் அவர் கையை பிடிச்சிகிட்டே வருவேன். அந்த அரசு சித்த மருத்துவமனை ரொம்ப பெரியது. எல்லா நோய்களுக்கும் இலவசமா சிகிச்சை தருவாங்க. அந்த மருத்துவமனைக்கு எதிர்லயே, அரசு மூலிகை பண்ணை இருக்கு. மருத்துவத்துக்கு தேவையான மூலிகைகள் மட்டுமில்லாம, டாம்ப்கால் மாதிரியான அரசு தேங்காய் எண்ணெய், மூலிகை எண்ணெய் உற்பத்திக்கான மூலிகைகளையும் அரசு அங்கே தான் பயிரிட்டுட்டு இருக்காங்க. நினைச்சு பாருங்க! அந்த ஏரியாவே சும்மா கும்முன்னு மூலிகை வாசமா தூக்கும்.

இன்னொரு விஷயம் செல்ஃபோன், டிவிடி. ஒரு குட்டி ரிச்சி ஸ்ட்ரீட்டே அங்க இருக்கு. வரிசையா செல்ஃபோன், டிவிடி, சிடி, மொபைல் கடைங்களா இருக்கும். என் ஃபோன் சர்வீஸ் செய்யணும்னா கூட அங்க தான் போவேன். சீப் ரேட்டில் சூப்பரா சர்வீஸ் செஞ்சு தருவாங்க.

இந்த ரெண்டு விஷயம் தவிர, அண்ணா ஆர்ச்சுங்கறது, என்னுடைய தினசரி பயணவழியில் கவனத்தில் நிக்காம கடந்து போகிற ஒரு சாதாரண இடம் தான்.

சரி, அதை இப்போ எதுக்காக இடிக்கிறாங்க?

சென்னையில் பெருகி வர்ற போக்குவரத்து நெரிசல், அடுத்த 10 ஆண்டுகளில் வரக்கூடிய ஜன நெருக்கடி, அதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து கட்டமைப்புகான திட்டங்கள் அடிப்படையில் சென்னையில் மெட்ரோ ரயில் அமைக்க கடந்த திமுக அரசு திட்டமிட்டு அதை தொடங்கியும் வெச்சாங்க. இப்போதைய அதிமுக அரசு பதவியேற்றதும், அந்த திட்டத்தை முடக்கி வெக்க முதலில் முடிவு செஞ்சு, பலத்த எதிர்ப்பின் காரணமா அந்த முடக்கி வைக்கிற முடிவை கைவிட்டு, திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பிச்சாங்க. அந்த திட்டத்தின் ஒரு பகுதியா தான் அந்த அண்ணா ஆர்ச் இடிக்கப்படுது.


அண்ணா ஆர்ச் கிட்டே ஒரு சிக்னலும், 100 மீட்டர் கடந்ததுமே பூந்தமல்லி நெடுஞ்சாலை -  நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் இன்னொரு சிக்னலுமா பக்கம் பக்கமா இருக்கிறதால் வர்ற போக்குவரத்து நெரிசல் ரொம்ப அதிகம். சென்னையின் ரத்த நாளம் மாதிரியான பூந்தமல்லி நெடுஞ்சாலை (வடசென்னை தென்சென்னைக்கான எல்லை கோடு?) எப்பவுமே வாகன நெரில் உள்ள பகுதி. அண்ணாநகர் பகுதியில் இருந்து தென்சென்னைக்கும், தென் சென்னை பகுதியிலிருந்து அண்ணாநகர் பகுதிக்கும்  பயணிக்கிற வாகனங்கள், இந்த ரெண்டு சிக்னலிலும் நின்னு போவதால் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஆகுது.

அரசு எடுத்திருக்கும் கணக்குப்படி, ஒரு மணிநேரத்துக்கு 20,000 கார்கள் அந்த பகுதியை காலையிலும் மாலையிலும் பீக் ஹவரில் கடக்குதாம். அதனால், அந்த இடத்தில் L வடிவத்திலான ரெண்டு பாலங்கள் அமைக்க முடிவு பண்ணி இருக்காங்க. 


அண்ணா நகரிலிருந்து வர்ற வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையை தொட்டதும் ஒரு பாலம் தொடங்கி மேலேறி வலதுபுறமா திரும்பி நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இறங்கற மாதிரி ஒரு பாலம். நெல்சன் மாணிக்கம் ரோட்டிலிருந்து வர்ற வாகனங்கள் இடது புறம் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலையை தொட்டதுமே ஒரு பாலம் தொடங்கி மேலேறி வலதுபுறமா திரும்பி அண்ணா நகருக்குள் நுழைஞ்சு கீழிறங்கற மாதிரி ஒரு பாலம். இந்த ரெண்டாவது பாலம் அண்ணாநகருக்குள் நுழையறதுக்கு தான் அண்ணா ஆர்ச் தடையா இருக்குங்கறதால் அது இன்னைக்கு இடிக்கப்படுது.

இந்த ரெண்டு பாலங்களும் அமைக்கப்பட்டதுன்னா, அந்த பகுதியில் இப்போ இருக்கும் ரெண்டு சிக்னல்களையும் நீக்கிரலாம். அண்ணா நகர் நெல்சன்மாணிக்கம் ரோடு இடையில் தடையில்லாத போக்குவரத்து அமைஞ்சிடும். ஒரே ஒரு கஷ்டம் என்னன்னா, இப்போ நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருந்து அமைந்தகரைக்கு நேரடியா திரும்பும் வசதி இருக்கு. அது ரத்து ஆகுது. அதுக்கு பதிலா, இந்த இரண்டாவது மேம்பாலத்தில் ஏறி, அண்ணா நகருக்குள் இறங்கற இடத்தில் இன்னொரு துணை பாலம் மூலமா என்.எஸ்.கே நகர் அருகில் பூந்தமல்லி சாலையில் ரவுண்ட் அடிச்சு அமைந்தகரை போகணும். தடையில்லாம போயிரலாம். எங்கேயும் நிக்கவேண்டாம்.


இந்த அமைந்தகரை போறதுக்கான துணைப்பாலம், இப்போ அரசு கொடுத்திருக்கும் மேப் படி பார்த்தா, நான் முதலில் சொன்ன அரசு மூலிகை பண்ணைல தான் இறங்குது. அப்போ மூலிகை பண்ணை கதி என்னன்னு தெரியலை. பாலத்துக்கு கீழே எப்பவும் போல செயல்படுமா? அல்லது பண்ணையை தூக்கிருவாங்களான்னு இன்னும் எனக்கு தெளிவா தெரியலை.

அண்ணா ஆர்ச்சை இடிக்கறதுக்காக முடிவு செஞ்சிருக்கிற சென்னை மாநகராட்சியும் கூட, அதை அண்ணாநகரிலேயே இன்னொரு இடத்தில் அமைக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கிறதாவும் ஒரு தகவல் வந்திருக்கு.
சென்னை மாநகர வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் குறறப்புங்கற நோக்கத்தில் பார்த்தா இந்த அண்ணா ஆர்ச் இடிக்கபடுறதில் கவலைப்பட எதுவுமே இல்லை. இன்னும் சொல்லப்போனா, இதை எப்பவோ செஞ்சிருக்கணும். அந்த இடத்தில் பாலம் கட்டற திட்டம் ரொம்ப காலமாவே இழுத்துட்டு வருது. இப்போதான் நிறைவேறுது.

மனசுக்குள் ஒரு ஓரமா, ரொம்ப ரொம்ப மெல்லிசா ஒரு வருத்தம் இழையோடினாலும், இந்த வளர்ச்சி பணி எல்லாம் நமக்காக தானேன்னு நினைச்சு ஆறுதல் அடைஞ்சிக்க வேண்டியது தான்!

4 comments:

 1. அடடா..... சென்னை வரும் சமயங்களில் இந்த ஆர்ச் பார்த்ததும் வீடு வரப்போகுதுன்னு நிம்மதி இருக்கும்.

  மக்களுக்கு மேலும் வசதி செஞ்சு கொடுக்கத்தானே இடிக்கறாங்கன்னு ஆறுதல் பட்டுக்கணும் இனி!

  நெல்சன் மாணிக்கம் ரோடுலே............பயணம் ரொம்ப பேஜார்:(

  நல்ல பதிவு சதீஷ்.

  ReplyDelete
 2. தமிழ் மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அடடா.... சொல்லவிட்டுப்போச்சே........

  நட்சத்திர வாழ்த்து(க்)கள் சதீஷ்

  ReplyDelete
 4. எனக்கு இவை பற்றித் தெரியாது, ஆனாலும் ஒரு நகரின் எதிர்கால முன்னேற்றம், இது தவிர வழியில்லை எனும் நிலையில் இதை ஏற்றுக் கொள்வோம்.
  இயற்கைச் சீற்றங்களில் எத்தனையோ நினைவுகள் துடைப்பப்பட்டுள்ளன; தடுக்கமுடிந்ததா?
  ஈழத்தில் என் சந்ததியே பாட்டா,அப்பா, நான் பிறந்து வளர்ந்த வீடு, எங்களுடனே வளர்ந்த மரங்கள் ஒரு புளியமரம் சுமார் 400 வருடம் வயதானது,அன்றைய நாட்களில் என் வயதானவங்க 3 பேர் கட்டிப் பிடித்தாலும் முடியாது,புளியடிப் பொன்னம்மா என்றால் அது என்னம்மா? ஞாபகச் சின்னங்கள் யாவும் தரைமட்டமாம், ஏற்றுக் கொண்டுவிட்டோம்.
  ஒரு அநியாயப் போருக்குத் தாரை வார்த்து விட்டோம்.
  ஆகவே இதையிட்டு வேதனைப்படவேண்டாம். இதில் வரும் புதிய வீதிக்கு அண்ணா பெயரை வைக்க வேண்டுகோள் வைக்கவும்.

  ReplyDelete

Printfriendly