Monday, August 6, 2012

2012 - படமா பாடமா?


நேத்தைக்கு மதியானம் சன் டிவியில் 2012 படம் பார்த்தேன். அது படமா பாடமாங்கறதெல்லாம் வேறே.


2012 டிசம்பர் மாசம் 21ம் தேதிக்கு மேல மாயன் காலண்டரில் நாள் இல்லைன்றதை அடிப்படையா வெச்சு, அந்த நாளில் உலகம் அழிஞ்சிரும், பூமி வெப்பம் அதிகரிச்சு, சூடு தாங்காம, நிலநடுக்கம், எரிமலை சீற்றம், ட்சுனாமி ஆகியவற்றால் மொத்த உலகமும் பிளந்து நொறுங்கி அழிஞ்சிரும், அதிலிருந்து தப்பிக்க முக்கிய அரசியல்வாதிகள் செவ்வாய் கிரகத்துக்கு எல்லா இனங்களிலிருந்தும் (மனுஷன் / மிருகம்) சில சாம்பிள்களோடு தப்பிச்சு போறாங்கன்றது தான் படத்தின் கான்செப்ட்.
கதை. நான் அந்த படத்தை விமர்சனம் செய்யப்போறதில்லை. அந்த படத்தை பார்த்தப்புறம் எனக்கு என் மனசில் ஓடின விஷ்யங்களை மட்டும் இங்கே பகிர்ந்துக்க விரும்புறேன்!

ஏற்கனவே இந்து புராணங்களில், ஆழி பேரலையில் தொடங்கும் ஊழிக்காலம்னு ட்சுனாமிபற்றி சொல்லியிருக்காங்க. கிறித்துவமதம் கூட 2000ம் ஆண்டுகளில் இந்த உலகு அழியும்னு சொல்லியிருக்காங்க. பூமிமாதா வாயை பிளந்து எல்லாரையும் உள்ளே விழுங்கிருவான்னு கூட பல காலமா சொல்லப்பட்டு வந்திருக்கு. இதெல்லாமே யூகத்தின் அடிப்படையிலான புராண கதைகள் தான்.

ஆனா, உலகம் முழுக்க பரவலா இந்த மாயன் காலண்டரை நம்ப ஆரம்பிச்சிட்டாங்க. உலகம் அழிஞ்சுருமோன்ற பயத்தில் கூட்டு தற்கொலைகள் கூட பலர் அமெரிக்காவில் செஞ்சிருக்காங்க. அப்படி உண்மையிலேயே பூமி அழிஞ்சிருமா என்ன?

பூமி இப்போ கொஞ்சம் கொஞ்சமா அதிக சூடாயிட்டு வருது. அங்கங்கே நில நடுக்கம் வந்துட்டு தான் இருக்கு. ட்சுனாமி பசிபிக் பெருங்கடலில் தொடர்கதை. எரிமலை சீற்றங்கள் ஜப்பானிலும் வட அமெரிக்காவிலும் சாதாரண நிகழ்வு. இனி என்ன வித்தியாசமா வந்திரப்போவுது!


மரங்களை வெட்டி, நீர்நிலைகளை கொன்று, கட்டிடங்களை கட்டி, இயந்திரமயமாக்கல் மூலம் ஓசோனை கிழித்து நம்மால எனத் அளவுக்கு சீக்கிரமா உலகை சீரழிக்கமுடியுமோ அத்தனையும் செஞ்சு முடிச்சாச்சு. இமயமலை உருகி வட இந்தியாவில் பெரும் வெள்ளம், பருவ நிலை மாற்றத்தால், வளமான பூமி வறட்சியாகவும், வறண்ட பகுதிகளில் வெள்ளச்சீற்றமுமா உலகமே தலைகீழா மாறிப்போயிருச்சு. இந்த எல்-நினோ விளைவுகளால் கடல் அலைஓட்டங்களில் கூட பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கு.

இந்த வருஷம் தமிழகம் வறட்சியின் பிடியில் போகும்னு அறிக்கைகள் சொல்லுது. இந்த ஆடி மாசத்திலேயே பெரும்பாலான அணைகள் வறண்டு கிடக்கு. எல்லா ஆறுகளும் மணலாயிருச்சு. விவசாயம் கேள்விக்குறி ஆயிருச்சு. மழை இல்லை. அடுத்த வருஷம் குடிநீருக்கு என்ன செய்யப்போறோம்னு தெரியலை.


இந்த ஆங்கிளில் தான் அந்த படத்தில் சொல்லப்பட்ட, புவி வெப்பமாதலால் ஏற்படும் கொடும் விளைவுகளை நான் கற்பனை பண்ணி பார்க்கிறேன்.

மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக தான் இருக்கும், வாழ்வாதாரத்தத காப்பாற்றிக்கொள்வதற்காக தான் அது நடக்கும்னு கவிப்பேரரசு வைரமுத்து சொல்லியிருக்காரு. ஆனா அந்த அளவுக்கு எல்லாம் வாய்ப்பில்லை. அதுக்கும் முன்னாடியே புவி அதீத வெப்பமாகி வெடிச்சிரும், எல்லா பனிகளும் உருகிடும், நீர்நிலைகள் அளவுக்கு அதிகமா உயர்ந்து ஊருக்குள்ளே கடல்புகுந்திரும்னு பல பல அறிவியல் அறிக்கைகள் இருக்கு.

செவ்வாய் கிரகத்தில் நிலவில் எல்லாம் மனுஷன் வாழமுடியுமான்ற ஆராய்ச்சி பல காலமா நடந்துட்டு தான் இருக்கு. பூமி நிச்சயமா வெடிச்சிரும். அப்படியான ஒரு சூழலுக்கு முன்பு மாற்று வாழ்விடம் தேடும் முயற்சியா தான் அந்த ஆராய்ச்சிகளை 2012 படம் சித்தரிக்குது. ஒருவேளை அதெல்லாம் உண்மையா இருக்குமோ?

நாம் கொண்டாடிய நாகரீகமயமாக்கலின் விளைவுகளை நாம் அனுபவிக்கும் காலம் கனிந்து வந்திருக்கும் இந்த சூழலிலாவது, நாம் நம் தவறுகளை உணரவோ, திருத்திக்கொள்ளவோ முனைகிறோமா? இந்த உலகுக்கு நாம் என்ன நல்லது செய்துவிட முடியும் என  சிந்திக்கவாவது செய்கிறோமா? இந்த புவி வெப்பமயமாதலை நம்மால் இனி நிறுத்தமுடியாது, ஆனால் அட்லீஸ்ட் அதை குறைப்பதற்காகவாவது நாம் எதையாவது செய்ய முடியுமா என ஆராய்கிறோமா? இது போன்ற கேள்விக்கெல்லாம் இல்லை என்கிற பதில் தான் வந்து தொலைக்கிறது.

எல்லோருடைய கவலையும் தன்னை சார்ந்த, தன் குடும்பத்தை சார்ந்த கவலைகளாக சுருங்கிருச்சு. 

உலகம் 21-12-2012 ல் அழிஞ்சிரும்னு செய்தி வந்தா கூட, இணைய வெளிகளில், அப்போ ஜனவரியில் சாலரி கிரெடிட் ஆகாதான்னு கவலைப்படுற மனுஷங்களை தான் பார்க்கவேண்டியிருக்கு.

அவனவன் கவலை அவனவனுக்கு!

1 comment:

  1. நல்ல படைப்பு சதீஷ். 2012 -இல் உலகம் அழிகிறதோ இல்லையோ, கூடிய விரைவில் நடக்க வாய்ப்பு உள்ளது. எல்லாம் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இயற்கைக்கு எதிரான நாம் எடுத்துள்ள அனைத்து முயற்சிகளுமே இதற்கு காரணமாக சொல்ல முடியும்.

    ReplyDelete

Printfriendly