Sunday, December 13, 2009

தெலுங்கானா - விளைவுகள்!


தெலுங்கானா தனி மாநிலம் தேவை என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தாலும், அதனை ஏற்றுக்கொள்கிற, அப்படி ஒரு தனி மாநிலம் அமைக்கின்ற முடிவினை மத்திய அரசு இதுவரை எடுக்காமலேயே இருந்துவந்தது...

முன்பு இந்திரா ஆட்சியில் இந்த போராட்டம் பெரும் அளவிலே வளர்ந்து, அதனை ஒட்டுமொத்தமாக, கடுமையாக ஒடுக்கி, தெலுங்கானா போராட்டம் என்பதை பிசுபிசுக்க செய்தார்.... 

இப்போது, ஆந்திராவில் நிலவும் குழப்பமான சூழ்நிலையும், வலுவற்ற அரசும் சந்திரசேகர் ராவுக்கு வசதியாக போயிற்று... சரிந்திருந்த தனது செல்வாக்கை மீட்டெடுக்க பந்தலை தட்டி உண்ணாவிரதம் இருந்து பதினோரு நாளில் சாதித்தே விட்டார்!  இந்த உண்ணாவிரதத்தை காரணமாக வைத்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு, கலவரம், வன்முறை என்று அவரது ஆதரவாளர்கள் கட்டுக்கடங்காமல் போயினர்.

மத்திய அரசு, புதிய மாநிலம் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு ஆவன செய்யும் என்று அறிவித்து, சந்திரசேகர் ராவின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது!

இந்த வெற்றியை சந்திரசேகர் ராவ் கொண்டாடி மகிழும் வேளையில் அடுத்தடுத்த பிரச்சனைகள் முளைக்க துவங்கின.... 

ஹைதிராபாத் இப்போது மாநில தலைநகராக இருக்கிறது... புதிய மாநிலம் பிரிக்கப்பட்டால் ஹைதிராபாத் எந்த மாநிலத்தை சாரும்?? அல்லது தனியாக சந்திகார் போல இரு மாநிலங்களுக்கான தலைநகராக இருக்குமா???  ஆந்திராவுக்கு விஷாகபட்டினத்தை தலைநகராக ஆக்கலாமா?? என்பன போன்ற ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஒரு புறம்....

தெலுங்கானாவை பிரித்து தந்தது போல, எங்களுக்கு ராயல சீமாவை பிரித்து கொடுங்கள் என்று ஆந்திராவிலேயே இன்னொரு குழு போராட்டம் அறிவித்து, அப்படி அமையும் ராயல சீமா மாநிலத்தில் தமிழகத்தில் இருக்கும் வேலூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களை சேர்த்து அந்த புதிய மாநிலங்களை அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கையும், தமிழகம் தான் சதி செய்து ஆந்திராவின் புகழை கெடுக்கும் விதமாக தெலுங்கானா மாநிலம் உதயம் ஆவதை ஆதரிக்கிறது என்கிற அதீத குற்றச்சாட்டு கற்பனையின் பேரில், சென்னைக்கு குடிநீர் தரும் கிருஷ்ணா நீரை நிறுத்துவது போன்ற ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது...

இதையெல்லாம் விட... தேசிய அளவிலே புதிதாக பதினோரு மாநிலங்கள் அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையும் ஆங்காங்கே பல்வேறு குழுக்களால் எழுப்பப்பட்டு போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் ஆர்ப்பாட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டு செவ்வனே நடைபெற்று கொண்டு இருக்கின்றது!

இவ்வாறான சூழலில் மத்திய அரசு செய்வதறியாது திகைத்து நிற்பது ஒரு புறம்... ஆனால் முட்டாள் தனமாக பிரணாப் முகர்ஜி போன்ற மூத்த தலைவர்களே "தெலுங்கானா அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை.. மற்ற மாநிலங்கள் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை" என்று சொல்லி இருப்பது பிரச்னையை தீவிரப்படுத்தி உள்ளது.

போராட்டம் என்று துவக்கப்பட்டாலே, அதனை பேச்சுவார்த்தை மூலமாகவோ, கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ முடிவுக்கு கொண்டு வர முனைந்திருக்கவேண்டுமே அல்லாமல் பணிந்து செல்வது என்பது மத்திய அரசுக்கு அழகல்ல!

No comments:

Post a Comment

Printfriendly