வைரமுத்து!
இந்த பெயர் எனக்கு அறிமுகம் ஆனது எனது எட்டாம் வகுப்பில்... தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தேடி தேடி கவிதைகள் படித்து கொண்டிருந்தேன்! மேத்தா, அப்துல் ரஹ்மான் என்று போயின ஆர்வ நதி!
எனது ஆசிரியர்களுள் ஒருவர் அறிமுகம் செய்த பெயர்.. வைரமுத்து...
முதலில் என் கைக்கு வந்த புத்தகம் "வைகறை மேகங்கள்".. பின்னாளில் தான் தெரிந்தது.. அது தான் அவரின் முதல் நூல் என!
கோவை விஜயா பதிப்பகமும், சென்னை ஹிக்கின் பாத்தம்சும் எனக்கு எல்லா வைரமுத்து புத்தகங்களையும் சந்தைப்படுத்தி சந்தோஷப்படுத்தியது...
சென்னைவந்தபோது இருந்த ஒரே ஒரு பேராசை, எப்படியாவது வைரமுத்துவை தூர தரிசனம் செய்ய வேண்டும் என்பது!
விலாசம் விசாரித்தறிந்து எனது கவிதை தொகுப்புக்களை கக்கத்தில் இடுக்கியபடி, வடபழனி வரை சென்று திரும்பிவிட்டேன்... "இதுவரை நான்" தொகுப்பில் அவர் கண்ணதாசனை காண சென்ற அனுபவம் கண நேரம் கண்முன் வந்து தொலைத்தது!
அவரது பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்தையும், அதில் எனது ஆரவத்தையும் சின்னதாய் கவிதைப்படுத்தி அனுப்பினேன்! விஜயனின் வில்லில் இருந்து விருட்டென்று வருவது போல, உடனடியாக வந்தது, வைரமுத்து அவர்களின் பதில் மடல்!
பாஸ்கரனின் அந்த வித்தியாசமான தமிழ் எழுத்துக்கு நான் கிட்டத்தட்ட சரண்! எழுதி எழுதி பழகி பார்த்து தோற்ற எழுத்துரு அது! அந்த முதல் கடிதம் தான் ஆண்டுகள் ஆயினும் ஆழிமுத்தாய் என் அலமாரிகளில் இருக்கிறது.. அவற்றோடு அவரது
இன்னும் பல கடிதங்களும்....
இந்த கடிதத்துக்கு பின், சில முறை அவரை நேரில் கண்டு உரையாடும் வாய்ப்பும், தொடர்ச்சியான கடித தொடர்பும் பெற்றேன்....
குமுதம் இதழுக்காக அவரை பேட்டி எடுக்கும் ஒரு அரும் வாய்ப்பை எனக்கு அவர் நல்கியபோதிலும், எனது பணி சுமை காரணமாக அதனை இழக்க நேர்ந்தது எனக்கு...
தொடர்ச்சியாக அவரது நூல் வெளியீட்டு விழாக்களுக்கு எனக்கு தவறாமல் வந்து கொண்டிருந்தது அழைப்பு! தமிழுக்கு நிறம் உண்டு தொடங்கி பெய்யேன பெய்யும் மழை வரை எல்லா நூல் வெளியீட்டு விழாவுக்கும் வந்த அழைப்பின் பயனாக அந்த நூல்கள் வெளியாகும் தினத்தில், அந்த நூலின் சில கவிதைகளை வைரமுத்து வாயாலேயே மொழிய கேட்கும் பெரும் வாய்ப்பு பெற்ற சிலருள் நானும் இருக்க நேர்ந்தது...
போதும்!
முன்பே சொன்னது போல, எனது பெரும் பேராசையே.. அவரை தூர நின்று தரிசிப்பது மாத்திரம் தான்! ஆனால் அவரை சந்தித்து, உரையாடி, அவரது நினைவில் நானும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் நிலை வரை சென்றபின்.. முக்தி அடைந்தது என் முதிர்ந்த மனது!
இப்போதும் அவரை தரிசிக்கிறேன்... தூர நின்று... அவரது சொல்லழகு சொட்டும் கவி வரிகளை சொக்கி சொக்கி படித்து, சொட்ட சொட்ட நனைந்து...
எத்தனையோ பாடல்களை அவர் படைத்து இருந்தாலும், ஒரு பாடலாசிரியராக அவரை காண்பதை விடவும், ஒரு கவிஞனாக, படைப்பாளியாக அவரை காணவே நான் விரும்புகிறேன்! கிடைத்த வாய்ப்புக்களில் பாடல்களுக்குள்ளும் நல்ல கவிதையை நூற்று தந்தவர் அவர்!
கலீல் ஜிப்ரானை பற்றி அவரது நூல் தான் எனக்கு அறிமுகம் செய்தது... "முறிந்த சிறகுகளை" தேடி அலைவதற்கு அவரது "எல்லா நதியிலும் என் ஓடம்" ஒரு காரணம். உலக மொழிகளின் உன்னத கவிதைகளை எல்லாம் மொழி பெயர்த்து சொல்லியது அந்த நூல்!
ஓரளவு என்னை நானே பக்குவப்படுத்தி கொண்டதற்கு "சிகரங்களை நோக்கி" ஒரு காரணம்..
யாப்பிலக்கணத்தில் எனக்கிருந்த சிறு சிறு குறைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கு அவரது "என் பழைய பனை ஓலைகளும்"; "ரத்த தானமும்"; "வைகறை மேகங்களும்" காரணம்...
இப்படி அவரது முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களும் எதோ ஒரு வகையில் எனக்கு நன்மை செய்தவையே!
எப்போது அவரை சந்தித்தாலும், எப்போது அவரது கடிதங்களுக்கு பதில் எழுதினாலும், கேட்கும் ஒரே கேள்வி இப்போதும் கேட்க தோன்றுகிறது....
"இது வரை நான்" இரண்டாம் பகுதி என்ன ஆயிற்று???
பகிர்விக்கு நன்றி தோழரே
ReplyDelete"இது வரை நான்" போலவே நான் பெரிதும் எதிர்பார்ப்பது 'இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்' 2ம் பாகத்தையும்...
ReplyDelete