இன்றைய தினம் அகில இந்தியாவையும் பரபரப்பாக்கிக்கொண்டிருக்கும் விஷயம்,
பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தில் தினசரி நடைபெற்றுவரும் எதிர்கட்சிகளின்
அமளி தான்!
எப்போதுமே எதிர்கட்சிகள் இப்படி எதையாவது ஒரு விஷயத்தை கையில் எடுத்து பிரதமரை
ராஜினாமா செய்ய சொல்வதும், பிரதமர் மறுப்பதும், காங்கிரஸ் பிரதமரை பாதுகாப்பதும், நாடாளுமன்றத்தில்
எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கசெய்வதும் வழக்கமான ஒன்று தான்! ஆனால் இப்போதைய விஷயம்
கொஞ்சம் கவனிக்க தக்க ஒன்று!
நிலக்கரி சுரங்கத்தை ஏலம் விட்டதில் கிட்டத்தட்ட ரூபாய். 1, 80,000 கோடி
அரசுக்கு இழப்பு என்று தணிக்கை துறை கொடுத்திருக்கும் அறிக்கையின் அடிப்படையில் அது
குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும், அதற்காக தார்மீக பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா
செய்யவேண்டும் என்பது தான் இப்போதைய கோரிக்கை!
ஏற்கனவே 2G வழக்கில் இதே போலொரு குற்றச்சாட்டை மத்திய தணிக்கை துறை கொடுத்ததுமே,
அவசரம் அவசரமாக வழக்கு பதிவு செய்து அந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா ராஜினாமா
செய்ய வற்புறுத்தப்பட்டு, பதவி விலகியபின் கைது செய்யப்பட்டார். அது போலவே, இந்த வழக்கையும்
கையாண்டு, பிரதமரை பதவி நீக்கம் செய்து அவரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்பது
தான் எதிர்கட்சிகளின் வாதம்.
2G வழக்கு யூகமான வழக்கு என்பதும் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு நிச்சயமான
குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலான ஒன்று என்பதும் ஏற்கனவே இது குறித்த எனது பதிவை
படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்!
நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு தவறானது. மத்திய தணிக்கை துறை தனது
வரம்பு மீறி செயல்படுகிறது. தவறான தகவல்களை கொடுக்கிறது என மத்திய அரசு சொல்கிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்து சொன்ன, என் மதிப்பிற்குறிய திரு. பீட்டர் அல்போன்ஸ்
அவர்கள் கூட, ராஜாவை பதவி நீக்கியதற்கு காரணம் அவர் அமைச்சர். ஆனால் பிரதமர் தான் இந்த
அரசின் அச்சாணி. அதனால் அவவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என சொல்லி இருக்கிறார். சுரங்கத்துக்கு அனுமதி தான்
கொடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அதில் இருந்து ஒரு டன் நிலக்கரி கூட இன்னமும் வெட்டி
எடுக்கப்படவில்லை. அப்படியிருக்க ஒரு பைசா கூட அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என மத்திய அமைச்சர். ப. சிதம்பரமும் முட்டாள்தனமான
பேட்டி அளித்திருக்கிறார்.
இப்படியான சூழலில் இன்றைக்கு பிரதமர் அவர்கள் பாராளுமன்றத்தில் விளக்கங்களை
கொடுக்கும் போது, இந்த விவகாரத்தில் தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் பதவி விலகுவதை பற்றி எந்த தகவலும் இல்லை. விசாரணை விவரங்களும் இல்லை.
மேலும், இதில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்புக்கும்
அழைப்பு விடுத்து அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறார் பிரதமர்.
அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டால் (விட்டால் என்ன,
காங்கிரஸ் கூட்டணிக்கு தான் பெரும்பான்மை இருக்கிறது என்பதால் அவர் தான் வெற்றி பெறுவார்)
இந்த ஊழல் குற்றச்சாட்டு தவறு என்றாகிவிடுமா? அரசுக்கு ரூ.1,80,000 கோடி ரூபாய் இழப்பு
ஏற்படவில்லை என்றாகிவிடுமா? ஆள் இருக்கிறார்கள் என்கிற தைரியத்தில் என்ன தவறை வேண்டுமானாலும்
அரசு பொறுப்பில் உள்ளவர்கள் செய்து கொள்ளலாமா? புரியவில்லை.
2G விஷயம் போல இந்த நிலக்கரி விஷயம் இல்லை என்பதை எனது முந்தைய பதிவில்
ஓரளவுக்கு விளக்க முற்பட்டு இருக்கிறேன். இன்னும் விரிவாக சொல்வதென்றால்:
மத்திய நிலக்கரி அமைச்சராக இருந்த சிபு சோரன் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு
சிறைக்கு அனுப்பப்பட்டபின், அந்த துறையை பிரதமர் நிர்வகிக்க தொடங்கினார். திரு. தாசி
நாராயணன் அவர்களும் திரு. சந்தோஷ் பாக்தோத்யா அவர்களும் இணை/துணை அமைச்சர்கள்.
2007ல் மார்கெட் விலையில் டன்னுக்கு ரூ.2000/- விற்கும் நிலக்கரியை டன்னுக்கு
ரூ.100/-க்கும் குறைவாக இந்த அமைச்சர்கள் குழு தனியாருக்கு தாரை வார்த்தது. இதை நியாயப்படுத்துவதற்காக
மத்திய அரசு கொண்டுவந்த சுரங்க சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறவில்லை.
நான்கு ஆண்டுகளாக அது நிலுவையில் உள்ளது.
2006-2011 கால கட்டத்தில் 175 சுரங்கங்கள் தனியாருக்கு இப்போதைய பிரதமர்
மன்மோகன் சிங் அவர்களால் கொடுக்கப்பட்டன. லைசன்ஸ் பெற்ற நிறுவனங்களில் 26 நிறுவனங்கள்
இதுவரை நிலக்கரியை வெட்டி விற்று வருகின்றன. இதன் மூலம், மார்கெட் விலையை விட மிக மிக
குறைந்த அடிமாட்டு விலைக்கு நிலக்கரியை கொடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட 26 லட்சம் கோடி
ரூபாய் ஒட்டுமொத்த நஷ்டம்! லைசன்ஸ் பெற்ற நிறுவனங்களில் வெறும் 26 நிறுவனங்கள் மட்டுமே
இதுவரை நிலக்கரியை வெட்டி விற்று வருகின்றன. அதாவது அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய
54 லட்சம் கோடி ரூபாய்க்கு பதிலாக, 28 லட்சம் கோடி ரூபாய் தான் கிடைத்திருக்கிறது.
இன்னொரு வேடிக்கை, லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் லைசன்ஸ் பெற்ற நாளில் இருந்து
48 மாதங்களுக்குள் நிலக்கரி உற்பத்தியை தொடங்காவிட்டால் அவர்களது லைசன்ஸை ரத்து செய்திருக்கவேண்டும்.
இந்த வகையில் கிட்டத்தட்ட 150 நிறுவனங்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படாமல் இருக்கிறது.
இப்படி செயல்படாத நிறுவனங்களின் லைசன்சை ரத்து செய்யாமல் விட்ட வகையில் மத்திய அரசு
பெற்ற லாபம் என்ன என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியவரும், அதுவும் இது விஷயமாக விசாரணை
ஏதும் நடந்தால் மட்டுமே!
2G வழக்கில் அரசுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் இன்னமும் கூடுதலாக லாபம் கிடைத்திருக்குமே
என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால் நிலக்கரி விஷயத்தில் ஒட்டுமொத்தமாக அரசுக்கு நஷ்டம்.
சுரங்க ஒதுக்கீட்டு தொகையில் ஏற்பட்ட நஷ்டமான 1.80 லட்சம் கோடி பற்றி மட்டும் தான்
இங்கே இப்போது பேசப்பட்டு வருகிறதே தவிர, வெட்டி எடுக்கப்பட்ட / இனி வெட்டி எடுக்கப்படவிருக்கின்ற
நிலக்கரிக்கான மார்கெட் விலையுடன், அரசு நிர்ணயித்த விலையை ஒப்பிட்டால் வரக்கூடிய நஷ்டமான
26 லட்சம் கோடி ரூபாய் பற்றி இன்னும் யாரும் பெரிதாக பிரச்சனை கிளப்பவில்லை. இந்த இடத்தில்
தான் சிதம்பரம் அவர்கள் சொன்னதை போல, இன்னமும் நிலக்கரி வெட்டி எடுக்கப்படவில்லை. அதனால்
(இன்னும்) நஷ்டம் ஏற்படவில்லை என்கிற வாதம் பொருந்தும்.
சரி, நான் மீண்டும், இந்த பதிவின் நோக்கத்திற்கே மீண்டும் வருகிறேன்.
பிரதமர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கு உரிய ஆதாரங்களை மத்திய
தணிக்கை துறையே விரிவாக சமர்ப்பித்து இருக்கிறது. அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு
இருக்கிறது. இப்படி இழப்பை ஏற்படுத்தியதற்கான பலனை சிலர் அனுபவித்திருக்கிறார்கள்.
நியாயமாக என்ன செய்திருக்கவேண்டும்?
சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரான பிரதமர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா
செய்துவிட்டு, விசாரணையை எதிர்கொண்டு, தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்திருக்கவேண்டும்.
அதை விட்டுவிட்டு, நம்பிக்கை வாக்கெடுக்கிறேன். வென்றால் நான் குற்றமற்றவன், தோற்றால்
பார்க்கலாம் என்பது என்ன வகையான நியாயம் என்பது எனக்கு தெரியவில்லை. இது தான் நியாய
தீர்ப்பா என்பதும் புரியவில்லை.
உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
Indians are fed up with Congress and Sonia.
ReplyDelete//2G வழக்கில் அரசுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் இன்னமும் கூடுதலாக லாபம் கிடைத்திருக்குமே என்பது தான் குற்றச்சாட்டு. //
ReplyDeleteஏன் நீங்கள் ராஜா சில நிறுவனங்களுக்கு சாதகமாக முடிவெடுக்க வேண்டி டெண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதிகளை மாற்றியது பற்றியெல்லாம் பேசுவதேயில்லை.
ராஜாவும் அது பற்றி செய்திகள் பல நாட்களாக வந்து கொண்டிருந்த போதிலும் உடனே ஒன்றும் பதவியை துறந்து விடவில்லை. JPC வேண்டி முன்னரும் பிஜேபி ஒரு பாராளுமன்ற கூட்டத்தொடரை வீணாக்கியது.
நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது. ஆனால் சரியாக விதிகளை பின்பற்றாது எடுக்கப்படும் முடிவுகளை ரத்து செய்ய முடியும் என்ற வகையிலேயே 122 உரிமங்களை ரத்து செய்தது. ஏதோ ராஜா உத்தமர் போலவும் அவர் சாதி/திராவிட ஒடுக்குமுறை போன்ற காரனங்களுக்காவே பழிவாங்கப்படுகிறார் என்றெல்லாம் திமுக தலைவர் பேசுவது போலவே நீங்களும் பேசுவது ஏன்.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை தொடர்பாக தங்களது கருத்துக்களோடு உடன்பட முடியவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டால் அவர் குற்றமற்றவர் என்றால், இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால் மோடி கோத்ரா வழக்கில் குற்றமற்றவர் என்றாகிவிடுமா அல்லது இப்பொழுது தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா சொத்து-குவிப்பு வழக்கில் தவறு செய்யாதவர் என்றாகிவிடுவாரா?
ReplyDeleteமொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று கூறுவார்கள் அதுபோல தான் இருக்கிறது இவர்களின் வாதமும்.
தங்கள் கேள்வி ஞாயமானதே. நல்ல பதிவு. நட்சத்திரப்பதிவிற்கு வாழ்த்துகள்.