Monday, August 20, 2012

கோமகன் ராஜீவ்


ப்போது நான் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்துக்கொண்டிருந்தேன். ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்து ஒரு வெட் கிரைண்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக வேலைக்கு இருந்த சமயம். 

மறுநாள் அனுப்புவதற்கான கிரண்டர்களை இரவு பேக்கிங் செய்து கொண்டிருந்தோம். அப்போது தான் அந்த செய்தி டி.வியில் வந்தது! எங்கள் முதலாளி, எங்களிடம் அலறியபடி சொல்ல, நாங்கள் ஓடி சென்று அந்த செய்தியை பார்த்தோம்.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில்  நடத்தப்பட்ட  மனிதவெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் கொல்லப்பட்டார்!

ராஜீவை எனக்கு ஏனோ ரொம்ப பிடித்திருந்தது. 

மிக வயதான பிரதமர்களை பற்றி மட்டுமே படித்திருந்த காலத்தில் அதே கோவை வ.உ.சி பூங்கா பொதுக்கூட்டத்தில் ஓடும் காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி மேடை படியை தாவி தாவி ஏறி லாவகமாக எங்களை நோக்கி கைவீசிய அந்த இளம் தலைவர் எப்படியோ என் மனதுக்குள் ஆதர்ச நாயகனாக அமர்ந்துவிட்டார். அவரை பற்றி அப்போது எனக்கு அதிகமாக எதுவுமே தெரியாது!

அவரது கொலையில் பல மர்மங்கள் இன்னமும் அவிழ்க்கப்படாமல் பொதிந்திருப்பதை நான் பல்வேறு செய்திகள் / நூல்கள் / கட்டுரைகள் மூலம் அறிந்திருக்கிறேன். 

இன்னமும் என்னை குழப்பி கொண்டிருக்கிற சில கேள்விகளில் முக்கியமானவை:

அவருடன் ஸ்ரீபெரும்புதூரில் கூட்டத்தில் இணைந்து பிரச்சாரம் செய்ய கிருஷ்ணகிரியிலிருந்து வந்துகொண்டிருந்த ஜெயலலிதா, ஏன் பாதியிலேயே திரும்பி பர்கூர் சென்று பயணியர் விடுதியில் தங்கினார்?

பெங்களூர் செல்லவிருந்த விமானத்தை ரத்து செய்துவிட்டு சுப்பிரமணியம் சுவாமி கார் மூலம் பெங்களூர் செல்கையில் சம்பவம் நடப்பதற்கு சில மணிகள் முன்பு ஸ்ரீபெரும்புதூரில் நிறுத்தி சற்று நேரம் மேடையை பார்த்துவிட்டு சென்றதாக நக்கீரன் நிருபர் சுவாமியிடமே கேட்ட கேள்விக்கு சுவாமி மழுப்பிய மழுப்பல்கள் எதற்காக?

05-02-1991 & 15-03-1991 ஆகிய நாட்களில் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தூதுவராக ராஜீவுடன் நல்லமுறையில் பேச்சு நடத்தி இருவருக்குமிடையே சுமூக உறவு இருந்ததை உறுதி செய்த ஐயா கவிஞர் காசி அனந்தனுக்கு, ஒரு வருடம் முன்பே அவரை கொல்ல அதே இயக்கம் ஆள் அனுப்பியிருப்பது தெரியாதா? தெரிந்தே ஒரு பக்கம் அவருடன் உறவாடி, உதவிகள் பெற்று மறுகக்கம், அவரை நயவஞ்சகமாக நம்பவைத்து கொன்றனரா?

என்பன போன்ற பல்வேறு கேள்விகள் தொடர்கிறது தான்!

விடுங்கள்.. இன்றைய அவரது பிறந்த நாளில் அவரை பற்றிய நல்ல நினைவுகளை மட்டும் பகிர்ந்துகொள்வோம்!

21ம் நூற்றாண்டு இந்தியா, எல்லா வகையிலும் வளம் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சத்தமில்லாமல், விளம்பரமில்லாமல், தொலைநோக்கு பார்வையுடன் அணுகி, திட்டமிட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்தவர் ராஜீவ். 

அவரை பற்றிய வரலாறு முழுமையாக இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்பதில் எனக்கு எப்போதுமே வருத்தம் இருக்கிறது!





இந்திராவின் மகனாக இருந்தும், பைலட்டாக வேலை செய்து சம்பாதித்த சுயமரியாதை கொண்டவர். தனது பொறுப்பில் இந்த நாடு வந்தபோது, தயக்கமின்றி அதை தலைமை தாங்கி குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சிக்கு வித்திட்டவர், கிராமங்கள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என சொல்லி அதன் நிர்வாக அமைப்பையே புனரமைத்து, புரட்டி போட்டு வளர்ச்சிபெற செய்தவர். கல்வி வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்தவர். தொழில் புரட்சியையே சத்தமில்லாமல் செய்துசென்றவர். காங்கிரஸ்காரராக இருந்தும், மனதளவில் சோஷலிச சித்தாந்தங்களை கொண்டு ஆட்சி செய்தவர். பொதுத்துறை நிறுவனங்களை வளப்படுத்தியவர். இந்தியாவின் உள்நாட்டு கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாலைகள், மேம்பாலங்கள் என இந்தியாவில் உலகத்தர போக்குவரத்துக்கு வழி செய்தவர் என அவரை பற்றிய பாராட்டு பட்டியல்களை படித்துக்கொண்டே போகலாம், ஒவ்வொன்றுக்கும் ஒன்றரை பக்க விரிவான தகவல்களுடன்.


ஆனால், உங்கள் பொறுமையை சோதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. மாறாக உங்கள் சிந்தனையை சீராக்கி இன்னும் கொஞ்சம் லாஜிக்கலாக சிந்திக்க வைக்கலாமென்றிருக்கிறேன்!

எனக்கு எப்போதுமே இந்தியன் என்பதில் ஒரு கர்வம் இருக்கிறது! காரணம் உலக நாடுகளிலேயே நாம் தான் அதீத வளர்ச்சி பெற்றவர்கள்! 

இதை பலரும் ஒப்புக்கொள்ள மறுத்ததுண்டு, சீனாவை, ஜப்பானை, அமெரிக்காவை, இங்கிலாந்தை ஒப்பிட்டால் இந்தியா ஒன்றுமேயில்லை என்பவர்கள் தான் அதிகம்! உண்மை தான் அவர்களுடன் ஒப்பிடுகையில் நாம் ஒன்றுமேயில்லை! ஆனால் நான் அப்படி ஒரு கோணத்தில் நின்று இந்தியாவை பார்க்கவில்லை! என்னுடன் என் பக்கமாக நகர்ந்து வாருங்கள்! இந்தியாவை வேறோரு கோணத்தில் இருந்து பார்க்கலாம்!

இந்தியா மிக மிக இளமையான நாடு. சுதந்திரம் கிடைத்து வெறும் 65 ஆண்டுகள் மட்டுமே ஆகி இருக்கிறது! நம்மை நாமே ஆட்சி செய்ய தொடங்கியபோது நமது நோக்கம் தெளிவாக இருக்கவில்லை. பின்னர் படிப்படியாக முன்னேற்றத்தை நோக்கி நாம் வேகமாக வந்ததற்கு நேரு முக்கிய காரணம். நேரு போன்ற தொலைநோக்காளர்கள் அல்லாமல் வேறு யாரேனும் நமது முதல் பிரதமர் ஆகியிருந்தால், நாமும் பிற்பட்ட நாடுகளின் பட்டியலில் தான் இருந்திருக்கவேண்டும்.

நம்முடன் சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளையும், நம்மை விட இப்போதும் பிற்பட்ட நிலையிலிருக்கும் பல பல நாடுகளையும் தான் நமக்கு சமமான ஒப்பீடாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதேகால கட்டத்தில் இதே தகவல் தொழில்நுட்ப சூழலில், ஏன் மற்ற நாடுகள் வளரவில்லை? நாம் மட்டும் எப்படி வளர்ந்தோம்? என யோசித்து பார்த்தாலே நாம் எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்திருக்கிறோம் என்பது புரியும்.

நேருவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு கிடைத்த ஆற்றல் மிக்க தலைவர் என்றால் என்னை பொறுத்தவரை அது ராஜீவ் மட்டும் தான்!

அவரது நடவடிக்கைகளின் பயனாக தான் இந்தியா வல்லரசு நாடுகளில் ஒன்றாக மிக குறுகிய காலத்திலேயே முன்னேறி இருக்கிறது என அடித்து சொல்ல முடியும்! அவரது காலத்தில் பதியமிடப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகள், கலப்பு பொருளாதாரம் போன்றவைகளின் பழங்களை தான் நாம் இப்போது அறுவடைசெய்துகொண்டிருக்கிறோம். உலகமெல்லாம் ஆடிப்போன பொருளாதார மந்த நிலையிலும், எல்லோரும் உதாரணம் காட்டும் அமெரிக்காவே தகர்ந்துபோன வேளையிலும் கம்பீரமாக நாம் நின்றுகொண்டிருந்ததற்கு, நாம் ஒவ்வொருவருமே ராஜீவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!

ஈராக் யுத்த காலத்தில் அப்போதைய அதிகாரமையமான அமெரிக்காவின் கோரிக்கையை கூட நிராகரித்து அணிசேரா கொள்கையுடைய இந்தியாவின் பெருமையை மேலும் ஆழமாக நிலைநாட்டி நம் பாரம்பரியத்தை காத்ததில் அவரது பங்கு என்னால் எப்போதுமே வியப்பாக நினைத்துப்பார்க்கப்படும் ஒன்று!

அவரது நோக்கங்கள் தெளிவானவை, முற்போக்கானவை, சீரிய அலசலுக்கு பின் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டவை. அவர் அவரை முறையாக விளம்பரப்படுத்திக்கொள்ளாததன் விளைவு தான், இப்போது அவரை பற்றி, சிற்சில அரசியல் தலைவர்களின் தவறான புரிதல்களுடனான பொய் பிரசார பிம்பம் மட்டுமேயாக நாம் அவரை புரிந்துவைத்திருக்க காரணம். 

இன்றைக்கும் இந்தியாவின் எந்த முக்கிய அரசியல் தலைவரும், எந்த எதிர்கட்சியும் கூட ராஜீவின் ஆட்சியையோ, அவரது அணுகுமுறையையோ விமர்சனம் செய்யாமலிருப்பதே அவரது வெற்றி!


உலக நாடுகளில் மிக குறைந்த காலகட்டத்தில் மிக அதிகமான வளர்ச்சியை அடைந்த நாடாக, உலகின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நட்பு நாடாக, இந்தியா இன்றைக்கு முகிழ்த்திருப்பதற்கு ராஜீவ் மட்டுமே காரணம்!

நீங்கள், நான் மற்றும் பலரும், தொழில்நுட்பத்திலும், தகவல் துறையிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் பெரும் வல்லமையுடன் உலக தொழிலாளர்களுடன் போட்டியிடக்கூடிய அளவிலே முன்னேறியிருப்பதற்கு அவர் மட்டுமே காரணம். அது காலமாற்றத்தால் இயல்பாக நடந்த ஒன்று என பலரும் சொல்வதுண்டு! அப்படியென்றால் அதே காலமாற்றமும் தொழில்நுட்ப முன்னேற்றமும் ஏன் மற்ற நாடுகளில் வரவில்லை? ஏன் பிற நாடுகள் பின் தங்கி போயின? ஏன் நம்முடன் சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கின்றன என்பதையெல்லாம் உங்கள் சிந்தனையே பதிலளித்துவிடும்!

தமிழகத்தை பொறுத்தவரை ராஜீவை பற்றி தெரிந்ததெல்லாம், அவர் ஈழத்துக்கு எதிரானவர் என்கிற பொய் பிரச்சாரமும் அதை சார்ந்த பிம்பமயமாக்கலும் மட்டும் தான்! ஆனால், அவரை பற்றி, ஈழ விஷயத்தில் அவரது அணுகுமுறை பற்றி, அவரது தொலைநோக்கு பற்றி, எல்லாம் முழுமையாக தெரிந்த யாருமே இதுவரை ராஜீவை விமர்சித்ததில்லை என்பதை ஆழ்ந்து யோசித்தாலே ஓரளவுக்காவது உங்களால் உண்மையை புரிந்துகொள்ளமுடியும்!

ஈழத்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சிமுறை, தமிழர்களுக்கு சம அந்தஸ்து என்கிற நோக்கத்தை நோக்கி அவரது திட்டங்கள் இருந்தன! அது கிட்டத்தட்ட வெற்றிபெறும் சூழலில் தான் அவர் அனாவசியமாக காரணமேயின்றி கொல்லப்பட்டார், அதுவும் நமது தமிழ்மண்ணில். 

எல்லா மாநில மக்களுடனும் எளிமையாக நெருங்கி பழகி வந்தாலும், தமிழகத்தின் மீது மட்டும் அவருக்கு எப்போதுமே நல்ல அன்பு இருந்தது. அதனால் தான் தமிழக மக்களுடன் பழகுகையில் மட்டும் பாதுகாப்பு முறைகளையெல்லாம் மீறி, இவர்கள் என் மக்கள் என அன்போடு எல்லோருடனும் எளிதாக கூட்டத்தில் கலந்துவிடுவார். அந்த அன்பையே ஆயுதமாக்கி அவரை பாதுகாப்பு வளையத்திலிருந்து தனித்துக்கொண்டுவந்து கொன்று மாறாத களங்கத்தை தமிழகத்துக்கு தந்து சென்றனர்!

அப்படி ஒரு காரியம் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், ஒருவேளை இந்தியா இப்போது நாம் சாதித்ததை விட மிக மிக அதிகமாக சாதித்திருக்கமுடியும் என்பது மட்டும் என்னை பொறுத்தவரை உறுதியான ஒன்று!

இன்றைக்கும் அவரது ஆட்சியை பற்றி நான் பிரமித்தபடி தான் இருக்கிறேன்! எப்பேர் பட்ட தலைவர் அவர்? இனி அவரை போல எல்லோராலும் விரும்பப்படும் தலைவர் அமைவது மிக கடினம்!

4 comments:

  1. அட வலையுலகில் ஒரு காங்கிரஸ்காரர்.

    ReplyDelete
  2. In what way India has progressed. More than 50% of the population under poverty line.Bribery and corruption are rampant in the country.Trillion people do not have roof above their head. Only
    politicians are amazed with country's wealth. Example Karunanithy
    and Italian lady Sonia.
    M.Baraneetharan.

    ReplyDelete
  3. I m also like Rajiv..

    ReplyDelete

Printfriendly