Wednesday, December 23, 2009

விண்வழி பயணம்!

மொட்டை மாடியில் நின்று விமானத்துக்கு டாட்டா காமித்து குதூகலித்து குதித்த இளமை காலங்கள் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் கழிந்தபோது, விமான நிலையத்தை பார்க்கவேண்டும் என்பது ஒரு பெரிய ஆசையாக இருக்கவில்லை! விமானத்தை பார்ப்பது தான் ஆசையாக இருந்தது!



அப்போது கோவையில் சிவில் விமானப்போக்குவரத்து துவங்கவில்லை. சூலூர் விமானப்படை விமான தளத்தில் இருந்து சில விமானங்கள் இயங்கி வந்தாலும், பயணிகள் விமானம் இயங்க அனுமதி இல்லை!

பின்னர் பீளமேடு விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து முதல் முதலாக வாயுதூத் விமான சேவை துவக்கப்பட்டது.. அப்போதும் பெரிதாக எந்த ஆர்வமும் எழவில்லை விமானம் பார்ப்பதற்கு!

ஏர்பஸ் கோவைக்கு அறிமுகம் செய்யப்பட்டு மும்பை (அப்போது பம்பாய்) -கோவை விமான சேவை துவங்கியபோது, விமான நிலையம் சென்று பார்க்கவேண்டும் என்று ஆர்வம் முதல் முதலில் எழுந்தது!

விமான நிலையத்தில் பார்வையாளருக்கு அப்போது அனுமதி இல்லை என்பதால் சைக்கிளில் நானும் எனது நண்பனும் சிங்கநல்லூர் வழி எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அடைந்து விமான நிலைய ஓடுபாதை முடியும் இடத்தில் காத்திருக்க துவங்கினோம்.

அடடடடடா....  விமானம் வந்து தரை இறங்கும்போதும்.... பின்னர் புறப்பட்டு விண்ணுக்கு எழும் போதும் பார்த்து பார்த்து பரவசப்பட்ட அந்த சந்தோஷம் சொல்ல முடியாதது!

பின்னர் காங்கிரீட் காடான சென்னையில் வேலை... வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம்.. பெரும்பாலும் பேருந்து.. அவ்வப்போது ரயில்... எப்போதேனும் அத்தி பூத்தாற்போல் விமானம்! (ஆமா "அத்தி" எப்போது பூக்கும்?? தனியே விவாதிப்போம்)

விமான பயணம் இப்போது எல்லோருக்குமே சர்வ சாதாரணமாக ஆகிவிட்டதால், நான் விமானத்தில் பயணித்ததை பெருமையாக சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை!  ஆனால் அந்த விமான பயணத்தின் காட்சிகள்... அந்த பரவச சிலிர்ப்பு!



முதல் முதல் எனக்கான விமான பயணம் பூனே நகரில் தான் துவங்கியது... அவசர பயணத்தில் சென்னைக்கு ரயில் டிக்கெட் கிடைக்காமல் போன அதிர்ஷ்டம் விமானத்தை நோக்கி ஓட வைத்தது!  பின்னர் பல்வேறு பயணங்கள்... பல்வேறு நோக்கங்கள்... பல்வேறு தேவைகள்...

புனே விமான நிலையம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.. சின்ன விமான நிலையம்!  சுற்று வட்டாரத்தில் நம்மை வெட்டி போட்டால் கூட யாரும் கேட்க மாட்டார்கள்... அத்தனை பொட்டல் வெளி காடு!  கடை கன்னி எதுவும் கிடையாது!  மதியம் சாப்பிடாமல் ஏர்போர்ட்டுக்குள் போயி அங்கே ஏதாவது சாப்பிட்டு கொள்ளலாம்னு நினைத்து யானை விலையில் சோளப்பொறி சாப்பிட்ட அனுபவம் எல்லாம் சொல்லி மாளாத தனி கதை!

ஒரு வழியாக விமானத்தில் ஏறி அமர்ந்தாச்சு.. பேருக்கு ஏத்த மாதிரியே அது பஸ் மாதிரி தான் தெரிந்தது எனக்கு!

பேருந்திலாவது புஷ் பேக் வசதி கொண்ட சீட்டுக்கள் இருக்கும்.. இதில் அது கூட இல்லை... நெருக்கமான இருக்கைகள்...மிதமான ஏசி...ஆடம்பர விலையில் காப்பி... உள்ளுக்குள்ளேயே நடமாடும் ஷாப்பிங் காம்பிளக்ஸ் என்று வித்தியாசமான பயணமாக பல பயணங்கள் அமைந்தது...

ஏர்பஸ் விமானத்தை விட போயிங் விமானங்கள் ஸ்மூத்தாக பயணிப்பதாக எனக்குள் ஒரு உணர்வு!  ஏர் பஸ்ஸில்  அதிர்வுகளும் விண்ணில் திரும்புகையில் எல்லாம் ஒரு ஜெர்க்கும் சாதாரணமாக இருக்கிறது! போயிங்கில் அப்படியான அதிர்ச்சிகள் எதுவும் இல்லை! 

இன்னொரு விஷயமும் கவனித்தேன்... எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஏதேனும் ஒரு வகை விமானங்களை மட்டும் தான் வாங்குமாம்!  விமான பராமரிப்புக்கு ஒரே நிறுவனத்தை வைத்து கொள்ளலாமே என்பதால்!  இல்லை என்றால் ஒவ்வொரு நிறுவனமும் தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு வகை விமானத்துக்கும் ஒவ்வொரு நிறுவனத்தை பராமரிப்பு பணிக்காக வைக்க வேண்டி இருக்கும்!

கிங் பிஷர் நிறுவனம், ஏர்பஸ் விமானங்களை மட்டும் தான் வாங்குகிறது... ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் போயிங் விமானங்களை மட்டும் தான் வாங்குகிறது... இரண்டு வகை விமானங்களையும் வைத்து இருக்கும் ஒரே நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ்....

அதேபோல, தனியார் விமான நிறுவனங்களின் விமானிகளை விடவும் இந்தியன் ஏர்லைன்சின் விமானிகள் சிறப்பாக விமானத்தை இயக்குவதை பார்த்து இருக்கிறேன்... ஏறும்போதும் இறங்கும்போதும் எந்த விதமான அதிர்வும் இல்லாமல் மென்மையாக விமானத்தை அவர்கள் கையாளுவார்கள்!  (ஒருவேளை நான் பயணித்த விமானங்கள் அப்படியோ என்னவோ? யார் கண்டது?)





 ரொம்ப அற்புதமான விஷயமே, மழை மேகத்துக்கு மேலே பறப்பது தான்...  மேகத்துக்கு மேலே வெயிலும் மேகத்துக்கு கீழே மழையுமாய் ஒரு வித்தியாசமான வானிலையில் கொத்து கொத்தாக செம்மறியாட்டு கூட்டம் போல மழை மேகம் திரண்டு நிற்க, அதன் மீது பறந்து செல்வதன் சுகம் அனுபவித்தால் தான் தெரியும்! 

அதிலும், நீங்கள் இறங்கும் இடத்தில் மழை பெய்து கொண்டு இருந்தால், மழை மேகத்துக்கு மேலே இருந்து மேகத்தை கிழித்து கீழ் வருவதன் சிலிர்ப்பு வார்த்தைகளால் வருணிக்க எனக்கு தெரியவில்லை! நதியாடும் நாணல் போல மேகம் நீண்டு நீண்டு அளைவது கொள்ளை அழகு!

சூரியனுக்கு எதிர்ப்பக்கம் பறக்க நேரும்போதெல்லாம், மேகங்கள் மீதான நம் விமான நிழலை சுற்றி முழுவட்டத்துக்கு வானவில் தோன்றுமே அது அதி அற்புதம்!  முழு வட்ட வானவில்லை அப்போது தான் நான் கண்டேன்!  அது ஒளி சிதறல் என்றும், மேகத்தின் நீர் திவலைகளில் சூரியனின் கதிர்கள் காட்டும் மாய பிரதிபலிப்பு என்றும் பக்கத்தில் இருந்தவர் விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார்.... அறிவியலை விட்டு தள்ளுங்கள்... சில நேரங்களில் மட்டுமாவது அறிவில்லாமல் இருப்பது தான் சுகம்!  அந்த சிலிர்ப்பான அனுபவத்தை அனுபவிக்க அறிவு ஒரு தடையாக இருந்து தொலைக்க கூடாது!




ஏற்காடு மலை மீதான பயணமும், சபரிமலை மீதான பயணமும் அடிக்கடி நிகழ்வதாலோ என்னவோ என்னை மிக கவர்ந்த ஒன்று.... (அப்போ இமைய மலை மீதான பயணம் எப்படி இருக்கும்??)  ஏற்காடு நம் கண்ணுக்குள் உட்கார்ந்து  கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்வதற்குள் கோவை நகரம் வந்து தொலைக்கிறது.

எண்ணூறு கிலோமீட்டர் வேக பயணம் என்பதின் உண்மையான அர்த்தம் அது தான்!  சேலத்தில் இருந்து கோவைக்கு பேருந்தில் மூன்றரை மணி நேரம்... ரயிலிலும் அதே!  ஆனால் பத்து நிமிடத்தில் கோவையில் இறங்கி விடுவதால் காவிரியை பார்க்க தவறி விடுகிறேன்.. ஒவ்வொரு முறையும்!



எந்த விமான நிலையத்துக்கு உள்ளே போக அனுமதியில்லாமல் வெளியே நின்று விமானம் பார்த்து ரசித்தேனோ, அதே பீளமேடு விமான நிலையத்துக்கு விமானத்திலேயே வந்து இறங்குகையில் ஒரு மிதப்பு வருமே மனசுக்குள்... அதுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது!  எதையோ சாதித்த திருப்தி!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள் தான் செயல்பாட்டில் இருக்கிறது... இதோ இப்போது புதிதாக சேலமும்!

தஞ்சை, வேலூர் விமான நிலையனகளையும் சேவையில் ஈடுபடுத்தவேண்டும்... அது தவிர இரண்டாம் நிலை நகரங்களில் ஹெலிபேடுகள் அமைத்து ஹெலிகாப்டர் வசதியும் ஏற்படுத்தவேண்டும்.. இவை தான் தமிழகத்தின் சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும்!

எப்போது விமானம் விட்டு இறங்கினாலும் ஒரே ஒரு ஆவல் மனசுக்குள்ளேயே ஏக்கத்துடன் இருக்கும்!

கடல் பார்க்கவேண்டும்... சுற்றிலும் கடல்... கடல் மட்டும்! வேறு எந்த நிலப்பரப்போ, கட்டிடங்களோ காண கிடைக்காமல் எங்கெங்கு காணினும் நீர்நிலையாக!  சுருங்க சொன்னால் பூமிப்பந்தின் ஒரு மேற்பரப்பை முழுமையாக பார்ப்பது!

எப்போது நிறைவேறுமோ இந்த அநியாய ஆசை??

4 comments:

  1. சில நேரங்களில் மட்டுமாவது அறிவில்லாமல் இருப்பது தான் சுகம்!

    super :)

    எங்கெங்கு காணினும் நீர்நிலையாக!

    first nalla irukkum appuram bore adikka aarampikkum its because of length of journey

    ReplyDelete
  2. Thanks Dhans....

    Sometimes, the knowledge kills the enthusiasm.

    I too agree that lengthy journey over the sea is a boring one... I hope! But I need to see how the surface of water will be! Atleast a short journey to Andaman do that wonder I think!

    ReplyDelete
  3. Good Narration.

    Your narration remained me of my first Air travel to abroad. That day was like a festival for our family. :-)

    The first travel was a wonderful experience. After that I have traveled may times, but still I am exited to watch oceans, landscapes, mountains etc through a small window in panoramic view.

    I remember panoramic view of the landscape of pucket, Thailand, Sea shores of Singapore, Melbourne and Sydney….. Wonderful !

    Day time travel ok, but. Night long journey ellam semma bore…. Especially tanniya travel pennina …. Enna pandrathunee theryathu…I remember when I travel to Syndey during night… almost 10hrs… tanniya… semma bore..

    Regards,
    Prakash

    ReplyDelete
  4. Thank you Prakash,

    Long flight may be boring... I am not aware of it at all... Short flying and seeing our own country in the eagle eye is nice treat!

    That too, if we fly the same route in which we travelled in train.. that is fantastic.. I used to go to Mumbai in Train and Return by Flight watching my route, crossing in 2 hrs on the same route which tooks 30 hrs of Railing.

    ReplyDelete

Printfriendly