Sunday, September 19, 2010

இலவச செல்போன் - ரொம்ப முக்கியம்!

வித்தியாசமான காமடிகளை அரங்கேற்றுவதில் அரசாங்கங்களை அடிச்சுக்கவே முடியாது என்பதற்கு மற்றும் ஒரு சம்பவம் கிடைத்திருக்கிறது.

இலவசம் இலவசம்னு எல்லாத்தையும் இலவசமா கொடுத்து கொடுத்து மக்களை மட்டம் தட்டி வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டும் மத்திய அரசு, புதிதாக அதிரடியாக அறிவித்திருக்கும் ஒரு திட்டம் ஆச்சரிய படுத்துகிறது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் சச்சின் பைலட்.  இவர் இப்போது தொலை தொடர்பு துறைக்கான இணை அமைச்சராக இருக்கிறார்.  இவரோட பாராளுமன்ற தொகுதில்  இருக்கும் "வறுமை கோட்டுக்கு கீழே" உள்ள மக்களுக்கு பி.எஸ்.என்.எல் சார்பாக இலவச சிம் கார்டு, இலவச இன்கமிங் கால் வசதியுடன் இலவச செல்போன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் என்கிற வரையறை மத்திய அரசால் எப்படி செய்யப்படுகிறது என்றால், மாதம் 600 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்யக்கூடியவர்கள் என்று.  அப்படி கஷ்டப்படும் ஜீவன்களுக்கு மத்திய கிடங்குகளில் வீணாகி கொண்டு இருக்கும் உணவு தானியங்களை இலவசமாக கொடுப்பதற்கு வீம்பாக மறுப்பு தெரிவித்து மல்லு கட்டும் மத்திய அரசு, அதே ஜீவன்களுக்கு இலவசமாக செல்போன் கொடுக்கிறது!

கால கொடுமை!

இப்படி செல் போன் கொடுப்பது, சமூகம் மீதான தன நிறுவனத்தின் அக்கறையை வெளிப்படுத்துவதாக பி.எஸ்.என்.எல் சொன்னாலும், அதனை   தொலை தொடர்பு துறை ராஜாங்க அமைச்சர் தொகுதியில் மட்டும் கொடுத்து இருப்பதில் என்ன விதமான சமூக அக்கறை இருக்கிறது என்பது புரியவில்லை.

மேலும், இப்படியான இலவச செல்போன் என்பது வறுமையில் வாடும் மக்களுக்கு மேலும் கூடுதல் செலவாக தான் அமையுமே அல்லாமல், அவர்களுக்கு அதனால் எந்தவிதமான பிரயோஜனமும் இருப்பதாக தெரியவில்லை.

வறுமையில் வாடுகிற மக்களுக்கு, வேலை வாய்ப்புக்களை பெருக்குவது, வாழ்வாதாரங்களை பெருக்கி கொடுப்பது, கல்வி, சுயதொழிலுக்கான வழிகளை காட்டுவது, வீணாகும் தானியங்களையாவது கொடுத்து உதவுவது என்பன போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை யோசிக்காமல் அவர்களுக்கு செல்போன் கொடுப்பது என்பது செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவுக்கும் மட்டுமே பயனளிக்க கூடியதாக இருக்குமே தவிர, வறுமையில் வாடும் ஜீவன்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இருக்க நியாயம் இல்லை.


மேலும்,  ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், சச்சின் பைலட் தொகுதி என்பதால் அங்கே இந்த இலவச செல்போனை விநியோகித்த பி.எஸ்.என்.எல், அடுத்த படியாக, கடந்த 18.09.2010 அன்று கோவை அடுத்த அவினாஷியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது.  இந்த பகுதி தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா அவர்களின் தொகுதிக்குட்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!

பி.எஸ்.என்.எல்லை பொறுத்தவரை, வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இப்போதைய உடனடி அத்தியாவசிய தேவை என்பது செல்போன் என்று தீர்மானித்து விட்டதாகவும், அப்படியான வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டுமே இருப்பதாக முடிவு செய்துவிட்டதாகவும் தோன்றுகிறது.

பசியால் வாடுவோருக்கு உணவு தானியம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துக்கு வீம்பாக மறுப்புரை வழங்கிய மத்திய அரசு, இப்போது அவர்களுக்கு இலவச செல்போன் வழங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை.

சோற்றை விடவா செல்போன் முக்கியம்?

அயோத்தி தீர்ப்பும் - அவசர அறிக்கையும்

பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் கட்டுமானம், போன்ற பரபரப்புக்களால் கலவர வன்முறை களமான அயோத்தி வன்முறைகள் குறித்தான வழக்கின் தீர்ப்பு வரும் 24ம் தேதி வரவிருக்கிறது.

கடந்த வாரம் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன் படி, தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் அச்சமயம் வெளியூர் செல்லாமல் அவரவர் ஊர்களிலேயே இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.  மேலும், மாயாவதி அவர்கள் வன்முறை நிகழாமல் தடுப்பதற்கான சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், அவ்வேற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்லி இருப்பதுடன், காங்கிரசார் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து அமைதி நிலவ செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 16.09.2010 அன்று, மத்திய அமைச்சரவை கூடி எடுத்த மற்றொரு தீர்மானமும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களையே வலியுறுத்தி இருக்கின்றது.  அத்தீர்மானம் அரசின் சார்பில் விளம்பரமாகவும் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது.

இந்த இரண்டு அறிக்கைகளின் நோக்கம் என்ன? இவ்வளவு அவசரமாக எதற்காக இப்படியான அறிக்கைகள் வெளியாகின்றன? அரசு ஏதேனும் மிக பெரிய வன்முறையை எதிர்நோக்குகிறதா?  அல்லது அவ்வாறான ஒரு வன்முறை வேண்டும் என்று விரும்புகிறதா?

ஒண்ணுமே புரியலை!

Wednesday, August 18, 2010

புறம்போக்குக்கு பட்டா கிடையாதாம்!

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பாக ஒரு விசித்திரமான முட்டாள்தனமான அரசாணையை வெளியிட்டது.  அது பற்றிய விவரங்கள் ஏற்கனவே இதே மனவுரையில் புறம்போக்குக்கு பட்டாவாம்!   
என்கிற பதிவாக எழுதப்பட்டது.

நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு அதிரடி தீர்ப்பாக, தமிழக அரசின் அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது!

பொதுவாகவே, அரசு புறம்போக்கு நிலம் என்பது அரசு சொத்து தான்.  அதனை ஆக்கிரமிப்பவர்களை அகற்றி நிலத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தான் ஒரு அரசின் கடமையே தவிர, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாலர்களுக்கே பட்டா போட்டு கொடுப்பது என்பது சட்டவிரோத நடவடிக்கையை ஊக்குவிப்பதாக தான் அமையும்.

பார்ப்போம், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்னவாக இருக்கிறது என்று!

Sunday, July 18, 2010

இது தேர்தல் காலம்!

சமீப காலமாக தமிழகத்தில் எதிர்கட்சிகள் எழுச்சி பெற்று வருவதை காணலாம். அதிமுக மிக மிக பிரம்மாண்டமான ஒரு கண்டன பொதுக்கூட்டத்தை கோவை மாநகரில் நடத்தி காட்டியது. மதிமுக, கம்மியூநிச்ட்டு கட்சிகள் இணைந்து மயிலை நாகேசுவரராவ் பூங்கா அருகில் ஆர்பாட்டம் செய்து வைகோ உட்பட பலர் கைதாகி இருக்கிறார்கள்.




தமிழகத்தை பொறுத்தவரை இரு பெரும் அரசியல் இயக்கங்களின் பராமரிப்பில் இருக்கும் மக்களை கொண்ட மாநிலமாக தான் இது வரையும் இருந்து வருகிறது.



பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னதை போல, எதிர்கட்சிகள் என்பவை விளக்கை தூண்டுகின்ற தூண்டுகோலாக இருக்க வேண்டும். அப்படியான தூண்டு கோல் இல்லாவிட்டால் விளக்கு சீராக எரியாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1977 க்கு பிறகு எதிர்கட்சிகள் என்பது கிட்டத்தட்ட எதிரி கட்சிகள் என்கிற நிலையிலே மட்டுமே இயங்கி வந்து கொண்டு இருக்கிறது.



அரசு எதை செய்தாலும் அதனை எதிர்ப்பது. அரசு எதை செய்ய எண்ணினாலும் அதனை முட்டுக்கட்டை இட்டு தடுப்பது என்பது மட்டுமே எதிர்கட்சிகளின் பணி என்றாகி போனது. அரசின் நல திட்டங்கள் குறித்த விவாதங்களில் கூட கலந்துகொள்ளாமல் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது என்பது ஒரு கவுரவமான வழக்கமாக இரு இயக்கங்களும் போற்றி பேணி காத்து வருகின்றன.
 
பொதுவாக எதிர்கட்சிகள் என்பவை, மக்களின் குறைகளை அறிந்து அரசுக்கு எடுத்து சொல்லி, அரசை முறைப்படி இயங்கவைக்கும் பெரும் பொறுப்பு கொண்டவையாக நமது இந்திய அரசியல் சாசனம் வடிவுறுத்துகிறது. ஆனால் நிஜத்தில் மக்களின் அன்றாட பிரச்சனைகள் பற்றி அதிகம் அலட்டி கொள்வதில்லை தமிழக எதிர்கட்சிகள்.




மாற்று கட்சியினருடன் சந்திப்பு நடத்தும் தன் கட்சிக்காரர்களை களை எடுப்பது, அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பது, மாற்று கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்களை தங்கள் முகாமுக்கு மாற்றுவது போன்றவற்றை மட்டுமே செய்துவரும் தமிழக எதிர்கட்சிகள், ஒரு போதும், தற்கால பிரச்சனைகள் குறித்து கவலை கொள்வதில்லை.



ஐந்தாண்டு காலம் முழுவதும் நித்திரையில் மூழ்கி திளைத்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் வெளியே எட்டி பார்த்து பத்திரிகை செய்திகளில் தங்களை பிராதன படுத்துவதற்கான அதிரடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. மக்களின் மறதி என்பதை பெரும் வரமாக கொண்டு இயங்கும் எதிர்கட்சிகள், இத்தனை காலம் வாளாவிருந்ததை பற்றி மக்கள் அதிகம் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.



தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தமிழக பிரச்சனைகளுக்காக இதுவரையும் குரல் கொடுக்கவில்லை. தமிழக ரயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர், மின்சார தட்டுப்பாடு, விலை வாசி உயர்வு, அரசின் சில துறைகளில் காணும் செயலற்ற தன்மை, முற்போக்கான திட்டங்கள் போடாதது, வளர்ச்சி பணிகளின் சுணக்கம், போன்ற எதை பற்றியும் கவலை கொள்ளாமல், தன் இயக்கத்துக்கு நீண்ட விடுப்பு கொடுத்து நித்திரையில் ஆழ்திருந்தது. இடை தேர்தல்கள் அறிவிக்கப்படும் பொழுது மட்டும் அந்தந்தந்த வட்டார பிரச்சனைகளை கையில் எடுத்து குரல் கொடுப்பதும் பின் சுனங்கிவிடுவதுமாக கழிந்தது காலம்.




இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் இருத்தலை வெளிக்காட்டி கொள்ளும் விதமாக, "குப்பை அள்லாததை கண்டித்து ______________ நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்"; " சாலைகளை செப்பனிடாததை கண்டித்து _____________ பேரூராட்சியை கண்டித்து உண்ணாவிரதம்" ; "குடிதண்ணீர் குழாயை சரி செய்யாததை கண்டித்து ___________ பஞ்சாயத்தை கண்டித்து பேரணி" என்றெல்லாம் அங்காங்கே நடத்தி வந்தது அதிமுக. இதில் விசித்திரமாக சில இடங்களில் அதிமுக நிர்வாகத்தையே கண்டித்தும் ஆர்பாட்டங்கள் அதிமுகவால் நடத்தப்பட்டு இருக்கின்றன. இவையன்னி, அரசை எதிர்த்தோ, அரசின் செயலற்ற தன்மைகளை சாடியோ, மக்கள் அவதியுறும் முக்கிய பிரச்சனைகளை முன்னிறுத்தியோ பெரும் போராட்டங்களை நடத்துவதோ, அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதோ இத்தனை காலமாக காணவில்லை.



நீண்ட நித்திரை களைந்து, கோவையில் கர்ஜித்த ஜெயலலிதா கூட, திமுக தனது குடும்பத்துக்காக கேபிள் டிவி வருமானத்தை மேம்படுத்துகிறது, மணல் கொள்ளையை அசட்டையாக கையாள்கிறது போன்ற பிசினஸ் விஷயங்களை பற்றி மட்டுமே குற்றம் சாட்டி இருக்கிறார்.



வைகோ போன்றவர்கள் மிக மிக விசித்திரமானவர்கள். அவர் கையில் எடுக்கும் விஷயங்கள் ஒன்று, இலங்கை அரசுக்கு எதிராக இருக்கும் அல்லது கேரளா/கர்நாடக அரசுகளுக்கு எதிராக இருக்கும். மதிமுக போன்றவலிமையான, மாநிலம் முழுமையும் பரவி இருக்கும் ஒரு பேரியக்கம் தமிழக மக்களின் அன்றாட முக்கிய பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் சர்வதேச இயக்கம் போலவே செயல்படுவது தமிழக மக்களுக்கு ஏனோ பெரிய வியப்பை தருவதில்லை.. இதுவரை.




இப்போதும் கூட நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் போராட்டம் செய்திருப்பது, குடிதண்ணீர் பிரச்சனைக்காகவோ, மின் தட்டுப்படுக்காகவோ, விலைவாசி உயர்வுக்காகவோ, அரசின் செயலற்ற தன்மைக்கு எதிராகவோ அல்ல. இலங்கையின் துணை தூதரகம் சென்னையில் செயல்பட கூடாது என்பதற்காக தான். இத்தனை நாளும் செயல்பட்டுக்கொண்டிருக்கையில் வாளாவிருந்துவிட்டு இப்போது திடீரென்று ஆட்டகாசமாக ஆரம்பமாகி இருக்கிறது ஆர்ப்பாட்டம், கைது, ரிமாண்டு. பத்திரிக்கைகளின் முதல்பக்கத்தில் படத்துடன் செய்தி.



சரி, இத்தனை நாள் துயில்கொண்டவர்கள் இப்போது துள்ளி எழுந்திருப்பது ஏன்?



தமிழக அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடைய இருக்கிறது. தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டைகளை / எண்ணிக்கையை சரிபார்க்க துவங்கி விட்டது. தேர்தல் வாக்குப்பதிவு கருவிகளை கையாள்வதற்கான பயிற்சிகளை அரசு ஊழியர்களுக்கு கொடுக்க சித்தமாகி இருக்கிறது. அரசின் திட்டங்களை கண்காணிக்க தொடங்கி இருக்கிறது.



வந்து விட்டது தேர்தல் காலம்.



இந்த நேரத்தில் மக்களின் மனதில் இடம்பிடிப்பதற்கான போட்டி தான் இப்போது திடீரென்று தோன்றி இருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் இத்தியாதி இதியாதிக்கள் எல்லாம்.



மக்களும் சாமானியமானவர்கள் அல்ல... "இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்னா பயத்ததோ சார்பு" எனும் குறளுக்கேற்ப, தனக்காக ஒரு துரும்பை கூட எடுத்துப்போடாத எதிர்கட்சிகளை, சகித்து மன்னித்து, பெரும் வரவேற்போடு ஆரவாரமாக வரவேற்க தயாராகி விட்டார்கள்.



பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு, ஆரத்தி, ஊர்வலம், பொதுக்கூட்டம், சாரி சாரியாக அணிவகுத்து வரும் மக்கள் வெள்ளம், இதுவரையும் தங்களுக்காக எதையுமே செய்யாவிட்டாலும், இப்போது செய்யபோவதாக சொல்லும் வர்ண ஜால வார்த்தை சித்தங்களில் மயங்கி மகுடிக்கு ஆடுவது போல ஆட தயாராகி விட்டார்கள்.



அப்படியான மக்களின் மனதில் தங்களை மீண்டும் நிலை நிறுத்தி கொள்வதற்காக விசித்திரமான விஷயங்களுக்காக எல்லாம் போராட்டங்கள் அறிவித்து, கைதாகி, பரபரப்பை ஏற்படுத்தி, அரசை சாடி, சவால் விட்டு, மக்களுக்காகவே உழைப்பதாக உதார் விட்டு, சொந்த விஷயங்களை சற்று பின் தள்ளி, மக்கள் மன்றத்தை நோக்கி ஓடி வர துவங்கி விட்டது எதிர்கட்சியினரின் கூட்டம்.



எழுச்சி பெற்று விட்டனர் எதிர் கட்சியினர்...



ஒரு கவிஞன் சொன்னதை போல, தன முகத்தில் குத்தப்படும் கரும்புள்ளிக்கான முன்னோட்டமாக தன விரலில் கரும்புள்ளி குத்திக்கொள்ள தயாராகி விட்டான் வாக்காளன்.



வந்தே விட்டது தேர்தல் காலம்.

Tuesday, June 29, 2010

சந்துரு கொடுத்த சவுக்கடி!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சந்துரு அவர்கள் பல பல பரபரப்பான தீர்ப்புக்களை தீர்க்கமாய் கொடுத்து வருபவர்.  இப்போது என்றில்லை, அவர் வழக்கரின்ஞராக அதே நீதிமன்றத்தில் பணி புரிந்தபோழுதும் சமூக அக்கறை மிளிரும் பல பல வழக்குகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர்.  சமுதாய மறுமலர்ச்சிக்கான பல தீர்ப்புக்களை பெற்று கொடுத்தவர்.

நீதிபதியாக உயர்ந்த பின் - தீர்ப்புக்களை வழங்குகின்ற நிலைக்கு வந்தபின் - வழக்குகளை சமூக கண்கொண்டு கண்டு பல முற்போக்கான தீர்ப்புக்களை அளித்தவர்.  முக்கிய வழக்குகளில், எதை பற்றியும் கவலை படாமல் நேர்கொண்ட நெஞ்சோடு தீர்ப்புக்களை எழுதியவர்.

நேற்று இன்னுமொரு முக்கியமான தீர்ப்பை தந்திருக்கிறார். 

விஷயம் இது தான் - சுருக்கமாக.

தமிழருவி மணியன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் வீடு குத்தகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.  கடந்த பத்தொன்பது மாதங்களாக அந்த குத்தகை புதுப்பிக்கப்படாமலேயே அவர் அங்கே குடியிருந்து வருகிறார்.  அதனால் அவரை காலி செய்ய சொல்லி இருக்கிறது வீட்டு வசதி வாரியம். 

தன்னை போலவே பலரும் குத்தகை புதுப்பிக்காமல் அங்கே குடியிருந்து வரும் நிலையில் தன்னை மட்டும் காலி செய்ய சொல்வது பகையுறவை பாராட்டி பாரபட்சமாக அரசு நடந்துகொள்வதை காட்டுகிறது என்று கூறி அவர் வழக்கு போட்டார்.

அந்த வழக்கில் தான் தீர்ப்பு கொடுத்து இருக்கிறார் திரு.சந்துரு.

தமிழ் வாழ்க என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் நோக்கத்துடன், "தலைமை செயலகத்தின் மீது தமிழ் வாழ்க என்று நியான் விளக்கு ஒளிர விட்டால் மட்டும் போதாது.. தமிழறிஞர்களை பாதுகாக்கவும் வேண்டும் அரசு. அப்போது தான் தமிழ் வாழும்" என்று தனது கருத்தை சுளீறேன்று சொல்லி இருக்கிறார்.

இதை வேறு விதமாக பார்க்க விரும்புகிறேன்.

சட்டத்தின் கண்கொண்டு நியாயமான தீர்ப்பாக அவர் சொல்லி இருக்கவேண்டியது என்ன என்று எல்லோருமே அறிவர்.  பிறர் குத்தகை புதுப்பிக்காமல் இருப்பதை காரணம் காட்டி திரு. தமிழருவி மணியன் அவர்களும் அப்படி இருக்க உரிமை கோர முடியாது.  நியாயமாக சட்டத்தை நீதியை நிலை நாட்டி இருக்கவேண்டிய நீதிமன்றம், தமிழருவி மணியனை குத்தகை புதுப்பிக்க சொல்லி இருக்க வேண்டும் அல்லது அவரை காலி செய்ய சொல்லி இருக்க வேண்டும்.    குத்தகை புதுப்பிக்காமல் குடியிருந்து வரும் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வீட்டு வசதி வாரியத்துக்கு உத்தரவு இட்டிருக்க வேண்டும்.  (அதாவது குத்தகை புதுப்பித்தல் அல்லது காலி செய்தல்)

ஆனால் அப்படி இல்லாமல் சம்மந்தமே இல்லாமல் அரசின் மீது பாய்வது தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும்.

அரசு தமிழ் ஆர்வலர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்கிற விஷயத்தை, குத்தகை புதுப்பிக்காமல் குடியிருக்க தமிழருவி மணியனை அனுமதிக்கவில்லை என்பதுடன் சம்மந்தப்படுத்தி, அதனையே வாய்ப்பாக கொண்டு தமிழக அரசின் மீது பாய்ந்து இருப்பது, சந்துரு மீதான மதிப்பை கொஞ்சம் இறக்கிவைக்க தான் செய்கிறது. 

எனினும், அவர் கொடுத்திருக்கும் சவுக்கடி - தவறான இடத்தில், தவறான சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் - அரசுக்கு தேவையான சவுக்கடி தான் என்பதில் சந்தேகம் இல்லை.  

சொல்லளவில் இருக்கும் தமிழுணர்வு செயல்வடிவம் பெற சந்துருவின் இந்த தீர்ப்பு அரசுக்கு உத்வேகம் தருமேயானால், அது தமிழ் பெற்ற பயனாகும்.

Monday, June 28, 2010

தமிழ் படித்தால் வேலையில் முன்னுரிமை!

கொங்கு மண்டல கோவை மாநகரில் ஆரபாட்டமாய் நடந்து முடிந்து இருக்கிறது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு. 

இது உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் அங்கீகரிக்க பட்ட மாநாடு அல்ல எனினும், தமிழ் சார்ந்த நல்ல விஷயங்கள் பல அரங்கேறின அங்கே.

தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநாடு என்பதை, தமிழுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத "கோவை காந்திபுறம் பகுதியில் நூறு கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்" போன்ற அறிவிப்புக்கள் தெளிவு படுத்தினாலும், நாம் தமிழ் சார்ந்த விஷயங்களுக்கே வருவோம்.

முக்கியமான ஒரு அறிவிப்பு - "தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும்" என்பது.

தமிழகத்தில் உள்ள அரசு பணிகளுக்கான வேலை நியமன தேர்வுகளில் பெரும்பாலும் நன்கு படித்தவர்களே தேறி வருகிறார்கள் எனினும் வட்டார வழக்கு மொழி அறியாமையால் பல நேரங்களில் அரசு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.  கட்டாயமாக தமிழ் கற்றிருக்க வேண்டும் என்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டும், அரசு அதிகாரிகள் தமிழிலே கையெழுத்து இடவேண்டும் என்று ஒரு அரசானை பிறப்பிக்கப்பட்டும், அது எதிர்பார்த்த பயனை தரவில்லை.

ஒரு கிராமத்தில் உள்ள பிரச்னையை தீர்க்கவேண்டிய ஒரு அதிகாரிக்கு தமிழ் தெரியாவிட்டால் எத்தனை கஷ்டம் என்பதை நான் நேரடியாக பார்த்து உணர்ந்திருக்கிறேன்.  அவர் நன்கு படித்தவர் தான்.. சிறந்த நிர்வாகி தான்.. எனினும் மிகவும் அன்னியப்பட்டு போனது போல ஒரு உணர்வு.. அவருக்கு தமிழ் புலமை இல்லாததால் ஏற்பட்டு விடுகிறது.

எனவே தமிழ் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை என்கிற இந்த அறிவிப்பு இரண்டு விதங்களில் நன்மை பயக்கும்.

ஒன்று: 

இன்றைய காலகட்டத்தில் தமிழ் வழி கல்விக்கு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையே நடைபெறுகிறது.  ஆங்கில வழி கல்வி கற்று, தமிழை ஒரு பாடமாக படித்து வருவதே பெரும்பான்மையாக நடைபெறுகிறது.  இது தமிழ் ஆர்வத்தை ஒரு பாடம் என்கிற அளவிலே கட்டுப்படுத்தி விடுவதால், ஆழ்ந்த தமிழ் அறிவு மாணவர்களுக்கு ஏற்படுவதில்லை. 

எனவே அரசு பணிகளில் தமிழ் வழி கல்வி கற்றோருக்கு முன்னுரிமை என்கிற அறிவிப்பு மிகுந்த எண்ணிக்கையில் தமிழ் வழி கல்வி கற்க மாணவர்களை தூண்டும் / பெற்றோரை ஊக்குவிக்கும் என்பதும், அதனை சார்ந்த தமிழாசிரியர் பணியிடங்களின் தேவை அதிகரித்தல் மற்றும் தமிழ் வழி களை சொற்கள் மிகுதி பாடல் என தமிழ் செழித்து ஓங்கி வளர ஒரு வாய்ப்பாக அமையும்.

இரண்டு:

தமிழை பயிற்று மொழியாக கற்று அரசு பதவிகளில் அமர்கின்றவர்களால் தமிழகத்தின் மக்கள் தேவைகளை எளிதாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உணர்ந்து கொள்ள இயலும்.  அது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும் ஏதுவாகும்.

தமிழ் வழி உரையாடல் என்பது அரசு அதிகாரிகளுக்கும் சாமானிய பொதுமக்களுக்கும் இடையில் இப்போது இருக்கும் இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் நம்பலாம்.

மாநாட்டில் எத்தனையோ அறிவிப்புக்கள் வெளியானாலும், இந்த ஒரு அறிவிப்பாவது செயல்வடிவம் பெறவேண்டும் என்பது எனது ஆவல்...

ஆசைக்கு அளவில்லை தானே?

Saturday, June 26, 2010

ராஜ்யசபா கனவுகள்!

ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் இருந்து புதிதாக ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள்.

உறுப்பினர்கள் கணக்கு படி, அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும், திமுகவுக்கு நான்கு உறுப்பினர்களும் கிடைக்கக்கூடும்.. இதில் திமுக தனது ஒரு இடத்தை காங்கிரசுக்கு கொடுக்கும் என்பது ஊரறிந்த பரம ரகசியம்.

தமிழகத்தில் தங்களை புறக்கணித்து விட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது என்று கொக்கரித்த பாமக, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், தங்கள் இயக்கத்தின் செல்வாக்கு மீதிருந்த அதீத நம்பிக்கையாலும், ஜாதி ஓட்டுக்களை வைத்தே பெரும் சக்தியாக விளங்க முடியும் என்கிற நப்பாசையினாலும், பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளிடம் இருந்தும் சம தூரத்தை பராமரித்தது.  பென்னாகரம் தேர்தலில் தனித்து வெற்றி பெற்றால் அது பின்னாட்களில்  வரும் தேர்தல்களில் தங்களை முன்னிலை படுத்திக்கொள்ளவும், அதிகப்படியான இடங்களில் போட்டியிடக்கூடிய அளவிலே இடங்களை பெற்றுக்கொள்ளவும் உதவும் என்பதால்,  தங்கள் இன ஓட்டுக்கள் அதிகம் இருக்கும் நம்பிக்கையால் பெரும் துணிவோடு தேர்தலை சந்தித்தது.

தோல்வி தான் எனினும், கவுரவமான தோல்வி என்று சொல்ல தக்க அளவிலே நாற்பதாயிரம் ஓட்டுக்களை பெற்று தனி சக்தியாக தாங்கள் அங்கே இன்னமும் விளங்கி கொண்டு இருப்பதை கம்பீரமாகவே பறை சாற்றி இருந்தனர்.  இன்னும் சொல்லப்போனால் பிரதான எதிர்கட்சியான அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பெற்று இருப்பதன் மூலம் தங்களை பென்னாகரத்தில் நிலைப்படுத்தி கொண்டனர்.  எனினும் மாநில அளவில்?

தன குடும்பத்தில் இருந்து யாரேனும் பதவிகளுக்கு வந்தால் அவர்களை சவுக்கால் அடிப்பேன் என்று அறைகூவிய இயக்கம் அன்புமணியை ராஜ்யசபா மூலம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சர் பதவியையும் அனுபவித்தது.  மீண்டும் அப்படி நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்கிற அதீத ஆவல் அகத்துள் இருந்தும், தனது இயக்கத்துக்கு தமிழகத்தில் இருக்கும் 'அதீத' செல்வாக்கையும், உறுப்பினர் எண்ணிக்கையும் கணக்கிட்டு பார்க்கையில், தேர்தலை சந்திக்காமல் மக்கள் மன்றத்துக்கு வராமல் மேலவை உறுப்பினர் ஆவதே பாதுகாப்பானது என்கிற முடிவுக்கு இயக்கம் வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் யார் மூலமாக வருவது?

திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைப்பதாக பாவித்து இருவரையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தாயிற்று.  மீண்டும் சில சமாதான தூதுகள் அனுப்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.  அதிமுக அவசரமாக தனது இரண்டு உறுப்பினர்களையும் அறிவித்ததால், திமுகவை கேஞ்சிக்கொண்டிருன்தது பாமக.  திமுகவும் காங்கிரசும் தத்தம் வேட்பாளர்களை அறிவித்துவிட நட்டாற்றில் நிற்கிறது பாமக.

ராஜ்ய சபா கனவில் இருந்த தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தி (!) குழப்பத்தின் உச்சியில் இயலாமையுடன் இருந்து கொண்டிருக்கிறது.

இரு இயக்கங்களும் இத்தகைய ஒரு போன் தருனத்துக்காகவே காத்திருந்ததுன் போல, பாமகவை தனிமை படுத்தியதன் மூலமாக ஜாதி இயக்கங்களை பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றனர்.  மேலும் சொந்த செல்வாக்கு என்று எதுவும் இல்லாமல், பிறர் முதுகை மட்டுமே நம்பி சவாரி செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் பாமகவுக்கு உணர்த்தி இருக்கின்றனர்.  ராஜ்ய சபா கனவு என்பது தனியே காண வேண்டியது அல்ல என்பதை இப்போது பாமக உணர்ந்திருக்கும்.

இதன் பிற விளைவுகள் சுவாரசியமானவை!

பாமகவின் ஆர்பாட்டம் முன்பு போல எடுபடாது
சொந்தமாக தங்களுக்கென சுய செல்வாக்கு இல்லாத\ஒரு இயக்கம் என்பது தெளிவாகி விட்டதால் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்
திமுக பரந்த மனப்பான்மை உள்ள கட்சி என்பதால் மீண்டும் தங்கள் அணியில் பாமகவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது, எனினும், இட ஒதுக்கீட்டு பேரன்களில் திமுகவின் நிலைப்பாடே இறுதியாக இருக்க கூடும். பேரம் பேசும் உரிமை இப்போது பாமவுக்கு இல்லாததாலும், அவர்களின் சுய செல்வாக்கு பட்டவர்த்தனம் ஆகி இருப்பதாலும், குறைந்த அளவிலே தான் இடங்கள் கிடைக்கும்.. அது தமிழகத்துக்கு பல வகையிலும் நல்லது.

ஒருவேளை, இந்த ராஜ்ய சபா கனவு மட்டும் பாமகவுக்கு வராமல் இருந்திருந்தால், அமைதியாக அரசியல் விளையாட்டுக்களை வேடிக்கை பார்த்திருந்தால், பென்னாகரம் ஒட்டு எண்ணிக்கையை வைத்து திமுக, பாமகவுக்கு ஒருவேளை கொஞ்சம் மரியாதை கொடுத்து இருக்க கூடும்.  சட்டமன்ற தேர்தல் வரை பாமக அடக்கி வாசித்து இருந்தால், அவர்கள் மீதான மரியாதை கூடி இருக்கும். செல்வாக்கு பற்றிய சந்தேகம் மெல்ல மெல்ல தணிந்து இருக்கும்.  ஆனால் ராஜ்யசபா ஆசை அவசரமாக இரு இயக்கங்களிடமும் தூது அனுப்பி கெஞ்ச வைத்து, தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி, இறுதியில் எந்த பலனும் இல்லாமல் தனித்து விடப்பட்ட சூழலுக்கு பாமகவை தள்ளி இருக்கிறது.

பாமக தனித்து விடபடுவது தமிழகத்துக்கு நல்லது எனினும் அப்படியான ஒரு நிலைப்பாட்டுக்கு தங்களை தாங்களே உட்படுத்தி கொண்டிருப்பது வித்தியாசமான விஷயம்.  ஆசை யாரை விட்டது?

Monday, February 22, 2010

தலை போல வருமா?

இன்னைக்கு தேதிக்கு அரசியல் துறையிலாகட்டும், சினிமா துறையில் ஆகட்டும் ரொம்ப பரபரப்பான விஷயம் முதல்வர் விழாவில் அஜித்தின் பேச்சு தான்!

அது சரியா தவறா என்கிற விவாதம் ஒருபுறம்... அது சரியாகவே இருந்தாலும் அவர் பதிலளிக்க தேர்ந்தெடுத்த களம் சரியா என்பது இன்னொரு புறம் என்று விவாதங்கள் பட்டையை கிளப்புகின்றன.

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் சினிமா விழாக்களுக்கு சினிமா பிரபலங்களை கட்டாயப்படுத்தி கலந்துகொள்ள வைக்க கூடாது என்பது அஜீத்தின் வேண்டுகோள்.  அதனை அத்தனை பட்டவர்த்தனமாக அந்த மேடையிலேயே போட்டு உடைப்பார் என்று யாருமே நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள்.

சினிமா துறைக்கு முதல்வர் சலுகைகள் கொடுப்பது, அதை காரணம் காட்டி அவருக்கு பாராட்டு விழா எடுப்பது, அந்த விழாவில் இன்னும் சில கோரிக்கைகள் வைப்பது, அதை முதல்வர் நிறைவேற்றுவது, மீண்டும் அதற்கு இன்னொரு பாராட்டு விழா எடுப்பது என்பது இப்போது ஒரு தொடர் வழக்கமாக ஆகிவிட்டது! 

இன்னும் சொல்லப்போனால், ஏதேனும் கோரிக்கையை அரசிடம் வைக்கவேண்டும் என்றால் பாராட்டு விழா எடுக்கவேண்டும் என்கிற நிலை வந்துவிட்டதாக தோன்றுகிறது!  அரசு ஊழியர் சம்மேளனம் கூட சில காலம் முன்பு அவருக்கு பாராட்டு விழா எடுத்து தான் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்!  வணிகர் சங்க பேரவையும் அப்படியே. 

ஆனால் தொடர்ச்சியாக பாராட்டு விழாக்கள் வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளுவது சினிமா துறை தான்.

அப்படியான நிகழ்வுகளுக்கு சினிமா பிரபலங்கள் கட்டாயமாக வருகை தரவேண்டும் என்று வற்புறுத்துவது, அப்படி வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, தடை விதிப்பது போன்ற மிரட்டல்களால் ஆடி தான் போயிருக்கிறார்கள் எல்லோரும்.  ஆனாலும் என்ன செய்ய?  அப்படி வற்புருத்துவோர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவோ அரசுக்கு வேண்டப்பட்டவர்களாகவோ இருந்து தொலைப்பதால் பகைத்துகொள்ளவும் முடியாமல், சகித்துக்கொள்ளவும் முடியாமல் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டி இருக்கிறது!

இப்படியான நிலையில் தான் வந்து விழுந்திருக்கிறது வெந்த வார்த்தைகள் அஜீத்தின் உள்ளத்தில் இருந்து. 

அவரது கருத்து ஆயிரம் சதம் அங்கீகரிக்கப்படவேண்டியது என்பது எனது கருத்து! 

யாரையும் வற்புறுத்தி ஒரு விழாவில் கலந்துகொள்ள செய்வதோ, ஒருவரை பாராட்ட சொல்லுவதோ, அப்படி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுப்பதோ கண்டிப்புக்குறியது.  அவரவர் தொழிலை அவரவர் பார்க்கையில், அனாவசியமான வற்புறுத்தல்கள் இருக்கக்கூடாது.

மேலும், அரசிடம் ஒரு கோரிக்கை வைத்து அது நிறைவேறும் பட்சத்தில் அதற்கு கட்டாயமாக விழா எடுக்கவேண்டும் என்பதே கேலிக்கூத்து.  தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை என்பதை கூட உணரமுடியாமல், அரசின் செயல்களுக்கு அரசியல் சாயம் பூசி பார்க்கும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.  காரணம் இங்கே தான் அரசியலும் சினிமாவும் ஈருடல் ஓருயிராக இணைந்து இருக்கின்றன.

சினிமாவில் கால்வைத்தாலே சிலருக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது.  அவர்கள் அரசியலை தங்கள் சுய நலத்துக்காக வளைக்கும்பொழுது, அரசியல் வாதிகளும் அவர்களை தங்கள் சுய நலத்துக்காக வாளைக்கிரார்கள்.. இதிலென்ன தவறு? என்று கேட்போரும் உண்டு!

அஜீத், இந்த உள்ள குமுறலை பத்திரிகை பேட்டி வாயிலாகவோ, அல்லது முதல்வரை நேரடியாக சந்தித்தோ சொல்லி இருந்திருக்கலாம், விழாவை புறக்கணித்து இருக்கலாம், அதை விடுத்து இப்படி மேடையில் கொட்டி இருக்க தேவையில்லை என்றும் சில கருத்துக்கள் உண்டு!

அஜீத் பேசியது அஜீத்துக்காக மட்டும் அல்ல.  யாராலும் சொல்ல முடியாத அவஸ்த்தையை தான் அஜீத் அங்கே இறக்கி வைத்து இருக்கிறார்!  அதனால் தான் அவர் அதை கொட்டி தீர்த்தபோது கரகோஷம் விண்ணை பிளந்தது!

மேலும், பேட்டி, முதல்வர் சந்திப்பு போன்றவற்றில் அதை சொல்லி இருந்தால் அது மற்றும் ஒரு நிகழ்வாகவே மறைந்து போயிருக்கும். இப்போது இந்த விஷயத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் அப்போது கிடைத்து இருக்குமா என்பதும் சந்தேகமே! 

எனவே, சரியான இடத்தில், சரியான வேளையில், சரியான விஷயத்தை தான் அஜீத் செய்து இருக்கிறார்!

பொதுவாகவே அஜீத் துணிச்சலானவர் என்றும் மனதில் பட்டதை பட்டதுபோலவே பேசுபவர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்!  அதை இந்த பேச்சின் பொது ஆணித்தரமாக உறுதி படுத்தி இருக்கிறார்!  யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்!

அரசியல் காரணங்களுக்காக வழிந்து குழைந்து பேசி பாராட்டி பேர் வாங்கும் பல புரட்சியாளர்கள், சிகரங்கள் எல்லாம் இருக்கையில் எந்த வித அனுகூலமும் எதிர்பார்க்கமால், பொது நோக்கத்துக்காக குரல் கொடுத்த அஜீத், என் மனதில்  எங்கேயோ உயரத்தில் போய்விட்டார்.

இனியாவது அரசியல் காரணங்களுக்காக சினிமா பிரபலங்களை வற்புறுத்துவது, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துவது, போன்றவை குறையவேண்டும்.. அதைவிட இந்த விழா எடுக்கும் வழக்கம் குறையவேண்டும்.

ஆனால், மாறாக சினிமா பிரபலங்களை அரசியல் பின்புலம் கொண்டோர் மிரட்டுவது, பகிரங்கமாக ஏசுவது போன்றவை தான் இப்போது நடந்து வருகிறது.  இதை எல்லாம் கண்டித்து தடுக்க வேண்டிய முதல்வர், சும்மா இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது! 

Saturday, February 20, 2010

தோழரை காணோம்!

W.R வரதராஜன்... மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் கட்சியின் மிக மிக முக்கியமான தலைவர்.. தமிழகத்தில் மார்க்சிச்டின் முகம்.. கட்சியின் மத்திய குழுவின் பிரதான உறுப்பினர்.. தொழிற்சங்கமான CITU வின் தலைவர்...

அவரை ஒருவாரமாக காணோம்!

எங்கே போனார்.. என்ன ஆனார் எந்த தகவலும் இதுவரை இல்லை!  இரண்டு கடிதங்கள் எழுதிவைத்து இருக்கிறார் வீட்டில்... ஒன்றில் கம்மியூநிச்ட்டு சாகமாட்டான் என்று எழுதி இருக்கிறார்... மற்றொன்றில் சாவு எல்லாவற்றையும் விட மேல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.... இரண்டு கடிதங்களுக்குமான இடைவெளி ஐந்து நாட்கள்.

தமிழக காவல்துறை அவரை தேடிக்கொண்டு இருக்கிறது..

இப்படியான தலைமறைவுக்கு என்ன காரணம்... அவரே அவரது கடிதத்தில் எழுதி இருப்பதை போல, "கட்சியிலும் அரசியலிலும் எத்தனையோ பிரச்சனைகளை வெற்றிகரமாக சமாளித்து இருக்கிறேன்.. ஆனால் வீட்டில் இருக்கும் பிரச்னையை என்னால் சமாளிக்க முடியவில்லை!"

அப்படி என்ன வீட்டில் பிரச்சனி?  அவரது மனைவி சரஸ்வதி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்து இருக்கும் ஒரு புகாரில் வரதாராஜனுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது (கவனிக்க: அவருக்கு 64 வயது.. ஊரறிந்த தலைவர் வேறு!) என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

கல்கத்தாவில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பாக, ஒழுக்கமீறல் என்று காரணம் கூறி வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது... அதில் நொந்து போயி கடந்த 11 ஆம் தேதி சென்னை வந்த வரதராஜன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை...  செல் போனை வீட்டிலேயே விட்டு சென்று இருக்கிறார்...

நேற்றைய தினம், வரதராசனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் கட்சி நீக்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.  அவமானத்தை விட மரணம் மேலானது என்கிற குறளை தனது இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் வரதராஜனின் மனோ நிலையை என்னால் உணர முடிகிறது.

குடும்பங்கள் சிதைந்து போவதற்கு அடிப்படை காரணமே சந்தேக நிழல் தான் என்பது காலம் காலமாக தெரிந்த விஷயம் தான்... சாதாரணனின் வாழ்க்கையிலும் அப்படியே... பெரும் தலைவர்களின் வாழ்விலும் அப்படியே!

ஆனால், தமிழகத்தின் மிக மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவரான வரதராஜன் இது போன்ற விஷயங்களுக்காக தலை மறைவு ஆகிறார் என்பது உண்மையில் வருத்தம் தரக்கூடிய விஷயம்... இதை எளிதாக அவரே கையாண்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து... அரசியல், சட்டம், காவல் போன்ற அனைத்து துறைகளிலும் அவரை மதிக்கும் எத்தனையோ அதிகாரிகள் இருக்க, நல்லபடியாகவே விஷயத்தை முடித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது... 

அப்படி இருந்தும், அவர் தலை மறைவாக சென்று இருக்கிறார் என்றால் அவருக்கு எத்தகைய மன உளைச்சல், மன நெருக்கடி இருந்திருக்கவேண்டும் என்பதை சிந்தித்து பார்க்கவே முடியவில்லை.

குடும்பத்தில் அமைதி நிலவ செய்யும் கடமையில் இருந்து பலரும் விலகி செல்வதன் விளைவுகள் விபரீதமானவை என்பதை வரதராஜன் தலைமறைவு தெளிவாக காட்டுகிறது...

வரதராஜன் எங்கே இருந்தாலும் நலமுடன் இருக்கவேண்டும், தமிழக அரசியல் அரங்கம் அச்சப்படுவது மாதிரி, அவர் தவறான எந்த முடிவும் எடுத்திருக்கக்கூடாது என்று வேண்டுகிறேன்.

Friday, February 19, 2010

சிபில் அட்டகாசம்!

சிபில்....இந்த வார்த்தை தான் இப்போதைக்கு மிக மிக பயங்கரமாக காட்சி தருகிறது  ஒவ்வொரு  சராசரி நடுத்தர  இந்தியனுக்கும்!
வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற வாழ்க்கை சூழலில் எல்லோருமே கடன் வாங்கியோ, கடன் அட்டை தேய்த்தோ தான் காலத்தை ஒட்டி தொலைக்க வேண்டி இருக்கிறது.... கலங்கி தவித்ததெல்லாம் இலங்கை வேந்தன் காலத்தோடு முடிந்துவிட்டது... இன்றைய தேதியில் கடன் இல்லாத கொடீஸ்வரனே இல்லாதபோது.. சராசரி இந்தியன் எம்மாத்திரம்!

இப்படியாக ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்கியவன் பாடு என்னவெல்லாம் ஆகிறது என்பதை சமீபத்தில் கண்கூடாக கண்டேன்.

கடன் வாங்குவதற்கு முன்பே கடன் பத்திரத்தில் (படித்து பார்க்காமல் / படித்து பார்க்க முடியாமல்) கையெழுத்துக்களை வாரி வாரி இறைக்கவேண்டும்.  (இதில் இன்னொரு சுவாரசியமான கூத்தும் இருக்கிறது... நீங்கள் இங்கிலீஷில் கையெழுத்து போடாவிட்டால் 'வெர்நாக்குளர் படிவம்' என்ற ஒன்றை நிரப்பி தரவேண்டும்.  அதாவது... எனக்கு எழுத படிக்க தெரியாது... இந்த விண்ணப்பத்தில் இருக்கும் விவரங்களை வங்கி அலுவலர் படித்து காண்பித்தார்.. நான் புரிந்து கொண்டேன் என்கிற மாதிரி...  நீங்கள் இங்கிலீஷில் மிக பெரும் புலமை கொண்டிருந்தாலும், கையெழுத்தை தாய்மொழியில் போட்டால் நீங்கள் படிக்காதவர் என்பது வங்கிகளின் விதி... இதில் அரசு வங்கிகளும் அடக்கம்)

அதோடு எட்டு அல்லது பத்து செக் கையெழுத்து இட்டு மொட்டையாக கொடுக்கவேண்டும். அப்போது தான் நமது அப்பிளிகேஷனையே லாக் ஆன் செய்வார்கள்!  (ஒருவேளை லோன் அப்ரூவ் ஆகவில்லை என்றால் அந்த செக்குகள் திரும்ப தரப்படாது.. வங்கியே அவற்றை கிழித்து போட்டுவிடும் என்று சொல்கிறார்கள்... ஆனால் அப்படி கிழிக்கிறார்களா என்பது தெரியாது யாருக்கும்... இதற்கிடையில் செக்குகள் வங்கிக்கு வராமல் போவதால் நாம் கணக்கு வைத்து இருக்கும் வங்கி நமக்கு மேற்கொண்டு செக் தர யோசிக்கும் ஆபத்தும் உண்டு)

ஒரு வழியாக கடன் அப்ரூவ் ஆகிவிட்டால், அதற்கான பிராசசிங் பீஸ் அது இது என்று ஆரம்பத்திலேயே கணிசமான தொகை பிடித்தம் செய்து தான் நமக்கு தருவார்கள்.   அதே போல ஒப்பந்தப்படியான வட்டி விகிதத்தை மூன்றாக பிரித்து, முதல் ஒன்பது மாதங்களில் பெரும்பாலான வட்டியை முழுமையாக பிடித்தம் செய்து விடுவார்கள்.  பிற்காலங்களில் குறைந்த வட்டி.  இந்த ரீதியில் போகும்போது முதல் ஒன்பது மாதங்களில் நாம் கட்டிய தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட பிரின்சிபல் தொகையில் கழியாது!  எல்லாமே வட்டிக்கு என்று எடுத்து விடுவார்கள்...

ஆறு மாதம் கழித்து ஒரு ஆரணங்கு அன்பாக (?) போன் செய்து சார் உங்கள் லோனுக்கு டாப் அப் லோன் தர்றேன் எடுத்துக்கறீங்களா என்று எதோ தன்னையே தருவது போல குழைந்து குழைந்து கேட்பாள்.  அங்கே விழுந்தால், 'பிரீ குளோசிங்' சார்ஜ் என்று மீண்டும் ஒரு கணிசமான தொகையை வெட்ட வேண்டி இருக்கும்..  அதுபோக புதிய கடனில் பிராசசிங் பீஸ், மீண்டும் முதலில் இருந்து மூன்றில் இரு பங்கு வட்டி என்று நம் சம்பாத்தியம் எல்லாமே வங்கிக்கு தான்.

இதில் ஏதேனும் ஒரு மாதம் நீங்கள் தவணை செலுத்த தவறினால், போன் மிரட்டல், ஆட்களை வீட்டுக்கனுப்பி மிரட்டுதல் போன்ற 'இயல்பான' விஷயங்கள் தவிர்த்து இப்போது புதிதாக வங்கிக்கு கிடைத்து இருக்கும் அதி அற்புத ஆயுதம் தான் சிபில்.

இந்த சிபில் (CIBIL - Credit Information Beureu of India Limited) என்பது வங்கிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு.  எந்த வங்கியில் நீங்கள் கடன் வாங்கி இருந்தாலும், அது பற்றிய விவரங்களை, உங்களின் திருப்பி செலுத்தும் வரலாறை எல்லாம் சேகரித்து பட்டியல் இட்டு வைப்பது இவர்கள் வேலை.  நீங்கள் சந்தர்ப்பவசத்தால் ஏதேனும் ஒரு வங்கியின் கடனில் ஒரே ஒரு தவணை பாக்கி வைத்தாலும் உங்கள் பெயர் சிபிலின் பட்டியலில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.  

இதன் விளைவுகள்???  நீங்கள் மேற்கொண்டு வேறு ஒரு வங்கியில் கடன் வாங்க சென்றாலோ, கடன் அட்டை கேட்டாலோ, இந்த 'முன்கதை சுருக்கத்தின்' பேரில் கடன் நிராகரிக்கின்ற வாய்ப்பு உண்டு! 

அதாவது அவசர தேவைக்காக ஐம்பதாயிரம் தனிநபர் கடன் வாங்குகிறீர்கள்... மாதம் இரண்டாயிரத்து சொச்சம் தவணையை ஒன்றரை ஆண்டுகாலம் ஒழுங்காக கட்டி வருகிறீர்கள்... திடீரென்று ஒரு மாதம் உங்களால் கட்ட முடியவில்லை என்றாலும் உங்களுக்கு சிபில் லிஸ்டில் ஈசியாக அட்மிஷன் கிடைத்துவிடும்.  அதற்கு அப்புறம் நீங்கள் அந்த தவணைகளை ஒழுங்காக செலுத்தி இருந்தாலும், முறையான(!) கோரிக்கை / விண்ணப்பம் / கட்டணம் இல்ல்லாமல் உங்கள் பெயர் சிபில் பட்டியலில் இருந்து இறங்காது!  இது தெரியாமல் நீங்கள் உங்கள் மகள் கல்யாணத்துக்கு என்று இன்னொரு பெரிய தொகை லோன் வாங்க சென்றால் இந்த சப்பை காரணத்தை கூறி உங்களுக்கு ஒரு பெரிய நோ சொல்வார்கள்.   சொல்வது மட்டும் அல்ல, நம்மை எதோ மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தாவை பார்க்கிற மாதிரி பார்ப்பார்கள்.. அது தான் கொடுமை!

சரி, வங்கிக்கு என்று வங்கிகளின் நன்மைக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதே, நமக்கு என்று, நுகர்வோருக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்றால் இல்லை.  வங்கி என்ன சொல்கிறதோ அதற்கு நாம் கட்டுப்படவேண்டும்.  அவர்கள் கூடுதல் வட்டியை பிடித்தாலும் நாம் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது.  வரி மற்றும் பிராசசிங் பீஸில் தவறு செய்த வங்கிக்கு நாம் கேள்விகள் கேட்டாலோ, வழக்கு தாக்கல் செய்தாலோ நமக்கு சிபிலில் கரும்புள்ளி குத்தி வைத்து விடுவார்கள்... ஜென்மத்துக்கும் அவசர தேவைக்கு கடன் கிடைக்காமல் அல்லாடி கொண்டு தான் இருக்கவேண்டும்.. ஒரு வங்கியும் நமக்கு லோன் தராது.

கிட்டத்தட்ட, வங்கிகளின் கூட்டமைப்புக்கு அடிமையாக இருந்தால், எதிர்த்து எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்.

இந்திய அரசில் நிதி துறை என்று ஒன்று இருக்கிறது... அந்த அமைச்சரவை இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் கொள்வதில்லை... இப்படி கடன் வாங்கியோரை வங்கிகள் படுத்தும் பாடு பற்றி கிஞ்சிற்றும் பதர்றப்படுவதில்லை... மாறாக, புது புது விதிகளை உருவாக்கி சாமானியர்கள் கடன் வாங்குவதை கடினமாக்குவதும், வங்கிகளின் வருவாயை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதுமாக மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது!

(கடன் அட்டை கதை இன்னும் சுவாரசியமான கதை... அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்)

ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை கொண்டவர்களின் ராஜ்ஜியம் என்பதை வைத்து பார்த்தால் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு..  வாழ்க ஜனநாயகம்!

Thursday, February 18, 2010

டீ கடை சிந்தனைகள்!

இன்னைக்கு காலையில் டீ குடிக்க வழக்கமான டீ கடைக்கு போனேன்.. அங்கே தான் அரசியல் பொருளாதாரம்ன்னு அத்தனை விவாதங்களும் நடக்கும்... நாலு ரூபாய் டீக்கு நாற்ப்பது விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்.  எனக்கு தெரிஞ்சு டீ மாஸ்டர்களை விட பெட்டரான அரசியல் விமரிசகர்களே கிடையாது.  அத்தனை பார்டி பத்தியும் மக்களோட மன ஓட்டத்தை பத்தியும் ஜஸ்ட் லைக் தட் தெரிஞ்சு வெச்சிருக்காங்க!

ஆனா இங்கே மேட்டர் அரசியல் கிடையாது!

எந்த ஊருக்கு போனாலும் ஒரு மலையாளி டீ கடை கண்டிப்பா இருக்கும்னு சொல்லுவாங்க... டென்சிங் இமையமலை போனப்ப கூட அங்கே ஒரு மலையாளி டீ வித்துட்டு போன மாதிரி கார்டூன் கூட பிரபலம்.

ஆனா மலையாளிகளை விட இஸ்லாம் சகோதரர்களின் டீ கடைகள் தான் நான் அதிகமா பாக்கிறேன்... அவங்க டீக்கு ஒரு தனி டேஸ்ட் இருக்கு. குடிச்சு பாருங்க தெரியும்.

தமிழ் நாட்டை பொறுத்தவரைக்கும் இந்த ரெண்டு பேர் தவிர அதிகமா டீக்கடை நடத்தறவங்க பத்தி தான் இப்போ யோசனை.

சிவன்கங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் காரங்க தான் சென்னையில் அதிகமா டீ கடை வெச்சிருக்காங்க... என்ன காரணம்னு பார்த்தா... அந்த மாவட்டங்கள் எல்லாமே தொழில் துறையில் ரொம்ப பின் தங்கி இருக்கு.. அந்த மாவட்டத்தை சேர்ந்தவங்க பெரும்பாலும், வேலை தேடி மும்பை போறது, கோயம்பத்தூர், சென்னைன்னு போறது, அப்புறம் ஒன் ஸ்டெப் பார்வார்டா மலேசியா துபாயன்னு போறதுன்னு சம்பாத்தியத்துக்கு வழி தேடிட்டு இருக்காங்க.  அப்படி எல்லாம் போக முடியாதவங்க.. அல்லது அப்படி போயி நொடிஞ்சு போனவங்க, ஆல்டைம் ஹிட்டான டீக்கடை நடத்துறாங்க.

சென்னையில் நிறைய கடைகள் அவங்க தான் நடத்தறாங்க... இது பெருமை படவேண்டிய விஷயமா... இல்லே, சில குறிப்பிட்ட மாவட்டங்களை மட்டும் நாம தொடர்ந்து புறக்கணிச்சிட்டு வர்றோமேன்னு ஆதங்கப்படவேண்டிய விஷயமான்னு நீங்களே முடிவு செஞ்சிக்கலாம்.

டீ கடை நடத்தறதோட, கம்பைண்டா டிபன் கடையும் சேர்த்து நடத்துறது அவங்க ஸ்பெஷாலிட்டி.  கோயம்பத்தூர் ஏரியாவில் பார்த்தீங்கன்னா டீ கடையோடு சேர்ந்து பேக்கரி ஸ்நாக்ஸ் ஐட்டம் மட்டும் தான் இருக்கும்... ஆனா சென்னையில் டீ கடையிலேயே காலையிலும் சாயந்தரமும் இட்லி வடை பூரி கிடைக்கும்...  சென்னையில் பெரும்பாலும் வேலைக்கு போற பேச்சிலர்ஸ் தான் இருக்காங்கங்கறதால், அவங்களுக்கு சீப் அண்ட் பெஸ்ட் டிபன் இந்த மாதிரி டீ கடையில் தான் கிடைக்குது.


எப்படி மளிகை கடை நடத்தறவங்க பெரும்பாலும், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை செர்ந்தவன்களோ அந்த மாதிரி டீ கடை நடத்தரவங்களும் குறிப்பிட்ட மாவட்டத்து காரங்கன்னு ஆயிபோச்சு சென்னையில்.

கொஞ்சம் பேரு, (திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்து காரங்க) சலூன் கடையும் வெச்சிருக்காங்க.... எதையாவது செஞ்சு பொழப்பை பாத்துக்கனுமேன்னு இல்லாம, அதையும் பெர்பெக்டா செஞ்சு பிரபலமா இருக்காங்க அவங்கவங்க ஏரியாவில்.





இதில் இன்னொரு விஷயம்... கடை வாடகை கொடுத்து கட்டுபடியாகாதுன்னு நினைக்கிற நிறைய பேரு, வீட்டிலேயே டீ ரெடி பண்ணி, சைக்கிளில் கேன் கட்டி, அம்பத்தூர், கிண்டி மாதிரியான தொழில்பெட்டையில் இருக்கிற கம்பனிகளுக்கு டீ சப்பிளை பண்றாங்க. 

அது, நிரந்தர வருவாய், கேரண்டீயான கஸ்டமர்கள், மாசமாசம் காசுன்னு சிக்கல் இல்லாம போயிட்டு இருக்கு!  காலையில் ஒரு நடை மதியம் ஒரு நடை அவ்வளவு தான் மேட்டர் ஓவர்.  ஆனா அது அவ்வளவு சுளுவான காரியம் இல்லை.  அத்தனை கம்பெனியிலும் ஒரே டைமை தான் டீ டைம்னு ஒதுக்கி தொலைச்சிருப்பாங்க... அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே அத்தனை கம்பெனியிலும் அத்தனை பேருக்கும் டீ சப்பிளை பண்றது லேசு பட்ட காரியம் இல்லை.  ஸ்பீடு வேணும்.  அதை விட கொடுமை, ஒவ்வொரு கம்பெனியில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதம்... டீ, காபி, சுகர் இல்லாம, பால் மட்டும்னு ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மெனு கார்டு வெச்சிருப்பாங்க... அதையும் ஒவ்வொரு நாளும் கேட்டுட்டு இருக்க முடியாது... டென்சன் ஆயிடுவாங்க.... அதை எல்லாம் ஞாபகம் வெச்சு யாருக்கு என்னன்னு கரெக்டா கொடுக்கணும். 


இத்தனை போட்டியிலும், இசுலாமியர்களின் டீக்கடைக்கு மட்டும் ஒரு தனி ஈர்ப்பு இருக்குன்னா அவங்க கொடுக்கற எக்ஸ்டிரா ஸ்பெஷல் டீ வகைகள்... இஞ்சி டீ, மசாலா டீ மாதிரி... தனி தனி டேஸ்டில் எல்லோருக்குமான டீயை ரெடி பண்ணி அசத்துறாங்க.

டீ ரேட்டு ஏறிட்டு இருக்கிற ஸ்பீடை பார்த்தா வேலையை ரிசைன் பண்ணிட்டு அந்த தொழிலில் இறங்கிறலாமான்னு யாருக்கு வேணும்னாலும் தோணும்.  ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு ரூபாய்க்கும் குறைவா இருந்த டீ விலை,  இப்போ அஞ்சு ரூபா கொடுத்தா தான் ஆச்சுன்னு நிக்குது.  பஜ்ஜி கூட நாலு ரூபா ஆயிடிச்சு.. பால் விலை, சக்கரை விலை, சம்பளம்னு அவங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்க தான் செய்யுது.

ஆனா சமீபத்தில் என்னை பிரமிக்க வெச்ச விஷயம் ஒன்னு கோயம்பத்தூரில் ஒளிஞ்சு இருந்தது...

டவுன் ஹால் மணிக்கூண்டு கிட்டக்க கோணியம்மன் கோவில் பக்கத்தில் ஒரு காம்பிளக்ஸ்.  அதுக்குள்ளார கடைசியில் ஒரு சின்ன டீ கடை, பேரு, லக்ஷ்மி டீ ஸ்டால்.   சாயந்தரம் ஆனா கூட்டம் கும்மி அடிக்குது.  என்னை சமீபத்தில் தான்  முதல் முதலா ஒரு நண்பர் அங்கே கூட்டிட்டு போனாரு, வந்து பாரு இந்த ஆச்சரியத்தைன்னு.

டீ விலை ரெண்டே ரூபாய், வடை பஜ்ஜி எல்லாம் ரெண்டு ரூபாய் தான்.  டீ ஒரு வேளை கொஞ்சமா கொடுப்பாங்களோன்னு பார்த்தா சராசரியை விட ஜாஸ்த்தியா தான் இருந்தது... அதை விட ஆச்சரியம் டீயோட டேஸ்ட்டு.  இதில் மூணு பேருக்கு சம்பளம் வேற... டீ டோக்கன் கொடுக்க ஒரு ஆளு, மாஸ்டர் ஒருத்தரு, டீ சப்பிளையர் ஒருத்தரு....   அடுத்த ஆச்சரியம் விலை பட்டியல் போர்டில் இருந்தது... அந்த விலை எல்லாம் 2006 ஆம் வருஷத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லாம இருக்குது... ஆடி போயிட்டேன்... 

இந்த விலையில் இவ்வளவு அருமையான டீ இவங்களால் தர முடியுதுன்னா... அஞ்சு ரூபா வாங்கிட்டு டீன்னு சொல்லி டீ மாதிரி தர்றவங்களை நினைச்சா ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு. 

ஆத்திரம் வந்து என்ன பண்ண... வாங்க ஒரு டீ சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!

Monday, February 1, 2010

புறம்போக்குக்கு பட்டாவாம்!

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு அதிரடி அறிவிப்பு அரசாங்கத்தில் இருந்து! 

தொடர்ந்து மூணு வருசமா புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தா அதுக்கு பட்டா கொடுத்துருவாங்க!  இதுவரைக்கும் அஞ்சு வருசம்னு இருந்த கால கெடுவை மூனா கொறைச்சிருக்காங்க!  கால கொடுமை!

புறம்போக்கு நிலம்ன்கறதே அரசாங்க சொத்து தான்.  நிதி நிலை அறிக்கையில் காட்டுற அரசானத்தோட அசையா சொத்துக்களில் அதுவும் அடக்கம்.  அதை ஆக்கிரமிக்கிறதே சட்ட விரோதம்.  நியாயமா பாத்தா அப்படி ஆக்கிரமிச்சிருக்கறவங்களை ஓடவிட்டு சுளுக்கு எடுக்கணும். அந்த நிலத்தை மீட்டு வெளி கட்டி அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரணும். 

பிற்காலத்திலே கம்பெனியோ பள்ளிக்கூடமோ கட்டனும்னா முதலில் இது மாதிரி அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட டிரை பண்ணனும்.. அது வசதியா இல்லைன்னா தான் மத்தவங்க நிலத்தை கையகப்படுத்தனும்!

இப்போ என்னடான்னா... நீ ஆக்கிரமிச்சு வெச்சு இருக்கியா?? நீயே வெச்சுக்கோன்னு சட்டமே போட்டுட்டாங்க.   அரசாங்கத்தை ஏமாத்த தெரிஞ்சவன் சமத்து.  ஏமாத்த தெரியாதவன் ஏமாளின்னு அரசாங்கமே அங்கீகாரம் கொடுக்குது!  எங்கே போயி முட்டிக்கிறது?

தரிசா கிடக்கிற நிலத்தை எல்லாம் பண்படுத்தி ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய இலவசமாக கொடுக்க போறேன்னு சொல்லிச்சு அரசாங்கம்.  நம்பின விவசாயிகள் மனசை புன்படுத்தினது தான் மிச்சம்!

இப்போ என்னடான்னா... 'கடந்த மூணு வருசத்திலே' யாரெல்லாம் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிச்சீங்களோ நீங்களே வேச்சுக்கொங்கன்னு அரசாங்கம் சொல்லிடிச்சு.  மூணு வருசத்துக்கு முன்னாடியே யாரெல்லாம் பிளான் பண்ணி வளைச்சு போட்டாங்களோ???

இப்படி அரசாங்க சொத்தை இலவசமா தாரை வார்க்கிறது சரியா???  இதை பத்தி கேள்வி கேக்கிற உரிமை இங்கே யாருக்குமே இல்லை!  அரசியல் சாசனம் அப்படி யாருக்கும் அதிகாரம் கொடுக்கலை!

கணக்கு தணிக்கை அதிகாரி மட்டும் இப்படி நடந்திருக்கு, இதனால் அரசுக்கு இத்தனை கோடி நஷ்டம்னு அறிக்கை கொடுக்க முடியும். அவரும் கூட கேள்வி கேட்கவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாது!

எத்தனை கோடி நஷ்டம் பண்ணினா என்ன..... உங்க பணம் எங்க பணம் தானே போகுது.... போயிட்டு போகட்டும்.... நம்ம சகிப்பு தன்மையை இப்படி தானே நிரூபிக்க முடியும்???

மாருதியின் அடுத்த அதிரடி: ஈக்கோ!


மாருதி நிறுவனம் ஜப்பானின் சுசுகி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கியபோதே அதிரடியாக தான்  ஆரம்பித்தது!

முதல் முதலாக குட்டி கார் அறிமுகம் செய்து ஹிட்ட் கொடுத்தது.  பின்னர் ஆம்னி, ஜிப்சி, எஸ்டீம், பலேனோ என்று பல பல விதங்களில் சிறப்பான வண்டிகள் கொடுத்தது.

கோவையில் எங்க அப்பா வேலை செஞ்ச கம்பெனி ஓனர் ஒரு ஆம்னி வெச்சிருந்தார். அதை பார்த்தபோதே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. பாக்க பஸ் மாதிரி அழகா நீட்டா டிசைன் பண்ணி இருந்த வண்டி அது.

பின்னர் கார் வாங்குற வேளை வரும்போது நிறைய ஆராய்ச்சிகள் நடந்தது.. முதல் சுற்றிலேயே ஆம்னி அவுட்.  அதில் ஏசி கிடையாது. 800 CC எஞ்சின். அப்படி இப்படின்னு நிறைய குறைபாடுகள் தான் தெரிஞ்சுது முதலில்.

வெர்சான்னு ஒரு வண்டி விட்டாங்க.. ஆனா அது அவ்வளவு ஹிட்டாகலை. 

இப்போ திடீர்னு இறக்கி இருக்காங்க பாருங்க... ஈகோன்னு  ஒரு அதிரடி சரவெடி.

1200CC எஞ்சின். 73 bhp பவர். ஏழு பேர் உக்கார வசதி. ஏசி.  இத்தனைக்கும் விலை 2.7 லட்சம் தான்.   பின்னி பெடலேடுத்துட்டாங்க மாருதி. 

போன மாசம் டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த வண்டியை அறிமுகம் செஞ்சதுமே இந்திய ஆட்டோமொபைல் துறை ஆடி போயிருச்சு.  டாட்டாவோட மேஜிக் வண்டிக்கு சரியான ஆப்பு ஈக்கோ.  இத்தனை குறிஞ்ச விலையில் இத்தனை வசதிகளோடு ஒரு வண்டி வந்தா சும்மா இருக்குமா மிடில் கிளாஸ் மக்கள்!

நவம்பர் மாசம் தான் விற்பனைன்னு சொன்ன மாருதி என்ன நினைச்சுதோ தெரியலை இப்பவே விற்பனைக்கு விட்டுட்டாங்க.  புக்கிங் புகுந்து விளையாடுது சென்னையில்.

ஒரு குடும்பத்துக்கு சவுகரியமான வண்டி, மாருதி பிராண்டு, எங்கே போனாலும் சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ், எளிமையான ஹான்டிலிங் சிஸ்டம், அடக்கமான விலை,  ஹை எண்டு வண்டிகளின் வசதி.....  எழுதி வெச்சுக்கோங்க... அடுத்த ரெண்டு வருஷத்துக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டு இந்த வண்டி தான்....

குவாலிஸ் போன வருத்தத்தை நிச்சயமா ஈக்கோ ஈடு செய்யும்னு நினைக்கிறேன்!

நாமும் நமது கல்வி கொள்கையும்!

இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளை கடந்துவிட்டது.  அரசியல் சாசனம் சில அடிப்படை கடமைகளை அரசாங்கங்களுக்கு சொல்கிறது.  அவற்றுள் ஒன்று பதினான்கு வயது வரையிலான பிள்ளைகளுக்கு தங்கள் பகுதியில் கட்டாய இலவச தாய்மொழிவழி கல்வி கொடுக்கப்படவேண்டும் என்பதும் ஒன்று!  இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கேரளம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நூறு சதவீத கல்வி அறிவு இல்லை.  ஆக, அரசியல் சாசன கடமையை நாம் ஒழுங்காக சரிவர செய்யவில்லை என்பது எல்லா மாநில அரசுகளுக்கும் பொதுவான விஷயமாக ஆகி விட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் என்று ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது.  முதியோர் கல்வி, மகளிர் கல்வி, வேலைக்கு செல்வோருக்கான இரவு பாடசாலை, மழலையர் கல்வி, குழந்தைகளுக்கான கட்டாய கல்வி என்று பல பல திட்டங்களை ஒருங்கிணைத்து அனைத்து பிரிவினரும் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்.  அந்த திட்டமும் எதிர்பார்த்த பலனை தரவே இல்லை.

திறந்த நிலை பல்கலைகழக திட்டம் என்பது பெரும் வரவேற்பை பெற்ற திட்டம்.  வேலைக்கு செல்லுவோர் தங்கள் கல்வி அறிவை மேலும் மெருகேற்றி கொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைந்த சிறந்த திட்டம்.  ஆனால் அப்படி திறந்த நிலை பல்கலை கழகங்கள் மூலம் பெறப்படும் பட்டங்கள் செல்லாது என்று நீதிமன்றங்கள் அதிரடி தீர்ப்புகளை அளித்து வருகின்றன.  அதனை எதிர்த்து எந்த மனுவையும் எந்த அரசும் இதுவரை செய்யவில்லை.  இதன் மூலம் திறந்தநிலை பல்கலை கழகங்களில் பயின்றவர்களின் எதிர்காலமே கேள்வி குறியாக இருக்கிறது.

சமீப அதிர்ச்சியாக நிகர் நிலை பல்கழகங்கலாக செயல்படும் பல கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.  அத்தகைய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயின்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் இப்போது கேள்வி குறையாக நிறுத்தப்பட்டு இருக்கிறது!

இவை தவிர, இப்போது இயங்கி வரும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் வெறுமனே மனப்பாட பகுதியாக பாடங்கள் பயிற்றுவிக்க பட்டு, மாணவர்களை ஒப்பித்து மனனம் செய்து தேர்வு எழுதும் இயந்திரங்களாக மாற்றும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.  பட்டம் பெற்ற மாணவர்கள் கூட வங்கியில் ஒரு வரைவோலை எடுக்க திணறும் நிலையிலே இருக்கிறது இன்றைய கல்வி தரம்.  அதனை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை, இதுவரை.

ஐந்து விதமான பாட திட்டங்களை கொண்டுள்ள நாம், ஒவ்வொரு பாட திட்டத்துக்கும் தனி தனியான தரங்களை நிர்ணயித்துல்லத்தான் மூலம், ஒரே வகுப்பில் பயிலும் வெவ்வேறு பாட திட்ட மாணவர்களின் அறிவு திறன்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி வைத்து இருக்கிறோம்.  கிராமப்புற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்வியை வழங்க மறுத்து, கிடைக்கிற கல்வியை அரைகுறையாக கற்கின்ற சூழலை ஏற்படுத்தி, அவர்களது மன வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் தடை செய்து வைத்து இருக்கிறோம்.

இப்படியான சூழலில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதி உயிரோடு இருந்திருந்தால் என்ன பாடியிருப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

நம் பிள்ளைகளுக்கு அறிவுசார் கல்வியை ஒழுங்காக கொடுக்க முடியாத சமுதாயத்தில் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதை நாம் எப்போது தான் உணர்வது??  அதை மாற்றுவதற்கான, சிறந்த அடிப்படை களிவியை கொடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு அரசை தூண்டும் வகையில் வலியுறுத்துவது யார்??  நாம் என்ன செய்ய போகிறோம்??? கிடைத்ததை படித்து, மற்றவர்களை பார்த்து பெருமூச்சு விடும் கிராமப்புற மாணவனின் மனக்குறையை யார் மாற்றுவது??  இத்தகைய பொறுப்பற்ற சமுதாயத்தின் பிரதிநிதியாக நாம் இருப்பதை எண்ணி நம்மால் வெட்கமாவது பட முடிகிறதா???  எதற்கும் எனக்கு விடை தெரியவில்லை.

Sunday, January 31, 2010

வைகோ : சரிந்த சரித்திரம்!

பழனி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம்.
காங் வேட்பாளர் கார்வேன்தனை ஆதரித்து திமுக அணியினரின் பொதுக்கூட்டம்.
கூட்டத்தில் பேசிய அனைவரும் (நடுநிலையாளர் என போற்றப்படும் முரசொலி மாறன் உட்பட) வைகோ என்கிற பேரை கவனமாக தவிர்க்கிறார்கள்.
பிற்பாடு பேசவருகிறார் புரட்சி புயல்.
எடுத்த எடுப்பிலேயே "என் பாராளுமன்ற அரசியல் ஆசான் அண்ணன் முரசொலி மாறன் அவர்களே" என தொடங்க அதிர்கிறது கைதட்டல்.  அந்த கைதட்டல் கொடுத்த சவுக்கடியின் வீச்சை மேடையில் இருந்த திமுக தலைவர்களால் தாங்கி கொள்ள முடியாததை நாங்கள் கண்கூடாக கண்டோம். அந்த பேச்சில் அத்தனை தொண்டர்களையும் கட்டி போட்டார் வைகோ.  அந்த பேச்சு திறம்....

திமுகவில் இருந்து வெளியேற நேர்ந்தபின் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க குடவாசல் பொதுக்கூட்டம்..  வரலாற்று நிகழ்வுகளை கட்டி கோர்த்து நிகழ்கால அரசியலை தொட்டு தூக்கி மிக நீண்ட சொற்பொழிவு.... அந்த பேச்சு திறம்..

பின்னர் அவரது எத்தனை எத்தனையோ மேடை பேச்சுக்கள்....  சந்தேகமே இல்லை.. அவர் ஒரு மிக மிக சிறந்த அரசியல் பேச்சாளர் தான்.

எல்லா சிறந்த தளபதிகளும் சிறந்த தலைவர்களாக பரிணமிப்பது இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் வைகோ.

திமுகவில் இருந்து வெளியேறி புதிய இயக்கம் கண்டு சிறப்பான தொடக்கம் கண்டார். எனினும் தவறான முடிவுகளால் தன்னையும் தன இயக்கத்தையும் தமிழகத்தின் சிறந்த காமடி இயக்கமாக மாற்றி காட்டினார்.

எந்த இயக்கத்தை எதிர்த்து தனி இயக்கம் கண்டாரோ அதே இயக்கத்துடன் அணி சேர்ந்தது.  பாசிச சக்தி என்று நரம்பு புடைக்க முழங்கி எதிர்த்த அதிமுகவுடன் அணி சேர்ந்தது.. அதுவும் உப்பு சப்பு இல்லாத சங்கரன்கோவில் தொகுதியை காரணம் காட்டி.. என்று நிலையற்ற அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தது வைகோவுக்கு எதோ தவறான வழிகாட்டுதல்கள் நடைபெறுவதான தோற்றமே ஏற்படுத்தியது.

திமுக 22 தொகுதிகள் கொடுக்க இசைந்து அதில் பெரும்பான்மையான தொகுதிகள் மதிமுக செல்வாக்கான தொகுதிகளாக கொடுக்க இசைந்தும், சங்கரன் கோவில் தொகுதி அந்த பட்டியலில் இல்லை என்று காரணம் சொல்லி அதிமுகவின் 35 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் போட்டு அணி சேர்ந்தார்.  கொடுமை என்னவெனில் மதிமுக செல்வாக்கான தொகுதிகள் ஒன்று கூட அதிமுக பட்டியலில் இல்லை.  எந்த சங்கரன்கோவில் திமுக தரவில்லை என்று வெளியேறினாரோ, அதே சங்கரன்கோவில் அதிமுகவும் தரவில்லை. அதை எதிர்த்து வைகோவால் எந்த முணுமுணுப்பும் செய்யமுடியவில்லை.  ஒருவேளை திமுகவின் தொகுதி ஒதுக்கீட்டை ஏற்று இருந்தால் குறைந்தது 13 தொகுதிகளிலாவது மதிமுக வெற்றி பெற்று இருக்கும்.  அதிமுகவுடன் இணைந்ததில் வெற்றி வாய்ப்புக்களை இழந்து, அதிமுகவின் பிரச்சார குழு தலைவராக மட்டும் வளைய வர முடிந்தது வைகோவால்.

முன்பு 211 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டு துணிச்சலாக தேர்தல் களம் கண்ட மதிமுகவுக்கு இப்படியான அடிமை சாசன நிலைப்பாடு ஏற்படும் என்று எந்த மதிமுக தொண்டனும் எதிர்பார்த்து இருக்க மாட்டான்.

தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கிராமங்கள் தோறும் குக்கிராமங்கள் தோறும் கிளைகள் நிறுவி, பிரச்சாரம் செய்து மக்களோடு மக்களாக இணைந்து நின்ற தலைவர்களுள் ஒருவர் வைகோ.  அவரது இயக்கத்தின் வீச்சு தமிழகம் முழுமையும் விரவி கிடக்கிறது.  பாமக, வி.சி  போன்ற குறுகிய பிராந்திய கட்சிகளே தெம்பாக சட்டமன்றம் செல்லும் பொழுது மதிமுக போன்ற பேரியக்கம் கூனி குறுகி யாரோ போல சட்டமன்றம் நுழைவதற்கு, வைகோவின் தவறான அரசியல் நிலைப்பாடுகள் அன்றி வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.

திமுக, அதிமுக இயக்கங்களுக்கு மாற்றாக பேரியக்கமாக முகிழ்த்து சரித்திரம் படைக்கும் என கருதிய மதிமுக இன்று சரிந்து தேய்ந்து அதிமுகவின் துணை அமைப்பு போல அமைந்து போனது வருத்தமே!  மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்துவது, அவ்வப்போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்கள் பணியாளராக தங்களை முன்னிறுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மதிமுக செய்யவேயில்லை.

திமுக இயக்கத்தை பொறுத்தவரை உட்கட்சி ஜனநாயகம் மிக சிறப்பாக இருக்கும்.  அந்த இயக்கத்தின் இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை பிரமுகர்கள் கூட உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னேர்ரப்படுவார்கள்.  இயக்கம் மீதான விமரிசனம் ஏதும் இருப்பின் அவர்களால் தைரியமாக அதனை வெளிப்படுத்த முடியும்.  பிற இயக்கங்களான அதிமுக, காங், பாமக போன்றவற்றில் அப்படி அல்ல. அங்கே தலைமையும் தலைமைக்கு விசுவாசமான சில தலைவர்கள் தவிர வேறு யாருமே முக்கியத்துவம் பெறுவதில்லை.  அப்படியான ஜனநாயகத்தில் வளர்ந்த வைகோவும், தனது சுய திறன் காரணமாக உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் பெற்றவரே.  திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக முன்னேறினார்.  அத்தகைய அங்கீகாரம் திமுகவில் கொடுக்கப்படுகிறது.  இப்போதும் மூக்கையா போன்ற மாவட்ட செயலாளர்கள் கூட தனி செல்வாக்குடன் வளைய வருவது திமுகவில் மட்டும் தான் சாத்தியம்.

ஆனால், மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பது மிஸ்ஸிங்.  இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சுயமாக வெளிப்படுத்தும் நிலை இப்போது அங்கே இருப்பதாக தெரியவில்லை.  அவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுத்தாலே, மதிமுகவின் வளர்ச்சிக்கான வழிகளை மனம் திறந்து கொட்டுவார்கள்.

இப்போது சரிந்திருக்கும் மதிமுகவின் செல்வாக்கு பின்னர் சரித்திரமாக உயர வாய்ப்பு உண்டு??  ஆனால் அது சாத்தியமா???  சுய முடிவுகள் எடுக்கும் திறன் வைகோவுக்கு வருமா??  அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த இயக்கம் விடுபடுமா???  

Saturday, January 30, 2010

எது தியாகம்??

நேற்று சென்னை முழுக்க ஒரு திடீர் ஆச்சரியம்!  போஸ்டர் ஓட்ட தடை செய்யப்பட சென்னை மாநகரத்தில் திடீர் திடீரென முளைத்திருந்தது "வீரத்தமிழ் மகன்" முத்துக்குமார் நினைவஞ்சலி போஸ்டர்கள்.  நினைவேந்தல் நிகழ்ச்சியில் சத்தியராஜ் உட்பட சில அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வேறு அள்ளி தெளிக்கப்பட்டு இருந்தது!

தோழன் முத்துக்குமரன், இலங்கையில் நடைபெற்று வந்த போரை நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கையோடு, தன்னை தானே எரியூட்டி இறந்துபோன இளைஞர்.  அவரது "வீரத்தையும்" "தியாகத்தையும்" மெச்சி விடுதலை சிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் சீமான் கொளத்தூர் மணி போன்றோரும் நேரடியாக அஞ்சலி செலுத்தி அவரை கவுரவித்தனர்!  முத்துக்குமாரின் மரணம் ஒரு புதிய எழுச்சி அலையை ஏற்படுத்தியது தமிழகத்தில்.  அது போன்ற "வீரத்துக்கான" பாராட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டன.

தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் காரணங்களுக்காக தியாகம் செய்வது ஒரு வழக்கமாக ஆகிவிட்ட ஒன்று.  இன்று நேற்று அல்ல, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படியான தியாகங்கள் போற்றப்பட்டு வருகின்றன.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொது தமிழுக்காக உயிர்கொடுத்த மொழிப்போர் தியாகிகள் அரசாங்கத்தாலேயே வருடாவருடம் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.  அதில் ஒரு நியாயம் இருக்கிறது.  எங்கே எமது மொழி அடியோடு அழிந்து போய் விடுமோ என்கிற ஆதங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, அதன் காரணமாக போர்முனையில் இறந்தவர்கள், மற்றும் தங்களை தாங்களே உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்பவர்கள் எல்லோரையும் பாராட்டுவது என்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் புரூக்கிளின் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் உயிரை கொடுத்தாவது அந்த மாமனிதன் உயிர்பெற வேண்டும் என்கிற அளவிலே தங்களை தாங்களே எரியூட்டி கொண்டு இறந்தவர்கள் அநேகம் பேர்.   அது தியாகமோ, வீரமோ அல்ல என்பது எனது கருத்து.  அது ஒரு மனிதன் மீதான அபிமானத்தில் எடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான முடிவு.  எனினும் அது குற்றச்சாட்டுக்கு உரிய சங்கதியாக இருந்திருக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் டான்சி வழக்கில் கடுமையான தீர்ப்பு வழங்கியபோதும், ஜெயலலிதா கைது செய்யப்பட போதும், ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோல்வியுற்ற போதும் அதிமுக தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இது ஒரு அரசியல் கட்சி தொண்டர் தன தலைமை மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை / விசுவாசத்தின் வெளிப்பாடு.

திமுகவில் இருந்து வெளியேறவேண்டிய சூழல் வைகோவுக்கு ஏற்பட்டபோது, இடிமழை சங்கர் உட்பட ஐவர் தற்கொலை செய்துகொண்டனர்.  அதுவும் தனது நம்பிக்கைக்குரிய தளபதியின் நிலை கண்ட அதிர்ச்சியை வெளிப்படுத்தும் முகமான ஒரு தொண்டனின் உணர்ச்சிவசப்பட்ட முடிவு தான்.  தனி இயக்கம் தொடங்க முதல் புள்ளி வைத்தது அந்த தற்கொலைகள்.  முதல் மூன்று ஆண்டுகள் அந்த தற்கொலைகள் போற்றப்பட்டு பின்னர் மறக்கப்பட்டது.  சமூகம் சார்ந்த தியாகங்கலாக அவை ஒரு போதும் பார்க்கப்படவில்லை.

பொதுவாக, இந்தியாவில் தற்கொலை என்பது கைதுக்குரிய கடுமையான குற்றம்.  அப்படியான தற்கொலைகளை ஆதரிப்பது / அங்கீகரிப்பது என்பது பிறரையும் அது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட தூண்டும் என்பதால், அப்படி ஆதரிப்போர் / அன்கீகரிப்போர் தற்கொலைக்கு தூடுதலாக இருந்ததாக கருதப்பட்டு நடவடிக்கைக்கும் உரியவர் ஆகின்றனர்.

எனினும், சில அரசியல் இயக்கங்கள் மட்டும் எதற்காகவோ, சமூகம் சாராத தற்கொலைகளை நியாயப்படுத்துவதும், அங்கீகரிப்பதும் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

அப்படி அங்கீகரிப்பது ஒரு புறம்... ஆனால் அவற்றுக்கு வீரம், தியாகம் என்றெல்லாம் பெயர் சூட்டி புளகாங்கிதம் அடைவது சகிக்க முடியவில்லை.

நாகை பள்ளி குழந்தைகள் இறந்த சம்பவத்தில் ஆசிரியை சுகந்தி நீச்சல் தெரியாத நிலையிலும் குழந்தைகளை காப்பாற்றி இறுதிவரை போராடி உயிர்விட்டாரே... அதை வீரம் என்றோ, தியாகம் என்றோ அங்கீகரிக்க எந்த அரசியல் வாதிக்கும் மனமில்லை.  காரணம் அந்த "தியாகம்" ஓட்டுக்கள் பெற்று தராது!

இப்படியான தமிழக சூழலில் எது தியாகம் என்கிற தெளிவு யாருக்கேனும் பிறந்தால் தெரிவியுங்களேன்... தெளிவுறுகிறேன்!

Monday, January 25, 2010

சுகந்திக்கு அண்ணா விருது!

நாகை மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் பள்ளி குழந்தைகளுடன் போராடி மரித்த ஆசிரியை சுகந்தி பற்றி அறிந்திருப்பீர்கள்!

அந்த சம்பவம் பற்றி காண இங்கே  சொடுக்கவும் .  அந்த சின்ன பெண்ணின் வீரத்தை மெச்சி புளகாங்கிதம் அடைந்த தமிழகம்.. அவரது குடும்பத்தினருக்கு வீடும், நஷ்டஈடும், நினைவு சின்னமும் அறிவித்து பெருமை பெற்றது.

விபத்து நடைபெற்ற விஷயம் - சுகந்தி பற்றிய குறிப்புக்கள் - இணையத்தில் உலவ விட்ட மறு நாளே அரசு சார்பில் தொடர்பு கொண்ட ஓர் உயர் அதிகாரி, சுகந்திக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்படும் என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்து இருந்தார்.  இது குறித்தும் விபத்துக்கு  பின் என்கிற எனது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

இப்போது வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு நேற்றைய தினம் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், சுகந்திக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வந்திருக்கிறது என்றாலும், அரசு அப்படி ஒரு விருதை கொடுத்து அவரை கவுரவிக்கும் என்கிற உத்திரவாதத்தை ஏற்கனவே நான் பெற்று இருந்தேன்.  சொன்னதை செய்தும் காட்டி இருக்கிறது அரசு.

தமிழகத்தின் வீரம் இன்னும் ஒருமோரை அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது...

கண்ணீர் துளிகளோடு அஞ்சலி... அந்த ஆசிரியைக்கும்... அவருடன் மறைந்த குழந்தைகளுக்கும்!

Monday, January 18, 2010

தேதிக்காக காத்திருக்கும் ரயில்வே!



தமிழகத்தில் பல பல ரயில் திட்டங்கள் ஒரு வழியாக நடைபெற்று வந்து கொண்டு இருக்கிறன.  அவை பயன்பாட்டுக்கு வரும்போது தான் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் பல திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.  ஆனால் வித்தியாசமாக சில விஷயங்களையும் நான் அறிய நேர்ந்தது... அது உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக!

முழுமையாக பணிகள் முடிவடைந்தும் வி.ஐ.பிக்களின் தேதிக்காக காத்திருக்கும் இரண்டு திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

விழுப்புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை மார்க்கம் மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று இப்போது முடிவும் பெற்று விட்டது.  மெயின் லைன் என்று சொல்லப்படும் அந்த வழி தடம் மிக மிக முக்கியமான நகரங்கள் வழியாக பயணித்து, சென்னைக்கும், தேன் மாவட்ட நகரங்களுக்கு நேரடி இணைப்பை தந்து கொண்டு இருக்கிறது. 

அகல ரயில் பாதை பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கின்றன அந்த நான்கு மாவட்டங்களும்!  இந்நிலையில் பணிகள் முடிவடைந்தும் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படாமாலேயே காத்து கிடக்கிறது புதிய ரயில் பாதை.  இப்போதைக்கு சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.  பயணிகள் ரயில் "முறையான" துவக்க விழாவுக்கு பின் பயணிக்கும்!

அதேபோல, விழுப்புரம் - திருச்சி பாதை மின் மாயம் ஆக்கப்பட்டு சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. எனினும், பயணிகள் ரயில் போக்குவரத்து வி.ஐ.பிக்களால் முறையாக துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது!

தேதிக்காக ரயில்வே காத்திருப்பதால் மக்களுக்கு திட்டங்கள் காத்து கிடக்கிறது. 

Printfriendly