Friday, August 31, 2012

ஊர்சுற்றியின் உணவனுபவங்கள்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (குறள் 942)

வள்ளுவர் சொல்லிட்டாரு. ஆனா எது அற்றது எது உற்றதுன்னு ஆராய்ச்சி பண்ணி சாப்பிடுற நிலமையிலயா நாம இருக்கோம்? நாக்கு தான் நமக்கு ஃபர்ஸ்ட் பிரஃபரன்ஸ். மத்ததுக்கு தான் நிறைய டாக்டருங்க இருக்காங்களே? அவங்க பாத்துப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!
எனக்கு சின்ன வயசிலிருந்தே பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடு தான். அப்போ நான் கோவையில் இருந்தேன். சாயிபாபா கோவில் பக்கத்தில் லக்ஷ்மி உணவகம்னு ஒரு சின்ன ஓலை கடை இருக்கும். அதில் தான் எனக்கு குஸ்காவும் புரோட்டாவும் அறிமுகம் ஆச்சு. எங்கப்பாகூட சாயந்தர நேரத்தில் அவருக்கு ஹெல்பரா அவர் வேலை செஞ்ச கம்பெனியிலேயே வெல்டிங் அடிச்சிட்டு இருப்பேன். ஓவர் டைம் சமயங்களில் சேரன் டிப்போ எதிர்ல இருந்து இட்லியும் காரசட்னியும் கம்பெனிக்கு  வரும்.

கொஞ்சம் வளர்ந்தப்புறம், கோவை காந்திபுரம் ஸ்ரீகிருஷ்ணா லஞ்ச் ஹோம் (அழகு பார்மசி கீழே) தான் என் லஞ்ச் ஏரியா. அங்கே ஒரு ஊத்தப்பம், நடுவில் முந்திரி எல்லாம் போட்டு, புதினா தூவி, மல்லி சட்னியோட கொடுப்பாங்க. செமெ! (இப்போ அந்த கடையோ, அந்த மெனுவோ இருக்கான்னு தெரியலை)1992ல சென்னைக்கு வந்தேன் சென்னை வந்ததுமே எனக்கு முதலில் வந்த ஆசையே புரசைவாக்கம் வெல்கம் ஹோட்டலுக்கு போகணும்னு தான். அங்கத்த இட்லி சாம்பார் அவ்வளவு சூப்பரா இருக்கும்னு சொல்ல கேள்வி பட்டிருக்கேன். அதை விட முக்கியமானது, சென்னையிலேயே காலை வேளையில் சூப்பரான சேமியா பால் பாயசம் அந்த ஒரு ஹோட்டலில் தான் கிடைக்கும்ன்றது. இந்த ரெண்டு விஷயத்துக்காகவும் அங்கே அடிக்கடி போவேன்.

சென்னை வர்ற வரைக்கும் பூரி, சப்பாத்தி மாதிரியான ஐட்டங்களில் மேல அப்படியொண்ணும் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. "பார்றா.. இது தான் பூரி.. சாப்பிடு"ன்னு வெல்கம் ஹோட்டலில் சாப்பிட்டது தான்.. இன்னிவரைக்கும் நான் பூரிக்கு அடிமையாயிருக்க காரணம்.
இட்லி சாம்பார்னா எனக்கு மூணு ஹோட்டல் தான் நினைவு வருது. சென்னையில் வெல்கம் ஹோட்டல் (இங்கே உடுப்பி ஸ்டைல் சாம்பார்), ரத்னா கஃபே & கோவையில் ஆர்.எச்.ஆர் (இந்த ரெண்டிலுமே தமிழ்நாடு ஸ்டைல் சாம்பார்)

தோசையை பொறுத்தவரை ஊர் ஊரா போயி எத்தனை தோசை சாப்பிட்டாலும், மனசில் இன்னமும் நீங்காம இருக்கிறது, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ரவிங்கறவர் நடத்துற சின்ன ஹோட்டலின் ரோஸ்டு (சென்னையில் ஸ்பெஷல் சாதான்னு சொல்லுவாங்க) தான் நல்ல பெரிசா, நைசா, மொறுமொறுன்னு கருகாம சூப்பரா போட்டு தருவாரு.

முதல் முதல் பெங்களூர் போனப்போ, மெஜஸ்டிக் எதிர்ல ஒரு ஹோட்டலுக்கு போயி மசாலா தோசை கேட்டேன். நம்ம ஊரில் கல்தோசை/ஊத்தப்பம் போடுற மாதிரி சும்மா ட்யூரோபிளக்ஸ் மெத்தை ரேஞ்சுக்கு கனமா போட்டு கொண்டு வந்தாங்க. அதோட பெங்களூரில் தோசை சாப்பிடறதை நிறுத்திட்டேன் (முதல் கோணல் முற்றும் கோணல்)

எந்த ஓட்டலுக்கு போனாலும், அந்த மெனு கார்டை ஃபுல்லா மனப்பாடம் பண்ணிட்டு அல்லது அந்த சப்ளையரை முழு மெனுவையும் மனப்பாடமா ஒப்பிக்க சொல்லி கேட்டு ரசிச்சிட்டு, கட்ட கடைசியில் ஒரு பிளேட் இட்லி, ஒரு காபின்னு கடுப்படிக்கிற பொது வழக்கம், எனக்கும் முதலில் இருந்தது. என் முன்னாள் மேனேஜர் சொல்லுவாரு, ஓட்டலுக்கு போனா, நாம அடிக்கடி சாப்பிடாத (சாப்பிட வாய்ப்பில்லாத) ஐட்டங்களா ஆர்டர் பண்ணனும்னு. ஓ.. இது தான் சீக்ரெட் ஆஃப் ஆர்டரிங்கான்னு தெரிஞ்சு அன்னைக்கே ரூட்டு மாறியாச்சு. இப்பவும் ஓட்டலுக்கு போனா, எந்த வழக்கமான உணவையும் (பூரி தவிர!) ஆர்டர் செய்யுறதில்லை.

ஆழ்வார்பேட்டையில் சச்சின் கா தாபாவில் அன்லிமிட்டடு நார்த் இண்டியன் டிஷ்சில் ஆரம்பிச்சது என் வித்தியாசமான உணவு ருசிக்கும் வேட்டை.அது எந்த ஓட்டலுக்கு போனாலும், நார்த் இண்டியனாவே என்னை ஆக்கிருச்சு.

நான்-வெஜிடேரியன் ஐட்டத்தில் நான் பிரியாணிக்கு ரொம்ப ரொம்ப அடிமை. அதிலும் சிக்கன் விஷயத்தில் சிக்கனமே பார்க்கிறதில்லை. உலகத்தில் எத்தனையோ பறவைகள் இருக்கு. ஆனா கோழி தான் சாப்பிட டேஸ்டுன்னு கண்டுபிடிச்சானே, அவன் செம ரசனைக்காரனா இருந்திருக்கணும்.

சென்னை அண்ணாநகர் ஹாட்சிப்ஸ் எதிரில் HDFC Bank ATM பக்கத்து ரோட்டில் போயி ரைட் எடுத்தீங்கன்னா, அதில் அமலா மெஸ்னு ஒரு சின்ன கடை வரும். அது ஆக்சுவலா ஒரு வீடு. அதை ஹோட்டலா மாத்தியிருக்காங்க. அது என் வழக்கமான பிரியாணி ஸ்பாட். நாட்டு கோழி பிரியாணி அங்கே ரொம்ப பிரசித்தம். அது தவிர, அண்ணாநகர் கிழக்கில், KLN Auto பக்கத்தில் செனபெல் னு ஒரு ஹோட்டலிலும் பிரியாணி நல்லா இருக்கும். செனபெள்ள பார்சல் வாங்குற கூட்டம் தான்  இருக்கும், எப்பவுமே. முன்னெல்லாம் நாம வண்டி கட்டிட்டு டவுனுக்கு போயி சாப்பிடுவோமே அந்த மாதிரி காறேடுத்துட்டு செனபெல் வந்திருவாங்க போல.

என்ன தான் பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டு பெருமை அடிச்சிகிட்டாலும், எனக்கென்னவோ, சின்ன சின்ன ஹோட்டல்களில் கிடைக்கிற ருசியும் ஆதம திருப்தியும் பெட்டரா இருக்கிறாப்ல ஒரு ஃபீலிங். பிராட்வே மினர்வா தியேட்டர் பக்கத்தில் (பழைய கொத்தவால்சாவடி ஏரியா) பிளாட்பாரத்தில் டெண்ட் கட்டி தட்டு சோறு வித் மீன் கொழம்பு (மீன் வறுவல் எக்ஸ்டிரா!) கொடுப்பாங்க. 15 ரூபாய்க்கு சொர்க்கம்! வேலு  ஹோட்டல்ல 70 ரூ கொடுத்து சாப்பிட்டா கூட அந்த திருப்தி கிடைக்காதுன்னு நினைப்பேன்

'ரோட்டோர இட்லிக்கடையில் சாப்பிடாதே, அது அவ்வளவு சுத்தமா செய்யமாட்டாங்க'ன்னு ஒரு தப்பான அபிப்பிராயம் என் நண்பர்களுக்கு இருக்கிறதால், அந்த மாதிரியான ஓட்டல்களில் சாப்பிட்டு முடிச்சதுமே, என்கிட்டே இந்த மாதிரி ஓட்டலில் எல்லாம் சாப்பிடக்கூடாதுடான்னு அட்வைஸ் பண்ணுவாங்க! ஆனா, எனக்கு அதில் கொஞ்சம் குதர்க்கமான கருத்து இருக்கு.

பெரிய பெரிய ஓட்டல்களில் இருக்கும் கிச்சனை நாம பார்க்க முடியாது. அங்கே என்ன மாதிரி சுத்தம் இருக்கு, என்ன மாதிரி பாத்திரங்களை சுத்தப்படுத்துறாங்க எதுவுமே நமக்கு தெரியாது! ஆனா ரோட்டோர கடைகளில் நாம எதிர்லயே நிக்கிறதால், ரொம்ப சுத்தமா வெச்சிருப்பாங்க, தட்டு பாத்திரமெல்லாம் அப்பப்பவே கழுவிக்குவாங்க, அதுக்குன்னே ஒரு ஆள் வெச்சிருப்பாங்க. நம்ம கண் முன்னாடியே சுட்டு தருவாங்க. ஓல்டு ஸ்டாக் பிரச்சனையே இருக்காது. ஒவ்வொரு உணவு மாற்றத்திலும் கையை கழுவிக்குவாங்க. அந்த தார்மீக பயம், நாம என்ன நினைப்போமோன்ற அக்கறை எல்லாம் பார்க்கும்போது, எனக்கென்னவோ ரோட்டு கடை கொஞ்சம் பாதுகாப்பாவும் நம்பிக்கையாவும் படுது. (இப்போ சில பெரிய ஓட்டல்களிலும் இந்த சைக்காலஜியை மனசில் வெச்சு ஓப்பன் கிச்சன் கொண்டு வந்திருக்காங்க. சமைக்கறதை நாம பார்க்க வசதி இருக்கு!)

சென்னை அண்ணாநகரில் ஹாட்சிப்ஸ் கடைக்கு ஒட்டின மாதிரியே ஒரு சின்ன பிளாட்பார கடை  இருக்கு. கார்த்திக் டிபன் செண்டர்னு பேரு. அதில் வர்ற கூட்டம், ஹாட்சிப்ஸுக்கு வர்றதை விட அதிகமா தெரியும்! அதே மாதிரி தி.நகர்ல நடேசன் பார்க் பக்கத்தில் ஒரு சின்ன கடையில் கிடைக்கும் பொடி தோசை மாதிரி வேறே எங்கேயும் சுவையா நான் அதை சாப்பிட்டதேயில்லை


ஒரு தடவை லாரியில் தூத்துக்குடிக்கு போனேன். திருச்சி, மேலூரெல்லாம் தாண்டி கொஞ்ச தூரம் போனதும் லாரியை ஒரு சின்ன குடிசை கிட்டே நிறுத்தினாங்க. அதில் தான் காலை டிபன். ரொம்ப ரொம்ப சீப்பா இருந்தது. சின்ன சின்னதா தோசை இட்லி வடைன்னு ஒரு சின்ன குடும்பமே சமைச்சு போடுறாங்க, அதுவும் சல்லிசான விலையில. வீட்டில் சாப்பிட்ட திருப்தி வேறே.

அதே போல மதுரை அண்ணாநகர் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு ஓட்டலில் ரொம்ப ரொம்ப சீப்பா சாப்பாடு தர்றாங்களாம். வெறும் 6 ரூபாய்க்கு சாதம், கொழம்பு, பொரியல், ரசம் எல்லாம் சேர்த்த வீட்டு சாப்பாடு. பல வருஷமா அதை செஞ்சிகிட்டு இருக்காங்களாம். ஒவ்வொரு தடவை மதுரை போகும்போதும் அங்கே போக நினைப்பேன், முடியாம போயிருது. அடுத்த தடவை அங்கே போயிரணும்.

அதே மாதிரி, கயத்தாறு பைபாஸ் கிட்டே ஒரு ஓலைக்கடை பார்த்தேன். போர்டு தான் ரொம்ப பிடிச்சது. “ஓட்டல் ஐயனார் – சுத்த அசைவம்”.


கேரளாவில் பயணம் செஞ்சா எனக்கு பெரிய பிரச்சனையே இந்த உணவுகள் தான். மதியம், நைட்டு ஓக்கே.. நான் வெஜ் சாப்பிட்டுக்குவேன். ஆனா காலங்காத்தால நான் வெஜ் சாப்பிட எனக்கு எப்பவுமே பிடிக்கறதில்லை. ஆனா, அங்கே காலையிலேயே புட்டு கடலைக்கறி இல்லைன்னா பரோட்டா & கறிக்கொழபு தான் தருவாங்க. நல்லகாலத்திலேயே நான் புட்டு சாப்பிடுறதில்லை. வறவறன்னு தொண்டையை அடைச்சமாதிரி, ரொம்ப கஷ்டம். அந்த கடலையை மெல்றதை விட சும்மா இருக்கலாம்னு தோணும். அதனால் கேரளா பயணத்தில் பெரும்பாலும் நான் காலைல பட்னி தான் கிடக்கறது!
சாயந்தர நேரத்தில் சென்னையில் எந்த டீக்கடை போனாலும் பஜ்ஜி வித் தேங்கா சட்னி கிடைக்கும். மத்த ஊர்களில் எப்படின்னு தெரியலை. தினசரி பஜ்ஜி & டீ இல்லாம கழிஞ்சதே இல்லை. ஆனா பூனே வந்தப்போ வித்தியாசமான காட்சி பார்த்தேன். இங்கே ஸ்னேக்ஸுக்கு பதிலா ரொட்டி  துண்டுகளை சாம்பார்ல முக்கி சாப்பிட்டு இருக்காங்க! எப்படிய்யா சாப்பிடுறாங்கன்னு ஆச்சரியமா இருக்கும். (அவங்க நம்மளை பார்த்து ஆச்சரியப்படுவாங்களோ என்னமோ?)

பஞ்சாபில் லுதியானாவுக்கு போனப்போ ஒரு கடையில் சாப்பாடு கிடைச்சது. சாம்பாரை லைட்டா ஊத்தி பிரட்டி சாப்பிட்டிட்டிருந்தேன். கூட வந்த கிளையண்டு என்னை வித்தியாசமா பார்த்தாரு. அங்கேயெல்லாம், சாம்பாரை மொத்தமா கொட்டி, சாப்பாட்டை அதில் மிதக்கவிட்டு கிட்டத்தட்ட கரைச்சு குடிப்பாங்களாம். நாம இங்கே ரசத்தில் தான் அதை செய்வோம்னு சொன்னேன்.

ஹைதிராபாத்தில் பெரும்பாலும் நான்வெஜ் ஹோட்டல்கள் தான். நான் கொண்டாப்பூரில் வசிச்சிட்டு இருந்த சமயம், நல்ல தமிழக ஓட்டலுக்கு தேடிய தேடல்கள் தனி கதை. கடைசியில் கொண்டாப்பூரிலேயே அப்போலோ கிளினிக் எதிர் ரோட்டில் ஒரு சின்ன சந்துக்குள் தமிழ்நாடு ஓட்டல்ங்கற பேரில் ஒரு தஞ்சாவூர் காரர் முழுக்க முழுக்க தமிழக உணவுகளை கொடுத்துட்டு இருக்காருன்னு ஒரு ஆட்டோக்காரர் மூலமா தெரியவந்தது. ரெண்டு சந்தோஷம். ஒண்ணு தமிழக உணவு வகை கிடைச்சது. ரெண்டு, தமிழ் பேச ஆள் கிடைச்சது.

இன்னும் பல ஊர்கள் பல உணவகங்கள் பல உணவுகள் பத்தி எழுதிட்டே போகலாம் தான். ஆனா அதுக்கு இந்த இடம் பத்தாது.

சாப்பிடறதுக்கு தான் கணக்கு பார்க்கக்கூடாது, ஆனா எழுதுறதுக்கு கணக்கு பார்க்கணுமில்லே?3 comments:

 1. ஹா ஹா.. அருமையான பதிவுங்க.. நிறைய தகவல்களை கொடுத்திருக்கீங்க.. நிறைய ஊர் சுத்தி இருக்கீங்க போலிருக்கு! நன்றி!

  நான் சென்னையில் 4 வருடம் வசித்தும், நீங்கள் கூறிய ஹோட்டல்கள் எனக்கு தெரிந்ததே இல்லை என வருத்தமாக இருக்கிறது.. இப்போதூ வெளியூரில் இருக்கிறேன், உங்கள் பதிவை சேமித்து வைத்து சென்னைக்கு திரும்பும் போது ஒரு சில இடங்களாவது செல்ல முயல்வேன்..

  //பதிலா ரொட்டி துண்டுகளை சாம்பார்ல முக்கி சாப்பிட்டு இருக்காங்க! எப்படிய்யா சாப்பிடுறாங்கன்னு ஆச்சரியமா இருக்கும். //

  நீங்க பாவ் பாஜியை சொல்றீங்கன்னு நினைக்கிறேன், அது சாம்பார் இல்ல, பாஜி எனும் ஒருவித காய்கறி மசாலா (உருளை, வெங்காயம், தக்காளி...)
  நல்லா இருக்கும், அடுத்த முறை ட்ரை பண்ணுங்க.. வடா பாவ் என்று ஒரு டிஷ் அதுவும் புனேவில் பேமஸ், சாப்பிட்டு பாருங்க!! :))

  ReplyDelete
 2. நல்லாதான் ஊர்சுத்திச்சுத்திச் சாப்பிட்டு இருக்கீங்க!!!!

  சின்ன வயசு. கல்லைத்தின்னால்கூட ஜீரணம் ஆகிரும் என்பதால் பிரச்சனை ஒன்னும் இல்லை போல்!

  நல்லா இருங்க.

  ReplyDelete
 3. manushana iruntha yethaavathu oru rasanai irukannum athukku neenga thaan oru uthaaranam

  ReplyDelete

Printfriendly