பார்க்க பார்க்க சலிக்காத விஷயங்கள் யானை, ரயில், குழந்தை என்கிற வரிசையில் கடலும் உண்டு!
அப்படி ஒரு சலிக்காத ரசனையோடு இன்றைக்கு கடல் கண்டு கொண்டு இருந்தேன். எங்கெங்கு காணினும் நீர் நிலை! ஓயாத அலைகள்! நுரைத்து சிரிக்கும் கடல் நீளமாக விரிந்து கிடக்கிறது!
கடல் கண்டு கொண்டு இருக்கும்போது மனதை கட்டு படுத்த தெரியவில்லை... இயற்கையை ரசிக்கும்போது அறிவை முடக்கி வைக்கவேண்டும் என்பது எவ்வளவு சொன்னாலும் மனதில் ஏறுவதில்லை...
இவ்வளவு தண்ணீர் இருக்கிறதே... இதனால் என்ன பிரயோஜனம் என்கிற யோசனை வளர்ந்து பெரிதாக துவங்கியது!
ஒரு பக்கம் நம் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாக குறைந்துவருகிறது; தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் அதை விட வேகமாக வளர்ந்து இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலத்தடி நீரையும் உறிஞ்சி வருகிறது; ஆறுகள் எல்லாம் மெல்ல மெல்ல காலாவதியாகி வருகிறது;
இன்னொரு பக்கம் உலகம் வெப்பமயமாவதன் காரணமாக இமையம் போன்ற பனிமலைகள் உருகத்துவங்கி வட மாநில நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கடலில் கலந்துகொண்டு இருக்கிறது; கடல்மட்டம் இன்னும் இரண்டடி உயருமானால் கடலோர நகரங்கள் மூழுகும் என்கிற அபாய எச்சரிக்கை ஓலம் கேட்கிறது.
இரண்டுக்குமான ஒரே தீர்வாக பெரும்பாலானோர் முன் வைப்பது கடல் நீரை குடிநீராக்கும் / நன்னீராக்கும் திட்டம்!
(சென்னைக்கு குடிநீர் தேவையை தீர்த்து வைக்கும் நீராதார மையங்கள்)
அளவில்லாமல் இருக்கும் கடல் நீரை நன்னீராக மாற்றி தொழிற்சாலை தேவைக்கும், விவசாய தேவைக்கும் பயன்படுத்தினால், நிலத்தடி நீரின் உபயோகத்தை குறைக்க முடியும். கடல் நீரை குடிநீராகவே மாற்றி பயன்படுத்த முடியும் என்று பல நாடுகளும் நிரூபித்து இருக்கின்றன. எனினும் தமிழகத்தில் அதனை எவ்வளவு தூரம் ஏற்று கொள்வார்கள் என்பது தெரியவில்லை. அதனால் தொழிற்சாலைக்கும் விவசாயத்துக்கும் கடல் நீரை பயன்படுத்துவது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
சென்னை, கோவை, திருச்சி, ஹோசூர், மதுரை, கடலூர், தூத்துக்குடி ஆகியவை தமிழகத்தின் தொழில் நகரங்களாக இருக்கின்றன. இதில் சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களுக்கு தொழிற்சாலை தேவைக்காக கடல் நீரை பயன்படுத்தலாம்.
நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாய தேவைக்கும் கடல் நீரை பயன்படுத்தலாம். இதன் மூலம் காவிரியை நம்பி மட்டுமே விவசாயம் என்கிற நிலை மாறும். உப்பு நீர் ஆயிற்றே என்கிற தயக்கம் விவசாயிகள் மத்தியில் கொஞ்சம் இருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் ஏற்கனவே விவசாயத்துக்கு கடல் நீரை நன்நீராக்கி தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். எனவே "திட்டமிட்ட சாகுபடிக்கு", கடல் நீர் மிகுந்த உபயோகமாகவும் எப்போதும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
இதன் மூலம், கடலில் கலக்கும் உபரி நீரை மிகுதியான அளவில் நாம் பயன்படுத்திக்கொள்ள்வதன் மூலம், கடல் நீர் மட்டத்தை கட்டுப்படுத்தி வைக்கவும் முடியும், கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தை குறைக்கவும் முடியும், நிலத்தடி நீரின் உபயோகத்தை குறைக்கவும் முடியும். இது ஒரு வகையில் பல்நோக்கு திட்டம்.
தமிழகத்தை பொறுத்தவரை இது போன்ற ஒரு கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. சென்னை மெரீனாவில் டீம் நிறுவனம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை சில காலம் செயல்படுத்தி வந்தார்கள்.. என்ன காரணத்தாலோ அது திடீரென நிறுத்தப்பட்டது.
(மீஞ்சூரில் கட்டப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் - மாதிரி வரைபடம்)
மத்திய அரசு சார்பில் சென்னைக்கான குடிநீர் தேவைக்காக மீஞ்சூரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக நிதி ஒதுக்கியபோதும், அப்போதிருந்த தமிழக அரசு அந்த திட்டத்தை நிராகரித்ததன் காரணமாக முடங்கியது. பின்னர் வந்த இப்போதைய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்தி திட்டம் பயன் தரும் நிலையிலே இருக்கிறது.
இது தவிர மாமல்லபுரம் அருகே நெமிலியில் இன்னொரு நன்னீராக்கும் திட்டமும் தொடங்கப்படவிருக்கிறது! மேலும் கல்பாக்கம் அணுமின் திட்டம், கூடங்குளம் அணுமின் திட்டம், எண்ணூர் அனல் மின் நிலையம், சென்னை பெட்ரோலியம் நிறுவனம் போன்றவைகள் மூலமாக சில கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அவை அந்த அந்த நிறுவனங்களின் நீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இவை போதாது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திற்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்து கடல் நீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சி பயன்படுத்தினால் தான் தமிழகம் தப்பிக்கும் என்பது தான் இப்போதைய நிலை.
சென்னை, மாமல்லபுரம், மரக்காணம், கல்பாக்கம், கடலூர், சிதம்பரம், சிர்காழி, நாகபட்டினம், வேதாரண்ணியம், மனோரா, மீமிசல், தேவிபட்டினம், ராமேசுவரம், கீழக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், விஜயாபதி/மகேந்திரகிரி, கன்னியாகுமரி/வட்டக்கோட்டை, இரணியல் போன்ற பகுதிகளில் புதிய பெரிய அளவிலான நன்னீராக்கும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியாகவேண்டிய நிலையில் இப்போது தமிழகம் இருந்து வருகிறது!
சென்னையில் வளர்ந்து வரும் மக்கள் தொகையும், தொழில் துறையும் அதிக அளவில் நீராதாரத்தை தீர்த்து வருகின்றன. தமிழகமே ஒட்டுமொத்தமாக நீர் தேவையில் தட்டுப்பாடான நிலையில் இருக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நதி நீரை நம்பியே நாம் அதிக காலம் ஓட்டமுடியாது என்பது இன்னமும் தமிழகத்தில் உணரப்படாமலேயே இருக்கிறது!
தமிழகம் இப்போதே தொலைநோக்கு பார்வையை கொண்டு வருங்கால சந்ததியினருக்கான திட்டங்களை ஏற்படுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது! தற்கால தலைமுறைக்கே நீராதாரத்தை மேம்படுத்தவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது!
எனவே இனியேனும் நம் நீண்ட உறக்கத்தை கலைத்து செயல்பட்டாக வேண்டும்... செயல்படுமா தமிழகம்??? நன்நீராகுமா கடல் நீர்??
No comments:
Post a Comment