Wednesday, December 16, 2009

வாக்காளர்களுக்கான விலை!

அது 1989..

நான் கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் படித்து கொண்டு இருந்தேன்.. தேர்தல் பிரச்சாரத்துக்காக அதிமுகவின் ஜானகி எம்.ஜி.ஆர் தனது சின்னமான இரட்டை புறாவுக்கு வாக்கு கேட்டு வி.கே.கே.மேனன் சாலையில் வந்துகொண்டு இருந்தார்..

நானும் சில நண்பர்களும் அந்த பிரச்சாரத்தில் இணைந்து கொண்டோம்.. என்ன இருந்தாலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவி அல்லவா??  அப்போது அது மட்டும் தான் முக்கியமாக தெரிந்தது.. மற்றபடி, அரசியல், கொள்கை கோட்பாடு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது... புரியாது!

எங்களுக்கு  கொடுத்தபணி, இரட்டை புறா சின்னம் பொறித்த சிறு சிறு லோகோக்களை (நாலணா நாணயம் அளவில் இருக்கும்) அங்கே கூடி இருந்தவர்களுக்கு கொடுப்பது... அது அப்போது வழக்கமான ஒன்று... எம்.ஜி.ஆர் காலத்தில் மிட்டாய் கொடுப்பார்கள்... குச்சி மிட்டாய்... குச்சிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் இரட்டை இல்லை சின்னம் இருக்கும்... இரட்டை இல்லை காம்பின் நுனி நீண்டு அதில் உருண்டையாக ஆப்பிள் வடிவில் மிட்டாய் இருக்கும்!

இப்படியான தேர்தல் கேன்வாசிங் பல பல பரிணாம வளர்ச்சிகள் கண்டு... தேர்தலுக்கு தேர்தல் நவீனமாகி வந்தது!

முதல் முதலாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சில தேர்தல் விஷயங்களில், லட்டுக்குள் மோதிரம், லட்டுக்குள் ஜிமிக்கி, குடம், சேலை, வேட்டி போன்றவற்றை வாக்காளர்களுக்கு கொடுப்பது என்பது ஒன்று ... உபயம்.. அதே அதிமுக...

இது போன்ற பொருட்கள் பெரும்பாலும் அதிகம் நினைக்கப்படுவதில்லை என்பதாலோ என்னவோ இப்போதெல்லாம் பணப்பட்டுவாடாவே பகிரங்கமாக நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன.

திருமங்கலம் தேர்தல், தமிழக தேர்தல் வரலாற்றிலேயே மறக்கமுடியாத இடத்தை குறிப்பிடத்தக்க விதத்திலே பெற்று பெரும் பேறு அடைந்தது...  ஓட்டுக்கு தலைக்கு 500 ரூபாய் கொடுத்ததாக பல பல செய்திகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது...

இன்றைக்கு விஷயத்துக்கு வருவோம்!

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக, இந்த முறை வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் களம் காண்கிறது...

வந்தவாசி ஓகே!  திருசெந்தூரில் நடக்கும் தேர்தல் மாதிரி கேலிக்கூத்தான விஷயம் வேறு எதுவும் நான் கேள்வி படவில்லை.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் ராஜினாமா செய்த 'அனிதா' ராதாகிருஷ்ணன், திமுகவில் சேர்ந்து, மீண்டும் எம்.எல்.ஏ ஆவதற்காக அதே தொகுதியில் இடைதேர்தலில் போட்டி இடுகிறார்!  அதாவது அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக எம்.எல்.ஏ என்கிற நிலையில் இருந்து, திமுக எம்.எல்.ஏ ஆவதற்காக அங்கே இடை தேர்தல் நடைபெறுகிறது.... நம் மக்களின் வரிப்பணத்தில்.... இந்த லட்சணத்தில் கொள்கை முழக்கங்களும், மக்கள் நலனுக்காக பாடுபடுவதாகவும் பெரும் பிரச்சாரம் வேறு நடக்கிறது!  இன்னும்  ஒன்றரை  ஆண்டுகளில் பொது தேர்தலே நடக்க இருக்கும் நிலையில், அது வரை கூட பொறுத்து இருக்க முடியாத ராதாகிருஷ்ணனுக்காக இந்த இடை தேர்தல் வைபோகம்!

கடந்த முறை, பணப்பட்டுவாடா என்று சொல்லி ஒதுங்கிய அதிமுக, இந்த முறை, அதையே தங்களின் வழக்கமாக்கி கொண்டதோ என்கிற ஐயப்பாடு தோன்றுகிற வகையில் நேற்று ஒரு சம்பவம் நெல்லையில் நடந்திருக்கிறது!

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அவர்களின் ஓட்டல் ஒன்றிலும் மற்றொரு ஓட்டல் ஒன்றிலும் இருந்து சுளையாக 41 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும், அந்த பணத்தை வைத்திருந்ததாக சில அதிமுகவினரையும் (இளவரசு எம்.பி உட்பட) போலீசார் சுற்றி வளைத்து இருக்கின்றனர்.. இப்போது விசாரணை நடந்து கொண்டிருப்பதாக அனைத்து செய்தி தாள்களும் அலறுகின்றன...

அதிமுகவினரோ, அந்த பணம் வாக்காளர்களுக்காக கொண்டு வரப்படவில்லை, தனிப்பட்ட முறையில் சில நில விற்பனை கிரயம் செய்வதற்கான பணம் அது.. அதனை போலீஸ் துணையுடன் ஆளும்கட்சி தவறாக சித்தரிக்கிறது என்று தெளிவு படுத்துகின்றனர்.

இவற்றில் ஏது உண்மை என தெரியாமல், அப்பாவி தமிழன் தடுமாற்றத்துடன் தேர்தல் களம் காணுகிறான்!

இன்னொரு புறம், வந்தவாசியில் திமுகவினரும் அதிமுகவினரும் போட்டி போட்டு பணப்பட்டுவாடா செய்வதாக இன்றைய தினமலரில் இன்னொரு செய்தி வந்திருக்கிறது...

மொத்தத்தில் வாக்குக்கான பணமாகவோ, வாக்காளர்களுக்கான பணமாகவோ செலவாவது எல்லாம் அதே வாக்காளர்களின் பணம் என்பது எந்த வாக்காளனுக்கும் புரிவதே இல்லை!

தனக்கு தானே விலை வைத்துக்கொள்ளும் தமிழக வாக்காளனின் நிலை கண்டு உங்களுக்கு என்ன தோன்றுகிறது????

No comments:

Post a Comment

Printfriendly